- பொருளதிகாரம்
நவீன கவிதை நாட்குறிப்பேடு அல்ல
கவிஞர் என்ன நினைத்து எழுதினாரோ அதையே
வாசிப்போரும் வழிமொழிவதற்கு…
அதே சமயம் கவிதை கசங்கிக் கிழிந்த தாளல்ல –
பொருள்பெயர்த்தல் என்று கூறி யதைக்
கண்டபடி துண்டுதுண்டாய்ப்
பிய்த்துப்போடுவதற்கு;
சக வாசக மனதைக் குப்பைத்தொட்டியாக பாவித்து
அதில் கவிதையின் அர்த்தமெனச் சிலவற்றைச்
சுருட்டியெறிவதற்கு.
ஒற்றையர்த்தம் எனும் அதிகார மையத்தைச்
சிதறடிப்பதான போர்வையில்
குறிப்பிட்ட சில அர்த்தங்களைக் கவிதையின்
மேல் கைபோன போக்கில் பொதியேற்றிச்
சுமக்கவைக்கலாகாது
வாசகப்பிரதியென்ற பெயரில்.
கவிதை விரித்துவைக்கும் பல கொடுங்கோலாட்சிச்
சித்திரங்களை
ஒற்றைச் சக்கரவர்த்தியை சாணியடித்தலாய்
முடிந்த முடிவான வாசிப்பாக முன்வைத்தல்
வாசக வித்தகமா?
வன்மப் பித்தலாட்டமா?
பிரதியின் அர்த்தம் பற்பல என்று சொல்வதால்
பிரதிக்கு நான் விரும்பும் ஒற்றையர்த்தத்தைத்
தரவும் அதையே பரவலாக்கவும்
உரிமையுண்டு எனக்கு மட்டுமே என்பார்
வெறும் வாசிப்போர் அல்ல;
வாசிப்பு வன்முறையாளர்கள்.
வாசகப்பிரதிகள் பலப்பல வெனச் சொல்லியவாறே
கவிதையின் வரிகள் முன்வைக்கும் பிம்பங்களை
யொரு மொந்தையாக்கி
நிந்தனைக்கென்றே கட்டம்கட்டிவைத்திருக்கு
மொரு திருவைக்
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றமுடியவில்லையே
என்ற கோராமையோடு
நூறாயிரம்விதமா யொரேயொரு பொருளைக்
கவிதையின் வரிகள் வரியிடைவரிகளில்
வலிந்தேற்றிக் காட்டினா லது
வாசிப்பின் ரோகம்;
வாசிப்புக்குச் செய்யும் துரோகம்.
அப்படியே அதுதா னொரு கவிதையின்
மறைபொருளென்றாலும்
தனி யொரு கவிஞரின் வரிகள் தெரிவிப்பதெல்லாம்
கேள்விக்கப்பாற்பட்ட உண்மையென்று
கொள்ளத்தான் வேண்டுமா என்ன?
ஆபத்தானது ’ஆம்’ எனும் வாசக மனநிலை
கையடித்துச் சத்தியம் செய்தல்
கவிதைக்கு கைவரக்கூடாத கலை.
அவரவர் கேள்விகள் அவரவர் பதில்கள்
அவரவருக்கென்று விருப்புவெறுப்புகள்
பல்வகைப் பயன் கருதிக் கட்டும் பாட்டுக்கள்
பூட்டுகளுக்கேற்ற திறவுகோலா
கவிதையாக்கலும்
பொருள்கொளலும்?
அனைத்திற்கும் மேலா யொரு அடிப்படை உண்மை _
யதைக் கண்ணின் மணியெனக் கொள்வதே
மரபு நவீன மற்றெல்லா மெய்க் கவிஞர்களின்
மனத் தின்மையாக.
- நடுவில் பல பக்கங்கள் கத்தரிக்கப்பட்டு…
பாரிய பெருநிலத்தை
வாரிசுரிமையாய் வம்சச் சொத்தாய்
அரியணை யேறி யரசாண்டு துவம்சம் செய்த
கொடுங்கோலாட்சியாளர்களின் அநியாய
அக்கிரம
அநீதிகள் ஆக்கிரமிப்புகளையெல்லாம்
விரும்பி மறந்துவிடுபவர்கள் _
திரும்பத் திரும்ப மன்னித்துவிடுபவர்கள் _
வெகுசுலபமாய் கடந்துசெல்பவர்கள் _
வேகவேகமாய் தரைவிரிப்பின் கீழ்
மறைத்துவிடுபவர்கள் _
ஒரு புள்ளியிலிருந்து பார்க்கத்
தொடங்குகிறார்கள்
சகமனிதர்கள் அனுபவிக்கும்
சித்திரவதைகளை.
அதற்குமுன் அனுபவித்த
சாட்டையடிகளின்
ரத்தக்கசிவுகள் ரணகாயங்களின்
தழும்புகளைப் பார்க்க மறுக்கும் இவர்கள்
அவற்றைக் கணக்கிலெடுத்துக்
கொள்வதில்லை.
சென்ற பல வருடங்களில் சமத்துவம் பேசித்
தம் சொத்துமதிப்பைப்
பன்மடங்காகப் பெருக்கிக்கொண்டவர்களை சகமனிதநேயவாதிகளாகக்கூடப்
பார்க்கச் சித்தமாயிருக்கு
மிந்தச் சிந்தனையாளர்கள்
குறிப்பிட்ட ஒரு பகலிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள்
தம் பிரக்ஞையை.
அதுவே முதல் சூரியோதயமென
முழங்குகிறார்கள்.
இத்தனை காலம் சமத்துவம் போதித்த
வர்களதைச்சத்தியமாய்ப் பேசியிருந்தால்
இன்று அத்தனை மக்களுக்கும்
கிடைத்திருக்கும்
அடிப்படை வாழ்வுரிமைகள்.
இது புரியாதவர்களல்ல இவர்கள்;
பார்க்கமறுக்கும் அறிவுசாலிகளின்
விழிகளுக்கு அப்பால்
விரிந்துகிடக்கிறது பேருண்மை
வானம்போல்.
மொத்தமா யொரு தலையில் பழியைப் போட்டுவிடுவதே
பத்தரைமாற்று அறிவுசாலியாக உடனடி வழியென்றான பின்
சத்தமாய் இன்னும் சத்தமாய்
இன்னுமின்னும் சத்தமாய்ப்
போட்டுத் தாக்கி
குழிபறித்துப் புதைப்பதற்கென்றே
கிழிபடும் வரலாறு.
- 5. பாசறைப் பத்து
- நாளைய தீபாவளி
- முதியோர் இல்லம்
- சமீபத்திய இரு மலேசிய நாவல்கள் –
- 2020 ஆண்டில் நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் கூடி, மனிதர் இயக்கும் விண்கப்பல் சுற்றுலா தொடங்கத் திட்டம்
- ஓரிரவில்
- பின் வரிசையில் எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்
- ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- ஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை – ஒரு பார்வை