துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.

This entry is part 17 of 20 in the series 19 ஜூலை 2020

குரு அரவிந்தன்

எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் புதன்கிழமை 15-7-2020 மாலை கொழும்பில் காலமாகியதாகத் தெரிவித்திருந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

திருமதி பத்மா சோமகாந்தன், மிகவும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். மூத்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளருமான இவர் தனது எழுத்து ஆளுமையால் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல கட்டுரைகளை ஊடகங்களில் எழுதியது மட்டுமல்ல, நூலாகவும் வெளியிட்டிருந்தார். ஈழத்து சோமு என்று இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட திரு. நா. சோமகாந்தன், திருமதி பத்மா சோமகாந்தன் ஆகிய இருவரும் 2004 ஆம் ஆண்டு உதயன் கலைவிழாவில் பங்குபற்ற கனடா வந்திருந்த போது அவர்களைச் சந்தித்து உரையாடியிருந்தேன். அவர்களுடன் இரவு விருந்துபசாரத்திலும் அதிபர் பொ. கனகசபாபதியுடன் நானும் மனைவியும கலந்து கொண்டிருந்தோம். அன்று தொட்டு அவர்களுடனான எங்கள் இலக்கிய நட்புத் தொடர்ந்தது.

2006 ஆம் ஆண்டு அவரது கணவர் சோமகாந்தனின் மறைவு அவருக்குப் பெரும் இழப்பாக இருந்தது. அதன்பின் ஒருமுறை கனடாவில் உள்ள பிள்ளைகளைச் சந்திக்க அவர் கனடா வந்திருந்த போது, எனது மனைவி அவரை வீட்டிற்கு அழைத்து விருந்துபசாரம் செய்திருந்தார். 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் எங்களைப் போலவே இவர்களும் கொழும்பில் இருந்தனர். நாரஹேன்பிட்டி தொடர் மாடிக் குடியிருப்பில் இருந்த அவரது குடும்பத்தினரும் பாதிக்ப்பட்டதைப் பற்றி நிறையவே சொன்னார். அதனாலோ என்னவோ புலம் பெயர்ந்த தமிழர்களின் மொழி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டினார். என்னிடம் இருந்த எனது சிறுவர் பாடல்கள் அடங்கிய ஒளித்தட்டையும், எனது ‘தமிழ் ஆரம்’ சிறுவர் பாடநூல்களையும் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தேன். தனது பேரப்பிள்ளைகளுக்கு அவற்றைச் சொல்லிக் கொடுத்ததாகவும், புலம் பெயர்ந்த மண்ணில் தமிழ் வளர்ப்பதில் எமது தன்னார்வத்தொண்டைப் பாராட்டியும் எழுதியிருந்தார்.

சென்ற வருடம் இலங்கைக்குச் சென்றபோது, ஞானம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் எனது நூல்களான ‘சொல்லடி உன் மனம் கல்லோடீ?’ மற்றும் ‘என்ன சொல்லப்போகிறாய்?’ ஆகிய இரண்டு நாவல்களைக் கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியிட்டிருந்தேன். அந்த விழாவில் கலந்து கொண்ட திருமதி பத்மா சோமகாந்தன் தானே முன்வந்து தமிழ் வாழ்த்து இசைத்து வாழ்த்துரையும் ஆற்றியிருந்தார்.

எனக்குத் தெரிந்தவரை இவர் ‘புதுமைப்பிரியை’ என்ற புனைப்பெயரில் கதைகள் எழுதியிருக்கின்றார். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிப் பழைய மாணவியான இவர் ‘ஈழத்து மாண்புறு மகளிர் என்ற பெண்களைப் பற்றிய நூலையும் இற்றைத்திங்கள், கடவுளின் பூக்கள், வேள்வி மலர்கள், புதிய வார்ப்புகள் போன்ற சிறுகதைத்தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கின்றார். சிறுவர் இலக்கியத்திற்காக அனுமான் கதை என்ற நூலையும் வெளியிட்டிருக்கின்றார்.

மூத்த பெண் எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், தமிழ் பற்றாளர், சமயப் பற்றாளர், இளைப்பாறிய அதிபர் என்று பன்முக ஆளுமை கொண்ட திருமதி பத்மா சோமகாந்தன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினரின் துயரில் நாங்களும் கலந்து கொண்டு, அவரது அத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

குரு அரவிந்தன்
தலைவர்: கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.
17-7-2020.

Series Navigationஇந்த வாரம் இப்படி (கனக்டிகட் தமிழ் சங்கத்தில் திண்ணை ஆசிரியர் நிகழ்த்திய புதுமை பித்தன் பற்றிய உரை, கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவு, ராஜஸ்தான் நிகழ்வுகள்)வெகுண்ட உள்ளங்கள் – 8
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *