உடல்மொழியின் கலை

This entry is part 6 of 8 in the series 22 செப்டம்பர் 2019

_ வெளி ரங்கராஜன் எழுதி சமீபத்தில் வெளியாகியிருக்கும் கலை, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு குறித்து….

லதா ராமகிருஷ்ணன்

புத்தக அச்சாக்கம் நேர்த்தியாக இருக்கிறது. குறைவான அச்சுப் பிழைகளுக்காகவும், நேர்த்தியான அட்டை வடிவமைப்புக்காகவும் போதிவனம் பதிப்பகம் பாராட்டுக்குரியது.

ந்தக் கட்டுரைத்தொகுப்பில் சிறிய கட்டுரைகளும் நீளமான கட்டுரைகளுமாக 22 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இலக்கியம், நிகழ்த்துகலை சார்ந்த கட்டுரைகள். ஏழெட்டு மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உட்பட.

கட்டுரைகளில் வெளி ரங்கராஜனுக்கே உரிய நிதான தொனியும் கருத்துகளை முன்வைப்பதில் அவர் வெளிப்படுத்தும் கண்ணியமும், பாரபட்சமற்ற பார்வையும், பீடமேறி போதிக்காத போக்கும் புலப்படுகின்றன. பரபரப்புக்காகவோ, ‘PLAYING TO THE GALLERY’  மனநிலையிலோ அவர் என்றுமே இலக்கியஞ் சார்ந்த, சமூகஞ் சார்ந்த விஷயங்களை, பிரச்சினைகளை அணுகியதில்லை. மேம்போக்காக எந்தவொரு விஷயத் தைப் பற்றியும் கருத்துரைப்பதை, முடிந்த முடிவாக ஒரு கருத்தை முன்வைப்பதை பிரக்ஞாபூர்வமாகத் தவிர்ப்பவர் வெளி ரங்கராஜன்.

இலக்கியம் சார்ந்தும் சமூகஞ் சார்ந்தும் இவர் UPDATED ஆக இருப்பதை இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்  எடுத்துக்காட்டுகின்றன.

வெளி ரங்கராஜன் கருத்துகளை முன்வைக்கும்போது அவற்ரில் எள்ளல் தொனியோ மாற்றுக்கருத்துடையவர்களை மட்டந்தட்டும், முட்டாள்களாக பாவிக்கும் தொனியோ அறவே இருக்காது. IN ALL SERIOUSNESS தன்னுடைய கருத்துகளை முன்வைப்பார். இலக்கிய ரீதியாகவும் சரி, சமூக ரீதியாகவும் சரி – தான் சரியென்று நம்பும் விஷயங்களில் யாருக்காகவும் அவர் சமரசம் செய்துகொண்டதில்லை.

பலதரப்பட்ட, ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்துகளைக் கொண்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள் அவருடைய அண்மையிலும், அக்கறையிலும் இதமுணர்ந்து, இணக்கமான தோழமையுடன் ஒன்றாக மர்ந்து பேசிக்கொண்டி ருப்பதைப் பார்ப்பது நிறைவான அனுபவம்.

இலக்கியத்துறையில் இயங்கிக்கொண்டிருப்பவர்களும், மற்ற நிகழ்த்துகலை, நுண்கலைத் துறைகளில் இயங்கிக்கொண்டிருப்பவர்களும் இணைந்து செயல்படவேண்டும், கலந்துரையாடவேண்டும் என்ற தன் விருப்பத்தை அவர் அடிக்கடி வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னளவிலும் அவர் அவ்வாறே இயங்கிவருகிறார். ஒருவகையில், நிகழ்த்துகலைக்கும், இலக்கியத்திற்கும் இடையேயான இணைப்புக்கண்ணியாக இருக்கிறார் என்றுகூடச் சொல்லமுடியும். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் இந்த இரண்டு படைப்புவெளிகளிலும் அவருக்கிருக்கும் ஆர்வத்தையும், பங்கேற்பையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளன. இதிலுள்ள கட்டுரைகள் இரண்டு படைப்புவெளிகளிலுமான அவருடைய வருடக்கணக்கான நேரடி அனுபவங்கள் சார்ந்து எழுதப்பட்டிருப்பவை என்பதால் அவை சமகால வாசகரிடம் தாக்கம் ஏற்படுத்தத் தவறவில்லை. ஒவ்வொரு கட்டுரையும் பேச எடுத்துக்கொள்ளும் கருப்பொருளை அவர் அறிமுகப்படுத்தும் விதமும், அந்தக் கருப்பொருள்கள் தொடர்பாய் அவர் முன்வைக்கும் விவரங்களும் வெளி ரங்கராஜனின் பரந்துபட்ட வாசிப்பையும், ஆழ்ந்த ஈடுபாடையும், பங்களிப்பையும் புலப்படுத்துவதாக உள்ளன.

இந்த நூலில் இடம்பெறும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் மற்ற கட்டுரைகளோடு தொடர்புடையவையே என்றாலும், இன்னும் நான்கைந்து மொழிபெயர்ப்புக் கட்டுரைகளையும் சேர்த்து அவற்றைத் தனித்தொகுப்பாக வெளியிட்டிருக்கலாமோ என்று தோன்றியது. சில மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் அவற்றின் மூல ஆசிரியர் பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக் கிறது. சிலவற்றில் இல்லை. உதாரணமாக, ‘கலையும் மனப்பிறழ்வும்’ என்ற தலைப்பிட்ட கட்டுரை. குறிப்பிடத்தக்க விரிவான கட்டுரை இது. எழுஹ்டியவர் டி.யோகனன் என்று மட்டுமே விவரம் தரப்பட்டிருக்கிறது. ’நாட்டுப்புற நாடகம் என்னுடைய பார்வையில்’ என்ற தலைப்பிட்ட விரிவான கட்டுரையில் எழுதியவர் சந்திரசேகர கம்பார் என்று மட்டுமே தரப்பட்டிருக்கிறது. ஹெச்.எஸ்.சிவப்ப்ரகாஷ் – கன்னட நாடகாசிரியர் எழுதிய மாதவி நாடகம் – கவிஞர் அமரர் சதாரா மாலதியால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது (அவருடைய இறப்புக்குப் பின் வெளி ரங்கராஜனால் நாடகமாக அரங்கேற்றப்பட்டது) என்ற விவரம் தரப்பட்டிருக்கலாம். வெளி ரங்கராஜனின் மொழிபெயர்ப்பு படிப்பதற்கு சரளமாக இருக்கிறது.

இனி இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் குறித்தும், அவற்றில் எனக்குக் கிடைத்த நினைவில் கொள்ளத்தக்க வரிகள் குறித்தும் ஒரு சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

முதல் கட்டுரை ‘நகுலனை நோக்கிய ஒரு பயணம்’ – சிறிய கட்டுரை என்றாலும், அடர்செறிவானது. அதில், “நகுலன் எப்போதும் தன்னிலை சார்ந்த மொழியிலேயே எழுதிக்கொண்டிருந்தாலும் தன்னிலிருந்து விலகிய ஒரு அழகியல் தூரத்தைத் தன்னுடைய எழுத்தில் எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டிருப்பதே அவருடைய கலையின் வசீகரம் என்பதாகவே அவரைப் பற்றி என் மனதில் பதிவாகியிருந்தது’, என்று வெளி ரங்கராஜன் குறிப்பிடும்போது அவர் நல்ல இலக்கியத்தின் அடிநாதத்தையே கோடிட்டுக் காட்டிவிடுகிறார்.

‘பிரபஞ்ச உறவுகள் குறித்தும், வாழ்க்கையின் இருண்மை குறித்தும் தீவிரமான அக்கறைகளுடன் செயல்பட்ட ஒரு இலக்கியவாதி கௌரவிக்கப்படுவது அவசியம்’ என்று எடுத்துரைக்கும்போது இருண்மை எப்படி வாழ்க்கையின் இரண்டரக் கலந்த அம்சமோ அப்படியே இலக்கியத்திலும் அதற்கு இடமுண்டு’ என்பதைக் குறிப்புணர்த்திவிடுகிறார் வெளி ரங்கராஜன்.

‘பக்தி இலக்கியமும் மக்கள் பங்கேற்பும் – ஒரு மதிப்பீடு என்ற அவருடைய கட்டுரையிலிருந்து சில வரிகள்:

“பக்தி இலக்கியம் – உலகியல் வாழ்வைப் புறக்கணிக்கவேண்டிய அவசியமில்லை.  உலகியல் இன்பங்களை நுகர்ந்துகொண்டே இறைவனிடம் பக்தி செலுத்தலாம் என்ற நடைமுறை சாத்தியமான நிலைப்பாட்டை முன் நிறுத்தியது. சாதி வேற்றுமைகள் நிலவியபோதும் இறைவனடியார் யாவரும் வணங்கத்தக்கவரே என்ற குரலை ஒலித்தது.

தமிழில் சிறுபத்திரிகை இயக்கம்: சிறு பத்திரிகைகளுக்கேயுரிய அம்சங்கள் சிலவற்றை இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறார் நூலாசிரியர். ‘வெவ்வேறு காலகட்ட இலக்கியச் சிறுபத்திரிகைகளின் படைப்புகளை மதிப்பீடு செய்யும்போது அக்காலகட்ட மனப்போக்குகளையும் இலக்கியக் குரல்களையும் பற்றிய விரிவான அறிமுகத்தை நாம் பெறமுடியும் என்கிறார்.

சிறுபத்திரிகை என்பது ஒரு பெரும் இலக்கிய அர்ப்பணிப்புக்கான குறியீடாக இருந்தது. பத்திரிகைக்காக தங்கள் பொருளியல் வாழ்வை வருத்திக்கொண்டு உலகியல் உறவுகளைச் சிக்கலாக்கிக்கொண்டவர்கள் பலர். அதுபோன்ற அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகளால்தான் தமிழ் நவீன இலக்கியம் வளர்க்கப்பட்டிருக்கிறது’ என்று கூறும் வெளி ரங்கராஜன் அப்படி இயங்கிய முக்கியச் சிறுபத்திரிகைகள் ஒன்றிரண்டின் பெயர்கள் விடுபட்டிருப்பது பிரக்ஞாபூர்வமானதோ அல்லது யதேச்சையானதோ – வருத்தத்தையளித்தது.

சமகால இலக்கிய உரையாடல்கள்: ’தற்போது இலக்கிய சந்திப்புகள் மிகவும் அருகிவிட்ட ஒரு சூழலையே பார்க்க முடிகிறது’ என்கிறார் ஆசிரியர். வேறு சில இலக்கிய நிகழ்வுகளிலும் இந்தக் கருத்தைக் கேட்கமுடிந்தது. அப்படியில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.  ஆர்வமான இலக்கிய உரையாடல்கள் அங்கங்கே நடந்தவண்ணமேயிருக்கின்றன. சில இலக்கியமேடைகளில் சாதிரீதியாக இலக்கியத்தை, இலக்கியவாதிகளை கட்டங்கட்டி பேசமுடியாமல் செய்துவிடுவது வழக்கமாக இருக்கும்போதிலும் [எழுத்தாளர்கள் ஒரே வர்க்கம் என்ற School of Thoughtஇலிருந்து வந்த என்னைப் போன்றவர்கள் இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாமல் அல்லது வயதாகிக்கொண்டே போகும் காரணத்தால்,  கூட்டங்களுக்குப் போவதைத் தவிர்த்துவிடுகிறார்கள்]  பொதுவாக இலக்கிய உரையாடல்கள், விவாதங்கள், அவற்றிற்கான அரங்குகள், நிகழ்வுகள் எல்லாம் காத்திரமாகவே செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

புதுமைப்பித்தன் கதைகள் நீக்கம் என்ற கட்டுரையிலிருந்து:

“ஒரு படைப்பிலக்கியத்தை எப்படி அணுகவேண்டும் என்பது குறித்த செறிவான பார்வையை உருவாக்கவேண்டிய ஒரு பல்கலைக்கழகம் ஒரு தட்டையான வாசிப்புக்கு ஒரு படைப்பாளியை பலியாக்குவது என்பது கருத்துலக நேர்மையல்ல. ஒரு படைப்பு குறித்து காலப்போக்கில் பல்வேறு விமர்சனப் பார்வைகள் உருவாவது என்பது இயல்பானது; வரவேற்கத்தக்கது. ஆனால் அதற்காக படைப்பை நிராகரிக்க வேண்டும் என்பது இலக்கியத்தின் பன்முகத்தன்மையை கேள்விக்குட்படுத்துவது.

மணிமேகலை காப்பியத்தின் ஆழ்மன நீரோட்டம் என்ற கட்டுரையிலி ருந்து

  • “நமது காப்பியங்கள் குறிப்பிட்ட மையச்சரடுகளை இலக்காகக் கொண்டு இயங்குவது போன்ற தோற்றங்களை உருவாக்கி னாலும் அவைகளுக்கு இடையே பலவாறாகப் பிரிந்துசெல்லும் சிறுகதையாடல்களும், பாத்திரங்களின் இயக்கங்களும் சார்புகள் கடந்த ஒரு வாழ்வுணர்வை சாத்தியப்படுத்தி ஒரு இலக்கியப் படைப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன.”

திராவிட இயக்கங்களின் நாடகங்கள் என்ற கட்டுரையிலிருந்து சில வரிகள்:

  • சமூகக்களத்தையே ஒரு நாடகமேடையாக்கி சாதாரண மனிதர்களையே பார்வையாளர்களாகவும், பங்குபெறுபவர்க ளாகவும் மாற்றிய பெருமை திராவிட இயக்கங்களுக்கே உரியது.
  • தமிழ்நாட்டில் தங்கள் நாடகங்களுக்காக பல அடக்குமுறை களை எதிர்கொண்டவர்கள் திராவிட இயக்கத்தினர். அண்ணா, கருணாநிதி போன்ற பல தலைவர்கள் தங்கள் எழுத்துகளுக்காக சிறைத்தண்டனை ஏற்றனர்.
  • இந்த நாடக உணர்வை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல திராவிட இயக்கம் தவறிவிட்டது.
  • பிராமணீயத்தை விமர்சித்த திராவிட இயக்கம் சங்க காலத்தை விமர்சிக்கவில்லை. தமிழை பிராமணியத்திலி ருந்து விடுவித்து தமிழ் ஆசிரியர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சங்க காலத்திலேயிருந்து மீளவேயில்லை. தமிழ் உணர்வு என்பது வெறும் பட்டிமன்றமும் கவியரங்கும் அடுக்குமொழிப் பேச்சுமானது.”

முத்துசாமியின் 50 ஆண்டு நாடக இயக்கம்: மூன்று பக்கங்களிலான சிறு கட்டுரை என்றாலும் சிறப்பான, விரிவான அறிமுகம். முத்துசாமி என்றில்லாமல் ந.முத்துசாமி என்று பெயர் தரப்பட்டிருக்கலாம்.  இந்தக் கட்டுரையிலிருந்து சில வரிகள்:

  • கற்பனையையும், படைப்புணர்வையும் ஆரவாரமான பேச்சுகளாலும், விளம்பரக் கவர்ச்சிகளாலும் இழந்துகொண் டிருக்கும் ஒரு சமூகத்தை விளிக்கும் விதமாகவே அவருடைய நாடகங்கள் அமைகின்றன.”
  • தமிழ்ச்சூழலில் கடந்த 30 ஆண்டுகளில் மரபுக்கலைகள் குறித்த கவனம் கூடியிருப்பதும், கூத்து நவீன நாடக ஊடாட்டம் வலுப்பெற்றிருப்பதும் முத்துசாமியின் 50 ஆண்டு நாடக இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றி எனக் கொள்ளவேண்டும்.”

உலகை பாதித்த நாடகக் கருத்தாக்கங்கள் என்ற கட்டுரை இரண்டே பக்கங்களில் உலகளாவிய நாடக வகைமைகள் முயற்சிகள், போக்குகள் குறித்து – THEATRE OF THE ABSURD, THEATRE OF CRUELTY, EPIC THEATRE, DADAISM, SURREALISM, OPEN THEATRE –  நேர்த்தியாக அறிமுகம் செய்கிறது.

மார்க்வெஸின் ‘நீண்ட சிறகுகளுடன் வயோதிகன்’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில் அந்த நாடகத்தை புரிசை கண்ணப்ப தம்பிரான் குழுவினர் நாடகமாக்கியதை விவரிக்கிறார் நூலாசிரியர். கொலம்பியாவைச் சேர்ந்த மாபா குழுவினர் இந்த சிறுகதையை கூத்து வடிவில் நாடகமாக்க கொலம்பியா விலிருந்து சென்னை வந்து மூன்று மாதங்கள் தங்கியிருந்து புரிசை கண்ணப்ப தம்பிரான் குழுவுடன் சேர்ந்து இதைக் கூத்தாக்கியுள்ளனர் என்று தெரிவிக்கும் ஆசிரியர் ”பொதுவாக நம்முடைய நெறிப்படுத்தப்பட்ட கூத்துக்கு பார்வையாளர்களை SUSTAIN பண்ணக்கூடிய குணம் உண்டு. ஆனால் அது ஆழ்ந்த உணர்வுகளுக்கு அழைத்துச்செல்லும்போதுதான் ஒரு தொடர்ந்த ஈடுபாடு சாத்தியப்படும்”,  என்றும் ”கூத்தின் சாயல்களை எடுத்துக்கொண்டு சமகால உணர்வுகளுக்கேற்ற வடிவமுயற்சி களில் இறங்குவதே அவசியம்” என்றும் நவீன நாடகத்தின் அடிப்படையான அம்சங்களைச் சுட்டுவதாய் குறிப்பிடுகிறார்.

’நாடக வாசிப்பும் ஒத்திகையும்’ என்ற தலைப்பிட்ட கட்டுரை எந்தவொரு நாடகமும் அதன் இறுதிவடிவத்தின் பின்னால் கண்ணுக்குத் தெரியாத பல நிலைகளைக் கடந்துவந்திருப்பதைக் கவனப்படுத்துகிறது.

’தமிழ் திரைப்படங்களில் இலக்கிய உள்ளீடும், காட்சி வெளிப்பாடும்’ என்ற கட்டுரை ரத்தினச்சுருக்கமாக எடுத்துக்கொண்ட கருப்பொருளைப் பேசுகிறது! கட்டுரையிலிருந்து சில வரிகள்:

“இலக்கிய நீரோட்டங்களுடன் தொடர்பும் காட்சி அழகியல் குறித்த பார்வையும், மிகையற்ற கதை சொல்லும் முறையும்தான் கடந்த காலங்களில் வெகுஜன ஆதரவு பெற்ற சில நல்ல படங்கள் வரக் காரணமாக இருந்தன. ஆனால், பெரும்பான்மை தமிழ் சினிமா என்பது இலக்கிய நுண்ணுனர்வுடன் தொடர்பற்று இருப்பதாலேயே மிகையான உணர்ச்சிகள், வன்முறை மற்றும் பாலியல் வக்கிரங்கள் குவிக்கப்பட்ட இடமாக இருக்கிறது.”

ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டதுபோல, வெளி ரங்கராஜன் கருத்துகளை முன்வைக்கும்போது அவற்றில் எள்ளல் தொனியோ மாற்றுக்கருத்துடைய வர்களை மட்டந்தட்டும், முட்டாள்களாக பாவிக்கும் தொனியோ அறவே இருக்காது. IN ALL SERIOUSNESS தன்னுடைய கருத்துகளை முன்வைப்பார். அவருடைய கருத்துகளோடு நாம் உடன்படலாம்; முரண்படலாம். ஆனால், தனது கருத்துகளை முன்வைப்பதில் வெளி ரங்கராஜனுக்கு எந்தப் பாசாங்கும் கிடையாது, உள்நோக்கமும் கிடையாது என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்கவியலாது.

Series Navigationபாரதியின் கவிதைகளில் கிடைக்கும் வாசகப்பிரதிகள்தண்டனை
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *