ஐங்குறுநூறு—பாலை

This entry is part 4 of 6 in the series 23 டிசம்பர் 2018

பாலை என்பது தனித்திணையாக கூறப்படவில்லை. குறிஞ்சியும், முல்லையும் காலத்தின் வெம்மையால் தம் தன்மையை இழந்து கோடையின் கொடுமை வாய்ப்பட்டால் பாலையாகும். பிற்காலத்தில் நெய்தலும் அவ்வாறு ஆகும் என்றும் கூறி உள்ளனர். தலைவனைத் தலைவி பிரிந்திருத்தல் பாலை நிலத்துக்குரிய பொருளாகும். பாலைத்திணைக்குரிய நூறு பாடல்களையும் ஓதலாந்தையார் பாடி உள்ளார். ஓதல் என்பது இவரின் ஊர்ப்பெயராக இருக்கலாம் என ஒரு சாராரும், ஓதல் என்பது இவரது தொழில் அதாவது ஓதலாகிய அறிவுத் தொழிலைக் குறிக்கும் என ஒரு சாராரும் கூறுகின்றனர். இவர் பெயரில் உள்ள ஆந்தை என்பது ஆதன் தந்தை என்பதைக் குறிக்கும்.
====================================================================================
செலவு அழுங்குவித்த பத்து
அவளப் பிரிஞ்சு போகத் துணிந்த அவன அப்படிச் செய்ய வேண்டாம்னு சொல்லி ஆனா அதால சோர்வு வர்ற பத்துப் பாட்டுகள் கொண்ட பகுதி இது.
==================================================================================
செலவு அழுங்குவித்த பகுதி–1
மால்வெள் ளோத்திரத்து மைஇல் வால்இணர்
அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும்
அவ்வரை இறக்குவை ஆயின்
மைவரை நாட! வருந்துவன் பெரிதே!
[வெள்ளோத்திரம்=பாலை நிலத்தின் ஒருவகை மரம்; வெண்பூக்களை உடையது; மால்=பெரிய; மைஇல் வால்இணர்=குற்றமற்ற வெண்மையான பூங்கொத்து; அருஞ்சுரம்=அரிய பாலைவழி; சென்னிக் கூட்டும்=தலைக்கு அழகு தரும்; மைவரை=கருமையான மலை; இறக்குவை ஆயின்=கடந்து சென்றால்]
நான் பிரிஞ்சு போறேன். நீதான் அவளப் பாத்துக்கணும்னு தோழிக்கிட்ட அவன் சொல்றான். அப்ப அவ சொல்ற பாட்டு இது.
”கருப்பா மலை இருக்கற நாடனே! பெரிய வெள்ளோத்திரத்தின் குற்றமில்லாத பூக்களை பாலைவழியில போறவங்க தலையில அழகாப் போட்டுக்குவாங்க; அப்படிப்பட்ட மலை வழியா நீ போனா இவ ரொம்பவும் வருத்தப்படுவா.”
வெயிலோட சூட்டைத்தாங்க வெள்ளோத்திரப் பூவைத் தலயில போட்டுக்குவாங்க; அப்படிப் பூவைப் போட்டுக்கிட்டுப் போறவங்களைப் பாத்தா நீயும் ரொம்பத் துன்பப்படுவேன்னு மறைவா சொல்றா.
=====================================================================================
செலவு அழுங்குவித்த பத்து—2
அரும்பொருள் செய்வினை தப்பற்கும் உரித்தே
பெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்;
செல்லாய் ஆயினோ அன்றே
மெல்லம் புலம்ப! இவள்அழப் பிரிந்தே
[தப்பல்=தவறுதல்; தகைத்தல்=தடுத்தல்; மெல்லம்=மென்மையான; புலம்பன்=நெய்தல் நிலத் தலைவன்]
அவன் பணம் தேடப் போகப்போறான். அதை அவக்கிட்ட சொல்லப் பயந்துக்கிட்டு தோழிக்கிட்டச்சொல்லி அவளை ஒத்துக்கச்சொல்லுன்னு சொல்றான். அப்ப தோழி சொல்ற பாட்டு இது.
”மென்மையான நெய்தல் நெலத்தலைவனே! நீ பணம் தேடப் போற. அந்த வேலை தவறிப் போனாலும் போவும்; பெரிசா தோள் இருக்கற இவ ஒன்னத் தடுக்கற மனசை வச்சுக்கிட்டிருக்கா. அதால இவள அழவிட்டுட்டு நீ பிரிஞ்சு போகாம இருக்கறது நல்லது.
====================================================================================செலவு அழங்குவித்த பத்து–3
புதுக்கலத்து அன்ன கனிய ஆலம்
போகில்தனத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம்
தண்ணிய இனிய ஆக;
எம்மொடும் சென்னோ விடலை! நீயே!
[கலம்=மண் சட்டி; ஆலம்=ஆலமரம்; போகில்=ஒருவகைப் பறவை; வேனில்=கோடை; விடலை=பாலை நிலத்தவன்]
அவ என்னை ஒனக்குக் கட்டிக் குடுப்பாங்களோ மாட்டாங்களோன்னு தெரியல; எனக்குப் பயமாயிருக்குது. அதால என்னை நீ ஒன் ஊட்டுக்குக் கூட்டிக்கிட்டு போயிடுன்னு சொல்றா. ஆனா அவன் போற வழி ரொம்பக் கொடுமையானதுன்னு சொல்றான். அதுக்கு அவ நான் அதையும் பொறுத்துப்பேன்னு சொல்ற பாட்டு இது.
”பாலை நெலத்தலைவனே! மண்ணால செஞ்ச புதுப்பாத்திரத்தின் நெறம் போல இருக்கற பழங்க இருக்கற ஆலமரம், தன்கிட்ட வந்தப் போகில் என்னும் பறவையை, அதை விட்டுப் போகாமத் தடுத்து நிறுத்தும். வெயிலால போறதுக்கு ரொம்பவும் கொடுமையான பாலை வழி குளிர்ச்சியா இருக்கணும்னா என்னையும் ஒன் கூடக் கூட்டிக்கிட்டுப் போ”
மரம் பழத்தாலும் நெழலாலும் பறவையைப் போக விடாம தடுத்து நிறுத்தும்போது நீ என்னயும் நெனப்பேன்றது மறைபொருளாம்.
=====================================================================================
செலவு அழுங்குவித்த பத்து—4
கல்லாக் கோவலர் கோலில் தொட்ட
ஆன்நீர்ப் பந்தல் யானை வௌவுங்
கல்அதர்க் கவலை செல்லின், மெல்லியல்
புயல்நெடுங் கூந்தல் புலம்பும்;
வயமான் தோன்றல்! வல்லா நீயே!
[கல்லா=அறியாமை; கோவலர்=இடையர்; பத்தல்=பள்ளம்; அதர்=வழி; ஆன்=பசு; கால்நடைகோல்=கம்பு; வௌவும்=கவரும்; கவலை=கவர்த்த வழிகள்; வயமான்=விரைந்து செல்லும் குதிரை]
அவன் பணம் தேட வேற ஊருக்குப் போகப் போறான். அப்பப் போகக் கூடாதுன்னு தோழி சொல்ற பாட்டு இது.
”நல்ல பலமான குதிரை வச்சிருக்கற தலைவனே! ஒண்ணுமே தெரியாத இடையருங்க அவங்க வச்சிருக்கற கோலாலத் தோண்டி ஏற்படுத்தின பள்ளத்துல இருக்கற தண்ணீரை யானை வந்து குடிக்கும். அப்படிப்பட்ட வழியில நீ போனா ரொம்ப மென்மையா இருக்கறவளும், கருப்பா மேகம் போல இருக்கற கூந்தல் உடையவளுமான இவ தனியா இருந்து ரொம்பவும் வாடிப் போவா. அதால நீ போக வாணாம்”
=====================================================================================

செலவு அழுங்குவித்த பத்து—5
களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது
பசிதின வருந்தும் பைதறு குன்றத்துச்
சுடர்த்தொடிக் குறுமகள் இனைய,
எனைப்பயம் செய்யுமோ விடலைநின் செலவே!
[களிறு=ஆண்யானை; பிடி=பெண்யானை; தழீய=தழுவி; பிறபுலம்=பாலை அல்லாத வளமான நிலம்; படராது=செல்லாது; பைதறு=பயன்; விடலை=பாலை நிலத் தலைவன்]
அவள உட்டுட்டு அவன் மட்டும் போறேன்னு சொல்ல அப்ப தோழி சொல்ற பாட்டு இது.
”தலைவனே! ஆண்யானைங்க பெண்யானைங்களைத் தழுவிக்கிட்டு வேற நெலத்துக்கும் போறத நெனக்காம பசியால வருந்திக் கெடக்கும். பச்சையே இல்லாத மலைக்கு நீ போனா நல்லா வெளிச்சம் வர்ற மாதிரி வளையல் போட்டிருக்கற இவ அழுது வாடிப் போவா; அது ஒனக்கு என்னா பயன்தருமோ?”
அது காதலித்தப் பெண் யானையை உட்டுட்டு ஆண்யானை துன்பத்திலும் போகாம இருக்கும். ஆனா நீ போறேன்னு சொல்றியே; போகாதேன்றது மறைபொருளாம்.
=====================================================================================செலவு அழுங்குவித்த பத்து—6
வெல்போர்க் குரிசில்! நீ வியன்சுரன் இறப்பின்
பல்காழ் அல்குல் அவ்வரி வாடக்
குழலினும் இனைகுவள் பெரிதே;
விழவு ஒலி கூந்தல் மாஅ யோளே!
[குரிசில்=தலைவன்; வியன்சுரன்=அகன்ற பாலை வழி; இறப்பின்=கடந்தால்; வரி=அழகு; இனைகுவர்=வருந்துவள்; மாஅயோள்=மாமை நிறத்தை உடையவள்; காழ்=முத்து வடம்]
அவன் பிரிஞ்சு போகப்போறான். அவனைப் பிரிஞ்சு போகாதேன்னு தோழி சொல்ற பாட்டு இது.
”சண்டையில எப்பவும் ஜெயிக்கறவன் நீ! கொடுமையான காட்டுவழியில நீ போனா அடி வயிற்றின் அழகெல்லாம் வாட, வாசனை உள்ள கூந்தல் வச்சிருக்கற மாமை நெறம் உடைய இவ குழலை விட இனிமையான கொரலெடுத்து அழுவா.”
====================================================================================
செலவு அழுங்குவித்த பத்து—————7
ஞெலிகழை முழங்குஅழல் வயமா வெரூஉம்
குன்றுடை அருஞ்சுரம் செலவுஅயர்ந் தனையே
நன்றுஇல கொண்க!நின் பொருளே;
பாவை அன்னநின் துணைப்பிரிந்து வருமே!
[ஞெலிதல்=கடைதல்; கழி=மூங்கில்; முழங்கு=ஒலித்தல்; வயமா=புலி; வெரூஉம்=அஞும்; சுரம்=பாலைவழி; அழல்=நெருப்பு; கொண்க=கடற்கரைத் தலைவ]
பணம் தேடப் போறேன்னு சொன்ன அவன்கிட்டத் தோழி சொல்ற பாட்டு இது.
“கடற்கரைத் தலைவனே! ஒண்ணோட ஒண்ணு ஒராய்ஞ்சதால மூங்கிலெல்லாம் பத்தி எரியும். அந்த நெருப்பைப் பாத்து புலி பயந்து ஓடும் மலைப்பக்கத்து வழியில நீ பிரிஞ்சு போகத் துணிஞ்சிட்ட; நீ அங்கபோய் சேக்கற பணம் பாவை மாதிரி இருக்கற ஒன் மனைவியைப் பிரிஞ்சுதான ஒனக்கு வருது. அதால அந்தப் பொருள் ஒனக்கோ இல்ல எம்க்களுக்கோ எந்த நல்லதையும் செய்யாது.”
மூங்கில்லதான் புலி பதுங்கி இருக்கும். ஆனா அந்த மூங்கிலோட நெருப்பைப் பாத்தே புலி பயந்து ஓடுது. அதேபோல அவகிட்டதான் நீ இருக்கணும். பிரிஞ்சா அவகிட்ட வர்ற வெம்மையை எண்ணி நீ பயப்படமாட்டேன்றது மறைபொருளாம்
=====================================================================================செலவு அழுங்கு பத்து—-8
பல்இருங் கூந்தல் மெல்லிய லோள்வயின்
பிரியாய் ஆயினும் நன்றே; விரியிணர்க்
கால்எறுழ் ஒள்வீ தாஅய
முருகமர் மாலை பிரிந்தெனப் பிரிமே
[இரும்=கரிய; மெல்லியலோள்=மென்மையான இயல்புள்ள தலைவி, இணர்=பூங்கொத்து; கால்=காம்பு; எறுழ்=ஒருவகை மரம்; ஒள்=ஒளி பொருந்திய; வீ=மலர்; தாஅய=பரந்த; முருகு=முருகக் கடவுள்; அமர்=விருப்பம்; மா=பெரிய]
அவன் பிரியப் போறேன்னு சொல்றான். பிரிஞ்சு போகாதேன்னு தோழி சொல்ற பாட்டு இது.
”பலவகையா கருப்பான கூந்தலையும் மென்மையான இயல்பும் இருக்கற அவள நீ பிரியாம இருந்தாதான் நல்லது. எறுழ் மரத்தோட பூவெல்லாம் இருக்கற பூங்கொத்துலேந்து காம்போட பூவெல்லாம் விழுந்து கெடக்கற பெரிய மலயில முருகக் கடவுள் இருக்காரு. அவரு இந்த மலையை உட்டுட்டுப் போனா நீயும் எங்களத் தனியே உட்டுட்டுப் போ”
சாமி முன்னாலதான் அவள விட்டுப் போகமாட்டேன்னு அவன் சொன்னான். அதை ஞாபகப்படுத்தினா அவன் போகமாட்டான்னு சொல்றா.
=====================================================================================
செலவு அழுங்குவித்த பத்து—9
வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
செலவு அயர்ந்தனையால் நீயே; நன்று
நின்நயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ
இறுவரை நாட!நீ இறந்துசெய் பொருளே!
[வேனில்=வேனிற் காலம்; திங்கள்=மாதம்; வெஞ்சுரம்=கொடிய பாலை வழி; இறந்து=கடந்து; செலவு அயர்தல்=செல்ல விரும்புதல்; நயந்து=விரும்பி; உறைவி=தலைவி; கடுஞ்சூல் சிறுவன்=முதல் புதல்வன்; இறுவரை=பெரிய மலை]
அவன் பணம் தேடப் போறேன்னு சொல்றான். அதுக்குத் தோழி ஒன் மனைவி மொதமொத புள்ள உண்டாகி இருக்கா, அவளுக்கு மகன் பொறந்து அவன் சிரிப்பைப் பாக்கறதை விடப் பணம்தான் பெரிசான்னு தோழி கேக்கறா.
”பெரிய மலையெல்லாம் இருக்கற நாட்டைச் சேந்தவனே! வெப்பமான காலத்துல கொடுமையான பாலை வழியிலப் போய்ப் பணம் சம்பாதிக்கப் போறேன்னு நீ விரும்பிச் சொல்ற; அப்படிப் போய் நீ தேடிக்கிட்டு வரும் பணம் ஒன் மனைவியோட மொதல் புள்ளயாகப் பொறக்கறவனோட சிரிப்பை விடத் தித்திக்குமோ?
====================================================================================
செலவு அழுங்குவித்த பத்து—10
பொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல்
இலங்குவளை மென்தோள் இழைநிலை நெகிழப்
பிரிதல் வல்லுவை ஆயின்
அரிதே விடலை! இவள் ஆய்நுதல் கவினே!
[பொலம்=பொன்; பாண்டில்=வட்டக்காசு; அல்குல்=அடிவயிறு;
இலங்கு=ஒளிவிடுகின்ற; இழை=ஆபரணம்; வல்லுவை=வல்லமை உடைய; நுதல்=நெற்றி; கவின்=அழகு]
அவன் பணம் தேடப் போறேன்னு சொல்றான். அப்பத் தோழி, “நீ போய்ப் பணம் சேர்த்துக்கிட்டு வந்தாலும் நீ பிரிஞ்சு போனதாலப் போயிட்ட இவ அழகை மறுபடியும் ஒன்னாலத் தர முடியுமா?”ன்னுன் கேக்கற பாட்டு இது.
”பாலை நெலத்தலைவனே! பொன்னாலான வட்டக்காசுகளை எல்லாம் கோத்து ஆபரணமாப் போட்டுக்கிட்டு இருக்கற அடிவயித்த உடையவ இவ. ஒளி கொடுக்கற வளையலும்., தோள்ள இருக்கற நகையும் நெகிழ்ந்து போக, ஒன்னால பிரிஞ்சு போக முடிஞ்சா இவளோட நெத்தி அழகு மறுபடியும் எப்பவும் வராது தெரியுமா?
====================================நிறைவு=======================================

Series Navigationவழியில்துணைவியின் இறுதிப் பயணம் – 4
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *