ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
அம்மாவின்
இளஞ்சூட்டுக் கையேந்தலில்
தொடங்கும் வாழ்க்கை
கவிழ்த்துக் கொட்டிய தேன்
மெல்ல மெல்லப் பரவி
மனப்பிராந்தியத்தைக்
இனிக்கச் செய்யும் …
தீயின் தகிப்பாகி
பாதங்கள் கொப்பளிக்கலாம் .
மாறி மாறி வந்து
நிழலின் அருமையை
வெயிலில்
உலர்த்திப் போகும் வாழ்க்கை
குலுக்கிய
நட்புக்கரம்
நம் கையைப் பதம் பார்க்கலாம்
பற்றி நெரித்த
மென் விரல்கள்
மௌனமான
காதல் கோலம் போடலாம்
உறவுகளின் இணைப்புச் சங்கிலி
மெல்ல விலகிச் செல்லலாம்
நாவின் சுவை நீங்கி
விரக்தியில்
மனம் நலியும்
தன் பாரம்
தனக்கே தாங்க முடியாமல்
வெறுமைக்குள் நுழைந்து
மனம்
தவம் மேற்கொள்ளும்
மரணம் வேண்டி ….