மனிதனுக்கும்
மரணத்துக்கும் இடையே
ஒரு மீட்டர் இடைவெளி
வாய்க் கவசம் இன்றேல்
வாய்க்கரிசி
விடிந்ததும் தேடும்
முதல் செய்தி
‘நேற்று எத்தனை பிணம்’
ஆண்டவன்
வீடுகளுக்குப் பூட்டு
நாடுகளுக்கிடையே
சாதனையிலும் போட்டி
சாவிலும் போட்டி
அனைவர் கழுத்திலும்
தொங்கும் வாசகம்
‘அபாயம். தொடாதே’
ஆயுள் ரேகையை
ஒரு ரப்பர் அழிக்கிறது
கல்யாணமோ
கருமாதியோ
பத்துப் பேர்தான்
அனைவரையும் சுற்றி
அந்நியன்
கொரோனா விவசாயம்
மனிதர்கள் அறுவடை
வாழ்க்கை கழுவுமுன்
கைகளைக கழுவுங்கள்
கடன்களைச்
மறைத்தாலும்
இருப்பைச் சொல்லுங்கள்
ம்… சீக்கிரம்
எல்லைகள் மூடல்
நாட்டின்… வீட்டின்….
‘தொட்டதெல்லாம்
பிணமாகும்’ வரம்
தந்தது நியாயமோ?
இன்றைய மனித
நோட்டுக்கள்
நாளை செல்லுமா?
பசித்தவனைத் தேடுங்கள்
தனியொரு மனிதன் பட்டினியால்
ஜகம் அழிக்கப்படுகிறது
ஊரடங்கு உத்தரவு புரியும்
உயிரடங்கு உத்தரவு?
எல்லார் வீட்டிலும்
எல்லோரும் இருக்கிறோம்
பாவம்! திருடர்களுக்கு
வேலையில்லை
இந்த சாபத்தை
சொல்லத்தானோ
சாய்ந்த கோபுரம்?
மனிதன்மீது
அணு….குண்டு சோதனை
அறிவிப்பின்றி
விந்தையான மிருகம்
மனிதர்களை மேய்கிறது
மாட்டுத் தீவனமாக
மல்லிகைப் பூக்கள்
அஃறிணையாகப்
பிறந்திருக்கலாமோ?
ஒரு வேண்டுகோள்
செவ்வாய்க்கு மனிதன்
இப்போது வேண்டாம்
அமீதாம்மாள்