விருதுகள்

author
1 minute, 48 seconds Read
This entry is part 4 of 14 in the series 19 மே 2019

(கௌசல்யா ரங்கநாதன்)            ……

-1

வழக்கம் போல காலை 5 மணியளவில் எழுந்த நான் காபி குடித்த பின், பேனா, பேப்பர் சகிதமாய் அமர்ந்தேன் ஒரு சிறுகதை  எழுதிட… என்ன எழுதுவது? மனதில் வினாயக பெருமானையும் படைப்பு  தெய்வம்  சரஸ்வதி தேவியையும், தியானித்துக்கொண்டு, ஹயக்¡£வர் ஸ்லோகம் சொல்லிய பிறகு டேபிளை ஏதேச்சையாய் பார்த்தபோது ஏதோவொரு இதழில் வந்திருந்த அந்த விளம்பர வாசகம் என் கண்களில் பட “என்ன இது? யார் இதை இங்கே வச்சது?” என்ற போது என் மனைவி ஜானகி ஒடோடி வந்து, “நான்தாங்க இதை நீங்க பார்க்கணும்னு வச்சேன்” என்றாள். ..  அதை கையில் எடுத்து என்னவென  பார்த்தபோதுதான் தொ¢ய வந்தது, ஏதோ ஒரு அமைப்பு பல்துறை வித்தகர்களை  கண்டறிந்து, கௌரவித்து, அன்னாரின் சேவைகளை பாராட்டி  விருதுகள் வழங்க இருப்பதாகவும் அதற்கான விண்ணப்பங்களும், பரிந்துரைகளும் தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன என்றும்… “சிரிப்புத்தான் வருகுதையா “என்றே பாட தோன்றியது எனக்கு.  என் மனம் பின்னோக்கி சென்றது…என் பள்ளி படிப்பு தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரிலும், இன்றைய நாகை மாவட்ட வலிவலம் கிராமத்திலுமாய் தொடர்ந்து ஒருவழியாய் அப்போதைய 11 வருட எஸ்.எஸ்.எல்.சியை 1957ல் முடித்து, மன்னார்குடியில் இருந்த உறவினர் வீட்டில் தங்கி தட்டச்சும்/சுருக்கெழுத்தும் படித்து சான்றிதழ் பெற்றதும், செய்தித்தாள்களில் விளம்பரம் பார்த்து, விண்ணப்பித்துக் கொண்டே இருந்தேன் பல இடங்களுக்கும்..அப்போதெல்லாம் நான் இலக்கியம் படிப்தோடு சரி..எழுத முயற்சி செய்ததில்லை..எழுதுவேன் என்று நினைத்தது கூட இல்லை..பிறகு,

-2

நான் எழுத ஆரம்பித்தது 1976 களில்.  மைய அரசின் சென்னை கிளை அலுவலகம் ஒன்றில் அப்போதுதான் இள நிலை சுருக்கெழுத்தாளராய்  பணியில் சேர்ந்திருந்தேன்.  ஏகப்பட்ட நேரத்தை வெட்டியாய் கழித்தேன்..அது என் இயல்பு அல்ல..  அப்போது தான் ஒரு உந்து சக்தி ஏன் ஒரு சிறுகதை எழுதிப்பார்க்ககூடாது என்று என்னை எண்ண வைத்தது.  கூடவே ஒரு இனம் தொ¢யாத பயம், உனக்கேண்டா இப்படியொரு விபரீத ஆசை என்று? அப்போதே நான் நிறைய, நிறைய படிப்பவன்.  அது மட்டுமல்ல? அப்போதைய பிரபல எழுத்தாளர் அமரர் திரு தேவன்  என் ஊர்காரரக்கும்… அன்னாரின் பரம ரசிகனாக்கும் நான்.. பள்ளி பருவத்தில் அமரர் திரு . தமிழ்வாணனின் “சங்கர்லால் துப்பறிகிறார்” நிறைய, நிறைய படித்திருக்கிறேன்.    பிறகு மெல்ல என் ரசனை தேவன் பக்கம் திரும்பியது.  அன்னாரின் “துப்பறியும் சாம்பு”, “மிஸ்டர் வேதாந்தம்”, “ராஜத்தின் மனோரதம்”, “ஜஸ்டிஸ் ஜகன்னாதன்” நாவல்களை பள்ளி பாட புத்தங்கள் படிப்பதுபோல திரும்ப, திரும்ப படித்து மகிழ்ந்ததுண்டு…என் எழுத்துலக மானசீக குரு அமரர் திரு. தேவன்தான்..இன்றைய திரை மொழியில் சொல்ல வேண்டுமானால் “விதை அவர் போட்டது,,” 

-3

– பள்ளி படிப்பை முடித்தபின், அப்பாவும் 1958ல்  காலமாகிவிட சென்னையை நோக்கி என் பயணம் ஒரு வேலை தேடிக்கொள்ள.  சொல்லிவைத்தாற்போல எப்போதோ நான் எழுதிய போட்டி பரீக்ஷையில் வெற்றி பெற்றதாக கடிதம் வர, வேலையிலும் சேர்ந்து விட்டது பழம்கதை. சென்னை வந்த பிறகும் என் இலக்கிய தாகம் சற்றும் குறையவில்லை.  மற்ற அரசு அலுவலகங்களில் உள்ளது போல எனது அலுவலகத்திலும் ஒரு லிட்ரரி கிளப் இயங்கி வந்தது.  அதில், நிறைய வார, மாதமிரு, மாத இதழ்கள்  வாங்குவோம்  ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை விருப்பப்பட்டவர்களிடமிருந்து வசூலித்து.. அவற்றையெல்லாம் முதல் ஆளாய் படிக்கவேண்டியே நான் “லிடரரி செகரடிரி” பொறுப்பை ஏற்றுக்கொன்டேன்..  

-4

– அப்படித்தான் ஒரு நாள் 1976ம் வருடம்,ஏன் நாம் ஒரு சிறுகதை எழுதிப்பார்க்ககூடாது என்ற விபரீத ஆசைக்கு ஆளாகி யோசித்து, யோசித்து முடியை பிய்த்துக்கொண்டு பேப்பரையும், பேனாவையும் கையில் எடுத்துக்கொண்டு ஏதோவொரு நிகழ்வினை,  அது என் அலுவலக சகாவுக்கு நேர்ந்ததை, எழுதப்போக, பேனா நகர மறுத்தது.  அமரர் தேவன் தன் “மிஸ்டர் வேதாந்தம் “நாவலில் சொன்னதுபோல பேனா உலக்கை போல கனத்தது.  கூடவே என் இன்னொரு மனம் “ஏண்டா உனக்கு இந்த வெட்டி ஆசை?உனக்கு தமிழே தகறாறு.  “ழ”கரம் , “ள”கரம், “வல்லினம்”, “மெல்லினம்” “இடையினம்”, உயிர் எழுத்து”. “உயிர்மெய் எழுத்து” என்று எதுவுமே தொ¢யாது என்று நினைத்தாலும் இன்னொரு மனம் வீம்பு பிடித்தது எப்படியும் ஒரு எழுத்தாளாராகியே விடுவது என்று…  இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.  ஆம்.  நான் முந்தைய நாள் பார்த்த “கலியாண பரிசு” படமும் அதில் அமரர் திரு தங்கவேல் தன்னை ஒரு பிரபல எழுத்தாளர் என்று கப்சா விட்டு தன் மனைவியை நம்ப வைத்து தனக்கு பாராட்டும், பரிசும் கொடுக்கப்போவதாகசொல்லி பிறகு மாட்டிக்கொண்டு  விழிப்பதுமாய்  உருவாக்கபட்டிருந்த காட்சிகள் என்னுள் பெரும் தாக்கத்தை உருவாக்கியது என்பதே நிதரிசனம்.  அதனால் முடிவெடுத்துவிட்டேன் நானும் ஒரு சிறந்த எழுத்தாளராகி தமிழ் இலக்கியத்துக்கு புத்துணர்ச்சியையும், புதுப்பொலிவையும்  பெற்றுகொடுத்தே தீர்வதுஎன்று.  அதனால்தான் உடனடியாய் ஒரு உப்பு பெறாத விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு முன்னுக்குப்பின் முரணாகவும், கோர்வையாய் இல்லாமலும், ஏராளமான ஒற்று, சந்தி பிழைகளுடனும், முற்றுப்பெறாத வாக்கியங்களுடனும்  எழுதி, எழுதி, கிழித்துப்போட்டு மறுபடி வியர்க்க, விறு விறுக்க,  எழுதி அப்போதும் சரி வராதபோதும் , கையால் எழுதியதற்கு ஒரு  பிரதி கூட எடுத்து வைத்துக்கொள்ளாமலும்,எங்கள் அலுவலகம் செயல்பட்டு வந்த ஜெனரல் பாட்டர்ஸ் ரோடுக்கு அருகிலிருந்த எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டிலிருந்து  வெளி வரும் ஒரு தமிழ் தினசரியின் ஞாயிறு மலர் பகுதியில் வெளி வரும் சிறுகதை பகுதிக்கு அனுப்பி வைத்ததுடன்  அந்த நிகழ்வினை அடியோடு மறந்தே போனேன்.. 

-5

– இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட என் நண்பன் ஒருவன் “ஊம் .. உனக்கென்னடா, பெரிய எழுத்தாளனாயிட்டே” ஜகச்சிற்பியனாட்டம்” என்றவனிடம்”அது யாருடா, “ஜகச்சிற்பியன்?” என்று கேட்கவில்லை நான்.  பிறகுதான் ஒரு சந்தர்பத்தில் எனக்கு தொ¢ய வந்தது அன்னார் ஒரு பிரபல எழுத்தாளர் அற்றை நாட்களில் என்ற விபரம். இன்றும் அவர் சாதனைகள் பேசப்படுகிறதே! சற்றேறக்குறைய ஒரு மாதம் கழித்து, ஒரு நாள் சாதாரண தபாலில் அந்த பத்திரிகை அலுவலகத்திலிருந்து என் பெயருக்கு ஒரு தடிமனான உறை ஒன்று வந்தது.  அதை மோப்பம் பிடித்துவிட்ட என் நண்பன்  சொன்னான் “அன்னைக்கு ஒரு சிறுகதை ஒரு பத்திரிகைக்கு அனுப்பினதாய் சொன்னியே, அதை அனேகமாய் திருப்பி அனுப்பியிருப்பாங்கடா “பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்” என்ற  குறிப்புடன்.  என்றவன் என் முக வாட்டம் அறிந்து”டேய், இதுக்கெல்லாம் போய் வருத்தப்படலாமா என்ன?ரிலாக்ஸ்.  பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்று முதுகில் தட்டிக்கொடுத்து விட்டு போனான்.. எனக்கென்னவோ அந்த உறையை பிரித்து பார்க்கவே  பிடிக்கவில்லை.  அதை அப்படியே என் டேபிளில் போட்டு வைத்திருந்தேன்.  அது ஒரு நாள் தவறிப்போய் அலுவலக தபால் பிரிப்பவர் கையில்  சிக்கிவிட, அந்த ஊழியர் அதையும் பிரித்து மற்ற தபால்களுடன் டேட் ஸ்டாம்ப்  போட்டு தபால் செக்க்ஷனில் பணியாற்றிகொண்டிருந்த என் மேசையில் வைத்துவிட்டு போன பிறகு பார்த்தால், அது நான் ஒரு மாதம் முன் அனுப்பிய சிறுகதை அச்சில்! பிரபல ஓவியர் படத்துடன் .   my joy knew no bounds..  என்னை நான் கிள்ளி பார்த்துக்கொண்டேன், அது என் கதைதானா என்ற  சந்தேகத்துடன்.  கூடவே ஒரு காசோலை Rs. 25 க்கு, “வாழ்த்துக்கள்” நிறைய எழுதுங்கள்” என்ற அறிவுரையுடன்.  அன்றே எனக்கு “பத்ம” விருதோ, மைய அரசின் “கதா” விருதோ “இலக்கிய சிந்தனை” விருதோ  கிடைத்துவிட்டதுபோல் ஒரு பூரிப்பு.  அது என் ஆணவத்தை தூண்டி விட்டது.  பத்தாதற்கு என் சகாக்கள் வேறு என்னை கொம்பு சீவி விட அன்றே 10 தபால் கார்டுகளை   வாங்கி  என் சகாக்களிடம் கொடுத்து  அந்த பத்திரிக்கை ஆசிரியருக்கு “இந்த கதை பிரமாதம்”, அதி அற்புதம், அபாரம், இதோ எழுத்துலகில் ஒரு புதிய, உதய தாரகை, புரட்சி எழுத்தாளர், மற்றும் மானே, தேனே என்பது போல் எழுதச்சொன்னேன், அதுவும் அவர்களுக்கு காபி எல்லாம் வாங்கி கொடுத்து…  

-6

– அடுத்த வாரம் “ஆசிரியருக்கு கடிதங்கள்” பகுதியில் இந்த கடிதங்கள் எல்லாம் பிரசுரமாகி அந்த பத்திரிகை ஆசிரியர் என்னிடமிருந்து மேலும் கதைகள் கேட்கப்போகிறார்  என்று நான் நினைத்திருந்ததற்கு  மாறாக ஒரு கடிதம்கூட..  ஊஹூம்.. பிரசுரமாகவில்லை…  அடுத்த வாரமோ, அதற்கடுத்த வாரமோ, அதன் பிறகோகூட வரவே இல்லை.  மறுபடி ஒரு உப்பு பெறாத விஷயத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்து ,அலுவலக மதிய உணவு இடைவேளையில் அந்த பிரும்மாண்டமான பத்திரிகை அலுவலகத்துக்கு போய், பத்திரிகை ஆசிரியரை சந்திக்க காத்திருக்க வேண்டியாதாயிற்று… என்ன இவர்.!  ஏன் என்னை காக்க வைக்கவேண்டும் என்றும் ஒரு கோபம் வந்தது… ” கொக்கென நினைத்துவிட்டாயோ கொங்கணவா” என்ற  பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது…  ஒரு கால் நான் வந்ததையே மறந்திருக்கலாம்..  அல்லது உதவியாளர் அவரிடம் சொல்ல மறந்திருக்கலாம்…  என் எதிரில் அவரை ஆசிரியர் கடிந்து கொள்ளலாம்.   “அட பரவாயில்லை விடுங்க சார்” என்று நான் சொல்ல கூட வேண்டியிருக்கலாம்.  ஒரு மணி நேர காத்திருப்புக்கு பிறகு அவர் என்னை வரச்சொன்னதாக உதவியாளர் வந்து என்னிடம் சொல்ல உள்ளே போனேன்.   good afternoon sir  என்றபோதும்  அவர் பதிலே சொல்லாததோடு  என்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.  அவர் ஏதோ சிந்தனை வயப்பட்டிருக்கலாம்  என்று நின்று கொண்டே இருந்தேன்.  அவர் அகன்ற நெற்றியுடனும், உச்சி குடுமியுடனும், மங்கல சின்னம் தரித்தவராகவும்,துவைத்த கதராடை அணிந்தும் மிக எளிமையாய்  (அச்சுபிச்சு என்று)  காணப்பட்டார். இவரா ஒரு பிரபல பத்திரிகையின் ஆசிரியர் என்று ஒரு புறம்  தோன்றினாலும், நதி மூலம், ரிஷிமூலம் எல்லாம் பார்க்ககூடாது  என்ற வாசகம் நினைவுக்கு வந்தது எனக்கு.  

-7

– சற்று பொறுத்து அவர் என்னை நிமிர்ந்து பார்த்து,” யாரப்பா நீ” என்ற போது என்னை பெருமையாய் அறிமுகபபடுத்திக்கொண்டேன்.  அவர் வடிவேல் பாணியில் “ஒ அவனா நீயி” என்ற போது என்  சப்த நாடியும் ஒடுங்கிப்போயிற்று.  தவிர நின்று கொண்டே   இருந்த என்னை உட்காரக்கூட..  சே என்ன மனிதன் இவர் என்றும் தோன்றியது.   மறுபடி “சார்” என்ற என்னை அவர்” ஓ.. நீ இன்னம்  போகலையா? என்னையா நினைச்சுகிட்டிருக்கே உன் மனசில்?பத்து பேர்களை விட்டு ஒரே ஏரியாவிலிருந்து  சொல்லி வச்சாப்பால ஒரே மாதிரியான பாராட்டு வாசகங்களுடன்  எனக்கு எழுதிப் போட்டுட்டா நான் இம்பிரஸாயிடுவேன்னு நினைச்சியா?  த பாரப்பா இனிமேலயாவது  இது போல சீப் விளம்பரத்தில ஈடுபடாம உருப்படியா உழைச்சு முன்னேறப்பாரு.  இன்னொணு.. உன்  எழுத்தில மயங்கி ஒண்ணும் நான் உன் கதையை பிரசுரிக்கலை.  புது இளம் எழுத்தாளர்களை களத்தில் இறக்கி, என்கரேஜ் பண்ணி கைதூக்கி விடணும்தான் பிரசுரமும் பண்ணி பரிசுத்தொகையும் அனுப்பிவைச்சேன்.  முதல்ல நிறைய, நிறைய படி.  கொஞ்சமா எழுது.  இதைக்கூட நான் சொல்லலை.  பிரபல எழுத்தாளர் திரு சாவி தான் சொல்லியிருக்கிறார்.  கண்டதை படிச்சவன்  பண்டிதனாவான்னு ஒரு பழமொழி உண்டு. அமரர் திரு தேவன் தன் “மிஸ்டர் வேதாந்தம்” நாவலில்  என்ன சொல்லியிருக்கார் தொ¢யுமா? “எழுத்துன்றது  ஒரு தவம் போல.  நேற்று என்  எழுத்துக்களை பாராட்டினவங்க இன்னைக்கு ஏன் கண்டு கொள்ளலைனு  மட்டும் ஏங்கக்கூடாது?ஒருத்தன் சிறந்த எழுத்தாளனாக ஒரு கதை எழுதினால் மட்டும் போதாது.  ஒன்பது கதைகள் எழுதி பிரசுரமானாலும் போதாது.  இது ஒரு சிரமமான தொழில்.  தவிரவும் கதைகள் பிரசுரமாகவில்லையேன்ற  ஏக்கம் மட்டும் ஒரு எழுத்தாளனுக்கு  எப்பவும் வரவே கூடாது.  பிரசுரமாவது, பிரபலமாவது எல்லாம் அந்த சாட்சாத் அம்பிகையின் கையில்தான் இருக்கு.  போய் வா” என்ற போது என்னை சவுக்கு கொண்டு விளாசித்தள்ளியது போல இருந்தது.  இதன் பிறகும் என் சில சிறு கதைகளை அவர் அன்பு கூர்ந்து அந்த பிரபல பத்திரிக்கையின் “ஞாயிறு மலர் “சிறுகதைப்பகுதியில் பிரசுரித்தார்.  நான் அவரை பார்க்க போகும்போதெல்லாம்  புன்முறுவலுடன்  என் குசலம் விசாரிப்பார் அன்புடன்.  எந்த காரணம் கொண்டும் உன் கவர்மென்ட் ஜாபை விட்டுடாதேப்பா ” என்பார்.    “பாடும் உனை நான் பாட வைத்தேனே.  அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா” என்ற பாடல் வரிகள் என் நெஞ்சில் அலைமோதும் அவ்வப்போது.. “இன்றுடன் என் ஆணவம் ஒழிந்தது” என்று அந்த ஹேமநாத பாகவதர்  சொன்னதுபோல் உணர்ந்தேன்.  

-8

– பிறகும் தினம் ,தினம்,  அதிகாலையில் 4 மணிக்கே எழுந்து காபி குடித்த பின், சிறுகதைகளாய் எழுதி குவிக்க ஆரம்பித்தேன், அதுவும் முதுகெலும்பு ஒடியும் அலுவலக வேலைக்கு இடையே. இப்போதுபோல் அப்போதெல்லாம் கணினி பயன்பாட்டுக்குக்கு வரவில்லை என்பதால் கையால்தான், அதுவும் உட்கார ஒரு மேஜை கூட இல்லாமல் வாயிற்படியின் கீழ் அமர்ந்து கொண்டு,  மேல் படியில் பேப்பரை வைத்து எழுதுவேன்.  வீட்டில் அப்போதெல்லாம் ஒரு ஃபேன் கூட கிடையாது.  வாடகை வீடு.. ஒற்றைஅறை.  இப்படி எழுதி, எழுதி, அடித்து, திருத்தி, மறுபடி நள்ளிரவுவரை கூட,  எழுதி அந்த சரஸ்வதி தேவியின் அருளால் எனக்கு ஓரளவு  எழுத்து வசப்பட்டதாக (அப்படி நான் நினைக்கிறேன்.  பிறர் என்ன நினைக்கிறார்களோ யாமறியேன், பராபரமே).  அந்த கால கட்டத்தில், அந்த கால கட்டம் என்ன, இன்றும் புகழுடனும், அடக்க்த்துடனும் இருப்பவர் ஒரு பிரபல எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர்,  என் பெரு மதிப்புக்கும், அபிமானத்துக்கும் உரியவர், ஊர் பெயரை தன் பெயருக்கு முன்னால் கொண்டவர்,  நான் என் இரண்டாவது ஆசான் என்று அவரை (முதல் ஆசான் அமரர் தேவன்)இன்றும், ஒரு மிக உயர்ந்த இடத்தில் வைத்து போற்றிக்கொண்டிருப்பவன்,  இளம் இரட்டை வயலின் வித்வான்களை ஒருமுறை பேட்டி கண்டு தன் பத்திரிக்கையில் இப்படி அவர்கள் சொன்னதாக எழுதிருப்பார்.  அதாவது, அந்த இளம் வித்வான்கள் சொன்னார்களாம் அவர்கள் வாசிக்க அமரும்போது அன்னை அவர்களுக்கு பின்னால் அமர்ந்து அவர்களை இயக்குவதாக .  இந்த பேட்டியை படித்தபோது எனக்கு ஒருக்கணம் மெய்  சிலிர்த்து போயிற்று பிரபஞ்ச சக்தியை உணர்ந்தபோது..

-9

பிறகு ஒரு கால கட்டத்தில் அந்த பெருந்தகையே, தன் அழுத்தும் வேலை சுமைகளுக்கு நடுவாலும்  நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க என் சிறுகதை தொகுப்பு ஒன்றுக்கு மிக அற்புதமாக முன்னுரை எழுதியிருந்தார், அதற்கு நான் சற்றும் அறுகதை இல்லாதபோதும்கூட.  அவர் முத்தாய்ப்பாய் முடிதிருப்பார் முன்னுரையை இப்படி ..  “அதாவது தகுதியை மட்டுமே  வைத்து பார்த்தால் இவருக்கு இன்னமும் கூட பரவலானதொரு அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும்” என்று.  இப்படிப்பட்ட புகழ் உரைகள், அதுவும், மெத்த படித்த ஒரு பிரபலத்திடமிருந்து எனக்கு என்றால் நான் என்ன  பாக்கியம் செய்திருக்கவேண்டும்..இன்றும் நான் வாழ்த்துகிறேன் அவரை நீடூழி வாழ வேண்டும் நோய்,நொடி இல்லாமல் என்று..  கூடவே”அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி,  ஆதிபகவன் முதல் என்றே உணர வைத்தாய் தேவி.  இயல், இசை, நாடகம்  என்றே  ” மேலே வார்த்தைகள் வராமல் தொண்டை அடைக்கிறது..  காலப்போக்கில், என் பல சிறுகதைகள், குறு நாவல்கள், பாக்கெட் நாவல்கள், தொடர்கள், புதுக்கவிதைகள், வானொலி நாடகங்கள் என்று வந்ததுடன், என் பல படைப்புகள் பரிசுகளும் பெற்றது என் முன்னோர் ஆசீர்வாதம்..  எனினும், ஒரு பரவலான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லையே  பெரிய அளவில் என்றதொரு ஆதங்கம் என்னுள் இருந்தது.. இருந்தது என்ன..இன்றும் இருக்கிறது அடிமனதில்..  அதாவது என் படைப்புக்கள் பெரிய அளவில் பேசப்படவில்லையே என்று ஒரு வருத்தம்.. ஆனால் நான் யாரிடமும் என் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டதில்லை.. 

-10

– அப்போது ஒரு இலக்கிய விழாவில் என்னை அறிந்த ஒரு பத்திரிகை  ஆசிரியர் என்  நலம் எல்லாம் விசாரித்த பிறகு “உங்க படைப்புகளை நான் மற்றும் என்னை சேர்ந்தவங்க எல்லாரும் படிச்சுக்கிட்டு வரோம்.  அற்புதமான படைப்புகள்.  ஆமாம் ஒரே சீராய் பல வருடங்களாய் எழுதிக்கிட்டிருக்கும் உங்களுக்கு ஏன் இதுவரை எந்த அங்கீகாரமோ, விருதுகளோ கிடைக்கலை?” என்று ஆதங்கப்பட்டபோது, “நீங்க இப்படி எங்கிட்ட கேட்டதே ஒரு விருது கிடைச்சாப்பலதானே.  ” என்று சொல்லி என்னை சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் மனம் கிடந்து அடித்துக்கொண்டது..   கூடவே என்னை நான் சமாதானப்படுத்திக்கொண்டேன்.  நான் ஒன்றும் எழுத்து வியாபாரி இல்லை.  கண்டதையும் எழுதி அதாவது வன்முறை சம்பவங்கள், பாலியல் வக்கிரங்கள் எழுதி காசு பார்த்திட எண்ணுபவனும் இல்லை.  என் பள்ளி பருவத்திலேயே (அப்போதெல்லாம் சினிமா இவ்வளவு விஸ்வரூபம் எடுத்திருக்கவில்லை)தினம்தோறும் மாலை வேளைகளில் ஸ்ரீமத் ராமாயணம்,  ஸ்ரீமத் பாகவதம், பாரதம், திருவிளையாடல் புராணம், ஆழ்வாராதிகள், நாயன்மார்கள் வரலாறு, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மற்றும் வட மொழி காவியங்களான “மேக சந்தேசம்” எனும் மேகத்தை காதலிபால் தூது விடும் அதி அற்புத காவியம், “சாகுந்தலம்” எனும் சகுந்தலை வரலாறு (அந்த சகுந்தலை

-துஷ்யந்தனின் ஒரே மகன்  பரதன் பெயரால் தான் “பரதக்கண்டம்””   “பாரத்” என்றே நம்  நாட்டுக்கு பெயர் வந்ததென்பார்கள்).  மற்றும் “விக்கிரமோர்வசீயம்” “ரகு வம்சம்”போன்ற அற்புதமான படைப்புகள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது .

-11

 எனக்கென ஒரு மைய அரசு வேலை இருக்கிறது.  இப்போது பணி ஓய்வுக்கு பிறகும் கணிசமான மாதாந்திர ஓய்வூதியமும் வீடு தேடி வருகிறது  எனும்போது ஏன் நான் கண்டதை எல்லாம் எழுதி என்னை சிறுமைப்படுத்திக்கொள்ளவேண்டும்?ஒரு சமுதாயம், குறிப்பாய், இளைய சமுதாயம் சீர்கெட நான் ஒரு போதும் காரணாமாய் இருக்க மாட்டேன். ஐயா, எழுத்து எப்படி பெரிய அளவில் ஒரு   சமூக மாற்றத்தைக்கொண்டு வர முடியும் என்று கேட்டு விடாதீர்கள் .அன்றைய தேச பிதா முதல், இன்றைய அன்னா ஹசாரேக்கள் வரை அன்னார் தொண்டுகள் எல்லாமே எழுத்து வடிவில்தானே பட்டி தொட்டி எங்கும் பரவி பெரிய சமுதாய மாற்றத்துக்கு வித்திடுகிறது .  இப்படிப்பட்ட நிலையில்தான் அன்று நான் பார்த்த விளம்பர வாசகம்  என்னை சற்றே சலனப்படுத்தியது மனத்தளவில்.  மாமுனி விஸ்வாமித்திரர் தன் தவம் தொலைத்து மேனகையுடன் சிறிது காலம் வாழ்ந்த சம்பவம் பற்றி படித்தது  நினைவுக்கு வந்தது.  அது மட்டுமா? இப்போதெல்லாம் என்னை அறிந்தவர்கள் எல்லாம் ஏனோ தொ¢யவில்லை சொல்லிவைத்தாற்போல என்னை உசுப்பேத்திவிடுகிறார்கள் என்பதே உண்மை.   “ஏன் சார் எந்த ஒரு இலக்கிய அமைப்பும் உமக்கு இதுவரை விருது கொடுத்து கௌரவிக்கவில்லை” என்று.  அதுவும் என் 79 வயதில், என் எழுத்துலக பணி 43 வருடங்கள் கடந்த பின்பும்  வாழ்க்கையே வெறுத்து “வானப்பிரஸ்தம்” மேற்கொண்ட நிலையில் மனம் கிடந்து அலை பாய்கிறது பாராட்டுகளுக்கு , விருதுகளுக்கு, பரிசுகளுக்கு..  சே.. என்றிருந்தது ஒரு பக்கம்.  நான் ஏன் இப்படி ஆனேன்  என்று  வெறுப்பாயும்  இருந்தது. “பாதி மனதில் மிருகம் இருந்து  ஆட்டிவைத்தடா…  மீதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா” என்ன அற்புதமான வைர வரிகள்?  என் பாதி மனதை மட்டும் அல்ல, முழு மனதையும் அல்லவா சைத்தான் இருந்து ஆட்டி வைக்கிறது. என் மன நிலை உணர்ந்த என் சகா, வெல்விஷர் ஒருவன் சொன்னான் “பைத்தியமாடா உனக்கு? ஏதோவொரு அமைப்பு யாருக்கோ, ஒரு நாள் ஒரு விருது கொடுத்துட்டா மட்டும் ஆச்சா எல்லாம்?அதனால் விளம்பர மோகம் இல்லாத, வெளியுலகத்துக்கு தன்னை காட்டிக்கொள்ளாதவங்கள்ளாம் திறைமைசாலிகள் இல்லைனு அர்த்தம் பண்ணிக்கலாமா என்ன?     இன்னைக்கு ஏதோ ஒரு அமைப்பு, விழா எடுத்து 25/30 பேர்களோ அல்லது அதற்கும் குறைவானவங்க மட்டுமே கூடியிருக்கிற  சபையில் உன்னை இந்திரன், சந்திரன் இவர் என்று  போற்றிப்பாடடி கண்ணேன்றாப்பல தலைல ஐஸ் வச்சு  புகழ்ந்து தள்ளி, மாலை, மரியாதை , பொன்னாடை, பாராட்டு பத்திரம், விருதுனு கொடுத்துட்டா மட்டும்  எல்லாம் நிறைவடைஞ்சுருச்சுனு நீ நினைக்கலாமா என்ன?கற்றது கைம்மண் அளவுனு கேள்விபட்டதில்லையா நீ?த பாரபா, பாராட்டுகளுக்கோ, புகழுரைகளுக்கோ (encomium)  ஒரு மனுசன் எப்பவுமே  அடிமையாயிடக்கூடாது. புகழ்ன்றது  ஒரு போதை போல.  ஒரு முறை அடிமையாயிட்டா அதிலிருந்து மீள முடியாது.  தினம், தினம் ஏதாவது விழா, பாராட்டுகளுக்கு  மனசு கிடந்து அடிச்சுக்கும்.  இன்னொருத்தனுக்கு விருதோ/பரிசுகளோ கொடுக்கிறப்ப  நம்மை விட எந்தவிதத்தில்  அவன் ஒசத்தினும் சில சமயங்களில் தோணும்.  மனம் ஒரு குரங்கும்பாங்க.  இப்படியெல்லாம் அவன் சொல்லியும்  ஏனோ என் மனம் சமாதானம் அடையவில்லை. ஆனாலும் எதையும் நான் வெளிக்காட்டிகொள்ளவில்லைதான்..மனதுக்குள்ளேயே போட்டு குமைந்தவாறே இருந்தேன், மனைவியிடம்கூட பகிர்ந்து கொள்ள முடியாமல்..ஆனால் எப்படியோ என் மன நிலையை மோப்பம் பிடித்தவள், ஒரு நாள்   அந்த விளம்பரம்  பார்த்ததும் என்னிடம் சொன்னாள்.  “ஏங்க நீங்க இந்த அமைப்புக்கு உங்களை பத்தின ஒரு பய டாடா பிரிபேர்  பண்ணி அனுப்பிவைக்ககூடாது?” என்று.

-12

“நானே.. என்னைபத்தி… எப்படி சே..சே” என்ற போதுஅவள் மேலும் சொன்னாள்.  “உங்களுக்கென்னங்க குறைச்சல்?43 வருஷ எழுத்து அனுபவம்.  பரவலா தொ¢யாட்டியும் ஒரு நல்ல பேர்  கற்றிறிந்த சர்கிள்ள.  ஒ அவரா  நல்லா எழுத்தாளாராச்சேனு…  என்ன ஒண்ணு  உங்க அபிமான பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர்  சொன்னாப்பல  நீங்க ஏனோ பரவலா கண்டறியப்படவில்லை.. அப்படிகூட சொல்ல முடியாது.  உங்களுக்கு லாபி பண்ண யாருமில்லைன்றதுதான் நிதரிசனம், ” என்ற போது எனக்கு அவள் மீது கோபம் பற்றிக்கொண்டு வந்தது..  உன் புருஷன் உனக்குவேணா ஒசத்தியாயிருக்கலாம்.  அதனால்  வாய்க்கு வந்தபடி எல்லாம்  அவதூறா பேசக்கூடாது.  ஒரு கால் நாளைக்கே எனக்கு ஏதாவது ஒரு அமைப்பு விருது கொடுத்து பாராட்டிச்சுனு  வை, அப்ப என்னைப் பத்தியும் இப்படி சிலர் பேசலாம் இல்லையா” என்ற போது அவள் சொன்னாள் ,  “என்னங்க நான் ஒண்ணு சொல்லட்டா? மகாகவியை பத்தி படிச்சது.  ஒரு காலத்தில் அவர் கண்டறியப்படாத போது அவர் மனம் நொந்து சொன்னாராம்.  “தமிழில் நல்ல கவிதைகள் பாடும் திறமைசாலிகள் இல்லை என்ற வசை என்னால் ஒழிந்ததுனு” அவ்வளவு தன்னம்பிக்கை அவருக்கு அவர்  படைப்புகள் மேல.  என்றவள்  நான் சிந்தை வயப்பட்டது கண்டு அடுத்த அஸ்திரத்தை எடுத்து வீசினாள்.. அதுவும் பெரிய பிரும்மாஸ்திரம்  அதாவது “நான் சொன்னதைத்தான் செஞ்சு பாருங்களேன்.  ஒரு விருதோ,  பாராட்டோ கலைஞனை தேடி வரணும்..  நாம் அதை தேடிப்போகக்கூடாதுதான்.  அதுதான் விருது கொடுக்கிறவங்களுக்கும், பெற்றுக்கொள்கிறவங்களுக்கும்  மரியாதை, கௌரவம், பெருமை எல்லாம்.. ஆனா இந்த காலத்தில், பூக்கடைகளுக்கு கூட விளம்பரம் வேண்டியிருக்குன்றதுதான் உண்மை நிலவரம்.  அப்போது அங்கு வந்த என் நண்பன் “சிஸ்டர் சொல்றதில என்ன தப்புப்பா? சில பேர்கள் என்னதான் திறமைசாலிகளாய் இருந்தாலும் சில, பல, வெளியே சொல்லிக் கொள்ள முடியாத காரணங்களால் வெளிச்சத்துக்கு வர முடியலை..  மறைந்த மாமேதை அமரர் திரு. வாலியே “ஆனந்த விகடன்” இதழிலே “நினைவு நாடாக்கள்” என்ற  தன் கட்டுரையில் அவர் நண்பன் ஒருத்தன் தன்னை விட அபார திறமைகளை உள்ளடக்கியவன் , என்ன காரணத்தாலோ  வெளிச்சத்துக்கு வர முடியலைனு ஆதங்கப்பட்டிருப்பார்..  இவ்வளவு ஏன்? நீயே ஒருமுறை சொன்னியே உன் அபிமான பத்திரிகை ஆசிரியர், உன் மானசீக குரு ஒரு விழாவில சொன்னதா, அதாவது பிரபலமாகணும்னா,  ஒண்ணு அரசியல்ல இருக்கணும்..  இல்லை மீடியா வெளிச்சம் மேலே படணும்.. இல்லைனா (மறைந்த பிரபல பெண் எழுத்தாளர் ஒருவர் பெயரைச்சொல்லி)  அவங்க மாதிரி தான் இருக்கவேண்டியிருக்கும் ரொம்ப பேர்களுக்கு வெளியே தொ¢யாமல்.   அப்படியொரு நிலைமையை எதிர்கொள்ளவும் அபார மனத்துணிச்சல் வேணும். அவ்வளவு பெரிய திறைமாசலியை நாம் மதிச்சு விருது கொடுத்து கொண்டாடலையேனு  எனக்குள் ஒரு ஏக்கம் இருக்குனு சொன்னார்னு நீதானே சொன்னே எங்கிட்ட.   அதனால் நீ  என்ன பண்றே இப்ப  எங்கிட்ட விபரமா எழுதிக்கொடு உன்னைப்பத்தி.  அதை நான் கணினியில  நாளைக்கே ஏத்தி ஒரு பய டாட்டவா பிரிபேர் பண்ணி  தரேன்.  இப்ப விளம்பரம் கொடுத்திருக்கிற அமைப்பு பற்றி விசாரிச்சேன்பா .  அது பாரபட்சம், வேண்டியவங்க, வேண்டாதவங்கனு பார்க்காத , தகுதியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படற அமைப்பாம்.  அதனால் உன் இத்தனை வருஷ எழுத்துலகில் நீ சாதிச்சது என்ன, வாங்கிய பரிசுகள் என்னன்ற விபரம் கொடு நான் இப்ப சொன்னாப்பல, ” என்ற போது என் மனைவி சொன்னாள் “என்னங்க அண்ணா சொன்னாப்பலதான் செஞ்சு பாருங்களேன்” என்றவளின் பேச்சையும் புறம் தள்ள முடியவில்லை.  ஆனாலும் இது சரியில்லை என்று ஒரு மனம் சொல்லியது,  ஏன் என்றால் நான்  வளர்க்கப்பட்ட விதம் அப்படி.  மனம் பின்னோக்கி சென்றது, ஐம்பதுகளுக்கு (அதாவது 1950 களுக்கு).  அப்போது நான் எங்கள் ஊரான திருவிடைமருதூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் இன்றளவும் நடத்திவரும் உயர்நிலை பள்ளியில் 9ம் வகுப்பின் ஆனுவல் எக்சாம் போது எனக்கு டைபாய்ட் வரவே எக்சாம் அட்டெண்ட் பண்ண முடியவில்லை..  அப்போதெல்லாம் டைபாய்ட் காய்ச்சல் வந்தால் அது 21 நாட்கள் வரை நீடிக்கும்..என் நிலை உணர்ந்த சிலர் என் அப்பாவிடம் சொன்னார்கள் “நீங்க ஏன் அந்த பள்ளி வகுப்பாசிரியரையும், தலைமை ஆசிரியரையும்  பார்த்து நிலைமையை விளக்கி தேவைப் பட்டால் எம்.சி. கொடுத்து பாஸ் போடச்சொல்லலாமே என்று..  ஆனால் அப்பா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.  இன்னைக்கு உனக்காக நான் ஒரு சிபாரிசுக்கு அவராண்ட போனா, நாளையே அவர் எங்கிட்ட எதன் பொருட்டாவது  சிபாரிசுக்கு வரலாம்.. அப்ப நான் அதை நிறைவேற்றமுடியாம இருக்கலாம்.  ஸோ, நீ ஒன் மோர் இயர் படிச்சு பாஸ் பண்ணு ” என்றார்..   அது மட்டுமல்ல கண்ணா, இப்ப நான் உன் பொருட்டு ஒரு சிபாரிசுக்குப்போனா நாளைக்கே இதுபோல வேற ஒரு பிரச்சினை வரப்ப ஏன் அப்பா வந்து உதவக்கூடாது முன்பே செஞ்சாப்பலுனு  உனக்கு தோணலாம்” என்ற அப்பா மீது அப்போது கோபம் அந்த அறியாத  வயசில வந்தாலும் இப்போது “அப்பா தி கிரேட்னு” தோணுது.    இப்படி பல சிந்தனைகளுடன் இருந்தாலும் மனமே இல்லாமல் மறுநாள்  நண்பனிடம் கொடுத்த பய டாட்டா கம்பியூட்டர் பிளாப்பியை வாங்க அவன் வீடு சென்ற நான் அப்படியே திகைத்து நிற்க வேண்டியாதாயிற்று வாயிலிலேயே அவன் என்னை பற்றி கேவலமாய் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட போது..  அதாவது நான் புகழுக்கும், விருதுகளுக்கும்  அலைவாதாக.,  அப்படியே நாண்டுகிட்டு செத்துடலாமா என்றும் இருந்ததது.. என் மனம் விட்டுப்போயிற்று.  அதனால் அங்கு போன சுவடே தொ¢யாமல்  வீடு திரும்பி மனைவியிடம் சொல்லி புலம்பிய போது  அவள் சொன்னாள். “விருது என்னங்க பெரிய விருது?  இத்தனை வருஷங்களில் உங்க படைப்பை பெரும்பாலும் சிலாகிச்சுத்தானே  ரசிகர் கடிதங்கள் வரும்.. அது மட்டுமா? உங்க கதைகளை பகிரங்கமா டேபிள் மேல போட்டு வைக்கலாம்..  யாராவது குழந்தைகள் எடுத்து படிச்சுருவாங்களோனு பயப்பட வேண்டாம்.  இப்படி எத்தனை,  எத்தனை பாராட்டு கடிதங்கள், போன் கால்கள், செல்போன் கால்கள்.  பப்ளிக் பிளேசில..   நான் உங்க மனைவினு  தொ¢யவரப்ப எனக்கு கிடைக்கிற மரியாதை, கௌரவம் வேற யாருக்குங்க கிடைக்கும்? ” யார் தருவார் இந்த அரியாசனம், புவி அரசோடு எனக்கும்  ஒரு சரியாசனம்”னு  அந்த மஹாகவி காளிதாசன் பாடினாப்பல  ஒரு பூரிப்புங்க என் மனசில, எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்குமா இந்த மகிழ்ச்சிக்கு ஈடாய்…  விருது என்னங்க விருது இதைவிட பெரிசா”என்ற போது எனக்கு தோன்றியது ஏன் உனக்கு இருக்கும் மன முதிர்ச்சி எனக்கு இல்லை “என்று.   அதே சமயம் அந்த பிரபல பாட்டு என் நினைவுக்கு வந்தது…. அதாவது  “ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா”.  .

Series Navigationபாவலரேறு பெருஞ்சித்திரனாரின் போராட்டங்கள் – சிறைவாழ்க்கைசொற்களின் வல்லமை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *