துணைவியின் இறுதிப் பயணம் – 7

This entry is part 2 of 8 in the series 6 ஜனவரி 2019

 

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

 

[Miss me, But let me go]

 

++++++++++++++

 

[25]

தங்க ரதம்

 

தங்க ரதம் போல்

வீட்டில் தினம்

உலாவி வருவாள் !

மங்கா ஒளி முகத்தோடு

வீட்டில் தினம்

விளக்கை ஏற்றுவாள்.

தகதக்கும் அந்த

தங்க மேனியாளை

திருமணத்தில் கைப் பற்றிய நான்,

இறுதியாக

என்னிரு கைகளால்

எரியும் நெருப்பிலே

தள்ளினேனே ! நான்

தள்ளினேனே !

 

+++++++++

[26]

மரணம்

 

மானுடஇனத்துக்கு

மரணம் என்பது

புதிதல்ல !

மரணம் என்பது

விதியல்ல என்று நீ

சொல்லாதே !

மதியால் விதியை நீ

வெல்லலாம் !

ஆனால்

மரணத்தை வெல்ல

முடியுமா !

பிறப்பும், இறப்பும்

உயிரின வாழ்க்கையின்

இருதுருவங்கள்.

பிறந்தவர்

ஒருநாள் இறப்பர் தான் !  

இறப்பவர் மீண்டும்

பிறப்பர்

என்பது தெரியாது !

மரணம் புதிதல்ல என்று

உரைத் தெனக்கு

ஆறுதல் கூற வராதீர் !

மரணம் விதியல்ல என்று

இறையிடம்

முறையிடுவேன் !

மரணம்

அரக்கர் தொழில் !

மானிடப் படைப்பைச் சீராய்

உருவாக்கிய பிறகு  

ஊனுருகப் பறிப்பது தான்

உன் அறுவடையா ?

அல்லது

அறநெறியா ?

 

+++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்

Series Navigationவன்மம்அம்ஷன் குமார் “ஆவணப்பட இயக்கம்” நூல் வெளியீடு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *