சி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’

This entry is part 5 of 9 in the series 16 ஜூன் 2019


(இலக்கியச் சிந்தனை அமைப்பின் 49ஆம் ஆண்டு விழா 14.4.2019 அன்று சென்னையில் நடைபெற்றது. இலக்கியச் சிந்தனை ஒவ்வொரு ஆண்டும் சஞ்சிகைகளில் வெளியாகும் சிறுகதைகளில் பனிரெண்டு கதைகளைத் தேர்ந்தெடுத்து நூலாக வெளியிடுகிறது. இவற்றுள் ஒரு கதையை ஒரு விமர்சகரைக் கொண்டுத் தெரிவு செய்து ஆண்டு விழாவில் பரிசளிக்கிறது. 2018ஆம் ஆண்டின் சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது.  நான் தேர்ந்தெடுத்தது, சி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’ என்கிற கதை. ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியானது.  சிறுகதையைத் தெரிவு செய்த கட்டுரை நூலில் முன்னுரையாக இடம் பெற்றிருக்கிறது. )

2018ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறுகதைகள்

எல்லோர்க்கும் பெய்யும் மழை

மு இராமனாதன்

[‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சஞ்சிகைகளில் வெளியாகும் சிறுகதைகளில் பன்னிரண்டு கதைகளைத் தேர்ந்தெடுத்து நூலாக வெளியிடுகிறது. இவற்றுள் ஒரு கதையை ஒரு விமர்சகரைக் கொண்டுத் தெரிவு செய்து ஆண்டு விழாவில் பரிசளிக்கிறது. 2018ஆம் ஆண்டின் சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்தவர் மு.இராமனாதன். தெரிவானது சி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’ என்கிற கதை. பன்னிரண்டு சிறுகதைகளின் தொகை நூல் ‘எவர் பொருட்டு?’   எனும் தலைப்பில் 14.4.2019 அன்று நடந்த இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு  விழாவில் வெளியிடப்பட்டது. நூலில் இடம் பெற்றிருக்கும் மு. இராமனாதனின் மதிப்புரை கீழே.]

ஒரு சிறுகதை எப்படி இருக்க வேண்டும்?

சிறுகதை என்கிற வடிவம் நிலை கொண்ட காலம் முதலே இந்தக் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. வாசகர்களும் எழுத்தாளர்களும் அவரவர் ரசனைக்கேற்ப பதிலளித்தும் வருகிறார்கள். சமீபத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டவர் எழுத்தாளர் அ. முத்துலிங்கம். கேள்வியை எதிர் கொண்டவர் தொலைபேசியின் மறுமுனையில் இருந்த ஒரு வாசகர். இலங்கையின் பூசாச் சிறையில் அடைபட்டிருந்தபோது சிறை நூலகத்தில் முத்துலிங்கத்தின் சிறுகதைகளைப் படித்துப் பிரமித்தவர். விடுதலையானதும் யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவில் வசிக்கும் முத்துலிங்கத்தை அழைத்துப் பாராட்டுகிறார். முத்துலிங்கம் நன்றி நவில்வதோடு நின்றிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. முதல் பத்தியில் உள்ள கேள்வியைக் கேட்கிறார். ஏனெனில் தன்னை அழைத்தவர் ஒரு தேர்ந்த வாசகர் என்பது முத்துலிங்கத்திற்குத் தெரிகிறது. வாசகர் ஏமாற்றவில்லை. வாசகர் அளித்த பதில் இதற்கு முன்பு யாரும் சொல்லியிராதது.

வாசகர் சொல்கிறார்: “ஒரு நல்ல சிறுகதை என்றால் எழுத்தாளர் ஓர் அடி முன்னே நிற்பார். வாசகர் பின்னே தொடர்வார். வாசகரால் எழுத்தாளரை எட்டிப் பிடிக்கவே முடியாது. அதுதான் நல்ல சிறுகதை”.

ஒரு நல்ல சிறுகதையை எழுத்தாளர் எழுதி முடித்து விடுவதில்லை. வாசகர்தான் முடித்துக் கொள்ள வேண்டும். என் வாசக அனுபவத்தில் அப்படியான பல கதைகளைப் படித்திருக்கிறேன்; என் ரசனைக்கும் புரிதலுக்கும் ஏற்ப முடித்துக் கொண்டும் இருக்கிறேன்.  எனில், யாழ்ப்பாண வாசகர் ஒரு படி முன்னே போகிறார்.  ஒரு நல்ல கதையை வாசகன் அப்படி முடித்துக் கொண்டுவிட முடியாது என்பதுதான் அவர் சொல்வது. எழுத்தாளர் வாசகனுக்காக விட்டுச் செல்லும் வெளியை அவன் நிரப்பிக் கொள்கிறபோது, ஒரு நல்ல கதையில் மேலும் புதிய சாத்தியங்கள் தோன்றும்; புதிய கதவுகள் திறக்கும். அதைத்தான் ‘எழுத்தாளர் ஓர் அடி முன்னே நிற்பார். வாசகர் பின்னே தொடர்வார்’ என்கிறார் இந்த வாசகர். இப்படியான கதைகளும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. அவை இந்தக் கட்டுரையின் கடைசியில் இடம் பெறும்.  அப்படிச் சிலாகிக்க முடியாத கதைகளும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. அவை இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே இடம் பெறும்.

இப்படியான சிறுகதைத் தொகை நூலை இலக்கியச் சிந்தனை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சஞ்சிகைகளில் வெளியாகும் கதைகளில் பன்னிரெண்டைத் தெரிவு செய்து, அவற்றுள் சிறந்த கதையை ஒரு விமர்சகரைக் கொண்டு தேர்ந்தெடுக்கும் வழமையை இலக்கியச் சிந்தனை 1970இல் தொடங்கியது.  இன்று வரை இந்தத் தொடரோட்டம் நிற்கவில்லை. இது 49ஆம் ஆண்டு. அதே வேளையில் தமிழ்ச் சிறுகதைக்கு இது நூற்றாண்டு. 1919இல் வெளிவந்த வ. வே.சு. ஐயரின் ‘மங்கையற்கரசியின் காதல்’ என்ற தொகுதியில் இடம் பெற்ற ‘குளத்தங்கரை அரசமரம்’ என்கிற கதைதான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது இலக்கியச் சிந்தனை இதுவரை இயங்கி வந்த காலம், தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் செம்பாகம் ஆகும்.  கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தமிழுக்குப் பெருமை சேர்த்த சிறுகதை எழுத்தாளர்களுக்கு இலக்கியச் சிந்தனைப் பரிசளித்துப் பெருமைப்படுத்தி வருகிறது. இதில் குறிப்படத்தக்கவர்கள்:

அசோகமித்திரன் (விடிவதற்குள்-1984), இந்திரா பார்த்தசாரதி (அற்றது பற்றெனில்-1989), அ.முத்துலிங்கம் (விசா-1997), சூடாமணி (நான்காம் ஆசிரமம்-1972), ஆதவன் (ஒரு பழைய கிழவர்-1973), பிரபஞ்சன் (பிரும்மம்- 1982), திலீப்குமார் (தீர்வு-1977, கடிதம்- 1993), வண்ணதாசன் (தனுமை-1974, ஞாபகம்-1975), சார்வாகன் (கனவுக் கதை- 1971), ஜெயந்தன் (அவள்-1981), மேலாண்மை பொன்னுச்சாமி (ரோஷாக்னி-1998), பாவண்ணன் (முள்-1986), சுப்ரபாரதி மணியன் (இன்னும் மிச்சமிருக்கிற பொழுதுகளில்-1987), வேல. இராமமூர்த்தி (கூரை-2001), சோ. தர்மன் (நசுக்கம்-1992, அகிம்சை-1994), திருப்பூர் கிருஷ்ணன் (சின்னம்மிணி-1980), களந்தை பீர் முகமது (யாசகம்-2008), க.சீ.சிவக்குமார் (நாற்று- 2000), இரா.முருகன் (வெறுங் காவல்-1991), பாரதி கிருஷ்ணகுமார் (கோடி-2011) என்று நீள்கிறது பரிசு பெற்றவர்களின் பட்டியல்.

இந்தக் கட்டுரை முடியும்போது மேற்படி மதிப்புறு பட்டியலில் இன்னொரு பெயரும் சேர்ந்து கொள்ளும். அதற்குத் தக்கதாய சிறந்த சிறுகதையைத் தேர்வு செய்து தருமாறு இலக்கியச் சிந்தனை என்னைக் கேட்டுக் கொண்டது நான் செய்த பேறு. 2010இல் ஒரு முறை இந்தப் பணியைச் செய்திருக்கிறேன். இது இரண்டாம் முறை. நான் கதாசிரியனோ விமர்சகனோ அல்லன். வாசகன். தொடர் வாசிப்பினால் எழுத்துக்களை நல்லவையென்றும் அல்லவையென்றும் பிரித்துணரக் கற்றுக் கொண்டிருப்பவன். அந்த வாசகத் தகுதியின் அடிப்படையிலேயே 2010ஆம் ஆண்டின் சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும் துணிவைப் பெற்றேன். அதே தகுதியைக் கொண்டே இப்போதும் இந்தப் பன்னிரண்டு கதைகளுக்குள் அடியெடுத்து வைக்கிறேன்.

ஐந்திலே ஒன்று என்கிற கதை ரவிபிரகாஷ் எழுதியது. தலைப்பு கம்பனிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. கம்பனின் ஐந்து, ஐம்பூதங்களைக் குறிக்கும். இந்தக் கதாசிரியரின் ஐந்து ஐம்புலன்களைக் குறிக்கிறது. இந்தக் காவியத்தன்மை தலைப்போடு முடிந்துவிடுகிறது. கண்ணனுக்கு பிறவியிலேயே பார்வைக் குறைபாடு. ஒரு புலனில் குறைபாடு இருப்பவர்களுக்கு மற்ற புலன்கள் சிறப்பாகச் செயலாற்றும். கண்ணனுக்கும் செவியும் நாசியும் வெகு சிறப்பாகச் செயலாற்றுகின்றன. இதனால் அயல்வாசிகளிடையே ஒரு நட்சத்திரமாக விளங்குகிறான். 22 வயதில் ஓர் அறக்கட்டளை உதவியுடன் நடக்கும் அறுவை சிகிச்சையால் கண்ணனுக்குப் பார்வை கிடைக்கிறது. பார்க்கத் தொடங்குகிறான். ஆனால் அதீத புத்திசாலியான கண்ணனுக்கு உடைகளும் நிறங்களும் விளங்கவில்லையாம். ‘டிரஸ்ஸுன்னு ஒரு கான்செப்டே’ அவனுக்குப் புரியவில்லையாம். குளியலறைக்குள் போய் ஒரு பெண்ணுடலைப் பார்ப்பது தவறென்று அவனுக்குத் தெரியவில்லை. மானமென்றால் என்னவென்றும் தெரியவில்லை. அயல்வாசிகளிடம் அடி வாங்குகிறான். ஆசிரியர் கண்ணன் மீது பச்சாதபத்தை வரவழைக்க முயன்றிருக்கிறார். கூடவே பார்வையற்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் குறித்து அறிந்து கொள்ளவும் அவர் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

ந. சோலையப்பன் எழுதிய கானல் நீர் நாட்கள் என்கிற கதை ஒரு மணமான பெண்ணுக்கும், முகநூல் வழியாக அவளுக்கு அறிமுகமான ஓர் ஆணுக்கும் வாட்ஸப் வாயிலாக நடக்கும் உரையாடல்களால் ஆனது. உரையாடல் ஒரு கட்டத்தில்- உங்கள் ஊகம் சரிதான்-  நெறி பிறழ்கிறது. சமகாலச் சமூக ஊடகங்களை உள்ளிட்ட கதை என்பதால் இது நவீனமானது. எனில், அது மட்டும் கதையை நவீனமாக்கி விடுமா? சமூக வலைதளங்கள் இல்லாத காலத்தில், கடிதப் பரிமாற்றங்களின் வழியாகவே சொல்லப்பட்ட கதைகள் தமிழில் இருக்கின்றன. சுஜாதாவின் “இரு கடிதங்கள்” நினைவுக்கு வருகிறது. வேதியியல் பேராசிரியையான ஒரு விதவைத் தாய்க்கும், மணவாழ்வில் வெறுப்படைந்த ஒரு மகளுக்கும் இடையே எழுதப்பட்ட கடிதங்கள், கதையாக உருப்பெற்றிருக்கும். சுஜாதாவின் கதையில் கடிதங்கள் மட்டுமே இருக்கும். கடிதங்களுக்கு வெளியேயும் கதை இருக்கும், அவை வாசகன் உணர்ந்து பொருள் கொள்வதற்காக விடப்பட்டிருக்கும். இந்தக் கதையில் வாட்ஸப் உரையாடல்களால் மட்டுமே கதாசிரியரால் கதையைச் செலுத்திவிட முடியவில்லை. ஆசிரியர் கூற்றாகத்தான் கதை முடிகிறது. அதிர்ச்சி மதிப்பிற்காகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு நைந்து போன மர்ம முடிச்சொன்றும் கதை முடிவில் அவிழ்கிறது.

உங்களைப் பாத்துட்டே இருக்கேனே என்பது வா.மு. கோமு எழுதிய கதை. நிர்மலா ஒரு சிகப்பழகியாகத்தான் இருந்தாள். கல்லூரிப் படிப்பின்போதுதான் காதோரத்தில் தொடங்கிய வெண்படலம் உடலெங்கும் பரவுகிறது. அப்பாவின் திருமண முயற்சிகள் பலிக்கவில்லை. வீட்டிற்குள் முடங்குகிறாள். ஒரு திருமண வீட்டில் சேகரைச் சந்திக்கிறாள். அவனுக்கு அவளைப் பிடிக்கிறது. அவளுக்கும். கதையின் கடைசி வரியிலிருந்து கதைத் தலைப்பு உருவாகியிருக்க வேண்டும். ஏன் கதையின் கருவை உள்ளடக்கிய ஒரு தலைப்பு கதைக்குச் சூடப்படவில்லை என்பது தெரியவில்லை. சேகருக்கு ஏன் நிர்மலாவைப் பிடிக்கிறது என்பதும் தெரியவில்லை.

தேனி சீருடையான் எழுதிய கதை கடிதங்கள். கதைசொல்லிக்கு இரண்டு பெண்கள் கடிதம் எழுதுகிறார்கள். இந்தக் கணினி யுகத்திலும் அஞ்சல்தலை ஒட்டி அயல் நாட்டிலிருந்து கையால் எழுதும் பேனா சிநேகிதி ஒருவர்.  மையினால் விரும்பி எழுதும் மற்றவர். இரண்டாமவர் எழுதுவது காதல் கடிதம். இரண்டு பேர் எழுதும் கடிதங்களும் வெவ்வேறு காரணம் பற்றித் திடீரென்று நின்று போகின்றன. கதைசொல்லி இளைஞன்தான். ஆனால் கதாசிரியர் அவனுக்குள் செயல்படுத்துவது ஒரு முதியவரின் மனத்தை.  அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. ஆசிரியருக்கு ஒரு சம்பிரதாயமான முடிவும் தேவைப்படுகிறது. ஆகவே கதை ஒரு பழைய தமிழ் சினிமாவைப் போல் சுபமாக முடிகிறது.

வாத்தியார், கவிப்பித்தன் எழுதிய கதை. வாத்தியாரின் சாவுச் செய்தியோடு கதை தொடங்குகிறது. பள்ளிக்கூட வாத்தியார் இல்லை, நாடக வாத்தியார் என்று ஆரம்பத்திலேயே கதாசிரியர் எடுத்துச் சொல்லி விடுகிறார்.  சென்னையில் வாழும் கார்த்திகேயனது பார்வைக் கோணத்தில்தான் கதை விரிகிறது. அதாவது வாத்தியாரின் வாழ்க்கைக் கதை வெளியேயிருந்து ஒரு பார்வையாளனால் சொல்லப்படுகிறது. ஆதலால் இந்தக் கட்டுரையில் இன்னும் சற்றுத் தள்ளி இடம் பெறும் இன்னொரு வாத்தியாரின் கதையில் உள்ள அந்தரங்கமும் ஆழமும் இந்தக் கதையில் இல்லை என்று தோன்றுகிறது. அரசாங்க வேலைகளை உதறிவிட்டு நாடகத்திற்காக வாழ்ந்த ‘பொய்க்கத் தெரியாத பைத்தியக்கார’ வாத்தியாரின் முடிவிற்காக வாசகனின் அனுதாபத்தைக் கோருகிறார் ஆசிரியர்.

கதைப் போக்கில் மூன்று கண்ணிகள் வருகின்றன. துவக்கத்தில் கார்த்திகேயனின் மகள் வருகிறாள். இடையில் வருகிற முன்கதையில் வாத்தியார் கார்த்திகேயனிடம் இப்படிச் சொல்கிறார்: ‘பொட்டக் குட்டிய நல்லா வளத்து வைய்யி…அவ எங்க ஊட்டுக்குதாங் வந்தாவணும்.’ கதையின் முடிவில் வாத்தியாரோடு சேர்ந்து வாழாத மனைவியும் பிள்ளைகளும் வருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் வாத்தியாரின் மகனில் வாத்தியாரைப் பார்த்து புளகாங்கிதம் அடைகிறான் கார்த்திகேயன். இந்த மூன்று கண்ணிகளையும் கதாசிரியர் ஏதேனும் ஒரு தொடர்பு கருதி அமைத்திருக்கலாம். அவை பொருந்தியும் போகலாம். ஆனால் அது கதைக்கு எப்படிப் பங்களிக்கிறது என்று புரியவில்லை.

அது ஒரு நோன்புக் காலம் என்கிற கதையை சித்திக் எனும் புனைபெயரில் எழுதியிருப்பவர் முகமது சாதிக். 35 ஆண்டுகளுக்குப் பிறகு தான் படித்த கல்லுரியைப் பார்க்க வரும் கதை சொல்லி, முகமது சாதிக்காகவே இருக்கக்கூடும். ‘அக்கினி நட்சத்திர வெயில் நேரத்து நோன்பு காலப் பயணம்’. படித்த காலத்தில் அடிக்கடி சென்ற சம்சுதீன் சார் வீட்டைத் தேடிப்போகிறார். வீடு கைமாறிவிட்டது. சார் காலமாகி விட்டார். சாரின் மனைவி, அன்புமயமான வஹிதா மாமி தன் மூன்று பிள்ளைகளோடும் இல்லை; எங்கோ தனியாக வசிக்கிறார். மூன்று பிள்ளைகளின் வீடுகளையும் தேடிச் செல்கிறார் கதைசொல்லி. அம்மாவைக் உடன் வைத்துக் கொள்ளாததற்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு காரணம் இருக்கிறது. சொல்கிறார்கள். அப்படி அவர்கள் அம்மாவைக் குறை சொல்லும்போது நோன்பு வைத்திருந்தார்கள் என்று கதைசொல்லி தன் மனைவியிடம் வருத்தப்படுகிறார். அங்கே கதை முடிந்து விடுகிறது. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.  ஆனால் கதாசிரியருக்கு இன்னும் சொல்லித் தீரவில்லை. கதை சொல்லியின் மனைவி சொல்கிறார்: “அதை நோன்புன்னு சொல்லாதீங்க. அவங்க பட்டினியா இருந்தாங்க…தாகமா இருந்தாங்க… அவ்வளவுதான்… அதை ஆண்டவனுக்கு அர்ப்பணமான நோன்புன்னு சொல்றதே பாவம்ங்க”.

மூன்று பிள்ளைகளிடமும் தாயின் பெருமையைச் சொல்லும் குரான் வசனங்களை இவர் சொல்கிறார். இவை கதையிலிருந்து துருத்திக் கொண்டு நிற்காமல் கதையோடு இயைந்து பின்னப்பட்டிருக்கின்றன. சார் முன்பு வசித்த வீட்டில் இப்போது ஜீசஸ் புன்னகைக்கிற படமிருப்பதும், வள்ளலார் டிபன் சென்டரில் இவர் நோன்பு திறப்பதும் எதேச்சையானவையல்ல. நல்லிணக்கத்தின் அறிகுறிகளாக ஆசிரியர் சேர்த்தவையாக இருக்கலாம். எனில், இவையும் கதையோடு இயைந்தே நிற்கின்றன.

செய்யாறு தி.தா.நாராயணன் எழுதிய கதை தமிழோ…தமிழ். ஒரு சிறு நகரத்தில் வாழும் நடுத்தர வயது நண்பர்கள் தமிழ்ச் சங்கம் தொடங்கும் கதை. சங்கத்திற்கு உறுப்பினர்களைச் சேர்க்க முடியவில்லை. சேர்த்த உறுப்பினர்களிடம் சந்தா வசூலிக்க முடியவில்லை. சந்தா செலுத்தியவர்கள் கூட்டத்திற்கு வருவதில்லை. கூட்டத்திற்கு வரும் பேச்சாளர்கள் இலக்கியம் பேசுவதில்லை. பார்வையாளர்கள் எதையும் கவனிப்பதில்லை. தொலைக்காட்சிப் பட்டிமன்றங்களில் எப்படி அரங்கு நிரம்பி வழிகிறது என்று நண்பர்களுக்கு வியப்பு. நண்பர் ஒருவர் ஓர் உபாயம் செய்கிறார். உள்ளூர் எம்.எல்.ஏ.வை உறுப்பினராக்குகிறார். கூட்டம் சேருகிறது. கூடவே ரகளையும். கடைசியாக ஒரு கூட்டத்திற்கு ஐம்பது பேர் வந்து விடுகிறார்கள். அதற்குப் பின்னால் ஒரு சூழ்ச்சி இருக்கிறது. கதை நெடுகிலும் தமிழ் புனைகதைப் பரப்பில் அரிதாகிவிட்ட பகடி விரவியிருக்கிறது. கதையில் ஆங்காங்கே சில தெறிப்புகள் இருக்கின்றன.  ‘மத்தவங்ககிட்ட பேசறப்போ… ஒரு தமிழன் மட்டும்தான் தமிழ்லே பேசறதில்லே’, ‘சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகள்லே ஜனங்களுக்கு இன்னமும் அவங்க தாய் மொழி தவிர வேறு பாஷை தெரியாதுப்பா’, ‘ஆங்கிலம் என்பது அறிவு இல்லை, மொழி’. இந்தத் தெறிப்புகளையெல்லாம் கதைக்குள் சாமர்த்தியமாகக் கோர்த்தும் விடுகிறார் கதாசிரியர். கதையைச் சரளமாகப் படிக்கவும் முடிகிறது. எனில், கடைசியில் வாசகனுக்குக் கிட்டுவதென்ன? இந்தப் பொன்மொழிகள் மட்டும்தானா?

பிசகு என்பது பா.கண்மணி எழுதிய கதை.தமிழ் இதழியல், சிறுகதைக்கு ஓர் அளவு நிர்ணயித்திருக்கிறது. அச்சில் ஆறேழு பக்கங்கள். அதற்கு மேல் போனால் அது நெடுங்கதை அல்லது குறுநாவல் என்று நாமகரணம் சூட்டப்படும். ஆங்கிலத்தில் அப்படியில்லை. நோபல் விருது பெற்ற அலிஸ் மன்றோ எழுதிய கதையொன்று 70 பக்கங்கள் வரும். அது சிறுகதை என்றுதான் அழைக்கப்படுகிறது. எனில், சிறுகதையின் அளவை எப்படி நிர்ணயிப்பது? இதற்கு புதுமைப்பித்தன் 1934-லேயே பதில் சொல்லிவிட்டார். “சிறுகதை என்றால் அளவில் சிறியதாக இருப்பது என்பதல்ல. எடுத்தாளப்படும் சம்பவம் தனி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.” இந்தக் கதை தமிழ் இதழியல் சட்டகப்படி நீளமானதுதான். ஆனால் புதுமைப்பித்தன் வரையறையின்படி சிறுகதைதான். ஒரு சம்பவத்தைப் சுற்றியே கதை அமைந்திருக்கிறது.

யோகலெட்சுமி வங்கிக் குமாஸ்தா. காசாளராகப் பணியாற்றிய நாளொன்றில் ஒரு வாடிக்கையாளரைக் காக்க வைத்து விடுகிறாள். வாடிக்கையாளர் என்.ஆர்.ஐ எனப்படும் மேல்சாதிக்காரர். புகார் அளித்துவிடுகிறார். இவள் மற்ற பணியாளர்களிடமிருந்து சற்று ஒதுங்கி இருப்பவள். அவர்கள் விவாதிக்கும் வங்கி அரசியலிலும் ஊசிப்போன குடும்பக் கதைகளிலும் இவளுக்கு நாட்டமில்லை. இப்போது அவர்களின் அரைவேக்காட்டு உபதேசங்களும் பாசாங்கு அனுதாபங்களும் இவளைச் சுற்றி வருகின்றன. உதவி செய்ய வருகிற ஒருவனுக்கு இவள் உடலே பண்டமாற்றாக வேண்டியிருக்கிறது. சங்கத்தாலும் உதவ முடியவில்லை. நிர்வாகம் இவளது சிறிய தவறை மன்னிக்கத் தயாராக இல்லை. அடுத்த ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. எல்லாம் முடிந்ததும் ஒரு நாள் அந்தப் பணக்கார என்.ஆர்.ஐ வாடிக்கையாளரைச் சந்திக்கிறாள். அவர் வருத்தம் தெரிவிக்கிறார். இவளது ஊதிய இழப்பை ஈடுகட்ட முன்வருகிறார். இவளது தன்மானம் மறுத்து விடுகிறது. நீ அடித்ததும் அழுது, அணைத்ததும் சிரிக்க நானொன்றும் உன் பேத்தியின் விளையாட்டுப் பொம்மையல்ல’ என்று நினைத்துக் கொள்கிறாள்.

வாசகன் யோசிப்பதற்கான வெளியெனெ எதையும் ஆசிரியர் விட்டு வைக்கவில்லை. எனில், கதையில் நம்பகத்தன்மை இருக்கிறது. சரளம் இருக்கிறது. நிறைய ஆங்கிலமும் இருக்கிறது. குறைத்திருக்கலாம்.

வாஸந்தி எழுதிய கதை தொலைந்து போனவன். இது ஓர் அரசியல் கதை. இதற்கு முன்பும் வாஸந்தி அரசியல் கதைகள் எழுதியிருக்கிறார். வாஸந்தி புனைகதை எழுத்தாளர் மட்டுமில்லை, பத்திரிகையாளருங்கூட. அவர் இந்தியா டுடே இதழின்ஆசிரியராக இருந்தபோது செறிவான அரசியல் கட்டுரைகளையும் காத்திரமான சிறுகதைகளையும் ஒரே நேரத்தில் வெளியிட்டார். இந்தக் கதையில் வரும் மாணவன் அறைக்குள் அமர்ந்து தேமே என்று படித்துக் கொண்டிருக்கிறான். கல்லூரிக்கு வரும் முதலமைச்சருக்கு சிலர் கருப்புக் கொடி காட்டப்போகிறார்கள். காலேஜிலே கலாட்டாவாமே என்று அம்மா போனில் விசாரிக்கிறார். ‘நா ரூமுக்குள்ளே உக்காந்திருக்கேன் பாதுகாப்பா’ என்று பதிலளிக்கிறான். ஆனால் அவன் நினைத்தது போல் அறை பாதுகாப்பானதாக இல்லை. விடுதிக்குள் போலீஸ் வந்துவிடுகிறது. விடுதி நண்பர்கள் அறையிலிருந்து ஓடிவிடுமாறு எச்சரிக்கிறார்கள். இவன் ஓடுகிறான். போலீஸ் துரத்துகிறது. வளாகத்தில் ஒரு குளம் இருக்கிறது. குதித்து விடுகிறான். ‘களக் மளக் என்று வாயிலிருந்து சத்தம் வந்தது…குளத்தின் அந்தகாரத்திலிருந்து எழும்பி மேலே மேலே மிதந்தது’.  கதை தொடர்கிறது. அதில் இறந்தவன் பார்வையாளானாக இருக்கிறான். நிர்வாகமும் போலீசும் இது தற்கொலை என்று சொல்லி விடுகிறது. இறந்தவனுக்கு நக்சலைட் தொடர்பு இருக்கலாம் என்றும் சொல்கிறது.  அப்பாவை அச்சம் பீடிக்கிறது.  அந்த அச்சமே மகன் படத்தைக்கூட வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அம்மாவிடம் கெஞ்ச வைக்கிறது. ஆனால் அம்மா மறுக்கிறார் என்று கதை முடிகிறது.

இதையொத்த சம்பவம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்த அப்பாவும் அஞ்சினார். இறந்தவன் தனது மகனே இல்லை என்றார். அஞ்சாத அப்பாக்களும் இருந்தார்கள். நெருக்கடி நிலையின்போது கோழிக்கோடு மாணவன் ராஜனை நக்சலைட் என்கிற சந்தேகத்தில் போலீஸ் பிடித்துக் கொண்டு போனது. பிறகு அவன் தொலைந்து போனான். ராஜனின் தந்தை ஈச்சர வாரியார், கதையில் வருகிற அம்மாவைப் போல் கேள்வி கேட்டார். அதோடு நிற்காமல் வழக்குப் போட்டார். சாத்தியமான எல்லாக் கதவுகளையும் தட்டினார். சமூக வலைதளங்களும் தொலைக்காட்சிகளும் இல்லாத காலம். எனில், அச்சு ஊடகங்கள் ராஜன் தொலைந்துபோன கதையை எழுதின. திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றுக்கு விருதுகளும் கிடைத்தன. வாரியாரே எழுதிய ‘ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்’ என்கிற நூலுக்கு சாகித்திய அகாதமியின் விருது கிடைத்தது. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருந்தது. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களை எளிய மனிதர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தொலைந்து போனவன் போனதுதான். இந்த வரலாற்றையெல்லாம் வாஸந்தியின் கதை கிளறி விடுகிறது. அதுதான் கதையின் நோக்கமாக இருக்க வேண்டும். அதிகாரம் வலியதுதான். ஆனால் அதை நோக்கிப் படைப்பாளிகள் பேசிக் கொண்டுதானிருப்பார்கள்.

தூரதேசத்து மகாராஜா, மலர்மன்னன் அன்பழகன் எழுதிய கதை. வீரான் எனும் நாடகக் கலைஞனின் கதை. மரண வீட்டில் கதை துவங்குகிறது. மனைவி பட்டம்மாளின் நினைவுகளில் முன்கதை விரிகிறது. வீரான் மீட்டுக் கொடுத்த வாழ்க்கை அவளுடையது.  நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இளம் வீரான் ஸ்ரீராமனாக வேஷம் கட்டி அவர்கள் ஊருக்கு ஆட வந்தபோது ஊராரிடம் அவன் நாமங் கேட்டாள். அவன் ஊரைக் கேட்டாள். அவனுக்கே பிச்சியானாள். முன்னம் கட்டிய கணவனையும் துறந்தாள்.

வீரானின் கூடவே இருந்தவர்கள் மூக்கனும் சின்னப்பனும் வடமலையும் மாணிக்கமும். அதனால் கூட்டாளிகள். மரண வீட்டில் சலங்கை கட்டி தப்பு மோளமடித்து வீரான் கதையை ஆடுகிறார்கள். ராமசாமி வாத்தியார்தான் எல்லோருக்கும் நாடகம் சொல்லித் தருகிறார். ஊர் ஊராய் அழைத்துப் போய் நாடகம் போடுகிறார். வீரான் ஸ்ரீராமனாய் வந்தால் ஜனங்கள் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். வீரானுக்கு ஓர் ஆசை இருக்கிறது. உள்ளூரில் வேஷம் கட்டி ஆடவேண்டும். ஆனால் ஒரு தலித் அப்படி ஆடுவதற்கு உள்ளூர் சாதிப் பெரியவர்கள் அனுமதிக்கவில்லை. வீரானின் கதையை கூட்டாளிகள் சொல்லி முடிக்கும்போது மகளுடன் சென்னையில் செட்டிலாகிவிட்ட ராமசாமி வாத்தியார் வருகிறார். அப்போது உறவும் நட்பும் அழுத அழுகை வீரான் இறந்த நிமிடத்திலிருந்து கேட்காத அழுகையாக மாறியது.  வீரானைக் குளிப்பாட்டுகிறார்கள். வாத்தியாரே வீரானுக்கு ஸ்ரீராமனின் பட்டாபிஷேக உடையை ஒவ்வொன்றாக உடுத்திவிடுகிறார். ஒரு தூர தேசத்து மகாராஜாவாகத்தான் பட்டம்மாள் வீரானை முதலில் பார்த்தாள். இப்போதும் அதே வேஷத்தில் வீரானைச் சுடுகாட்டுக்கு அனுப்பிவைக்கிறாள். வீரான் தன்னுடைய நிறைவேறாத ஆசையை வாத்தியாரிடம் அரற்றிக் கொண்டே இருக்கிறான். அப்படி அவருக்குத் தோன்றுகிறது.

வீரானின் வாழ்க்கை நாடகீயமானது.  கதையும் கதைக்களனும் பாத்திரங்களும் உரையாடல்களும் உணர்ச்சிகளும் அவ்வாறே சொல்லப்பட்டிருக்கின்றன. வாசகன் உய்த்து உணர்ந்து கொள்ள கதாசிரியர் எதையும் விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றையும் பரிமாறிவிடுகிறார். என்றாலும் கதை அதன் உள்ளடக்கத்தாலும் உருவத்தாலும் குறிப்பிடத்தக்க கதையாக நிற்கிறது.

நிழல் இந்திரா பார்த்தசாரதியின் கதை. கதையில் வரும் பெரியவருக்கு ஒரு கனவு வருகிறது.  அந்தக் கனவில் அவர் வேகமாக ஒடுகிறார். ஆனால் அவருக்கு நடப்பதே சிரமம். கார் விபத்தில் அடிபட்டு பல மாதங்கள் நினைவில்லாமல் இருந்தவர். இப்போதுதான் தேறி வருகிறார்.  விபத்துக்குக் காரணம் அவரேதான். ‘காரை எடுத்துக்கிட்டு கண்மூடித்தனமா ஓட்டியிருக்கீங்க’ என்கிறார் மனைவி.  கதையில் வரும் மூன்றாவது பாத்திரம் அவர்களது மகள். அவளே பார்த்துத் திருமணம் செய்து கொள்கிறாள், ‘வேற வேற நிறம், மதம், நாடு’. காதல் மணம்தான். ஆனால் முறிந்து போகிறது. இது இவரை மிகவும் பாதிக்கிறது. இவர் பிற்பாடு மகளிடம் சொல்கிறார்: ‘உங்கம்மா சொல்றா.. நான் கன்ஸர்வெடிவ்னு. நீயும் வில்ஸனும் பிரிஞ்சதை என்னால தாங்கிக்க முடியலையாம். அதனால்தான் நான் காரை அவ்வளவு வேகமா ஓட்டி விபத்தாச்சாம்’. கதையின் முடிவில் ஒரு திருப்பம் வருகிறது. அதிர்ச்சி மதிப்புக்காகச் சேர்க்கப்பட்ட திருப்பமில்லை அது. மொத்தக் கதையும் அந்த முடிவை நோக்கியே செலுத்தப்படுகிறது. பென்சிலை சீவிச் சீவிக் கூராக்குவது போல.

கதையில் நிழல் யார்? கதையில் நேரடியான பதில் இருக்கிறது. அவரது மனைவியே சொல்கிறார்- ‘நான் உங்க நிழல்’. மேலும் கதையில் மனைவியின் பாத்திரம் வருகிற இடங்களில் ‘குளியலறையில் நிழலாடியது’ என்கிறார் ஆசிரியர். இது ஒரு விதத்தில் கதையின் முடிவில் வருகிற திருப்பத்திற்கு வாசகனைத்  தயாராக்குகிறது. இப்போது நிழல் என்பதற்கு அமானுஷ்யமான ஒரு பொருளும் சேர்ந்து கொள்கிறது. இப்படி யோசித்துக் கொண்டிருக்கையில் கதாசிரியர் ஓர் அடி முன்னே போய் விடுகிறார். பெரியவரின் மனதில் ஊறி நிற்கிற பழைய நம்பிக்கைகளிலிருந்து அவரால் மீள முடியவில்லை. அவரது உள் மனம், மகளின் திருமணத்தையும், அதன் முறிவையும், பிற்பாடு அறிய நேருகிற அதன் காரணத்தையும் அங்கீகரிக்க மறுப்பதாகத் தெரிகிறது. இந்த நம்பிக்கைகள் ஒரு நிழல் போல் அவரைத் தொடர்ந்து இம்சிக்கிறது போலும்.

இந்தக் கட்டுரையில் கடைசியாக வருவது சி.முருகேஷ் பாபு எழுதிய எவர் பொருட்டு? என்கிற கதை. மதுரை ரயில் நிலையத்தில் கதை தொடங்குகிறது. செங்கோட்டை லோக்கல் புறப்பட அரை மணிநேரம் இருக்கிறது. டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் கதைசொல்லியிடம் முன்னால் நிற்கும் பாட்டையா பேச்சுக் கொடுக்கிறார். ஆச்சியை போனில் அழைத்து இன்னொரு சீட் பிடித்துக் கொள்ளச் சொல்கிறார்.  ‘எஸ்டேட்ல இல பறிக்கவோ மாரி முதுகுல மூட்டை சொம வெச்சிருக்கி’றவர் எப்படி நிற்க முடியும்? வண்டியில் ஏறியதும் ஆச்சியிடம், ‘சார்வாள் ரொம்ப ஒவ்வாரம்’ என்கிறார். நாம் ஒன்றுமே செய்யவில்லையே என்று இவருக்குக் குறுகுறுக்கிறது.

ஆனால் பாட்டையா ஆச்சியை வைது கொண்டே இருக்கிறார். சவத்து மூதி என்கிறார். கிழவி என்கிறார். ஒண்ணுக்குமத்தவள் என்கிறார். இந்த ஏச்செல்லாம் மேம்போக்கானது என்று விருதுநகரில் தெரியவரும். அங்கே பால் நன்றாக இருக்கும்.  இரண்டு கப் வாங்குகிறார். அவர் குடிக்க மாட்டார். ஆச்சிக்குத்தான்.  ‘இவ பசி தாங்க மாட்டா’ என்று கதைசொல்லியிடம் கிசுகிசுப்பாகச் சொல்கிறார்.

ஆச்சி வெள்ளந்தியான மனுஷி. பேரனைப் பற்றி வாஞ்சையோடு பேசுகிறாள். மகனைப் போனில் அழைத்து இரவுச் சாப்பாட்டிற்கு ‘ஒங்கப்பாவுக்கு மேலுகாலுக்கு இதமா மொளவு ரசம் ஒரு கை வைக்கச் சொல்லு’ என்கிறார்.  சங்கரன்கோவிலில் பாட்டையாவும் ஆச்சியும் இறங்க ஒத்தாசையாய் இருந்து வழியனுப்பி வைக்கிறார் கதைசொல்லி. ஆச்சிக்குச் சிரிப்பு அள்ளிக்கொண்டு வருகிறது.

வாசலை ஒட்டிய இருக்கைகளில் இளைஞர் கூட்டம் ஒன்று அமர்ந்து சீட்டாடுகிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர் எல்லோருக்கும் போளி வாங்கிக் கொடுக்கிறார். கதைசொல்லி வேண்டாம் என்கிறார். ‘இன்னிக்கு எனக்கு பர்த்டே’ என்று சொல்லி அவரையும் ஒரு போளி எடுத்துக் கொள்ள வைக்கிறார். அவருக்கு ஊர் சின்னாளப்பட்டி. இப்போது ஊரில் யாரும் தறி போடுவதில்லை என்கிறார். ‘ஆக்சுவலி உங்களுக்கு இன்னைக்கு பொறந்த நாள் இல்லைதானே’ என்கிற கேள்வியைச் சிரிப்பால் கடக்கிறார்.

ராஜபாளையத்தில் பரபரவென்று பெண்கள் கூட்டம் ஒன்று ஏறுகிறது. இடமில்லையே என்று ஒருத்தி ஆதங்கப்படுகிறாள். நாங்கள் சங்கரன்கோவிலில் இறங்கி விடுவோம் என்கிறார் பாட்டையா. பெண்களும் சமாதானமாகிறார்கள். இடம் கிடைத்ததும் ராஜபாளையத்தில் வாங்கிய சேலையைப் பரப்பிப் பார்க்கிறாள் அவர்களில் ஒரு பெண். அப்போது யாசகம் கேட்டு வருகிறாள் ஒரு திருநங்கை. எல்லோரும் காசு கொடுக்கிறார்கள். இடுப்பில் சொருகிக் கொள்கிறாள் திருநங்கை. பதைத்துப் போகிறாள் சேலை வாங்கிய பெண். ‘வம்பாடு பட்டுச் சம்பாதிக்க…வச்சுச் செல்வழிக்க வேண்டாம்’ என்று கேட்டவள், சேலைக் கடைக்காரன் கொடுத்த பர்ஸை திருநங்கைக்குக் கொடுக்கிறாள். நெகிழ்ந்து போன திருநங்கை பர்ஸுக்கு ஒரு முத்தம் கொடுக்கிறாள். பர்ஸ் கொடுத்தவளையும் கன்னம் கிள்ளி முத்துகிறாள். ஓசி பர்ஸ் என்று கிண்டலடித்த இன்னொரு பெண்ணைக் கடிந்து கொள்கிறாள்.

ரயில் தென்காசியை அடைகிறது.

கதை எளிய மனிதர்களைப் பற்றியது. எளிமையாகவும் நேராகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அலங்காரங்களும் சோடனைகளும் இல்லாமல் பாஸஞ்சர் ரயில் போலவே நிதானமாகப் பயணப்படுகிறது. எனில், நிர்ணயித்த இலக்கை நோக்கி சீராக முன்னேறுகிறது

கதையின் தலைப்பு ‘எவர் பொருட்டு?’ என்பது. அது சுட்டுவது ஒரு திருக்குறளை.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை

இந்தக் குறள் கதைக்குள் இல்லை. குறளுக்கான வியாக்கியானமும் இல்லை. ஆனால் ஒரு குறிப்பு இருக்கிறது. வெக்கை தாளாமல் வியர்த்துக் கொட்டும் மதுரை ரயில் நிலையத்தில் தொடங்கும் கதை, தென்காசியில் ரயில் நிற்கும்போது இறங்க வழியில்லாமல் கொட்டுகிற மழையோடு முடிகிறது. வெக்கை மழையாக மாறுவது கதை மாந்தர்களால். இதில் எவர் பொருட்டுக் கொட்டுகிறது தென்காசி மழை? பாட்டையாவின் பொருட்டா? ஆச்சியின் பொருட்டா? சின்னாளப்பட்டிக்காரரின் பொருட்டா? பர்ஸைப் பரிசளித்த பெண்ணின் பொருட்டா? திருநங்கையின் பொருட்டா? யார் பொருட்டாகவும் இருக்கலாம். எல்லார் பொருட்டும் ஆகலாம். இந்த இடத்தில் எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கான விடையை நான் கண்டுபிடிக்கும்போது கதாசிரியர் ஓர் அடி முன்னே போயிருந்தார்.

கேள்வி இதுதான்: ஒரு ஊரில் அல்லது ஒரு ரயில் பயணத்தில் எல்லோரும் நல்லவராக எப்படி இருக்க முடியும்? அப்படி இருக்க முடியும் என்று வள்ளுவரே நம்பவில்லை. நல்லார் ஒருவர் இருந்தால் போதும், மழை பெய்யும் என்கிறார்.  மனித மனங்கள் நன்மையும் தின்மையும் கலந்தது. நன்மை நாளும் பெருகவும் தின்மை சிதைந்து தேயவும் வேண்டும் என்பதுதான் கம்பரின் விருப்பம். தருமம் வெல்ல வேண்டும் என்றுதான் பாரதியும் விரும்புகிறார். ஆனால் விருப்பம் போல் அமைந்து விடுவதில்லை வாழ்க்கை. இந்தக் கதை மாந்தர்களின் மனங்களிலும் நன்மையும் தின்மையும் கலந்துதான் இருக்கும். கதாசிரியர் முருகேஷ் பாபுவுக்கும் தின்மை தெரியாமலில்லை, ஆனால் நன்மை மட்டுமே தூக்கலாகத் தெரிகிறது. சக மனிதர்கள் மீது எல்லையற்ற நேசத்தைப் பொழிகிற மனம் அவருக்கு இருக்கிறது. இந்த மனத்துடன் செய்நேர்த்தி மிக்க கதையைப் பின்னும் லாவகமும் அவருக்கு வாய்த்திருக்கிறது. எனக்குத் தோன்றுகிறது. முருகேஷ் பாபுவின் பொருட்டுதான் தென்காசியில் மழை பெய்தது. சந்தேகமிருப்பவர்கள் பாட்டையாவிடம் கேட்டுப் பார்க்கவும். ‘முருகேஷ் பாபுவா… ரொம்ப ஒவ்வாரம்’ என்று சொல்வார். முருகேஷ் பாபுவின் எழுது கோலிலிருந்து இன்னும் இன்னும் மழை பெய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்.

2018-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சிறுகதைகளில், சி.முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு?’ என்கிற கதையே சிறந்த கதை என்று கருதுகிறேன்.

(மு. இராமனாதன் ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர். இணையதளம்: www.muramanathan.com; மின்னஞ்சல்: Mu.Ramanathan@gmail.com )

எவர் பொருட்டு?

இலக்கியச் சிந்தனை

2018ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்

வானதி பதிப்பகம் (2019)

விலை ரூ.125

Series Navigationமனப்பிராயம்மீட்சி
author

மு. இராமனாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *