காஷ்மீர் – அபிநந்தன்

This entry is part 6 of 8 in the series 3 மார்ச் 2019

காஷ்மிர் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் ஒண்றிரண்டை மட்டும் இங்கு சொல்கிறேன். நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

ஒன்று, சமிபத்திய இந்திய விமானப்படையின் தாக்குதல்கள் பாகிஸ்தானிய தீவிரவாத பயிற்சி முகாம்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டன. வெளியில் 300 பேர்கள் இறந்ததாகச் சொன்னாலும் ஏறக்குறைய ஓராயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் பாலகோடுதான் அத்தனை தீவிரவாதிகளுக்கும் பயிற்சியளிக்கும் கேந்திரமாக இருந்திருக்கிறது.

அங்கிருந்த சென்ற தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் பெரும் தலைவலியாக இருந்தவர்கள். காஷ்மீர் வெடிச் சம்பவத்திற்குப் பிறகு பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மிர் பகுதியிலிருந்த பெரும்பாலான தீவிரவாதிகளை பாகிஸ்தானுக்குள் இருக்கும் பாலக்கோட்டிற்குக் கொண்டு செல்ல முடிவெடித்த பாகிஸ்தானிய இராணுவமும், ஐ.எஸ்.ஐ.யும் இன்றைக்குக் கண்ணீர் சிந்தி உள்ளுக்குள் கதறிக் கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தீவிரவாதிகளுடன் சேர்த்து அங்கிருந்த ஆயிரம் கோடி ரூபாய்கள் மதிப்பிலான துப்பாக்களும், பிற ஆயுதங்களும் சிதறியிருப்பதாகத் தெரிகிறது. மீண்டும் அந்த அளவிற்கு ஆயுதங்களைச் சேர்ப்பது சிறிய விஷயமில்லை என்பது ஒருபுறமிருக்க, இனிமேலும் புதிதாக ஆயிரம் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து, அவர்களுக்கு உண்ணவும், உறங்கவும் இடம் கொடுப்பது சாதாரண காரியமில்லை. அதற்கும் ஏராளமான பணம் வேண்டும். பாகிஸ்தன் இன்றைக்கு இருக்கும் நிலையில் அது சாத்தியமில்லை. முஸாஃப்ராபாத் போன்ற பகுதிகளில் இருந்த தீவிரவாதிகளின் துணைக்கேந்திரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.

இரண்டு, இந்தியா ‘லஷ்மண ரேகையை’த் தாண்டாது என்கிற எண்ணம், அதாவது பாகிஸ்தானிய நிலப்பரப்புக்குள் வந்து இந்தியா தாக்காது என்கிற எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது. இனியொரு பெரும் தீவிரவாத தாக்குதல் நடந்தால் இந்தியா பாகிஸ்தானுக்குள் புகுந்து துவம்சம் செய்துவிடும். ஒருதடவை உள்ளே வந்து போனவனுக்கு இனியென்ன அச்சமிருக்கப் போகிறது? அது ராகுல் காந்தியே பிரதமரானாலும்(!) நடந்தே தீரும் என்பது பாகிஸ்தானிய ராணுவத்திற்குத் தெரியும்.

மூன்று, பாகிஸ்தானின் பொருளாதார நிலை பரிதாபமான நிலையிலிருக்கிறது. விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து சாமானிய பாகிஸ்தானி அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்க்குச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறான். முன்பு போல வளைகுடா பணம் பாகிஸ்தானுக்குள் வந்து குவியவில்லை. அமெரிக்கா ஏறக்குறைய கையைக் கழுவிவிட்டது. சீனன் கொடுத்த பணத்திற்கு வட்டியைக் கேட்டுக் கழுத்தில் துண்டு போட்டு முறுக்கிக் கொண்டிருக்கிறான். வருடத்திற்கு ஐந்து பில்லியன் டாலர் வட்டி சீனனுக்குக் கொடுத்தாக வேண்டும். இந்தச் சூழ்நிலையில் சாதாரண பாகிஸ்தானி காஷ்மிர் பிரச்சினைக்கு முன்புபோல பணம் கொடுப்பான் என்பது பகல் கனவுதான்.

நான்கு, பாகிஸ்தானுக்குள்ளேயே ஏகப்பட்ட பிரச்சினைகள். பலூச்சிகள் ஒருபுறம், சிந்திக்கள், பஷ்டூன்கள், இன்னபிற மைனாரிட்டிகள் தங்களைச் சுரண்டி வாழும் பஞ்சாபிகள் மீது மிகுந்த சினத்துடன் இருக்கிறார்கள். அவர்களைச் சமாளிக்க இயலாமல் பாகிஸ்தான் ராணுவம் விழி பிதுங்கி நிற்கிறது. காஷ்மிர் பிரச்சினையை எல்லாம் ஒருபொருட்டாக மதிக்காத சாமானிய பாகிஸ்தானிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். பல்லுப் போன ராணுவ அதிகாரிகள் மட்டும்தான் தொலைக்காட்சிகளில் வந்து இந்திய எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண பாகிஸ்தானிக்கு அது ஒரு பொருட்டே அல்ல.

பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் வருடா வருடம் பலமடைந்துவரும் இந்தியாவினை எதிர்த்து எந்தப் புண்ணியமும் இல்லை என்பது பாகிஸ்தானிய ராணுவத்திற்கும், அதன் ஆட்சியாளர்களுக்கும் நன்றாகவே தெரியும் என்றாலும் புலிவால் பிடித்த நாயர் மாதிரி காஷ்மிரைத் தொடவும் முடியாமல் விடவும் முடியாமல் மண்டைகாய்ந்து கிடக்கிறார்கள்.

இனிமேல் இந்தியாவில் தீவிரவாதமோ அல்லது வெடிகுண்டுகளோ வெடிக்காமல் இருப்பதற்கு உத்தரவாதமில்லை என்பதினை நான் ஆமோதிக்கிறேன். ஆனால் அது பாகிஸ்தானினால் மறைமுகமாகத் தூண்டப்பட்ட உள்நாட்டுத் தீவிரவாதியின் வேலையாகத்தான் இருக்கும். ஆனால் அப்படிச் செய்துவிட்டுத் தப்பிப்பது எளிதாக இருக்காது. நாலு அடிக்கு ஒரு சி.சி.டி.வி இருக்கிற உலகம் இது. ஆளாளுக்குச் செல்ஃபோன் வைத்துத் திரிகிற காலம் இது. எனவே தீவிரவாதம் செய்துவிட்டுத் தப்பிப்பது ஏறக்குறைய next to impossible என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்து கொண்டே போகிறது.

தீவிரவாதம் செய்துவிட்டு ஓடுகிறவனைக் குறித்து அஜித் தோவல் சொன்ன “You can run but you cannot escape” என்கிற கருத்துதான் என்னுடையதுவும்.


ஐம்பது வருடங்களுக்கும் மேலான அரதப் பழசான MiG விமானத்தைக் கையில் கொடுத்து போருக்கு அனுப்புவது என்பது மிஷின் கன் வைத்திருக்கிற எதிரியிடம் சண்டைபோட மொட்டைக் கத்தியை எடுத்துக் கொண்டு போவதற்குச் சமானம். ரஷ்யத் தயாரிப்பான, சோவியத் யூனியன் காலத்திய MiG இந்தியாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே மிக ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகள் மட்டும்தான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஏன், பாகிஸ்தானிலேயே கூட இத்தனை பழைய விமானம் இல்லை.

ஓட்டை உடைசல்கள் நிறைந்த MiG விமானங்களுக்குப் “பறக்கும் சவப்பெட்டிகள்” என்கிற பெயர் உண்டு. வருடத்திருக்குத் தோராயமாக பத்திலிருந்து இருபது இந்திய விமானிகளின் சாவுக்குக் காரணமானவை இந்த MiG விமானங்கள். இவைகளை இந்தியா எப்போதோ தூக்கியெறிந்துவிட்டு புதிய விமானங்களை வாங்கியிருக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் களவாணிகள் இதற்காக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடவில்லை. கொள்ளையடிப்பதிலேயே காலம் கழித்த காங்கிரஸ் களவாணிகள்தான் இந்திய விமானப்படையின் இந்த அவலமான நிலைக்குக் காரணம்.

மோடி அதனைச் சரி செய்ய பகீரதப் பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ரஃபேல் விமானங்கள் பாகிஸ்தானின் எஃப்16 விமானங்களை விடவும் பல மடங்கு மேலானவை. அந்த விமானங்கள் வாங்கிய பிறகு இந்திய விமானப்படையின் வலிமை பல மடங்கு உயர்ந்துவிடும். ஆனால் காங்கிரஸ் மூடர் கூட்டம் அதனைத் தடுப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறது.

இன்றைய நிலையில் பாகிஸ்தானிடமிருக்கும் எஃப்16 பதினாறு விமானங்களுக்கு இணையான விமானங்கள் இந்தியாவிடம் இல்லை. சமீபத்தில் பாகிஸ்தானில் குண்டு வீசிய விமானங்கள் கூட எஃப்16 விமானங்களை விடவும் சிறிதளவு வலிமை குறைந்தவைகள்தான். நம்மிடமிருக்கும் இந்த வீக்னெஸைத் தெரிந்து வைத்துக் கொண்ட பாகிஸ்தானிகள் வாலாட்டிக் கொண்டிருக்கிறார்கள். எஃப்16 விமானங்களை பாகிஸ்தானிகளுக்குத் தரவேண்டாம் என இந்தியா மன்றாடியும் அதனைப் பொருட்படுத்தாமல் தூக்கிக் கொடுத்தவர்கள் அமெரிக்கர்கள்.

அதனைப் பற்றிப் பேசி இனி புண்ணியமில்லை. இந்திய விமானப்படைக்குப் புதிய விமானங்கள் வாங்கப்பட்டே ஆகவேண்டிய நிலை இன்றைக்கு வந்திருக்கிறது. இந்தியாவை இந்த இக்கட்டில் தள்ளிய காங்கிரஸ் களவாணிகள் வெறுக்கத்தக்கவர்கள்.

தன்னிடமிருந்த மொட்டைக் கத்தியான MiG எடுத்துக் கொண்டு அதனை விடவும் வலிமை கூடிய எஃப்16 எதிர்த்துச் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன் சந்தேகமில்லாமல் ஒரு மாபெரும் வீரனே. அந்த MiG வைத்தே ஒரு பாகிஸ்தானிய எஃப்16 விமானத்தை அவர் வீழ்த்தியதாகச் சொல்கிறார்கள். அது உண்மையாயிருந்தால் விங் கமாண்டர் அபிநந்தன் நாம் நினைப்பதனையெல்லாம்விடவும் பெரிய ஆள்தான்.

விங் கமாண்டர் அபிநந்தன் நலமுடன் தாயகம் திரும்பி வர எனது ப்ரார்த்தனைகள்.


திரும்பிவிட்டார்

Series Navigationஓவியர் இயூஜின் கருணாவின் இழப்பு எமது சமூகத்தின் பெரும் இழப்பாகும்விளக்கு விருது வழங்கும் விழா
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *