யாம் பெறவே

author
0 minutes, 27 seconds Read
This entry is part 7 of 11 in the series 12 ஜூலை 2020


கௌசல்யா ரங்கநாதன்
     

என் கணவர் பேச்சை கேட்டிருந்தால், இத்தகைய அவமானத்தை, தலைகுனிவை, நான் சம்பாதித்திருக்க வேண்டாம்தான். விதி யாரை விட்டது.?
நான், என் கணவர், ஒரே மகன், நல்ல வேலையில் இருப்பவன், மருமகள் (அவளும் கை நிறைய சம்பாதிப்பவள்தான்) என்று அமைதியாய்
வாழ்க்கையை நடத்திகொண்டிருந்த வேளையில் தான் ஒரு நாள் என் அண்ணன் குமார் என்னை தேடி வந்தார் கிராமத்திலிருந்து..வறுமையில்
வாடும் குடும்பம் அவருடையது..ஒரே மகன் +2 முடித்திருந்த வேளையில், அவனை மேலே படிக்க வைக்க வசதி இல்லாததால் என்ன செய்வதென்று
விளங்காமல் தவித்துக் கொண்டிருப்பதாகவும், ஏதாவதொரு வேலை அவனுக்கு கிடைத்தால் போதும் என்றும் பேச்சுவாக்கில் அண்ணன் சொன்னார்..

 “வெறும் +2 மட்டுமே படித்திருக்கும் நம்ம ரகுவுக்கு என்ன பொ¢ய வேலை கிடைச்சிடும்?அவன் வாங்கியிருக்கும் மதிப்பெண்கள் என்ன?” என்று நான் கேட்ட போது பிரமிப்புக்குள்ளானேன், அவன் மிக, அதிக மதிப்பெண்களை பெற்றிருந்ததை அண்ணன் என்னிடம்  எடுத்துக் காட்டியபோது..

“ஏண்ணே இவனை மேலே படிக்க வைக்காம வேலைக்கு அனுப்பணும்னு…” என்று சொல்ல வந்த நான், அண்ணன் முகம் பார்த்து “இவனை மேலே
படிக்க வைக்க வேண்டியது எங்க பொறுப்பு” என்ற போதும், அண்ணன் என்னவரையும்,எங்கள்  மகனையும், மருமகளையும் பார்க்க, அவர்கள் அனைவருமே ஒருசேர தலையாட்டி ” எங்களுக்கு சம்மதம்” என்று சொன்ன போதும், அண்ணன் “வேணாம்மா..ஒரு உறவுன்றது அப்பப்ப வந்து பார்த்து
நலம், அதாவது நீ சௌக்கியமா?  வீட்டில் எல்லாரும் சௌக்கியமானு கேட்டுட்டு 2 நாட்கள் இருந்துட்டு போறதுதான் எல்லாருக்கும்  இப்படி நான்
சொல்றேனேனு நீ தப்பா நினைக்க மாட்டேனு நம்பறேன்” என்றபோதும் வற்புறுத்தி “அண்ணே உங்க கஷ்ட, நஷ்டத்தில் உதவத்தான் நாங்க விரும்பறம்.. சொந்த,பந்தத்துக்குள்ளே, உதவிக்கிறதில என்ன தப்பு?அதுவும் படிப்புக்கு?ஓரளவுக்கு நாங்க வசதியாகவும் இருக்கோம்..ஆனா, எங்க கிட்ட உதவி பெற உங்க தன்மானம் இடம் கொடுக்கலையோனு எங்களுக்கு தோணுது..நல்ல மார்க் வாங்கியிருக்கிற ஒரு பையனை வசதியில்லைனு சொல்லி வீட்டோட  முடக்கி போடறது என்ன நியாயம் அண்ணே? என்றெல்லாம் அவருக்கு விருப்பம் இல்லாதபோதும், வற்புறுத்தி, அண்ணன் மகனை அழைத்து வந்து “இங்கேயிருந்து மேலே படிக்க உனக்கு விருப்பமா? நீ என்ன கோர்ஸ் படிக்கணும்னு ஆசைப்படறே? தயங்காம சொல்லு..நாங்க முயற்சி செய்யறோம்”  என்றெல்லாம் கேட்டு, ஒரு Engineering collegeல்,அதுவும், அவன் விருப்பப்பட்ட கோர்ஸில் எப்பாடோ பட்டு சேர்த்து விட்டதுடன், எங்கள் வீட்டில்  அவனுக்கென்று ஒரு தனியறையும் படிக்க ஒதுக்கி கொடுத்து, அவ்வப்போது  அன்புடன் அவன் நலம் பற்றி கேட்பதோடு அவன் பாக்கட் செலவுகளுக்கு  பணமும் கொடுத்தோம்..”இது உன் அத்தை வீடு..உன் வீடு போல நினைச்சுக்கப்பா..எது வேணுமானாலும் கூச்சப்படாம எங்ககிட்ட நீ கேட்கலாம்”, என்றெல்லாம் சொல்லி வைத்ததோடு, அவனுடன் எங்கள் குடும்ப உறுப்பினர்களையும் ஒன்றிப் பழக வைத்தேன்..இப்படி சில மாதங்கள் போன பின்புதான் தலைவலி ஆரம்பித்தது எங்களுக்கு.அவன் செய்கைகளில் மாற்றம் காணப்பட்டது..அதீத செல்லம் கொடுத்து விட்டோமோ என்றும் தோன்றியது..

சில நாட்களாக அவன் காலேஜிலிருந்து தாமதாக வரத் துவங்கியிருந்தான்..அதாவது, எப்போதும் மாலை 6/7 க்குள் வீடு திரும்பும் அவன் மெல்ல,மெல்ல, இரவு 8,9க்கு வர துவங்கியபோது, என் கவலை அதிகமாகியது..அவன் வரும் வரை நான் சாப்பிடாமல் இருக்க, (நான் ஒரு ஷுகர் பேஷன்ட்),என் கணவர்  என் மகன், மற்றும் மருமகளும் காத்திருக்கத் துவங்க, (அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும்), எனக்கே நாம் ஏதோ தப்பு செய்து விட்டோமோ  என்று ஒரு குற்ற உணர்வே என்னை ஆட்கொண்டது.. என் மன நிலையை உணர்ந்தாற்போல் என் குடும்பத்தாரும், “நாங்க ஒண்ணும் உன்னை தப்பாவே  நினைச்சுக்க மாட்டோம்மா..அவன் வரதுக்குள்ள நாம் சாப்பிட்டாத்தான் அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை தோணலாம்..காலேஜில் படிக்கிற பையன். ரொம்ப தொலைவு போய் வர வேண்டியிருக்கு..இதில ஸ்பெஷல் கிளாஸ் வேற அடிக்கடி  இருக்கலாம்.combined study பண்ணலாம்..இல்லைனா, மாலை  வேளைகளில் பஸ் கிடைக்காமலும் தாமதமாகலாம்..விட்டு பிடிப்போம்..நாம் ஒண்ணும் அவங்கிட்ட “ஏம்பா லேட்டா வரேனு கேட்க வேணாம், அவனா சொல்றவரை” என்றதால் மௌனமாய் இருந்தேன்..இரவு எந்த நேரத்துக்கு அவன் வந்தாலும் “வாப்பா, முகம், கை,கால்கள் கழுவிகிட்டு..சாப்பிடலாம். உனக்காகத்தான் நாங்க காத்திருக்கோம்” எனும்போதாவது “ஐயயோ,நீங்க ஏன் எனக்காக சாப்பிடாம கண் விழிச்சு காத்துக்கிட்டிருக்கணும்? நானே  எடுத்துப் போட்டுக்கிட்டு சாப்பிட மாட்டேனா!..எனக்கு “ஸ்பெஷல் கிளாஸ் இருந்திச்சு..” என்றெல்லாம் ஏதாவதொரு காரணத்தை சொல்லியிருந்தால் கூட மனத்தை தேற்றிக் கொண்டிருக்கலாம்..அது உண்மையோ, பொய்யோ என்று தோண்டித் துறுவியா பார்க்கப் போகிறோம்.. ஆனால் அவனோ எதுவும் சொல்லாமல் தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொள்வான்..விளக்கு கூட அணைக்காமல்..சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு அவன் படிக்கலாம்..சின்னப் பையன்தானே..மன முதிர்ச்சி இல்லை போலும்..இதைப் போய் பூதாகாரமாக்க வேண்டுமா என்று எங்களை நாங்களே தேற்றிக் கொள்வோம்..ஆனால்,  நாளாக,நாளாக, அவன் தினமும் தாமதமாக வருவதையே, அதாவது இரவு 10/11 என்று தொடங்கி, சில நாட்கள் 1 மணிக்குக்கூட வர ஆரம்பித்தான்..


எங்கோ ஏதோ தவறு நடக்கிறதென என் உள் மனம் சொல்லியது..என் கணவனிடம் சொன்னால் எதுவும் சொல்ல மாட்டார்..மையமாய் ஒரு புன்னகையை மட்டுமே உதிர்த்திடுவார்..பிள்ளை,மருமகளுக்கு என் மீது தேவதா விசுவாசம்,மற்றும் அன்பும் கூட என்பதால், என்னையோ, என்னவரையோ, எதிர்த்து ஒரு வார்த்தை, எப்போதாவது கூட, குடும்ப நலன் கருதி,ஜாடை,மாடையாகவாவது,அதாவது போகிற போக்கிலாவது. ஊஹூம்,  பேசவே மாட்டார்கள்..


நானாக ஏதாவது ஆலோசனை கேட்டால் கூட “, “நீங்க பார்த்து எடுத்த முடிவு..ஏன் வீணா கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்கிறீங்க? விடுங்க..அது
 கரக்டாத்தானிருக்கும்” என்பார்கள்..மனைவிக்கு ஒரு முழம் பூ கூட அவன்  தானாக வாங்கிக் கொடுத்ததில்லை..அவளும் குறையாய் எண்ணியதில்லை. இப்படி போய்க்கொண்டிருந்ததொரு தருணத்தில்தான், ஒருநாள்,ஆற்றாமையால் அவனைப் பார்த்து நான்,அதுவும் அவன் இரவு 12 மணிக்கு வீடு
திரும்பிய அவனிடம் “என்னப்பா தினம் இப்படி லேட்டாகுது?உன்னைப் பார்த்தா ரொம்ப பாவமாய் இருக்கு. உடம்பு கெட்டுப் போயிடாதா?”என்றபோது,

“அவன் “அத்தை நான் இன்னைக்கு நண்பர்கள் அழைப்பை தட்ட முடியாமல் சினிமா போயிருந்தேன்..தப்புத்தான் அத்தை?” என்றவனிடம், “சேச்சே..
அதெல்லாம் எதுவும் இல்லைடா..நீ ஊருக்கு புதுசு..அதான் ஒருவித பயம்” என்றேன்..அதற்கும் அவன் புன்னகைத்தான்..எனக்கே கூட ஏன் அவனை
சந்தேகப்பட்டு இப்படியொரு கேள்வியை கேட்டேன் என்றிருந்தது.. அதன் பிறகு கொஞ்ச நாட்கள் வரை சீக்கிரமாய் வீடு திரும்பியவன்,மறுபடியும் முன்
போலவே, தொடர்ச்சியாய் தினம் இரவு 11/12 என்று வர ஆரம்பிக்கவே, என் அஸ்தியில் ஜுரம் கண்டது.”மாலை வகுப்பு இருந்தது,அதான் தாமதம்”
என்றால்கூட பொறுத்துக் கொள்ளலாம்..காலேஜ் நேரத்துக்கு பிறகு சினிமா,ஹோட்டல்,பீச் என்று, அதுவும் நாங்கள் கொடுக்கும் பாக்கட் மணியில் எப்படி சாத்தியம் என்று விளங்கவில்லை..ஊம்.. சிரமப்படும் ஒரு பையனை நன்றாய் படிக்க வைத்து அந்த குடும்பத்தை தலை நிமிர செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததற்கு இதுதான் கைமாறா..என் கணவர் சொன்னார் “உரலில் தலை கொடுத்தாச்சும்மா..பொறுத்துத்தான் போகணும்,அவன் படிப்பு முடியறவரை மூச்சு விடாதே..இல்லைனா நம்ம குடும்ப மானம் சந்திக்குப் போகும்” என்று.. ஆனால் அவன் தினம் இரவு 11/12 என்றே வர ஆரம்பித்திருந்தான் சற்றும் குற்ற உணர்வே இல்லாமல் ..இது மட்டுமா? 4 பாடங்களில் arrears வேறு வைத்திருந்தான்..அதைப் பற்றி அவன் கவலைப் படுவதாகவும்.. ஊஹூம்..

“என்னங்க..தப்பு பண்ணிட்டேன் போல இருக்கு..நல்லா படிக்கிற பையன்..அதுவும் அண்ணன் பையன்..கஷ்டப்படற குடும்பமாச்சேனு நினைச்சு..
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னவாயினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்னு” சொல்வாங்கள்ள, அதனால்தான் இவன் ஒருத்தனை கைதூக்கி விட்டா அண்ணன் பரம்பரையே நல்லா இருக்குமேனு நினைச்சுத்தான் உங்க பெர்மிஷனைக்கூட கேட்காமல் ….என்னை மன்னிச்சிருங்க..ஏங்க இவன் நடத்தையைப் பத்தி அண்ணன் காதுகளில் போட்டா என்ன”என்று என் கணவரை கேட்டபோது, “வேணாம்மா,இன்னொரு தப்பையும் பண்ணாதே..இதனால் இரண்டு குடும்பங்களுக்குள்ள மனஸ்தாபம்தான் வரும்..உங்க அண்ணன் உங்கிட்ட வந்து நேரடியாய் எதுவும் கேட்காட்டியும் முதுகுக்கு  பின்னால “என் பிள்ளையை மேலே படிக்கவைனு இவகிட்ட நான் வந்து கெஞ்சினேனா? சின்னப்பசங்கனா அதுவும் காலேஜில படிக்கிறவங்க, அப்படி,இப்படித்தான் இருப்பாங்க..இதைப்போய் தப்பா எடுத்துக்கிட்டு குத்தம் சொல்ல வந்துட்டான்னோ,இல்லைனா  பிள்ளைகிட்ட, “டேய் நீ படிச்சது போதும். ஏன் என் மானத்தை வாங்கறே? ஊருக்கே திரும்பப் போயிடலாம் வான்னு அழைச்சுக்கிட்டும் போயிடலாம்..உன் எண்ணம் தூய்மையானதுன்றதை, அவங்க நினைச்சே பார்க்க  மாட்டாங்க..அதனால உங்கண்ணன் பிள்ளை படிப்பை முடிக்கிறவரையாவது நீ வாயையே திறக்காம இருக்கிறதுதான் எல்லாருக்குமே நல்லது.”வேலியில போற எதையோனு” ஒரு பழமொழி உண்டுல்ல. நான் அப்பவே உங்கிட்ட சொல்லணும்னு இருந்தேன்..இந்த பையனை இங்கே காலேஜில சேர்த்துவிட்டு, நம்ம வீட்டிலேயும் தங்க வைக்கணும்னு நீ முடிவு பண்ணினப்ப எங்கிட்ட தனியா, அட  எங்கிட்டகூட  வேணாம், நம்ம பிள்ளையாண்டான்,இல்லை  மருமகள் கிட்டயாவது யோசனை கேட்டிருக்கலாம்..நான் அப்ப இதை அப்ஜெக்ட் பண்ணி இருந்தேன்னு வையி, நான் என்னவோ உங்க அண்ணன் குடும்பத்துக்கு நீ உதவி பண்ண நினைக்கிறதை விரும்பலைனு  நினைச்சிருக்கலாம்.. அதுவும் ஒரு ஏழைப் பையன் படிப்புக்கு” என்ற போது,எங்கள் மருமகள் வாய் பொத்தி எதுவும் பேசாமல் நிற்க,என் மகனும் அதையே சொன்னான் என்னிடம்.. “அம்மா, எதையுமே நீ கண்டுக்காதேம்மா அவன் படிப்பு முடியறவரை.. அதுதான் நல்லது நம்ம எல்லாருக்குமே” என்றான்.. எனக்கே உறுத்தியது தப்பு பண்ணி விட்டோமோ என்று..அட அட் லீஸ்ட் இப்படியே போனாலாவது பரவாயில்லை..யாரும் அவனை கடிந்துகொள்ள இல்லையென நினைத்து மேலும் அவன் வேறு ஏதாவது தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டால், அப்போதும் அண்ணன் “ஏம்மா, உன் பையனா இருந்தா இப்படித்தான் கண்டுக்காம விட்டிருப்பியா? இவன் என்னோட கிராமத்திலேயே என் நேர்பார்வையில் இருந்திருந்தாலாவது இப்படி கெட்டு சீரழிஞ்சு போயிருக்க மாட்டான்” எனலாம்.. மனம் கிடந்து தவித்தது..ஆனால் அவனோ,இதை கொஞ்சமும் சட்டை பண்ணவில்லை.கடவுளே எந்தவொரு அசம்பாவிதமும் நடந்துடாம பார்த்துக்கோ” என்று இறைஞ்சத்தான் முடிந்தது. நாங்கள் அவனை கண்டு கொள்ளாமல் இருந்தது அவனுக்கு மேலும் சாதகமாயிற்று..அப்போது ஒரு நாள் மறுபடி,

இரவு 12 மணி சுமாருக்கு வந்தவனுக்கு சாப்பாடு போட நான் டைனிங் டேபிளில் காத்திருந்த போது அவனைக் காணாமல் தேடினால் அவன்
தன் அறைக்கு சென்று விட்டிருந்தான்.. அப்போதும் கோபத்தை காட்டாமல் அவன் அறைக்குப் போய் “என்னப்பா..உனக்காக காத்துக்கிட்டிருக்கேன்..நீ
சாப்பிட வரலையே” என்ற போது “நான் ஃபிரண்ட்ஸ்ககூட சாப்பிட்டுட்டேன்” என்றான்.. அப்போதும் ” alright தூங்குப்பா” என்று சொல்லிவிட்டு
போய் விட்டேன்..பிறகு இதுவே தினமும் வாடிக்கையாயிற்று..நானும் இரவு 12 மணிக்கு அவன் வரும்வரை காத்திருப்பதும், பிறகு தூங்கப்
போவதுமாய் இருந்தேன்..என் கணவர், மகன், மருமகள் பொறுமை காத்தனர் என் இக்கட்டான நிலையறிந்து.. பிறகு ஒரு நாள் இரவு ஒரு ஆட்டோவில்
அவன் ஒரு பெண்ணுடன் வந்து இறங்கினான்..”யாரப்பா அது?” என்ற போது கொஞ்சமும் கூச்சமில்லமல் “என் கேர்ள் ஃபிரண்ட்..கூட படிக்கிறவ அத்தை” என்றான்..அப்போதும் நான் துளியும் முகம் சுளிக்காமல், “பார்த்து நடந்துக்க” என்ற போது, அவன் நானே சற்றும் எதிர்பாராதபோது, என்னிடம்
வெடித்தான்..”என்ன அத்தை சொல்றீங்க? என்னத்த பார்த்து நடந்துக்கிறது? ஒரு பெண்ணுகூட பழகினா,பேசினா உடனே கதை கட்டி விட்டுடறதா?” என்றான் உரத்த குரலில் நாலு வீடுகளுக்கு கேட்குமளவில்,அதுவும் அந்த நட்டநடு நிசி வேளையில்..திகைத்து போய் நின்றேன் நான் செய்வதறியாது..
பிறகும் அவன் தினமும் அந்தப் பெண்ணுடனேயே ஆட்டோவில் வந்து இறங்குவதும், இறங்கிய பிறகும் ஒரு சில நொடிகள் அங்கேயே கொஞ்சி,கொஞ்சிப் அவளுடன் பேசுவதுமாய்..!! ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று என் உள்ளுணர்வு சொல்லியது.. யாரும் அவன் செய்கைகளை கண்டு கொள்ளவில்லை என்றான போது, அவன் கொட்டம் முன்னிலும் அதிகமாயிற்று.. ஒருநாள் நாங்களே சற்றும் எதிர்பாராததொரு தருணத்தில்தான்…….,

 அவன் ஆட்டோவில், அந்த பெண்ணுடன் வந்து இறங்கி உள்ளே வந்த சில நொடிகளிலேயே, 4/5 மோட்டார் சைக்கிள்களில் வஸ்தாது போல சிலர் எங்கள் வீட்டு வாயிலில் வந்து இறங்கி, கதவைத்தட்ட, யாராய் இருக்ககூடும் அந்த நடு நிசி வேளையில் என்று படு காஷுவலாக கதவைத் திறந்த எனக்கு ஷாக் அடித்தாற் போலாயிற்று… “எங்கே அவன்? வெளியே வரச்சொல்லு உடனே அவனை..என்ன நினைச்சுகிணு கீறான் அவன் மனசுக்குள்ளாற,” என்றபோது, “நீங்க, யார்னு,” என்ற என்னை பார்த்து அண்ணன் மகன் பெயர், படிக்கும் காலேஜ், வகுப்பு எல்லாம் விளக்கமாய் சொல்லிவிட்டு,”கூப்பிடுமே அவனை” என்ற போது, சத்தம் கேட்டு, எங்கள் வீட்டு உறுப்பினர்கள் அனைவருமே, அண்ணன் மகன் உட்பட வெளியே வர,”டேய் பேமானி, கசமாலம், உன் மனசில, இன்னாடா  நினைச்சுக்கிட்டிருக்கே நீ? எத்தினி வாட்டிதான் உன்னை வார்ன் பண்றது..கூடப் படிக்கிற பெண் வசதியான வூட்டுப்பெண்ணுனு அதை ஏமாத்தி லவ்வு, அது,இதுனு, த பார்  இதெல்லாம் எங்க கைல வச்சுக்காதே.. எங்க அண்ணன் அந்தஸ்துக்கு கால்தூசி பெறுவியாடா நீயி? அட அந்தஸ்தை விடு..சாதி..இன்னா சாதிடா நீயி? சாதி மறுப்பு திருமணம், அது,இதுனு புரட்சி பண்றேன் பேர்வழினு, வேணாம்..போலீசுக்கு போவேன்னு சொன்னேனு வையி, அவ்வளவுதான்.சங்கறுத்துடுவோம் உன்னை.. ஜாக்கிரதை.இன்னொரு தபா எங்க பெண்ணோட உன்னிய பார்த்தேன்னு வையி அந்த வெ(இ)டத்திலேயே உன்னை கூரு போட்டுடுவோம்” என்றவர்கள் எங்கள் பக்கம் திரும்பி, “சொல்லி வையி உங்க பையனாண்ட” என்று சொல்லிக் கொண்டிருக்கையில், அந்த நிசி வேளையிலும் தெருப் பூரா கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தது எங்களை..அவமானமாய் போயிற்று..இப்படியாகும் என்று நான் நினைத்தேனா என்ன! கூட்டம் கலைந்து சென்றதும் “என்னடா இப்படி பண்ணிட்டே?” என்ற போது…
 
அவன் “என்ன பண்ணிட்டேன் அத்தை நான்? திருடினேனா?பொய் சொன்னேனா? ஒரு பெண்ணை லவ் பண்றது தப்பா! அதுவும் அவளும்கூட
என்னை லவ் பண்றப்ப !” என்றவனை பார்த்து “ஏண்டா முதல்ல படிப்பை முடிச்சு லைபில் செட்டிலாகப் பாரு..அப்புறம் காதல், ஊர்சுத்தல் எல்லாம்” என்ற என்னை பார்த்து, “உன் வீட்டில், உன் தயவில் நான் தங்கிக்கிட்டு படிக்கிறதாலதானே இந்த அட்வைஸெல்லாம்..எங்கப்பங்காரன் பண்ணினதும் தப்பு.. தன்னால படிக்க வைக்க முடியலையா பிள்ளையை, விட்டுடணும் அவ்வளவுதான்னு..இன்னொருத்தர் வீட்டில ஏன் கொண்டு போய் விடணும்?சே..
மானம்,ஈனம் கொஞ்சமாச்சும் வேணாம் ஒருத்தனுக்கு..இவனுகளையெல்லாம் யாரு பிள்ளையை பெத்துக்கச்சொன்னாங்க?” என்று கண்டமேனிக்கு பேசிய போது “ஏண்டா ஒரு அப்பன்காரனைப் பார்த்து மகன் பேசற பேச்சாடா இது?” என்றேன், ஆற்ற மாட்டாமல்..அப்போது அவன் மேலும் வெடித்தான்.. “என்ன நீ  உன் அண்ணன்காரனுக்கு சப்போர்ட் பண்றியா? பொத்திகினு போயிரு உள்ளே..இல்லைனா,இல்லைனா.. என் கோபத்தை கிளறாதே மேலே”
 என்ற போது என் கோபம் எல்லை மீறியது.நான் பேச வாய் திறக்கும் முன் அவன் “இதுக்கு மேலே ஒரு வார்த்தை நீ பேசினேனு வையி அவ்வளவுதான்” என்றவன், விடு,விடுவென உள்ளே போய் தன் உடமைகளை ஒரு சூட்கேசில் எடுத்துத் திணித்துக் கொண்டு எதுவும் பேசாமல் சரசரவென அந்த நள்ளிரவு வேளையில் வெளியேறினான்..”டேய்..டேய்..எங்கேடா போறே இந்த நிசி வேளையில்?” என்ற என்னை பொருட்படுத்தாமல் இருளில் கரைந்து போனான்..அன்றிரவு பூரா நாங்கள் யாருமே தூங்கவில்லை.. அவனது நண்பர்கள் என்று அறியப்பட்டவர்களுக்கெல்லாம்  நாங்கள் போன்
போட்டும்  no response… “கடவுளே ஏதாவது ஏடாகூடமான முடிவை அவன் எடுத்து விடக்கூடாது” என்று எண்ணி அந்த இரவில் தலைக்கு
குளித்து குலதெய்வத்துக்கு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்தேன்..மறுநாள் நடந்த விபரம் பூரா அண்ணனிடம் செல்லில் சொல்ல, அவரும்
“ஊம்..ஊம்..ஊம்” என்று மட்டுமே சொன்னார்..பாவம் அவர் மனதிலும் வேதனை இருக்குமல்லவா! பிறகுதான் அவன் இன்னொரு, ஒரு சக காலேஜ்
 நண்பன் வீட்டில், தாற்காலிகமாய் தங்கிக் கொண்டு, காலேஜுக்கும் போய்,வருவதாய் செய்தி வந்தது..எத்தனை நாட்கள்தான் அந்த நண்பனுடனேயே
 தங்கியிருக்க அனுமதிப்பார்கள்,அதுவும் இவனைப்பற்றி யாராவது போட்டுக்கொடுத்து விட்டால்!பிறகு அண்ணன் வந்து நடந்தது எல்லாம் கேட்டறிந்து வருத்தப்பட்டதுடன், சற்று நேரம் கண்களில் வடியும் கண்ணீருடன் அமைதி காத்தார்..”என்ன அண்ணே, ஏன் அழறே? எல்லாம் விதி” என்றபோது,அவர்

 “நான் ஒண்ணு சொன்னா நீ கோபிக்க மாட்டேனு நினைக்கிறேன். நீ ஆரம்பத்திலேயே அவனை கண்டிச்சிருக்கணும்.. இல்லைனா, எனக்காவது சொல்லியிருக்கணும்..நமக்கென்ன வந்திச்சினு நீ மௌட்டிகமா இருந்துட்டு இப்ப விஷயம் கைமீறி போனப்புறம்..ஊம் ..எல்லாம் என் தலைவிதிதான்.தப்பு என் மேலயும்தான் இருக்கு..கூடப்பிறந்த தங்கச்சிதானே..படிக்க வைக்கறேன்னு சொல்றாளே, தான் பெத்த பிள்ளை போல பார்த்துப்பானு நம்பி நான் மோசம் போயிட்டேன்”  என்ற அண்ணன் விருட்டென வெளியேறினார் தன் மகன் தப்பை உணராமலும், எங்களிடமும் எதுவும் சொல்லாமலும்..  சுருக்கென்று தைத்தது எனக்கு.. அண்ணன் பிள்ளையாண்டான் அன்று வீட்டை விட்டு வெளியேறும்போது, நாறடிச்சுட்டு போன துக்கத்தின் வடுகூட இன்னமும் மறையறதுக்குள்ள, அண்ணனும் என்னையே சாடறார்..மனப்பூர்வமாய் ஒரு ஏழைப் பையனைப் படிக்க வச்சு முன்னுக்கு கொண்டுவரணும்னு  நான் நினைச்சது தவறா? அப்போது அங்கு நின்றுகொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்த பிள்ளை/மருமகள் மீதே என் கோபம் வெடித்தது..

” இப்ப உங்களுக்கு  திருப்திதானே!நீயும், அப்பாவும் இப்படி மௌனம் சாதிக்கிறதுது என்ன நியாயம்டா? அப்பாவாவது என் அண்ணன் அவருக்கு  மச்சினன்றதால,  எதுவும் பேச முடியலை..ஆனா, படிச்சு, வேலைக்கு போகும், கலியாணமான, தலைக்கு மேல வளர்ந்த ஒரு பிள்ளையான நீ ஒரு சின்னப் பையன் எங்கிட்ட எகடு,தகடாய்,அதுவும் வாசல்ல பலர் பார்த்திருக்க  நின்னு,கத்தி,கலாட்டா பண்ணி எகிறினப்பவும்,அப்புறம் மாமன்காரன் வந்து என்னை சாடினப்பவும் நீ  கம்முனு இருந்தது நியாயமாடா? என்ற போதும் அவன் மௌனமாய்த்தான் இருந்தான்..அப்போது,என்னவர் சொன்னார்..

“நான் ஒண்ணு சொன்னா நீ தப்பா நினைக்க மாட்டேனு நினைக்கிறேன்.அன்னைக்கு, அந்த நடுநிசி வேளையில்,நானும்,நம்ம பிள்ளையாண்டானும்,
 இப்படி நடந்துக்கிட்டதுதான் கரக்டான முடிவு..எப்படினு கேட்கிறியா? அன்னைக்கு நம்ம பிள்ளையாண்டான், அவனை எதிர்த்து நாலு வார்த்தை
பேசியிருந்தான்னு வையி, என்னாயிருக்கும்னு யோசிச்சுப் பாரு.. சண்டை மேலும் வலுத்துப்போய், கைகலப்பில்கூட கொண்டு விட்டிருக்கலாம்..
ஊரே கூடி, போலீசுக்கும் புகார் போயிருக்கும்..நாம் படிச்சவங்க..அதிர்ந்து கூட இதுவரை யார் கிட்டவும் பேசினதில்லை..டீசன்டான லொகாலிடியில் இருக்கிறவங்க.என்னதான் கலியாணமாகி,குடும்பத்துக்கு மூத்த பிள்ளையாய் இவன் இருந்தாலும், தலை இருக்கிறப்ப வால் ஆடக்கூடதுனு ஒரு பழமொழி சொல்வாங்க இல்லையா! அது மட்டுமா?ஒருகால், நானே அந்தப் பையனை கடிஞ்சு நாலு வார்த்தைகள் பேசியிருந்தாலும் உறவு விட்டுப் போயிடும்.அதான் அப்ப நானும்  மௌனமாய் இருந்தேன்..உன்கூட பிறந்த அண்ணனே அவன் பிள்ளையின் செய்கையை கண்டிக்க திராணி இல்லாம, உன் மேல பழி போட்டுட்டு தப்பிச்சுக்க பார்க்கிறான்..ஒருகால் நீ அப்பப்ப இவனை பத்தி உங்க அண்ணன்கிட்ட புகார் பண்ணியிருந்தேன்னு வையி, அப்பவும் அவன், “உனக்கு அவனை படிக்க வைக்க விருப்பமில்லைனா, ஊருக்கு அனுப்பிடு..நானா உங்கிட்ட என் மகனை படிக்க வைனு கெஞ்சினேனு சொல்லியிருப்பான். இப்ப நீ சொன்னாப்பல அன்னைக்கே, நம்ம பிள்ளை,அவனை கண்டிச்சிருந்தா, இன்னம் இந்த உறவில் ஒரு பலமான கீறல் தான் விழுந்திருக்கும்..


“நீரடிச்சு நீர் விலகாதும்பாங்க” இப்ப உனக்கும், உங்கண்ணனுக்கும் இடையே உள்ள இந்த  கோபம்,வருத்தமெல்லாமே just  கொஞ்ச காலம் மட்டுமேதான்  இருக்கும்..அப்புறம் நீர்த்து போயிடும்..ஆனா நம்ம பிள்ளை அவனை அன்னைக்கு கண்டிச்சிருந்தா, “அவன் எப்படி என் பிள்ளையை சாடலாம்..நீயாவது வயசில மூத்தவ..அத்தைமுறை..என்ன இருந்தாலும் உன் பிள்ளையின் செய்கைகளை என்னால், ஜீரணிக்க முடியலை அவனை பார்க்கிறப்பல்லாம்னு” சொல்வார்..உறவுகளுக்குள்ள விட்டுக் கொடுத்து போகணுமேவொழிய, சிறு பொறியை ஊதி,ஊதி பெரு நெருப்பாக்க கூடாது..இப்படியொரு பிள்ளையை நாம் பெத்ததுக்கு நாம் அந்த கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்”, என்றபோதுதான் எனக்கு என் பிள்ளை/மருமகளின் அருமை,பெருமை விளங்கியது.. “ஈங்கிவனை யாம் பெறவே, என்ன தவம் செய்து விட்டோம்” என்ற பாடல்தான் அப்போது என் நினைவுக்கு வந்தது..
                                                                                                 ———

Series Navigationஅப்பாவும் பிள்ளையும்சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – இரண்டு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *