கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….

This entry is part 11 of 11 in the series 10 மே 2020

_லதா ராமகிருஷ்ணன்

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றுக்குச் 

சென்றிருந்தேன். 

வந்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான பிரபல பேச்சாளர் ஒருவர் தனது உரையின் நடுவே, அம்மாவை விட மனைவியே மேலானவள். என்னென்றால், அம்மாவால் தர முடியாததை மனைவியால் தர முடியும்’, என்று

 தனது கணீர் குரலில் கூறினார். 

அரங்கமே அதிர்ந்துபோய் அருவருப்போடு முகஞ்சுளித்ததை அவர் பொருட்படுத்திய தாகவே தெரியவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றுக்குச் சென்றிருந்தேன். வந்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான பிரபல பேச்சாளர் ஒருவர் தனது உரையின் நடுவே, ‘அம்மாவை விட மனைவியே மேலானவள். என்னென்றால், அம்மாவால் தர முடியாததை மனைவியால் தர முடியும்’, என்று தனது கணீர் குரலில் கூறினார். அரங்கமே அதிர்ந்துபோய் அருவருப்போடு முகஞ்சுளித்ததை அவர் பொருட்படுத்திய தாகவே தெரியவில்லை.

எத்தனை தேவையற்ற, அருவருப்பான ஒப்புமை அவருடையது. அத்தனை கொச்சை யானதாக ஒலிக்கவில்லையென்றாலும் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நடிகை ஜோதிகாவின் கோயிலைப் பற்றிய பேச்சு இடம்பெறும் காணொளியைக் கண்டபோது, இது எதற்கு இந்தத் தேவையற்ற பேச்சு என்ற எண்ணமே ஏற்பட்டது.

தன்சையிலுள்ள பிரகதீஸ்வரர் கோயிலைத் தான் பார்த்ததாகவும், அது உதய்பூர் அரண்மனை போல் இருந்ததாகவும், மறுநாள் அதே ஊரில் அவல நிலையில் ஒரு மருத்துவமனையைப் பார்த்ததாகவும் அவையோரிடம் தெரிவித்து, கோயில் உண்டியலில் பணம் போடுபவர்கள் பள்ளி, மருத்துவமனை கட்டப்படுவதற்கும், அவற்றின் பராமரிப்புக்கும் பணம் தரலாம் என்பதாகவும் கூறியிருக்கிறார். இந்தக் கருத்துக்கு எதிர்ப்பெழுந்திருக்கிறது. அதேயளவு ஆதரவும் எழுந்திருக்கிறது.

நடிகை ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யா தன் மனைவி தவறாக எதுவும் சொல்லவில்லை என்றும், தவறு என்று சொல்பவர்கள் அதே கருத்தைச் சொல்லியிருக்கும் சுவாமி விவேகானந்தர், பாரதியார், திருமூலர் போன்றோரைப் படித்திருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். அவர்கள் வாழ்ந்த காலம் வேறு. வாழ்ந்த வாழ்க்கை வேறு. அவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்கள். எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.

நடிகை ஜோதிகா பிரகதீஸ்வரர் கோயிலை உதய்பூர் அரண்மனைபோல் இருப்பதாகவும், அந்த ஊரில் அவலமான நிலையில் உள்ள மருத்துவமனையைப் பார்த்த பின்பு அந்தக் கோயிலுக்குப் போக மனம் ஒப்பவில்லை என்றும் கருத்துரைத்த இடம் ஒர் ஆடம்பரமான திரையுலக விருதுவிழா. அத்தகைய ஆடம்பர விழாக்களை நடத்த ஆகும் செலவு நிறைய நிறைய. அத்தகைய விழாக்களுக்குச் செலவிடுபவர்கள் எல்லா ஊர்களிலும் மருத்துவ மனை, பள்ளிக்கூடம் கட்டப்படுவதற்கும், பராமரிக்கவும்கூட செலவழிக்கவேண்டும் என்று கூறலாமே? அப்படிக் கூறவேண்டிய தேவையை அவர் ஏன் உணரவில்லை?

கோயில் உண்டியலில் பணம் போடுகிறவர்கள் வேறு நல்ல காரியங்களுக்குப் பணம் தருவதில்லை என்று திட்டவட்டமாகக் கூற முடியுமா? கோயில் உண்டியலில் ஒரு ரூபாய் போடுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு கோடி ரூபாய் போடுகிறவர்களும் இருக்கிறார்கள். கோயில் உண்டியலில் போடப்படும் பணம் கோயிலுக்கு ‘பெயிண்ட்’ அடிப்பது போன்ற, ஜோதிகாவின் கருத்துப்படி அநாவசிய வேலைக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியுமா?

எத்தனை பேருக்கு கோயில் அன்னதானம் பசியாற்றுகிறது தெரியுமா? தினம் தினமா கோயில்கள் கட்டப்படுகின்றன. இந்தியாவில் உள்ள கோயில்கள் கட்டப்பட்டு, பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு எத்தனையெத்தனை வருடங்களாகிவிட்டன! அந்நியப் படையெடுப்புகளில் அழிக்கப்பட்ட கோயில்கள் போக இன்னும் எத்தனை கோயில்கள் சின்னச்சின்ன ஊர்களில் சிதிலமடைந்திருக்கின்றன!

பள்ளிக்கூடம், மருத்துவமனை சரியான பராமரிப்பின்றி இருந்தால் அது குறித்து உரிய அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பதுதான் சரியான அணுகுமுறை. ஓர் ஊரில் பள்ளிக்கூடம் நல்ல நிலையில் இல்லை, எனவே அங்கேயுள்ள மருத்துவமனையைப் பராமரிப்பது அநாவசியம் என்று யாரேனும் சொல்வார்களா? இரண்டும் இருவேறு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்பவை.

ஆனால், கோயில் அநாவசியம் என்று எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். அதாவது, இருக்கும் கோயிலைப் பராமரிப்பதுகூட அநாவசியம் என்னும் உட்பொருளில். ஆனால், கோயில் என்பது ஒரு மண்ணின், மதத்தின் நம்பிக்கை, விழுமியம், கலாச்சாரம் சார்ந்தது.

நேற்று பூ வாங்கச் சென்றபோது பூவிற்கும் பெண்மணி முழம் அளந்து வெட்டித் தருவதற்காக கத்தியைத் தேடினார். எத்தனை தேடியும் கிடைக்கவில்லை. பரவாயில்லை, பல்லால் கடித்துத் தாருங்கள் என்று நான் சொன்னதற்கு ‘அது தப்புமா, கடவுளுக்கு சுத்தபத்தமா தரணும்” என்று தன் தேடலைத் தொடர்ந்தார்.

இறை நம்பிக்கை என்பது உளவியல் சார்ந்தது. உடல் நலனைப் பேணுதல் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் உள நலனைப் பேணலும். அவ்வகையில் பள்ளிக்கூடம், மருத்துவமனை இரண்டுடனும் தொடர்புடையது கோயில் என்பதோடு அந்த இரண்டைத் தாண்டி மனிதர்களுக்கு உள்ள சில தேவைகளையும் அது பூர்த்தி செய்கிறது என்று சொல்லலாம்.

என் தந்தை இறந்தபோது என் அம்மாவுக்கு 37 வயது. அப்பாவின் மருத்துவச் செலவுக்கு வாங்கிய கடன் மட்டுமே எங்களுக்கிருந்த சொத்து. அத்தனை பாடுபட்டு என்னையும் என் தம்பியையும் படிக்கவைத்தார். தந்தை இறந்த பின் 35 வருடங்கள் கடவுளிடம் கோபம் கொண்டு கோவில் பக்கமே செல்லாமலிருந்தேன். அம்மா தினமும் கோயிலுக்குச் செல்வது வழக்கம். ஒரு நாள், ‘கடவுள்தான் எங்குமிருக் கிறாரே –பின் ஏன் தினமும் கோவிலுக்குப் போகிறாய்?’ என்று இளமைக்கே உரிய அலட்சியமும் அறிவுசாலி பாவனையுமாய் (ஆனால், அந்நாளில் கூட வாயே கிழிந்துதொங்கும் அளவுக்கு எகத்தாளமாக கோணவாய்ச் சிரிப்பு சிரித்ததில்லை என்பது ஒரு மனிதப்பிறவியாக நான் ஆறுதல் கொள்ளும் விஷயம்) என் அம்மாவிடம் கேட்டபோது, ‘உனக்கு இலக்கியம் எப்படியோ அப்படி கோயில் எனக்கு’ என்று சாந்தமாக எனில் உறுதியாக பதிலளித்து ‘மேலே பேசுவதற்கு எதுவுமில்லை’ என்பதாய் தன் வேலையில் மூழ்கினார்.

அதற்குப் பிறகு பல நாட்கள் கழித்து, “என்னைப்போல் இளவயதில் கணவனை யிழந்தவர்கள் கடற்கரைக்குச் சென்று காலார நடக்க முடியாது. கோயிலில் காலார பிராகாரத்தைச் சுற்றிவரலாம். என்னைப்போன்ற பெண்களைப் பார்க்கும்போது, அவர்க ளிடம் பேசும்போது எனக்கு ஒரு தைரியம் பிறக்கிறது. நான் கடவுளிடம் எனக்கு அதைத் தா, இதைத் தா என்று கேட்பதில்லை. யாரிடமும் போய் நிற்காமல் என் சொந்தக்காலில் நின்று என்னையும் என் பிள்ளைகளையும் காப்பாற்ற சக்தி கொடு என்று மட்டுமே கேட்பேன். அப்படி இதுவரை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவிக் கவே நான் கோயிலுக்குச் செல்கிறேன் என்றார். 

என் அம்மாவின் பேச்சு என்னை நிறைய யோசிக்கவைத்தது. யோசித்துப்பார்த்தால் எந்தவொரு கலைப்படைப்பும் சில மனங்களில் உதித்த கற்பனையே. ஆனாலும், அவற்றை எப்படி உருகியுருகிப் பார்க்கிறோம், படிக்கிறோம். அவற்றின் மூலம் நம் மனம் எவ்வாறெல்லாம் மேம்படுகிறது, துலக்கமடைகிறது! அப்படித்தான் கோயில் என்பதும். சிலருக்கு அதுவொரு சுற்றுலாத்தலம்; சிலருக்கு அது பெரும் ஆசுவாசம். நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் மயிரிழைதான் வித்தியாசம். இரண்டும் highly relative terms; often overlapping.

மருத்துவர்கள், விஞ்ஞானிகள் முழுக்க முழுக்க கடவுள் நம்பிக்கை அற்றவர்களா என்ன? அப்படியில்லையே? அவர்களில் கோயில் உண்டியலில் போடுபவர்களும் இருப்பார்கள்; ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து தருபவர்களும், வைத்தியம் பார்ப்பவர்களும் உண்டு.

பள்ளிக்கூடம், மருத்துவமனை இரண்டும் தனித்தனி அளவில் அத்தியாவசியமானதே. அதேபோல்தான் கோவிலும்.

‘தனியொருவனுக்குணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றாரே பாரதி. அப்படி எல்லோரும் தங்கள் வாழ்விலும் இருந்தால் அவர்கள் வணக்கத்திற்குரிய வர்கள். ஆனால், ஏழைகளுக்காக ஆவேசமாகக் குரலெழுப்புபவர்கள் அவர்களுக்காக தங்கள் வசதியான வாழ்க்கையை வாழாமலிருக்கிறார்களா என்பதும் கேள்வி.

இன்று சமூகப்பணியாற்ற முன்வருபவர்களில் கணிசமான பகுதியினருக்கு அதற்குக் கிடைக்கும் வரி விலக்கும் ஓர் இயக்குவிசையாக இருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது.

ஒரு திரைப்படத்தில் ஊதியமாக லட்சங்களோ கோடிகளோ வாங்கிக்கொண்டு தியாகி வேடத்தில் நடிப்பவர்களெல்லாம் உண்மையான தியாகிகளல்ல. அப்படி அவர்கள் நம்பிக்கொள்வதும், அப்படி அவர்களை நம்பிக்கொள்வதும் அபத்தம்.

தனது முக்காலே மூணுவாசி படங்களில் மதுபுட்டியோடு காட்சியளிக்கும் நடிகர் ரஜினிகாந்த், அந்தக் காட்சிகளின் மூலம் எத்தனையோ இளைஞர்களுக்கு குடி பற்றிய ஒரு பிரமையை உருவாக்கியவர்  இப்போது டாஸ்மாக்கைத் தொடங்கினால் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கமுடியாது என்று ஆட்சியாளர்களுக்கு அறைகூவல் விடுகிறார்.

நடிகை ஜோதிகாவின் விஷயத்தில் அவரை எதிர்த்திருப்பவர்கள் பலர் கொச்சையாக தனிமனிதத் தாக்குதலில் இறங்கியிருப்பது தேவையற்றது; கண்டிக்கத்தக்கது. மேலும், ஒரு கருத்தை எதிர்ப்பவர்கள் தங்கள் பக்க நியாயத்தைப் பேசுவதில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்காமல் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தும்போதும், தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடும்போதும் எதிர்க்கப்படும் கருத்தைக் கூறியவர் ‘பாதிக்கப்பட்டவ ராகி’விடுகிறார் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.

அதே சமயம், நடிகை ஜோதிகாவின் கருத்தை எதிர்ப்பவர்களை மிகக் கொச்சையாகப் பழிப்பதில் அவருடைய ஆதரவாளர்களும், இந்து எதிர்ப்பாளர்களும், கடவுள் எதிர்ப்பாளர்களும் எந்தவிதத்திலும் சளைத்தவர்களில்லை. முன்னாள் நீதியரசர் உட்பட எதிர்க்கருத்தாளர்களை ‘சங்கிகள்’ என்று பழிப்பதில் முன்னணியில் நிற்கிறார்கள். இதுபோல் வேறு எந்தத் தரப்பினரையாவது அவர்கள் இத்தகைய ‘முத்திரை வாசகங்களால்’ மதிப்பழிக்க முற்படுவார்களா என்பது சந்தேகமே.

பொதுவெளியில் பிரபலங்களாக இருப்பவர்கள் ஒரு கருத்துரைக்கும்போது அதன் பின்விளைவுகளை யோசித்துப் பேசுவது நல்லது.

அல்லது _

‘என் கருத்து யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்’ என்று கூறும் பெருந்தன்மையாவது சம்பந்தப்பட்டவர்களுக்கு இருத்தல் நலம்.

Youtube link for Jyothika’s speech

Youtube link for Jyothika’s speech

 •  
Series Navigationமொழிவது சுகம் மே 10 – 2020 -சாமத்தில் முனகும் கதவு
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

2 Comments

 1. Avatar
  BSV says:

  //பள்ளிக்கூடம், மருத்துவமனை இரண்டும் தனித்தனி அளவில் அத்தியாவசியமானதே. அதேபோல்தான் கோவிலும்…‘தனியொருவனுக்குணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றாரே பாரதி. அப்படி எல்லோரும் தங்கள் வாழ்விலும் இருந்தால் அவர்கள் வணக்கத்திற்குரிய வர்கள். ஆனால், ஏழைகளுக்காக ஆவேசமாகக் குரலெழுப்புபவர்கள் அவர்களுக்காக தங்கள் வசதியான வாழ்க்கையை வாழாமலிருக்கிறார்களா என்பதும் கேள்வி.//

  பள்ளிக்கூடம், மருத்துவமனை அத்தியாவசிமானவை. கோயிலை அவற்றோடு இணைத்துப் பார்க்கமுடியாது. கோயில் அத்தியாவசிமானது கிடையாது. கடவுள் அத்தியாவசியாமனவர் என்றால், அவரை எங்கும் காணலாம். கோயிலில்தான் கடவுள்; ஆலயம் தொழுவது சாலவும் நன்று; கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டா என்பவை கோயில் சார்ந்த வெஸ்டட் இன்ட்ரஸ்டுகளால் மக்களை மூளைச்செலவு செய்ய உருவாக்கப்பட்டவை. கோயில் தேவை. எப்படி சினிமா தேவையோ அப்படி. அடிப்படை தேவை இல்லை.

  அதே பாரதி இப்படியும் பாடியிருக்கிறார். “‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” கோயிலை விட புண்ணிய கோடி எது என்று சொன்னவரை ஏன் மறைக்கிறீர்கள்?

  பசித்தவனுக்கு இறைவன் ரொட்டித்துண்டில் தோன்றுவான் என்றார் காந்தி. ஏழையில் சிரிப்பினில் இறைவனைக் கண்டேன் என்றார் ஒருவர். இவர்களெல்லாரும் கோயில் இல்லாவிட்டால் கடவுள் இல்லையெனவில்லை. கோயிலே தேவையில்லை. இப்படி சொல்ல இறை நம்பிக்கை கண்டிப்பாக வேண்டுமென்பது அனாவசியம். மனிதனேயம் உள்ளவர்கள் அனைவரும் சொல்லலாம். கடவுளை மற; மனிதனை நினை என்பதுதான் இப்போது தேவை. மனிதனேயம்தான் கடவுள். இதையறியாதவர்கள் ஆத்திக வேசம் போடுகிறார்கள்.

  கடவுள் காத்திருப்பார். க்ரோனா காத்திருக்காது. ‘எனவே மருத்துவமனையை நினையுங்கள்’ என்பது ஜோதிக்காவின் கருத்தின் சாராம்சம்.

  கோயில் அத்தியாவசியம் என்றால் ஏன் திருப்பதி கோயிலையே மூடிவைத்துள்ளார்கள்?

  அவர் கொடுப்பாரா? இவர் கொடுப்பாரா? என்பது வேறு கதை. அவர் என்ன பேசினார்? அது பற்றிய விவாதத்தை திசை திருப்பாதீர்கள்.

 2. Avatar
  BSV says:

  //பொதுவெளியில் பிரபலங்களாக இருப்பவர்கள் ஒரு கருத்துரைக்கும்போது அதன் பின்விளைவுகளை யோசித்துப் பேசுவது நல்லது. அல்லது _ ‘என் கருத்து யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்’ என்று கூறும் பெருந்தன்மையாவது சம்பந்தப்பட்டவர்களுக்கு இருத்தல் நலம்.//

  குதிரையை வண்டியின் முந்தான் கட்டவேண்டும். ஒருவர் பேசுகிறார் என்றால், பேசிய உடனேயே, அல்லது பேசும் முன்பேயே, தன் பேச்சு பிறர் மனங்களைப் புண்படுத்தும் என்று நினைத்துவிடுவாரா? நினைத்தால் ஏன் பேசுவார்? ஜோதிக்கா தன் பேச்சு ஒரு பொதுவான ஆதங்கம் என்ற நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார். எனவே அவருக்கு ஆதரவு பெருவாரியாக இருக்கிற்து. இந்துத்வாவினர் மட்டுமே எதிர்க்கிறார்கள். பொது இந்துக்களிடமிருந்து கூட எதிர்ப்பு வரவில்லை. இதில் எங்கே அவர் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டுமென்று கேள்வி எழும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *