3. இடைச்சுரப் பத்து

This entry is part 6 of 8 in the series 6 ஜனவரி 2019

 

’இடைச்சுரம்’ என்பது இடைவழிப்பயணத்தைக் குறிக்கும். பொருள் தேடச் செல்லும் தலைவனுக்குப்  இடைவழிப்பயணத்தின் போது தலைவியின் நினைவு வருவதும் அதனால் அவன் வருந்துவதும் இயல்பானதாகும். இப்பகுதியில் உள்ள பாடல்கள் அனைத்தும் இடைவழியில் அவன் செல்லும்போது ஏற்படும் நினைவுகள் பற்றியே இருப்பதால் இப்பெயர் பெற்றது.

=====================================================================================

இடைச்சுரப் பத்து—1

உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை

அலறுதலை ஓமை அங்கவட்டு ஏறிப்

புலம்புகொள விளிக்கும் நிலம்காய் கானத்து

மொழிபெயர் பல்மலை இறப்பினும்

ஒழிதல் செல்லாது ஒந்தொடி குணனே.

[உலறு=காய்ந்த; உளிவாய்ப் பேடை=உளிபோலக் கூர்மையும் வலிமையும் கொண்ட வாயையும் உடைய பெண் பருந்து; புலம்பு=தனிமை; ஒழிதல்=நீங்குதல்]

இடைவழிச் செல்லும் அவனுக்கு அவளப் பத்தி நெனப்பு வருது; அப்ப அவன் தனக்குள்ளயே சொல்ற பாட்டு இது

”காய்ஞ்ச தலயைக் கொண்ட ஆண் பருந்தோட பேடைக்குக் கூர்மையான வலிமையான மூக்கிருக்கு. அந்தப் பேடையானது ஓமை மரத்துக் கிளையில ஒக்காந்துக்கிட்டுத் தனிமையை நெனச்சு அதோடத் துணையைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கும். அப்படிப்பட்ட காட்டில பலமொழியெல்லாம் பேசறவங்க இருக்கற நாட்டையெல்லாம் மலையெல்லாம் கடந்து வந்துக்கிட்டே இருக்கேன். ஆனாலும் நல்லா வெளிச்சம் தர்ற தொடியைப் போட்டிருக்கற அவளோட குணமெல்லாம் என் நெனவிலேந்து நீங்கவே மாட்டேங்குதே”

அந்தப் பெட்டைப் பருந்தோட கொரலைக் கேட்டதும் அவனுக்கு அவளோட துன்பம் நெனவுக்கு வருது. அவளும் இதுபோலத்தான பொலம்புவான்னு நெனச்சுக்கறான்றது மறைபொருளாம்

=====================================================================================இடைச்சுரப் பத்து—2

நெடுங்கழை முளிய வேனில் நீடி,

கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்

வெய்ய ஆயின முன்னே; இனியே,

ஒள்நுதல் அரிவையை உள்ளுதொறும்

தண்ணிய ஆயின, சுரத்திடை ஆறே!

[முளிய=உலர; நெடுங்கழை=நீண்ட மூங்கில்; கல்பக=பாறைகள் வெப்பத்தால் வெடிக்க; தெறுதலின்=காய்தல்; உள்ளுதொறும்=நினைக்கும் தோறும்; ஆறு=வழி]

இடைவழிப் பயணத்துல சூரியன் கடுமையா எரிச்சு வெப்பம் தந்து வாட்டுது. ஆனா அவ நெனப்பு வந்த ஒடனே அது நீங்கிடுச்சாம். அவன் தனக்குள்ளயே சொல்லிக்கற பாட்டு இது.

”நீளமா இருக்கற மூங்கிலெல்லாம் வெடிக்கற மாதிரி கோடை நீண்டு போச்சு. சூரியனோ கல்லெல்லாம் ஒடைஞ்சு செதறிப் போற மாதிரி காயுது. அதால இந்த வழி பூரா ஒரே வெப்பமாத்தான் இருந்துச்சு. ஆனா ஒளி தர்றமாதிரி  நெத்தி வச்சு இருக்கற அவள நெனச்ச ஒடனே எல்லாமே குளிர்ச்சியா ஆயிடிச்சு”

=====================================================================================

இடைச்சுரப் பத்து—3

வள்எயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக்

கள்ளியம் கடத்திடைக் கேழல் பார்க்கும்

வெஞ்சுரக் கவலை நீந்தி,

வந்த நெஞ்சம்!நீ நயந்தோள் பண்பே!

[வள்எயிறு=கூரிய பல்; வயவுறு=கருவுற்ற மகளிர்க்கு உண்டாகும் விருப்பம்; பிணவு=பெட்டை; கேழல்=காட்டுப் பன்றிகவலை=பிளவு பட்ட வழி]

”போற வழியில இருக்கற வெப்பத்தைக் கடந்து போறதுக்கு ஒதவி செஞ்சது அவளோட கொணம்தான்னு அவன் தனக்குள்ளயே சொல்லிக்கற பாட்டு இது.

”செந்நாயிக்கு கூர்மையான பல்லிருக்கு. கருவுற்ற அத்தோட பெட்டையோடப் பசியைப் போக்கறதுக்கு, அது கள்ளிச்செடி நெறஞ்ச பாலை வழியில போயி எப்ப பன்றி வரும்னு காத்திருக்கும். ரொம்ப சூடான அந்தக் காட்டு வழியைக் கடந்து வந்த போதும் அவளோட நெனவு நீங்காம கூட வந்ததே!”

=====================================================================================

இடைச்சுரப் பத்து—4

எரிகவர்ந்து உண்ட என்றூழ் நீள்இடைச்

சிறிதுகண் படுப்பினும்காண்குவென் மன்றர்

நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர்

வேங்கை வென்ற சுணங்கின்

தேம்பாய்  கூந்தல் மாஅ யோளே!

[எரி=நெருப்பு; என்றூழ்=வெயில்; சுணங்கு=தேமல்; கங்குல்=இரவு;நளி=பெரிய; நெடுநகர்=மாளிகை;மாஅயோள்=மாமை நிறத்தோள்]

பிரிஞ்சு போயிருந்த அவன் திரும்பி வந்து அவளோட மகிழ்ச்சியா இருந்தான். அப்ப அங்க வந்த தோழி இத்தனை நாளு இவள உட்டுட்டு எப்படிப் பிரிஞ்சு இருந்தேன்னு கேக்கறா. அப்ப அவன் பதிலா சொல்ற பாட்டு இது.

”எல்லாத்தையும் காட்டுத்தீ எரிச்சுட்ட வழியில ராத்திரியில நான் கொஞ்சம் தூங்கலாம்னு கண்ணை மூடுவேன். அப்ப பெரிய ஊட்ல, வேங்கைப் பூவையே செவப்பில செயித்தவளும், மாமை நெறத்தை உடையவளும், தேன் இருக்கற பூவைத் தலையில வச்சிருக்கறவளும் உள்ள இவளக் கனவுலயே கண்டு வச்சிருந்தேன் தெரியுமா”

=====================================================================================

இடைச்சுரப் பத்து—5

வேனில் அரையத்து இலைஒலி வெரீஇ,

போகில்புகா உண்ணாது பிறிதுபுலம் படரும்

வெம்புஅலை அருஞ்சுரம் நலியாது

எம்வெங் காதலி பண்புதுணைப் பெற்றே

[அரையும்=அரசமரம்;வெரீஇ=பயந்து; போகில்=ஒரு வகைப் பறவை; புகா=உணவு; படரும்=போக எண்ணும்; புலம்=இடம்; வெம்பு அலை=கொதித்தலை உடைய; அருஞ்சுரம்=அரிய காட்டுவழி; நலியாது=வருந்தாது; வெம்=விருப்பம்]

பிரிஞ்சு போன அவன் திரும்பி வந்துட்டான். போன வழியில இருந்த வெப்பத்தை எப்படி நீங்க தாங்கினீங்கன்னு தோழி கேக்கறா. அவகிட்ட அவன் சொல்ற பாட்டு இது.

”வெயில் காலத்துல வீசற மேலைக் காத்தால அரச மரத்து எலையெல்லாம் சலசலன்னு சத்தம் போடும். அதுக்குப் பயந்துக்கிட்டு போகில் பறவை எல்லாம் எடுத்து வந்த இரையைத் தின்னாம வேற எடத்துக்குப் போகும். அப்படிப்பட்ட வெப்பமான காட்டு வழியில போகும்போது அவளோட கொணமெல்லாம் நெனவுக்கு வந்து என்னை எப்பவும் வருத்தாது.”

=====================================================================================

இடைச்சுரத்துப் பத்து—6

அழல்அவிர் நனந்தலை நிழல்இடம் பெறாது,

மடமான் அம்பிணை மறியொடு திரங்க

நீர்மருங்கு அறுத்த நிறம்பா இயலின்

இன்னா மன்ற சுரமே;

இனிய மன்ற,யான் ஒழிந்தோன் பண்பே!

[அழல்=நெருப்பு; நனந்தலை=அகன்ற இடம்; அவிர்=பரந்த;இயவு=ஒடுங்கலான வழி; மருங்கு=பக்கம்; நிறம்ப=ஒழுங்கற்ற; ஒழிந்தோள்=பிரியப் பெற்ற தலைவி]

பிரிஞ்சு வந்த அவன் அவள நெனக்கறான். அவளையும் துன்பப்படுத்திட்டுத் தானும் இப்படிக் காட்டு வழியில வந்து வேதனைப் படறதுக்குக் காரணமான தன்னை நெனச்சுத்தன் மனசுகுள்ளயே சொல்லிக்கற பாட்டு இது.

”நெருப்பு மாதிரி வெயில் கொளுத்தறதுதான் இந்தக் காட்டு வழி. அந்த வழியிலத் தங்கறதுக்கு நெழலான எடமும் இருக்காது. அங்க தன்னோடக் குட்டியை வச்சுக்கிட்டுப் பொண் மானு வருந்திக்கிட்டு இருக்கும். முன்னாடி எப்பவோ தண்ணி போன வழி போன மொறையில்லாத வழி இருக்கும். அந்த வழி எனக்குத் துன்பத்தைத்தான் தரும். ஆனா அவளோடக் கொணம்தான் அடிக்கடி என் நெனவுக்கு வந்து இன்பம் தருது.”

===================================================================================

இடைச்சுரப் பத்து—7

பொறிவரித் தடக்கை வேதல் அஞ்சிக்

சிறுகண் யானை நிலம்தொடல் செல்லா;

வெயில்முளி சோலைய வேய்உயர் சுரனே;

அன்ன ஆர்இடை யானும்,

தண்மை செய்த,இத் தகையோள்பண்பே!

[பொறி=புள்ளி; வேதல்=சுடல்; தடக்கை=தும்பிக்கை; முளிதல்=உலர்தல்; வேய்=மூங்கில்]

போற வழியில அவ நெனப்பெல்லாம் வருது. அவளைப் பிரிஞ்சு வந்ததுக்கு வருந்தறான். ஆனாலும் அவ தப்பா நெனக்க மாட்டான்னுத் தனக்குள்ளயே சொல்ற பாட்டு இது.

புள்ளியும் வரியும் உடைய சின்னதா கண்ணு இருக்கற யானை தன்னோட தும்பிக்கை நெலத்தைத் தொடாமலே வெப்பமான வழியிலப் போகுது. வெயிலால ஒலர்ந்து போன சோலையிலெல்லாம் ஒசரமான மூங்கில் இருக்குது. அந்தக் காட்டு வழி எனக்கு ரொம்பச் சூடாவே இருந்தாலும் அவளோட கொணத்தை நெனச்சா எனக்குக் குளிர்ச்சியா இருக்குது”

=====================================================================================

இடைச்சுரப் பத்து—8

நுண்மழை தளித்தென நறுமலர் தாஅய்த்

தண்ணிய ஆயினும், வெய்ய மன்றே!

மடவரல் இன்துணை ஒழியக்

கடமுதிர்ச் சோலையைக் காடுஇறந் தேற்கே.

நுண்மழை=சிறுதூறல்; நறுமலர்=வாசனை உள்ள மலர்; தாஅய்=படர்ந்து; வெய்ய=வெப்பம்; மடவரல்=இளமைபொருந்தியவள்; கடம்=பாலை; இறந்தோர்=கடந்தோர்]

அவன் போய்ட்டு இருக்கற காட்டு வழியிலக் கொஞ்சம் மழைத் தூறல் விழுந்தது. அதாலக் கூட வர்றவங்க மகிழ்ந்தாங்க. அப்ப அவள மனசில வச்சுக்கிட்டு அவங்கக்கிட்ட சொல்ற பாட்டு இது.

கொஞ்சம் மழைத்துளி விழுந்து, வாசனை வீசற பூவெல்லாம் நெலத்துல விழுந்து குளிர்ச்சியா இருந்தாலும், எளமையானவளும் எனக்கு இனிமயான தொணையுமான அவள உட்டுட்டு வந்ததால இந்தக் காட்டு வழி எனக்கு வெப்பமாத்தான் இருக்கு”

=====================================================================================இடைச்சுரப் பத்து—9

ஆள்வழக்கு அற்ற பாழ்படு நனந்தலை

வெம்முனை அருஞ்சுரம் நீந்தி, நம்மொடு

மறுதரு வதுகொல் தானே செறிதொடி

கழிந்துஉகு நிலைய ஆக

ஒழிந்தோள் கொண்ட,என் உரம்கெழு நெஞ்சே?

[நனந்தலை=அகன்ற இடம்; மறுதருவது=மீண்டும் வருவது. உகுதல்=நெகிழ்தல்; உரம்=வலிமை]

போக வேணாம் அவக்கிட்டத் திரும்பிடுவோம்னு நெனக்கற மனசு பத்தி அவன் வருந்திக் கூட வர்றவங்கக்கிட்ட சொல்ற பாட்டு இது.

”மனித நடமாட்டமே இல்லாத பாழான பரந்து கெடக்கற வெப்பமான இந்தக் கடக்க முடியாத வழியில  போறதுக்கு என் மனசு கூட எனக்குத் தொணையா வருமா? இல்ல போட்டிருக்கற தொடியெல்லாம் நெகிழ்ந்து போயிக் கழன்று விழற நெலயில இருக்கற அவக்கிட்டயே மறுபடியும் போயிடுமா?

=====================================================================================

இடைச்சுரப் பத்து—10

வெந்துகள் ஆகிய வெயிற்கடம் நீந்தி

வந்தனம் ஆயினும் இழிஇனிச் செலவே

அழுத கண்ணள் ஆய்நலம் சிதையக்

கதிர்தெறு வெஞ்சுரம் நினைக்கும்

அவிர்கோல் ஆய்தொடி உள்ளத்துப் படரே!

போற வழியில அவ நெனப்பு அதிகமா வருது. அதால இனிமே இத மாதிரி போறதுக்கு என்னை உடாதேன்னு மனசுக்கிட்ட சொல்ற பாட்டு இது.

”மனசே! நல்ல ஒளிதர்ற வளையலெல்லாம் போட்டுக்கிட்டு இருக்கறவ அழுத கண்ணோட ஒடம்பெல்லாம் வாடிப்போயி நான் போறக் கடுமையா வெப்பமான இந்தக் காட்டு வழியியையும், அதுலப் போய்க்கிட்டு இருக்கற நம்மையும் நெனச்சுக்கிட்டே இருப்பா. அவ துன்பத்தை நீயும் நெனச்சுப்பாரு. தரையெல்லாம் வெயில்பட்டுப் பொடியாய்ப் போன  இந்தப் பாலைவழியைக் கடந்து நாம வந்துட்டோம். ஆனா இனிமே இதுமாதிரி அவளப் பிரிஞ்சு மறுபடி வர்றதை நெனக்காதே!

==========================நிறைவு==================================================

 

 

 

 

 

Series Navigationபழங்குடி அமெரிக்கர்களின் மீது கலாச்சார வன்முறையை நடத்திய கிறிஸ்துவப் பள்ளிகள் – மறுவிசாரணை தேவைசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – பகுதி 1
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *