என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.

author
2 minutes, 3 seconds Read
This entry is part 20 of 23 in the series 26 ஜூலை 2020

க. அசோகன்

     ஆல்பர்ட்டுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.  கிட்டத்தட்ட எல்லாமே மறந்துபோன மாதிரி தோன்றியது அவருக்கு பல எண்ணங்கன் ஓடியபடி இருந்தாலும் மனம் எதிலும் லயிக்கவில்லை.  மீண்டும் ஒரு முறை தன் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் பகுதியை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.  ஒரு முறை தனக்குத் தானே சிரித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தார்.  அவரின் இந்த நிலைக்குக் காரணம் செல்ல பேத்தி டீனுவே.  அவள் இன்று காலை கேட்ட கேள்விதான்! 

     பெரும்பாலும் தனது அறைக்கு வராத பேத்தி வந்தபோது அவருக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது.  நீண்ட சுருள்முடி, கூர்மையான மூக்கு, உப்பிய ஆனால் அளவான கன்னங்கள் என அவளின் பாட்டியைப் போன்றே உரு கொண்ட டீனு வருகையை அவர் எதிர்பார்க்க வில்லை.  கண்ணாடியை உயர்த்திக் கொண்டே அவளை வரவேற்றார். ஏழு வயது குழந்தைக்கு தனியாக வரவேற்பு தேவையில்லை யென்றாலும் ஆல்பர்ட் அப்படித்தான் எல்லோரையும் கனிவுடன் வரவேற்று உபசரிப்பார்.  அதிலும் தன் மனைவியை உருவில் கொண்டுள்ள டீனு மீது தனிப் பிரியம் அவருக்குண்டு.

     டீனு கொஞ்சம் முன்னேறி வந்து கட்டிலுக்குமுன்னே உள்ள நாற்காலியில் ஏற முயன்றாள்.  ஆல்பர்ட் அவளைத் தூக்கி அமரவைத்து தன் கட்டிலில் உட்கார்ந்தார்.  ‘தாத்தா, நேற்று என் வகுப்பாசிரியர் புத்தகங்கள் பற்றி பாடம் நடத்தினார்’.  அவர் சொன்னார், ‘புத்தகங்களில் நிறைய கதைகள் உள்ளன’ என்று, நான், ‘நிஜமா?’ என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘ஆம், புத்தகங்களில் உலகமே உள்ளது’, என அவர் கூறினார்.  ஆல்பர்ட் இதை மிகுந்த கூர்மையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.  டீனு தொடர்ந்தாள், ‘இதைப் பற்றி உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கேளுங்கள்’, என்றார். 

     நான் வீட்டுக்கு வந்ததும் அப்பாவிடம் கேட்டேன்.  அதற்கு அவர், ‘தாத்தாவிடம் கேள்.  அவரைவிட வேறு யாரும் புத்தகங்களின் மதிப்பை உணர்ந்தவர்கள் இல்லை’ என்றார்.  அம்மாவும் அதை ஆமோதித்தாள்.  உங்களிடம் புத்தகங்கள் இப்போதும் உள்ளனவா, என பார்வையை சுழற்றியபடி பார்த்தாள்.  அவள் கண்கள் புத்தக அலமாரியைப் பார்த்ததும் பெரிதாக விரிந்தது.  அது ஒரு சிறிய புத்தக அலமாரி நான்கு அடுக்குகளைக் கொண்டது.  சிறிதும் பெரிதுமாக நூறு புத்தகங்களுக்கு மேல் இருக்கும்.

     ‘இவ்வளவு புத்தகங்களா? என கூறிக் கொண்டே அவள் அதனருகே நெருங்க எத்தனித்தாள்.  ஆல்பர்ட் அப்போது தான் தன் புத்தக அலமாரியை நிதானமாக கவனித்துப்பார்த்தார்.  அது எவ்வளவு சுருங்கிப் போயிருக்கிறது?  அப்போது தான் தெரிந்தது, டீனு ஏதோ கேட்டுக் கொண்டே இருந்தாள்.  அவரின் காதுகளுக்கு அதெல்லாம் எட்ட வில்லை.  அவள் அவருக்கு அருகே வந்து தாத்தா’ என தொடையைத் தொட்ட பின்பே தெளிவடைந்தார்.

     அவள் அவரைப் பார்த்தாள்.  கனவில் இருந்து மீண்டவர் போல் இருந்தார் தாத்தா.  ‘சொல்லுங்கள் தாத்தா புத்தகங்கள் ஒவ்வொன்றும் தனி உலகம் கொண்டதா?  உண்மையாக தனித்தனியாக புத்தகங்கள் கதைகளைக் கொண்டதாக இருக்குமா?  புத்தகங்கள் வழியாக அந்த உலகத்தை நாம் அடைய முடியுமா?’

     ஆல்பர்ட் சற்று பலமாக சிரித்துவிட்டு சொல்ல ஆரம்பித்தார்.  ‘ஒரு புத்தகத்தின் வழியாக நிச்சயமாக நீ அந்தமாதிரி உணர்வுகளைப் பெறலாம்.  புத்தகக் கதைகளின் வழி நீ உன் வாழ்வினை ரசனைமிக்கதாக, மகிழ்ச்சியானதாக வாழலாம்.  அந்தக் கதை அனுபவங்களை அசைபோட்டு மிகுந்த திருப்தி அடையலாம். அப்படியானால் மிகுந்த திருப்தி அடைந்தவராக உணர்கிறீர்களா?  என்றாள் டீனு.  ‘நிச்சயமாக’ என்றார் ஆல்பர்ட்.  சரி, அப்படியெனில் உங்களைக் கவர்ந்த கதைகளை நீங்கள் இன்றுமாலை எனக்குச் சொல்லமுடியுமா?’ என்று கேட்டாள் டீனு.  உற்சாகத்துடன் ஆல்பர்ட், ‘ஓ முடியுமே,’ என்றார்.  அவளின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி கொப்பளித்தது.  ‘சரி தாத்தா நான் மாலை வருகிறேன்’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள்.

     ஆல்பர்ட் கொஞ்சம் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தார்.  என்ன கதை சொல்வது நல்லது, எப்படித் தொடங்குவது என்று குழம்பியபடியே வெகுநேரம் இருந்ததார்.  வாசகனாக பலவருட அனுபவம் கொண்டவர்.  குறைந்த பட்சம் 5000 புத்தகங்களைப் படித்திருப்பார்.  ஆனால் இன்று ஒரு கதை வேண்டும், அதுவும் டீனுவுக்குப் பிடித்திருக்க வேண்டும்.  ஏனெனில் தான் சொல்லப் போகும் கதை டீனுவுக்கு கிளர்ச்சி உண்டாக்கவில்லையெனில் அவள் புத்தகம் பற்றி அக்கறை கொள்ளாமலோ, அல்லது ஆர்வமற்றோ போய்விடலாம்.  அதனால் தான் எந்தக் கதை சொல்வதென்று அல்லது விட்டுவிடுவதென்று தெரியாமல் குழம்பித் தவித்தார்.

     தனக்கு அடுத்த தலைமுறைக்கு எப்படியாவது புத்தகத்தின் பயனை அறியச் செய்திட வேண்டும் என்ற அவரின் எத்தனிப்பே, அவரின் இப்போதைய தவிப்பிற்குக் காரணம்;.

    அவர் ஒருமுறை தன் பால்யகாலத்தில் தான் படித்த புத்தகங்களை நினைவு கூர்ந்து யோசித்தார்.  மிகச் சிறந்த புத்தகங்களின் வழியேதான் அவள் மனதை வென்றிடமுடியும்.  ஏனெனில் அவள் ஒரு குழந்தை.  எனவே குழந்கைளுக்கு ஏற்றவாறு கதைகளைத் தேடவேண்டும் என முடிவெடுத்தார்.  டக்கென நினைவுக்கு வந்தது ஜோனதான் ஸ்விப்ட்டின் “கலிவரின் யாத்திரைகள்,”  குள்ளமனிதர்கள் கொண்ட லில்லிபுட் தீவில் மாட்டிக் கொண்ட அவன் கதை அவருக்கு மிக நெருக்கமானது.  ஆனால் கற்பனைக்கு எட்டாத குள்ள மனிதர்களைப் பற்றி அவளுக்கு எப்படி புரியவைப்பது என தெரியாமல் குழம்பிப் போய் அந்தக் கதை வேண்டாம் என முடிவெடுத்தார்;;. 

     “சின்ட்ரெல்லா,” “ஆலிஸ் இன் வொன்டர்லான்ட்,” ஆகிய புத்தகங்கள் அவர் நினைவுக்கு வந்தன.  ஆனால் அடுத்த கணமே டீனு ஒரு பெண் குழந்தை.  எனவே அவளுக்குப் பெண் முதன்மை கதாபாத்திரமாக வகிக்கும் கதைகளை ஏன் சொல்லக் கூடாது? என்று தோன்றியது. 

     ஆல்பர்ட் மீண்டும் யோசிக்கையில் ஒரு சிறு குழந்தைக்கு அதிசயம், மந்திரம், மிகைபுனைவு உலகத்தினை ஏன் இந்த வயதில் உருவாக்க வேண்டும்.  அவளை இந்த சிறுவயதிலேயே கற்பனாவாதத்தில் தள்ளிவிடவேண்டாமே,  அவை அவளை மூழ்கடித்து கரைத்துவிடும்.  யதார்த்த கதையே சிறந்தது.  அது அவளுக்கு வாழ்வினை அறிய வகை செய்யும் என எண்ணியவாறு குழந்தைகளுக்கான யதார்த்த கதையான டாம்சாயரை நினைத்துக் கொண்டார்.  டாம்சாயரின் வாழ்வில் நிகழ்ந்தவை எல்லாம் வெறும் நிகழ்வுகளே.  ஆனால் நாம் அற்புதங்களாக அறிய நேர்ந்தது, மார்க் ட்வைனின் எழுத்தின் வலிமை மூலமே.  மேலும் அவருக்கு அலெக்ஸாண்டர் குப்ரினின் புத்தகம் நினைவுக்கு வந்தது.  அந்தப் புத்தகத்தின் அட்டைப்படம் கூட ஞாபகத்தில் வந்தது.  “அப்பா சிறுவனாக இருந்தபோது” புத்தகத்தின் தலைப்பு இதுதான்.  மகளுக்கு கதை சொல்வதன் மூலமாக தன் பால்யத்தின் உச்சியைத் தொடும் தந்தையின் உணர்வுகள் நிறைந்த புத்தகம் அது.

     ஆல்பர்ட்டின் குழப்பம் தீர்ந்தபாடில்லை.  எதை விடுவது, எதைத் தேர்ந்தெடுப்பது எனக் குழப்பம் நீண்டு கொண்டே போனது.  மேற்கத்திய இலக்கியத்தின் வாயிலாக அந்தக் குழந்தைக்கு மேற்கத்திய சிந்தனையை இப்போதே விதைப்பதென்பது சரியாகப் படவில்லை அவருக்கு.  ஒரு வாசிப்பாளனாக தானும் ஐரோப்பிய இலக்கியங்களே சிறந்தது என கொண்டாடிவிட்டோமோ என்று அவர்மேலேயே அவருக்கு ஐயம் ஏற்பட்டது.  இப்போது சூழ்நிலை முன்பை விட மோசமாகிப்போனது.  ஒரு வாசகனாக, விமர்சகனாக அவர் புத்தகங்களை எண்ணிக்கொண்டே இருந்தார்.  இந்த நவீன காலத்தில் இலக்கிய எழுத்தாளர்கள் விமர்சர்கள் போல் பின்நவீனத்துவம், கட்டமைத்தல், குடியமர்த்தல் பற்றியெல்லாம் கவலை கொள்ளாதவர் ஆல்பர்ட்.  ஆனால் தன் பேரக் குழந்தைக்கான தேவை என்றதும் எதை எதையோ யோசித்து மேலும் குழப்பம் கொண்டிருந்தார்.  ஒரு கட்டத்தில் கதை சொல்வதில் தனக்கு என்றும் திறமையில்லை.  அதனால் இந்த திட்டத்தைக் கைவிட்டு வேறு யாரிடமாவது டீனுவை கதைகேட்கச் சொல்லலாமா என நினைக்கத் தொடங்கினார்.

     ஆல்பர்ட் இந்தக் கருத்தை அவருக்குள் முன் வைத்தபோது தன்னுடைய மாணவர்களும் இன்று எழுதும், விமர்சிக்கும் இலக்கிய பரிச்சயமுள்ளவர்களிடம் அனுப்பினால் நல்லது என பட்டது.  ஆனால் இன்னொருவர் சொல்கையில் அது அவருக்கான கடமை மேலும் ஒரு தாத்தாவாக தான் கொண்டுள்ள இந்தப் பொறுப்பை இன்னொருவர் மீது ஏற்றுவது அவருக்கு சரியாகப் படவில்லை.  திடீரென தன் வாழ்வில் நூறு கதைகளாவது எழுதத் தொடங்கி அதை முடிக்க முடியாமல் போனது பற்றி அவர்நினைவுக்கு வந்தது.  ஏனோ எழுத்தை நேசித்த அளவிற்கு எழுத்தின் சாரம் அவருக்கு கைகூடவில்லை என வருத்தம் அவருக்கு இருந்தது.  இன்று ஏதாவது ஒரு கதை முற்றுப் பெற்று இருந்தாலும் தன் கதை என சொல்லலாமல்லவா? என தோன்றியது அவருக்கு.

     மீண்டும் தன் அறையைச் சுற்றி நோட்டமிட்டுக் கொண்டே வந்தபோது புத்தக அலமாரியைப் பார்த்தார்.  ஒரே குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது, “எவ்வளவு சுருங்கி விட்டாய் நீ! எனதருமை நண்பனே! டீனு இந்த சில புத்தகங்களைப் பார்த்து வியந்தாள்.  அவளிடம் என்ன சொல்வது.  என்னிடம் ஒரு காலத்தில் ஒரு வீடுநிறைய புத்தகங்கள் இருந்ததைப் பற்றியும் புத்தகத்திற்காகவென தனி அறை ஒன்றை தான் வைத்திருந்ததைப்பற்றியும் இப்போது ஞாபகம் இல்லை. நகரச் சூழலில் மனிதர்களுக்கு இடம் கிடைக்காத நிலையில் புத்கங்களுக்கான வீடு தேவையில்லாத ஒன்றுதான், ஆனால் அந்த புத்தகங்கள் அவை வெறும் காகிதங்கள் அல்ல!  அது என் வாழ்க்கை! என் தவம்! அதுதான் நான்!  

     எப்படிப்பட்ட புத்தகங்கள், எப்படியெல்லாம் சேர்த்த புத்தகங்கள் அவை எனக்கு ஞாபகமில்லை ஆனால் ஏதோ ஓர் காரணம் இருக்க வேண்டும் என்னுடைய இந்த புத்தக பைத்தியத்திற்கு முற்பிறவியின் வினை யென கூட என் சிறுவயதில் யாரோ சொன்னதாக ஞாபகம்.  நான் பத்து வயதிலிருந்து சேகரித்த செல்வங்கள் அவை.  அப்போதெல்லாம் புத்தகங்கள் இவ்வளவு சுலபமாகக் கிடைக்கவில்லை.  அதைத் தேட வேண்டும் அதற்கான காசு வேண்டும்.  எனக்குத் தெரிந்து நான் காலனியில் இருந்த வாசகர் கூடத்தில் இருந்த செய்தித்தாள்களில் வரும் படக்கதைகளின் மேல் இருந்த கிறக்கத்தின் காரணமாக புத்தகக்கதைகளை நோக்கி ஓடியிருக்க வேண்டும்.  நான் திருச்சியில் பழைய புத்தகக் கடைகள் அனைத்திற்கும் சென்றிருக்கிறேன்.  ஏறத்தாழ நான் எல்லா வகையான புத்தகங்களையும் அந்தக் காலத்தில் படிக்க ஆரம்பித்திருந்தேன்.  இன்னும் எனக்கு புத்தகங்களை வகைமைப்படுத்தி புத்தகம் படிப்பதென்பது பிடிக்காது.

     மேற்சொன்ன சிறுவயது புத்தகங்கள் மட்டுமன்றி நிறைய குழந்தைகளுக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தேன்.  சில சமயம் அவற்றிக்கு அட்டைப்படங்கள் கூட இல்லாமல் இருக்கும்.  அந்தப் புத்தகங்களை வாங்க வேண்டும் என்றால் என்னுடைய கைச்செலவில் பெரிய பகுதியை இழக்க நேரிடும்.  ஆனால் அதைப்பற்றி நான் கவலை கொண்டதில்லை.  என்னுடைய இந்த நிலையினைப்பற்றி ஒரு சுருக்கமான ர~pயக்கதை மூலம் விவரிக்கலாம்.  ஒரு சாதாரன மனிதன் ஒரு மேல்கோட்டின் (ழஎநச உழயவ) மீது ஆவல் கொண்டான்.  அது அவனுக்கு வாழ்வில் வெறும் இன்பத்தை, மற்ற எல்லாவற்றைவிடவும் மகிழ்ச்சி அளித்தது.  கடைசியில் அவன் இறந்ததும் அந்த மேல்கோட்டிற்காக ஏங்கித் திரிபவனாக கதை விரியும்.  பதினாறு வயதில் எனக்கிந்த கதையைப் படிக்கும்போது என்நினைவே சுழன்றுவரும்.  எனக்காகவே எழுதப்பட்ட கதை இதுவெனத் தோன்றும். 

     என்னுடைய காலனி வாழ்வின் சாகசங்கள் அனைத்திலும் புத்தகத் தாக்கங்கள் அதிகமுண்டு.  டாம்சாயரைப்போன்று எங்கள் காலனிக்குள்ளே இருந்த மரக்கூட்டங்களுக்குள்ளே ஏதோ ஒரு மர்மம் இருப்பது போலவும், அதைக் கண்டுபிடிக்கும் கடமையுள்ளவர்கள் போலவும் நாங்கள் அங்கே விளையாடினோம்.  வீட்டினுள் புத்தகங்ளை வாங்கி நிரப்புவதால் தினமும் திட்டுவாங்கும் வழக்கமும் இருந்தது.  ஆனால் அதை நான் பொருட் படுத்தியதில்லை.

     அப்போதெல்லாம் பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்களைக் குவியலாகக்கொட்டி வைத்திருப்பார்கள்.  அதைக் குனிந்து தேடுவதற்குள் பெரும் பாடாகிவிடும்.  திருச்சியிலுள்ள சாலைகளில் குவிந்து கிடந்த அந்த புத்தகக் குவியல்களினூடேதான் நான் ர~;யாவின் வெண்ணிற பனிபடர்ந்த அந்தக் குளிர் பிரதேசங்களில் பிரவேசித்திருந்தேன்.  பிரெஞ்சு புரட்சி பற்றி சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய “எ டேல் ஆஃப் ட்டூ ஸிட்டீஸ்” என்ற நாவலை கையில் ஏந்தி படிக்க ஆரம்பித்து கீழே வைக்க முடியாமல் அந்த பழைய புத்கக் கடை வீதியின் சாலையிலேயே உட்கார்ந்து படிக்கத் தொடர்ந்தேன்.  நான் வழக்கமாக புத்தகம் வாங்கும் கடைக்காரர் எனக்காகவென சில சிறு கதைகள் தருவார்.  அவருக்கும் எனக்கும் ஒரு சுமுகமான நல்லுறவு இருந்தது.  ஆங்கிலப் புத்தகங்களுக்கு விலைபோடும் அவர் தமிழ்ப் புத்தகங்களை சிலசமயம் எனக்கு இலவசமாகவும் தருவார்.  அப்படித்தான் கு. ப. ராஜகோபாலன், புதுமைப்பித்தன், மௌனி என மணிக்கொடி வரிசை எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள்.  தமிழ்ச் சிறுகதைகளும் ஐரோப்பிய சிந்தனைக்குச் சற்றும் குறைவில்லாதது என நான் புரிந்து கொள்ளத் தொடங்கினேன்.  சிலபேர் கேட்பார்கள், ‘ஆல்பர்ட் இவ்வளவு படிக்கிறியே அப்படி என்ன தான் இருக்குது அதிலே.’  நான் சிரித்துக் கொண்டே சொல்வேன், ‘என்னை மனிதர்களிடமும், உலகத்திடமும் நெருக்கமாக்குகிறது’ என்று. 

     அது என்னவோ சத்தியம்தான்.  புத்தகங்கள் மனிதனை சகமனிதனிடம் நெருக்கமடையச் செய்கிறது.  என் முதல் மாத சம்பளம் வாங்கிய நாள் நேரே புத்தகக் கடைக்குச் சென்றேன்.  முதன் முறையாக புதிய புத்தகங்களை வாங்கி வந்தேன்.  வீட்டிற்கு வந்ததும் ‘சம்பளத்தைத் தொலைச்சிட்டு வந்துட்டேன்னு’ ஒரே சண்டை.  எனக்கு என்னவோ சரியென்று பட்டது.

     ஆங்கில இலக்கியம் என் உலகை மேலும் விரிவுபடுத்தியது எனச் சொல்லலாம்.  ஆங்கில புத்தகங்களை என்னதான் தமிழ் மொழிபெயர்ப்பில் படித்திருந்தாலும் மூலத்தின் வடிவில் படிக்கும் போது அதன் நடையும், சுவையும் இன்னும் ஈர்க்கக் கூடிய வகையிலேயே இருக்கும்.  ஆங்கில பேராசிரியனாக இருந்த போது அதன் பலனை முழுவதுமாக அனுபவித்தவன் நான்.  எப்படிப் பட்டவை எல்லாம் வாசிக்கக் கிடைத்த புத்தகங்கள் என்னை இலக்கிய உலகினுள் கிடத்திக் கொள்ள அமைந்த அற்புதமான களங்களாக புத்தகங்கள் மாறி இருந்தன.  சில சமயங்களில் கல்லூரி கட்டுப்பாடுகளுக்காக செய்நேர்த்தி இலக்கியங்களை விடுத்து மதிப்பெண்ணுக்குரிய புத்தகங்களை மாணவர்களுக்குச் சொல்லித்தர வேண்டி வரும்போது இந்த வேலை பிடிக்காமலிருந்தது.

     மனவெழுச்சி என்பதனை இந்தச் சமயத்தில் படித்த புத்தகங்களின் வழியே தான் கண்டடைந்தேன்.  கடலினைப் பற்றி அதிகம் அறியாத நான் கடலின் அகம், புறம் இரண்டும் அறிய நேர்ந்ததே கதையின் வாயிலாகத்தான்.  ஏர்னெஸ்ட் ஹெமிங்வே -யின் “த வோல்ட்மேன் அன்ட் த ஸீ”- ஓர் பிரவாகம் போல் என்னை இழுத்துக் கொண்ட ஓர் உன்னதமான படைப்பு.  ஒவ்வொருமுறை அதைப் படிக்கும்போதும், சந்தியாகு என்ற கதாபாத்திரம் எல்லாரிடத்திலும் உண்டு என்றே எனக்குப் பட்டது.  கடுமையான சூழ்நிலை, ஏளனமான பேச்சுகள் தான் மனிதனின் அகத்தினுள் இருக்கும் எழுச்சியை மீட்டுருவாக்கம் செய்கின்றன.  சந்தியாகு அப்படிப்பட்டவன் தான்.  அவனும் மெர்லின் என்கிற அந்த மீனும் மோதிக் கொள்ளும் போது வாழ்வின் அவநம்பிக்கைகள், தோல்விகள் எல்லாம் அவனுடன் மோதுவது போல உள்ளது.  அதனைக் கடக்க தன் உயிரையே பணயம் வைத்து வெற்றி பெறுகிறான் சந்தியாகு.  ஆனால் அவன் பெற்ற வெற்றி கொண்டாடப் படவில்லை.  அது ஒன்றும் இல்லாமல் போகிறது.  அந்தக் கரையில் மெர்லின் ஒதுங்கும் போது ஒன்றுமில்லாமல் ஆனது போல.  வெற்றுக் கொண்டாட்டங்களுக்காக நீங்கள் எதைச் செய்தாலும் அது ஒன்றுமில்லாமல்தான் போகும்.  இந்தக் கதையின் முடிவில் சந்தியாகு அதை ஏற்றுக் கொள்கிறான்.  சாதாரண நாளாக அந்த நாளும் கடந்து போய்விடும் என நம்புகிறான்.  வழக்கம் போல தன் கனவினை தொடர்கிறான்.  கடலின் புறத்தன்மையை வைத்து வாழ்வை நமக்கு கற்றுத்தந்திருப்பார் ஹெமிங்வே.

     இதேபோல எத்தனை புத்தகங்கள் நம் வாழ்வினை எத்தனையோ கோணங்களில் வெவ்வேறான உருவகங்களை உணர்த்தியிருக்கின்றன. நம் வாழ்வின் அனுபவங்கள் புத்தகங்களின் வழியே மீண்டும் மீண்டும் நினைவூட்டி அவற்றை உயிரோட்டமானதாக மாற்ற முடிந்திருக்கிறது.  சில சமயங்களில் நமக்கு நேராத அனுபவங்களை ஒருவேளை நமக்கு நடந்திருந்தால் எப்படி இருக்கும் என எண்ணத் தோன்றியிருக்கிறது.

     எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது- ஒவ்வொரு முறை மௌனியின் அழியாச்சுடர் கதை படிக்கும்போதும் எனக்குள் ஏதோ ஓர் உணர்வு ஏற்படும்.  ஒரு முறை லில்லி கேட்டேவிட்டாள். 

     ‘உங்களுக்கு சிறுவயதில் ஏதும் இது போல் காதலி இருந்திருக்கிறாளா என்ன?’

     நான், ‘ஏன்?’ என்றேன் சிரித்தபடியே.

     ‘அந்தக் கதையை நானும் படித்தேன்.  ஏனோ நீங்கள் ஒவ்வொருமுறை அந்தக் கதையைப் படிக்கும்போது அந்தக் கதையில் வருபவன் தேடுவதைப் போலவே எனக்குத் தோன்றுகிறது.  அதுதான் கேட்டேன்.’

     நான் என்ன பதில் சொன்னேன் என ஞாபகம் இல்லை.  ஆனால் மௌனியின் அந்த எழுத்து நடை என்னை அப்படி ஆட்கொண்டது.  உண்மையில் எனக்கு கடந்தகாலத்து காதலி என யாருமில்லை, ஆனால் அந்தக் கதையைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு இருந்திருப்பாள் என்றோ, அல்லது எனக்கும் அப்படி ஒரு காதலி கிடைத்திருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணத் தோன்றியது.

     இதே போல சுந்தர ராமசாமியின் “பக்கத்தில் வந்த அப்பா,” எனும் கதையும் எனக்கு நடந்திருந்தால் நன்றாக இருக்குமோ என எண்ணியதுண்டு.  ஏன் எனக்கும் அப்பாவிற்குமான உறவு சரியில்லை என பலமுறை எண்ணியிருக்கிறேன்.  எத்தனையோ முறை அதற்காக நான் வருந்தியிருக்கிறேன்.  அவருக்கு எப்போதாவது நான் தேவைப்படுவேன் என நம்பியே இருந்திருக்கிறேன்.  அந்தக் கதையில் வருவது போல ஒரு துக்கத்தின் போதாவது அவர் என்னிடம் நெருங்கி வருவார் என காத்திருந்தேன்.  ஆனால் அது என்னவோ கடைசிவரை நிறைவேறவே இல்லை.

     எத்தனை நிராசைகள் எனக்கு.  ஆனால் அவையெல்லாம் என்னை தீண்டாத வகையில் எனக்கு இருந்தவை இந்த புத்;தகங்களே. என் இழப்பு, இயலாமை என எந்த இக்கட்டான நிலையிலும் நான் அந்த புத்தக அலமாரியில் கைவைத்தவுடன் என் க~;டங்கள் யாவும் மாயமாய்; மறைந்துவிடும், ஆச்சரியம் எனக்கு இன்றுவரை உண்டு.  ஏன் லில்லியின் இழப்பைக் கூட எனக்கு புத்தகங்களின் வழியாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக தணித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.  முழுமையாக இல்லையென்றாலும் இப்போதும் என்னால் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் லில்லி நினைவுக்கு வராத நாளில்லை.

     ‘ஃபார் ஃப்ரம் மாடிங் க்ரௌடு’ (குயச குசழஅ ஆயனனiபெ ஊசழறன) என்ற புத்தகம் படிக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு லில்லியின் நினைவு முற்றாக மூழ்கடித்துவிடும்.  அதில் வரும் அப்பழுக்கில்லாத அன்பை மட்டுமே இரைந்து கேட்கும் உன்னத பிறவி வேறு யாரும் இல்லை.  எனக்காக பிறந்தவள் லில்லியே என நம்புகிறேன்.

     காலமாற்றத்தில் மகன்களின் வேலைநிமித்தம் காரணமாக சென்னைக்குச் சென்றுவிட நேர்ந்தது.  நான் ஓய்வு பெற்று விட்டதாலும், லில்லி இறந்தபின்னும் நான் இங்கே தனித்து வாழ்வது சாத்யமற்றுப்போனது.  எனவே வீட்டைக்காலி செய்ய நேர்ந்தது.  இங்கிருந்து அவ்வளவு புத்தகங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.  அவ்வளவு சேமிப்பு, அத்தனை புத்தகங்களையும் எடுத்துச் செல்ல முடியுமா?  அப்படியே இருந்தாலும் அந்த வீடு கொள்ளுமா?  என பலவாறான சிந்தனைகள்.  என்னைச் சூழ்ந்து கொண்டன.  என்னிடம் எப்படி இதைச் சொல்வது. நான் ஏற்றுக் கொள்வேனா?  என என்னுடைய மகன்கள் குழம்பிக் கொண்டிருந்தனர்.  

     பாவம் அப்பா! மனம் நோகுமாறு நடக்கத் தெரியாத பிள்ளைகள்.  நான் புரிந்து கொண்டேன்.  ஒரே ஒரு முறை புத்தக வீட்டைப் பார்க்க கிளம்பினேன்.

     திருச்சி வீட்டிற்குள் சென்று என் புத்தக அடுக்குகளைப் பார்த்தேன்.  சிறு நிழலுக்காக மக்கள் ஒதுங்க வேண்டிய நிலையில் புத்தகங்களுக்காக ஒரு வீடு வேண்டாம் என கர்த்தர் நினைத்தாரோ என்னவோ என நான் எண்ணிக் கொண்டேன்.

     ஒரு நாற்காலி போட்டு சற்று தள்ளி அமர்ந்து புத்தகங்களை வெறித்துப் பார்த்தேன்.  கர்;த்தர் அப்படி எண்ணியிருக்கமாட்டார்.  சேகரித்து வைத்த புத்தகங்ள் இனி இந்தக் கிழவனிடம் இருந்து என்ன பயன்.  அது அடுத்த தலைமுறைக்குச் சொந்தம்.  ஆல்பர்ட்டிடம் அது முழுவதும் இருக்கலாகாது.  அவர் வேலைமுடிந்து விட்டது.  இவற்றை அவர் பிறரிடம் கொடுப்பதே அவருக்கு இட்ட பணி, என கருதியிருக்கக் கூடும் அது தான் இப்போது நடக்க இருக்கிறது என எண்ணிக் கொண்டேன்.

     ஏறக்குறைய அரையணா, காலணா விலையில் இருந்து சில ஆயிரம் ரூபாய் வரை உள்ள புத்தகங்கள்.  யார், யார் கைபட்டோ என்னிடம் வந்த புத்தகங்கள்.  ஏதோ முட்டையிலிருந்து வெளிப்பட்ட குஞ்சுகள் தாயின் வெப்பத்திற்காக தவிப்பது போல நான் தவித்தேன்.  இப்போது நேரம் வந்துவிட்டது.  அவை தானாக பறந்து செல்ல அனுமதிப்பதே சரியாகும் என எண்ணினேன்.

     எனக்குத் தெரிந்த நூலக நண்பரை வரச்சொல்லி ஏராளமான புத்தகங்களை அவரிடம் கொடுத்து விட்டேன்.  ஒரு சிலவற்றை என் கதைகளை நினைவுகூற எடுத்துவைத்துக் கொண்டேன்.  மற்றவை யெல்லாம் போய்விட்டன.  அப்பொழுது பலத்த மழை பெய்தது எனக்காகவே வானம் ஆனந்தக் கண்ணீர்விட்டதோ எனத் தோன்றியது. 

     சாப்பிட்டு தூங்கும் முன் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன்.  ஒரே இரைச்சல்.  மழையின் வேகத்தை உணராமல் வாகனங்கள் இன்னும் சென்றபடியே இருந்தன.  இப்படி ஒரு அவசர உலகில் என்னை மூழ்கடிக்காதபடி என்னை எப்படி பாதுகாத்து அரவணைத்த புத்தகங்கள் ஏனோ இப்போது பறந்து சென்ற பறவைக்குஞ்சுகள் நானே என்று பட்டது. 

     ஆனால் உள்@ர ஒரு பெருமிதம், ஏதோ ஒரு சந்தோ~ம், ஆனந்தம்.  நான் அந்த இரவில் வாழ்வின் நிறைவை சந்தித்துவிட்டதாக தோன்றியது.  எத்தனை பேருக்கு கிட்டும் இந்த நிறைவு.  நான் ஒரு அதிர்~;டசாலியாகவே எனக்குப் பட்டது.  ஏனோ சந்தியாகு நினைவே எனக்கு திரும்பத் திரும்ப வந்தது அன்று. 

     தன் இடர்பாடுகள் அத்தனையும் தனது வெற்றியை வசப்படுத்திக்கொள்ள அவன்பட்ட பாடுகள் ஏராளம்.  ஆனால் இறுதியில் அவன் கையில் ஒன்றுமில்லை.  ஆனாலும் அவன் கனவு காண ஆரம்பிக்கிறான்.  அவனுக்கு மட்டுமே தெரியும் அளப்பறிய ஒரு செயலை அவன் செய்துள்ளான் என்று. வேறு யாரையும் அவன் அதை ஏற்கச்சொல்லி வற்புறுத்தப்போவதும் இல்லை.  எனக்கும் அப்படித்தான் அப்போதைய மனநிலை இருந்தது.  நான் க~;டப்பட்டு சில சமயங்களில் சிலவற்றை இழந்து நான் வைத்திருந்த புத்தகங்களை இந்த உலகத்திற்கு காட்டி சந்தோ~ம் அடைய வேண்டும். 

     ஆனால் அத்தனையும் ஒரே நாளில் இழந்துவிட்டிருந்தேன்.  இப்பொழுது எனக்கு எந்த கவலையும் இல்லை.  எனக்கு என் அளவில் நான் வெற்றிபெற்றவனாகவே உணர்கிறேன்.  நானும் கனவு காணப் போகிறேன் என மனதில் சொல்லிக் கொண்டேன்.  கர்;த்தர் எனக்கு இட்ட பணியை செவ்வனே செய்து முடித்துவிட்டேன் எனத் தோன்றியது. 

      பெண்டுலம் கொஞ்சம் அதிர்வாக நான்கு மணி அடிக்கும்போது தான் ஆல்பர்ட் அதிர்ந்து எழுந்தார்.  கண்விழித்த போது எல்லாமே வேறு ஏதோவாக மாறிப்போனதாக உணர்ந்தார்;.  கொஞ்சம் கண்களை துடைத்துக்கொண்டார்.  அவர் கண்களில் நீர்த்துளிகள் அரும்பியதாக அவர் உணர்ந்திருந்தார். 

     நீண்டதொரு பெருமூச்சு விட்டார்.  என்ன சொல்வது டீனுவுக்கு என மீண்டும் யோசிக்கலானார்.  அவருக்கு என்னவோ இப்போது உள்ளே இருக்கும் கதையை விட புத்தகத்துக்கும் தனக்குமான இந்த தொடர்பு கதையே உயர்வாக பட்டது.  புத்தகத்தின் உள்ளே இருக்கும் கதை சாதாரணமானதுதான்.  ஆனால் ஒவ்வொரு புத்தகமும் அதன் வடிவமைப்பில் இருந்து வாசகனிடம் வந்து சேரும் வரை உள்ள கதை சுவாரசியமாக இருக்கும் என தனக்குள்ளே கூறிக்கொண்டார்.

     டீனுவுக்கு என்ன கதை சொல்வது என்ற குழப்பம் அவருக்கு தீர்ந்த பாடில்லை.  ஆனால் ஒன்றை மட்டும் அவளுக்கு சொல்ல வேண்டும்.  புத்தகம் சுவாரசியமாக இருக்குமா இல்லை உண்மையிலேயே அது ஒரு உலகத்தை உருவாக்குமா என்றெல்லாம் தெரியாது. 

     அது எப்படிப்பட்டது என்பதை என் புத்தக அடுக்கில் ஒட்டியிருக்கும், வால்ட் விட்மனின் மொழியில் சொல்வதானால் “இது வெறும் நூல் அல்ல தோழா! இதைத் தொடுபவன் மனித இதயத்தையே தொடுகிறான்.”  ஆம்! ஒவ்வொரு புத்தகமும் யாரோ ஒருவரின் இதயத்திற்கு அருகிலேயேதான் இருக்கும்.   ஆனால் அதைப்படிக்க நாம் நம் இதயத்தை திறந்துவைத்துக்கொள்ள வேண்டும்.

     அவர் இதை நினைத்துக் கொண்டே தன் புத்தக அலமாரியைப் பார்த்தார்.  ஏதோ நீண்ட தூரம் கடலிலுள் மூழ்கி நீந்தி வெளிவந்ததைப் போல உணர்ந்தார்.  கதவை திறக்கும் சத்தம் கேட்கின்றது.  டீனுவாகத்தான் இருக்க வேண்டும் அவளுக்கு என்ன கதை சொல்வது என்று இப்போதும் குழம்பிக்கொண்டே உட்காந்திருக்கிறார்.

Series Navigationபட்டியல்களுக்கு அப்பால்…..தரப்படுத்தல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *