ஒவ்வொரு தமிழ் எழுத்தாளரின் கன்னத்திலும்….

author
0 minutes, 25 seconds Read
This entry is part 7 of 9 in the series 16 ஜூன் 2019

கோ. மன்றவாணன்

      நாகர்கோவில் பார்வதிபுரம் சாரதா நகரில் உள்ள வீட்டில் எழுத்தாளர் ஜெயமோகன் தனிமையில் இருந்துள்ளார். தோசை வார்த்து உண்ணலாம் என்றெண்ணிய அவர், அருகில் உள்ள வசந்தம் மளிகைக்கடைக்குச் சென்று மாவு பாக்கெட்டுகள் வாங்கி வந்துள்ளார். அந்த மாவு கெட்டிருந்தது. கெடுநாற்றம் வீசியது. அந்த மாவுப் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அந்தக் கடைக்குச் சென்று மாவு கெட்டிருக்கு என்று சொல்லி உள்ளார். மாவு பாக்கெட்டைத் திரும்ப வாங்க மறுத்த அந்தக் கடையின் அம்மையார், ஜெயமோகனை வசைபாடி உள்ளார். அதனால் அந்தப் பாக்கெட்டை அங்கேயே போட்டுவிட்டுக் கிளம்ப எத்தனித்தவரை, கடையின் உரிமையாளரும் அந்த அம்மையாரின் கணவருமான ஒருவர், ஜெயமோகனைத் தாடையில் அறைந்து கீழே தள்ளி உள்ளார். உதைத்தும் அடித்தும் உள்ளார்.

      இச்செய்தியைக் கேட்டவுடன் எனக்கு வலித்தது. அந்த அறை ஒவ்வொரு தமிழ்எழுத்தாளரின் கன்னத்தில் விழுந்ததுபோலவே நான் கருதுகிறேன். உலகம் அறிந்த அந்த எழுத்தாளரை உள்ளூர் அறிந்திருந்தால் இந்த இழிவு ஏற்பட்டிருக்காது. தகுதிவாய்ந்த எழுத்தாளர் யாரும் தன்னை ஊரில் முன்னிறுத்திக் கொள்வதில்லை.

      கெட்ட மாவுப் பாக்கெட்டுகளை வேண்டுமென்றே விற்பது தொழில் அறமன்று. எது கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு போக வேண்டும் என்பது நம் தலையெழுத்து அல்ல. வணிகத்தில் வாடிக்கையாளரே முக்கியமானவர். அவரே நம் எஜமானர் என்று காந்தி அடிகள் சொன்ன மணிமொழியை எந்த வணிகரும் ஏற்பதில்லை. விற்ற பொருட்கள் வாபஸ் வாங்கப்பட மாட்டாது என்று விற்பனை பில்களில் அச்சிட்டிருப்பார்கள். நம்முடைய நுகர்வோர் சட்டப்படி அந்த வாசகமே ஏற்புடையதல்ல.

      சில கடைகளில் கெட்டு நாறிய பொருட்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள். வீட்டுக்கு வந்தபின்தான் அவற்றின் குணம் மணம் எல்லாம் தெரி்யும். அழுகிய பொருட்களைக் கலந்து விற்பவர்களும் உண்டு. நாம் பணம் கொடுத்து வாங்குகிறோம். சரியான பொருட்களை வழங்க வேண்டியது வணிகர்களின் கடமை. நேர்மை தவறியவர்களே வணிகத்தில் பெருமுதலாளிகளாக- சமூகத்தில் பெரிய மனிதர்களாக உயர்வதையும் பார்க்க முடிகிறது.

      காலவரம்பு கடந்த, கெட்டுப்போன பொருட்களை விற்பது சட்டப்படிக் குற்றம். அந்தப் பொருட்களைத் திரும்பக் கொடுத்தால் அதைப் பெற்றுக்கொண்டு சரியான பொருட்களைத் தரவேண்டும் அல்லது அந்தப் பொருட்களுக்குரிய தொகையைத் திருப்பித் தந்துவிட வேண்டும். இதுவே நியாயமான வணிக முறை.

      “சிறிய மாவுப் பாக்கெட்டுக்காகப் பெரிய எழுத்தாளர் மளிகைக்கடைக்காரரிடம் மல்லுக்கட்டி நிற்கலாமா? அற்ப விஷயத்துக்காக அந்தக் கடைக்குச் சென்று நியாயம் கேட்கலாமா? விட்டுட்டுப் போவதே… கண்டும் காணாமல் போவதே நம் கெளரவத்தைக் காப்பாற்றிக்கொள்கிற வழிமுறை. இது தெரியவில்லையே இந்த ஜெயமோகனுக்கு” என்று எண்ணுவோரும் உள்ளனர். குற்றம் சின்னதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும், குற்றம் குற்றமே. அதைக் கண்டுகொள்ளாமல் போவதாலேயே குற்றங்கள் பெருகி, அவையே தர்ம நியாயங்களாக  வேடம் தரிக்கின்றன.

      நுகர்வோர் விழிப்புணர்வின்படி நியாயம் கேட்டதற்காக எழுத்தாளர் தாக்கப்பட்டுள்ளார். இன்றைய உலகில் எந்த இடத்திலும் நியாயம் உதைபடுகிறது.

      தமிழில் உள்ள இன்றைய எழுத்தாளர்களில் உச்சப் புகழில் இருப்பவர் ஜெயமோகன். நட்சத்திர நடிகர்கள் பங்கேற்கும் பெருஞ்செலவு கொண்ட திரைப்படங்களுக்கு அவர் திரைக்கதை வசனம் எழுதி உள்ளார். கமல், ரஜினிகாந்த் போன்ற பெரு நடிகர்களோடு நட்புறவு கொண்டவர். இந்தியா முழுவதும் இருக்கின்ற இலக்கிய ஆளுமைகளோடு நெருங்கிய உறவுடையவர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கே அவருக்கென ரசிகர் கூட்டம் உண்டு. இந்தியாவின் பல அரசியல் தலைவர்களுடனும் அவருக்கு பழக்கமுண்டு. இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்க முன்வந்த போது அதைத் தவிர்த்தவர்.  

      தமிழகத்தின் எந்த ஊருக்குச் சென்றாலும் இவரின் பின்னால் அணிவகுக்கும் வாசகர்படை உண்டு. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒன்றை நிறுவி, ஆண்டுதோறும் பெரியதோர் இலக்கியத் திருவிழாவை நடத்தி வருகிறார். மூத்தப் படைப்பாளிகளுக்கு விருது வழங்குகிறார். இளம்படைப்பாளிகளை ஊக்குவிக்கிறார். பிறமொழிப் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்கிறார். இலக்கிய விவாதங்கள் தொடர்பாக எந்தக் கேள்வி எழுந்தாலும் அவருடைய இணையத்தளத்தில் அதுபற்றி ஒரு கட்டுரையாவது இருக்கும். அவரளவு வாசித்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்ற அளவில் வாசிப்பர். வாசிப்பை நேசிப்பவர்.

      இவரின் இலக்கிய படைப்புகள் யாவும் உலகத்தரம் வாய்ந்தவை. எந்தப் பெரும் விருதுக்கும் தகுதியானவர். தமிழ் எழுத்தாளர்களில் ஜெயகாந்தனுக்குக் கிடைத்த கம்பீரம், தற்காலத்தில் ஜெயமோகனுக்குக் கிடைத்துள்ளது.

      இவருக்கு எந்த அளவு ஆதரவுகள் உண்டோ, அதற்குச் சரிசமமாக எதிர்ப்புகளும் உண்டு. கறாரான விமர்சனங்களை அவர் முன்வைப்பதால் எதிர்ப்புகளை அவர் நேர்கொள்ள வேண்டியதாகிறது. அவருடைய இலக்கியப் படைப்புகளுக்கு நான் ரசிகன். ஆனால் அவருடைய பல கொள்கைகளுக்கு நான் முரணானவன்.  அவர் வெறுக்கின்ற திராவிட இயக்கத்தில் நான் பற்றுள்ளவன். எனினும் அவருடைய விஷ்ணுபுரம் இலக்கியத் திருவிழாவுக்கு 2014ஆம் ஆண்டுமுதல் சென்று வருகிறேன். கலந்துரையாடல்களில் பங்கேற்றும் வருகிறேன்.

      அதே நேரத்தில் ஜெயமோகனை விரும்பாதவர்கள், அவர் அடிவாங்கிய தகவலைக் கேட்டு ஆனந்தப்பண் பாடுவது, தமிழ் நாகரிகம் அல்ல. அரசியல், மதம் சார்ந்து அவருடைய கொள்கைள் ஒருசிலருக்கு ஒவ்வாமை தந்தாலும், அவர் தமிழின் புகழை உயர்த்தும் எழுத்தாளர். கருத்து வேறுபாடுகள் இருந்தால் கருத்துகளைத்தான் எதிர்கொள்ள வேண்டும். கருத்துரைத்தவரை  நண்பராகவே அணைத்துக்கொள்ள வேண்டும். எந்தக் காலத்திலும் இருவேறு கருத்துகளால் நிரம்பியதே இந்த உலகம்.

      இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த எழுத்தாளருக்கு உள்ளூரில் அவமரியாதை என்கின்ற போது இதயம் வலிக்கிறது. சமூகத்தில் எந்த அளவு மரியாதை எழுத்தாளருக்கு உள்ளது என்பதை அறிகிற போது வெட்கித் தலைகுனிய வேண்டியதாகிறது. எழுத்தாளருக்கு வெளியூரில் மாலை மரியாதை விருது விழா எல்லாம் கிடைத்தாலும் உள்ளூரில் அவர்முகம் தெரியவில்லை என்றால் என்ன செய்வது?

      பல பெரிய அறிஞர்களை, எழுத்தாளர்களை, அவர்களுடைய சொந்த ஊரில் விசாரித்தால் யாருக்கும் தெரிவதில்லை. அஞ்சல்காரருக்குக் கூட அவர்பெயர் நினைவுக்கு வருவதில்லை.

      ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரில் உள்ள எழுத்தாளர் கொண்டாடப்பட வேண்டும். ஊழல் செய்கிற ஒரு கவுன்சிலருக்குக் கொடுக்கின்ற மரியாதையைக்கூட  எழுத்தாளருக்குக் கொடுப்பதில்லை.

      எழுத்தாளர் இறந்தபிறகு அவருடைய சொந்த ஊரில் சிலை வைக்கக்கூட வேண்டாம். குறைந்த பட்சம் அவர் வாழுகின்ற காலத்தில் அவரை அவமரியாதை செய்யாது இருத்தலே நற்சமூக மாண்பு.

Series Navigationமீட்சிநடேசன் எழுதிய “வாழும் சுவடுகள்”
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *