இருப்பும் இன்மையும்

author
0 minutes, 45 seconds Read
This entry is part 12 of 13 in the series 22 மார்ச் 2020

கண்ணன்

நான் அளிக்கும் விளக்கம் உனக்கு விளங்கவில்லை என்ற பொழுது, மீண்டும் அதை நான் கூற முற்பட்டு உனக்கு புரிய வைக்க இயலவில்லை எனில் நான் அதன் சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம் என்று ஐன்ஸ்டீன் வேறொரு எடுத்துக்காட்டுடன் சொன்னதாக எங்கோ வாசித்த ஞாபகம் ………………….

இப்படியாக தொடர்ந்தது அன்றைய  மாலைப் பொழுது………

ஆம், கார்முகனும், வேலாட்சியும் இன்றைக்கு இப்படித்தான் பேச்சை ஆரம்பித்தார்கள். திருமணம் ஆனதில் இருந்து இருவருக்கும் இடையில், “வீட்டில் அரிசி இல்லை, காலையில் கணவனுக்கு காஃபி தரவில்லை, வேலை முடிந்து வரும் பொழுது மனைவியைப் பற்றியோ வீட்டை பற்றியோ ஞாபகம் இல்லை, வீட்டை அடைந்ததும் கணவனுக்குத்  தேவையான பணிவிடைகள் ஏதும் செய்யவில்லை, மனைவிக்கு ஏதாவது அவள் ஆசைப்பட்டதை வாங்கி வரவில்லை…………… போன்ற எந்த விசயத்திலும் தகராறோ வாதமோ வந்ததேயில்லை.

ஊரார்க்கும், நண்பர்களுக்கும் இவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்ற எண்ணமே இன்னும் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

                    ஆனால் ஏதாவது உளவியல் நிலைக் கருத்தையோ அல்லது அரசியல், பொருளாதாரக் கொள்கையையோ, அறிவியல் கருத்தையோ விவாதிக்கும் பொழுது, எழும்புகின்ற உரத்த குரல் கார்முகனும் வேலாட்சியும் கணவன் மனைவிதான் என்பது கேட்போருக்கு உடனடியாக புலப்பட்டு விடும்.

இருவரும் அவரவர் தத்துவ நிலையை விளக்க முற்பட்டுக்கொண்டே இருப்பர். இறுதியில் மௌனம் மிஞ்சும்.

சாந்தமல்ல…….

கோபத்தின் உச்சம்……

இருவர் கருத்திலும் உள்ள ஏற்புடை பகுதிகளை ஆராய்ந்து இருவரையும் ஏற்றுக் கொள்ள வைக்க “இரவு” என்ற நிலை தழும்பா காலத்தினால் மட்டுமே முடியும். கருவில் கலந்த உயிரைப் போல, கருத்துக்களை கலந்து விடச் செய்கிறது இரவு.

நல்லவேளை ஐன்ஸ்டீன் அந்த மாலை நேரத்து விவாதப் பொருளாகவில்லை. ஆகவே வெளியில் செல்லலாம் என முடிவெடுத்து தொடர்ந்தவர்கள், எங்கே தொடர்கிறோம் என்ற திட்டம் இல்லாமையால் டூ வீலரை  ஹோட்டலில் வந்து நிறுத்தினர்.

ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்து விட்டு கார்முகனும் வேலாட்சியும் எதிரெதிரே இருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.

வேலாட்சியின் முகத்தில் சிறு புன்னகை.

ஏன்?… என்றான் கார்முகன்.

ஒரு விஷயத்தை சிந்தித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னாள்.

என்ன? என்றான் மீண்டும்.

ஜனவரியில் இருந்து வேலைக்குச் செல்லவிருக்கிறேன் என நினைக்கும் பொழுது உற்சாகமாக உள்ளது என்றாள்.

இதுவரை ஏதோ ஒன்றை சார்ந்தே இருந்தேன். கல்யாணத்திற்கு அப்புறம் உன்னை அதிகமாக சார்ந்து உள்ளேன், அது இனிமேல் இருக்காது என நினைக்கும் பொழுது………..

இந்த ஜனவரியில் நான் துபாய் சென்று திரும்பி வருவது எனக்கு மிகப் பெரிய மாற்றமாக இருக்கும். இரண்டு, மூன்று வருடங்களாக ஒரே மாதிரியான வேலையை செய்வது, படித்த விஷயங்களையே மீண்டும் மீண்டும் இந்த தேர்வுக்காக படிப்பது சோர்வாக உள்ளது என்றாள்.

‘ஐ அம் கோயிங் டு லர்ன் டிஃபரன்ட்லி’…………….

நான் படிக்கும் இந்த அறிவியல் சார்ந்த பாடங்கள், அதன் நுணுக்கங்கள் எந்த விதத்தில் என் நிர்வாகத் திறமையை மேம்படுத்தப் போகிறது.

ஐ அம் கெட்டிங் போர்ட்………..

கார்முகன் குறுக்கிட்டான். அதெப்படி மேம்படுத்தாமல் போகும். ஒரு துறை சம்மந்தப்பட்ட அடிப்படை அறிவை பெற்றுக் கொள்ளும் எவராலும் நிர்வாகத் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

நுட்பமாக ஒரு விசயத்தை சந்தேகத்திற்கிடமின்றி கற்றுக் கொள்ள முயற்சிக்கும் போது, நாம் ஒரு வகையான தெளிவை அடைகிறோம். அந்தத் தெளிவு நம் நிர்வாகத் திறனில் வெளிப்படும். ஆகவே எந்த ஒரு துறையைக் கற்பதிலும் நம் நிர்வாக அறிவு மேம்படவே செய்கிறது. நீ எழுதும் தேர்வு கூட உன்னிடம் அதையே எதிர்பார்க்கிறது.

                                       இந்தத் தேர்வை எழுதி வெற்றி பெற்றவர்கள் எல்லாம் அப்படியா இருக்கிறார்கள்? ? ?…வேலாட்சி கேட்டாள்.

எக்ஸ்செப்ஷனல் கேஸ் !!! எல்லாவற்றிலும் இருக்கலாம்.

ஆனால் நீ எப்படி கருத்தை உள்வாங்கிக் கொள்கிறாய், எந்த வடிவத்தில் உள்வாங்குகிறாய் என்பதே இங்கு அந்த திறமையை தீர்மானிக்கிறது. அதுவே முக்கியம் இங்கு……..

                                     வேலாட்சி பதில் பேசும் முன், பேச்சை மாற்றினான் கார்முகன். இட மாறுதல் ஒரு புத்துணர்வைத் தரும். கண்டிப்பாக அது இருக்கவே செய்யும்.

ஆனால் சென்ற இடங்களில் நாம் கற்றுக் கொண்டவற்றை, நமக்கென்று நாம் இயங்கிக் கொண்டிருக்கும் மையத்தில் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.

                            எல்லோருடைய இயக்கத்திற்கும் அந்த மையம் இருக்கும். அதை நீ சொல்லும் “மோனோடானஸ்” ஆக இல்லாமல் பார்த்துக் கொள்வதிலேதான் வாழ்க்கையின் ரசிக்கத்தக்க அம்சங்கள் அடங்கியுள்ளன…என்றான் கார்முகன்.

நான் உன்னிடம் அட்வைஸ் கேட்பதற்காகவா இதைப் பேசுகிறேன். யூ ஜஸ்ட் லிசென் மீ……தட்ஸ் எனப்ஹ். நான் பேசவும், பகிரவும் விரும்புகிறேன். அவ்வளவுதான் என்று சொன்ன  வேலாட்சியின் முகத்தில் சலிப்பும் கோபமும் கலந்த கண்களைக் கண்டான் கார்முகன்.

நோ நோ….அட்வைஸ் இல்லை….சும்மா தோன்றியதைச் சொன்னேன் என்றான்.

கார்முகன் பேசி முடிக்க உணவு வந்தது டேபிளுக்கு.  சாப்பிட்டு முடியும் வரை விவாதம் இல்லை. அமைதியாக இருபது நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடித்து பில்லுக்காக காத்திருந்தனர்.

பேக் உள்ளே துலாவி விட்டு, பர்ஸை மறந்து வீட்டிலேயே வைத்து வந்து விட்டேன் என்றாள் வேலாட்சி.

பணம் இருக்கிறது, ஆனால் இருபது  ரூபாய் குறைவாக இருக்கிறது……..

சரி, வீட்டிற்குச் சென்று எடுத்து வா ……நான் காத்திருக்கிறேன் என்றான் கார்முகன்.

டூ வீலரில் வந்திருந்தார்கள். வேலாட்சி யோசித்தபடி எழுந்தாள்.

மெயின் ரோட்டில் செல்லட்டுமா? குறுக்கு வழியில் போய் வரவா?

எப்படியாவது போய் வா…என்றான்.

இன்று எல்லாமே இருபதாக இருந்தது.

இருபது நிமிடங்களில் திரும்பி வந்த வேலாட்சி உற்சாகமாக இருந்தாள்.

ஏன் என்று கேட்காமலேயே சொன்னாள்…..எப்படியோ முதன்முறையாக மெயின் ரோட்டில் டூ வீலர் ஓட்டி வந்து விட்டேன்………….

ஹோட்டலில் இருந்து வெளியேற அடுத்த இருபது நிமிடங்கள் ஆனது.

ஹோட்டல் வளாகத்தில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்தது வண்டி. வேலாட்சியின் கால்கள் தரையை தொட்டும் தொடாமலும் தொங்கிய படி வண்டி நகர்ந்து கொண்டு இருந்தது.

எந்தப் பாதையில் வீட்டுக்குச் செல்வது என்று உரையாடிக் கொண்டிருக்கும் போதே வேலாட்சி டூ வீலரை நகர்த்திக் கொண்டு பாதையைத் தீர்மானித்து சென்று கொண்டிருந்தாள். தொங்கியிருந்த கால்கள் வண்டியைப் பற்றிக் கொள்ளும் அளவுக்கு வண்டி வேகம் எடுத்திருந்தது. மித வேகம்தான். வேலாட்சியின் மன ஓட்டம்தான் அதி வேகம் கொண்டிருந்ததது.

சாலையில் போக்குவரத்து அதிகம் இல்லாமல் ஆங்காங்கே சில மனிதர்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

இடையில்…..

உன்னை ஏன் பணம் எடுத்து வா என்று சொன்னேன் என்றால்,  நீ அங்கு காத்திருப்பது நன்றாக இருக்காது என்றான் கார்முகன்.

ஹோட்டலில் நடந்த விவாதம் இருவர் நெஞ்சிலும் ஓடிக் கொண்டுதான் இருந்தது. நல்லவேளை ….. அது வாதமாகவில்லை.

ஆகியிருந்தாலும் பரவாயில்லை.

பார்க்கிங்கில் டூ வீலரை விட்டு விட்டுச் சாவியை எடுத்துக் கொண்டு, வேலாட்சி சொன்னாள்……….பேபி , நீ வண்டியை பூட்டிட்டு வா!  நா போய் வீட்டைத் திறக்கிறேன் என்று.

                    வாதமோ, விவாதமோ, அவர்கள் நெஞ்சில் நிற்கும் வேறுபட்ட கருத்து இருப்பை இன்மையாக்கி விடும் இரவு வந்துவிட்டதே. இன்மையே இங்கு இருப்பாக ஆகிறது என்பதை இருவருக்கும் இரவெனும் காலம் உணர்த்திக் கொண்டிருந்தது

Series Navigationகனவுகளை விற்பவன்“சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் குறித்து….
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *