சபரிமலை கோவில் பழக்கங்களை பல்வேறு விதங்களில் வரையும் அரசியல் மூன்று நிலைகளில் மையம் கொண்டுள்ளது.
1. இது பெண்களை அன்னியப்படுத்துகிறது. பெண்களின் உரிமையை நிலைநாட்டவேண்டும்
2. இது மாதவிடாயை தீட்டு என்று அசிங்கப்படுத்துகிறது.
3. இது இந்து மதத்தை பார்ப்பனர்கள் ஆக்கிரமித்ததால் இப்படிப்பட்ட பெண்ணுக்கு எதிரான நிலைப்பாடுகளை கோவில்கள் கொண்டிருக்கின்றன. இதே போலத்தான் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் நுழைவதை பார்ப்பனர் எதிர்த்தனர். இன்று பெண்கள் நுழைவதை எதிர்க்கின்றனர்.
இந்த மூன்று அரசியல் வாதங்களுமே தவறானவை. மேலும் பிரச்னையை மேற்கத்திய சிந்தனை மரபின்படி அணுகுபவை. இதனை பற்றிய நீண்ட கட்டுரைக்கான தேவை இருக்கிறது.
முதலாவதாக சபரிமலை பாரம்பரியம் பெண்களை அன்னியப்படுத்தவில்லை. பெண்கள் எப்போதுமே சபரிமலைக்குள் அனுமதிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். பருவம் அடையாத பெண்களும், மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களும் எப்போதுமே சபரிமலை சாஸ்தாவை பார்க்க அனுமதிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். அதற்கு பெண்களும் இருமுடி கட்டி, ஒருமனதாகி குருவெனவே வணங்கி ஏராளமான பெண்கள் தவமிருந்து சென்றிருக்கிறார்கள். அது எப்போதுமே பெண்களை அன்னியப்படுத்தவில்லை.
இரண்டாவது மாதவிடாயை தீட்டு என்று அசிங்கப்படுத்துகிறது என்ற வாதம். பருவ வயதுடைய பெண்களை காணமாட்டேன் என்று பிரம்மச்சரியம் விரதம் பூண்ட சாஸ்தாவின் பாரம்பரியம் மாதவிடாயை தீட்டு என்று சொல்லவில்லை. மாதவிடாய் பருவ வயதின் அடையாளம் என்று சொல்கிறது. தன்னை பிரம்மச்சரியனாக அடையாளம் காண்கிற தெய்வத்தையே அய்யப்பன் சாமிகளாக தவமிருக்கும் ஒவ்வொரு பக்தனும் பார்க்கிறான். அவனது தற்காலிக பிரம்மச்சரிய விரதத்தின் அடையாளமும், அதன் நோக்கமும், அதன் விடுதலையுமாக அவனது தெய்வம் ஐயப்பனை அங்கே பார்க்கிறான். ஐயப்பன் பருவ வயதுடைய பெண்ணை கண்டு தன் பிரம்மச்சரியம் விரதத்தை விட்டுவிடுவான் என்று நினைத்து அங்கே பெண்கள் போகக்கூடாது என்று சொல்லப்படவில்லை. ஏனெனில் இந்த பூமியில் ஐயப்பன் இருந்த காலத்தில் எத்தனையோ பெண்களை ஐயப்பன் பார்த்திருக்கிறான். தன்னை மணம் புரிந்துகொள்ள விரும்பிய மகிஷியையும் அவன் துறந்து, தான் பிரம்மச்சரிய விரதம் கொண்டவன் என்று சொல்லி நிராகரித்திருக்கிறான். ஆகையால் ஐயப்பனின் விரதம் அங்கே இல்லை. ஆனால், ஐயப்பனை பிரம்மச்சரியனாக பார்க்கும் பக்தனின் மனத்தில் இந்த கோவிலுக்கு பருவ வயதுடைய பெண்கள் வருவதில்லை என்ற நினைப்பு முக்கியம். அதற்காகவே அவன் இருமுடி கட்டி தன் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்கிறான். அங்கே அனைத்து பெண்களும் போகலாம் என்னும் போது மனம் வருந்தி அந்த இருமுடியை பம்பை ஆற்றிலேயே விட்டுவிட்டு அழுதுவிட்டு திரும்பியிருக்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள்.
இந்துக்களின் தெய்வம் எப்போதுமே பக்தனின் தெய்வம். பக்தனுக்கு அன்னியப்பட்டு வானத்தில் உட்கார்ந்துகொண்டு நான் வேறு நீ வேறு, என்னை வணங்குவதற்கே உன்னை படைத்தேன் என்றும் என்னை கண்டு அஞ்சு என்றும் கேட்டுகொண்டு இருப்பதில்லை. இறையச்சம் என்ற வார்த்தையே இந்து மதத்துக்கு அன்னியப்பட்ட வார்த்தை.
ஒரு இந்துவின் தெய்வம் கல்லில், மரத்தில், செம்பில், பித்தளையில், பிடித்து வைத்த மஞ்சளில் வருகிறது. இயற்கையிலிருந்து உருவாகி இயற்கையே அருளாகி, அருள் தந்து இயற்கையோடு இணைந்துவிடுகிறது. தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான் என்று கண்ணதாசனின் கவிமனம் உடனே இந்து மனத்தை அடையாளம் கண்டுகொண்டுவிடுகிறது. இந்துவின் சிலை செங்கல்லில் கூட வந்து அவனுக்கு அருள் பாலிக்கும். இறைக்கு அந்த சக்தி உண்டு என்று நம்புகிறான் ஒரு இந்து. மேற்கத்திய மதங்களில் சிலை வணக்கம் பாவமாக கருதப்படுவதை கண்டு ஒரு இந்து நகைக்கிறான். உன் கடவுளுக்கு ஒரு சிலைக்குள் வந்து பக்தனுக்கு அருள் பாலிக்க சக்தி இல்லையா என்று சிரிக்கிறான்.
இந்துவின் தெய்வம் பக்தனின் தெய்வம். இறையின் பல்வேறு விகசிப்புகளில், பிரம்மச்சரிய விரதம் பூண்ட ஐயப்பனும் அடக்கம், கோபிகா கிருஷ்ணனும் அடக்கம், பிறன் மனை நோக்கா பேராண்மை கொண்ட ராமன் அடக்கம், துஷ்டர்களை நசுக்க வந்த சாமுண்டேஸ்வரியும் அடக்கம். அதே போல ஒவ்வொரு தெய்வத்துக்கும் தெய்வத்தின் கோவிலுக்கும் ஒரு சில நடைமுறைகளும், பாரம்பரிய பழக்க வழக்கங்களும் இருந்துவந்தே இருந்திருக்கின்றன. இந்த பழக்க வழக்கங்களை ஆவணப்படுத்துவதையும், அதனை தொடர்ந்து கடைபிடிப்பதையுமே பார்ப்பனர்கள் செய்து வந்துள்ளனர்.
இது மூன்றாவது கருத்துக்கு வருகிறது. பார்ப்பனர்கள் என்றுமே ஆதிக்க சாதியாக இருந்ததில்லை என்ற சிறு உண்மையை மூடி மறைத்து, பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் அவர்கள் பட்டிணத்துக்கு பராரிகளாக பஞ்சம் பிழைக்க சென்று அங்கு அங்கிருந்த பிரிட்டிஷ் ராஜாக்களுக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்ததை மனதில் வைத்துகொண்டு, அவர்களை எதிரிகளாக கட்டமைத்து ஒரு இனவெறி பிரச்சாரம் உருவாகி நடந்துவந்துகொண்டிருக்கிறது. அது இன்னமும் திராவிட கருத்தியல்களாலும் இதர மிஷனரி, இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களாலும் தொடர்ந்து ஒரு அமைப்புரீதியான கருத்தியலாக உருவாகி இருக்கிறது.
யாரை தீண்டதகாதவர்களாக அறிவிப்பது என்பது எப்போதுமே அரசரின் அதிகாரத்துக்கு உட்பட்டதுதான் என்பது சற்றே வரலாற்றை புரட்டி பார்க்கும் அனைவருக்கும் தெரிந்துவிடக்கூடிய விஷயம். சமீபத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றிலேயே இத்தகைய ஆணைகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. அரசர் ஒரு குலத்தை தடைசெய்வதும், பிறகு அனுமதிப்பதும் கூட அரசரின் அதிகாரமாக இருந்திருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துவதைத்தான் பார்ப்பனர்கள் செய்திருக்கிறார்கள்.
ஆகவே பார்ப்பனர்கள் பாரம்பரியத்தை என்றுமே உருவாக்குவதில்லை. இருக்கும் பாரம்பரியத்தை தக்க வைக்கும் வேலையையே செய்கிறார்கள். ஆனால், பார்ப்பனர்களும் என்றுமே மனிதர்கள்தான். அவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் புண்யாத்மாக்கள் அல்லர். ஏதேனும் ஒரு பார்ப்பனர் செய்திருக்கும் அநியாயத்தை வைத்து ஒட்டுமொத்த பார்ப்பனர்கள் மீதும் கல்லெறிந்து அவர்களை வில்லன்களாக ஆக்கும் அக்கிரமத்தை திராவிட இயக்கம் தொடர்ந்து செய்துவந்திருக்கிறது. இதெற்கெல்லாம் முன்பு ஒட்டுமொத்த சிந்தி பார்ப்பனர்களையும் கொன்றொழித்த முகம்மது பின் காஸிம் காலத்திலிருந்து தொடர்ந்து பார்ப்பனர்கள் மீது வன்முறை ஏவிய வந்தேறி துருக்க, அரபிய பெர்ஷிய ஆக்கிரமிப்பாளர்கள் அடிதொட்டு, பின்னர் இந்தியாவின் கலாச்சார அழிவுக்கு தடையாக இருப்பதாக கருதி அவர்கள் மீது யூதர்கள் மீது காட்டிய விரோதத்துக்கு ஒப்பான வன்மத்தை காட்டிய கிறிஸ்துவ மிஷனரிகள் தொடர்ச்சியாக இன்று திராவிட கழக,இதர உதிரிகளும் வன்மத்தை பொழிகிறார்கள்.
இன்றும் தமிழ்நாட்டிலும் இந்தியா முழுமைக்கும் இந்திய வரலாற்றையும் இந்திய கலாச்சார பொக்கிஷங்களையும் காக்கும் பல தூண்களில் முக்கியமான தூண்களாக பார்ப்பனர்களே இருக்கிறார்கள். தமிழ் இலக்கியங்களை காப்பாற்றிகொடுத்த உ வே சாமிநாதய்யரிலிருந்து, வடக்கே காஷ்மீர் வரலாற்றை ஆவணப்படுத்திய கல்ஹானாவிலிருந்து எத்தனையோ பார்ப்பனர்கள் இங்கே இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தையும் இதன் பொக்கிஷங்களையும் ஆவணப்படுத்திகொண்டே இருக்கிறார்கள். இந்தியாவின் கலாச்சாரம் அழிவுபடாமலிருக்க ரஜபுத்திரர்களின், சிவாஜியின் வாட்கள் எவ்வளவு உழைத்தனவோ அதற்கு சற்றும் குறையாத பங்கு இவர்களது. ஒரு காலத்தில் அனைத்து மக்களாலும் கற்கப்பட்டு போதிக்கப்பட்ட வேதங்கள் இன்று இவர்களாலேயே காப்பாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு அன்னிய படையெடுப்பும் இவர்களை குறுங்குழுக்களாக சிதறடித்தாலும் அந்த குறுக்குழு மனப்பான்மையாலேயே இந்த வேதங்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. இந்திய காப்பியங்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. இதற்காகவேனும் இவர்களுக்கு அனைத்து இந்தியர்களும் நன்றிக்கடன் பட்டவர்கள்.
பார்ப்பனர்கள் மீது பழிபோடுவது என்பதும், அவர்களை வில்லன்களாக காட்டி, மற்ற இந்துக்களின் வாக்குக்களை பெற்றுவிடலாம் என்பதும் திராவிட இனவெறி கொள்கையிலிருந்து கம்யூனிஸ்டுகள் (இனவெறிக்கு அப்பாற்ப்பட்டதாக போலிவேஷம் கட்டும் கம்யூனிஸ்டுகள்) தற்போது கற்றுகொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆகையால் கிறிஸ்துவர்களையும், முஸ்லீம்களையும், “ சபரிமலையில் பெண்ணுரிமை” என்னும் போலி வாதத்துக்காக தெருவில் நிறுத்தி அவர்களின் வாக்குக்களை பெற்று ஆட்சிக்கு வந்துவிடலாம் என்னும் குறுகிய கால கண்ணோட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி இன்று வெறித்தாண்டவம் ஆடிகொண்டிருக்கிறது.
பிரணாயி விஜயன் அவர்களது எண்ணம் நிறைவேறலாம். நிறைவேறாமல் போகலாம். இவருக்கு கிறிஸ்துவர்களின் கட்சியான காங்கிரஸே ஆட்சிக்கு வரட்டும் என்றும் சிறுபான்மை இந்துக்கள் நினைத்து காங்கிரசுக்கு ஓட்டு போட்டு அது கேரளாவில் ஆட்சிக்கு வரலாம். (ஆனால் பாஜக ஆட்சிக்கு வராது) ஏனெனில் கேரளாவில் இந்துக்கள் சிறுபான்மைதான். அரசாங்க எண்ணிக்கைப்படி அவர்கள் லேசான பெரும்பான்மையாக இருக்கலாம். ஆனால் இந்து மதத்தில் பற்றுகொண்டவர்கள், இந்துக்களாக இருப்பவர்கள் என்றால், அவர்கள் சிறுபான்மைதான்.
சபரிமலை மீதான மிஷனரி தாக்குதலுக்கும் ஒரு வரலாறு உண்டு. 1950 இல் சபரிமலை கிறிஸ்துவர்களால் தாக்குதலுக்கு உள்ளானது.
http://firstministry.kerala.gov.in/wp-content/uploads/pdf/bills/Reports/tmple_arsn.pdf
ஐயப்பன் சிலை உடைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜோஸப் தம்மன், பெழதுவீட்டில் சாக்கோ, மலமக்கள் ஜக்கரியா, பெழதுவீட்டில் ஜோஸப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க பிரிவை சார்ந்த கிறிஸ்துவர்கள்.
இரண்டாவதாக, 1983இல், சபரிமலைக்கு போகும் வழியில், நிலக்கல் என்னுமிடத்தில் ஒரு சிலுவையை கண்டறிந்து அது செயிண்ட் தாமஸ் என்பவர் நிறுத்திய சிலுவை என்று இவர்களாக கதை கட்டி அங்கே ஒரு சர்ச் கட்ட முனைந்தார்கள். அப்போது இருந்த காங்கிரஸ் அரசாங்கம் உடனே அந்த இடத்தில் சர்ச் கட்ட இடமும் கொடுத்து, அதனை தாண்டி சபரிமலைக்கு பக்தர்கள் செல்லக்கூடாது என்று தடையும் விதித்தது. இன்றைக்கு மிசோரம் கவர்னராக இருக்கும் கும்மணம் ராஜசேகரன் தலைமையில் போராட்டம் வெடித்தது. பல போராட்டங்களுக்கு பின்னால், நிலக்கல்லில் இருந்த கோவில் மீண்டும் இந்துக்களிடம் வந்தது. சர்ச்சுக்கு வேறொரு இடம் கொடுக்கப்பட்டது.
இதே போன்ற தாக்குதல், சபரிமலையின் ஆழமான அடையாளத்தை உடைக்கும் சிதைக்கும் வழியாக இன்று இந்திய நீதித்துறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எப்படி செல்லவேண்டும் என்பதையோ, அங்கே பக்தர்கள் எப்படி தங்கள் தெய்வத்தை பார்க்கவேண்டும் என்பதையோ நீதித்துறை நிர்ணயம் செய்வது என்பது அபத்தமானது. மதுரையில் கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் மிகவும் பிரசித்தம். அதே போல சபரிமலையில் செய்யவேண்டும் என்று எந்த மாங்கா மடையனாவது வழக்கு தொடுத்தால், அதற்கும் இந்த நீதித்துறை விவாதித்து 10 ஆண்டுகள் கழித்து கோவில்களிடையே சமத்துவத்தை நிலைநிறுத்தும் என்று தாராளமாக நம்பலாம்.
ஏனெனில்,
“காலனி ஆதிக்கத்திற்கு பிறகு நாம் எல்லோரும் நம்முடைய பாரம்பரியத்தை விட்டுவிட்டு எல்லாரும் இங்கிலீஷ் பேசி, சர்ச்சுக்கு போய், ஒயின் குடித்து, பிரவுண் சாஹிபாக இருப்பதுதான் ஒரே சாய்ஸ். மற்றதெல்லாம் வாய்ப்பே இல்லை ராஜா.”
ஜோக்கடிக்கவில்லை. தமிழின் மிகச்சிறந்த அறிவுஜீவியாக தன்னைத்தானே கருதிகொண்டிருக்கும் ஒருவர் சொன்னது.
தொடர்புடைய கட்டுரை
சபரிமலை நவீனத்துவம் விழுங்கும் இந்திய பாரம்பரியங்கள்
- வன்மம்
- துணைவியின் இறுதிப் பயணம் – 7
- அம்ஷன் குமார் “ஆவணப்பட இயக்கம்” நூல் வெளியீடு
- சபரிமலை – தொடரும் போராட்டங்களும் வாதங்களும்
- பழங்குடி அமெரிக்கர்களின் மீது கலாச்சார வன்முறையை நடத்திய கிறிஸ்துவப் பள்ளிகள் – மறுவிசாரணை தேவை
- 3. இடைச்சுரப் பத்து
- செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – பகுதி 1
- சூரியப்ரபை சந்திரப்ரபை