அ. திறனாய்வு பரிசில்
பேராசிரியர் க. பஞ்சாங்கம் பெயரால் ஒரு திறனாய்வாளர் பரிசில் ஒன்றை ஆண்டு தோறும் வழங்கத் தீர்மானித்துள்ளோம். கீழே அதற்கான அறிவிப்பு உள்ளது. உங்களுடைய ஆதரவினை எதிர்பார்க்கிறோம்.
பேராசிரியர் ,முனைவர்க.பஞ்சாங்கம்-சிறந்த
திறனாய்வாளர் பரிசில்-2020
வாழ்வின்போக்கினைத் தன் பட்டறிவு சார்ந்தும் பிறர்
பட்டறிவு சார்ந்தும் உற்றுநோக்கித் தெளிந்து இலக்கிய இயக்கங்களை நுட்பமாக விளங்கி புதியபுதியகோட்பாடுகளை
உட்படுத்திச் சங்ககாலம் முதல்இக்காலம் வரையிலான படைப்புகளைக் கூர்மையாக ஆய்ந்து
தமிழிலக்கியத்திறனாய்வை வளப்படுத்தி வரும் பேராளுமை ‘
பஞ்சு‘
எனும் க.பஞ்சாங்கம்.
தமிழ்த்திறனாய்வில் குறிப்பிடத்தக்க இளம்திறனாய்வாளர்களை
ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்பால் அன்புகொண்டநண்பர்கள் சிலரால் அமைக்கப்பட்டதே
இப்பரிசில்.
தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்
சிறந்த திறனாய்வு நூலுக்கு ரூபாய் 10 ஆயிரம்
பரிசும் பாராட்டுச் சான்றிதழும் பேராசிரியர்க.பஞ்சாங்கம் அவர்களின் பிறந்தநாளையொட்டி
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்குரிய பரிசிலினைத்
தேர்ந்தெடுக்கும் பொருட்டு 2019 சனவரி
முதல் டிசம்பர் வரை வெளிவந்துள்ள நூலின் இரண்டு படிகளைச் சனவரி 15,2020க்குள்
கீழுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
தேர்வுக்குழு வின் முடிவே இறுதியானது.
முகவரி: பாரதிபுத்திரன்
எண்10,
நான்காம்குறுக்குத்தெரு
துர்கா
காலனி
செம்பாக்கம்
, சென்னை-600073
மின்னஞ்சல்:
nayakarts@gmail.com
செல்பேசி:94442
34511
ஆ. எது சுதந்திரம் ?
சுதந்திரம் ஒரு பொல்லாத வார்த்தை.
அதற்கு இலக்கணம் எழுதப்பட்டிருக்கிறதா ? விதிமீறல்களை எப்படிஅறிவது. தனிமனிதன் தன்னிடத்தில் கொட்டிக்கிடக்கிறது என நம்பப்படும் சுதந்திரம் குடும்பம், பொதுவெளி, சமூகம், தேசம் என்று வருகிறபோது, படிப்படியாக அதன் கடிவாளம் இறுக, வீரியம் குறைகிறது. எனது சுதந்திரத்திற்கு முதல் ஆபத்து அப்பா என்ற பெயரில் வந்தது, அவர் சுமத்திய விதிமுறைகள் பிள்ளைகள் நலனுக்காக எனச்சொல்லப்பட்டது. அறம், அமைதி, ஒழுங்கு, கூடிவாழுதல், மக்கள் நலன், தேசப்பாதுகாப்பு எனச் சுதந்திரத்தில் குறுக்கிட உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
தந்தை என்ற காவலர் பிடியிலிருந்து தப்பித்து பணி, மணவாழ்க்கை என்றுவந்தபோது மீண்டும் எனது சுதந்திரத்திற்கு கடிவாளமோ என நினைத்தேன். மணச் சடங்கின் மூலமாக அவளைப் பற்றி நானும் என்னைப்பற்றி அவளும் அதிக அறிந்திராத நிலையில், இருதரப்பு பெற்றோர்களின் திருப்திக்கு, உறவினர்களின் ஆசீர்வாதத்துடன் இணைந்தபோது சுதந்திரம் என்பது சம்பாதிக்க, இருவருமாக பீச்சுக்கும் சினிமாவிற்கும்போக, அவள் பரிமாற நான் சாப்பிட, அனைத்துக்கும் மேலாக மக்கட்பேறுக்கு விண்ணப்பிக்க ஆசிவதிக்கப்பட்டதென விளங்கிக்கொண்டேன்.
மனைவியின் தந்தை பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தின்போது இந்தோ சீனா யுத்த த்தில் கலந்துகொண்டவர். அவர்கள் குடுடும்பத்தில் அனைவரும் பிரெஞ்சு குடிமக்கள். எனவே இந்திய தேசத்தை விட்டு வெளியேற சுதந்திரம் எனக்கு இருந்தது . இதனைத் துரிதப்படுத்தியவர் எனக்கு ஆர். ஓ வாக இருந்த அதிகாரி. அப்பா கிராம முனுசீப். அவருக்கு மகனை கலெக்டராக பார்க்க ஆசை. ஆனால் அவரால் வருவாய்துறையில் என்னை கிளார்க் ஆகத்தான் பார்க்க முடிந்தது.
ஒரு முறை கோப்பு ஒன்று அவர் மேசைக்குச் சென்றது. என்னை அழைத்தார். « என்ன நீ உன் விருப்பத்துக்கு எழுதியிருக்கிறாய். பழைய கோப்பைப் பார்த்து அப்படியே எழுதவேண்டியதுதானே ? ADM(Additional District Magistrate) கேட்டால் என்னயா பதில் சொல்வேன் » என எறிந்து விழுந்தார். ஆட்சியர் அலுவலகம் என்றாலும் வருவாய் துறை செயலராக இருந்த ஆட்சியர், புதுவை அரசு தலைமைச் செயலக அலுவலகத்தில் பணி புரிவார். அவர் District maagistrate -ம் கூட. அதுபோலவே மாவட்ட ஆட்சியரின் அலுவலகமாகச் செயல்பட்ட எங்கள் அலுவலகத்தில் வருவாய் துறை துணைச் செயலரும், கூடுதல் மாஜிஸ்ட்ரேட்டும் ஒருவரே. மாஜிஸ்ட்ரேட் என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் தலையிட. அன்றைக்கு நான் சமர்ப்பித்திருந்த கோப்பும் அருகிலிருந்த வீராம்பட்டணம் என்ற கடலோர கிராமப் பிரச்சனை சார்ந்த து. கோப்பு section 32 (the police act) சம்பந்தப்பட்டது.
என்னுடைய வருவாய் துறை அதிகாரி (Revenue Officer) யின் குணம் பழைய கோப்புகளில் உள்ள வார்த்தைகளை வரி பிசகாமல் கமா, முற்றுப்புள்ளி உட்பட அப்படியே உபயோகிக்கவேண்டும், இல்லையெனில் கோப்பில் சந்தேகம் வந்துவிடும். கோப்பு நேராக வருவாய்துறை அதிகாரி மேசைக்குப் போவதில்லை. அதற்கு முன்னதாக செக்ஷன் தாசில்தார் பார்த்திருதார் . R.O வின் கோபத்தைச் சந்திப்பது முதன் முறை அல்ல, எனவே நானும் கோபப்பட்டேன். « கோப்பை இப்படித்தான் போடவேண்டும் என்ற விதிமுறையும் இல்லையே, வேண்டுமானால் எழுத்து மூலம் ஒரு சுற்றறிக்கை அனுப்புங்கள், அதன்பின் செய்கிறேன், எனக்கூறிவிட்டு வந்தேன் » அவர் பதிலுக்கு « இங்கே நாங்கள் சொல்கிறபடி வேலையை செய்ய இஷ்டம் இல்லைன்னா எழுதிக்கொடுத்திட்டு போ » என்றார். வீட்டிற்குத் திரும்பினேன் திருமணம் முடித்து எட்டாண்டுகளுக்குப் பிறகு மனைவிமூலம் எதற்கும் இருக்கட்டுமென பெற்றிருந்த பிரெஞ்சுக் குடியுரிமை திமிரைக் கொடுத்திருந்தது. பிரெஞ்சு சுதந்திரத்தை சுவாசிக்க நினைத்தேன்.
அப்போது மாமியார் வீட்டோடு இருந்தேன். அவர்கள் வீடு புதுச்சேரி அப்போது மேலண்டை புல்வார் என்கிற இன்றைய அண்னாசாலையில் இந்தியன் காபி ஹவுஸிற்கு அடுத்தவீடு. சம்பவத்திற்கு ஒருவாரத்திற்கு முன்புதான் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்த தொழில் மற்றும் கலால் துறை ஆணையர் பாக்கியம் பிள்ளை திருநெல்வேலிகாரர், « எலே உனக்கு துணைத் தாசில்தார் உத்தியோக ஆர்டர் வந்திடும் » எனச் சொல்லியிருந்தார். சிலமாதங்களுக்குமுன் துறை சார்ந்த Internal examination எழுதியிருந்தேன். இந்தியச் சுதந்திரத்தைக் காட்டிலும் பிரெஞ்சு சுதந்திரம் கவர்ச்சியாக இருந்து. பிரெஞ்சு பர்ஃப்யூகளுடன் புதுச்சேரியில் வலம்வந்த பாரீஸ் வாசிகள், தேவலோகப் பிரஜைகளாக கண்ணிற்பட புறப்பட்டுவந்துவிட்டேன். பிரான்சுக்கு வந்ததும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தபோது மாதம் 800 ரூபாய் சம்பாத்தியத்தில் இந்தியாவில் உழைத்தவனுக்கு, உதவியத்தொகையாக 4200 பிராங் கொடுத்தார்கள். எனது சமூக இயல் முதுகலைக்கு equivalent வாங்க இயலவில்லை. Alliance française -ல் D4 வரை கற்ற பிரெஞ்சுமொழி போதாதென்கிற நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வழிகாட்டுதலில் DPECF, பின்னர் DECF (accountancy). அதன் பின்னர் மொழிபெயர்ப்பாளர் டிப்ளோமா. கடைசியில் வாய்த்தது உதவி கணக்காயர் (Aide comptable) பணி. மீண்டும் சுதந்திரம் வேண்டி, உதறி விட்டு சொந்தமாகத் தொழில். சுதந்திரத்திற்காக கொடுத்த விலை சற்று அதிகம்தான்.
எனினும் எனக்கான சுதந்திரங்கள் எவை என்ற கேள்வி இன்றைக்கும் தொடர்கிகிறது ? சில மட்டும் தெளிவாக இருக்கின்றன. எனது குறைகளோடும் நிறைகளோடும் வாழ அனுமதித்துக்கொள்ளும் சுதந்திரம். வேண்டுதல் வேண்டாமைகளை நிரந்தரமாக்கிக்கொள்ளாத சுதந்திரம். மறுப்பதை ஏற்கவும், ஏற்றதை மறுக்கவும் மனதை அனுமதிக்கும் சுதந்திரம். விரும்பி சாப்பிட்டப்பொருள் பூஞ்சைப் படிந்திருந்தால் எறியும் சுதந்திரம்.
ஒக்கல் வாழ்க்கை எனக்கென்று வழங்கிய எளிய பூமராங்குகள். இவற்றை முடிந்த மட்டும் கண்ணாடியில் தெரியும் எனது பிறன், மனைவியின் கண்கள், உண்மையான நட்பு ஆகியோருக்கு எதிராக உபயோகிக்க கூடாதென்பதில் கவனமாக இருக்கிறேன்.
—————————————