அருணா சுப்ரமணியன்
ஒரு நாளுக்கு மூன்று வேளை ஒரு வேளைக்கு இரண்டு நைவேத்தியம்னு நன்னா கவனிக்கப்பட்ட நம்ம முச்சந்தி பிள்ளையாருக்கு இந்த ஊரடங்கு காலத்துல பாவம் தண்ணி ஊத்தக்கூட ஆளில்லை. நாள் தவறாம வந்து தனக்கு அலங்காரம் பண்ணி வாய்க்கு ருசியா எதுனா கொடுத்துட்டு போற கணேசன் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறான் போல. அவரும் எப்போ வருவானு வழிமேல் விழி வச்சு காத்துக்கிட்டு இருந்தார். ரெண்டு நாள் முன்னாடி கணேசன் வச்சுட்டு போன கொழுக்கட்டை சுண்டல் வகையறாக்களா வச்சு ஒரு நாள் ஓட்டிட்டார். அடுத்த நாளைக்கு கைல இருந்த பழத்தை மட்டும் தான் சாப்பிட முடிஞ்சுது. மூணாம் நாள் காலைல பசி அவரோட பெரிய காதை அடைக்க ஆரம்பிச்சுடுச்சு. இவ்ளோ நாளும் சமத்தா தனக்கு பக்கத்துல உட்கார்ந்திருந்த மூஞ்சுற குறுகுறுன்னு பார்த்தாரு. அது என்ன நினைச்சுதோ பிள்ளையாரப்பா காப்பாத்துன்னு இவரவிட்டு ஓடியே போச்சு. என்ன செய்யுறதுனு தெரியாம முழிச்சுட்டு இருந்தார் நம்ம விநாயகர். சரி இனி பிடிச்சு வச்ச பிள்ளையாராட்டம் உட்கார்ந்து இருந்தா நம்ம பிள்ளையாராவே இருக்க முடியாது. கோதாவுல நாமே இறங்கிட வேண்டியது தான்னு தன்னோட முச்சந்தி சிம்மாசனத்துலேந்து இறங்கி தெருவுல நடக்க ஆரம்பிச்சார்.
—–
நடந்தே பல யுகங்கள் ஆகிப்போன காரணத்தாலும் பசியின் கொடுமையாலும் பத்தடி தூரம் நடக்கவே படும்பாடுபட்டுவிட்டார். ஒருமாதிரி சமாளித்து அண்ணாச்சி கடை வரை வந்துவிட்டார். அப்போது தான் கடையை திறந்து கொண்டிருந்தார் அண்ணாச்சி. கடையின் வாசலில் சமூக இடைவெளிக்கான வட்டங்கள் வரையப்பட்டு ஒரு கயிறும் கட்டியிருந்தது. அந்த கயிற்றின் அடியில் குனிந்து செல்லும் அளவு பொறுமையில்லாமல் இங்கிருந்தே “ஐயா! சாப்பிட ஏதாவது இருக்குதா? ” என்றார்.
“யோவ்! இப்போ தான் கடையே திறக்கிறேன் நான். என்ன வேணும் உனக்குன்னு சரியா சொல்லு.”
” ஏதாவது பலகாரம் இருந்தா கொடுங்க. ”
” அதெல்லாம் ஒன்னும் இல்லை. இங்க ரொட்டி மட்டும் தான் இருக்கு. ஒரு பாக்கெட் 100 ரூபா.”
” 100 ரூபாவா?”
” ஆமாம். எப்போதும் 30 ரூபாதான். இப்போ நாங்க சரக்கு எடுத்து வரவே எவ்ளோ கஷ்டப்படறோம் தெரியுமா? 100 ரூபா இருந்தா கொடுத்து வாங்கிட்டு போ. இல்லாட்டி இடத்தைக் காலி பண்ணு. வந்துட்டான் காலங்கார்த்தாலேயே யானை மாஸ்க்கை மாட்டிகிட்டு.”
தெருவோர பிள்ளையாரிடம் கையிலும் காதிலும் கூட எதுவும் இல்லை. இடுப்பில் சுற்றியிருந்த வேட்டியையும் நெஞ்சின் குறுக்கே தரித்திருந்த பூணுலயும் தவிர. இதை வைத்து ஒன்னும் செய்ய முடியாது என்பது மட்டும் அவருக்குத் தெரிந்திருந்தது.
—
அங்கிருந்து நகர்ந்து சிறிது தூரம் சென்று அங்கே நடைபாதையில் வாழ்ந்து கொண்டிருந்த மாரியின் குடும்பத்திடம் சென்றார். மாரியும் அவன் மனைவியும் நாள் முழுதும் கட்டிட வேலை பார்த்துக் கிடைத்த கூலியில் தான் அவர்களின் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டுக் கட்டிட வேலைகள் எல்லாம் நின்று போயிருந்தது. கையிருப்பு என்று எதுவும் இல்லாமல் அடுத்த வேளைக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் முழித்துக்கொண்டிருந்தனர். அவரின் பிள்ளைகள் பசி தாங்காது புல்லையும் மண்ணையும் அள்ளி வாயில் திணித்துக் கொண்டிருந்ததை கண்ட மாரியின் மனைவி அவர்களைத் தடுக்கக்கூடத் தோணாது உட்கார்ந்திருந்தாள். இவர்களிடம் நாம் என்ன கேட்பது என்று நினைத்த பிள்ளையார் அங்கிருந்து மௌனமாகவே கிளம்பினார்.
—
வெயிலில் அலைந்து கொண்டிருந்த விநாயகர் நிழலுக்காய் அருகிலிருந்த அடுக்குமாடி கட்டிடத்துக்குள் நுழைந்தார். தாகத்தைப் போக்கிக்கொள்ளக் கொஞ்சம் தண்ணீராவது கிடைக்குமா என்று அங்கிருந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார். வீட்டினுள் அம்மாள் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பாகிக் கொண்டிருந்த “மஹாபாரதத்தில்” மூழ்கியிருந்தாள் . அந்த வீட்டின் வாண்டு காதில் மாட்டியிருந்த ஹெட்செட்டை விலக்கி யாரோ மணி அடிக்கிறார்கள் என்று தோளைக் குலுக்கிவிட்டு மீண்டும் அவனது வீடியோ கேமிற்குள் புகுந்தான். வெகு நேரம் அழைப்பு மணியை அழுத்திக்கொண்டிருந்தவர் திரும்பிப்போக எத்தனிக்கையில் தான் அங்குத் தாழ்வாரத்தில் ஒருவர் வலது கையில் ஒரு விளக்கையும் இடது கையில் மணியையும் வைத்து ஆட்டிக்கொண்டிருந்ததை கண்டார்.
” ஐயா! இந்த வெயிலில் யாருக்கு பூஜை செய்கிறீர்கள்?”
” அட நீ வேறயா! நேத்து ஒன்பது மணிக்குத் தூங்கிட்டேன். இன்னிக்கு மணி அடிக்கணுமா விளக்கு பிடிக்கணுமானு தெரியல. எத்தனை மணிக்கு எவ்ளோ நேரம் செய்யணும்னு தெரிலை. ஒரு பயலும் ஒன்னும் சொல்ல மாட்டேங்கறான். இதைச் செய்யலன்னா ஆன்டி இண்டியன்னு வேற சொல்லிப்புடுவாங்க. உன்கிட்ட பேசிட்டு இருந்தா நான் விளக்க ஆட்டிப்புடுவேன். கிளம்பு கிளம்பு “
—
தவிச்ச வாய்க்கு தண்ணி கூடக் கிடைக்காமல் எச்சிலை விழுங்கி கொண்டு தன் முச்சந்திக்கே வந்து சேர்ந்தார் பிள்ளையார். பசி மயக்கத்தில் கண்கள் செருக அப்படியே மரத்தில் சாய்ந்து கொண்டார். மரத்தின் பின்புறமிருந்து தயங்கித் தயங்கி வந்த மூஞ்சூறு தான் தின்று கொண்டிருந்த கொய்யாப்பழத்தை இவரிடம் நீட்டியது. அரவம் கேட்டுக் கண் விழித்த விநாயகர் தன் முன் பவ்யமாக நின்றிருக்கும் தன் பிரிய மூஞ்சூறிடமிருந்து பழத்தை பெற்றுக்கொண்டார். அவர் அதை உண்டு முடிக்கும் நேரத்தில் பறிக்க ஆளில்லாமல் கிடந்த மரத்தில் இருந்து பழங்களை ஆசை தீர உண்டு கொண்டிருந்த அணில் ஒன்றும் தன் பங்காய் ஒரு பழத்தை இவருக்கு அளித்தது. அதனையும் ருசித்த பிள்ளையாருக்கு பசியாறியது.
தன்னிலை உணர்ந்தார். பசியில் தான் கடவுள் என்பதையே மறந்திருந்தார். இத்தனை காலம் காணிக்கை செலுத்தி எனக்கு இதைக் கொடு அதைக் கொடு என்று தன்னை ஒரு கூலிக்காரனாய் மட்டுமே நடத்தி வந்த மனித மனத்தின் சுயநலத்தை உணர்ந்தார். தன்னிடம் இதுவரை எதையுமே கேட்டிராமல் தன் பசியாற்றிய இந்த பிள்ளைகளுக்கு எதுவுமே செய்யவில்லையே என்று வருந்தினார்.
“நான் நான் என்று அலையும் இந்த மனிதர்கள் எல்லாம் வீட்டிலேயே அடைந்து கிடைக்கக் கடவது. நீங்கள் எல்லாம் சுதந்திரமாய் உங்கள் இஷ்டம் போல இப்பூமியில் மகிழ்ந்திருங்கள்! ” என்று வாழ்த்தினார்.
மாசற்ற காற்றில் பூத்துக்குலுங்கிய பூக்களைப் பிள்ளையாரின் மேல்உதிர்த்து முச்சந்தி மரமும் தன் மகிழ்ச்சியை அறிவித்தது …
—
“நோய்த்தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வராததால் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது!” என்று தொலைக்காட்சியில் ஒன்பது மணிக்கு ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்..
– அருணா சுப்ரமணியன்
- கைகொடுக்கும் கை
- புலி வந்திருச்சி !
- பிள்ளை யார்?
- மாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் மரணம்
- பெற்றோர்கள் செய்ய வேண்டியது
- உன்னாலான உலகம்
- புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு
- கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்
- அறியாமை அறியப்படும் வரை….
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- நான் தனிமையில் இருக்கிறேன்
- எழுத்தாளனும் காய்கறியும்
- எனக்கு எதிர்கவிதை முகம்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்
- அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்
- தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?
- அப்பால்…..
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- நாடு கேட்கிறது
- ஜீவ அம்சம்
- மொழிவது சுகம் ஏப்ரம் 19…2020
- பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு