மருத்துவக் கட்டுரை குருதி நச்சூட்டு ( SEPTICAEMIA )

This entry is part 4 of 9 in the series 23 செப்டம்பர் 2018

நோய்க் கிருமிகள் உடலில் புகுந்து பல உறுப்புகளைத் தாக்கி நோயை உண்டுபண்ணுகின்றன என்பதை அறிவோம். ஆனால் சில கிருமிகள் இரத்தத்தில் கலந்து அங்கேயே பெருகி நச்சுத் தனமையையை உண்டாக்கி ஆபத்தான விளைவை உண்டுபண்ணுகின்றன. இதை ” செப்டிசீமியா ” அல்லது குருதி நச்சூட்டு என்று அழைக்கிறோம். இது மிகவும் ஆபத்தானது.உடனடியாக சிகிச்சை வழங்காவிடில் மரணம் உண்டாகும்.
உடலின் ஒரு பகுதியில் உண்டாகும் கிருமித் தொற்றோ அல்லது ஆழமான காயமோ இதை ஏற்படுத்தலாம். கிருமிகள் இரத்தத்தில் கலப்பதால் அதை எதிர்த்து உடலில் உண்டாகும் அழற்சியை செப்டிசீமியா என்கிறோம்.இத்தகைய அழற்சி என்பது கிருமித் தொற்றுக்கு எதிராக உடலின் இயல்பான செயல்பாடு ,அது கிருமித் தொற்றை சுற்றி வளைத்து தாக்கும் நிலையாகும்.
கிருமித் தொற்று உண்டானதும் இரத்தத்தில் அதை எதிர்க்கும் வகையில் வெள்ளை இரத்த செல்களான மேக்ரோபேஜ் ( Macrophage ), , லிம்ஃபோசைட் ( Lymphocyte ) ஆகியவை அழற்சியைத் தூண்டும் இடை செயலிகள் (mediators ) என்பவற்றை சுரக்கின்றன. இவை கட்டிகளை அழிக்கும் தன்மைகள் ( Tumour necrosis factor ), இன்டர்லூக்கின் 1, ( Interleukin 1 ), பிளேட்லட் ஊக்குவிக்கும் தன்மை ( Platelet activating factor ), இன்டர்ஃபெரோன் ( Interferon ), எல்கோசநோய்ட் ( Elcosanoids ) என்னும் தன்மைகளை வெளியேற்றுகின்றன.சில வேளைகளில் இவை தேவைக்கு அதிகமாக சுரப்பதால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைத் தாண்டி ஆரோக்கியமான பகுதியையும் தாக்கி எதிர்வினையை உண்டாக்குகின்றன.
இரத்தத்தில் கிருமித் தொற்று உண்டானால் காய்ச்சல்,இருதய படபடப்பு, மூச்சுத் திணறல், குறைவான இரத்த அழுத்தம் ஆகியவை உண்டாகலாம்.

நோய் இயல்

குருதி நச்சூட்டை உண்டுபண்ணுபவை கிராம் – பாசிட்டிவ் பேக்டீரியா ( Gram – Positive Bacteria ) 40 சதவிகிதமும், கிராம் – நெகடிவ் பேக்டிரியா ( Gram – Negative Bacteria ) 60 சதவிகிதமும் ஆகும். உடலின் எதிர்ப்புச் சக்தி குறைந்திருக்கும் காலங்களின் கிருமிகள் தாக்குதலாலும் இது உண்டாகலாம். ஆரோக்கியமாக இருந்தவர்களுக்கு நுரையியீரல் தொற்று, சிறுநீரகத் தொற்று, மற்றும் கல்லீரல் பித்தப்பைத் தொற்று மூலமாகவும் செப்டிசீமியா உண்டாகலாம். இரத்தக்குழாய் வழியாக போதை மருந்தைப் பயன்படுத்துபவர்களுக்கும் இது எளிதில் உண்டாகலாம்.தோலின் மேல் அல்லது சுற்றுச் சூழலில் உள்ள கிருமிகள் உள்ளே புகுவதால் இது உண்டாகிறது.மருத்துவமனையில் படுத்திருக்கும் நோயாளிகளுக்கு கிருமிகள் தொற்று புண்கள் மூலமாகவும், குழாய் வழியாக சிறுநீர் வெளியேற்றப்படும்போதும், அல்லது இரத்தக்குழாய் மூலம் நீர் ஏற்றும் குழாய் மூலமாகவும் கிருமிகளின் தொற்று உண்டாகலாம்.

அறிகுறிகள்

காய்ச்சல், குளிர்நடுக்கம் ( rigor ), குறைந்த இரத்த அழுத்தம் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.பலமின்மை, தலைவலி, குறைந்த உணர்வுநிலை ( Change in conscious level ) ஆகியவை முதலில் தோன்றலாம்.உடல் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கும் வயதானவர்களுக்கும் இத்தகைய அறிகுறிகளை ஆபத்தான எச்சரிக்கைகளாகும்.
குருதி நச்சூட்டும் சில கிருமிகள் மிகவும் கொடியவை
ஸ்டேப்பல்லோகாக்கஸ் பேக்டீரியா கிருமிகள் ( Staphylococcus Bacteria ) நச்சு அதிர்ச்சி நோயியம் ( toxic shock syndrome ) உண்டுபண்ணும் புற நச்சு ( Exotoxin ) உற்பத்தி செய்கின்றன. இவை இரத்தத்தில் கலக்கும்போது திடீர் காய்ச்சல்,தோலில் சிவந்த புள்ளிகள்,, அரிப்பு, வயிற்றுப்போக்கு, அதிர்ச்சி ( shock ) ஆகியவை உண்டாகும்.
வாட்டர்ஹவுஸ் ஃபிரிடெ ரிக்சன் நோயியம் ( Waterhouse Friderichsen syndrome ) என்பது நைசீரியா மெனின்ஜைட்டிடிஸ் ( Neisseria meningitidis ) என்னும் கிருமிகளால் உண்டாகும் கொடிய நோய். இதில் உடலில் ஊதா நிற புள்ளிகள் உண்டாகி நோயாளி அதிர்ச்சிக்கு உள்ளாகி உயிரிழக்க நேரும்.

பரிசோதனைகள்

இரத்தப் பரிசோதனையில் வெள்ளை இரத்த செல்களில் எண்ணிக்கை, சீரம் எலெக்ரோலைட் , கல்லீரல் கெமிஸ்டரி , லேக்டேட்,அளவு பார்க்கவேண்டும்.
இரத்த வளர்ப்பு ( Blood Culture ) செய்தாக வேண்டும்.
வேறு இடங்களிலிருந்து சீழ், நெஞ்சு சளி, சிறுநீர் போன்றவற்றையும் வளர்ப்பு ( culture ) செய்தாக வேண்டும்.
நெஞ்ச எக்ஸ்ரே படம்.எடுக்க வேண்டும்.
வயிறு அல்ட்ராசவுண்டு பரிசோதனை தேவைப்படும்.

சிகிச்சை முறை

குருதி நச்சூட்டு உள்ளதென்று தெரிந்ததும் உடனடியாக ” குருதி நச்சூட்டு 6 ” என்ற முறையைப் பின்பற்றி மரணத்தின் ஆபத்தைக் குறைப்பதோடு, மருத்துவ மனையில் தாங்கும் நாட்களையும் குறைக்கலாம். பின்வரும் 3 நோயை அறியும் முறையையும் 3 சிகிச்சை முறையையும் கையாளவேண்டும்.இதை நோய் உள்ளதென்று அறிந்த 1 மணி நேரத்தில் செயல்படுத்துவது சாலச் சிறந்தது.
1. அதிகமாக பாயும் பிராணவாயு செலுத்துதல் – Deliver high flow oxygen
2. இரத்த வளர்ப்பு செய்வது – Do Blood Culture
3. தேவையான எண்டிபையோட்டிக் மருந்தை இரத்தக் குழாய் வழியாக செலுத்துதல் – Administer empiric intravenous antibiotics
4. இரத்தத்தில் லேக்டேட் அளவையும் குருதியணு எண்ணிக்கையையும் நிர்ணயம் செய்தல் – Measure serum lactate and send full blood count .
5. இரத்தக்குழாய் வழியாக நீர் ஏற்றுதல் – Start intravenous fluids
6. வெளியேறும் சிறுநீரின் அளவை சரியாக அளத்தல் – Commence accurate urine output measurement.
இரத்த வளர்ப்பு ( Blood Culture ) மூலமாக நோய்க் கிருமியைக் கண்டுபிடித்து அதை எந்த எண்டிபையோட்டிக் மருந்தால் அழிக்கலாம் என்பதையும் கண்டறிந்து, நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கவனித்தால் ஓரளவு காப்பாற்றலாம்.

( முடிந்தது )

Series Navigationஅழகின் மறுபெயர்……மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *