அழகர்சாமி சக்திவேல்
‘பட் ஐ எம் எ சியர் லீடர்’ (But I am a Cheer leader) என்ற அமெரிக்க படத்தின் விமர்சனத்தையும், ‘ஃபேர் ஹவென்’(Fair Haven) என்ற இன்னொரு அமெரிக்க படத்தின் விமர்சனத்தையும் எழுதுவதற்கு முன்னர், நான் இங்கே ஒரு உண்மைக் கதையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1970-இல், ஐந்தே வயதான கிர்க் மர்பி என்ற அமெரிக்க சிறுவன் ஒருவன், வீட்டில் பார்பி டால் போன்ற பெண் பொம்மைகளை வைத்து விளையாடுகிறான் என்ற காரணத்துக்காக, அவனது பெற்றோர்களால் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டான். சிறுவனை சோதித்த ஜார்ஜ் க்ரீகர் என்ற மனநல மருத்துவர், தனது மருத்துவத்தைத் தொடங்கினார். மருத்துவத்தின் ஒரு பகுதியாக, சிறுவன் ஒரு தனியறையில் அவனது தாயாருடன் அடைத்து வைக்கப்பட்டான். அவன் முன்னால், ஒரு புறத்தில் ஆண்கள் விளையாடும் துப்பாக்கி, கார் போன்ற பொம்மைகளும், இன்னொரு புறம் பெண்கள் விளையாடும் அடுப்படி சாமான்கள், பெண் பொம்மைகள் போன்றவையும் வைக்கப்பட்டன. சிறுவன் துப்பாக்கி, கார் போன்ற பொம்மைகளுடன் விளையாடினால், அவனது தாயார், அவன் மீது அன்பு மழை பொழிய மருத்துவர் அனுமதி கொடுப்பார். மாறாய் அந்த சிறுவன் பெண் பொம்மைகளோடு விளையாடினால், உடனே அவனது அம்மா ஒட்டுமொத்த வெறுப்பையும் தனது மகன் மேல் காட்டும்படி மருத்துவர் ஏற்பாடு செய்து இருந்தார். பையனோ, துப்பாக்கியோடு விளையாடாமல் எப்போதும் பெண் பொம்மைகளோடு விளையாட, அம்மா அவன் மேல் வெறுப்பைக்காட்ட, கதறிக் கதறி அழுவான் சிறுவன். சிறுவன் மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொரு நாளும் இந்த சித்திரவதை தொடர்ந்தது. வீட்டிலும், இது போன்ற இன்னொரு பயிற்சி சிறுவனுக்கு கொடுக்கப்பட்டது. மர்பி என்ற அந்த சிறுவன், வீட்டில் எப்போதெல்லாம் பெண் தன்மையுடன் நடந்துகொள்கிறானோ, அப்போதெல்லாம் அவனுக்கு ஒரு சிகப்பு நிற பிளாஸ்டிக் நாணயம் ஒன்று பரிசாகக் கொடுக்கப்படும். சிறுவன் எப்போதெல்லாம் ஆண் தன்மையுடன் நடந்து கொள்கிறானோ, அப்போதெல்லாம் அவனுக்கு ஒரு நீல நிற பிளாஸ்டிக் நாணயம் பரிசாகக் கொடுக்கப்படும். ஒவ்வொரு வார இறுதியிலும், அந்தச் சிறுவன் அந்த வாரத்தில் பெற்ற சிகப்பு நாணயங்களின் எண்ணிக்கையும், நீல நாணயங்களின் எண்ணிக்கையும் கணக்கில் எடுக்கப்படும், சிறுவன் அதிக நீல நிற நாணயங்கள் எடுத்து இருந்தால் சிறுவனுக்கு பல பரிசுகள் வழங்கப்படும். மாறாய் சிறுவன் அதிக சிகப்பு நிற நாணயங்கள் எடுத்து இருந்தால் அவனுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும். இதுவும் ஜார்ஜ் க்ரீகர் என்ற அந்த மனநல மருத்துவரின் ஏற்பாடுதான். பெரும்பாலான நாட்களில், பையன் சிகப்பு நிற நாணயங்களே எடுக்க, பையனுக்கு அடி மேல் அடி கிடைத்தது. அதைப் பார்த்துக் கொண்டே இருக்கும் சிறுவனது அண்ணன் , ஒரு பேட்டியில் சொல்லுகிறார். “ஐந்து வயதில் இருந்தே அடி வாங்கும் எனது தம்பியை பல நேரங்களில் எனக்கு பார்க்க சகிக்காது. எனவே, சில நேரங்களில், அவனது சிகப்பு நிற நாணயங்களை, நான் திருடி வைத்துக்கொண்டு, எனது தம்பியை, தண்டனையில் இருந்து தப்ப வைத்து இருக்கிறேன்” என்று மர்பியின் அண்ணன், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அழுதுகொண்டே சொன்னபோது, அமெரிக்க மக்களில் பலர்மனம் கலங்கி அழுதனர்.
1970-இல் ஆரம்பித்த இந்த சித்திரவதை, 1985 வரை தொடர்ந்தது. சிறுவனை, அவனது பதினாறு வயதில் பரிசோதித்த டாக்டர் ஜார்ஜ் அவன் பூரண குணம் அடைந்து விட்டதாய் உலகிற்கு அறிவித்தார். “ஓரினச்சேர்க்கையை தன்னால் முற்றிலும் குணப்படுத்த முடியும்” என்று பேசிய டாக்டர் ஜார்ஜ், அது குறித்து பல புத்தகங்கள் எழுதினார். டாக்டர் ஜார்ஜின் புகழ், உலகம் முழுவதும் பரவியது. டாக்டர் ஜார்ஜ், “Anti Gay Activist’ என்ற, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு சங்கத்தின் தலைவரும் ஆனார். ஆனால் மர்பி என்ற அந்த சிறுவன், தனது பதினேழாம் வயதில், தற்கொலைக்கு முயற்சி செய்தான் என்பது டாக்டருக்கு தெரியவில்லை. எல்லா வித சித்திரவதைகளையும் அனுபவித்த சிறுவன் மர்பி, பெரியவனாகி அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றினான். அதன் பிறகு இந்தியாவிற்கு வந்த மர்பி, தலைநகர் டெல்லியில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் ஒரு நாளில், தனது முப்பத்து எட்டாவது வயதில், தற்கொலை செய்து கொண்டான். 2003-இல் நடந்த இதுவும் அந்த டாக்டருக்கு தெரியவில்லை. ஆனால், மர்பியின் பெற்றோர் விடவில்லை. “நாங்கள், என் பையனின் நிலை தெரியாது அவனுக்கு கொடுமை செய்து விட்டோம்” என்று உலகத்திற்கு எடுத்துச் சொன்னார்கள். அமெரிக்க மீடியாக்கள், டாக்டரை சுற்றி வளைத்து, கேள்விக்கு மேல் கேள்வி கேட்க, டாக்டர் தனது தவறை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு, 2010-இல் டாக்டர் ஜார்ஜ்,ஒரு ஓரினச்சேர்க்கை ஆண் செக்ஸ் தொழிலாளர் உடன், உல்லாச விடுதியில், பத்து நாட்கள் தங்கி இருந்தது வெளிச்சத்துக்கு வர, பத்திரிகைகள் அதை விலாவாரியாக எழுதின “ஓரினச்சேர்க்கை செக்ஸ் எப்படி இருக்கும் என்ற எனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியே அது” என டாக்டர் வாதிட்டார். ஆனால், கூடசென்ற ஆண் செக்ஸ் தொழிலாளரோ, “டாக்டரும் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்தான்” என்று சொல்ல, டாக்டரின் பெயர் நாறியது. கடைசியில், தான் ஆரம்பித்த ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு சங்கத்தில் இருந்து.டாக்டர் விலகினார். நண்பர்களே, இந்த உண்மைக்கதை நீளமானதாய் இருக்கலாம். ஆனால், ஜார்ஜ் போன்ற எத்தனையோ மனநல மருத்துவர்கள் நடத்தும் கொடுமைகள் உலகத்தில் இருக்கிறது. அது குறித்துப் பேசும் இரண்டு படங்களே ‘பட் ஐ எம் எ சியர் லீடர்’(But I am a Cheer leader) என்ற அமெரிக்க படமும், ‘ஃபேர் ஹவென்’(Fair Haven) என்ற இன்னொரு அமெரிக்க படமும் ஆகும். முந்தைய படம், மனநல மருத்துவக் கொடுமைகளை நகைச்சுவையுடன் சொல்லும் படம் என்றால், பிந்தைய படம் அதே கொடுமைகளை, சீரியசாக சொல்லும் படம் ஆகும். இந்த மன நல மருத்துவக் கொடுமைகளின் வரலாறு குறித்து கொஞ்சம் பார்ப்போம்.
1920 இல் தான், மனநல மருத்துவக் கொடுமைகள் உலகத்தின் கண்களில் தெரிய ஆரம்பித்தது. யூஜென் ச்டீனாச் என்ற மருத்துவர், நல்ல வீரியமான, பெண்ணோடு உடல் உறவு கொள்ளும் ஆண் ஒருவனது விரைக் கொட்டைகளை எடுத்து, பெண்மையுடன் உள்ள இன்னொரு மனிதனுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்திப்பார்த்தார். ஆரம்பத்தில், தனது ஆராய்ச்சி வெற்றிபெற்று விட்டது என்று அவர் சொன்னபோதும், அந்தப் பெண்மையுடன் இருந்த மனிதர், எப்போதும் போல பெண்மையைக் காட்ட, தனது தோல்வியை ஒத்துக்கொண்டார் மருத்துவர் யூஜென் ச்டீனாச். அதன் பிறகு 1930-இல் வந்தார் மனநல மருத்துவர் சிக்மன் பிரெட். ‘ஹிப்னாடிசம் என்ற மனோவசியம் மூலம் ஓரினச்சேர்க்கையை குணப்படுத்தலாம்’ என்று வாதிட்டார், மருத்துவர் பிரெட். ஆனால் அவரும், சில காலங்களுக்குப் பிறகு, “ஓரினச்சேர்க்கையை குணப்படுத்துவது என்பதை உறுதியாகச் சொல்லிவிட முடியாது” என்று ஒரு தாய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு, ஆராய்ச்சியில் இருந்து பின்வாங்கினார். இருப்பினும், பிரெட்டுக்கு பின வந்த பல மருத்துவர்கள், இந்த ஓரினச்சேர்க்கையைக் கையில் எடுத்துக்கொண்டு பணம் பண்ண ஆரம்பித்தார்கள். ‘ஓரினச்சேர்க்கை தவறானது’ என்ற கண்ணோட்டத்தில் இருந்த பெற்றோரின் பிள்ளைகள் பற்பல கொடுமைகளை அனுபவிக்க ஆரம்பித்தார்கள். மருத்துவ சிகிச்சை என்ற பெயரில், சிலரது ஆண்மை நீக்கபட்டது. Chemical Castration என்று சொல்லக்கூடிய வேதியியல் விரைநீக்கம் மூலம் சிலர் வாழ்வு இழந்தார்கள். ஆணை விரும்பும் ஒரு ஆண் ஓரினசேர்க்கையாளன் முன்னால் இன்னொரு ஆணின் நிர்வாண படம் காட்டப்படும். அப்போது அந்த ஓரினச்சேர்க்கையாளனுக்கு செக்ஸ் உணர்வு வந்தால், உடனே அவனுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்படும். அல்லது அவனுக்கு வாந்தி குமட்டல் வருகிற அளவுக்கு மருந்துகள் கொடுக்கப்படும். அல்லது, அவன் அவமானப்படும் அளவிற்கு திட்டப்படுவான். இப்படி பல மனநலக் கொடுமைகள் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, வேறொரு மருத்துவரோ, இன்னொரு படி மேலே போய், “Lobotomy என்ற மூளை அறுவை சிகிச்சை செய்தால், ஓரினச்சேர்க்கை குணமாகும்” என்று அறிவித்தார். அதாவது, மண்டை கபாலத்தில் ஓட்டை போட்டு, ட்ரில்லர் கொண்டு, மூளையின் அடிப்பகுதியில் ஒரு குறிப்பட்ட பகுதியை நீக்குவதுதான் lobotomy என்ற அறுவைசிகிச்சை. இந்த சிகிச்சையாலும் எண்ணற்ற ஓரினச்சேர்க்கையாளர்கள் இறந்து போனார்கள். Ex-Gay theraphy என்ற சிகிச்சையின் மூலம், முன்னால் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆக இருந்து, பின் திருந்தியவராக காட்டிக்கொள்ளும், பொய்யான சிலரை அறிமுகப்படுத்தி அவர்கள் மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சில கிறித்துவ மேடைகளில், குருடர் பார்வை பெறுவது போலவும், ஊனமுற்றோர் எழுந்து நடப்பது போலவும், காசு வாங்கிக்கொண்டு நடிக்கும் சிலரை நீங்கள் பார்த்து இருக்கலாம். அது போன்ற ஒரு நகைச்சுவையே, இதுபோன்ற சிகிச்சைகளிலும் நடந்து போக, கடைசியில், அமேரிக்கா, இந்தியா உட்பட, உலகத்தில் உள்ள பல மனநல மருத்துவர் சங்கங்கள், “ஓரினச்சேர்க்கை என்பது ஒரு நோய் அல்ல. மாறாய் அது ஒரு வகை செக்ஸ் உறவின் வெளிப்பாடு” என்று பத்திரிக்கைகளில் அறிக்கைவிட்டது. இந்திய மனநல மருத்துவ சங்கமும், இதனை ஒத்துக்கொண்டது. இருப்பினும், சில கிறித்துவ தீவிர வாதிகள், ஓரினச்சேர்க்கைக்கு எதிராகவும், சட்டத்திற்கு புறம்பாகவும், பல முயற்சிகளை இன்றும் எதாவது ஒரு வகையில் ஆரம்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் பேசப்போகும் இந்த அமெரிக்கப்படங்கள், தங்களால் முடிந்தவரையில், Gay Conversion Theraphy குறித்து பேசி இருக்கின்றன.
இனி அந்த இரண்டு படங்களின் கதைகளை ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
‘பட் ஐ எம் எ சியர் லீடர்’(But I am a Cheer leader) என்ற இந்தப்படம் ஒரு நகைச்சுவைப்படம் ஆகும். சியர் லீடர் என்ற பெண்கள் விசயம், இப்போது இந்திய கிரிக்கெட் விளையாட்டிலும் வந்துவிட்டது. விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த, அழகான பெண்கள் விளையாட்டு மைதானத்தின் நடுவில் வந்து சியர் லீடர்கள் ஆக ஆடுவது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படி ஆடுகிற அழகிய யுவதிதான் கதாநாயகி மேகன். மலர்களில் ரெட் கண்ணா என்று ஒரு மலர் இருக்கிறது. அந்த மலரின் இதழ்கள் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு போலவே இருக்கும். இந்த பெண்குறி மலர்கள் வரையப்பட்ட துணியால் தைக்கப்பட்ட தலையணையை, படத்தின் கதாநாயகி மேகன் தனது படுக்கையறையில் வைத்துக் கொள்கிறாள். லெஸ்பியன் பெண்களுக்கு மிகவும் பிடித்த உணவு சைவ உணவு என்பது ஒரு எண்ணம். மேகனும் சைவ உணவையே விரும்பி சாப்பிடுகிறாள். மேகனின் ஆண் நண்பன், மேகனுக்கு இதழ் முத்தம் கொடுக்கும்போது, எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்கொள்ளாத மேகன், தனது மற்ற தோழிகளிடம் அதைப் பரிகாசம் செய்து பேசுகிறாள். இப்போது மேகன் மீது, அவள் தோழிகளுக்கும், தீவிர கிறித்துவர்களான, மேகனின் பெற்றோருக்கும் “மேகன் ஒரு லெஸ்பியன்” என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. எல்லோரும். மேகனிடம் இது குறித்துக் கேட்கையில், மேகன் அதை மறுத்துப் பேசுகிறாள். இருப்பினும், பெற்றோர்களின் வற்புறுத்தலினால், Gay conversion theraphy என்ற மனநல சிகிச்சைக்கு ஒத்துக்கொள்கிறாள். இதற்கென நடத்தப்படும் ஒரு மனநலக் காப்பகத்தில் மேகன் சேர்கிறாள். அங்கே அவளுக்கு ஐந்து அடுக்கு முறைப் பாடம் (5 Step Program) நடத்தப்படுகிறது. முதல் பாடத்தில், “நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்” என்று மாணவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். மேகன் “நான் ஒரு உண்மையான பக்தியுள்ள கிறித்துவப்பெண்.. நான் லெஸ்பியன் அல்ல” என்று ஒத்துக்கொள்ள மறுக்கிறாள். தலைமை ஆசிரியர் மேரியின் வற்புறுத்தலில் கடைசியில் ஒத்துக்கொள்ளுகிறாள். இருப்பினும், “தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் அல்ல” என்று மற்றவர்களிடம் காட்டிக்கொள்ள பலவகையிலும் முயற்சிசெய்கிறாள் மேகன். இந்த சூழ்நிலையில், வகுப்பில் மேகனோடு சேர்ந்த டால்ப் என்ற மாணவனும், க்ளேய்டன் என்ற மாணவனும் முத்தங்கள் கொடுப்பதை பார்க்கும் மேகன் அலறுகிறாள். விஷயம் ஆசிரியர் மேரிக்கு தெரியவர, கண்டிப்பான ஆசிரியரான மேரி, மாணவன் டால்ப்பினை பள்ளியில் இருந்து நீக்குகிறாள். ஏற்கனவே, இந்தப்பள்ளியில் படித்து, Gay Conversion Theraphy இன் கொடுமை தெரிந்துகொண்ட இரண்டு முன்னாள் மாணவர்கள், இந்தப் பள்ளிக்கு அருகில் வசித்துகொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் தஞ்சம் அடைகிறான், மாணவன் டால்ப். இன்னொரு மாணவன் க்ளேய்டனை பள்ளியின் தனியறையில் அடைக்கிறாள் ஆசிரியை மேரி,
இரண்டாம் பாடம் ஆரம்பிக்கிறது. மாணவர்கள் தாங்கள் பிறந்த ஆண் அல்லது பெண் இனத்தின் காரணம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இதுதான் இரண்டாவது பாடம். பெண் மாணவிகளுக்கு பிள்ளைப் பராமரிப்பு போன்ற பெண் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சொல்லிக்கொடுக்கப் படுகிறது. ஆண் மாணவர்களுக்கு மரம் வெட்டுதல், கார் ரிப்பேர் செய்தல் போன்ற கடுமையான பயிற்சிகள் சொல்லித்தரப்படுகிறது. மேகன் பிள்ளைப் பராமரிப்பு செய்யும்போது, கிரகாம் என்ற இன்னொரு மாணவியிடம் நட்பு கொள்கிறாள். கிரகாம் ‘தான் ஒரு லெஸ்பியன்’ என்பதை உறுதியாக நம்புபவள். ‘நீ திருந்தி வந்தால்தான் உன்னை வீட்டுக்குள் அனுமதிப்போம்’ என்று கிரகாமின் பெற்றோர் சொல்லிவிடுவதால், வேறு வழியின்றி கிரகாம் இந்தப்பள்ளியில் சேர்கிறாள். மூன்றாம் பாடம் ஆரம்பிக்கிறது. ‘பெற்றோர்கள் – பிள்ளைகள் குடும்ப உறவு’ செயல்முறைப் பாடமாக சொல்லிக்கொடுப்பதே மூன்றாம் பாடத்தின் நோக்கம். இதற்காய் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளிக்கூடத்திற்கு வரவழைக்கப்படுகிறார்கள். இருப்பினும், ஆசிரியையின் மகனே ஒரு ஓரின விரும்பி என்பது அப்போது தெரியவருகிறது. இப்போது நாயகி மேகனும், மாணவி கிரகாமும் இன்னும் நெருங்கிப்பழக ஆரம்பிக்கிறார்கள். இரவில் யாருக்கும் தெரியாமல், சுவரேறிக் குதித்து, அருகில் இருக்கும் “Gay Bar”க்கு செல்கிறார்கள். அங்கே இருவரும் முத்தமழை பொழிந்து கொள்கிறார்கள். அடுத்த பாடம் ஆரம்பிக்கிறது. நான்காம் பாடத்தில், மாணவர்கள் எந்த இனமோ, அதற்கு எதிர்ப்பத இனத்தோடு (ஆணென்றால் பெண்ணோடும், பெண்ணென்றால் ஆணோடும்) நெருங்கிப்பழக வேண்டும். இந்தப்பாடத்தில், நாயகி மேகனும் மாணவி கிராகாமும், வந்திருக்கும் ஆண்களிடம் மையல் கொள்வதுபோல நடிக்கிறார்கள். ஆசிரியை மேரி சந்தோசப்படுகிறாள். இருப்பினும், மேகனும் கிராகாமும் இரவில் gay bar போவதை, ஆசிரியை மேரி ஒருநாள் கண்டுபிடிக்க, நாயகி மேகன் பள்ளியை விட்டு வெளியே அனுப்பப்படுகிறாள். இறுதிப்பாடம் ஆரம்பிக்கப்படுகிறது. ஆண்-பெண் உடலுறவு, செயல்முறை வகுப்பு (Practical Sex Demo Course) நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகள் வேறு வழியின்றி அதற்கு உடன்படுகிறார்கள். இந்த ஐந்து பாடத்திலும் பாஸ் ஆன மாணவ மாணவியர்க்கு பட்டமளிப்பு விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. விழாவுக்குள் நுழையும் கதாநாயகி மேகன், தனது காதலியான மாணவி கிரகாமுடன் தப்பிக்கிறாள். இறுதிக்காட்சியில், இன்னொரு இடத்தில் நடக்கும் விழாவில், “எங்கள் பெண் மேகன் ஒரு லெஸ்பியன்” என்று பெருமையோடு, மேகனின் பெற்றோர்கள் பேசுவதோடு படம் முடிகிறது.
இனி ஃபேர் ஹவென்’(Fair Haven) என்ற படத்தின் கதையைப் பார்ப்போம். நாயகன் ரிச்சர்ட், தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என்று ஏற்கனவே அறிந்தவன், இருப்பினும், தீவிர கிறித்துவ முறையில் பக்தியுடன் வளரும் அவனுக்கு,எப்படியாவது Gay-இல் இருந்து மாறிவிட வேண்டும் என்று ஆசை வருகிறது. மனநல சிகிச்சைக்காய், தனது தாயிடம் மட்டும் சொல்லிவிட்டு, ஒரு கிறித்துவ மனநல மருத்துவர் நடத்தும் முகாமில் சேர்கிறான் ரிச்சர்ட். இடையில், ரிச்சர்டின் தாய் இறந்து போகிறாள். முகாமில் தங்கி, படிப்பை முடித்துவிட்டு வீடு வருகிறான் ரிச்சர்ட். ரிச்சர்டின் அப்பா ஒரு ஆப்பிள் பழப்பண்ணை வைத்து நடத்துகிறார். அந்தப் பண்ணை நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரிச்சர்டின் தாய் இறந்த வேளையில், கையில் பணம் போதிய அளவு இல்லாததால், ரிச்சர்ட் தனது கல்லூரி படிப்பிற்காக சேர்த்து வைத்து இருந்த பணத்தை, ரிச்சர்டின் தந்தை செலவு செய்துவிடுகிறார். தெரிந்துகொள்ளும் ரிச்சர்ட், சோகமாகிறான். வேறு வழியின்றி, அப்பாவுக்கு ஆப்பிள் பண்ணையில் ஒத்தாசையாக இருக்கிறான். பக்கத்தில் இருக்கும் சர்ச் பாதிரியாரின் மகள் சுசியின் அறிமுகம் ரிச்சர்டுக்கு கிடைக்கிறது. சுசி ரிச்சர்டை மனதார விரும்புகிறாள். ரிச்சர்டும் சுசியை விரும்பினாலும், அவனுக்கு அவளிடம் எந்த செக்ஸ் கவர்ச்சியும் ஈர்ப்பும் வராமல் போகிறது. தந்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ரிச்சர்ட். பழங்களை விற்க, அருகிலுள்ள பழக்கடைக்கு செல்கிறான், அங்கே, தனது பழைய காதலன் ஜேம்ஸினை சந்திக்கிறான். ஜேம்ஸ் மீது வெறுப்பு கொள்ளும் ரிச்சர்ட் அவனைத் திட்டுகிறான். வீடு திரும்பும் ரிச்சர்டுக்கு, தனது காதலன் ஜேம்சுடன் ஆன பழைய நினைவுகளும், சர்ச்சில் சொல்லிக் கொடுத்த மனநல சிகிச்சையின் நினைவுகளும் மாறி மாறி வருகிறது. மனநலக் காப்பகத்தில், மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாத டாக்டர், “எல்லாம் கடவுள்..கடவுளின் ஆணைப்படி..” என்று பேசி பல இடங்களில் உண்மைகளை மறைத்த காட்சி ரிச்சர்டின் நினைவில் வந்து வந்து போகிறது.
ரிச்சர்டின் தந்தையோ, இது எதையும் உணராது இருக்கிறார். நஷ்டத்தில் இயங்கும் பழப்பண்ணையை இன்னொருவர் விலை பேசுகிறார். ரிச்சர்ட் விற்று விடுங்கள் என்கிறான். தந்தையோ, விற்கமுடியாது என்கிறார். விவாதம் முற்ற, ரிச்சர்ட் காதலன் ஜேம்ஸிடம் வருகிறான். ஜேம்ஸ், ரிச்சர்டுக்கு அறிவுரை சொல்கிறான். இருவரும் ஓரின உடல் உறவு கொள்கிறார்கள். இதைப் பார்த்து விடும், ரிச்சர்டின் காதலி சுசி, கோபத்துடன், ரிச்சர்டை விட்டுப் பிரிகிறாள். வீட்டில், தனது மகன் குறித்து சிந்திக்கும் ரிச்சர்டின் தந்தை, ரிச்சர்டும் ஜேம்ஸும் நெருக்கமாய் இருக்கும் புகைப்படங்களை பார்த்து விடுகிறார். வீட்டுக்கு வரும், ரிச்சர்டிடம் உண்மை என்னவென்று கேட்க, ரிச்சர்ட் எல்லா உண்மைகளையும் சொல்கிறான். ரிச்சர்டின் தந்தை, ரிச்சர்டையும் ஜேம்ஸையும் சேர்த்து வைக்கிறார். இருவரும், படிப்பதற்காக பாஸ்டன் நகர் செல்வதோடு படம் முடிகிறது
.
இரண்டு படங்களிலும், கிறித்துவ மதத்தின் கடுமையான ஓரின எதிர்ப்பு விளக்கமாய்ச் சொல்லப்படுகிறது. இரண்டு படங்களுமே ஆகா ஓகோவென்று ஓடாவிட்டாலும், ஓரளவிற்கு வர்த்தக ரீதியாக வெற்றிபெற்ற படங்களே ஆகும். இருப்பினும், இரண்டு படங்களுமே, மருத்துவக் கொடுமைகளை இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லி இருக்கலாம் என்பது எனது ஆதங்கம். மேற்கத்திய படங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உலகம் முழுதும், வர்த்தகரீதியாக வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் எடுக்கப்படும் படங்கள். அதிகக்காரம், அதிக இனிப்பு கொண்ட இப்படிப்பட்ட மசாலா படங்களே, பெரும்பாலும் தமிழ்நாட்டில் திரையிடப்படுகின்றன. இன்னொரு வகைப்படங்கள், சமூகத்தை பார்த்துப் பேசும் படங்கள். இந்தவகைப்படங்களில், இசை குறைவாய் இருக்கும். வசனம் குறைவாக இருக்கும். ஆனால் கதைச்செறிவு அதிகமாய் இருக்கும். தமிழனின் ரசனை மாறினால், இது போன்ற படங்களும் நிச்சயம் தமிழ்நாட்டில் காட்டப்படும் என்பது எனது உள்ளுணர்வு.
அழகர்சாமி சக்திவேல்
- இரண்டு விண்மீன்கள் மோதிக் கொள்ளும் போது ஒன்றாகி விண்வெளியில் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன.
- பீட்டில்ஸ் இசைப் பாடல்கள்
- மருத்துவக் கட்டுரை — சொறி சிரங்கு ( SCABIES )
- தொடுவானம் 233. லுத்தரன் முன்னேற்ற இயக்கம்
- உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 16 -ஓரின ஈர்ப்பு மாற்றம் குறித்த இரு படங்கள் (Conversion theraphy)
- உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 17 – தி க்ரையிங் கேம்
- கலைஞர் மு கருணாநிதி –