கொரோனா சொல்லித் தந்த தமிழ்

author
1 minute, 11 seconds Read
This entry is part 8 of 13 in the series 3 மே 2020

கோ. மன்றவாணன்

      கொரோனா நோய்நுண்ணியின் கோரத் தாண்டவத்தில் மிதிபட்டு நசுங்குகிறது இந்த உலகப் பந்து. இந்த நோய்பரவும் காலக் கட்டத்தில் Quarantine, Isolation போன்ற சொற்கள் ஊடகங்களில் அடிக்கடி ஒலிக்கின்றன. இந்தப் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொற்கள் என்ன என என்னிடம் கேட்டார் தோழி ஒருவர்.

      தமிழ் ஊடகங்களில் அச்சொற்களுக்குத் தனிமைப்படுத்தல் என்று தமிழ்படுத்தி உள்ளனர். இது போதுமான பொருளைத் தருகிறது. என்றாலும் தனிமைப்படுத்தல் என்ற சொல் வேறு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுத் தனிமை என்பதில் தனிமை பொருந்தாது. சுற்றிலும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். தொற்றுநோய் பரவும் காலத்தில் குறிக்கப்படும் கலைச்சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களைக் கண்டறியலாம். தமிழின் சொல்வங்கிக்கு உதவலாம்.

      Quarantine என்ற சொல் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாகிவிட்டது. இச்சொல் பிரஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்தது. பிரஞ்சு எழுத்தொலிப்போடும் இலத்தீன் வேரோடும் இத்தாலிய பொருளோடும்  இச்சொல் ஆங்கிலத்தில் ஆளப்படுகிறது. 1600 வாக்கில் பிளேக் நோய் பரவலின் போது, மனிதர்களையும் சரக்குகளையும் ஏற்றிவந்த கப்பல்களை 40 நாட்களுக்கு ஒதுக்கி வைப்பதற்கு இச்சொல் பயன்பட்டது. இச்சொல்லின் தொடக்கக் காலப் பொருளே நாற்பது நாள்கள் என்பதே ஆகும்.

      Isolation என்ற சொல்லின் இலத்தீன் வேர் Insula ஆகும். அதிலிருந்து Island உருவானது. அதன்பொருள் தீவு ஆகும். அந்த Island என்ற சொல்லில் இருந்தே Isolation என்ற சொல் உருவானது.

இந்த இரு சொற்களுக்கும் பொதுவான பொருள் தனிமைப்படுத்தல்தான். கால மாற்றங்களில் பலவகைச் சூழல்களுக்குப் பொருந்துமாறும் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வப்போது சில பொருள்மாற்றங்களையும் அடைந்தன. இன்றைய கொரோனா காலத்துக்கு ஏற்பவே இச்சொற்களுக்குத் தமிழ்ச்சொற்கள்  கண்டறிய வேண்டும்.

      ஆங்கிலத்திலும் Quarantine, Isolation ஆகிய இருசொற்களையும் ஒன்றுபோல் பயன்படுத்துவது உள்ளது. ஆனால் இந்த இருசொற்களுக்கும் இடையே சின்ன வேறுபாடு இருக்கிறது என்பதைச் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

      Quarantine என்பது அறிகுறி ஏதும் இல்லை என்றாலும்… நோய்த்தொற்று இருக்கலாம் என ஐயத்திற்கு உரியோரின் வெளிநடமாட்டத்தைத் தடுத்துத் தனிஇடத்தில் வைத்துக் கண்காணிப்பதைக் குறிக்கும். Quarantine என்பதை ஒதுக்கரண், ஒதுக்ககம், ஒதுக்கம்,  தனித்தொதுக்கம் ஆகிய சொற்களால் குறிக்கலாம். Self Quarantine என்பதைத் தன்னொதுக்கம் எனலாம். தனிமை, தனிமைப்படுத்தல் என்ற சொற்களைவிட, ஒதுக்கம், ஒதுக்கிவைப்பு போன்ற சொற்கள் பொருள்செறிவு மிக்கவை.

      எடுத்துக் காட்டுகள் :

      பிற மாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் தனித்தொதுக்கம் செய்யப்பட்டனர்.

      இன்று கப்பலில் வந்தவர்களை ஒதுக்ககத்தில் வைத்துக்       காண்காணிக்கின்றனர். ஒதுக்கரணில் 1252 பேர்  உள்ளனர்.

      அண்மையில் வெளிநாட்டில் பயணம் செய்து திரும்பிய புகழ்பெற்ற நடிகர் தன்னைத் தன்னொதுக்கம் செய்துகொண்டார்.

      Isolation என்பது நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் தனிமைப்படுத்தி, அவர்களால் பிறருக்கு நோய்பரவாமல் தடுப்பது ஆகும். இந்தச் செயலுக்குத் தொற்றொதுக்கம் என்று சொல்லலாம். தொற்றரண் என்றும் சொல்லலாம்.

      எடுத்துக் காட்டுகள் :

      கொரோனா அறிகுறிகளுடன் வந்த ஐந்து பேர் தொற்றொதுக்கம்       செய்யப்பட்டனர்.  

      நோய் அறிகுறிகளுடன் வந்த வெளிநாட்டினரைத் தொற்றரணில்       வைத்துக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

      இன்று தொற்றொதுக்கப் பிரிவில் நான்குபேர் அனுமதிக்கப்பட்டனர்.

கலைச்சொல் வடிவில் பார்க்கும்போது Quarantine என்பதற்கு ஒதுக்கரண் என்றும்- Isolation என்பதற்குத் தொற்றரண் என்றும் குறிப்பிடுவதில் சொல்நேர்த்தி உள்ளது. ஆனால் புழக்கத்துக்கு வருமா?

2

      Respirator என்பது முகக்கவசம் போன்ற ஒன்றுதான். நாம் மூச்சு இழுக்கும் போது நோய்நுண்ணிகளை வடிகட்டித் தூய காற்றை உள்ளனுப்பும் ஒரு காப்புப் பொருளாகும். எனவே ரெசிபிரேட்டரை மூச்சுக்காப்பு என்றோ மூச்சு வடிகட்டி என்றோ சொல்லலாம்.

      Ventilator என்பது நுரையீரலுக்குள் உயிர்க்காற்றை உள்செலுத்தி, கரிக்காற்றை ஒருகுழல் வழியாக வெளியேற்ற உதவும் கருவி ஆகும். எனவே வெண்டிலேட்டரை மூச்சியக்கி என்று உரைக்கலாம்.

3

     Outbreak என்ற சொல், ஒரு தொற்று நோய் திடீரென வெடித்துப் பரவுதைக் குறிப்பதாகும். இதை தொற்று வெடிப்பு என்றோ தொற்றெழுச்சி என்றோ சொல்லலாம்.

     Epidemic / Epidemic Disease என்பது… ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் வேகமாகப் பரவும் தொற்று நோயைக் குறிப்பதாகும். அகராதியில் உள்ள விளக்கங்களை உள்வாங்கி இச்சொல்லை அப்படியே தமிழ்ப்படுத்தினால் வெகுபரவல் நோய் என்றாகும். கலைச்சொல் முறையில் தமிழாக்கினால் Epidemic என்பதைத் தொற்றலை எனலாம். Epidemic Disease என்பதைத்  தொற்றலை நோய் எனலாம். மக்கள் வழக்கில் கொள்ளைநோய் என்ற பொருத்தமான சொல் உள்ளது.

     Pandemic / Pandemic Disease என்பது… திடீரெனத் தொற்று வெடித்து, நாடு முழுவதுமோ உலகம் முழுவதுமோ மிகுவேகமாகப் பரவுவதைக் குறிக்கும். அகராதியில் உள்ள விளக்கங்களை உள்வாங்கி இச்சொல்லை அப்படியே தமிழ்ப்படுத்தினால் மிகுபரவல் நோய் என்றாகும். கலைச்சொல் முறையில் தமிழாக்கினால் Pandemic என்பதைத் தொற்றூழி எனலாம். Pandemic Disease என்பதைத் தொற்றூழி நோய் எனலாம். மக்கள் பேசுமுறையில் பெருங்கொள்ளை நோய் என்று சொல்லலாம். ஆங்கிலச் சொற்களில் இருக்கும் ஓசை நயம்போன்றே இந்தத் தமிழ்ச்சொற்கள் உருவாக்கப்பட்டன.

      இத்தனைச் சொற்களில் எதனை முடிவாகக் கொள்வது என்று நீங்கள் கேட்கக் கூடும். கடந்த நூற்றாண்டுகளில் Epidemic Disease என்பதை கொள்ளைநோய் என்று சொல்லி உள்ளனர். இச்சொல் எளிதாகவும் உள்ளது. ஏற்கனவே பயன்பாட்டிலும் இருக்கிறது. எனவே Epidemic Disease என்பதைக் கொள்ளை நோய் என்றே குறிக்கலாம். அதன் அடியொற்றி Pandemic Disease என்பதைப் பெருங்கொள்ளை நோய் என்று கூறலாம். Epidemic Diseases Act என்பதைக் கொள்ளை நோய்கள் சட்டம் என்று அழைக்கலாம். 

4

     Personal Protective Equipments (PPE) கொரோனா தொற்றாளர்களுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்கள, செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் யாவரும் PPE அணிய வேண்டும். இந்த பிபிஇ என்ற தொகுப்பில் தலையுறை, கண்ணாடி, முகக்காப்பு, மூச்சுக்காப்பு, காலுறை, உடலுறை ஆகியவை அடங்கி இருக்கும். இவற்றை மொத்தமாக இணைத்து ஆங்கிலத்தில் PPE Kit என்கிறார்கள். நாம் இதனை உடல் காப்பு என்றோ மெய்மறை என்றோ சொல்லலாம். இங்கே குறிப்பிடும் மெய்மறை என்ற சொல் பதிற்றுப்பத்து என்ற பழங்காலத் தமிழிலக்கியத்தில் இடம்பெற்ற சொல்தான். மெய்மறை என்பதற்குத் தமிழ்ப்பேரகராதியில் மெய்புகும் கருவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக பிபிஇ கிட் என்பதை உடல்காப்பு, உடல்கவசம், மெய்மறை ஆகிய சொற்களால் குறிப்பிடலாம்.

5

      கொரோனா பரவலின் மூன்றாம் கட்டத்தை Community Spread என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். அதற்குத் தற்போது புழக்கத்தில் உள்ள சமூகப் பரவல் என்ற சொல்லே சரியானதுதான்

      ஒருவருக்குக் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் அவர் எங்கு எங்கு சென்றார்…. யார்யாரை எல்லாம் தொடர்புகொண்டார் என்பதை அறிந்து அவர்கள் அனைவரையும் தனித்தொதுக்கம் செய்வதன் மூலம் நோய்பரவல் சங்கிலியைத் துண்டிக்கிறார்கள். அவ்வாறான தொடர்புகளைக் கண்டறிவதற்கு Contact tracing என்கிறார்கள். அதனைத் தமிழில் தொடர்புத்தடம் அறிதல் எனச் சொல்லலாம்.

      கொரோனா நோய்க்கு மருந்தில்லை என்பதால் அது வராமல் தடுத்துக்கொள்ள Social Distance கடைப்பிடிக்க வேண்டும் என்பது கட்டாயம். இதனைச் சமூக இடைவெளி என்று அழைக்கிறோம். சிலர் சமூக விலகல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். யாரும் சமூகத்திலிருந்து விலகிவிட முடியாது என்பதால் சமூக விலகல் என்ற சொல் சரியன்று. சிலர் மனித இடைவெளி என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார்கள். சமூகத் தொடர்பாடல்கள் பல உள்ளன. அவற்றுள் சிலவற்றைத் தவிர்ப்பதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் இச்சொல் பயன்படுகிறது. மனிதன் சமூகத் தொடர்போடுதான் வாழ்ந்தாக வேண்டும். அந்த வகையில் சமூக இடைவெளி என்ற சொல்லே பொருத்தமானது.  சமூகம் என்பது தமிழில்லை எனும் சிலர், குமுகம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் வேண்டுமானால் குமுக இடைவெளி, குமுகப் பரவல் எனப் பயன்படுத்தட்டுமே. அதுவும் தமிழ்நலம் காக்கும் செயல்தானே.

Quarantine : ஒதுக்கரண் / தனித்தொதுக்கம் / ஒதுக்கம் / ஒதுக்ககம்

Self Quarantine : தன்னொதுக்கம்

Home Quarantine : வீட்டு ஒதுக்கம்

Isolation : தொற்றரண்  / தொற்றொதுக்கம்

Respirator : மூச்சுக் காப்பு / மூச்சு வடிகட்டி

Ventilator : மூச்சியக்கி

Outbreak : தொற்றெழுச்சி / தொற்று வெடிப்பு

Epidemic : வெகுபரவல் நோய் / தொற்றலை / கொள்ளைநோய்ப் பரவல்

Pandemic : மிகுபரவல் நோய் / தொற்றூழி / பெருங்கொள்ளைநோய்ப் பரவல்

Epidemic Disease : கொள்ளை நோய் / தொற்றலை நோய் / வெகுபரவல் நோய்

Pandemic Disease : பெருங்கொள்ளை நோய் / தொற்றூழி நோய் / மிகுபரவல் நோய்

Epidemic Diseases Act : கொள்ளை நோய்கள் சட்டம்

Personal Protective Equipments (PPE) : உடல்காப்பு / உடல்கவசம்

Face Mask : / முகக்காப்பு / முகக்கவசம்   

Community Spread : சமூகப் பரவல் / குமுகப் பரவல்

Contact Tracing : தொடர்புத்தடம் அறிதல்

Social Distance : சமூக இடைவெளி / குமுக இடைவெளி

      “ஒரு குண்டூசியைக் கூடக் கண்டுபிடிக்க மாட்டீங்க… எவனோ கண்டுபிடிச்சு வைச்ச பேர மட்டும் தமிழ்ல மாத்தீங்குவீங்க…” என்று என்னை இடித்துரைத்துவிட்டுச் சமையல் அறைக்குச் சென்றார் என் மனைவி. கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் சில காய்கறிகள் இல்லை. சில மளிகைப்பொருட்கள் இல்லை. இருந்த பொருட்களைக் கொண்டு புதுமையாக அவர் செய்த ஒரு பலகாரத்தை எடுத்துவந்து கொடுத்தார். அதைச் சாப்பிட முயன்ற போது என்னைத் தடுத்து… “இந்தப் பலகாரத்துக்குத் தமிழ்ப்பேர சொல்லிட்டு அப்புறம் சாப்பிடுங்க” என்று கட்டளை இட்டார். இரண்டு நாளாக அந்தப் பலகாரம் அப்படியே இருந்து ஊசிப்போய்விட்டது.

Series Navigationஎனக்குக் கேட்கல… உங்களுக்கு கேக்குதாஇனியாவது சிந்திப்போமா?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *