பாரதியின் கவிதைகளில் கிடைக்கும் வாசகப்பிரதிகள்

This entry is part 5 of 8 in the series 22 செப்டம்பர் 2019

லதா ராமகிருஷ்ணன்

செப்டெம்பர் 11  – பாரதியாரின் நினைவுதினம். 38 வயதிற்குள் எத்தனை எழுதிவிட்டார் என்று எண்ண எண்ண பிரமிப்பாக இருக்கிறது. அவருடைய இந்தக் கவிதையில் வரும்பெரிய கடவுள் காக்கவேண்டும்என்ற வரியையும், ’தரணியிலே பெருமை வேண்டும்என்பதையும் நாம் வழக்கமான அர்த்தத்தில் புரிந்துகொண்டால் பின் எந்தக் கவிதையையும் நம்மால் உள்வாங்கவே இயலாது.

ஒரு கவிதை ஒற்றை அர்த்தத்தைக் கொண்டதாய் அனைவருக்கும் புரியும் அளவில் எழுதப்பட்டதா லேயே அது கவிதையாகிவிடுவதாகச் சொல்லமுடியாது.

அதேபோல்தான் புரியாக் கவிதையும். ஒரு மேலோட்டமான வாசிப்பில் அல்லது ஆழமான வாசிப்பில் கூட ஒரு கவிதை முழுவதுமாக நமக்குப் பிடிபடாதுபோகலாம். ஆனாலும், அந்தக் கவிதையின் ஒரு வரி அல்லது ஒரு சொற்றொடர் அந்தக் கவிதைக்குள் நம்மை ஈர்த்துக்கொண்டுவிட முடியும்;

அப்படி, அந்தக் கவிதைக்கு இருக்கக்கூடிய நாம் அறியாத ஆழத்தை நமக்குக் கோடி காட்டிவிடுவதுண்டு.

ஒரு கவிதையில் உள்ள அத்தனை சொற்களும் தனித்தனியான அளவில் அர்த்தம் புரிவதாலேயே கவிதையின் ஒட்டுமொத்த அர்த்தம் புரிந்துவிடுகிறது என்று சொல்லிவிட முடியாது.

ஒரு கவிஞரை அவர் வாழுங்காலத்தில் அறிந்தவர்களால் அவர் என்ன நினைத்து, அல்லது அவர் எதை உட்குறிப்பாக உணர்த்தி ஒரு கவிதையை எழுதியிருக்கிறார் என்று புரிந்துகொள்ள வழியுண்டு.

இதைக்கூட திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஒரு கவிமனதின் அத்தனை அடர்காடுகளும் அவருக்கு எத்தனை நெருக்கமானவர்களுக்கும் அத்துப்படியாகி விடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், முக்கியமாக, ஒரு கவிஞரை சகமனிதராக நெருக்கமாக அறிந்தவர்களுக்கு அவர் கவிதை அணுகவியலாததா கிறது என்றுகூடச் சொல்ல முடியும்.

இதில், பாரதியார் தங்களைக் கேட்டுக்கொண்டுதான் அவருடைய ஒவ்வொரு கவிதையையும் எழுதினார், அவருடைய ஒவ்வொரு கவிதையின் ஒவ்வொரு சொல்லையும் தங்களுக்கு ஏற்புடைய பொருளில் மட்டுமே எழுதினார் என்பதாய் சிலர் ‘சிலுப்பி’க் கொண்டு பட்டிமன்றங்களிலும், திறனாய்வு நூல்களிலும் பேசி, எழுதித்தள்ளுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

அப்படி தன்னோடு வாழ்ந்த யாரிடமாவது ‘இதை நினைத்துத்தான் இந்தக் கவிதையை எழுதினேன், இந்தப் பொருளில்தான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன்’ என்று பாரதி கூறியதாகத் தெரியவந்தி ருக்கிறதா? எனக்குத் தெரிந்து இல்லை.

அப்படியிருக்கும்போது பாரதியின் இந்தக் கவிதையில் எனக்குக் கிடைத்த வாசகப் பிரதி இது என்று சொல்லுவதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

அப்படி மேலே இடம்பெறும் பாரதியின் கவிதையில் எனக்குக் கிடைத்த, என்னை இந்தக் கவிதையை இன்றுவரை நேசிக்கச் செய்திருக்கும் வாசகப்பிரதி இது:

இந்தக் கவிதையில் இடம்பெறும் வேண்டும் என்ற சொல் எனக்கு வேண்டும் என்ற கோரிக்கையா? இவை வேண்டிநிற்கும் மனப்போக்கா? வேண்டுதலா? யாருக்கு? பாரதி என்ற தனிநபரின், தனிநபருக்கு மட்டுமான வேண்டுதலா? வேண்டிநிற்றலா? அல்லது, பலரின் பிரதிநிதியாக பிறந்த வேண்டுதலா?

நெருங்கின பொருள் கைப்படவேண்டும் – இது பொதுவான அர்த்தத்தில் கூறப் பட்டதா? அல்லது, குறிப்பாக எதையோ பூடகமாகப் பேசுகிறதா? பொருள் என்பது உயிருள்ளதா? உயிரற்றதா? நெருங்கின பொருள் கைப்படவேண்டும் என்பதில் ஒரு தொடுவான உறவு ஏதேனும் உட்குறிப்பாக உள்ளதா?

கனவு மெய்ப்பட வேண்டும் – ஒரு குறிப்பிட்ட கனவா? அப்படியென்றால் அது என்ன கனவு? அவரவருக்கு அவரவருடைய கனவு(கள்)! கனவு என்பது இங்கே இலட்சியக்கனவு என்பதாகக் கொள்ளத்தக்க அளவில் இடம்பெற்றாலும், அத்தகைய இலட்சியக்கனவு ‘நாட்டின் விடுதலை’ என்பதாக இருக்க வழியுண்டு என்றாலும் அதுமட்டுமே தான் அந்த வரியின் ஒற்றை அர்த்தம் என்று திட்டவட்டமாக ஏன் நிறுவ முயலவேண்டும்?

தனமும் இன்பமும் வேண்டும் என்ற வரியில் தனம் என்ற சொல் செல்வவளத்தைத்தான் குறிக்கிறது என்று தீர்மானமாகச் சொல்ல முடியுமா? ஏன் சொல்லவேண்டும்? தனமும் இன்பமும் தனித்தனியானது என்பது இங்கே கோடிகாட்டப்படுகிறதா? இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்று சுட்டப்படுகிறதா? தனம் என்பது பொருள்வளம் மட்டும்தானா? (தமிழகராதியில் தனம் என்ற சொல்லுக்குத் தரப்பட்டிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தகங்களில் ‘முலை’ என்பதும் ஒன்று)

நெருங்கின பொருள் கைப்படவேண்டும்’ / கனவு மெய்ப்பட வேண்டும் / கைவசமாவது விரைவில் வேண்டும் / தனமும் இன்பமும் வேண்டும் _ என்ற இந்த நான்கு வரிகளிலுமான வேண்டுதல்கள், அல்லது ‘வேண்டும்’கள் தனித்தனியானதா? ஒன்றுக்கொன்று தொடர்புடையனவா?

பாரதி இறந்தபோது அவருக்கு வயது முப்பத்தியெட்டு தான். அவர் ‘ஆண்-பெண்’ உறவைத் தனது பல கவிதை களில் நுட்பமாகப் பேசியவர். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர், பல இலக்கியங்களை வாசித்தறிந்தவர் என்பதால் அவர் தன் கவிதைகளில் பயன்படுத்தும் சொற்களை மிகவும் கவனமாக, பிரக்ஞாபூர்வமாகவே தேர்ந்தெடுத்திருப்பார்.

எளிய சொல் என்றாலும்கூட அதை எளிதாகப் புரிந்து விடும் அதே அர்த்தத்தில் மட்டுமே அவர் கையாண்டிருப்பார் என்று எப்பேர்ப்பட்ட திறனாய்வாளர்களாலும் அறுதியிட்டு உறுதியாகச் சொல்லிவிட இயலாது.

தரணியிலே பெருமை வேண்டும் என்கிறார் பாரதி. ஊரிலே, நாட்டிலே என்று கூறுவதில்லை. அவர் கூறும் பெருமை அவர் வாழுங்காலத்திற்கானது மட்டுமா? அவருக்கானது மட்டுமா? (பெருமை என்ற சொல்லுக்கு ‘மிகுதி’ என்ற பொருளும் அகராதியில் தரப்பட்டிருக்கிறது. இந்த அர்த்தத்தில் பார்த்தால் தரணியிலே எல்லாமே நிறையக் கிடைத்து இல்லாமை இல்லாதுபோகவேண்டும் என்று அவர் வேண்டுவதாகவும் கூற முடியும்).

கண் திறந்திட வேண்டும் – யாருடைய கண்? அறிவுக்கண்ணெனில் எந்த விஷயத்தில் தெளிவு பெற? ’மூடிக்கொண்ட பூனைக்கண்’ ஏதாவது இங்கே குறிப்புணர்த்தப்படுகிறதா? கண் திறந்தால் காணக் கிடைப்பது கனிவா? கனலா? காற்றின் வழித்தடங்களா?

காரியத்திலுறுதி வேண்டும் / பெண் விடுதலை வேண்டும் / – இந்த வரிகள் ஏதேனும் குறிப்பான காரியத்தை, விடுதலையைச் சுட்டுகின்றனவா?

பெரிய கடவுள் காக்கவேண்டும் – ஏன் பெரிய கடவுள்? வெறுங்கடவுள் போதாததற்குக் காரணம் என்ன? பெரிய கடவுள் என்பதை பெருந்தெய்வம் என்பதாகப் பொருள்படுத்திக்கொள்பவர்களைப் பற்றிப் பேசிப் பயனில்லை. ’பெரிய கடவுள்’ என்று சொல்வது ஒரு பேச்சுவழக்காக இருக்கலாம். அல்லது, அவர் பேசும் பெரிய கடவுள் மனசாட்சியாக இருக்கக்கூடுமோ….

மண் பயனுறவேண்டும் என்ற வரி எளிதாகப் புரிவதுபோல் தோன்றினாலும் அதில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கவியலும். மண் என்பது உலகமா? பயிர்நிலமா? யாரால் பயனுற வேண்டும்? எப்படி? பயன் என்ற சொல்லுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, அதேசமயம், ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளன.

வானகம் இங்கு தென்படவேண்டும் – என்ற வரி விரித்துவைக்கும் அர்த்த சாத்தியப்பாடுகள் நிறைய. அங்கே தொலைதூரத்தில் இருப்பதால் அதைப்பற்றிய அலங்காரக் கனவுகளும், பீதிக்கனவுகளும் நம்மிடையே நிறையவாய். ஒருவேளை அதை அருகில் பார்த்துவிட்டால் பின் நம் மனங்களின் பிரமைகள் அகன்று இங்கான வாழ்க்கையை முழுவீச்சில் வாழ ஆரம்பித்துவிடலாமோ? இதன் அடுத்த வரி ‘உண்மை நின்றிட வேண்டும்’ இந்த வரியோடு தொடர்புடையதாமோ?

ஓம் ஓம் ஓம் – என்ற இறுதி வரியைப் பொறுத்தவரை – ‘ஓம்’ என்னும் சொல்லுக்கு ’பிரணவ மொழி’, ’ஆம்’, என்ற பொருள், ’செய்வோம்’ என்பதாய் வரும் தன்மைப் பன்மை விகுதி என ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கின்றன.

பாரதியின் இந்தக் கவிதைக்கு இதுதான் அர்த்தம், இதுவே சிறந்த வாசிப்பு என்று நிறுவுவதல்ல நான் செய்வது. மாறாக, அப்படி நிறுவவேண்டிய தேவை யில்லை என்ற கருத்தை முன்வைப்பதும், அப்படி நிறுவப் பார்ப்பவர்களின் போதாமையை கோடிகாட்டு வதுமே என் நோக்கம்.

எல்லாவற்றையும் விட மேலாக,

பாரதியின் இந்தச் சிறு கவிதை சகலமும் புரிந்து விட்டாற்போல் பலராலும் மேற்கோள் காட்டப்படும் இந்தக் கவிதையில் இடம்பெற்றுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தசாத்தியப்பாடுகளை, வாசகப்பிரதி களை எடுத்துக்காட்டவும், அதன் காரணமாக இந்தக் கவிதை என் வாசக மனதுக்கு மிகவும் பிடித்த நவீன கவிதைகளில் ஒன்றாக இருப்பதைப் பகிர்ந்துகொள்ள வுமே இந்தச் சிறு கட்டுரை.

  •  
Series Navigationஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் தொடர்ந்து நிலவைச் சுற்றிவர, விக்ரம் தளவுளவி நிலவில் சாய்ந்து ஓய்வெடுக்கிறது.உடல்மொழியின் கலை
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *