வளவ. துரையன்
வட பகீரதி குமரி காவிரி
யமுனை கௌதமை மகரம்மேய்
தட மகோததி இவை விடாது உறை
தருண மாதர்! கடை திறமினோ. [31]
[பகிரதி=கங்கை; கௌதமை=கோதாவரி; மகரம் மேய்=மீன்கள் உலாவும் இடம்; தடம்=அகன்ற; மகோததி=கடல்; தருணமாதர்=இளம்பெண்கள்]
வடக்கில் ஓடும் கங்கை, தெற்கே பாயும் காவிரி, யமுனை, கோதாவரி ஆகிய ஆறுகளையும், மீன்கள் நிறைந்த விரிந்து அகன்ற கடல்களையும், வசிப்பிடமாகக் கொண்ட தேவருலக இளம்பெண்களே! கதவைத் திறவுங்கள்.
====================================================================================
உருகுவார் உயிர்படு படாமுலை
உழறுமேல் உலகு இறும்எனத்
திருகுவார் முசிவிசி விடாதவர்
திறமினோ! கடைதிறமினோ! [32]
[உழலுதல்=கழலுதல்,அவிழ்தல்; இறும்=அழியும்; திருகு=இறுக்கிய; முசி=முடிச்சு; விசி=இறுக்கம்; விடாதவர்=அவிழ விடாதவர்]
காண்பவர் உள்ளத்தையும் உயிரையும் உருகச் செய்யும் உங்கள் மார்பகங்கள் கண்களில் பட்டால் காம வேட்கையால் இவ்வுலகமே அழிந்துவிடும் என அம்மார்பகங்களை இறுகக் கட்டி வைத்துள்ள கச்சின் முடிச்சு அவிழாதபடிக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் கன்னிப்பெண்களே! கதவைத் திறவுங்கள்.
=====================================================================================
மந்தமே சிலநூபுரா [ஆ]ரவம்
மகிழ்நர் சேகர மதுகரம்
சிந்த மேல்வரு மேகலா அரவும்
உடையநீர் கடைதிறமினோ. [33]
[மந்தம்=ஆசைவெறி; நூபுரம்=சிலம்பு; அரவம்=ஒலி; சேகரம்=தலை; மதுகரம்=வண்டுகள்; சிந்த=எழுப்ப; மேகலி=இடயணி;ஆரவம்=ஒலி]
காதல் ஆசை மிகுந்துள்ள பெண்களே! உங்களோடு கூடி மகிழ்பவர்கள் தங்கள் தலையில் பூக்களாலான கண்ணியைச் சூடி உள்ளார்கள். கூடலின் போது உங்கள் கால்களில் அணிந்துள்ள சிலம்புகள் அவர்களின் தலையில் உள்ள கண்ணிகளில் இருக்கும் மலர்களில் மொய்க்கின்ற வண்டுகள் எழுப்பும் ஒலியை அடங்கச் செய்கின்றன. இடையில் அணிந்துள்ள மேகலையின் மணிகள் ஆரவாரமாக ஒலிக்கும் பெண்களே! கதவைத் திறவுங்கள்.
கூடும் ஆடவர் பெண்களின் ஊடலைத் தணிவிக்க அவர்களின் தாள் பணிவராம். அப்பொழுது ஆடவர்களின் தலைக்கண்ணியில் பெண்களின் கால் சிலம்புகள் பட்டு ஒலிக்கும் என்பது இப்பாடலில் தெரிகிறது.
=====================================================================================
நாவிமான மனம் கமழ்ந்து இள
நவ்வி மான மலர்ப் பெருந்
தேவிமான விமான வாயில்
புகுந்த ரம்பையர்! திறமினோ. [34]
[நாவி=கஸ்தூரிமான்; இளநவ்வி=இளமையான மான்; மலர்ப்பெருந்தேவி=திருமகள்; விமானம்=மாடம்]
கஸ்தூரி மான்களின் மணம் வீசும் உடல் அழகையும், இளமையான மானைப் போன்ற மருண்ட பார்வையும் கொண்ட திருமகளைப் போன்ற பெண்களே! கதவுகளைத் திறவுங்கள்.
===================================================================================
எளிய ராமிர்த மதனன் ஆள்படை
இறைவர் சீறினும் இனிஎனாத்
தெளிவ ராமிர்தம் மதன நாள்வரு
தெரிவைமீர் கடை திறமினோ. [35]
[மிர்தமதனன்=எரிந்த மன்மதன்; சீறினும்=கோபித்தாலும்; மதனநாள்=கடைந்த போது; தெரிவைமீர்=பெண்களே]
எளிமையான மன்மதன் சிவபெருமான் கோபத்துக்காளாகி அவர் நெற்றிக்கண் திறக்க அதிலிருந்து வந்த நெருப்புக்கு இரையானான். அந்த சிவனே சீறிச் சினந்தாலும் அழிக்க முடியாதவர்களாகக் கடலைக் கடைந்த போது தோன்றிய பெண்களே! கதவைத் திறவுங்கள்.
=====================================================================================
நெளியும் மகரஇருகுழையும் இளவெயில்விட
நிறையும் மதிஇரவும் மழுகி நிலைகெட நகைத்
தெளியும் நிலவு பகலினும் முளுரிகெட மலர்த்
திலக வதன சுரமகளிர் கடிதிறமினோ [36]
[மகர இரு குழை= மீன் வடிவில் அமைந்துள்ள இரு காதணிகள்; மழுகி=மழுங்கி; முளரி=தாமரை;திலகவதனம்=பொட்டு இடப்பட்ட முகம்; சுரமகளிர்=தேவருலகப் பெண்கள்]
காதுகளில் அணிந்துள்ள மீன்வடிவக் காதணிகள் அசைகின்றன. அவற்றில் பதிக்கப்பட்டுள்ள மாணிக்கங்கள் இளவெயில் போல ஒளி வீச, அந்த ஒளியில் இரவில் முழுமதியின் ஒளி மழுங்குகிறது. அவர்கள் சிரிக்க அப்பொழுது அவர்களின் பல் வரிசை முத்துப் போல ஒளிவிட அவ்வொளியில் பகலிலே தாமரை குவிகிறது. அப்படிப்பட்ட, அழகிய பொட்டு இட்டுள்ள தேவர் உலகப் பெண்களே! கதவைத் திறவுங்கள்.
=====================================================================================
அருகு திசையருகு கடிதடமும் மிசைவெளி
அகலம் அடைய வளர்தனதடமும் அவைஅவை
திருகு செருநினைய நடுஇடை இறு
திகிரி வரையில் அரமகளிர் கடைதிறமினோ [37]
[அருகு=பக்கம்; கடிதடம்=மறைவிடம்; மிசைவெளி=மேலுள்ள ஆகாயம்; தனதடம்=மார்பகம்; திருகுசெரு=தமக்குள்ளே மோதி; இறு=முரியும்; திகிரி=சக்கரவாள மலை; வரை மகளிர்=மலை வாழ் தெய்வங்கள்]
இடையின் கீழே உள்ள மறைவிடமானது அகன்று திசைகளைப் போய்ச்சேரும்படி பரந்து வளர, மார்புகளெல்லாம் ஆகாயத்தை தொடும்படி உயர, இதனால் இடை முரிந்து விடுமோ என என்ணும் அளவிற்கு மெல்லிய இடையை உடைய சக்ரவாள மலையில் வாழும் தேவலோகப் பெண்களே! கதவைத் திறவுங்கள்.
====================================================================================
உலரும் முதுமரம் இளமையும் வளமையும்
உயிரும் நிலைபெற ஒளிவிடும் இவர்உரு,
உறுதி அமுதினும் இவர், இவர் பிறவியும்
உத்தி; இவர்களில் ஒருமகள் திருமகள்
அலகில் சுரபதி மதனர்கள் அரசிவர்
அவர திகிரியும் அனிகமும் அகிலமும்
அலகில் புவனமும் இவர்இவர் எனவரும்
அமரர் வனிதையர் அணிகடி திறமினோ. [38]
[உலரும் முதுமரம்=காய்ந்த பழைய மரம்; உரு=தோற்றம்; உறுதி=நன்மை; அலகில்=அளவிட முடியாத; சுரபதி=தேவர்களின் தலைவன்; திகிரி=ஆணைச்சக்கரம்; அனிகம்=படை; புவனம்=ஆகாயம்]
காய்ந்து போன பழையமரமும் இவர்கள் பார்வை பட்டால் துளிர்க்கும் என்று சொல்லத்தக்க அளவிற்கு இளமை கொண்டவர்கள் இவர்கள்; நல்ல அழகுடன் விளங்கி எல்லா உயிர்களுக்கும் நன்மைசெய்யும் அமிழ்தத்தை விட மேலானவர்கள் இவர்கள். பாற்கடலில் பிறந்த இவர்களில் ஒருத்திதான் திருமகள் எனப் போற்றப்படுகிறாள். தேவேந்திரனின் ஆட்சியும் மன்மதனின் அரசும் கூட இவர்களுடையதே. எல்லா அண்டங்களிலும் இவர்களின் ஆணைச்சக்கரமும் படைகளும் அதிகாரம் செலுத்தக் கூடியவை. இவ்வாறு பலரும் போற்றிக் கொண்டாடும் பெண்களே! கதவைத் திறவுங்கள்.
=====================================================================================
அடைய அரியன கடைஇரு புடையினும்
அளவு கெடநிமிர் விழிவிடம் அடுதலின்
அமரர் அனைவரும் முனிவரில் அதிகரும்
அவனி தலம்உற விழுபொழுது அயில்எயிறு
உடைய கவிர்இதழ் உமிழ்நகை அமிழ்துயிர்
உதவும் உதவியொடுவமை இல்இளமையொடு
உரக குலபதி வர அவனுடன் வரும்
உரிமை அரிவையர் உயர்கடை திறமினோ. [39] [விழிவிடம்=கண்பார்வை எனும் நஞ்சு; அடுதல்=சுடுதல்; அதிகர்=பெரியோர்; அவனி=பூமி; தலம்=இடம்; அயில்=அழகிய; எயிறு=பல்; கதிர் இதழ்=சிவந்த வாயிதழ்; உரகம்=பாம்பு; குலபதி=பாம்பரசன்]
அருகில் நெருங்க முடியாமல் உங்கள் கடைக்கண் பார்வை நஞ்சு போலத் தாக்குகின்றன. அதனால் தேவர்களும், முனிவர்களும் மயங்கி மண்ணில் விழுகின்றனர். அவர்களுக்கு உங்கள் வாயிலிருந்து சிந்தும் புன்னகை என்கின்ற அமிழ்தத்தை அளித்து அவர்களை உயிர் பெறச் செய்யும் இளமை மிக்க பெண்களே! நாகர் உலக அரசன் இந்த இராசமாபுரம் வருகையில் அவனுடன் வரும் நாகர் உலகப் பெண்களே! கதவைத் திறவுங்கள்.
=====================================================================================
முடிதும் எனமறை முதலிய பரவவும்
முறிதும் என நிசிசரர் குலம் இரியவும்
முறிதும் என எழுகுலகிரி குலையவும்
முறிதும் என எழு புணரிகள் மறுகவும்
மடிதும் எனமகிதலம் நிலை தளரவும்
மறிதும் எனஅடி சுரபதி வருடவும்
வரதன் ஒரு தமிழ் முனிவரன் வரவரும்
மலய வரை அரமகளிர்கள் திறமினோ. [40]
[முடிதும்=முடிந்தது; பரவும்=துதிக்கும்; நிசிரர்=அரக்கர்; இரிதல்=அஞ்சி ஓடுதல்; குலகிரி=மலைகள்; புணரி=கடல்; தலம்=பூமி; மறிதும்=மீண்டும்; சுரபதி=இந்திரன்; வரதன்=வரம் தருபவன்; முனிவரன்=அகத்தியன்; மலயவரை=பொதியமலை; அரமகளிர்=தெய்வப் பெண்கள்]
தம் கதை முடிந்துவிட்டது என எண்ணிய வேதங்கள், பின் தப்பிப் பிழைத்து நிலைபெற்றுத் துதிக்கவும், அசுரர் குலம் அஞ்சி ஓடவும், அகத்தியர் விந்தியமலையை அழுத்தியது போலத் தம்மையும் அழுத்தி விடுவாரோ என மற்ற மலைகள் அஞ்சவும், அவர் தம்மையும் உறிஞ்சிவிடுவரோ எனக் கடல்கள் அஞ்சவும், முன்பு தென்திசையைச் சமமாக்கியது போல இப்பொழுதும் தம்மை மேல் கீழ் ஆக்கிவிடுவாரோ என மண்மாதா அஞ்சவும், நகுஷனைச் சபித்தது போலத் தன்னையும் சபித்து விடுவாரோ என்று தேவேந்திரன் அஞ்சவும், முன்பு பொதிய மலையில் இருந்து அகத்திய முனிவர் இந்த இராசமாபுரம் வந்த போது அவருடன் வந்த பெண்களே! கதவைத் திறவுங்கள்.
=====================================================================================