தட்டும் கை தட்டத் தட்ட….

This entry is part 1 of 13 in the series 22 மார்ச் 2020
  1. பிரார்த்தனை

இதோ இந்கே சில நிமிடங்கள் தொடர்ச்சியாக நான் கைதட்டுவது

இதுவரை நான் பொருட்படுத்தாதிருந்திருக்கக்கூடிய

பாராட்ட மறந்திருக்கக்கூடிய எல்லோருக்குமானதாகட்டும்.

ஒரு கிருமியால் என்னுயிர் பறிபோய்விடுமோ என்ற

பயத்தால் மட்டுமே நான் இதைச் செய்கிறேன்

என்று ஆகிவிடலாகாது.

இந்தக் கைத்தட்டல் நேற்றும் இன்றும் நாளையும்

மக்கள்பணியாற்றும் எல்லோருக்குமானதாகட்டும்.

என்னிரு கைகளை யந்திரத்தனமாகச் சேர்த்துக்

கரவொலியெழுப்பாமல்

மனதின் கைகளைக் கொண்டு நான் தட்டுவேனாக.

உலகின் தலைசிறந்த இலக்கியங்களைப் படைத்தவர்களுக்கு

உரித்தாகட்டும் இந்தக் கைத்தட்டல்

நான் வாழுங் காலத்தின் அற்புதத் தமிழ்க்கவிஞர்களுக்கு

அர்ப்பணமாகட்டும் இந்தக் கைத்தட்டல்.

நற்றமிழுக்காகட்டும் இந்தக் கைத்தட்டல்.

நல்ல அரசியல் தலைவர்களுக்கு ஆகட்டும்

இந்தக் கைத்தட்டல்.

புல் பூண்டு காய் கனி பழம் மரம் பூ விலங்கு

பறவை யின்னும் பலப்பபல சக உயிரிகளுக்கென்

அன்பைத் தெரிவிக்கட்டும் இந்தக் கைத்தட்டல்.

வல்லூறின் வளைநகங்களாய் வார்த்தைகளைப்

பிரயோகிக்காமல்

நல்லவிதமாய் மாற்றுக்கருத்துகளைச்

சொல்பவர்களுக்காகட்டும் இந்தக் கைத்தட்டல்.

தன்னால் முடிந்ததைச் செய்து

சகமனிதர்களின் இன்னல் களைய

முன்வருபவர்களுக்காகட்டும் இந்தக் கைத்தட்டல்.

இன்சொற்களையே மொழிபவர்களுக்கு என்றும்

உரித்தாகட்டும் இந்தக் கைத்தட்டல்.

எனக்கும் என் உடலுக்கும்

எனக்கும் நான் வாழும் சமூகத்திற்கும்

எனக்கும் என் அம்மாவுக்கும்

எனக்கும் என் மனதிற்கும்

எனக்கும் என் உள்ளங்கைகளுக்கும்

உடனிருக்கும் விரல்களுக்கும்

உங்களுக்கும் எனக்கும்

எனக்கும் எனக்கும்

இன்னும் கணக்கற்றவைகளின் தொடர்புறவைப்

புரிந்துகொள்ள

வழிகாட்டுவதாகட்டும் இந்தக் கைத்தட்டல்

  •  
  • ஒரு கை ஓசை

அண்ணாந்து பார்த்து கைதட்டும்போது
அங்கிருக்கும் முகில்திரள்களுக்குள்ளிருந்து
எந்த எதிர்வினையேனும் கிடைக்குமோ
என்ற எண்ணமெழுந்தது.

அன்றொருநாள் படித்த
’ஒரு கை ஓசை’ நினைவுக்கு வந்தது.

உண்மையில் எல்லாமே
ஒரு கை ஓசை தானா?

எண்ண,
இப்படி இருகைகளும்
ஒன்றையொன்று தொட்டுணர்ந்து
எத்தனை காலமாகிவிட்டது!

பெருக்க இடதுகை;
பைதூக்க இடதுகை
எழுத வலதுகை
உணவருந்த வலதுகை….

இரண்டுகைகளுமாக ஒரு புத்தகத்தைப்
பிடித்துக்கொண்டிருந்தாலும்
ஒன்றையொன்று தொட வாய்ப்பில்லை.

சுடச்சுட காஃபிக்கோப்பையை ஏந்தியிருக்கும்
சமயத்திலும்
ஒரு கை கோப்பையின் அடியிலும்
ஒன்று கோப்பையின் பக்கவாட்டிலுமாய்….

கடவுளைத் தொழும்போது

இரண்டு உள்ளங்கைகளும் இணைந்திருக்குமென்றாலும்
அது தொடுவுணர்வைத் தாண்டியதொரு
தருணமாய்….

இரு உள்ளங்கைகளின் விரல்களின்
இணைந்த தட்டலின் அதிர்வுகளில்
இரட்டிப்பு உயிர்ப்புணரும் மனம்
எல்லோரும் கைதட்டிமுடித்துவிட்டுக்
கலைந்துசென்ற பிறகும்
கூட சிறிதுநேரம் அதையே
செய்துகொண்டிருக்கும்…….

Series Navigationகரோனா குறித்து சென்னை, பூவிருந்தவல்லி பார்வையர்றோர் பள்ளி மாணவர்கள் இயற்றி இசைத்திருக்கும் விழிப்புணர்வுப் பாடல்! _ தகவல் : லதா ராமகிருஷ்ணன்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *