செலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள் – இரண்டாம் பாகம்

This entry is part 4 of 20 in the series 2 பெப்ருவரி 2020


சிறுகதை – அழகர்சாமி சக்திவேல்
கி.பி 1896, மார்ச் 16
அந்த யட்சி, திரும்பி என்னைப் பார்த்தாள். ஆகா..என்னவொரு சிருங்காரப் பார்வை! “மன்னிக்கவும்” என்று நான் சொல்லவந்த ஒற்றை வார்த்தை, அப்படியே, என் நாக்கிலேயே நின்று போனது. அவள்தான் பேசினாள். “நீங்கள்தானே, இந்த பண்டுன் கவிதைக்கு, சற்றுமுன் இசை வாசித்தது?” அவள் குரலும் இசைபாடியது. சற்றே காமத்தில் தடுமாறியிருந்த எனது குரலை, நான் இப்போது சீராக்கிக்கொண்டேன். “ஆம். ஆனால், நான் வாசித்ததோ, தொலைதூரத்தில் இருந்து. அப்படியிருக்க, அது இங்கிருந்து, உங்களால் எப்படிக் கேட்க முடிந்தது? நீங்கள் வாசித்த இந்த செருளிங் இசையும், மெல்லிய இசைதான். அப்படியிருக்க, அது எப்படி என்னை, அவ்வளவு தூரத்தில் வந்தடைந்தது?” நான் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனேன். அவள் கலகலவென் சிரித்தாள். அந்த சிரிப்பில் அவள் மார்புகள் குலுங்கியது. நான் தீர்மானித்துவிட்டேன். “இவள்தான் என் காதலி என்று”, அவள் கலகலச் சிரிப்பை நிறுத்திச் சொன்னாள். “நான் அன்ன யட்சி. இந்த செலேடர் ஆற்றின் ஒவ்வொரு அசைவையும் நான் அறிவேன்.” என்றாள். அவள் அப்படிச் சொல்லும்போது, அவள் மார்புகள் இரண்டும், திமிரோடு நிமிர்ந்து நின்றன. அவள் யட்சி என்றவுடன், நான் மனம் தளரவில்லை. அவளை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி மட்டுமே என்னை உந்தித் தள்ளியது. நான் நேற்று பாவாங் சொல்லிக்கொடுத்த, யட்சி வசிய மந்திரத்தை, இப்போது சொன்னேன். அது, எவ்வளவு பெரிய தவறு என்பதை, நான் பின்னால்தான் உணர்ந்து கொண்டேன். மீண்டும் செருளிங் குழல் வாசிக்கப்போன அன்னயட்சி, அதை நிறுத்தினாள். இப்போது என்னையே பார்த்தாள். நான் எனது தினவெடுத்த தோள்களையும், பரந்த மார்பினையும் அவளுக்கு எடுப்பாகக் காண்பித்தேன். அவள் என் ஆண்மையில் கரைந்ததன் அடையாளமாய், இடுப்பைச் செல்லமாய் ஆட்டி நெளிந்தாள். எனது உடல் திடீரென்று சூடானது. சூட்டில், என் மார்புகளைத் தாக்கிய, குளிர்க்காற்று எனக்கு இன்ப வேதனையைக் கொடுத்தது. நான், காற்றில் அலைந்த எனது மார்பு முடிகளைத் தேய்த்துத் தேய்த்து குளிரைப் போக்கிக்கொண்டேன். அவள் மார்புகள், அவள் விடும் பெருமூச்சால், மேலும் கீழும் ஆடியது. நான், இப்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன். “நீ ஒரு பேரழகி” என்றேன். அவள் பதில் பேசாது புன்முறுவல் பூத்தாள். “நீ.. நீ எனக்குக் கிடைப்பாயா?” எனது இந்தக் கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை போலும். அன்னயட்சி என்னை ஆச்சரியமாகப் பார்த்தாள். “நானோ யட்சி.. நீயோ ஒரு பாட்டின் மகன். அவ்வளவே” என்றாள். “அதனால் என்ன… எனது வீரமும், உன் மேல் நான் கொண்ட காதலும் அசாதாரணமானது. என்னால் உன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்“. அவள் மறுபடியும் சிரித்தாள். “நீ வீரனா?” என்று சொல்லிக்கொண்டே இன்னொருமுறை சிரித்தாள். “சரி.. உன் வீரத்தைப் பார்ப்போம். இதோ, கீழே நீந்திக்கொண்டு இருக்கும் இந்த மீனைப் பிடித்து, எனக்குத் தா” என்றாள். நான் அந்த மீனைப் பார்த்தேன். அது அளவில், மிகமிகச் சிறிய சுறாவாக இருந்தது. அந்தக் குள்ளச் சுறாவின் கண்கள் மட்டும் நீலமாக, அந்த இரவில் மினுமினுத்தது. இந்தச் சின்ன மீனை என்னால் பிடிக்கமுடியாதா? நான் ஏளனமாக அவளைப் பார்த்தேன். “என் பெயர் போகா. என் பெயரே மீனின் பெயர்தான். நிச்சயம் இந்த மீனைப்பிடித்து உனக்குத் தருவேன். பதிலுக்கு, நீ எனக்கு என்ன தருவாய்?”. அவள் இப்போது முறைத்தாள். “நீ என்ன கேட்டாலும் தருகிறேன்” என்றாள். நான் சரேலென தண்ணீருக்குள் பாய்ந்தேன்.
கி.பி 2019, டிசம்பர் 16
“பேசவேண்டும் ஸ்டெப்னி” என்ற ஸ்டெல்லா, மஞ்சள் நைட்டிக்குள் இருந்தாள். அவள் உள்ளாடை எனக்குத் தெரிந்தது. அதற்கும் கீழே, செக்ஸியான அவள் தொடைகள், என்னைக் கொஞ்சம் பொறாமைப்பட வைத்தது. “என்ன விஷயம்” என்றதுமே, “அந்த ஜெரால்ட்” என்று ஆரம்பித்தாள் ஸ்டெல்லா. நான் உடனே சிரித்தேன். “ஸ்டெல்லா.. ப்ளீஸ்.. நாளைக்கு லஞ்ச் டைமில் பேசலாமே?” என்று நக்கலும், கெஞ்சலும் கலந்து நான் பேசியதும், ஸ்டெல்லா அமைதியானாள். ஆனால், அவளது முகம் வாடிப்போனதைக் கண்டதும், நான் துணுக்குற்றேன். “சரி சொல்லு” என்றதும் தான் அவள் மனதில் சந்தோசம் வந்தது. “ஸ்டெப்னி.. நான் ஜெரால்டைக் காதலிக்கிறேன் ஸ்டெப்னி” என்று அவள் சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. என்னால் இதை நம்பவே முடியவில்லை. “என்ன ஸ்டெல்லா சொல்கிறாய்? அவன் யாரையாவது காதலிக்கிறானா என்று உனக்குத் தெரியுமா?” என்று வினவினேன். “நிச்சயமாய் யாரையும் அவன் இதுவரைக் காதலிக்கவில்லை ஸ்டெப்னி. நான் எல்லா நண்பர்களையும் கேட்டுவிட்டேன்” என்றாள். எனக்கு இன்னும் அதிர்ச்சி கூடியது. நான் அவளுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று ஆழமாக யோசித்தேன். “ஒரு வேளை.. அவன் உன் காதலை, ஒத்துக்கொள்ளவில்லை என்றால்?” நான் அந்த வார்த்தைகளை, தயங்கித் தயங்கித்தான் சொன்னேன். ஸ்டெல்லா அழுதேவிட்டாள். “என்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது ஸ்டெப்னி. நான், இந்த இரண்டு மாதங்களில், நிறையவே கனவுகளை வளர்த்து விட்டேன். என் நினைவுகள் முழுதும் ஜெரால்ட்தான் இருக்கிறான். நான் யாருக்காகவும், அவனை இழக்கத் தயாராயில்லை” என்று அவள் சொன்னபோது, அவளது அந்த உறுதியான காதல் எனக்குப் புரிந்தது. நான் கொஞ்ச நேரம் யோசித்தேன். “சரி..ஜெரால்டிடம் இது பற்றி நாம் இருவரும் பேசலாம். இப்போதைக்கு நீ எதுவும் யாரிடமும் சொல்ல வேண்டாம். ஜெரால்டிடமும் எதுவும் சொல்லவேண்டாம். சரியா>”. ஸ்டெல்லா, மறுபேச்சுப் பேசாமல் தலையாட்டினாள். “அழகான அவள் வளைந்த, கனிந்த உதடுகள்.. மறுபடியும் எனக்கு, ஸ்டெல்லா மீது பொறாமை வந்தது. ஸ்டெல்லா அவள் அறைக்குப் போனாள். நான் தூங்கிப் போனேன்.
கி.பி 1896, மார்ச் 16
அந்தக் குள்ளச்சுறாவைப் பிடிப்பது, அப்படி ஒன்றும் எளிதாய் இல்லை. என் கை அகலத்தை விடச் சின்னதாய் இருந்த அந்த குள்ளச்சுறா, வளைந்து வளைந்து, என் கைகளுக்குள் அகப்படாமல் நீந்தியது. அவசரத்தில், நான் என் டீகம் ஈட்டியையும் வேறு, மறந்து வைத்துவிட்டு வந்து விட்டேன். நான் அதற்காய் சோர்ந்துவிடவில்லை. எனது மனது முழுவதும் அன்னயட்சி இருந்தாள். அவளுக்காக, அந்த நேரத்தில், நான் எதையும் செய்யத் தயாராக இருந்தேன். நான் எனது மீன்பிடித் திறமை, அனைத்தையும் உபயோகித்துப் பார்த்தேன். முடியவில்லை. அந்தக் குள்ளச்சுறா,, கடலுக்குள் அடியில், மிக ஆழத்தில், என்னை, அதன் நீலக்கண்களைக் கண்சிமிட்டி, கண்சிமிட்டி , உள்ளே அழைத்துச் சென்றது. எனக்கு இப்போது அந்தக் குள்ளச்சுறாவின் நோக்கம் புரிந்து போனது. இதற்கு மேல், கடலின் ஆழத்துக்குச் சென்றால் நான் இறந்து போவேன் என்பது எனக்குப் புரிந்தது. நான், எனது போராடும் எண்ணத்தைக் கைவிட்டேன். தண்ணீரின் மேல்பரப்புக்கு வந்தேன். அங்கே, அன்னயட்சி, இன்னமும் புல்லாங்குழலை, மூக்கில் வைத்து ஊதிக்கொண்டு இருந்தாள். நான் வெளியே வந்ததைப் பார்த்து, குழல் இசைப்பதை அவள் நிறுத்தினாள். “என்னவாயிற்று?” என வினவினாள். நான் எனது வெறும் கைகளைக் காட்டினேன். “எனக்குத் தெரியும்” என்ற ஏளனப்பார்வை பார்த்துக் கொண்டே, யட்சி என்னை விட்டு அகன்றாள். “அவள் வெள்ளிப்படகு போகிறது. என் உயிர் வெள்ளிப்படகில் போகிறது”, நான் பித்தனைப்போல் புலம்பிக் கொண்டிருந்தேன். அன்னயட்சி என்னைவிட்டு முற்றிலும் மறைந்தாள். நான் என் சம்பன் படகில் அயர்ந்து விழுந்தேன். அப்படியே தூங்கிப்போனேன்.
கி.பி 2019, டிசம்பர் 20
ரெண்டுநாள் கழித்து, ஜெரால்ட் என் அலுவலக மேசைக்கு வந்தான். நான், முடிக்கவேண்டிய, எக்கச்சக்கமான வேலைகளில் மூழ்கிப் போய் இருந்தேன். அவன் தொண்டையைச் செருமிக் கொண்டான். “ஸ்டெப்னி” என்று அவன் என்னைக் கூப்பிட்டதுமே, “எனக்கு வேலைகள் நிறைய இருக்கு ஜெரால்ட்.. அறுக்காமல் வந்த விஷயத்தைச் சீக்கிரம் சொல்” என்றேன். “ஐ லவ் யூ.. என்னால், இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை ஸ்டெப்னி” என்றான் ஜெரால்ட். நான், இது ஏற்கனவே எதிர்பார்த்த விசயம்தான். நான், அவனையே கொஞ்ச நேரம், உற்றுப் பார்த்தேன். “உன் முடிவை நீ சொல்லி விட்டாய். நான் என் முடிவைச் சொல்ல எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு. புத்தாண்டுக்கு முந்திய நாள், நாம் எங்காவது சந்திப்போம். சந்திக்கும் இடத்தை நான் பிறகு சொல்கிறேன். ஓகேவா?” என்றேன். “எனக்கு ஓகேதான். நிச்சயம் நல்ல முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றான் ஜெரால்ட். நான் பதிலுக்கு ஒரு புன்னகை பூத்தேன். “அப்பா.. இது போதும்” என்று இடத்தை விட்டு அகன்றான் ஜெரால்ட். நான், ஜெரால்ட் மற்றும் ஸ்டெல்லா விசயத்தில், என்ன முடிவெடுக்கவேண்டும் எனக் குழம்பினேன்.

கி.பி 1896, மார்ச் 17
அடுத்தநாள் காலை. நான் இன்னும் அதே இடத்திலேயே, என் சம்பன் படகில் இருந்தேன். பசி எடுத்தும், எனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. “எப்படியும் அன்னயட்சியைக் கவர வேண்டும்” நான் மனதுக்குள் தீர்மானித்தேன். அப்போதுதான், நான் கீழே தண்ணீரைக் கவனித்தேன். குள்ளச் சுறா என்னைப் பார்த்துக்கொண்டே நீந்துவதை நான் கவனித்தேன். “உன்னால் என்னை ஒரு போதும் பிடிக்கமுடியாது” என்ற திமிரில், அது என் கிட்டவந்து போக்குக் காட்டுவதாய், நான் உணர்ந்தேன். நான் இப்பொது ஆவேசமானேன். என் தினவெடுத்த தோள்கள் துடித்தது. நான் மறுபடியும் நீருக்குள் குதித்தேன். இந்த முறை நான் எனது டீகம் ஈட்டியை மறக்காமல் கையில் எடுத்துக் கொண்டேன். குள்ளச்சுறா என்னை விட்டு விலகி விலகி நீந்தியது. நான் விடுவதாக இல்லை. என் டீகம் ஈட்டியால், அது விலகி நீந்தும் திசையை, மாற்றி மாற்றி அலைக்கழித்தேன். எனது இந்த சாமர்த்தியம் எனக்குப் பலனைக் கொடுத்தது. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், குள்ளச்சுறா சோர்வடைந்தது. இதுதான் தக்க தருணம் என, நான் சுறாவைக் கையில் பிடித்தேன். எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அன்னயட்சியே, எனது கைகளுக்குள் இருப்பது போல, எனது மனம் ஆனந்தத்தில் மிதந்தது. எல்லாம் எல்லாம், சில கணங்கள்தான். இப்போது, நான் ஏதோ, எனக்கருகில், நிழலாடுவதுபோலத் தோன்ற, நான் திரும்பிப்பார்த்து, அதிர்ச்சியால் உறைந்து போனேன். எனது எதிரில், ஒரு இராட்சதச் சுறா, என்னையே முறைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தது. எனக்கு இப்போது விஷயம் புரிந்துபோயிற்று. நான், அந்த குள்ளச்சுறாவுடன் தப்பித்து வேகமாய் நீந்தினேன். ராட்சதச் சுறா, என்னை விடாமல் துரத்தியது. நான், சுறாவுக்கு இரையாகிவிடுவேனோ என்று பயந்து போனேன். அந்த உயிரைக் காத்துக்கொள்ளும் பயத்தில், நான் டீகம் ஈட்டியை, ராட்சதச் சுறாவின் மேல், பாய்ச்சினேன். சுறா இன்னும் என்னை விடவில்லை. “அன்னயட்சியை அடைய நான் எதையும் செய்வேன்” என்று ஆவேசமாகக் கத்திக்கொண்டே, ராட்சதச்சுறாவின் உடம்புக்குள், எனது டீகம் ஈட்டியை மாறி மாறி, இறக்கிக்கொண்டு இருந்தேன். நிறையநேரப் போராட்டத்திற்குப் பிறகு, ராட்சதச்சுறா மடிந்தது. அதன் ரத்தவெள்ளத்தில், நான் இருந்த கடல்பகுதி, சிவப்பாய் மாறியது. நான், என் இடையில் கட்டியிருந்த அந்தக் குள்ளச் சுறாவுடன், எனது சம்பன் படகை வந்து அடைந்தேன். சுறா, அரைமயக்கத்தில் இருந்தது. அதனை, மறக்காமல், எனது லூக்கா கூடைக்குள் வைத்துப் பூட்டினேன். பாவாங் சொல்லிக்கொடுத்த, யட்சி மந்திரங்களை, நான் முணுமுணுத்துக் கொண்டே இருந்தேன். “இனி அன்னயட்சியை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பேன்? அவளிடம் என் வெற்றியை நான் எவ்வாறு கொண்டாடுவேன்?”. என் மனம், காதல்மோகத்தில் பரிதவித்தது. நான் அன்னயட்சியைத் தேடுவதற்காய், எனது சம்பன் படகைத் திருப்பினேன்.
கி.பி 2019, டிசம்பர் 31
புத்தாண்டுக்கு முந்தைய நாள் நள்ளிரவு வந்துவிட்டது. நான், ஸ்டெல்லா, ஜெரால்ட் மூவரும், லேன்டர் அவென்யூவில் இருந்து நடந்து கொண்டிருந்தோம், கொஞ்ச நேரத்தில், செலேடர் ஆற்றுப்பாலம் வந்து விட்டது. அங்கிருந்து, செலேடர்ஆற்றின் கரை வழியாகவே, உள்ளே, இருட்டில் நடந்து போனோம். எங்கள் திட்டப்படி, ஆள் அரவம் எதுவும் இல்லாத அந்தக் காட்டுக்குள், செலேடர் ஆற்றின் கரையோரம், நாங்கள் எங்கள் புத்தாண்டைக் கொண்டாட முடிவெடுத்து இங்கே வந்திருந்தோம். ஆற்றின் நீருக்கு மிக அருகில், எல்லோரும், ஒரு வாகான இடத்தில் நின்று கொண்டோம். ஜெரால்ட் என்னைப் பார்த்தான். “ஸ்டெப்னி ஏதாவது பேசேன்” என்றான். நான் லேசாகச் சிரித்தேன். “ ஜெரால்ட், நான் பேசுவதற்கு முன், ஸ்டெல்லா உன்னோடு பேசுவாள்” என்றேன். “இந்த வாயாடியா.. பேசு ஸ்டெல்லா பேசு” என்று அவனும் சிரித்தான். ஸ்டெல்லா மட்டும், கண்ணில் கொஞ்சம் கண்ணீரோடு நின்றுகொண்டு இருந்தாள். “ஜெரால்ட்.. நான் உன்னை ஆழமாக நேசிக்கிறேன் இதை நான் ஸ்டெப்னியிடம்தான், முதன் முதலில் சொன்னேன்.” என்றவுடன், ஜெரால்ட் அதிர்ந்தான்.
கி.பி 1896, மார்ச் 17
என்ன ஆச்சரியம். அன்னயட்சி, என் எதிரிலேயே, அவள் வெள்ளிப்படகில் நின்றுகொண்டு இருந்தாள். நான் இப்போது, அவள் படகிற்குத் தாவினேன். எனது லூக்காக் கூடைக்குள் இருக்கும் குள்ளச்சுறாவை, அன்னயட்சிக்குக் காட்டினேன். அவள் மனம், ஏனோ தடுமாறியது. என்னைப் பார்த்தாள். ஓர் புன்னகை பூத்தாள். அவ்வளவுதான். அந்தப் புன்னகையில் ஓராயிரம் அர்த்தங்கள் இருப்பதுபோல, நான் ஊகம் செய்தேன். நான், அன்னயட்சியினை, என் பக்கம் இழுத்தேன். அவள் உதடுகளைக் கவ்விப்பிடித்து, உறிஞ்சினேன். எனது ஆவேசத்திற்கும், அருகாமையில் வந்த ஆண்மைக்கும் அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை போலும். நிலைதடுமாறி, படகில் விழுந்தாள். நான், மறுபடியும் அவள் உதடுகளைக் கவ்வப்போனேன். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. குள்ளச்சுறா இருந்த எனது லூக்காக் கூடை வெடித்தது. உள்ளே இருந்த சுறாவை இப்போது காணவில்லை. மாறாய், என் முன்னே, மிகமிகப் பிரமாண்டமான வடிவில் ஒரு பெண்வடிவ யட்சி நின்றுகொண்டு இருந்தது. யட்சியின் கால்கள், நீரை நனைத்தபடி இருந்தது. இருபுறமும், பெரிய இறக்கைகைகள் கொண்டவளாக அவள் இருந்தாள். கோபத்தில், அவள் வாயில் இருந்து அனலைக் கக்கினாள். “அற்ப மானிடனே.. நான் யார் தெரியுமா. நான் நீலயட்சி.. இவள் எனக்கு மனைவியாகப் போகிறவள். நான் சட்டத்தை மதிப்பவள். அதனால்தான், இவள் எனக்கு மனைவியாகும் வரை, நான் பொறுமையாய் இருந்தேன். ஆனால் நீ…”. அவள் பார்வையின் உக்கிரம், எனக்குப் பயத்தைக் கொடுத்தது. நான் அன்னயட்சியை இப்போது பார்த்தேன். அவளும் பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தாள். நான் தைரியத்தை, வரவழைத்துக் கொண்டேன். “யே நீல யட்சி… நீ ஒரு பெண். இந்த அன்னயட்சியும் ஒரு பெண்.. அப்படியிருக்க, கல்யாணம் செய்துகொள்வது உனக்குத் தேவையா?” நானும், ஆத்திரமாய்ப் பேசினேன். நீலயட்சி நிதானமாகச் சொன்னாள். “நான் ஆணும் இல்லை. நான் பெண்ணும் இல்லை/ எங்கள் யட்சிகள் உலகத்தில், காதலுக்கு, ஆண் பெண் என்ற இனவேறுபாடு கிடையாது. அன்னயட்சி மீது, நான் கொண்ட ஆழமான காதலை, எங்கள் யட்சிகள் உலகம் அறியும் அற்ப மானிடனே, நீ எங்கள் காதலைப் பாழ்படுத்திவிட்டாய்.” நீலயட்சி மறுபடியும் கோபமாகப் பேசினாள். எனக்கு இன்னும் அன்னயட்சியின் மீது இருந்த காதல் குறையவில்லை. “அவளை எனக்கு விட்டுக்கொடு நீல யட்சி”. நான் மண்டியிட்டு மன்றாடினேன். நீலயட்சி மறுபடியும் அனலைக் கக்கினாள். “நேற்று நான் குள்ளச்சுறாவாக, இவளை வலம் வந்தபோதே, உன்னைக் கொன்று இருக்கவேண்டும். ஆனால், அதற்குள், இந்த அன்னயட்சி, அந்த விளையாட்டைத் தொடங்கிவிட்டாள். நான் சட்டத்தை மதிப்பவள். அவள் மீது கொண்ட காதலுக்காக, உன்னோடு விளையாட சம்மதித்தேன். நான், என் சக்திகள் வலுவிழந்த நேரத்தைப் பயன்படுத்தி, என்னை நீ சிறைப் பிடித்தாய். என்னைப் பாதுகாக்க வந்த, ராட்சதச் சுறாவையும் கொன்றுவிட்டாய். இதற்கெல்லாம் காரணம் இந்த அன்னயட்சிதான்.” உரக்கப் பேசிக்கொண்டே, நீலயட்சி, அன்னயட்சியைப் பார்த்தாள். “அன்னயட்சி… ஒரு மானிடன், காமநோக்கத்தில், உன்னைத் தீண்டி விட்டான். இனி நாம் இப்போதைக்கு ஒன்று சேரமுடியாது. இது விதி.” என்ற நீலயட்சியிடம், அன்னயட்சி “வேண்டாம் வேண்டாம்” என்று கதறினாள். நீலயட்சி இப்போது அழுதாள். “நான் சட்டத்தை மதிப்பவள்” என்று கத்திக்கொண்டே, தனது வாயில் இருந்து வந்த அனல் கதிரால், அன்னயட்சியை எரித்தாள். அடுத்த சில நிமிடங்களில், அன்னயட்சி சாம்பலானாள். “இங்கிருந்து ஓடிப்போ மானிடனே.. நீ செய்த பாவம் உன்னைக் கொல்லும். நான் உன்னைக் கொல்ல மாட்டேன். நான் சட்டத்தை மதிப்பவள்.” நீலயட்சி கூறிய அடுத்த நிமிடம், நான் எனது சம்பன் படகை, வேகமாகச் செலுத்தி, என் கடல்நாடோடிக் கூட்டத்தை வந்தடைந்தேன். நடந்ததை, நினைத்து நான் இன்னும் நடுங்கிக்கொண்டே இருந்தேன். என்னால், நீலயட்சியின் அனல்கக்கும் கோபத்தை மறக்க முடியவில்லை. நான் செய்த தவறு என்னை அதிகமாக வருத்தியது. எனக்கு இப்போது கடுமையான காய்ச்சல் வந்தது. எனது அப்பா, பாவாங் மந்திரகுருவுடன் வந்து என்னைப் பார்த்தார். நடந்ததை எல்லாம் அறிந்துகொண்ட பாவாங், “இது தீராத விஷக்காய்ச்சல். யட்சிக்கு தீங்கு விளைவித்தால் வரும் அதிபயங்கரக் காய்ச்சல் இது. இனி எந்த விதப் பிரயோசனமும் இல்லை” என்று உதட்டைப் பிதுக்கினார். அப்பா, கதறி அழுதார். நான் கொஞ்சம் கொஞ்சமாய், எனது நினைவிழந்தேன். இறுதியில் எனது மூச்சு நின்று போனது.
கி.பி 2019, டிசம்பர் 31
“ஸ்டெப்னி என்ன சொல்கிறாள் இவள்” என்ற அவன் அர்த்தம் பொதிந்த பார்வைக்கு நான் பதில் சொல்லவில்லை. ஸ்டெல்லாவே மறுபடியும் தொடர்ந்தாள். “ஜெரால்ட்.. உன்னைப்போல் ஒருவன் கிடைக்க, நான் கொடுத்து வைத்து இருக்கவேண்டும். தயவுசெய்து என்னிடம், இல்லை என்று மட்டும் சொல்லி விடாதே” ஸ்டெல்லா, இப்போது, ஜெரால்டிடம் கெஞ்சினாள். ஜெரால்டோ என் மிக அருகில் வந்தான். “ஸ்டெப்னி.. ஏன் என்னை சோதிக்கிறாய் ஏதாவது பேசு ஸ்டெப்னி.. பேசு” என்றான் ஜெரால்ட். நான் பதில் பேசாமல் ஆற்றின் தண்ணீரில் கைவைத்து அளைந்தேன். ஜெரால்ட் என்னை இன்னும் நெருங்கினான். அவன் மூச்சு என் மீது இப்போது பட்டது. “ஏதாவது பேசு ஸ்டெப்னி, என்னைக் கஷ்டப்படுத்தாதே” என்றான் ஜெரால்ட். நான், பதில் பேசாது, ஆற்றின் தண்ணீரில் ஒரு வட்டம் வரைந்தேன். பின்னர், “இங்கே வா ஜெரால்ட், இந்த வட்டத்துக்குள், என்ன இருக்கிறது என்று பார்” என்றேன். ஜெரால்ட், கிட்ட வந்து, அந்த வட்டத்துக்குள் இருந்த, தண்ணீரைப் பார்த்தான். “ஆ…” வென்று அலறினான். “என்னால் நம்ப முடியவில்லை.. என்னால் நம்ப முடியவில்லை” என்றான். “நிச்சயம் நம்ப முடியும் ஜெரால்ட். அது உனது முன் ஜென்மப்படம்” என்றேன். ஸ்டெல்லாவும் ஓடி வந்து, அந்த இடத்தைப் பார்த்தாள். அந்த ஆற்றின் தண்ணீரில், நான் போட்ட வட்டத்தில், ஜெரால்டின் பிம்பமாக, அவன் முன்ஜென்மத்துப் பிறவியான, அன்னயட்சி அங்கே உட்கார்ந்து இருந்தாள். அதிர்ச்சியில் உறைந்து இருந்த ஜெரால்டை, நான் சரேலென, ஆற்று நீருக்குள் தள்ளினேன்.
“என்ன செய்கிறாய் ஸ்டெப்னி.. ஐயோ கொலைகாரி என்னடி செய்கிறாய் ஸ்டெப்னி” ஸ்டெல்லா அலறினாள். ஸ்டெல்லா. நானும் கத்தினேன். “அடியே ஸ்டெல்லா.. உன் முன்ஜென்மம் என்னவென்று தெரியுமா? முன்ஜென்மத்தில், நீதான் ஓராங் செலேடர் கடல் நாடோடி வீரன் போகாவாய் இருந்தாய். அப்போது, இதே ஜெரால்டை, அன்னயட்சி என்ற பெண்ணாய் நினைத்துக் காதலித்தாய்”. நான் பேசிக் கொண்டே போனேன். “நான் யார் தெரியுமா?” என்று நான் எனது பேச்சை நிறுத்தினேன். ஸ்டெல்லா என்னை குழப்பத்தோடு பார்த்தாள். “போகா என்ற, மாவீரனான நீ, மீன் வடிவத்தில் இருந்த, நீலயட்சியைப் பிடித்தபோது. வந்த சண்டையில், கொல்லப்பட்ட அந்த ராட்சதச் சுறா.நான்தான். எனது எஜமான் நீலயட்சியின் மெய்க்காப்பாளன் ஆகிய நான், அன்று ராட்சதச் சுறாவாக வந்து, உன்னை வழிமறித்து, உன் ஈட்டியால், கிழிக்கப்பட்டு இறந்துபோனேன். இப்போது, என் எஜமானுக்கான பொருளை, எனது எஜமானிடமே சேர்க்கத்தான் நான் ஜெரால்டைத் தள்ளினேன்” என்றவாறே நானும் நீரில் குதித்தேன். “நீ போய் சொல்கிறாய் ஸ்டெப்னி… ஜெரால்டை நான் எப்படியும் காப்பாற்றுவேன்” என ஸ்டெல்லாவும் நீருக்குள் குதித்தாள். நீருக்குள் மயங்கிப்போன ஜெரால்டை இழுத்துக்கொண்டு, கடலின் ஆழத்துக்கு நான் போனேன். ஸ்டெல்லாவும் என்னை விடாது துரத்தினாள். திடீரென்று எங்கள் மூவர் முன்னே, நீலயட்சி தோன்றினான். இப்போது நீலயட்சி பெண்ணாய் இல்லை. அழகிய, வாட்டசட்டமான, ஆணாய் இருந்தான். அவன் பெரிய இறக்கைகள் மட்டும், அப்படியே இருந்தன.
கி.பி 2020, ஜனவரி 1
ஸ்டெல்லா ஆவேசமாய், நீலயட்சியின் முன்னால் போனாள். “நீலயட்சி.. ஜெரால்ட் ஓர் ஆண். நீயும் ஒரு ஆண். காதல் எப்படி சாத்தியமாகும்?” என்றவுடன் ஆர்ப்பாட்டமாய்ச் சிரித்தான் நீலயட்சி. “நீ கூட போன ஜென்மத்தில், போகா என்ற ஆண்தான்…மறந்து விட்டாயா ஸ்டெல்லா?”. நீலயட்சி, இன்னும் பலமாகச் சிரித்தான். நானும், எனது எஜமான் நீலயட்ச்யின் சிரிப்பில் கலந்து கொண்டேன். ஸ்டெல்லா, இப்போது ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று உறுமினாள். “ஆனால் நீ இப்பொது இருப்பது சிங்கப்பூர். இங்கே ஓரினச்சேர்க்கை எதிர்ப்புச் சட்டம் செக்சன் 377A இருக்கிறது தெரியுமா?”. என்றாள். சிரித்துக்கொண்டு இருந்த நீலயட்சி, ஸ்டெல்லாவை இப்போது நிதானமாகத் திரும்பிப் பார்த்தான். “தெரியும்.. நனறாகவே தெரியும். நான் அன்றும், இன்றும் சட்டத்தை மதிப்பவன். காலம் நிச்சயம் ஒருநாள் மாறும். அதுவரையில்” என்று சொல்லிக் கொண்டே யட்சி மந்திரங்கள் சொல்லத் தொடங்கினான். கொஞ்ச நேரத்தில், நீலயட்சியும், ஜெரால்டும் இரண்டு ஆண் பூனைகளாக மாறினார்கள். நீலயட்சி பூனை, ஜெரால்டு பூனைக்கு, முத்தங்களைச் சரமாரியாகக் கொடுத்தது. ஜெரால்டு பூனையும் இப்போது, விழித்துக்கொண்டது. இரண்டு ஆண் பூனைகளும், ஒன்றை ஒன்று ஆரத்தழுவிக் கொண்டன. நான், பலமாய்க் கைதட்டினேன். எனது எஜமானின் காதலைச் சேர்த்துவைத்த, நிம்மதி எனக்கு வந்தது. இரண்டு ஆண் பூனைகளும், எனது தோளில் ஏறியது . நான் பூனைகளோடு கரைக்கு வந்தேன். ஸ்டெல்லாவும் என்னைப் பின்தொடந்தாள்.
நான் ஸ்டெல்லாவைப் பார்த்துச் சொன்னேன். “ஸ்டெல்லா.. என்..அறையில் இருந்த, உனது அத்தனைத் துணிகளையும், பெட்டியில் அடைத்து, நம் அலுவலகத்தில் உள்ள எனது அறை மேசையில் வைத்து இருக்கிறேன். போய் எடுத்துக்கொள். இனி நீ வேறு அறை பார்த்துக்கொள்.” என்று சொல்லிவிட்டு, நான் ஸ்டெல்லாவைத் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். என் மேலே இருந்த நீலயட்சிப் பூனை, சந்தோசத்தில், ஒரு மலாய்ப் பண்டூன் கவிதை பாடினான்.
நான் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை நீல யட்சி.
என் காதலுக்கும் வாழ்வு உண்டு வாடா மச்சி
பாய் ஃபிரண்டும் நீதான் என் கேர்ள் ஃபிரண்டும் நீதான்
நாம் காலமெல்லாம் காதலிப்போம் சூப்பர் மச்சி

என் காதலுக்கும் வாழ்வு உண்டு வாடா மச்சி
அன்னயட்சியும் நீதான் ஜெரால்ட் மச்சி நீதான்
நாம் காலமெல்லாம் காதலிப்போம் சூப்பர் மச்சி
ஆண்பெண் பேதம்இல்லை நேசத்துக்கு சொல்றா மச்சி

அன்னயட்சியும் நீதான் ஜெரால்ட் மச்சி நீதான்
நான் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை நீல யட்சி
ஆண்பெண் பேதம்இல்லை நேசத்துக்கு சொல்றா மச்சி
பாய் ஃபிரண்டும் நீதான் என் கேர்ள் ஃபிரண்டும் நீதான்
நான், லென்டர் அவென்யூவில், என் இரண்டு பூனைகளுடன் நடந்து போய்க் கொண்டு இருந்தேன். அந்தப் புத்தாண்டு நன்னாளில் செலேடார் ஆற்றுத்தண்ணீர், ஆசிர்வதிக்கும் பன்னீராய், எங்களை நனைத்து இருந்தது.
அழகர்சாமி சக்திவேல்

Series Navigationசீனன் தின்னாத விஷயமே உலகத்தில் எதுவுமில்லை.கணக்கும் வழக்கும் முன்னுரை
author

கு.அழகர்சாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *