முன்னிலைப் பத்து

This entry is part 7 of 9 in the series 3 பெப்ருவரி 2019
  1. முன்னிலைப் பத்து

எதிரே இருப்பவரை முன்னிலைப்படுத்திக் கூறுவதால் இப்பாடல் அமைந்த பகுதி இப்பெயர் பெற்றது.

=====================================================================================1. முன்னிலைப்பத்து

”உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகன்குறை

வேனில் பாதிரி விரிமலர்க் குவைஇத்

தொடலை தைஇய மடவரல் மகளே!

கண்ணினும் கதவ,நின் முலையே

முலையினும் கதவநின் தடமென் தோளே!

[கான்யாறு=காட்டாறு; அவிர்மணல்=கருமணல்; அகன்குறை=பரந்த நீர்த்துறை; குவைஇ=கூட்டிக் குவித்து; தொடலை=மாலை; கதவ=சினமுடையன]

தன் ஊட்டாருக்குத் தெரியாம வந்த அவளக் கூட்டிக்கிட்டு அவன் போறான். அப்ப வழியில அவ சில பூக்களைப் பாக்கறா. அதெல்லாம் பறிச்சு மாலையாத் தொடுக்கறா. “ஒன் வெளயாட்டுப் புத்தி இன்னும்  மாறலயே”ன்னு அவன் சொல்றான். அவளோ வெக்கப்பட்டுக் கண்ணை மூடிக்கிறா. அப்ப அவன் சொல்ற பாட்டு இது.

”ஒசரமான காட்டாத்துடைய கருப்பா இருக்கற மணல்துறையில ஒக்காந்துக்கிட்டு வெயில் காலத்துல பூக்கற பாதிரிப் பூவெல்லாம் பறிச்சு மாலையாத் தொடுக்கறவளே! ஒன் கண்ணை விட ஒன் மொலயெல்லாம் என்மேல கோபமா இருக்கு; அதைவிட ஒன்தோள் என் மேல கோபமா இருக்கு”

அவளோட வெளயாட்டுக் குணத்தை மொதல்ல சொல்றான். அப்ப அவ கண்ணப் பொத்திக்கறா. ஒடனே கண்ணைச் சொல்றான். அப்ப அவ ஓடி வந்து தழுவறா. ஒடனே அவளோட மார்பைப் பத்திச் சொல்றான். அவனும் அவளத் தழுவும்போது தோளப் பத்திச் சொல்றான்.

=====================================================================================

  1. முன்னிலைப் பத்து

பதுக்கைத்து ஆய ஒதுக்கரும் கவலைச்

சிறுகண் யானை உறுபகை நினையாது

யாங்குவந் தனையோ பூந்தார் மார்ப!

அருள்புரி நெஞ்சம் உய்த்தர

இருள்பொர நின்ற இரவி னானே!

[பதுக்கை=கற்குவியல்; கவலை=பிரிவுபட்ட வழி; யாங்கு=எவ்வாறு; உய்த்தர=செலுத்த]

ரொம்ப தொலவு பிரிஞ்சு போனவன் வேற ஊரில ராத்திரி தங்காம ராத்திரியோட ராத்திரியா வரான். அப்ப தோழி அவனைப் பாராட்டிச் சொல்ற பாட்டு இது.

”மாரில அழகாப் பூமாலை போட்டிருக்கறவனே! நெறய கல்லெல்லாம் குவிஞ்சு கெடக்கற வழியிலச் சின்ன கண்ணிருக்கற யானையெல்லாம்  பகையோடத் திரியுமே. அதுக்கெல்லாம் பயப்படாம எங்களுக்கு அன்பு காட்டணும்னு ராத்திரியிலும் துணிஞ்சு வந்திட்டியோ?”

எங்களுக்கு அன்பு காட்டணும்னு ஒன் நெஞ்சம் சொல்றதாலதான் நீ வழிக்கும் யானைக்கும் பயப்படாம வந்துட்டன்னு பாராட்டறா.

=====================================================================================

  1. முன்னிலைப் பத்து

சிலைவில் பகழிச் செந்துவர் ஆடைக்

கொலைவில் எயினர் தங்கை! நின்முலைய

சுணங்குஎன நினைதி நீயே;

அணங்குஎன நினையும், என் அணங்குறு நெஞ்சே

[பகழி=அன்பு; எயினர்=வேட்டுவர்; செந்துவர்=காவிஆடை; சுணங்கு=தேமல்; அணங்கு=வருத்தும் தெய்வம்; அணங்குறு=துன்புற்ற]

அவ அவன நன்பி அவனோடு ஊட்ட உட்டு வந்துடறா. ரெண்டு பேரும் போகும்போது அவன் அவளப் பத்திப் பாராட்டிச் சொல்ற பாட்டு இது.

”சிலை மரத்துல செஞ்ச வில்லில தொடுத்து அனுப்பற அம்பையும், வச்சுக்கிட்டு. காவி நெறத்துல ஆடையும் போட்டு இருக்கற கொலைத்தொழில் நடத்துற வேடரோட தங்கையே! ஒன் மொலையில படர்ந்து இருக்கற தேமலை நீ ‘தேமல்’னு நெனக்கற; ஆனா அது எனக்கு துன்பப்படுத்தற தெய்வமா தெரியுது. என் நெஞ்சு நடுங்குதே”

அவ கொலை செய்யற வேடரோட தங்கை. வேடருங்க அம்பில வந்த ரத்தக்கறையை பாத்து மகிழ்ச்சி அடைவாங்க. அது போல நீ ஒன் மாரில வந்த தேமலைப் பாத்து மகிழ்ச்சி அடையற. ஆனா அது என் நெஞ்ச வருத்துதேன்னு சொல்றான். இதுல சீக்கிரம் உறவு கொள்ளணும்ற ஆசையும் தெரியுது.

=====================================================================================

  1. முன்னிலைப்பத்து

முளவுமா வல்சி எயினர் தங்கை

இளமா எயிற்றிக்கு, நின்நிலை அறியச்

சொல்லினென் இரக்கும் அளவை

வென்வேல் விடலை! விரையா தீமே!

[முளவுமா=முள்ளம்பன்றி; வல்சி=உணவு; எயினர்=வேட்டுவர்; இளமா எயிற்றிக்கு=இளமையான எயினர் குடிப் பெண்; விடலை=பாலை நிலத் தலைவன்]

அவள நான் எங்க ஊருக்குக் கூப்பிட்டுக்கிட்டுப் போறென்னு அவன் சொல்றான். அப்ப தோழி “இரு, கொஞ்ச நாள் போகட்டும்; நானே நேரம் வரும்போது சொல்லி அனுப்பறேன்”னு சொல்ற பாட்டு இது

”நல்லா ஒளி வீசற வேலை வச்சிருக்கறவனே! முள்ளம் பன்னியை வேட்டையாடிக் கொன்னு அதோட தசையைத் தின்ற வேட்டுவரோட  தங்கையான, மாமை நெறம் வந்திருக்கற இவகிட்ட ஒன் விருப்பத்தைச் சொல்லி அவளும் சரின்னு சொல்ற வரைக்கும் நீ கொஞ்சம் அவசரப்படாம பொறுமையா இரு”

=====================================================================================

  1. முன்னிலைப்பத்து

கணமா தொலைச்சித் தன்னையர் தந்த

நிணஊண் வல்சிப் படுபுள் ஒப்பும்

நலம்மாண் எயிற்றி போலப் பலமிகு

நன்னல நயவரவு உடையை;

என்நோற் றனையோ? மாவின் தளிரே!

[கணமா=கூட்டமான மான்கள்; தொலைச்சி=கொன்று; தன் ஐயர்=தன் உடன் பிறந்தோர்; நிணம்=கொழுப்பு; வல்சி=தசை உணவு; எயிற்றி=வேட்டுவ குலப் பெண்; படுபுள்=பறவை; ஒப்பும்=விரட்டும்; நோற்றல்=தவம் செய்தல்]

பணம் தேடப் போனவன் நெறைய பொருள் சேத்துக்கிட்டுத் திரும்பி வரான். அப்ப வர்ற வழியில ஒரு மாமரத்தைப் பாக்கறான். அதைப் பாத்ததும் அவனுக்கு அவள் நெனப்பு வந்திடுது. அதால அதுக்கிட்டப் பேசற பாட்டு இது.

”மான்களை எல்லாம் கூட்டமா வேட்டையாடிக் கொன்னு, ஒடன்பொறந்தவங்க கொண்டு வந்த கொழுப்பு உள்ள உணவான தசையை எடுத்துக்கிட்டுப் போறதுக்கு பறவையெல்லாம் வரும். அதை எல்லாத்தையும் ஓட்டிக்கிட்டு இருக்கற எயிற்றியைப் போல அழகா இருக்கற மாமரத் தளிரே! நீ இதுக்கு என்னா தவம் செஞ்சியோ?”

அவளோடகூடப் பொறந்தவங்க பலம் உள்ளவங்கன்னும், அவ வர்ற பொருளைக் காத்து வைக்கற கொணம் உள்ளவன்றதும் இதுலேந்து தெரியுது.

=====================================================================================6. முன்னிலைப் பத்து

அன்னாய் வாழி! வேண்டு, அன்னை! ‘என் தோழி

பசந்தனள் பெரிது’எனச் சிவந்த கண்ணை,

கொன்னே கடவுதி ஆயின், என்னதூஉம்

அறிய ஆகுமோ மற்றே

முறிஇணர்க் கோங்கம் பயந்த மாறே?

[கொன்னே=வீணே; முறி=தளிர்; இணர்=பூங்கொத்து; கடவுதி=வினவுதி; என்னதூஉம்=எத்துணையும்]

அவன் பிரிஞ்சு போயிட்டான். அதால அவளுக்குப் பசலை நோய் வந்திடுச்சு;. ஒடம்பு நெறம் மாறிப் போச்சு. அதைப் பாத்த செவிலி, “ஏன் இப்படி ஆச்சு”ன்னு கேக்கறா. அதுக்குத் தோழி ஒருத்தன் வந்து குடுத்திட்டுப் போன கோங்குப் பூவாலதான் இப்படி ஆச்சுன்னு தோழி சொல்ற பாட்டு இது.

“அம்மா! இவளுக்கு ஏன் இப்படி ஒடம்புல பசலை வந்ததுன்னு கோபத்துல கண்ணெல்லாம் செவந்து போயி நீயும் வீணா அவளக் கேக்கறே? ஆனா அன்னிக்கு ஒருத்தன் தளிரும், பூங்கொத்துமா இருக்கற கோங்கைக் கொணாந்து குடுத்தானே! அதுதான் அதுக்குக் காரணம்னு யாராலயவது தெரிஞ்சுக்க முடியுமா?”

பூவைக் கோணாந்து குடுத்தது அவளோடக் காதலன்; அவன்கிட்ட மனசக் குடுத்திட்டு இவ மெலிஞ்சு போயி பசலை பூத்துட்டா. அதால சீக்கிரம் அவனுக்கு இவளக் கல்யாணம் செஞ்சு வைன்னு குறிப்பா தோழி சொல்றா.

====================================================================================

  1. முன்னிலைப் பத்து

பொரிஅரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ

விரிஇணர் வேங்கையொடு, வேறுபட மிலைச்சி,

விரவுமலர் அணிந்த வேனில் கான்யாற்றுத்

தேரொடு குறுக வந்தோன்

பேரொடு புணர்ந்தன்று அன்னை!இவள் உயிரே.

[பொரியரைக் கோங்கு=மேற்பக்கம் பொரிந்தபடி தோன்றும் கோங்க மரம்; பொன்மருள் பசுவீ=பொன்னோ என மயங்கச் செய்யும் புதுப் பூக்கள்; அரை=மரத்தின் அடிப்பகுதி; இணர்=பூங்கொத்து; வேங்கை=வேங்கை மரம்; மிலைச்சி=கலந்து தொடுத்து; புணர்ந்தன்று=சேர்ந்தது]

அவனும் அவளும் கலந்துட்டாங்க. அவ அவனையே கணவனா மனத்திலே ஏத்துக்கிட்டா. அப்ப இன்னொரு குடும்பத்துலேந்து வந்து அவளைப் பொண்ணு கேக்கறாங்க. அவளோட அப்பா அம்மாவும் அதுக்கு ஒத்துப்பாங்க போல இருக்குது. ஆனா அது தெரிஞ்ச தோழி மனம் வருந்தறா. எப்படியாவது அவளை அவ மனசில உள்ளவனுக்கே கல்யாணம் செய்யணும்னு செவிலிகிட்டே  மறைவாச் சொல்ற பாட்டு இது.

அம்மா! பொரிப்பொரியா இருக்கற அடிமரத்தைக் கொண்டதுதான் கோங்குமரம். அந்த மரத்தோட பூவெல்லாம் பொன்னைப் போல இருக்கும். அந்தப் பூங்கொத்தோட இன்னும் நெறய பல வண்ணப் பூவெல்லாம் வச்சுக்கிட்டு அன்னிக்கு ஒருத்தன் வந்தான். அதுவும் பல நெறத்துப் பூவையெல்லாம் அடிச்சுக்கிட்டு வர்ற காட்டாத்து வெள்ளத்துல தைரியமா தேரோட்டி அதைக் கடந்து வந்தான். அவன் பேரோடதான் இவ உசிரு கலந்திருக்கு”

அவ உசிரு அவன் பேரோட கலந்திருக்குன்னு சொல்றதால அவங்க ரெண்டு பேருக்கும் கள்ள ஒறவு இருக்கறதை மறைவாச்சொல்றா.

====================================================================================

  1. முன்னிலைப் பத்து

எரிப்பூ இலவத்து ஊழ்கழி பல்மலர்

பொரிப்பூம் புன்கின் புகர்நிழல் வரிக்கும்

தண்பத வேனில் இன்ப நுகர்ச்சி

எம்மொடு கொண்மோ, பெரும!நின்

அம்மெல் லோதி அழிவிலன் எனினே!

[எரிப்பூ=நெருப்பூப் போன்ற சிவந்த மலர்; ஊழ்கழி பல் மலர்= முறையாகக் கழித்த பலமலர்; புகர்=புள்ளி; தண்பதம்=குளிர்ந்த சூழ்நிலை; புன்கு=புங்க மரம்; கோலம்=அழகு]

அவன் பிரிஞ்சு போகப் போறான்; நான் திரும்பி வேனிற்காலத்துல வந்துடறேன்னு சொல்றான். அதுக்குத் தோழி அதுவரையில் இவ உசிரோட இருந்தா நீ வந்து இவளோடு கூடி மகிழ்ச்சியா இருன்னு சொல்றா.

”நெருப்புப் போல எலவ மரத்துப் பூவெல்லாம் உதிர்ந்து கெடக்கு. அப்பறம் அங்க பொரி போலப் பூ இருக்கற புங்க மர நெழல்இருக்கு. அங்கக் குளிர் காலத்துல அழகான கூந்தல் வச்சிருக்கற இவ ஒன் பிரிவைப் பொறுத்துக்கிட்டு உசிரோட இருந்தா நீ வந்து கூடி மகிழ்ச்சியா இருக்கலாம்.”

====================================================================================

  1. முன்னிலைப் பத்து

வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழில்

முளைநிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்

குறிநீ செய்தனை என்ப; அலரே

குரவ நீள்சினை உறையும்

பருவ மாக்குயில் கௌவையின் பெரிதே!

[ததைந்த=நெருங்கிய; முளை=நாணல் முளை; நிரை=வரிசை; முறுவல்=பல்; நெருநல்=நேற்று; கௌவை=பழிச்சொல்; குரவல்=குரவ மரம்; சினை=கிளை]

அவன் அவள உட்டுட்டு வேற ஒருத்தியோட சோலையில இருந்தான்னு அவ கேள்விப்பட்டு ரொம்பவும் வருந்தறா. கோவப்படறா. அவன் வரான். அவ கேக்கறா. அவன் யாரையுமே தெரியாதுன்னு பொய் சொல்லி அவகிட்ட வரான். அப்ப அவன் அணைக்கறது புடிக்காம அவ சொல்ற பாட்டு இது.

”நல்லாப் பூவெல்லாம் பூத்து வண்டெல்லாம் மொய்க்கற சோலையில, நாணல் முளைப் போல வரிசியா பல் வச்சுக்கிட்டு சிரிக்கற ஒருத்தியோட நீ நேத்திக்கி இருந்ததைத்தான் எல்லாரும் சொன்னாங்க. அந்த பழிச்சொல் எப்படி இருந்தது தெரியுமா? குரவ மரக் கெளையில குளிர்காலத்துல கூவறக் கருங்குயிலோட ஓசையை விடக் காட்டில பெரிசா இருந்திச்சு”

எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு, அதால நீ அங்கியே போன்னு அவ கோபமா சொல்றா

=====================================================================================

  1. முன்னிலைப் பத்து

வண்சினைக் கோங்கின் தண்கமழ் படலை

இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப,

நீநயந்து உறையப் பட்டோள்

யாவளோ? எம்மறையா தீமே.

[படலை=மாலை; வண்சினை=வளமான கிளை; இருஞ்சிறை=பெரிய சிறகு; பெருங்கிளை=வண்டுகளின் கூட்டம்; நயத்தல்=விரும்புதல்; உறைதல்=தங்குதல்]

அவள உட்டுட்டு அவன் வேற ஒருத்திக்குப் பூவச்சு தனக்கு ஆளா ஆக்கிக்கிட்டான். அதைக் கேட்டு அவ கொதிக்க்றா. அப்ப அவன் வந்து அதெல்லாம் பொய்யின்னு சாதிக்கறான். அவ இன்னும் கோபமா சொல்ற பாட்டு இது.

”கருப்பா பெரிய சிறகு வச்சிருக்கற வண்டெல்லாம் நல்லா பெரிசா கிளை இருக்கற கோங்க மரத்தோடப் பூவை வச்சுக் கட்டின மாலையை மொய்க்குதுங்க. அந்த மாலையை வச்சுக்கிட்டு ஒன்னோடக் கூடியிருந்தவ யாரோ? உண்மையை மறைக்காம சொல்லு”

எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு உண்மையைச் சொல்லுன்னு கேக்கறா,. வண்டு பூவை மொய்க்கற மாதிரி நீயும் புதுசு புதுசாப் போறயேன்னு மறைமுகமா கேக்கறா.

=========================நிறைவு==================================================

Series Navigationசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 6மமதா என்ற மமதை
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *