’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 1 of 4 in the series 1 டிசம்பர் 2019

  1. வனாந்தரம்



    வனம் பெருவரம்;
    வனம் கனவுமயம்.

    பெருவிலங்குகளெல்லாம்
    அருகில் வந்து நலம் விசாரிப்பதா யொரு
    நினைவு இருந்துகொண்டேயிருக்கும்.

    வனமொழியில் கவிதையெழுத வாய்க்குமா
    என்றொரு ஏக்கம் தாக்குமெப்போதும்.

    வனச்சுனை நீரருந்தும் தாகம் தீர்க்கும்
    வனமோகம்.

    வனப்புலம்
    தினக்கணக்குக்கப்பால்;

    வனராஜன் வீதியுலா
    பொழியருவியில் மேல்நோக்கிச் செல்லும்.

    வன பலம்
    வழியறியாத்த இருளடர்வு.

    வனமௌனம்
    புள்ளினங்களின் வாய்சொல்லும்.

    அவரவர் வனம்
    அவரவருக்கான வனம்
    அறிந்த வனம்
    அறியாத வனம்
    வனமான வனம்
    வனமாகா வனம்….

    வனம் அச்சமூட்டும்;

    வனம் அசரவைக்கும்.

    வனப் பச்சை தனியானது.

    வனராகமும் தாளமும் சுருதிலயமும்
    பிரதியெடுக்கவியலாதது.

    வனத்துவம் பொருள்பெயர்க்க
    வனமேக வேண்டும்…..
    வனமாகவும்…….
  •  
  • தெளிவு

நடுவில் கொஞ்சம் பக்கங்களைக் காணவில்லைதான்.
என்றாலும் படித்துக்கொண்டிருக்கிறேன்.
சமயங்களில் சந்தேகம் வந்துவிடுகிறது
காணாமல்போன பக்கங்கள்தான் ஒட்டப்பட்டிருக்கிறதோ
முழுப்புத்தகம் தொலைந்துபோய்விட்டதோ என்று.
யாரிடம் கேட்பது?
மொத்தப் புத்தகம் என்றால் அதில் முதல் இடை கடை
மூன்றும் இருக்கவேண்டு மெனில்
ஒன்றின் ஆரம்பம் இன்னொன்றின் முடிவாகவும் இருக்க
நடுவில்தான் பக்கங்களைக் காணவில்லை யென்று
எப்படி அத்தனை கறாராகச் சொல்வது?
அங்குலத்தில் நீரளக்கலாகாதுபோலவே
இந்தத் தாற்காலிகத் தங்குமிடத்தில்
எனதுனது வாழ்வின் பக்கக்கணக்கும்
எக்குத்தப்பாகவே யிருக்குமென்ற ஞானம்
அடிக்கடியில்லையென்றாலும் அவ்வப்போது கைகூட
நடுவில் காணாமல்போய்விட்ட கொஞ்சப் பக்கங்களைத்
தேடியும் தேடாமலும்
படித்துக்கொண்டிருக்கிறேன்
புத்தகமாகிய நான்
என்னை.

  • குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு
No photo description available.

போகக்கிடைத்த நாடுகளின் பெயர்ப்பட்டியலிலோ
பேசக்கிடைத்த அரங்குகளில் குழுமியிருந்த
பார்வையாளர்கள் எண்ணிக்கையிலோ
பரஸ்பர முதுகு சொறிதலாய் பக்கம்பக்கமாக
எழுதப்பட்ட ஆஹா ஓஹோ விமர்சனக்
கட்டுரைகளிலோ
பெரிய பதவிகளிலோ
பிரமுகர்களின் அறிமுகங்களிலோ
பாரிய அரசியல்கட்சியின் அரவணைப்பிலோ
ஊர் சாதி இன மத குழு மனப்பான்மையிலோ
நேர் நிறை இலக்கணமறிந்ததிலோ
அறியாததிலோ
கார்கால மழைக்கொரு புதுப்பெயர் சேர்ப்பதிலோ
வாலைத் தலையாக்கி வித்தைகாட்டுவதிலோ
பாலையைச் சோலையென்று
அம்மியாய்க் கும்மியடித்துச் சொல்வதிலோ
அடங்காது…..

பூக்களும் பூங்காற்றும் புறாக்களும்
அலைக்கழியும் மனம் ஆற்றி
அக்கடா என்று அமர்ந்திருக்க
அன்றாடம் தேடிவரும் மனிதக்கூட்டமும்
அங்கே பூரணமாக இருந்தாகவேண்டும்.

அதுவேயாம் கவிதையும்.

  •  
  • நீ யெனும் நிழற்படம்
No photo description available.

இந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தபடி ஒரு படம்;
அந்தப் பக்கம் ஒருக்களித்து நின்றபடி ஒரு புகைப்படம்;
சாய்ந்தகோபுரமாய்க் காட்சியளிக்கும் பாறையில்
அமர்ந்தபடி ஒரு படம்
சலசலத்தோடும் நதியில் கால்நனைத்தபடி ஒரு படம்
சிறுமியாய் ஒரு படம்;
சிற்றாடையில் ஒரு படம்;
சிகப்புத் தீற்றலாய் உதட்டுச்சாயம் தகதகக்க
ஒரு படம்;
சீற்றப்பார்வையோடு ஒரு படம்;
அண்ணாந்து பார்த்தபடி ஆழ்ந்த யோசனையில் ஒரு படம்;
அதி கவனமாய் திருகப்பட்டு வெகு இயல்பானதாய்க் காணும்
நுண் மயிரிழைகள் படர்ந்த நெற்றி துலங்க ஒரு படம்;
துலாக்கோலைத் தாங்கிய பாவனையில் ஒரு படம்;
தருவித்துக்கொண்ட
குழந்தையின் நிர்மலச் சிரிப்புடன் ஒரு படம்;
இதழோரம் இரண்டு நிமிட ஆயத்த நூடுல்ஸாய்
விரும்பும் நேரம் வரவழைக்க முடிந்த
இளக்காரச் சிரிப்புடன் படங்கள்
இருபதுக்கும் மேல்
இன்னும் இதுபோல்…
இன்னுமின்னும்
இது போல்……..

Series Navigationமொழிவது சுகம் டிசம்பர் 1 2019
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *