- ஆதலினால்….
இக் கொள்ளைநோய்க் காலத்தில்
உள்ளத்தில் நீ நிறைந்தாய் என்று
சொல்லாமல் சொல்வதாய் விரியும்
கவிதையைப் பார்க்க _
பேரிடர் காலத்தே மட்டும் நினைக்கப்படுவதா
பெருங்காதல் என்று
யாரிடம் கேட்க…..
- ஆறு மனமே ஆறு…..
”வயதானவர்களைத்தான் கொரோனாக் கிருமி
வேகவேகமாயக் வாயைத்திறந்து கவ்வியெடுத்துக் கொள்கிறது _
விலகியே இரு
தாத்தாவிடமிருந்து”
என்று சொன்ன அப்பா
அவருடைய அப்பாவை ஆதுரத்தோடு நெருங்கி
அருகில் அமர்ந்து அந்தத் தளர்ந்த கரங்களைத் தன் கைகளுக்குள்
பொதிந்துகொள்வதைப் பார்த்து
அவருடைய தலைக்கு மேலாய்
தாத்தாவும் பேரனும் புன்னகையோடு
கண்சிமிட்டிக்கொள்கிறார்கள்.
பின் தாத்தா பேரனிடம் ”எல்லாம் கொஞ்ச நாட்கள்தான்
சீக்கிரமே பழையபடி என் மடியில் அமர்ந்து கதைகேட்கலாம் நீ” என்கிறார்.
ஏனென்றே புரியாமல் அந்த ஆறு கண்களிலும்
தளும்புகிறது நீர்.
.