ஊசி துவாரங்களும் உள்ளே நுழையும் ஒட்டகங்களும்

author
0 minutes, 10 seconds Read
This entry is part 5 of 6 in the series 9 பெப்ருவரி 2020

அழகர்சாமி சக்திவேல்

தலாங்கு தகதிகு தக ததிங் கிணதோம்

தை யும் தத் தா தை யும் தா க   (முதல் வேகம்)

தை யும் தத் தா தை யும் தா க

தையும் தத்தா தையும் தாக       (இரண்டாம் வேகம்)

தையும் தத்தா தையும் தாக

தையும் தத்தா தையும் தாக       (மூன்றாம் வேகம்)

தையும் தத்தா தையும் தாக

தையும் தத்த தைதை திதிதை தா

சிங்கப்பூர், லிட்டில் இந்தியாவை ஒட்டியிருந்த, அந்த நுண்கலைப் பயிலகத்தில், “திரு. பரஞ்ஜோதி” என்று வாசல் முன்னால் போர்டு போட்டு இருந்த இரண்டாம் தளத்து அறையில், நான் பரதநாட்டிய அடவுகள் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். பிள்ளைகளின் பரதநாட்டியப் பரிட்சை நெருங்கிக் கொண்டு இருந்ததால், என் கவனம் முழுவதும், என் முன்னால் ஆடும் பிள்ளைகள் மீது இருந்தது. “தட்டடவு, நாட்டட்டவு, சுற்றல் அடவு, மண்டி அடவு, குதித்து மெட்டடவு, சறுக்கல் அடவு, தட்டி மெட்டடவு, தையா தையி அடவு, தாகத ஜம் தரிதா அடவு.. இவை எல்லாம், இன்று தெளிவாய்ப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே, நான் தட்டுமனையில், கட்டையால் அடித்து, நட்டுவாங்கம் செய்துகொண்டு இருந்தேன். “ரம்யா.. அரைமண்டியில் ஆடு… கிரிஜா.. என்னம்மா இது.. கையை நல்லா நேரா நீட்டி ஆடும்மா… அடியே கனகவள்ளி.. என் செல்லம்…காலை நல்லாத்தட்டி ஆடு குட்டிம்மா. வளர்மதி…இடுப்பை, உன் இஷ்டத்துக்கு, வளைச்சி, வளைச்சி ஆடாதேம்மா” என, என் நட்டுவாங்கத்துக்கு இடையிடையே, பிள்ளைகளின் ஆடல் தவறுகளை எல்லாம், நான் திருத்திக்கொண்டும் இருந்தேன். நான், இப்போது கட்டை அடிப்பதின் வேகத்தை, மூன்றாம் நிலை வேகத்திற்குக் கூட்டினேன். பிள்ளைகள், என் வேகத்தைப் புரிந்துகொண்டு வேகமாய் ஆடினார்கள்.

எப்போதும் போல், நான் ஆண்கள் அணியும் பைஜாமுவும், முழுக்கை வைத்த, நீள ஜிப்பாவும்தான், இன்றும் அணிந்து வந்திருந்தேன்.. திடீரென்று, எனது ஜிப்பாவுக்குள், நான் அணிந்திருந்த பிராவின் கொக்கி, கழண்டுவிட்டதுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டது. “எங்கே என் மார்பகங்கள், ஜிப்பாவைத் தாண்டி, வெளியே தெரியுமோ..பிரின்சிபால் திட்டுவாரோ” என்ற அச்சத்தில்தான், நான் இன்று, இறுக்கமான பிராவை அணிந்து வந்து இருந்தேன். ஆனால், அதன் இறுக்கம் தாளாமல், பிரா கொக்கிகள் பிய்ந்து விட்டதோ, என்று எனக்குள், திடீரென ஒரு ஐயம் ஏற்பட்டது. நான், கட்டை அடிப்பதைச் சட்டென நிறுத்தினேன். தாளமனையைத் தள்ளிவைத்துவிட்டு எழுந்து நின்றேன். பிள்ளைகளும் ஆடுவதை நிறுத்தினார்கள். அறைக்குள் உட்கார்ந்து இருந்த கிரிஜாவின் அம்மா பதற்றத்துடன் கேட்டாள் “பரஞ்ஜோதி சார்.. என்ன ஆச்சு?”. என்ற அவளின் குரல் கேட்டு நான் துணுக்குற்றேன். எனக்கு எரிச்சல் வந்தது. “கிரிஜா அம்மா…போன வாரம்தானே உங்க எல்லாரிடமும் சொன்னேன்.. நான் ஆணில் இருந்து பெண் ஆகிவிட்டேன் என்று.. என்னை எப்படி நீங்க சார்ன்னு கூப்பிடலாம்?” நான் கொஞ்சம் அதட்டலாகவே வினவினேன். கிரிஜா அம்மா, இப்போது பதறினாள். “சாரிங்க சார்.. இல்லே..இல்லே.. சாரி மேடம்” என்று குழறினாள். “என்னம்மா நீங்க? மறுபடியும் உளற வேண்டாம் கிரிஜாம்மா.. நான் இப்போது ஒரு பெண் அம்மா”. நான் ஒரு ஆயாசப் பெருமூச்சுடன், என் பிராவைச் சரி செய்வதற்காய், கீழ்தளத்தில் இருந்த கழிப்பறைகளை நோக்கி வேகமாக நடந்தேன்.

நான் அவசரமாக, கழிப்பறைகளை நோக்கி நடப்பதை, கீழ்த்தளத்தில் நின்றுகொண்டு இருந்த இரண்டு வாட்ச்மேன்களும், ஒருவித ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருப்பதை நான் எனது ஓரக்கண்ணால் கவனித்தேன். வாட்ச்மேன் முத்து, பக்கத்தில் இருந்த ராமனிடம் சொன்னான். “பரஞ்ஜோதி சார், இப்போது எந்த டாய்லட்டுக்கு போவார்டா.. ஆம்பளை டாய்லட்டுக்க்கா.. பொம்பளை டாய்லட்டுக்கா?”. இருவரும் சிரித்தார்கள். எனக்கு முத்துவின் கன்னத்தில், இப்போது அறையவேண்டும் போல இருந்தது. “போன வாரம் வரை, சார் சார் என்று குழைந்துகொண்டு இருந்தவன்..இப்போது என்னை நக்கல் செய்கிறான்.. இப்படிச் சிறுமை அடைவதற்காகவா நான் திருநங்கை ஆனேன்” என் மனம் வலித்தது. “அவன் சந்தேகம் நியாயம்தான்.. நான் இப்போது எந்த டாய்லெட்டுக்குப் போகவேண்டும்? ஆண்கள் டாய்லெட்டுக்கா, பெண்கள் டாய்லெட்டுக்கா? பிரின்சிபால் இன்னும் என் பெண்மையை ஒத்துக் கொள்ளவில்லை..அப்படியென்றால் நான் ஆண்கள் டாய்லெட்டுக்குத்தான் போகவேண்டும்.” என் மனம் பரிதவித்தது. எனது பெண்மை மனது, ஆண்கள் டாய்லெட்டுக்குப் போகச் சம்மதிக்கவில்லை. எனவே நான் தூரத்தில் இருந்த, எம்ஆர்டி நோக்கி நடந்தேன். அங்கு மட்டுமே, மாற்றுத்திறனாளிகள் டாய்லெட் இருக்கிறது. ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்காத டாய்லெட் அது. நான் அரக்கப்பரக்க நடந்து, எம்ஆர்டி-யை அடைந்தேன். நல்லவேளை, மாற்றுத்திறனாளிகள் டாய்லெட் அருகே யாரும் இல்லை. நான் அவசரமாக உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டேன். பிராவின் கொக்கிகளையும், உள்ளாடையையும் சரி செய்துகொண்டேன். சிறுநீர் கழித்து முகம் கழுவி வெளியே வந்தபோது, வெளியே ஒரு மாற்றுத்திறனாளி, தனது சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, என்னை முறைத்துப் பார்த்தார். “கை கால் நல்லாதானே இருக்கு, வேற டாய்லெட் போனால் என்ன?”. அவர் பார்வையின் தாக்கம் புரிந்து, நான் “சாரி” கேட்டேன். மறுபடியும் வேகமாக நடந்து, நுண்கலைப் பயிலகம் வந்து சேர்ந்தேன்.

அதற்குள், யாரோ பிரின்சிபாலிடம், நான் எம்ஆர்டிக்கு நடந்து போனதைச் சொல்லியிருந்தார்கள். வாசலிலேயே நின்றுகொண்டு இருந்த பிரின்சிபல், என்னை “வா” என்று கூப்பிட்டார். அவர் இறுகிய முகம், எனக்கு அச்சத்தைக் கொடுத்தது. ஜிப்பாவுக்குள், நான் போட்டு இருந்த பிரா, அவர் கண்ணை உறுத்தியது. “பரஞ்ஜோதி…இந்த நிர்வாகத்தைப் பொறுத்தவரை நீங்கள் இன்னும் ஆண்தான்… இந்தக் கல்லூரிக்கென்று ஒரு கட்டுப்பாடும் ஒழுக்கமும் இருக்கிறது. அதை நீங்கள் எப்போதும் காப்பாற்றவேண்டும்”. பிரின்சிபால் பேசிக்கொண்டே போனார். நான் தலையைத் தலையை ஆட்டினேன். சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் அனைவரும், என்னையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருப்பது போன்ற பிரமை எனக்கு ஏற்பட்டது. என் உடல் அவமானத்தால் குறுகியது. பிரின்சிபால், பேசிமுடித்து உள்ளே போனவுடன், ஓட்டமும் நடையுமாய், நான் மாடி ஏறி, என் அறைக்கு வந்தேன். அப்போதுதான் தெரிந்தது. நான், அவசரத்தில், எனது செல் ஃபோனை அறையிலேயே விட்டு வீட்டுப் போய் விட்டேன் என்று. நான் ஏதாவது தகவல் வந்து இருக்கிறதா என்று அலைபேசியைப் பார்த்தேன். திண்டுக்கல்லில் இருந்து செய்தி வந்து இருந்தது. “அம்மா இறந்து விட்டார்கள்” என்று தம்பிதான் எழுதியிருந்தான். அதிர்ச்சியில், எனக்கு இப்போது, மயக்கம் வரும்போல் இருந்தது. கிரிஜா அம்மாதான் என்னைக் கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டாள். நான் கிரிஜா அம்மாவிடம் விசயத்தைச் சொன்னவுடன், பதறியடித்துக்கொண்டு கீழே போனவள், தனது கணவரை முஸ்தபா ட்ராவல்சிற்கு அனுப்பிவைத்து, எனக்கு விமானச் சீட்டு எடுத்துக்கொடுத்தாள். அடுத்த ஒரு மணிநேரத்தில் நான் விமானநிலையத்தில் இருந்தேன். விமானம் பயணமானது. அம்மா குறித்த எனது எண்ண அலைகளும் மேலெழும்பிப் பயணித்தது.

திண்டுக்கல்லில் நாங்கள் அப்படி ஒன்றும் வசதியானவர்கள் இல்லை.  பாலகிருஸ்ணாபுரத்தில், ஒரு நடுத்தர வீட்டில்தான், நாங்கள் குடி இருந்தோம். அப்பா, சென்ட்ரல் தியேட்டருக்கு அருகில் உள்ள ஒரு மண்டியில், கணக்கப்பிள்ளை ஆக இருந்தார். நான்தான் வீட்டின் மூத்தபிள்ளை. எனக்குக் கீழே தங்கை கிருஸ்னவேணி, தம்பி உதயராஜன், கடைசியில் மகரலட்சுமி. இவ்வளவுதான் எங்கள் குடும்பம். அப்பா ஒரு விளையாட்டு வீரர். திண்டுக்கல்லில், கபடி வீரர் என்றால், என் அப்பாவின் பெயரை உடனே மேற்கோள்காட்டி எல்லோரும் பேசும் அளவுக்கு, ஒரு சிறந்த விளையாட்டு வீரராக இருந்தார் எனது அப்பா. அதனால்தானோ, என்னவோ, நான் பெண்மையுடன் எப்போதும் பேசுவதும், பழகுவதும், அவருக்குப் பிடிக்காது. ஆனால் அம்மா அப்படி இல்லை. என் நடனத்திறமை, பாட்டுத்திறமை அத்தனைக்கும் என் முதல் ரசிகை அம்மாதான். பரஞ்ஜோதி என்றுதான் அப்பா என்னைக் கூப்பிடுவார். அம்மா மட்டுமே, என்னை ‘ஜோதி ஜோதி’ என்று கூப்பிடுவாள். நான் ஒரு பெரிய வீர மகனாக, நல்ல ஆண்மை நிரம்பியவனாக வளரவேண்டும் என்பது அப்பாவின் ஆசை. ஆனால் அவர் நினைத்த எதுவும் நடக்காமல் போக, என்னையும், எனது பெண்மையையும்,  நாளாக நாளாக வெறுக்க ஆரம்பித்தார். தம்பி உதயராஜன் என்னைப்போல் இல்லை. படிப்பறிவு அவ்வளவு இல்லை என்றாலும், கால்பந்து நன்கு விளையாடுவான். அதனாலேயே அப்பாவுக்கு அவனை ரொம்பப் பிடிக்கும். ஆனாலும், என் மீதுள்ள கவலை அவருக்குக் குறையவேயில்லை. அதனை நினைத்து, நினைத்தே, கவலையில்,  ஒருநாள் அப்பா இறந்து போனார். குடும்பப் பொறுப்பு, மூத்தவனான எனது தலைமேல் விழுந்தது. அப்போது, நான் கற்ற பரதநாட்டியமே எனக்குக் கைகொடுத்தது. எங்கள் ஊரில் இருந்த, ஓர் பெரிய மனிதர் எனக்கு சிபாரிசு செய்ய, சிங்கப்பூரின், இந்த நுண்கலைக் கல்விநிலையத்தில், எனக்கு நடன ஆசிரியர் வேலை கிடைத்தது. பத்து வருடங்களாக நான், என் குடும்பத்திற்காக உழைத்து விட்டேன். கல்வி மண்டையில் அவ்வளவாக ஏறாத உதயராஜனை, அதையும் இதையும் சொல்லித் தேற்றி, அரசாங்கத்தில், ஒரு கிளார்க் வேலையும் வாங்கிக் கொடுத்தேன். தங்கை கிருஸ்ணவேணியை, அரசுவேலையில் உள்ள ஒரு டிரைவருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். மகரலட்சுமியை, சொந்தத்திலேயே, எங்கள் மாமனுக்கு கல்யாணம் செய்துவைத்தேன். அம்மாவுக்கு எனது திறமையையும், குடும்பப்பொறுப்பையும் பார்த்து அளவுகடந்த சந்தோசம். 

போன தடவை, ஊருக்கு வந்தபோதுதான், அம்மா, என்னைத் தனியே கூப்பிட்டுச் சொன்னாள். “ஜோதி.. உன் குடும்பப் பொறுப்புகளுக்கும் ஒரு அளவு உண்டு. அப்பா சேர்த்து வைத்த, இந்த வீடும், கொஞ்சம் நிலமும், நமக்கு இருக்கிறது. நான் போட்டுவந்த நகைகளையும், பத்திரமாக வங்கியில் வைத்து இருக்கிறேன். சிங்கப்பூரில் இருந்து, நீ அனுப்பிய காசிலும், நிறைய நகைகள் வாங்கி, வங்கியில் பத்திரமாக வைத்து இருக்கிறேன். இனி நீ உன் வாழ்க்கையைப் பார்த்துக்கணும். உன் நீண்ட கால ஆசையை இப்போதாவது பூர்த்தி செய்துகொள். பெண்ணாகவேண்டும் என்ற ஆசையை இப்போதாவது நிறைவேற்றிக்கொள். நீ பெண்ணாக மாறிய பின்னால், யாரையாவது கல்யாணம் செய்துகொண்டு சந்தோசமாக இரு” என்று கண்ணீர் மல்கக் கூறினாள். “சரிம்மா” நானும், அம்மாவின் பாசம் நினைத்து, அவளோடு கூட சேர்ந்து அழுதேன். திரும்பி சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன். சிங்கப்பூர் வந்த ஆறு மாதத்தில், எனக்குத் தெரிந்த ஆட்களிடம் எல்லாம் பேசினேன். அப்புறம், தைவானுக்குப் போய், ஆணில் இருந்து பெண்ணாய் மாறும் அறுவைச்சிகிச்சையும் செய்துகொண்டேன். சேலை உடுத்தி, பொட்டுவைத்து, பூ முடித்து, நான் ஒரு பெண்ணாய் அழகு காட்டும் முன், ஆசைப்பட்டது என் அம்மாதான். ஆனால்,  அம்மாவும், இப்போது போய்ச் சேர்ந்துவிட்டாள். நான், விமானத்தில் பயணிக்கிறோம் என்பதையும் மறந்து, குலுங்கிக் குலுங்கி அழுதேன். கவனித்துக் கொண்டிருந்த விமானப்பணிப் பெண், எனக்கு தண்ணீர் கொடுத்துவிட்டுப் போனாள். நான், சோகத்தோடு அப்படியே தூங்கிப்போனேன்.

நான் தெருவில், எங்கள் வீட்டை நோக்கி வரும்போதே கூட்டம் என்னை அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் பார்க்க ஆரம்பித்தது. என் சொந்தக்காரர்கள் யாரும் என்னை இப்படி எதிர்பார்க்கவில்லை போலும். சில சொந்தங்கள் மூக்கில் விரலை வைத்துக்கொண்டார்கள். இப்போது அம்மா இருந்து இருந்தால், எனக்கு ஆதரவாய் நாலு வார்த்தைகள் பேசி இருப்பாள். அவள்தான் இல்லையே. அம்மாவைக் வெளித்திண்ணையில் கிடத்தி இருந்தார்கள். நான், கையில் கொண்டு வந்திருந்த பெட்டியை, அப்படியே போட்டு விட்டு அம்மாவை நோக்கி ஓடினேன். அம்மா, வெள்ளை முக்காடு போட்ட தலையுடன், என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பது போலவே எனக்குத் தோன்றியது. “அம்மா.. அம்மா..” நான் கதறிக்கொண்டே இருந்தேன். தங்கை மகரலட்சுமிதான் வந்து என் தோளைப்பிடித்துக் கொண்டாள். அதற்குள், அவள் கணவன், இறுகிய முகத்துடன், மகரலட்சுமியை, உள்ளே கூட்டிக்கொண்டு போனான். என் தாய்மாமன் முன்னே வந்தார். “மாமா மாமா.. அம்மா என்னை விட்டுப் போயிட்டங்களே மாமா”. நான் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதேன். மாமா முதலில், ஒன்றும் பேசாமல் என்னைப் பார்த்தார். அப்புறம், “என்னப்பா பரஞ்சோதி.. இப்படி வந்து நிற்கிறே.. நான் இப்ப என்ன செய்யட்டும்?” என்றார்.. எனது தாய்மாமாவுக்கு, அவரது தங்கை இறந்த துக்கத்தை விட, எனது நிலைதான், அதிகம் வருத்தியது போலும். தூரத்தில் நின்ற மற்ற உறவுகளை கேள்விக்கண்ணோடு மாமா பார்த்தார். பெரியவர் ஒருவர் பேசினார். “பொணத்தைக் குளிப்பாட்ட நீர் எடுக்கணும், அதுக்கு நம்ம எல்லாம் ஊத்துக்கேணிக்குப் போகணும். நம்ம சாதி வழக்கப்படி, தாய்க்குத் தலைமகன்தான் கொள்ளி போடணும். அதனால தலைமகன்தான், நீர்க்குடம் எடுக்க முன்னால் நிற்கணும். ஆனால், பரஞ்சோதியோ இந்தக்கோலத்தில் வந்து நிற்கிறான்…இப்ப என்ன செய்யப் போறே ராமலிங்கம்?” என்று சொல்லிக்கொண்டே எனது தாய்மாமாவைப் பார்த்தார். அதற்குள், எனது தங்கை கிருஸ்ணவேணியின் கணவர் முன்னால் வந்து நின்றார். “பரஞ்சோதியை விட்டுட்டு, அவன் தம்பி உதயராஜனை மட்டும் கூட்டிட்டுப் போவோம்…பரஞ்ஜோதி இங்கேயே கிடக்கட்டும்” சற்று வெறுப்போடு பேச, கூட்டம் அதை ஆமோதித்தது. கூட்டம் என்னை விட்டுவிட்டுக் கிளம்பியது. பெரியவர் போகும்போது என்னைப் பார்த்துப் பேசினார். “ச்சே.. தலைமகன் கொள்ளி போட கூட, இந்தத் தாய் மீனாட்சிக்கு கொடுத்து வைக்கலே.. என்ன சொல்றது.. எல்லாம் தலைவிதி” என்றார். ஊரும் “உச்” கொட்டிக்கொண்டே அவர் பின்னால் நடந்தது. தம்பி உதயராஜன் முன்னால் நடந்தான். நான் அம்மாவைப் பார்த்து, மறுபடியும் கதறி அழுதேன். “அழாதேடி தங்கம்.. நான் உன்னை நல்லா புரிஞ்சுக்கிட்டேன்..என் செல்லமே” என்பது போல, பிணமாய் இருந்த அம்மா என்னைப் பார்த்தாள். நான் வீட்டுக்குள் போனேன். தங்கை கிருஸ்ணவேணியும் மகரலட்சுமியும் என் கைகளைப்பிடித்துக் கொண்டு அழுதார்கள். தங்கைகளின் இரு கணவர்களும், நீர் எடுக்க, உதயராஜனோடு சென்றுவிட்டதால் மட்டுமே, எனது தங்கைகளால், என் அருகில் வரமுடிந்து இருக்கிறது.

ஒரு மணி நேரம் கழித்து, ஊர்க் கூட்டம் சூழ, தம்பி உதயராஜன் நீர்க்குடம் சுமந்து வந்தான். சில பங்காளிகளும், அவன் கூடவே, நீர் சுமந்து வந்து இருந்தார்கள். அம்மா, குளிப்பாட்டப்பட்டாள். தங்கைகள இருவரும் அம்மாவின் அருகில் நின்று கொண்டார்கள். அம்மாவைக் குளிப்பாட்டும்போது, நான் கிட்டப்போக எத்தனித்தேன். ஊர்ப்பெண்கள், என்னை ஒருமாதிரியாகப் பார்க்க, நான், சற்று தூரத்தில் நின்று கொண்டேன். அம்மா குளிப்பாட்டப் பட்டாள். குளிப்பாட்டல் எல்லாம் முடிந்த பின்னர்தான், நான் அம்மாவின் அருகில் செல்ல அனுமதிக்கப் பட்டேன். எனது தாய்மாமா ராமலிங்கம்தான், எல்லா இழவு வேலைகளையும் எடுத்து செய்துகொண்டு இருந்தார். கூடவே, தம்பி உதயராஜனும், ஒத்தாசையாய், அதையும் இதையும் செய்துகொண்டு இருந்தான். நான், அந்த இடத்திற்கும் போய், எந்த உதவிகளும் செய்ய முடியாமல், நடப்பதை மட்டுமே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். பிணம் எடுக்கும் நேரம் வந்தது. எனது தாய்மாமா, இப்போது எனது அருகில் வந்தார். அவர் கண்கள் பனித்து இருந்ததை நான் கண்டேன். “என்ன இருந்தாலும் அவர் எனது தாய்மாமன்.. வீட்டுக்கு முதல் குழந்தை நான் என்பதால், என்னை செல்லமாக, அவர் மார்பிலும், தோளிலும் போட்டு வளர்த்தவர். அந்தப் பாசம், அவர் கணகளில் தெரிந்தது”.. துக்கம், தொண்டை அடைக்கச் சொன்னார். “பரஞ்ஜோதி, இந்த வீட்டுக்கு மூத்தப் பொண்ணா, உன் அம்மாவுக்காக, நீ, குடம் உடைச்சு, அம்மாவை சுடுகாட்டுக்கு வழி அனுப்பி வைக்கிறியா?”. அவரால், அதற்குமேல் என்னிடம் பேசமுடியவில்லை. மாமா, நெஞ்சுவிம்மி அழுதார். அழுகையை அடக்க, அவர், தனது துண்டை எடுத்து, வாயில் வைத்துக்கொண்டார். அவரின் அந்த நிலைக்கு, என்னால் உடன் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால்,” சரிங்க மாமா.. நான் செய்யுறேன்” என்று சொல்ல ஆசைப்பட்டு, வாயைத்திறந்தேன். அதற்குள், தங்கை கிருஸ்ணவேணியின் மாமியார், வழிமறித்துப் பேசினாள். “அதெப்படிங்க.. இந்த வீட்டுக்கு உண்மையான மூத்த மக, என்னுடைய மருமகதானே?. அவள்தான், குடம் உடைச்சு, அவங்க அம்மாவை வழி அனுப்பி வைக்கணும்”. ஊர் அவள் சொல்வதையே ஆமோதித்தது. கடைசியில், தங்கை கிருஸ்ணவேணிதான், குடம் உடைக்கக் கிளம்பினாள். அம்மா இருந்த பாடையை, எல்லா ஆண்களும் தூக்கினார்கள். முச்சந்திவரை நாங்கள் எல்லாம் சென்றோம். முச்சந்தியில், அம்மாவின் பாடையை, தங்கை கிருஸ்ணவேணி, மூன்று முறை, மண் கலயத்துடன், சுற்றி வந்தாள். அவள், அப்படிச் சுற்றிய, ஒவ்வொரு முறையும், ஊர்ப்பெரியவர் ஒருவர், மண்குடத்தில் ஓட்டை போட்டார். நீர் கொட்டியது. நனைந்துகொண்டே மூன்றுமுறை சுற்றியபின், குடம் அங்கேயே உடைக்கைப்பட்டது. ஆண்கள் எல்லாம், அம்மா பாடையோடு நடந்தார்கள். பெண்கள் எல்லாம் திரும்பி வீடு வந்தார்கள். நான் கதறி கதறி அழுதேன். ஆணாய் முன்னேயும் போக முடியாமல், பெண்ணாய் பின்னேயும் போக முடியாமல், நான் இருந்த அந்த நிலை, “இப்படியே செத்துப்போய் விடுவோமா” என்று என்னை நினைக்க வைத்தது. “நான் அம்மா அம்மா” என்று கதறினேன். அம்மா “கலங்காதே மகளே.. தைரியமாய் இரு” என்று சொல்வதுபோல, எனக்குத் தோன்றியது. நான், அங்கேயே மயங்கி விழுந்தேன்.

யாரோ, என்னைத் தூக்கி, வீட்டுக்குக் கொண்டு சேர்த்து இருந்தார்கள். நான், மயக்கம் தெளிந்து எழுந்தபோது, தம்பி உதயராஜனும், மாமா, மற்ற சொந்த பந்தங்கள் அனைவரும், வீடு நோக்கி வந்துகொண்டு இருந்தார்கள். வாசல் பந்தலில் இருந்த. தங்கை கிருஸ்ணவேணி முன்னால் போனாள். தம்பி உதயராஜனின் கால்களை, நீரால் கழுவினாள். எல்லோரும் உள்ளே போனார்கள். நான், தன்னந்தனியே ஒரு மூலையில் இருந்தேன். தங்கைகள இருவரும், இழவு முறைப்படி, தங்கள் காசு போட்டு, சோறு ஆக்கி வைத்து இருந்தார்கள். ஒரு பெண்ணாக் நினைத்து, என்னிடம், அவள்கள் இருவருமே, இழவு முறைக்கான காசு கேட்கவில்லை. நானும், ஒன்றும் அது குறித்துப் பேசவில்லை. எல்லோரும், சாப்பிட்டுப் படுத்துக் கொண்டார்கள். நானும் படுத்துக்கொண்டேன். துக்கம் என் தொண்டையை அடைத்தது. இரவில் அம்மா, எனது கனவில் வந்தாள். “வருந்தாதே ஜோதி.. தைரியமாய் இரு… இன்னும் ஒன்பது நாட்கள் பொறுமையாய் இரு.. பத்தாம் நாள், எல்லாமே உனது கையில்தான்” என்று சொல்லிவிட்டு மறைந்து போனாள் அம்மா. நான் கனவு கலைந்து சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். அம்மா அந்தக் கனவில் கொடுத்த தைரியம், என் பலத்தை இரட்டிப்பாக்கி இருந்தது. “ஒரு சமூகம், நாள் முழுதும், இன்று என்னை உதாசீனப்படுத்தி இருக்கிறது” என்ற கொடுமை எனக்கு அப்போது புரிந்தது. என் கோபம் திடீரென்று கூடியது. இனி என்ன செய்ய வேண்டும் என்பதை நான் நன்கு தீர்மானித்துக் கொண்டேன். அப்படியே, ஒரு தெளிவான மனநிலையோடு நான் உறங்கிப்போனேன்.     

அடுத்த நாள் பால் தெளிக்க, எல்லோரும் அதிகாலையில், சுடுகாடு கிளம்பினார்கள். உதய ராஜன் முன்னால் செல்ல, எனது சொந்தங்கள் பின் சென்றன. அன்றும் நான் புறக்கணிக்கப்பட்டேன். எட்டாம் நாள், அம்மாவிற்கு படையல் இடப்பட்டு, மாரடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிருஸ்ணவேணியும், மகரலட்சுமியும், மற்ற எங்கள் சொந்தக்காரப் பெண்களும் மாரடித்தார்கள். அன்றும் நான் புறக்கணிக்கப்பட்டேன். அப்புறம் கடைசியில், அம்மாவுக்கு கருமாதி நடைபெற்றது. தம்பி உதய்ராஜனுக்கு, உரிய மரியாதை தங்கைகளால் கொடுக்கப்பட்டது. அன்றும் நான் புறக்கணிக்கப்பட்டேன்.எனது தாய் மாமா, எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்தார்.

கருமாதி முடிந்த அந்த மதியம் வந்தது. நான் சற்றே தூங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அந்த சண்டைக்குரல்கள் கேட்டு, நான் விழித்துக் கொண்டேன். கூடத்தில், தங்கைகளும, தம்பி உதயராஜனின் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்கள். உதயராஜனும் அவன் மனைவி சார்பாக, கத்திக்கொண்டு இருந்தான். “நிலச்சொத்து ஆணுக்கு மட்டும்தான் போகணும் அப்படின்றது, நம்ம ஊர் வழக்கம். அம்மாவின் நகைகள் மட்டுமே பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதும் நம்ம ஊர் வழக்கம்தான். எனவே, வங்கியில் உள்ள அம்மா நகையை, கிருஸ்ணவேணி, மகரலட்சுமி மற்றும் ஜோதி ஆகிய மூன்று பெரும் பங்கு போட்டுக்கொள்ளட்டும். அம்மா பெயரில் இருக்கும், நிலச் சொத்து, இந்தக் குடும்பத்தின் ஒரே ஆணான, எனது வீட்டுக்காரர் உதயராஜனுக்கு முழுவதுமாய் வந்து சேரட்டும். அதற்கு சம்மதம் என்று பெண்கள் நீங்கள் மூவரும், பத்திரத்தில் கையெழுத்து போட்டுத்தர வேண்டும்.” இதுதான், தம்பி உதயராஜன் மனைவி போடும், சண்டையின் சாராம்சம். “அது எப்படி முடியும். நகைகள் பெண்களுக்கு என்பதை நானும், மகரலட்சுமியும் ஒத்துக்கொள்கிறோம். ஆனால், அந்த நகையில், பரஞ்சோதிக்கு. எந்தப்பங்கும் தர முடியாது. பரஞ்ஜோதி பெண் அல்ல, அவர் ஆண். எனவே, நிலச் சொத்தில் அண்ணன் பரஞ்சோதியும், தம்பி உதயராஜனும் பங்கு போட்டுக்கொள்ளட்டும். நாங்கள் சம்மதம் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறோம். நகைகளை, நாங்கள் ரெண்டு பேர் மட்டுமே பிரித்துக் கொள்ளுவோம்.”. இது கிருஸ்ணவேணி மற்றும் மகரலட்சுமியின் வாதம். ஆரம்பித்த சண்டை, வாக்குவாதம் ஆகி, கைகலப்பில் முடியும் போல எனக்குத் தெரிந்தது. இத்தனைச் சண்டையும், என் தாய்மாமா, ராமலிங்கத்தின் முன்னால்தான் நடந்து கொண்டு இருந்தது. மாமா அமைதியாய் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தவர், எனது தம்பி, தங்கைகளைப் பார்த்துக் கடைசியில் பேசினார். “உங்க எல்லாருக்கும் தெரியும். வங்கியில் இருக்கும் அம்மா நகை, அம்மாவின் பெயரிலும், பரஞ்சோதியின் பெயரிலும் இருந்தது. இப்போது அம்மா இல்லாததால், பரஞ்சோதி மட்டுமே அந்த நகையை எடுக்க முடியும். ஆண்களுக்குச் சேர வேண்டிய, நிலச்சொத்தும், பரஞ்ஜோதி கையெழுத்துப் போட்டால்தான், தம்பி உதயராஜன் சொத்தை அனுபவிக்க முடியும். எனவே, இது குறித்து, பரஞ்ஜோதி சொல்வதைக் கேட்போம்” என்று மாமா சொல்ல, என் ஒட்டுமொத்தக் குடும்பமும், இப்போது என்னைப் பார்த்தது.

அம்மா இறந்த, இந்தப் பத்து நாட்களில், எனது குடும்பத்திற்கு, இன்றுதான் நான் கண்ணுக்குத் தெரிகிறேன். எனக்கு இப்போது சிரிப்பு வந்தது. மாமா, என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார். நான், ஒருமுறை தொண்டையைச் செருமிக்கொண்டு, பேச ஆரம்பித்தேன். “இந்தக் குடும்பத்தின் மூத்த பிள்ளையான என் மீது, அம்மா எவ்வளவு பாசம் வைத்து இருந்தார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்தக் குடும்பம், செழித்து நல்லபடியாக, எல்லோரும் நன்கு வாழவேண்டும் என்பதற்காய், நான் சிங்கப்பூரில் உழைத்த உழைப்பும், உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், நான் திருநங்கை என்ற ஒரே காரணத்தால், என் மீது உயிரையே வைத்து இருந்த எனது அம்மாவிற்கு, ஒரு சிறு இறப்புச் சடங்கு செய்யக்கூட, நான் அனுமதிக்கப்படவில்லை. இது, எனது தன்மானத்தை எவ்வளவு தூரம் பாதித்து இருக்கிறது என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?” நான், எதிரில் இருந்த, தம்பி தங்கைகளைப் பார்த்து சத்தமாக, ஆனால், அதே நேரத்தில் நிதானமாக வினவினேன். “நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், அது எங்கள் தவறு அல்லவே. சமூகம், உங்களுக்கென, எந்தச் சடங்கையும் செய்ய அனுமதி அளிக்கவில்லை”. தம்பி உதயசந்திரன், மெதுவாகச் சொன்னான், நான் மறுபடியும் சத்தமாகப் பதில் சொன்னேன். “அது உண்மைதான் தம்பி. உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. இந்த சமூகத்தின் மீதுதான் தவறு. எனவேதான், நான் நல்ல ஒரு வக்கீல் ஆகப் பார்த்து, நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று, தாக்கல் செய்து இருக்கிறேன். ‘பெற்ற அம்மாவோ, அப்பாவோ இறந்தால், அவர்களுக்குப் பிள்ளையான ஒரு திருநங்கை, என்னென்ன சடங்கு செய்ய அனுமதிக்கப்படுவர்’, என்று அந்த வழக்கில், நான் கேட்டு இருக்கிறேன். வழக்கின் தீர்ப்பை, நீதிபதிகள், இந்த சமூகத்தைக் கேட்டு வழங்கட்டும். வழக்கின் தீர்ப்பை, நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மதத்தைக் கேட்டு வழங்கட்டும். அதுவரை, இந்த சொத்திலோ, வங்கி நகையிலோ, ஒரு தம்படி காசு, என்னால் கொடுக்கமுடியாது. உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள்”. பேச்சை அழுத்தம் திருத்தம் ஆகப் பேசிவிட்டு, நான் அமைதியானேன். கேட்டுக்கொண்டு இருந்த எனது தம்பியும், தங்கைகளும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சொந்த பந்தங்கள் அனைத்தும், அமைதி காத்தது. எனது தாய் மாமா மட்டும் கை தட்டினார். எனது அருகில் தாய் மாமா, நடந்து வந்தார். தனது பெரிய மீசையை முறுக்கிக் கொண்டார். “நீ இன்னைக்கும், உங்க அப்பா மாதிரி, வீரமான புள்ளைதான். என்னை வேணா கல்யாணம் பண்ணிக்கிறியா?” மாமா என்னைக் கேட்டுக்கொண்டே எனது கன்னத்தில், அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தார். நான் வெட்கத்தில் கன்னம் சிவந்தேன். “போங்க மாமா.. இந்தக் குறும்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே” என்று நான் விலகி நின்றேன். மாமா சத்தமாக சிரித்தார். அம்மாவும் கூட சேர்ந்து சிரிப்பதுபோல நான் அப்போது உணர்ந்தேன். எல்லாரும் இடத்தைக் காலி செய்தார்கள். நான் அன்று இரவு, நன்கு உறங்கினேன். அடுத்த நாள், நான் விமானத்தில் ஏறி, சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன்.

சிங்கப்பூரில், நான் வேலை பார்க்கும், நுண்கலைக் கல்விக்கழகத்தில் இப்போதும், “நான் ஆண் டாய்லெட் போக பெண்டுமா, அல்லது பெண் டாய்லெட் போக வேண்டுமா” என்ற விவாதம், ஓடிக்கொண்டு இருந்தது. நான் இப்போதோ தைரியம் உள்ளவள் ஆக மாறி விட்டேன். “ஒரு திருநங்கையாய் என்னால் பிழைக்க முடியும்” என்ற நம்பிக்கை எனக்கு இப்போது, ஆழமாய் வேரூன்றி இருந்தது. நான் எனது பதவியை ராஜினாமா செய்தேன். இப்போது ஒரு நாட்டியக் கலாசாலை ஆரம்பிக்க, இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். ரோட்டில் நான் இப்போது, மன நிம்மதியுடன் நடந்து போய்க்கொண்டு இருந்தேன். யாரோ ஒரு கிறித்துவ போதகர், தெருவில், எனக்கு, நோட்டீஸ் ஒன்று கொடுத்தார். அதில், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட, ஊசியின் காதில், ஒட்டகம் நுழைவது எளிது” என்று இருந்தது. எனக்கு அந்த ஒட்டக வாசகம் மிகவும் பிடித்துப் போனது. எனது கூட வந்த, இன்னொரு திருநங்கை சொன்னாள், “இதே போன்ற வாசகம் இஸ்லாம் மார்க்கத்திலும், சொல்லப்பட்டு இருக்கிறது  என்றாள். நான் ஆச்சரியமானேன்.

அன்று இரவு நான் வேண்டிக்கொண்டேன். “கடவுளே.. நீரே இயேசுவாக இருக்கட்டும். நீரே புத்தராக இருக்கட்டும். நீரே அல்லாவாக இருக்கட்டும். நீரே, நான் தினம் வணங்கும், நடராஜர் ஆக இருக்கட்டும். சாமி.. நீர் கூறியபடி, ஊசியின் துவாரம் சிறிதாய் இருக்கலாம். அதற்குள் எப்படியும் ஒட்டகங்களாய் நுழைய, நீர் ஆணுக்கும் பெண்ணுக்கும் அருள் பாலிக்கலாம். ஆனால், எங்களைப் போன்ற, திருநங்கைகள் நுழைய, எந்த ஊசி துவாரங்களும் எங்களுக்குக் காட்டப்படவில்லையே சாமி. அருள்கூர்ந்து, எங்களையும் ஆண் பெண் போல, ஒட்டகங்களாய் ஏற்று, எங்களுக்கும் நாங்கள் நுழையும் வகையில், தக்க ஊசி துவாரங்களைக் காட்டும். சாமி”. நான் மனமுருகி வேண்டினேன். பிறகு, எனது மனதில் எந்தச் சலனமும் இல்லை. அமைதியாய் இருக்கும் சிங்கப்பூர் ஆறு போல, எனது மனதும் அமைதியானது. நான் தூங்கிப் போனேன்.

அழகர்சாமி சக்திவேல்

Series Navigationகாலவெளிப் பிரபஞ்சத்தை வெகு விரைவாக விரித்து வருவது கருஞ்சக்தியா ?திருப்பூர் இலக்கிய விருது 2020
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *