முடிச்சுகள்

This entry is part 2 of 11 in the series 8 செப்டம்பர் 2019

தாலிக்கு ஏன் மூன்று முடிச்சாம்? தத்துவார்த்த ரீதியாக எவ்வளவோ சொல்லப்பட்டாலும் அந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்டேன். ‘மூணு முடுச்சு போடலேனா அறுத்துக்கிட்டு ஓடீருவாங்கெ ஓடீருவாளுக தம்பி’. அருண் பவானி திருமணம் நடந்தபோது அது உண்மை என்றுதான் தோன்றியது.

அந்த ராஜேந்திரபுரம் கிராமத்தில் கிட்டத்தட்ட பாதிக் கிராமம் அருணின் குடும்பச் சொத்து. 5 அண்ணன்மார்கள் , அண்ணிகள் 3 அக்காள் குடும்பம், அப்பா வழி தாத்தா பாட்டி, அம்மா வழிப் பாட்டி,  25 பொடுசுகள், பண்ணையாட்கள், பாத்திரம் கழுவ, பால் கறக்க, ஆடுமாடு கோழிகளைக் கவனிக்க, துணி துவைக்க, அவ்வப்போது சாப்பாட்டுக்காக வரும் தூரத்து உறவுப் பெருசுகள் என்று அந்தப் பள்ளிக்கூடமே…மன்னிக்கவும் அந்த வீடே பள்ளிக்கூடம் மாதிரி இருக்கும். அருண் வித்தியாசமானவன். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே ஞானசம்பந்தன் சாரிடம் அவன் கேட்டான். ‘எல்லாச் சிட்டுக்குருவிகளும் ஒரே மாதிரிதான் இருக்கு. எல்லா மனிதனும் ஏன்சார் வேறுவேறு மாதிரி இருக்கான்?’ ஞானசம்பந்தம் சொன்னார். ‘சிட்டுக்குருவிகள் இறைவனின் படைப்பு. ஒரே மாதிரி உருவாக்கப்பட்டது. மனிதன் இறைவனின் பிரதிநிதி, மனிதன் அவனைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். அதுதான் இத்தனை கோளாறு.’ எல்லாவற்றையும் ஆழமாகப் பார்ப்பான் அருண். அதிகம் பேசமாட்டான். மனோதத்துவம் படித்துவிட்டு தஞ்சாவூரில் இருக்கும் மனோவியல் நிபுணர் குற்றாலிங்கத்திடம் இரண்டு ஆண்டுகள் இருந்துவிட்டு பிறகு குற்றாலிங்கத்தின் சிபாரிசில் கோலாலம்பூரில் டாக்டர் அவினாசியின் மனநல மருத்துவமனைக்குச் சென்றுவிட்டான். திருமணத்திற்காக இப்போது கோலாலம்பூரில் இருந்து வந்திருக்கிறான். பவானியை அவனுக்குப் பரிந்துரை செய்ததே குற்றாலிங்கம்தான்.

பவானி ஒரு சரித்திரம் படித்த பட்டதாரி. தன் உறவுகளையும் ஊர் பேராவூரணியையும்  உதறிவிட்டு எங்காவது ஓடிவிடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். உடனே மலேசியாவுக்குப் போய்விடலாம் என்பதால் அவள் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாள். பவானி பிறந்ததுமுதல் குற்றாலிங்கம் அறிவார். பவானியின் அப்பாவுக்கு பினாங்கில் மளிகைக்கடை. அம்மாவுக்கு ததும்பி வழியும் வங்கி இருப்பு. வீட்டில் யாரையும் நெருங்கவிடாத சுபாவம். இவர்களுக்குத்தான் திருமணம்.

திருமணம் முடிந்தது. அந்த இரவு சாப்பாட்டு மேசையில் இட்லி, தோசை, இடியப்பம், சப்பாத்தி, சேமியா, ஏழெட்டு சட்னி வகை, குருமாக்கள், கறி, கோழி பிரட்டல்கள், தாளிச்சா, பழரசங்கள், பால், காப்பி, டீ அப்பப்பா! மேசையே நிரம்பி வழிந்தது. அருணின் அம்மா பொன்னுத்தாயி வந்தார். அருணின் உச்சந்தலையில் இரு கைகளையும் விரித்து ஏதோ முனுமுனுத்தபடி தன் இரு கைகளையும் அருணின் கைகள் வழி இறக்கி கன்னங்களில் சொடுக்கிக் கொண்டார் பத்து விரல்களும் சடசடத்தன. ‘எம் புள்ளக்கி எவ்வளவு திஷ்டி’ என்றபடி பவானியை நெருங்கினார். பவானி விலகினாள்.  அவளுக்கு அது பிடிக்கவில்லையோ? பொன்னாத்தாவும் பின்வாங்கிவிட்டார். அருணின் மாமன் மகள் மைதிலி ‘ டேய் அருண். இங்க பார். உன் ரூம்சாவி எங்கிட்டதான். சாப்பிட்டுட்டு வந்து வாங்கிக்க’ ஒற்றைக்கண்ணை சிமிட்டினாள். அருண் எழுந்தான்.  பட்டுவேட்டி சரசரக்க அவளை நெருங்கினான். கேட்டான். அவள் கைகளை பின்னுக்கிழுத்தாள். அவன் பற்றி இழுத்தான். விரல்களைப் பிரித்தான். அவள் இறுக்கினாள். அண்ணிமார்கள் உதவிக்கு வந்தனர். தோற்றதாய் அவள் நடித்தாள். அருண் கைகளுக்கு சாவி வந்தது. அவன் அறைக்குச் சென்றான். சுவரோ படுக்கையோ தெரியாதபடி பூக்கள். மணம். மயக்கம். எல்லாம்.வெளியே ஒரு கூட்டம் வரும் சப்தம் கேட்கிறது. வெள்ளித்தட்டு பால், பழம் என்று ஒரு சினிமாக் காட்சிபோல் பவானி உள்ளே வருகிறாள். கதவு மூடப்படுகிறது. களுக் முளுக் என்று சிரிக்கும் சத்தம். ஒரு குரல் தெளிவாகக் கேட்கிறது. ‘டேய் அருண் கொஞ்ச நேரமாவது தூங்கு’ எல்லாரும் மீண்டும் சிரிக்க அந்த சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக தூரமாகிறது.

அருண் பவானியைப் பார்த்தான். தலை குனிந்திருந்த பவானி சடக்கென்று நிமிர்ந்தாள். அந்த படுக்கை விரிப்பை சரக்கென்று உருவினாள். உதறினாள். தூவப்பட்டிருந்த மல்லிகைப்பூக்கள் பறந்தன. மின்விசிறியில் அடிபட்டு துண்டுகளாய் விழுந்தன. சில இதழ்கள் பாலில் விழுந்தன.

‘சாவிய வச்சிட்டுருந்தாளே அவ யாரு?’

‘என் மாமன் மகள் மைதிலி. அவ எப்போதும் அப்புடித்தான்.’

‘ஒருத்தர ஒருத்தர் கட்டிக்கிட்டு, தொட்டுக்கிட்டு, தள்ளிக்கிட்டு, சே! எல்லாமேதான் நடந்திருக்குமே. ஒங்களுக்கு கல்யாணம் எதுக்கு?’

‘அடி சண்டாளி. கல்லைப் பிளக்குமடி உன் கத்திச் சொற்கள். ‘ அவன் மனசுக்குள்தான் சொல்லிக் கொண்டான். குற்றாலிங்கம் சொல்லியிருந்தார். பவானிக்கு நீ கணவன் மட்டுமல்ல. கண்களே நீதான்.’ அருணுக்குப் புரிந்தது. பவானி ஒரு மனநோயாளி. ஒரு வார்த்தை அவன் பேசவில்லை. அவள் தரையில் படுத்துக் கொண்டாள். அதுதான் அவனின் முதல் இரவு.

அதிகாலை அவன் பொன்னுத்தாயிடம் வந்தான். ‘என்னெப் பெத்த ராசா வாய்யா’ பொன்னுத்தாயின் கைகளால் முகம் பொத்தி அழுதான். சொன்னான். ‘பவானிக்கு கூட்டம் பிடிக்கல. என்னோடு எல்லாரும் சகஜமாப் பேசுறது புடிக்கல. எல்லாரையும் அவங்க அவங்க ஊருக்குப் போகச் சொல்லுங்க. நா சொன்னதா அண்ணிகளையும் அனுப்பிடுங்க. அண்ணன்கள் பவானி கண்ணில் படவேண்டாம்.’ எல்லாரும் கிளம்பிவிட்டார்கள். தீபாவளி முடிந்த கடைத்தெரு மாதிரி வீடு வெறிச்சோடிப்போனது. அதைத்தானே பவானி விரும்புகிறாள். பத்து நாட்கள் எப்படியாவது ஓட்டியாக வேண்டும். 40 பேருக்கு வேகும் அடுப்படி  10 பேருக்கு சமைத்துக் கொண்டிருந்தது.

கோலாலம்பூர் வந்துவிட்டார்கள். பிரிக் ஃபீல்டில் ஒரு காண்டோவில் அருணின் வீடு. வீட்டை சுத்தம் செய்யும் கலா வாரத்துக்கு மூன்று நாட்கள் வருவாள். வீட்டை மிகச் சுத்தமாக வைத்திருந்தாள். வீட்டுக்குள் நுழைகிறார்கள். ஏதோ ஒரு புரிந்துணர்வு. விநாடிகள், நிமிடங்களாகி, மணிகளாகி, நாட்களாகி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

அன்று கலா கதவைத் தட்டினாள். பவானி திறந்தாள். அவள் ஏதோ சொன்னாள். கொஞ்சம் வெட்கப்பட்டாள். பவானி மௌனம் காத்தாள். விடுவிடுவென்று வீட்டைப் பெருக்கினாள். பாத்திரங்கள் கழுவினாள். அருண் குளியலறைக்குப் போனான். நேரெதிராக கலா கூடத்துக்கு வருகிறாள். இவன் இடது பக்கம் விலக அவளும் அதே பக்கம் விலக, அவன் வலப்பக்கம் மாற அவளும் மாற, குளுக்கென்று சிரித்துவிட்டு கூடத்துக்கு வந்தாள். அந்தக் காட்சியை பவானி கண்ணாடியில் கவனிக்கிறாள். இவனுக்கு எதற்கு இப்படி ஒரு வேலைக்காரி. அதுவும் பெண். ஏதோ இருக்கிறது? நாடி வேகமாகத் துடித்தது. கலா வேலை முடித்தாள், வாசற்படியைக் கடக்கப் போகிறாள். பவானி சொன்னாள் ‘இனிமே நீ வராதே.’

அன்று மாலை எதிர் வீட்டு சங்கர், சாவித்திரி, சாவித்திரி தோளில் தருண். இரண்டு வயது. புதுத் தம்பதிகளைப் பார்க்க வந்தார்கள். அவர்கள் ஆவல் ஆவலாகப் பேசினார்கள். அறிமுகப் படுத்திக்கொண்டார்கள். பவானி மௌனம் காத்தாள். அவர்கள் நெளிகிறார்கள். அருண் வார்த்தைகளை  விழுங்கினான். அவர்கள் விளங்கிக் கொண்டார்கள். தருண் அருணிடம் தாவினான். அருண் அள்ளிக் கொண்டான். அவனுக்கு அருணைப் பிடிக்கும். அதுவும் இரண்டு வாரத்துக்குப் பின் பார்க்கிறான். நிலமை சீராகவில்லை. விலகிவிட வேண்டியதுதான். சங்கரும் சாவித்திரியும் விடைபெறுகிறார்கள். சங்கர் தருணை கேட்கிறான். தருண் போவதுபோல் நடித்து அருண் தோளிலேயே சாய்ந்து கொள்கிறான். இப்போது சாவித்திரி. பார்த்துவிட்டு மீண்டும் அருணின் தோளிலேயே சாய்கிறான். ‘கூப்புர்றேன்ல. வா’ அதட்டினாள். வரவில்லை. அவள் வலுக்கட்டாயமாகப் பறித்தாள். அவள் விரல்கள் தன்னைத் தீண்டிவிடாதபடி அருண் ஜாக்கிரதையானான். அவர்கள் சென்றுவிட்டார்கள். இரண்டு வீட்டுக் கதவுகளும் மூடப்பட்டன. ‘ அருண், தருண். கருமம் . அவளுக்கென்ன வேறு பேரு கெடக்கலியா? அது என்ன அந்த ஆளு கூப்புர்றான், அவளும் கூப்புர்றா. அவனுக்கு ரெண்டு பேரையுமே புடிக்கல. உங்கள்ட ஒட்டிக்கிறான்.’ அருண் பேசவில்லை.  இருக்கலாம் நீங்க அவனுக்கு இன்னொரு அப்பா மாதிரி இல்லே.’  ‘அடி சண்டாளி. கல்லை பிளக்குமடி உன் கத்திச் சொற்கள். சே! சகிப்பது எவ்வளவு கொடுமை. பேண்ட் பாக்கெட்டில் கையைவிட்டு கையில் பட்ட சாவிக்கொத்தை வளைத்து அதில் கோபத்தை இறக்கினான்.  ‘அருண். நீ பவானிக்கு கணவன் மட்டுமல்ல. கண்களும் நீதான்.’ குற்றாலிங்கம் மீண்டும் அவனுக்குள் பேசினார். ‘அவள் பேசவில்லையே அவளுக்குள் இருக்கும் பிசாசு பேசுகிறது. அதை துரத்த வேண்டுமே. முடியுமா? என்ன செய்யலாம்? எந்த விபரீதமும் நடக்காமல் விரட்ட வேண்டும். முடியுமா? முடியும். தேற்றிக் கொண்டான். ஒவ்வொரு நாளும் அலுவலகத்திலிருந்து வீடு வரும்போது ‘பவானி வீட்டில் இல்லாவிட்டால்?…. கற்பனையிலேயே தன்னைக் கரைத்துக் கொண்டு நாடியை அசுரத்தனமாகத் துடிக்கவிட்டான்.

அன்று வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு. ‘நா கீழே வந்துட்டேன் தம்பி’ ஒரு பெண்குரல். ‘லிஃப்டுக்கு பக்கத்திலேயே நில்லுங்கம்மா. இப்ப வர்றேன்.’ வேகவேகமாக ஒரு காகித உரையை எடுத்துக் கொண்டு இதோ வெளியேறப் போகிறான். ‘ஒரு பேஸண்ட். காலைல வந்தாங்க. அப்ப மெடிசின் இல்ல. மத்தியானந்தான் வந்துச்சு. சாயந்தரம் வீட்டுக்கு வந்து வாங்கிக்கங்கன்னு சொன்னேன். அதான் வந்திருக்காங்க. கொடுத்துட்டு வர்றேன்.’ விடுவிடுவென்று வெளியேறி லிஃப்ட் பொத்தானை அழுத்திவிட்டு நின்றான். லிஃப்ட் வந்து நின்று கதவைத் திறந்து ‘உள்ளே வா’ என்றது. அவன் உள்ளே நுழைந்தபோது பவானி விசுக்கென்று வந்து அவனோது சேர்ந்து கொண்டாள். ‘சொல்லியிருந்தால் சேர்ந்தே வந்திருக்கலாமே?’ அவள் கண்கணைக் குறுக்கி அவனைப் பார்த்தாள். பேசவில்லை. முதல் தளத்தில் வெளியானபோது அந்த அம்மா நின்றிருந்தார். சிரிப்பை மொத்தமாகத் தொலைத்த முகம். மாத்திரைகள் இருந்த உரையைக் கொடுத்தான். ‘கவலப்படாதீங்கம்மா. சரியாயிடுவாங்க. அதே மாத்திரைதான் அதே மாதிரியே கொடுங்க. ஒரு வேளைகூட மறந்துடாதீங்க. தூங்கமாட்டாங்க. மறுபடி அக்ரசிவ் ஆயிருவாங்க. கவனமா பாத்துக்கங்க.’  ‘நாளக்கி ஆபீஸ்லகூட வாங்கிக்கலாமே. இதுக்கு ஏன் வீட்டுக்கு வரணும். உண்மையிலேயே இல்லியா? ‘ பவானி அந்தப் பெண் பக்கம் திரும்பிக் கொண்டே கேட்டாள். மீண்டும் அருணைப் பார்த்தாள். ‘மாத்திரய குடுத்திட்டிங்கல்ல. அவ மேல என்ன அவ்வளவு அக்கர. திரும்பத் திரும்ப சொல்றீங்க. பத்திரமாப் பாத்துக்கணுமோ? இன்னிக்கு இந்த அம்மா வருவாங்க. நாளக்கி அவளே வருவா. என்ன ஜென்மமோ?’ அவள் வார்த்தைகளைக் கொட்டியபோது ஒரு தீயணைப்பு வண்டி பிளிறிக்கொண்டு அவர்களைக் கடந்தது. அந்த அம்மாவின் காதுகளில் அந்த வார்த்தைகள் கேட்டுவிடாதபடி அந்த பிளிறல் காப்பாற்றிவிட்டது. காதில் விழுந்திருந்தால் அந்த அம்மா அங்கேயே செத்துப் போயிருப்பார். ‘அடி சண்டாளி. கல்லையும் பிளக்குமடி உன் கத்திச் சொற்கள்.’ மனதுக்குள்ளேயே அலறினான். கோபங்களை மென்று தின்றான்.

அவன் மிகவும் எதிர்பார்த்த குற்றாலிங்கம் இன்று கோலாலம்பூர் வருகிறார். ‘பவானியைப் பார்க்க பத்து நாளில்  வருவேன். நான் வரும்வரை எந்த விபரீதமும் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்’ சொல்லித்தான் அவர்களை குற்றாலிங்கம் அனுப்பிவைத்தார். ‘நெருப்பில் நீந்தியாகிவிட்டது பத்து நாட்களாய். வெளியேறிவிடுவேனா?’ குற்றாலிங்கம் வந்துவிட்டார். அவர் அண்ணன் வீட்டில் இருக்கிறார். மாலைதான் அவன் பவானியை அழைத்துக்கொண்டு போக வேண்டும். அவன் சொன்னதும் அவள் ஒப்புக்கொண்டாள். குடும்ப நண்பரல்லவா? அதுவும் தான் பிறந்த காலங்கள் முதல் கூடவே இருந்தவரல்லவா?

குற்றாலிங்கம் அண்ணன் வீடு. ஐந்து நட்சத்திர வசதியுடன் இருந்த ஓர் அறையில் குற்றாலிங்கம். அருண், பவானி வந்ததும் கதவு மூடப்பட்டது. குற்றாலிங்கம் பேசினார். ‘அந்தப் பேராவூரணி. உன் வீட்டுக்கு எதிரே இருக்கும் இரண்டு புளியமரங்கள். பொழுது சாயும்போது கிளிகளின் கூச்சல்கள். மரத்தடியில் பட்டம் விடும் உன் கூட்டாளிகள். நீ ஒரு நாள் பட்டம் விட்டுக் கொண்டிருக்கும்போதுதான் திருவிளையாடல் பார்க்க உன்னை அழைத்துக் கொண்டு போனேன்.உன் வீட்டு முகப்பில் அந்த உருட்டு கல்தூண். அட்டா! எங்கிருந்துதான் வாங்கினார்களோ? ஒங்க வீட்டின் அழகே அந்தத் தூண்தான்.’ மிக வெற்றிகரமாக பவானியை பேராவூரணிக்குக் கொண்டு செல்கிறார் குற்றாலிங்கம். இதுதான் ஹிப்னாடிசத்தின் ஒரு பகுதியோ? அவர் சிகிச்சையை இப்படித்தான் ஆரம்பிக்கிறார். பவானிக்காக மட்டுமல்ல.  மரணத்தையும் விட கொடுமையான இந்தத் தண்டனையிலிருந்து அருணுக்கு விடுதலை தரவும்தான். பவானி மெதுவாக ஆனாலும் உறுதியாக ஊர் ஞாபகத்தில் மிதந்தாள். அந்தப் பட்டம் விட்ட நாட்களூக்குள் நுழைந்து பச்சரிசியாய்ச் சிரித்தாள். அப்போது அவர்களுக்கு பழரசம் வந்தது. பவானிக்குத் தரவேண்டிய குவளையை கவனமாக பவானியிடம் தந்துவிட்டு அருணை கவனித்தார். அருண் புருவங்ளை உயர்த்தினான். அவர்கள் நாசூக்காக ஒரு வாய் அருந்துவதற்குள் பவானி மொத்தத்தையும் அருந்திவிட்டு வெறும் குவளையக் கீழே வைத்தாள். இன்னும் அவள் கண் இமைக்கவில்லை என்பதை குற்றாலிங்கம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்.  புரிந்துகொண்டார். இப்போதுதான் அவளுக்குள் தூங்கும் அந்தப் புலியை எழுப்பமுடியும். தொடர்ந்தார்.

‘உன் சித்தப்பாவிடம் பேசினியாமா?’

‘அந்த அயோக்கியனப்பத்தி கேட்காதீங்க சார். கரண்டு பில்லக் குடுக்க அன்னிக்கி அவர் வீட்டுக்குப் போனேன். அந்த ஆளுதான் கதவத் திறந்தாரு. சித்தி எங்கேன்னேன். யாருமே இல்லம்மா. நா மட்டுந்தான் இருக்கேன் என்றார். அவரு அறைக்குள்ள வேலக்காரி சிட்டம்மா இருந்தா சார். அவ என்னப் பாத்தா. நா அவளப் பாத்தேன். யாருமே இல்லேன்னு ஏன்சார் பொய் சொல்லணும்.’ அவள் இமைகள் இன்னும் அசையவில்லை.

‘ஒங்க சித்தப்பா மக ஒனக்கு ரொம்ப நெருக்கமாச்சே. அவள்ட சொன்னியாம்மா’

‘சொன்னே சார். அவளுக்கு தெரியுமாம். அவ சித்திக்கிட்ட சொன்னாளாம். என்ன செய்யச் சொல்றே. கல்யாணம் கட்டி ஒரு புள்ளயும் ஆனபிறகு கணவனப் பிரியிறது புள்ளய கொல பண்றதுமாரி. உனக்காக ஊருக்காக நா அவரோட இருந்துதாம்மா ஆகணும்னாங்களாம். என்ன சார் பொறுமைக்கு ஒரு அளவு இல்லியா. இதெல்லாம் பொறுக்கலாமா? தூங்கும்போது பாறாங்கல்ல தூக்கிப் போட்டு சாகடிக்க வேணாமா அந்த அயோக்கியனெ’

‘ஒங்க அண்ண எங்கம்மா? ரொம்ப நாளா அவன நா பாக்கவே இல்லம்மா.’

‘என்ன சார் ஒங்களுக்குத் தெரியாதா?’

‘தெரியாதும்மா’

‘சித்தப்பாவக்கூட மன்னிக்கலாம் அவன மன்னிக்கவே கூடாது சார். எங்க மருது மாமா தெரியும்தானே. அவரு மகள சென்னையில குடுத்தாங்க தெரியும்ல.’

‘ஆமா’

‘அந்த ஆளுக்கு புள்ள பொறக்காதாம்.’

பழரசம் வந்தது. அவளுக்கான குவளையை சரியாக எடுத்துக் கொடுத்தார் குற்றாலிங்கம். ஒரே மூச்சில் குடித்து குவளையை சத்தமாக கீழே வைத்தாள்.

‘ம். சொல்லும்மா.’

‘இனிமே சென்னக்கி போகமாட்டேன்னு சொல்லிட்டு எங்க வீட்ல கொஞ்சநா இருந்தா. அவளையும் என் அண்ணனையும் சே! என் கண்ணால பாத்தேன் சார்.’

இமைகள் இன்னும் இமைக்கவில்லை.

‘அடுத்த நாள் அவளக்கூட்டிக்கிட்டு அவன் வேல செஞ்ச எடத்துக்கே போயிட்டான் சார். சமீபத்லதான் போன் பண்ணுனான். அவளுக்கு இப்ப எட்டு மாசமாம். அம்மா வரணுமாம். அவளுக்கு பொறப்பு பாக்க. இவன சல்லி சல்லியா வெட்டுனா என்ன சார். ‘

அந்த இரண்டு குவளை மருந்துக்கு அவள் நிற்பது குற்றாலிங்கத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. மருந்து சரியான அளவுதான் கொடுத்திருக்கிறேன். தேற்றிக் கொண்டார். அவளுக்கும் அந்தப் பிசாசுக்குமிடையே ஒரு யுத்தமே நடந்துகொண்டிருக்கிறது.

‘சரிம்மா. விடு. வந்து பத்து நாளேச்சே. அப்பாவப் பாக்க வர்றியாம்மா. நா கூட்டிட்டுப் போறேன்.’

‘அந்த ஆளு மொகத்துல முழிக்கமாட்டேன் சார். ஒங்களுக்குத் தெரியும்தானே. அங்க அக்கவுண்ட் பாத்துக்கிட்ருந்த கமலா ஆண்ட்டி. அவளக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு சார். நா கல்யாணத்துக்கு நிக்கிற வயசுல அந்த ஆளு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு சார்.’

‘ஒங்க அம்மாவுக்குத் தெரியுமா?’

‘தெரிஞ்சா பினாங்குக்கே போயி கூறு போட்ருவாங்க.’

அவள் இமைகளை இப்போதுதான் கொஞ்சம் இறக்கி மீண்டும் உயர்த்துகிறாள். நெற்றிப்பொட்டைத் தடவிக் கொண்டாள். ‘தல வலிக்குது’ என்றாள்.  அவள் சுயமாகிவிட்டாள். அவளுக்குள் நடந்துகொண்டிருந்த யுத்தம் சரியாக வெளியே வந்துகொண்டிருக்கின்றன.

‘ஏதாவது சாப்புர்றியாம்மா’

சப்பாத்தியும் குருமாவும் வந்தது. எல்லாரும் சாப்பிட்டார்கள். குற்றாலிங்கம் தொடர்ந்தார்.

‘ஒங்க சித்தப்பா கத கிடக்கட்டும்மா.அத அவுங்களே சகிச்சுக்கிட்டாங்க. ஒங்க குடும்பத்துக்கு வா. ஒங்க அண்ணெ அந்தப் பொண்ண பலவந்தப் படுத்தலி யேம்மா. அவ விரும்புனா. அவனும் விரும்புனா. ஒரு பொண்ணு புள்ள இல்லாம இருக்கது பெரிய  கொடுமை மா. எப்புடிமா அவ தாங்குவா. அந்த பொண்ணுக்கு ஒங்க அண்ணெ வாழ்க்கை கொடுத்திருக்காம்மா. ஒங்க மாமாவே ஏத்துக்கிட்டாரு. அவனெ மலடுன்னு தெருஞ்சும் அந்த சென்னக்காரன் ஒங்க மாமாவ ஏமாத்திட்டான். பெத்த புள்ள வாழாம இருந்தா ஒரு அப்பனால பொறுக்கமுடியாதும்மா. அந்தப் பொண்ணெ மட்டுமில்ல. அந்தக் குடும்பத்துக்கே உசுரு குடுத்திருக்காம்மா. அவன்மேல எந்தத் தப்பும் இல்லம்மா.. அது இருக்கட்டும் உன் அப்பா சேதிக்கு வா. நீ சொன்னியே ஒங்க அம்மா பினாங்குக்கே போயி கூறுபோட்ருவாங்கன்னு.’

‘ஆமா சார் நிச்சயமா நடக்கும்’

குற்றாலிங்கம் லேசாக புன்னகைத்தார். அவர் வாயிலிருந்து விழப்போகும் அடுத்த வார்த்தைக்காக அவள் காத்திருக்கிறாள்.

‘ஒனக்குத் தெரியாத ஒரு சேதி சொல்றேன் கேளு. அந்தக் கமலாவெ அவரு மொறப்படி கல்யாணம் பண்ணனும்ணா ஒங்க அம்மாவோட ஒப்புதல் கடிதம் வேணும். நான்தான் ஒங்க அம்மாகிட்ட அந்த கடிதத்தக் குடுத்து கையெழுத்துப் போடச்சொன்னேன்.’

சிலையானாள் பவானி. நிசப்தம். பவானி குற்றாலிங்கத்தைப் பார்த்துவிட்டு அருணைப் பார்க்கிறாள். மீண்டும் குற்றாலிங்கத்தை குத்திட்டுப் பார்க்கிறாள். அடுத்து அவரிடம் பிறக்கும் வார்த்தையில்தான் பவானி குணமாகவேண்டும். குற்றாலிங்கம் தொடர்கிறார்.

‘அந்த கடிதத்தப் பாத்துட்டு ஒங்க அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா? அவங்க சொன்ன அதே வார்த்தய சொல்றேன். அவர நா கல்யாணம் செஞ்ச அடுத்த நாளே சொன்னே சார். அவருக்குன்னு அம்மாவும் ஒரு அக்காவும் மட்டும்தான் இருந்தாங்க. அவங்கள நீங்க விட்டுட்டு என் வீட்டுக்கே வந்தரணும். பாக்கணும்னா காலைல போயிட்டு சாயங்காலம் வந்துரணும். என் வீட்டுக்கு அவங்க வரவே கூடாதுன்னு இந்த வாயாலதான்சார் சொன்னேன். அவரு அப்படியே கேட்டுக்கிட்டாரு சார். இன்னக்கி வரக்கிம் அவர் அத காப்பாத்துறாரு சார். அவர அப்படிக் கேட்டதுனால பாத்திங்களா என்னோட எல்லா சொந்தமும் என்னெ விட்டுப் போயிடுச்சு சார். என் கணவருக்கு இதுவரக்கும் நா எந்த நன்மையும் செய்யல சார். குடுங்க சார். எனக்காக எல்லாத்தயும் விட்டுக் குடுத்த அவரு நல்லா இருக்கட்டும் சார்ன்னு சொன்னாங்கம்மா. சரித்திரமெல்லாம் படிச்சிருக்கியேம்மா. தசரதனுதனுடைய நூறு மனைவிகளும் சண்ட போட்டுக்கலியோம்மா. மாதவிக்கிட்ட போயிட்டாருன்னு கண்ணகி கோவலனெ வெறுத்திருந்தா மணிமேகலத் தெய்வம் பொறந்தே இருக்கமாட்டாங்கம்மா. இளங்கோவடிகள் வெறுத்திருந்தா சிலப்பதிகாரமே நமக்குக் கெடச்சுருக்காதும்மா. ஒரு பொண்ணுக்கு அவ வாழ்க்கை சிறக்கணும்னா அவ புருஷனோட இருக்கணும்மா. சர்க்கஸ் பாத்திருக்கியாம்மா. 2 டன் எடையுள்ள ஒரு யானையெ அந்த ரிங்மாஸ்டர் ஒரு சின்ன சவுக்கக் காட்டி ஒரு ஸ்டூல்ல நிக்கவப்பாம்மா. நாலு காலையும் ஒடுக்கி அந்த யானெ பர்ற அவஸ்தையில அது கக்கா போயிடும்மா. உச்சு போயிரும்மா. அந்த யானெ நெனச்சா அந்த தும்பிக்கையால அவனெ சுத்தி தரையில தேங்கா ஒடக்கிறமாதிரி ஒடக்கமுடியும்மா. அதுக்கு அந்த பலம் தெரியல. அருண் நெனச்சா ஒன் தலமயிரப்புடிச்சு இழுத்துக்கிட்டுப்போயி ஒங்க பேராவூரணி வீட்ல உள்ள அந்த தூண்ல மோதித் தள்ளி ‘பொண்ணெ வளத்தியா பேயெ வளத்தியா’ன்னு கேக்க வெகுநேரம் ஆகாதும்மா. அவன் பலம் அவனுக்குத் தெரியும். அவனால செய்ய முடியும். எனக்காக ஒன்ன அவன் ஏத்துக்கிட்டாம்மா. எல்லாம் சொல்லித்தாம்மா ஒன்ன அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். அவன் எல்லாத்தயும் தாங்கிக்கிட்டாம்மா.’

‘அப்புடியெல்லாம் ஒன்னும் இல்லம்மா. சார் கொஞ்சம் மிகப் படுத்துராருமா. வா நம்ம வீட்டுக்குப் போகலாம்.’ பவானிக்கு அருகில் அருண் வந்தான். அவள் கைகளால்  அவன் கழுத்தைச் சுற்றி தோளில் முகம் புதைத்து இடியெனக் கதறினாள். குற்றாலிங்கம் மகிழ்ந்தார். அவள் சரியாகிவிட்டாள். இல்லாவிட்டால் இவ்வளவு சத்தமாக அவளால் கதறமுடியாது. மெதுவாக அந்த அறைக் கதவை இன்னும் இறுக்கமாகச் சாத்தினார். வெகுநேரம் அழுதாள். அந்த ஸ்பரிசம் அவளுக்கு சுகமாக இருந்தது. அந்த நெருக்கம் அவளுக்கு வாழ்க்கை இதுதான் என்றது. அவள் தலையை மெதுவாகத் தூக்கி கன்னங்களை ஒட்டிக்கொண்டான் அருண். இருகரங்களும் பின்னிக்கொண்டன. குற்றாலிங்கம் திரும்பிக் கொண்டார். வாழ்க்கை முடிச்சுகளை அவிழ்க்கத் தெரிந்தால் போதும் தாலி முடிச்சு அவிழாது.

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationசொல்லும் செயலும்மொழிவது சுகம், செப்டம்பர் 7, 2019
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *