தர்மம் தடம் புரண்டது

This entry is part 7 of 9 in the series 16 செப்டம்பர் 2018

திருமதி சாவித்திரியின் உதடுகள் அந்தக் கார் டயரில் பதிந்திருந்தது. வாடி உதிர்ந்த செம்பருத்திப் பூவாய் காருக்கடியில் கிடந்தார் சாவித்திரி. அந்தக் கார்ப்பேட்டையைக் கழுவவந்த ‘பையா’ மேடம், மேடம் என்று அடிவயிற்றிலிருந்து கத்திவிட்டு மூன்றாவது கதறலை தன் கண்ணீரில் கரைத்தான். சாவித்திரியின் பணிப்பெண் சரீனா வீட்டை அப்படியே போட்டுவிட்டு ஒலிம்பிக் வேகத்தில் ஓடுகிறாள். மேடம் மேடம் என்று குலுக்குகிறாள். பருக்கையைக் கண்ட புறாக்களைப்போல் அதற்குள் சேர்ந்துவிட்டது கூட்டம். எல்லாம் சரீனாவை இழுக்கிறார்கள். சுவற்றில் சாய்ந்தபடி அவள் கதறுவது பரிதாபமாக இருக்கிறது. எல்லாருமே ஒரே சமயத்தில் காவல்துறையை அழைக்கிறார்கள். முதலில் அழைத்தது பையா தான்.
உய்யென்று கூவிக்கொண்டு காவல்துறையின் படைகள். ஒரு முதலுதவி வாகனம் சில மருத்துவர்களுடன். இரண்டு காவல்துறை வாகனங்கள், கார் அளவு பெரியதான இரண்டு இரு சக்கர வாகனங்கள். ஏகப்பட்ட பட்டைகளுடனும் பதக்கங்களுடனும் காவல்துறை அதிகாரிகள். காட்சி விரிந்துகொண்டே போகிறது. உட்லண்ட்ஸில் உள்ள அந்தத் தனியார் வீட்டுத் தொகுதியின் கார்ப்பேட்டை சந்தைப்பேட்டையானது. மருத்துவர்கள் செயற்கைச் சுவாசம் தர முயன்று தோற்றுப்போனார்கள். இறந்து 40 நிமிடங்கள் ஆகிவிட்டதாம். முதலில் தகவல் தந்த பையாவை காவல்துறை விசாரித்தது. பையா சொன்னான். ‘பிதுக்கிப் பிதுக்கி 2 வெள்ளி தரும் மக்களிடையே 10 வெள்ளியை சர்வ சாதாரணமாகக் கொடுப்பார். தீபாவளிகள் வந்தால் எனக்குத் தீபாவளி வருவதுபோல் இருக்கும். வீட்டுக்கு அழைத்து சாப்பாடு காசு துணிமணிகள் கொடுப்பார். எப்போதோ சொன்னேன் என் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று. இன்றுவரை என்னைப் பார்க்கும்போதெல்லாம் விசாரிக்கிறார்.’ பழசையெல்லால் நினைத்து புலம்பித் தீர்த்தான் பையா. அவன் சொன்னது ஒன்றுவிடாமல் இந்த வழக்கை துப்பறியவிருக்கும் கிஷோரின் கையேட்டில் பதிவாகின. தாமதித்துப் பயனில்லை. சாவித்திரியின் உடல் காவல்துறையின் முதலுதவி வாகனத்தில் ஏற்றப்பட்டது. பணிப்பெண் சரீனாவும் காரில் ஏற்றப்பட்டார். அவளுக்குப் பக்கத்தில் அவள் கையைப் பற்றியபடி பெண் அதிகாரி.
கிஷோரின் இண்டர்காம் துடித்துக் கொண்டே இருந்தது. ஒரு சிறு குழுவுடன் திறந்தே கிடந்த சாவித்திரியின் வீட்டுக்குச் சென்றார் கிஷோர். நல்லவேளை கண்காணிப்புக் கேமரா இருக்கிறது. துப்புத்துலங்குவது எளிதாகலாம். வீட்டின் காட்சிகள் அங்குலம் அங்குலமாக படமாக்கப்பட்டு கிஷோரின் புகைப்படக் கருவிக்குள் சுருண்டது. அந்தச் சாப்பாட்டு மேசையில் அந்த ரொட்டிப் பொட்டலம், பழக்குழல், ஒரு குவளையில் கொஞ்சம் பால் அவர் என்ன சாப்பிட்டிருப்பார் என்பதைச் சொன்னது. சாவித்திரியின் படுக்கையறையில் அந்த வாசனைத் தெளிப்பான் இன்னும் மணக்கிறது. அவர் உடம்பிலிருந்து வந்த அதே வாசம். நிச்சயமாக இது தற்கொலையல்ல. 100 க்கும் மேற்பட்ட காட்சிகள் கிளிக்காயின. வீடு மூடி சிலிடப்பட்டபோது எதிர்வீட்டு வயதான சீனத்தம்பதிகள் சிஷோருக்கு வணக்கம் சொன்னார்கள். ‘வணக்கம். உங்களுக்கு சாவித்திரியை நன்றாகத் தெரியுமா? எல்வளவு காலமாக இங்கு இருக்கிறீர்கள்.?’ ‘இரண்டு பேரும் ஒரே சமயத்தில்தான் வந்தோம். அவர் குரலைக் கேட்பது அபூர்வம். சீனப்புத்தாண்டுக்கு எங்கள் உறவினர்களைவிட அதிகமாக கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்கள் அனுப்புவார். தீபாவளிக்கு இந்திய இனிப்பு வகைகளை அனுப்புவார். நாங்கள் அவ்வளவாக திருப்பிச் செய்ததில்லை. அவருக்கு இப்படி….’ கலங்கினார்கள்.
டென்டோக்செங் மருத்துவமனை. பிரேதப் பரிசோதனை நடக்கிறது. சரீனாவை அந்தப் பெண் காவலர் தனி அறையில் விசாரிக்கிறார்.சரீனா சொன்னார். ‘அவர் சாப்பிடுவதற்கு நான் உதவுவதே இல்லை. அவரே வாங்கிக் கொள்வார். எடுத்துக் கொள்வார். வீட்டில் துணிமணிகள் துவைப்பேன் அயன் பண்ணுவேன். வீட்டை இருமுறை சுத்தம் செய்வேன்.’ ‘உனக்கு சம்பள பாக்கி இருக்கிறா?’ ‘நான்தானம்மா அதிகப்படியாக 2000 வெள்ளி வாங்கியிருக்கிறேன்’. அவள் குமுறினாள். ‘பத்தாண்டுகளாக வேலை பார்க்கிறேன். இரண்டு மகள்கள் வனஜா கிரிஜா லண்டனில் வேலை செய்கிறார்கள். அய்யா மோகன் ஹவாய் தீவில் இருக்கிறார். மர வியாபாரம். எல்லாரையும் எனக்கு நன்றாகத் தெரியும் நான் கடைசிவரை இங்கேதான் இருக்கவேண்டும் என்று எப்போதோ முடிவு செய்துவிட்டேன். இப்போ…’. என்றபடி முகம் பொத்தி அழுகிறாள். ‘உன் கைத்தொலைபேசி எங்கே?’ ‘வீட்டில் இருக்கிறது’ வீட்டுக்கு உடனே ஒரு படை அனுப்பப் படுகிறது. அந்தக் கைத்தொலைபேசி கைப்பற்றப்படுகிறது. சாவித்திரியின் கணவர் மோகன் ஹவாய் தீவிலிருந்தும் மகள்கள் கிரிஜா வனஜா லண்டனிலிருந்தும் சிங்கப்பூரை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறார்கள். அடுத்து என்ன செய்யலாம்?
சாவித்திரியின் அலுவலகம். அவர் ஒரு மூத்த கணக்குத் தணிக்கையாளர். கடந்த மூன்று நாட்களில் சாவித்திரியை சந்திக்க வந்தவர்கள் பட்டியல் இதோ தயார். ஒவ்வொருவராக விசாரிக்கப்படுகிறார்கள். சாவித்திரியை தொலைபேசியில் அழைத்த அனைவருமே துளைக்கப்படுகிறார்கள். யாரிடமுமே சாதகமான எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. சாவித்திரி இறப்பதற்கு முதல் நாள் சந்தித்தவர்களைத் துளைத்த பிறகுதான் ஒரு செய்தி தெரிய வருகிறது. ஒரு குறிப்பிட்ட நபர் பார்க்க வந்திருப்பதாக வரவேற்பறையிலிருந்து தகவல். சாவித்திரி ‘அவரைப் பார்க்க முடியாது’ என்று சொல்லியிருக்கிறார்.அந்த நபர் ஏதோ ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு சாவித்திரி அறைக்குள் நுழைந்திருக்கிறார். 20 நிமிடங்கள் சாவித்திரியோட அவர் பேசிக்கொண்டிருந்ததை கண்காணிப்புக் கேமரா உறுதி செய்தது. அந்தக் காட்சி திரும்பத்திரும்ப ஓட்டப்பட்டு நுணுக்கமாக ஆராயப்படுகிறது. அவர் தமிழர்தான் என்பதைத் தோற்றம் உறுதி செய்தது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதைத் தெளிவாகக் கேட்க முடியவில்லை. ஆனால் பேச்சுக்கிடையில் அவர் கையெடுத்துக் கும்பிடுவது தெரிகிறது. சாவித்திரி அலட்சியமாக அவரை வெளியே போகச் சொல்வது தெரிகிறது. கிஷோர் நிமிர்ந்து உட்கார்ந்தார். கலங்கலாகக் கிடந்த தண்ணீர் தெளிவாகிறது. உள்ளே கிடக்கும் பொருள்கள் துல்லியமாகத் தெரிய தொடங்குகின்றன. கிஷோரின் தோட்டா அவர் எதிர்பார்த்த புள்ளியை சீக்கிரமே துளைக்கலாம்.
அந்த நபர் வருவதற்கு முன் சாவித்திரி அந்த அலுவலகத்தில் துப்புறவு வேலை செய்யும் ருக்மணியுடன் பேசிக்கொண்டிருக்கிறார். ருக்மணி விசாரிக்கப்படுகிறார். ருக்மணி ஒரு முதிர்கன்னி. அவரின் அம்மா வேறொரு ஆணோடும், அவர் அப்பா வேறொரு பெண்ணோடும் எப்போதோ ஓடிவிட்டார்கள். ருக்மணி தன் தாத்தாவோடு இருக்கிறார். அம்மாவழித் தாத்தா. ‘சாவித்திரியோடு நீங்கள் என்ன பேசினீர்கள் ருக்மணி?’ ‘அம்மாதான் அடிக்கடி என்னைக் கூப்பிடுவார்கள். தாத்தாவை விசாரிப்பார்கள். அவ்வப்போது காசு உணவு என்று கொடுத்து உதவுவார்கள். வேண்டாமென்று சொன்னாலும் கட்டாயப்படுத்திக் கொடுப்பார்கள். நலம் விசாரிப்பார்கள். எனக்கு கிட்டத்தட்ட அவர் அம்மா மாதிரி.’ ‘அதெல்லாம் இருக்கட்டும். நேற்று அவர் உங்களோடு என்ன பேசினார் அல்லது நீங்கள் அவரிடன் என்ன பேசினீர்கள்.’ ருக்மணி யோசிப்பது தெரிகிறது. கதவுக்கருகே நின்றவரிடம் கதவை மூடச்சொல்லி சைகை காண்பித்துவிட்டு காதைத் தீட்டிக் கொள்கிறார் கிஷோர். ‘அவசரமில்லை. பொறுமையாக யோசனை செய்து சொல்லுங்கள். எதையாவது மறைத்தால் பாவம் அநியாயமாக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். உங்கள் தாத்தாவின் நிலை என்னவாகும்.’ சரியான இடத்தைத் தீண்டினார் அந்தப் பெண் அதிகாரி.
‘அம்மாதானம்மா அன்று என்னை அழைத்தார்கள். வேறு வேலையில் இருந்தேன். உடனே வரவேண்டும் என்று சொன்னதால் வேலையைப் போட்டுவிட்டு ஓடினேன். அம்மா ஒரு கோப்பைப் புரட்டிக் கொண்டிருந்தார்கள். ‘உன் தாத்தாவுக்கு இந்த ஆண்டு வரவேண்டிய அந்தக் காசு வந்துவிட்டதா?’ என்று கேட்டார்கள்.இங்குள்ள ‘சித்தகுணா’ அறக்கட்டளை நடமாட்டம் குறைந்த முதியவர்களுக்கு வங்கிக்குச் சென்று வர முடியாது என்ற காரணத்தால் ரொக்க உதவி செய்கிறார்கள். அந்தக் காசைத்தான் அவர் கேட்கிறார். நான் 500 வெள்ளி என்றேன்.’ கிஷோர் அப்படியே விசாரணையை நிறுத்தச் சொன்னார். சாவித்திரியின் கோப்புகளைச் சரிபார்க்கும் பிரிவை அழைத்தார். அந்த அறையிலிருந்து வெளியேறி பிறகு பேசினார். ஒரு அங்குல தூரத்தில் இருப்பவனுக்குக் கூட காதில் விழாது. ‘உடனே சித்தகுணா ஃபைலை எடுங்கள். எடுத்துவிட்டீர்களா 11 வீரப்பெருமாள் ரோடு ஜெயராமன் என்ற பெயரைத் தேடுங்கள். அதுதான் ருக்மணியின் தாத்தாவின் பெயர்’ ‘ம். தேடிவிட்டோம் இருக்கிறது.’ ‘எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கிறது.’ சில விநாடிகள் கிஷோரின் வயிற்றில் நெருப்பு எரிந்தது . பிறகு தணிந்தது. காலடிச் சத்தம் கூட தோட்டா வெடிப்பதுபோல் கேட்கும் அமைதி. அந்தக் கோப்புகளைச் சரிபார்க்கும் பிரிவு சொல்வதைக் கேட்டுவிட்டார். கண்டுபிடித்துவிட்ட பெருமை உதட்டோரம் பூத்தது ஒரு புன்னகையாக. ‘சரி அந்த ஃபைல் பத்திரம். மிக முக்கியமான தடயம் அதுதான்’. பிறகு ருக்மணி விடுவிக்கப்படுகிறார். மிகத் தெளிவாகப் புரிந்துவிட்டது. அந்த நபர் 2000 வெள்ளி கொடுத்ததாகக் கணக்கில் எழுதியிருக்கிறார். தாத்தா ஜெயராமனுக்குத் தந்ததோ 500 வெள்ளிதான். விசாரணைக் கயிறு அந்த நபரைச் சுற்றி இறுக்கியது. யார் அந்த நபர்.? அவர்தான் சித்தகுணா அறக்கட்டளையின் காசாளர் துரியோதனன்.
துரியோதனன் குறிவைக்கப்பட்டுவிட்டார். ஒரு குழுவுடன் துரியோதனன் வீட்டுக்கு விரைகிறார் கிஷோர். அந்த வீட்டில் ஒரு பணிப்பெண். அப்போதுதான் வீட்டைத் திறந்துகொண்டிருக்கிறார். ஏகப்பட்ட தூசு வீட்டில். அந்தப் பணிப்பெண் சமந்தா கிஷோரைப் பார்த்ததும் முகம் வெளுத்தாள். விமானச் சத்தம் கேட்ட காகமானாள். ‘வீடு பூட்டியே கிடந்ததா?’ கிஷோர் கேட்டார். ‘அய்யாவின் மகள் ஹவ்காங்கில் இருக்கிறார் நான் அடிக்கடி அங்கு சென்றுவிடுவேன்.’ ‘அய்யா எங்கே?’ ‘அவர் ஊரிலில்லை’. ‘அம்மா?’ ‘அவர் ஊருக்குப் போய் ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.’ ‘எந்த ஊர்?’ ‘தெரியாது,’ ஒரு பெண்காவலாளி ஏற்கனவே துரியோதனன் மகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு அவர் மகள் இதோ வந்துவிட்டார். அவர்களை அப்படியே அந்தப் பெண் காவலரிடம் விட்டுவிட்டு எதிர்வீட்டு சீனத் தம்பதிகளிடம் சென்றார் கிஷோர். வெளியே நின்ற அவர்களை வீட்டுக்குள் போகச்சொல்லி தானும் வீட்டுக்குள் சென்றுவிட்டு கதவை மூடிக்கொண்டார். அந்த சீனத்தம்பதிகள் சொன்னார்கள். ‘அந்த மனிதர் சமீப காலமாக ரொம்பக் குடிக்கிறார். அதிகமாகக் கத்துவார். ஒருவாரத்துக்கு முன் சில சாமான்களை எறிவதுபோல் சத்தம் கேட்டது. அந்த அம்மாவை அடுத்த நாள் காணவில்லை. அந்தப் பணிப்பெண்ணும் அங்கில்லை.’ ‘சரி. நன்றி. வேறு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் வருகிறேன்.’ கிஷோர் அங்கிருந்து விலகி துரியோதனன் வீட்டுக்கு வந்தபோது பெண் அதிகாரி, பணிப்பெண், துரியோதனன் மகள் யாருமே எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. கேட்க ஒன்றுமில்லையா? சொல்ல ஒன்றுமில்லையா? என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று துரியோதனன் மகளுக்குத் தெரியுமா? அந்தப் பணிப்பெண் சமந்தாவின் தொலைபேசி கைப்பற்றப்பட்டது. அந்த அமைதியை கிஷோர் உடைத்தார். ‘உங்கள் தாயார் எப்போது ஊருக்குப் போனார்கள்.’ ‘ஒரு வாரத்துக்கு முன்பு.’ ‘காரணம்.’ ‘தெரியாது’. ‘நீங்கள் மகன் அல்ல. மகள். மகன் என்றால் தெரியாது என்பதில் உண்மை இருக்கலாம். உங்களிடம் உண்மையைச் சொல்லாமல் அவர் போயிருக்க முடியாது. நீங்கள் உண்மையைச் சொல்லாவிட்டால் நீங்கள் உடந்தை என்று கருதி கடுமையான தண்டனை தர நேரிடலாம். உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. உண்மையைச் சொல்லுங்கள். என்ன நடக்கிறது என்று ஏற்கனவே எங்களுக்கு ஓரளவு தெரியும் உங்கள் தகப்பனாரைக் காப்பாற்றிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடாதீர்கள்.’ சிறிது மௌனத்துக்குப் பின் அவர் சொன்னார். நெற்றியில் துளிர்த்த வியர்வை கனமேறி வழிந்தது.
‘அன்று இரவு அதிகமாகக் குடித்துவிட்டு அம்மாவை அடித்துவிட்டார். அம்மா இனிமேல் வரமாட்டேன் என்று என்னிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.’ ‘எந்த ஊர்.’ ‘அறந்தாங்கி.’ ‘சரி. உங்கள் அப்பா எங்கே போயிருக்கிறார்?.’ ‘கேரளாவிலுள்ள கோழிக்கோடுக்கு.’ கிஷோர் உடனே குடிமைத் தற்காப்புப்பிரிவை அழைத்து தகவலைச் சொல்ல தகவல் கோழிக்கோடுக்குப் பறக்கிறது. ‘கோழிக்கோடுக்கு ஏன் போனார்.’ ‘அவரின் பழைய நண்பர் ஒருவர் அங்கிருக்கிறார். பிரச்சினை என்றால் அவரைப் பார்க்கப் போய்விடுவார்’. குடிநுழைவுக் கோப்புகள் குடையப்பட்டதில் அவர் சொல்வது சரிதான் என்று தெரிந்தது. கோழிக்கோடு காவல்துறைக்கு தகவல் பறந்து துரியோதனன் அங்கேயே கைது செய்யப்பட்டுவிட்டார். ஓரிரு நாளில் அவர் சிங்கப்பூருக்கு அழைத்துவரப்படுவார். இல்லை இழுத்துவரப்படுவார். அவரை நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லுமுன் எல்லாத் தடயங்களையும் சேகரித்தாக வேண்டும். அவர் எப்படி சாவித்திரியின் இறப்புக்குக் காரணம்? கொல்ல காரணம் இருக்கிறது. அவர் அப்படிச்செய்திருக்காவிட்டால் அவர் செய்த தவறு அம்பலமேறி அசிங்கமாயிருக்கும். இப்போது அதைவிட கொடூரமான அசிங்கங்கள் நடக்கவிருக்கிறதே? பணிப்பெண்களின் உதவியில்லாமல் துரியோதனன் இதைச் செய்திருக்க முடியாது.
பணிப்பெண்களின் தொலைபபேசிகள் சலிக்கப்படுகிறது. எதுவுமே தப்பித்துவிடக்கூடாது. புகைப்படங்கள் எல்லாம் பெரிது பெரிதாக பிரதி எடுக்கப்பட்டு ஒரு தூசு உட்காரும் இடம் கூட விடாமல் ஆராயப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இருவருக்குமே விடுமுறை. ஜூசியாட் சாலையில் கூட்டமாக இருப்பதுபோல் இரு தொலைபேசியிலும் ஏராள புகைப்படங்கள். அந்தப் படங்கள் துல்லியமாக ஆராயப்படுகின்றன. ஒரு புகைப்படத்தைப் பார்த்துவிட்டு புருவம் உயர்த்தினார் கிஷோர். இருவரும் ஒன்றாக இருந்து பேசிக்கொண்டிருப்பதுபோன்ற ஒரு புகைப்படம் சிக்கியிருக்கிறது. மாட்டிக்கொண்டார்கள். இனி தப்பமுடியாது. கிஷோர் உஷாரானார். மேலும் சாட்சியங்கள் கிடைக்கலாம். நாளைக்காலை துரியோதனன் சிங்கப்பூர் வரும்போது முதல் தகவலறிக்கை தயார் செய்யப்படவேண்டும். எந்த வகையிலும் துரியோதனன் தப்பிவிடக்கூடாது. இன்னும் புகைப்படங்கள் மில்லி மீட்டர் மில்லி மீட்டராக துருவப்படுகிறது. அட! அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் கிஷோர் மிகப் பலமாக தன் கையை மேசையில் குத்தினார். இது முக்கியமான தடயம். இதில் எல்லா இரகசியங்களும் நிச்சயமாக அவிழும். தனக்குள் பேசிக்கொண்டார். இரு பணிப்பெண்களின் வாக்குமூலம் முக்கியம். இதுவரை பெண் காவவர்களால் விசாரிக்கப்பட்ட பணிப்பெண்கள் முதன்முதலாக கிஷோரின் கத்தரிப்பிடிக்கு வருகிறார்கள். வழக்கமாகக் கொடுக்கப்படும் அதிர்ச்சி வைத்தியங்கள் பயமுறுத்தல்கள் ஏற்கனவே ஏராளமாகக் கொடுக்கப்பட்டுவிட்டது. கிஷோர் நேராக விஷயத்துக்கு வந்தார். அந்தப் புகைப்படம் கிஷோர் கையில் இருந்தது. சரீனா சமந்தா கவனியுங்கள். நீங்கள் சிக்கிவிட்டீர்கள் நீங்கள் பொய் சொன்னது புரிந்துவிட்டது. துரியோதனன் நாளை வருகிறார். அதற்குள் எல்லாவற்றையும் சொல்லிவிடுங்கள். உண்மையைச் சொல்லாவிட்டால் பாவம் உங்களைக் காப்பாற்ற யாராலும் முடியாது. நீங்கள் இருவரும் ஏற்கனவே சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இதோ ஆதாரம் ஒருவரை ஒருவர் தெரியாது என்று நீங்கள் இருவரும் ஏற்கனவே சொன்னது பொய். இதோ உன் தொலைபேசியில் சாவித்திரியின் மாத்திரை டப்பாவின் புகைப்படம். இதை எதற்காக எடுத்தாய்? சரீனா கிட்டத்தட்ட செத்துவிட்டாள். உண்மையை வரவழைக்க எங்களால் முடியும். அதற்கெல்லாம் வேலையில்லை. நீங்கள் அப்ரூவர்களாக ஆகிவிடுங்கள். உங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் தருகிறேன். நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள்.
மதிய உணவு வரவழைக்கப்பட்டது. இருவரும் தனித்தனியாக இரு அறைகளில் வைக்கப்பட்டார்கள். உண்மையைக் கறக்கும் வேலை தொடங்கிவிட்டது. நீங்கள் பயமுறுத்தப் பட்டதால்தான் இதைச் செய்தீர்கள் என்று சொல்லி உங்களுக்கு தண்டனையை லேசாக்கிவிட எங்களால் முடியும். ம்…. சொல்லிவிடுங்கள். சரீனா ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். சமந்தாவும்தான். இந்த மாத்திரைப் பெட்டியைப் படம் எடுத்து அனுப்பினால் இந்தோனேஷிய ரூபாய் 10 மில்லியன் தருவதாக சமந்தா சொல்லியிருக்கிறார். சமந்தாவுக்கும் அதே தொகையை துரியோதனன் கொடுத்திருக்கிறார். சாவித்திரிக்கு சர்க்கரை வியாதி இருந்திருக்கிறது. கொஞ்சம் ரத்த அழுத்தமும் கொழுப்பும் கூட உண்டு. அதற்காக இருவேளை மூன்று மூன்று மாத்திரைகள் அவர் சாப்பிடுகிறார். இந்த மாத்திரைகளை வாரம் ஒரு முறை அந்த மாத்திரைப்பெட்டியில் கிழமையிடப்பட்ட தனித்தனி அறையில் வைக்கும் வேலை சரீனாவுடையது. சுரை விதை போல் இருக்கும் மெட்ஃபோமின் மாத்திரை போன்ற விஷமாத்திரை ஒன்றை துரியோதனன் தந்து அந்த மாத்திரைப் பெட்டியில் சேர்க்கச் சொல்லியிருக்கிறார். சாவித்திரி இறந்த அந்தக் காலை அவர் அந்த மாத்திரையைத்தான் விழுங்கியிருக்கிறார். அடக்கொலைகாரா1
துரியோதனன் சிங்கை வந்துவிட்டார். வழக்குமன்றத்துக்கு அவர் கொண்டுவரப்பட்டார். மொத்தத் தகவலும் மிகத்துல்லியமாக நீதிமன்றத்தில் கொடுத்தாகிவிட்டது. உலகம் முழுவதும் இந்தச் செய்தி செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் வெளியாகிறது. சிங்கப்பூரில் எல்லாரும் இதை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். துரியோதனன் தூக்கிலிடப்படவேண்டும் அதுவும் உடனே. இப்படித்தான் எல்லாரும் பேசிக்கொண்டார்கள். அந்த விஷமாத்திரை எப்படி வந்த்து என்று தெரிந்தாக வேண்டும். அதற்காக தீர்ப்பு வெளியிடப்படவில்லை. இன்னும் சில தினங்களில் அதையும் கண்டுபிடித்துவிடலாம். அதன்பிறகு துரியோதனன் தொங்கவேண்டியதுதான்.
எல்லாம் முடிந்தது. அந்த மாத்திரையைக் கொடுத்தவனும் அவனுடைய கும்பலும் சிக்கிவிட்டது. துரியோதனன் கதை முடிந்துவிட்டது.
திருமதி சாவித்திரி மன உளச்சலில்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். வனஜாவும் கிரிஜாவும் லண்டனுக்குச் செல்லுமுன் சாவித்திரி சொன்னார். ‘நீங்கள் சம்பாதிக்கும் பத்தாயிரம் வெள்ளியைவிட என்னோடு நீங்கள் பத்து நிமிடங்கள் இருந்தால் போதும்.’ தோழியின் பேச்சைக் கேட்டு அம்மாவின் பேச்சை நீர்க்குமிழியாக்கி சாவித்திரியை 40 சதவீதம் அவர்கள் கொன்றுவிட்டார்கள். இங்கேயே மோகன் அதிகமாகத்தான் சம்பாதித்துக்கொண்டிருந்தார். நண்பரின் பேச்சைக் கேட்டு ஹவாய் தீவில் இதே தொழிலைச் செய்தால் பத்து மடங்கு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் மோகன் புறப்பட்ட போது சாவித்திரி சொன்னார். ‘நம் இருவருக்கும் பொது உறவாக இருப்பது வங்கிக்கணக்கு மட்டும்தானா? நீங்கள் எனக்கு உறவில்லையா? என்னோடு அழ சிரிக்க நீங்கள் என் பக்கத்தில் இருப்பது எத்தனை லட்சம் நீங்கள் சம்பாதித்தாலும் அதைவிடப் பெரிதல்லவா எனக்கு. வெகு சிலபேர்தான் இவ்வளவு வசதியான வீட்டில் வாழமுடியும். நாம் வாழ்கிறோம். தேவைக்கு மேல் வருமானம் இருக்கிறது. தயவுசெய்து என்னைக் கொன்றுவிடாதீர்கள்.’ சாவித்திரியின் வார்த்தைகளை வெறும் வார்த்தைகள் மட்டுமே என்று நினைத்து அவரும் பறந்துவிட்டார் சாவித்திரி மேலும் 50 சதவீதம் செத்துவிட்டார். வாழ்ந்து கொண்டிருப்பது பத்துசதவீதம்தான் அதைத்தான் கொன்றிருக்கிறார் துரியோதனன். பத்து சதவீதம் கொன்றதற்கே மரண தண்டனை. யோசியுங்கள் சாவித்திரி 50ஐத் தாண்டிவிட்டார் 50 தாண்டிய மனைவியோடு கணவன்மார்களே சேர்ந்து வாழுங்கள். பிள்ளைகளே அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சியை விதையுங்கள். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். அவசியமில்லாமல் தர்மம் தடம்புரள காரணமாக இருந்துவிட்டீர்களே.
யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationவால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட காலம் இயங்கி வரக் காரணம் ஆகலாம்அம்ம வாழிப் பத்து—1
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *