என். ஸ்ரீதரன்
ரஞ்சனி சபாவில் பிரபல பாடகி நந்தனி ஹம்சத்வனி ராகத்தில் பாடிக் கொண்டிருக்கிறாள். அவளுடன் தக்ஷனா மூர்த்தி வயலினும் . சிவராமன் மிருதங்கமும் சேர்ந்திசைக்கக் கச்சேரி களை கட்டி விட்டது. தன் அபார குரல் வளம் மற்றும் ஆழமான இசை திறனால் நந்தினி ரசிகர்களை மெய் மறக்கச் செய்து கொண்டிருந்தாள்.
உட்கார்ந்திருந்தவர்களின் பக்கத்தில் அபிதா என்னும் எட்டு வயசு சிறுமி அவள் இனிய குரலால் வெகுவாக ஈர்க்கப்பட்டு அம்மாவின் பிடியிலிருந்து தன் கையை இழுத்துக் கொண்டு பாடகி அமர்ந்திருக்கும் மேடைக்குப் பறக்க துடித்துக்கொண்டிருந்தாள். அப்போது அங்கு நுழைந்த வைரத்தோடு பளபளக்கும் மாமியை நிர்மலா வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் அபிதா அம்மாவின் கையிலிருந்து கையை விடுவித்துக் கொண்டு மேடைக்கருகில் ஓடிச் சென்று விட்டு மீண்டும் தன் அம்மாவிடம் திரும்பி வந்து விட்டாள். . நந்தினி அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் பாடிக் கொண்டிருந்தாள்.
அபிதா ஒரு சிறப்புக் குழந்தை.. நாம் பேசுவதை மெதுவாகப் புரிந்தது கொள்வாள்.. மெதுவாக பேசுவாள்.. சிறுவயதிலிருந்தே சங்கீதத்தில் மிகவும் ஈடுபாடு உள்ளவள். எல்லாம் கேள்வி ஞானம்தான். எதிர் வீட்டிலிருக்கும் பத்து வயசு ஸ்ருதி பாட்டு கற்று கொள்ளும்போது . இவளும் ஓரமாய் நின்று உற்றுக் கவனிப்பாள், டீவியில் சங்கீத நிகழ்ச்சி வந்தால் விரும்பிக் கேட்பாள். சில சமயம் வீட்டில் ஆனந்த பைரவி ராகத்தில் ஒரு பாட்டை மூக்கால் ஒலி எழுப்பிக் கொண்டிருப்பாள்.. அவள் அம்மாவோ அதை ரசிக்காமல் ”சனியனே ஏன் கத்தறே” என்று திட்டுவாள்.
நேற்று வீட்டுக்கு வந்திருந்த நிர்மலாவின் அண்ணா இரண்டு சபா டிக்கட்டைக் கொடுத்து ரஞ்சனி சபாவில் பிரபல கர்நாடக இசைப் பாடகி நந்தனியின் கச்சேரி நாளைக்கு நடக்க இருக்கிறது. அபிதாவுக்குச் சங்கீதம் கேட்க ரொம்ப பிடிக்குமே. . நீ அவளை அழைச்சிண்டு போ. அவளுக்கு ஒரு மாறுதலாக இருக்கும். நீயும் நந்தனியின் கச்சேரியை ரசித்து விட்டு வரலாம் என்றான்.
“ரொம்ப தேங்ஸ் அண்ணா”
கச்சேரி முடிகிறவரை அபிதாவைச் சமாளிப்பது சுலபமல்ல என்று நிர்மலாவுக்குத் தோன்றியது.. நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டு இருப்பது போன்ற நிலைமையில் அவள் இருந்தாள். .
”ப்ரோசேவாரெவரே ரகுபதே” என்னும் தியாகய்யரின் கீர்த்தனையை ஸ்ரீரஞ்சனி ராகத்தில் நந்தனி பாடிக் கொண்டிருந்தாள்.. கற்பனையும் ஜீவனும் ததும்பி நிற்கும் உயர்ந்த ரகமான சங்கீதம் அவளுடையது.
பின்பு அருணாசல கவிராயரின், ”காணவேண்டும் லட்சம் கண்கள் சீதா தேவியை” என்கிற பாடலில் சுருட்டி ஆலாபனையால் ரசிகர்களை உருக்கி விட்டாள். அவரது சங்கீதம. இனிமையினும் இனிமை,.
அவள் பாடிய சங்கீதத்தின் இனிமை ஒரு புறமிருக்க அவள் பாடிய கிருதியின் அர்த்த பாவத்தை நன்றாக விளக்கி அவள் பாடிய இனிமை எல்லாரையும் பரவசமடையச் செய்து விட்டது.
இரண்டு தியாகராஜர் கீர்த்தனைகளைப் பாடிவிட்டு நிறைவாக மகா கவி பாரதியாரின், ”வீணையடி நீ எனக்கு” என்னும் பாடலைப் பாடினாள்.
கச்சேரி முடிந்து கூட்டம் கலைய ஆரம்பித்தது. அபிதா பாடகியை நோக்கி ஓடினாள்.. அபிதா, அபிதா…… என்று அவள் பின்னால் நிர்மலா ஓடினாள்.
நந்தனியின் அருகில் சென்ற அபிதா அவளைப் பார்த்து, ”நீங்கள் ஸ்வரம் நன்றாகப் பாடீனீர்கள்” என்றாள்.. அவள் அந்தச் சிறுமியைப் பார்த்து உனக்குச் சங்கீதம் தெரியுமா?” என்று வினவினாள்.
”தப்பா எடுத்துக்காதீங்க. அவள் ஆட்டிசம் பாதித்த குழந்தை . நினைப்பதை, உணர்வதை அப்படியே சொல்லி விடுவாள்” என்றாள் நிர்மலா தர்ம சங்கடத்துடன்.
”பரவாயில்லம்மா . சின்ன பெண் அதுவும் சிறப்புக் குழந்தை… சங்கீதத்தில் இவ்வளவு ஈடுபாட்டுடன் இருப்பதே பெரிய விஷயம்” என்றாள் நந்தனி.
அன்று இரவு அவள் தன் கச்சேரி ரிகாரிடிங்கை கேட்டாள். தான் ஸ்வரம் நன்றாக பாடியிருப்பதைக் கவனித்தாள். அவள் அந்தச் சிறுமியை நினைத்துப் பார்த்தாள். ”எல்லாரும் நல்லா பாடினே என்பார்கள். இந்தச் சிறுமி ஒரு படி மேலே போய், “ நீங்க ஸ்வரம் நல்லா பாடினீங்க” என்கிறாள். இந்தச் சிறுமிக்குச் சங்கீதத்தில் நல்ல ஞானம் இருக்கிறது என்று எண்ணினாள்.
அவள் நினைவு பின்னோக்கிச் சென்றது. நந்தனி மூன்று வயதுக் குழந்தையாய் இருக்கும்போதே அப்பா பாடுவதை பார்த்து தானும் பாடத் தொடங்கினாள். நந்தனி எப்போதும் . ஏதோ ராகத்தை வாயால் முணுமுணுத்தவாறே இருப்பாள். . அதைப் பார்த்து மகிழ்ந்த அவள் தந்தை அவளுக்குச் சங்கீதம் கற்றுக் கொடுக்க பிரபல கர்நாடக பாடகி மீனாட்சியிடம் ஏற்பாடு பண்ணினார். நந்தனிக்கு மீன் குட்டி தண்ணீரில் நீந்துவது போல் இசை சுளுவாக வந்தது. அதோடு அவளுக்கு ஞாபக சக்தி அதிகம். ஒரு தடவை ஒரு பாட்டைக் கேட்டால் அப்படியே அதை பாடும் திறன் கொண்டிருந்தாள். சரளி வரிசை, ஜண்டை வரிசை எல்லாம் முறையாக படிப்படியாக அவள் வளர்ச்சிபோல் விறுவிறுவென்று வளர்ந்தது. எத்தனை சூட்சுமமாக எத்தனை சுருக்கமாகப் பிடித்துக்கொள்கிறாள்? இசைக்கலை அவளிடம் எங்கோ ஒளிந்திருந்து வெளிவருவதுபோல வந்து பிரவாகமாகப் பெருக்கெடுத்தது. குரல் வளம் வேறு அதற்கு மெருகு ஊட்டியது. ஆலாபனையில் பெரியவர்களையும் மிஞ்சினாள். அவளின் இசை திறமையை பார்த்து வியந்த மீனாட்சி அவளை சீனியர்களுடன் அமர வைத்து பாட்டு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்.
பள்ளியில் பாட்டுப் பாடி பல பரிசுகளை வாங்கியிருக்கிறாள். அது மட்டுமா, பல் பாட்டுப் போட்டிகளில் கலந்து பரிசுகளை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறாள். அவளைப் பார்த்து யார் இந்தப் பெண்? இவ்வளவு நல்லா பாடறாளே. அவளுடைய குரு யார்? என்று கேட்டு இசை ஆசிரியர் மீனாட்சிக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தனர். சின்ன வயதிலேயே கோவிலில் கச்சேரி செய்வாள். தமிழ் இசைக் கல்லூரியில் பிஏ இசை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பின்பு எம்.ஏ இசை தேர்ச்சி பெற்றவள்.
ரேடியோவில் அடிக்கடி பாடுவாள்.. அவள் பெயர் மக்கள் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்தது.அவள் கணவர் ராஜன் நன்றாக வீணை வாசிப்பார். இந்தியன் வங்கியில் அதிகாரியாக வேலை பார்க்கிறார். பையன் சந்தோஷ் அமெரிக்காவில் எம்.எஸ் படித்துக் கொண்டிருக்கிறான்.
நந்தனி இசைக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்டவள். அவள் கணவரும் அவளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருந்தார். அவள் கச்சேரி என்று செய்தித்தாளில் பார்த்து அவள் பாட்டை ரசிக்க கூட்டமும் சேருவதுண்டு. இசையைக் கற்றுக் கொடுக்க ஒரு இசை பயிற்சி பள்ளியை அவள் வீட்டுக்கு அருகாமையில் கோடம்பாக்கத்தில் நடத்திக் கொண்டிருக்கிறாள். அவளது குரு மீனாட்சி அந்த இசைப் பயிற்சி பள்ளியைத் திறந்து வைத்தார்.
அவளால் அந்தச் சிறுமியை மறந்து விட முடியவில்லை. நினைக்க நினைக்க நெஞ்சம் மகிழ்ந்தது. தன் குரு மீனாட்சியிடம் போனில், தொடர்பு கொண்டு, ” டீச்சர், இன்று கச்சேரியில் ஒரு அதிசயம் நடந்தது தெரியுமா? ஒரு சின்ன பெண் எட்டு வயசு குழந்தை நான் ஸ்வரம் நல்லா பாடறேன்னு பாராட்டினாள்” என்றாள்.
” சபாஷ், நந்தனி, ஆச்சரியமா இருக்கே என்ன நடந்ததுன்னு சொல்லு?”
”கச்சேரி என் மனதுக்கு திருப்தியாய் நல்லா நடந்தது. நான் ஸ்வரம் நல்லா பாடினேன் என்று ஒரு சிறப்புக் குழந்தை என் கிட்டே வந்து சொன்னாள். அவளுக்கு ஆட்டிசம் என்று அவள் அம்மா சொன்னாள். அவள் பாராட்டினது . எனக்குப் பெரிய பரிசு கிடைச்ச மாதிரி இருக்கு..
. நீ எப்பவும் நல்லா பாடுவே.. அதனாலேதான்’’’.”
நான் நேரிலே வந்து உங்களைப் பார்க்கிறேன் டீச்சர்.”
நீ எப்ப வேண்டுமானாலும் வரலாம் நந்தனி.
இந்த நிகழ்விற்குப் பின் பல இரவுகள் அவளால் தூங்க முடியவில்லை. அந்தச் சிறுமியையே நினைத்துக் கொண்டிருந்தாள். நந்தனி சபாவில் கச்சேரி செய்யப் போகும்போது முன்பு பார்த்த அந்தச் சிறுமி எங்காவது இருக்கிறாளா என்று அவள் கண்கள் தேடும். ஆனால் அவளைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆடிசம் என்றால் என்ன? அவர்கள் கற்றல் குறைபாடு உடையவர்கள் அல்ல. வித்தியாசமான மனோபாவம் கொண்டவர்கள் என்று பொதுவாக அவளுக்குத் தெரியும், அந்தச் சம்பவம் நடந்த பிறகு ஆடிசம் பற்று தீர விசாரித்து அறிந்து கொண்டாள்.. அதுவரை ஆடிசம் பற்றியே முழுவதும் தெரியாமல் தான் உண்டு தன் சங்கீதம் உண்டு என்று இருந்த நந்தனி அக்கம் பக்கத்திலிருந்த ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்ட சிறுவர்களைக் கவனித்தாள். அவள் சந்தித்த ஆட்டிசம் பாதித்த நான்கு வயதுக் குழந்தை நீலாம்பரி ராகத்தை அற்புதமாகப் பாடியது. அவர்களுக்காக நடத்தப் படும் பள்ளிக்கூடத்துக்கும் சென்று அந்தச் சிறுவர்களுக்காகப் பாட்டுப் பாடி அவர்களை மகிழச் செய்தாள். அப்போது அவள் மனத்தில் ஒரு யோசனை தோன்றியது. உடனே குருவிடம் சொன்னாள்.
”டீச்சர் கடவுள் எனக்கு. நல்ல சரீரத்தையும் சாரீரத்தையும் கொடுத்திருக்கான். ஏதோ மேடையில் கச்சேரி செய்யறோம், நாலு பேருக்குக் கற்றுக் கொடுக்கிறோம் என்று பொழுதைப் போக்காமல், பணம் ஒன்றே குறியாக இல்லாமல் சமூகத்துக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்யலாம் என்று பார்க்கிறேன். நம் இசைப் பள்ளியிலே வாரத்துக்கு ஒரு நாள் ஒவ்வொரு வியாழக்கிழமை சாயங்காலம் ஐந்து மணியிலிருந்து ஆறு மணி வரை ஆட்டிசம் சிறுவர்களுக்கு இலவசமாகப் பாட்டு கற்றுக் கொடுக்க தீர்மானம் செய்திருக்கிறேன். என்னுடைய இந்த முடிவுக்கு அபிதாதான் காரணம். . நீங்க என்ன சொல்றீங்க டீச்சர் என்றாள்
” நல்லது. ரொம்ப நல்ல யோசனை. என்னாலே கூட பண்ண முடியலே. நீ செய்யும் சமூகத் தொண்டு உனக்குப் புண்ணியத்தைச் சேர்க்கும். அந்த மாதிரி குழந்தைகளுக்கும் இசையைக் கற்றுக் கொள்ள ஆசை இருக்குமே.” நந்தனி தான் நினைத்தப்படியே தன் இசைப்பள்ளீயில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை சிறப்பு குழந்தைகளுக்கான இசை வகுப்பைத் தொடங்கினாள். சிறுவர்களும், சிறுமிகளும் மொத்தம் இருபது பேர்கள் சேர்ந்து விட்டனர். கர்நாடக இசை, ஆட்டிசம் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முதன் முறையாக இசையைக் கேட்கும் குழந்தையும் வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்க முடியாத குழந்தைகளும், ராகம், ஆலாபனை, ஸ்வர சப்தத்தின் வழியே சரியாக வெளிப்படுத்துகின்றனர் என்பது நந்தனிக்குப் புரிந்தது. ஒரு விஷயத்தை, பல முறை இவர்களுக்கு கற்றுத் தர வேண்டியிருக்கும். கற்ற பின், அவர்கள் வெளிப்படுத்தும் போது, நாம் சொல்லிக்கொடுத்ததைக் காட்டிலும் பல மடங்கு அழகாக அவர்கள் கற்பனையையும் சேர்த்து வெளிப் படுத்துவர். இசையின் மூலம் ஆடிசம் குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு அதன் பெற்றோர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தனர்.
ஒருநாள் நந்தினி மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றாள். இறைவனை வணங்கி ”தோடுடைய செவியன்… … என்னும் சம்பந்தர் தேவார பாட்டை கம்பீர நாட்டை ராகத்தில் மனமுருக பாடினாள். பிறகு பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டு வரும்போது நிர்மலாவையும் அபிதாவையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தாள்..
நீங்கள் இங்கேதான் இருக்கீங்களா? என்றாள் நிர்மலாவைப் பார்த்து.
” கோவிலுக்குப் பக்கத்தில்தான் குடி இருக்கிறோம்” என்றாள் நிர்மலா.
”நானே அபிதாவைத் தேடிக்கொண்டிருந்தேன். என்னுடைய இசைப் பள்ளி மாம்பலத்தில் இருக்கிறது. அங்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு ஆடிசம் குழந்தைகளுக்கு இலவசமாக சங்கீதம் பயிற்சி அளிக்கிறோம். அபிதாவையும் அதில் சேர்த்து விடுங்களேன். அவள் சந்தோஷப்படுவாள்.
இதைக் கேட்டு நிர்மலா பெருமூச்சு விட்டாள்.
என் குடும்பத்தில் துன்பங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. என் . கணவருக்கு முதலில் வேலை போனது. அப்புறம் ரொம்ப கஷ்டப் பட்டு ஒரு வேலை கிடைத்தது. நல்ல காலம் பிறந்து விட்டது என்று நினைத்தோம். மகிழ்ச்சி ரொம்ப காலம் நிலைக்கவில்லை. அவருக்கு திடீரென்று மாரடைப்பால் காலமானார்.
”அவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததால் அவருக்கு பென்சன் கிடையாது. இருப்பதோ வாடகை வீடு. அவ்வளவு வாடகை கொடுக்க முடியாது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது நான் ஒரு நாள் மயக்கம் போட்டு விழுந்தேன். டாக்டரிடம் போய் காண்பித்ததில் எனக்கு பிபி இருக்கிறது என்று சொன்னார். அதற்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.. .
நாம் என்னம்மா செய்வது? என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவிக்கிறேன். அவளை இசைப் பள்ளிக்கு அனுப்புவது என்பது என்னால் முடியாது “என்றாள்.
அவள் பதில் நந்தினிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.
”நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்று பார்க்கிறேன்” என்றாள் நந்தினி.
இரண்டு வாரம் கழித்து ஒரு நாள் மாலை நந்தினி தன் வீட்டுக்கு வந்திருந்த தன் தம்பி பெண்கள் வர்ஷணி, தர்ஷணி இருவருடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்தாள். அவர்கள் இரட்டை குழந்தைகள். ஏழு வயசுதான் ஆகிறது. திருநெல்வேலியிருந்து அவர்கள் மாமி வீட்டில் தங்கியிருந்து படிப்பும் சங்கீதமும் கற்றுக் கொள்ளலாம் என்று வந்திருக்கிறார்கள். இசையில் மிகவும் ஆர்வம் உள்ளவர்கள். நந்தினிக்கும் அவள் அதில் பூரண சம்மதம்.
”மாமி, பலூன் வாங்கிக் கொடு” என்று வர்ஷணி கேட்டாள். நந்தினி அவர்களுக்கு பலூன் வாங்கிக் கொடுத்தாள். இரண்டு குழந்தைகளும் பலூனுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது அழுக்கு பாவாடை அணிந்த ஒரு சிறுமி வாராத தலையுடன், கையில் தட்டுடன் வந்தாள். . கூடவே தலையில் முக்காடு இட்டு ஒரு நடுத்தர பெண்மணி. முகம் சரியாகத் தெரியல.
அவள் அந்தச் சிறுமியின் முதுகில் ஓங்கி ஒரு அறை அறைந்து, ”நாயே பிச்சை எடுடி, பராக்கு பார்த்துண்டு நிக்காதே என்று அதட்ட அந்தச் சிறுமி தட்டை நீட்டி பிச்சை கேட்டாள். . நந்தினி திகைப்புடன் அந்தச் சிறுமியை உற்றுப் பார்த்துவிட்டு, ”அபிதா நீயா?” என்று கூவினாள். தலையில் முக்காடு போட்டிருந்த பெண்மணி வேறு யாருமில்லை.. நிர்மலாதான்.
”ஏம்மா இது உங்களுக்கே நல்லா இருக்கா. சின்னப் பெண்ணை அதுவும் சிறப்புக் குழந்தையை பிச்சை எடுக்க வைக்கிறீங்களே” என்றவாறு அபிதாவை நோக்கினாள்.
”என்னுடைய கஷ்டம் எனக்குத்தான் தெரியும். சொல்லறவங்களுக்கு என்ன எது வேண்டுமானாலும் சொல்லலாம்.
நந்தினிக்கு அதிர்ச்சியாய் இருந்தது. எந்தத் தாயாவது தன் சிறப்புக் குழந்தையைப் பிச்சை எடுக்க அனுப்புவாளா? என்று கோபப்பட்டாள். அப்போது அவளுக்கு முன்பு செய்தித்தாளில் ஒரு இளம் பெண்மணி தான் பெற்ற குழந்தைகளை கொன்று விட்டு சிறைச்சாலைக்குப் போனது பற்றிப் படித்தது ஞாபகம் வந்தது. கலி காலத்தில் எதுவும் நடக்குமென்று எண்ணினாள்.
”ஆமாம் உங்களுக்குக் கால், கை எல்லாம் நல்லாதானே இருக்கு. நீங்க வேலை செய்து இவளைக் காப்பாற்றலாமே. அப்படி செய்யாமல் இப்படி பிச்சை எடுக்கறீங்களே. உங்க மனசு என்ன கல்லா, இல்லை இரும்பா? மனிதாபிமானம் இல்லாமல் ஒரு தாயே இப்படிச் செய்வாளா? என் மனது துடிக்கிறது” என்றாள் நந்தினி.
”எல்லாம் வறுமைதான் காரணம். வேலைக்குப் போனால் இவளைப் பார்த்துக் கொள்ளமுடியாது. இவளைப் பார்த்துக் கொண்டால் வேலைக்குப் போக முடியாது. நான் என்ன செய்வது?”
”நீங்க என்ன சொன்னாலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். ஒரு தாயாரின் கடைமையைச் செய்ய தவறி விட்டீர்கள். பாவி நீ நல்ல இருப்பியா?”
”ஆமாம் இவ்வளவு பேசறீங்களே. நீங்கள் அவளை வளர்க்கத் தயாரா?”
நந்தினிக்குத் தூக்கி வாரிப் போட்டது. ”அவளை வளர்க்கத் தயாரா என்றுதானே கேட்டீங்க. நிர்மலா இன்னொரு தடவை சொல்லுங்க.” என்றாள் திகைப்புடன்.
”அபிதாவை என்னாலே வளர்க்க முடியவில்லை. அதற்கான வசதிகளும் இல்லை. நீங்க ஏன் அவளை வளர்க்கக்கூடாதுன்னு கேட்டேன். அவளுக்கு சங்கீதம் மிகவும் பிடிக்கும். உங்களிடமிருந்தால் சங்கீதமும் கற்றுக் கொள்ள வசதியாய் இருக்கும். .
”கரும்பு தின்ன யாராவது மாட்டேன் என்பார்களா? அபிதாவை வளர்ப்பதில் எனக்குப் பூரண சம்மதம். அவளுக்குத் தேவி சரஸ்வதியின் ஆசி இருக்கிறது. சங்கீதம் அவள் இரத்தத்திலேயே ஊறி இருக்கிறது. வர்ஷணியும் தர்ஷணியும் என்னிடம் வளரப் போகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து இவளும் வளரட்டும். அவளை நன்றாகக் கவனித்து சங்கீதம் சொல்லித்தருவேன்.”
அபிதாவின் கையை பிடித்து நந்தினியின் கைமேல் வைத்து இவளை உங்களுக்குத் தத்து கொடுக்கிறேன். இவளை ஜாக்கிரதையாய் பார்த்துக் கொள்ளுங்கள் என்றாள்.
அபிதாவை கட்டி அனைத்துக் கொண்ட நந்தினி, ”நீ எங்க வீட்டுக்கு வருகிறாயா? என் கூட இருக்கியா? இவர்களும் உன் கூட இருப்பார்கள்” என்று வர்ஷணியையும் தர்ஷணியையும் காண்பித்தாள்.
அபிதா வார்த்தையால் பதில் சொல்லவில்லை. நந்தினியின் மணிக்கட்டை இறுக்கப் பிடித்து தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். அதுதான் அவள் மொழி.
நந்தினியின் கையில் அடித்து “தாய் என்னும் உரிமையை எப்போதும் கோர மாட்டேன். இது சத்தியம்.என்றாள் நிர்மலா.
”என்னுடைய இசைப் பயிற்சி பள்ளியில் உங்களுக்கு ஒரு வேலை போட்டுத் தருகிறேன். நீங்கள் எங்கும் போக வேண்டாம்” என்றாள் நந்தினி கனிவுடன்.
”நான் இங்கே இருந்ததால் உங்களுக்கு இடைஞ்சலாய் இருக்கும்.. நான் கும்பகோணம் போகிறேன். நான் மாத்திரம் தனியாக வந்தால் எனக்குச் வீட்டோட சமையல்காரி வேலை கொடுக்கிறதா ஒரு அம்மா வாக்கு கொடுத்திருக்கிங்காங்க.. இரு கையையும் கூப்பி, நீங்க தெய்வம். நான் வருகிறேன். அபிதாவை நன்கு பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு மனநிம்மதியுடன் நடந்தாள் நிர்மலா.
அபிதா தன் பிஞ்சு கரங்களை நீட்டி நந்தினியின் அருகே வந்தாள். அவளை நந்தினி மகிழ்ச்சியுடன் இறுகக் கட்டிக் கொண்டாள். இறைவா உனக்கு நன்றி இந்தச் சிறுமியை வளர்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. என் அன்பை பொழிந்து தாயினும் சாலப் பரிந்து இவளை வளர்க்கப் போகிறேன்” என்று முணுமுணுத்தாள்.
** நிறைவு ***
என். ஸ்ரீதரன்