வெகுண்ட உள்ளங்கள் – 11

author
0 minutes, 3 seconds Read
This entry is part 8 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

கடல்புத்திரன்

பதினொன்று

அடுத்தநாள், மன்னியும், அண்ணரும் வீட்டுக்கு வந்தார்கள்.

அவளால் ‘அக்காவிடம் முறையிட முடியவில்லை. கண்கள் சிவந்திருந்தவளை ‘கிடைச்ச வாழ்வை நல்லபடியாய் அமைச்சுக் கொள்” என்று அவர் தேற்றினார்.

உள்ளே இருவரும் சென்ற போது அவள் தன்னையறியாமல் மன்னியின் தோளில் சாய்ந்து கொண்டு அழுதாள். அவன் அண்ணனோடு கதைத்துக் கொண்டு வெளியில் இருந்தான். ‘அண்ணி’ என உள்ளே வந்த போது அவள் அழுதது அவனை குற்றவுணர்வில் தள்ளியது. “தேனீர் வைச்சுக் கொண்டு வா” என்று அவளிடம் சொல்ல வந்தவன்,  “ஒன்றுமில்லை மன்னி, சும்மா வந்தேன்” என்று விட்டு வெளியேறினான். மன்னி இருவருக்கும் தேநீர் ஊற்றிக் கொண்டு வந்தார்.

இவர்கள் இருவரையும் பகிடி பண்ணி கதைத்து விட்டு விடைபெற்ற போது “அக்கா” என கமலம் அவர் கையைப் பற்றினாள். “எடியே, என்னடி விசயம்” என்று அவளை இழுத்தணைத்து அவள் கண்களில் உருண்டு வந்த கண்ணிரை துடைத்து விட்டார். அவருக்கு உதவியாக நின்ற அவளின் பழைய ஞாபகங்கள் வந்தன.

“சீ என்னடா வாழ்வு’ என அவனுக்கு மனம் வெந்து போய் கிடந்தது.

செல்லனோடு தொழில் பார்ப்பதை விட்டு விட்டான். அவளுடன் முகம் கொடுக்க முடியாமையால் நேரம் சுமையாய் பொறிந்தது. நண்பர்களைப் பார்க்க கரைப் பக்கம் வெளிக்கிட்டான்.

அன்டன் படகிலே ஆட்களை நிறைத்துக் கொண்டு நின்றான். நகுலன்  அவுட்புட்  மோட்டரோடு இருந்தான். அவன் கனகனையும் படகில் ஏறச் சொல்லி கையசைத்தான்.சிறிய அலைகளைக் கிழித்துக் கொண்டு லாவகமாக படகு விரைந்தது. இதமான காற்று வீச கனகன் பண்ணைப் பக்க நீர்ப்பரப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான்.

டிக்கட் காசை சேர்த்தபிறகு அன்டன் அவனுக்கு பக்கத்தில் வந்தமர்ந்தான்.

“என்னடா விசயம்” என்று விசாரித்தான்.

‘டேய் கடையொன்று போட விரும்புறன். நீங்க தான் உதவி செய்யணும்” என்று கேட்டான். அன்டனுக்கு கண்கள் கலங்கின. எங்கோ பார்த்துச் சமாளித்து விட்டு ‘அவனை நேரில் பார்த்துச் சொன்னான். “டேய் உனக்கில்லாததாடா மச்சான்” என்று அவன் தோள் மீது கையை வைத்தான். “ஞாயிற்றுக் கிழமை நேரம் வருமடா, அப்ப வாறமடா” என்றான். அரசியல் பற்றியும் திலகன் பற்றியும் கதைத்து விட்டு அவன் விடை பெற்றான்.

வீட்டே வந்தவன் “தொழில் இல்லாது நெடுக இருக்க முடியாது’ என்று பலமாக யோசித்தான். ‘நண்பர்களிடமோ உறவுகளிடமோ கடன் வாங்கியாவது …சமாளிக்க வேண்டும்.அவனைக் கண்டால் சிறிது பயத்துடன் ஏறெடுத்துப் பார்க்கிற அவளிடமும் நேரடியாக மன்னிப்புக் கேட்கிறது நல்லது போல் கேட்டது.கமலம் என்று கூப்பிட்டான். அவன் குரல் கம்மியிருந்தது. விளக்கை ஏற்றிக் கொண்டிருந்தவள் திரும்பி அவனைப் பார்த்தாள். அவள் கண்களைக் கொஞ்ச நேரம் பார்த்தான்.

“உங்கப்பாவோட இனிமே தொழில் பார்க்கப் போறலை” என்றான். அவளுக்கு அக்கரையில்லாத விசயம் போல குசினிப் பக்கம் போக முயன்றாள். “அப்ப, எனக்கிருந்த குழப்பத்தில் கண்மண் தெரியாமல் குடித்துப் போட்டு வந்து .என்னை மன்னித்து விடு’ என்று எங்கோ பார்த்துச் சொன்னான்.மிருகம் என நிரூபித்த பின் மனிதன் என்று சொல்கிறான். அவளுக்கு வேடிக்கையாகப் பட்டது . அவள் எழுந்து போனாள். சாப்பிட்ட போதும் அருகருகே படுத்திருந்த போதும் அவர்கள் மத்தியில் புதுமணத் தம்பதிகள் என்ற நினைவு நிலவவில்லை. மாறாக பெரிய திரையே விழுந்து கிடந்தது.

வீட்டின் முன்புற வேலியோடு சேர்த்து சிறிய கொட்டில் ஒன்றை நண்பர் உதவியுடன் போட்டான். முருகேசும், பஞ்சனும் கூட வந்து‌ உதவினார்கள்.  தாலியை கட்டச் சொல்லி மும்முரமாக நின்ற வாசிகசாலையோ மற்றவர்களோ உதவிக்கு முன் வரவில்லை. கசப்பு சூழ்ந்திருந்தது.அன்டன் வீட்டினர் கொஞ்சம் பணம் மாறி கடனாகக் கொடுத்திருந்த‌னர்.

    திங்கள்க் கிழமை போல அனைவரும் இருக்க,ஐயனார்க் கோவில் ஐயர் சிருஸ்டிக் கழிக்க ‘கமலம்’கடையும் திறந்து விட்டாயிற்று.

அந்த கிழமையே நவாலி ஆட்களிடம் இருந்து சிறிய வள்ளமும் வலையும் வாங்கினான். கடையையும்  திறக்கப்பட்டதால் …மாப்பிள்ளை தன்னோடு சரிப்படா விட்டாலும் “சூரன்” என்று செல்லன் பெருமையோடு சொல்லிக் கொண்டான். அவனின் இடத்திற்கு ராஜனை புதிதாக சேர்த்துக் கொண்டான். அன்டனின் தம்பி நடேசன் கனகனோடு வள்ளத்துக்கு வந்தான். கூலியாக இருக்காமல் பங்காளியாக இருக்கலாம்’ என்று கனகன் விருப்பம் தெரிவிக்கவே, அவர்கள் கடனாகக் கொடுத்ததை பங்காக எடுக்கச் சொன்னார்கள். பிடிபடும் மீனில் அரைவாசியாக இருவரும் பிரித்தார்கள். கடையில் வியாபாரமும் ஒரளவு நடக்க அவன்  ஒரு புள்ளியானான்.

காலையிலேயே தொழிலால் வந்த கையோடு குளித்துவிட்டு சங்கானைச் சந்தைக்கு ஒடினான்.ஒவ்வொரு நாளும் மரக்கறிகள், மற்றும் மளிகைச் சாமான்களை வாங்கி சைக்கிளில் கட்டிக் கொண்டு வந்தான். பத்து மணிக்கெல்லாம் அவன் கடையில் புதிய மரக்கறிகள் வாங்கலாம் என்று கடைக்கு நல்ல பெயரும் கிடைத்தது.

ஒருநாள் மன்னி சாமான் வாங்க கடைக்கு வந்த போது திலகனும் கூட வந்தான். இரவில் தொழில் பார்த்த அசதியோடு சந்தையில் இருந்து வந்த கையோடு வீட்டில் குந்து போல் கட்டப்பட்டிருந்த மண் விராந்தையில் படுத்துக் கிடந்தான். கடையில் சனம் குறைந்திருந்தது. மன்னி “எடியே கமலம், எப்படியடி வாழ்க்கை?” என்று கேட்டாள். அவள் முகமலர்ச்சியற்றிருக்கவே “ஏதும் பிரச்சினையோ” என்று ஆதரவாக கேட்டாள். அவளால் என்ன சொல்ல முடியும்? வெறுமனே சிரித்தாள்.

கனகன் ஒரு மிருகம் என்றால் நம்புவாளா? அவளே கூட நம்ப எப்படிக் கஷ்டப் பட்டாள்? உவன் இப்படி நடந்துகொள்வான் என்று யாரும் முன்னர் சொல்லியிருந்தால் கூட அவளும் கடைசிவரை நம்பியிருக்க மாட்டாள்.

திலகன் அவனோடு கதைத்த போது “என்னடாப்பா. நானும் உங்களைப் போல் வந்திருக்கலாம்” என வருத்தத்துடன் சொன்னான். “உன்ரை மகனை வளர்த்து எங்களிட்ட அனுப்பன்” என்று திலகன் சிரித்தான். அவனோட கதைத்த பிறகு கனகனுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. விடைபெற்ற பிறகு யோசித்தான். மனதில் குழப்பம் அதிகமாகிக்கொண்டுபோவதை விட எல்லாவற்றையும் அவளிடம் கொட்டி விடுகிறதே நல்லது. விசயங்களை தெரிந்தே வெறுக்கட்டும்.

தொழிலால் வருகிற அவனை அணைக்க வேண்டியதில்லை. ஒரளவாவது முகம் கொடுத்து பேசினால் போதும். இருக்கிற விடுமுறை நாளிலும் குழப்பம் அதிகமானால்..?, அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

காற்று அன்று பலமாக வீசவே.வந்த நடேசனையும் திருப்பி அனுப்பியிருந்தான். பொதுவாக யாருமே தொழிலுக்கு போகவில்லை. வேளைக்கே கடையைப் பூட்டி விட்டு கமலமும்  வந்தாள். தேநீர் வைத்துக் கொண்டு வந்து பக்கத்தில் வைத்தாள். அதை எடுத்து அவன் ஒரு புறமாக வைத்தான்.

“கமலம்” என கூப்பிட்டான். என்ன? என்று கிட்டே வந்து அவள் நின்ற போது கையைப் பிடித்து இழுத்தான். அவள் அவன் மேல் சரிந்து விழுந்தாள். ‘கள்ளு மணம் வீசுகிறதா?” என மூச்சை கவனமாக இழுத்து கவனித்தாள்.

“கமலம் உனக்கு நான் என்ரை நிலையைச் சொல்லப்போறன் அதற்குப் பிறகு உன் இஷ்டம். உன்னை உன் விருப்பமில்லாமல் வற்புறுத்த மாட்டன்” அவள் அவனை சிறிது வியப்புடன் பார்த்தாள்.“உன்னை பிடிக்காமல் பேச முடியும். ஆனால் நான் சொல்ற முழுதையும் கேளாமல் ஒடி விடுவாய் என்றதாலை பிடித்திருக்கிறன். உனக்குத் தெரிய நியாயமில்லை. நான் ஒரு பெண்ணை விரும்பினனான். அவளும் என்னை விரும்பினாள். அவள் எழுதிய கடிதங்களை எரிப்பதற்காய் எடுத்து வச்சிருக்கிறன். உனக்கு விருப்பமென்றால் நீயே எரிச்சு விடு”. அவன் மூலையில் கிடந்த சிறிய பிரவுண் பேப்பர் பையைக் காட்டினான். “உன்னை திடீரென கட்டி வைச்சு விட்டார்கள்.மனக் குழப்பத்தில் குடிச்சுப் போட்டு வந்து பழி வாங்குறது போல் நடந்திட்டன். என்னைப் பொறுத்த வரையில் இனி நீ தான் எல்லாம் !, ஆறுதலாக இருக்க வேணும்” அவளை விடு வித்தான்.

அவள் அந்தப் பையை ஒரு தடவை பார்த்தாள். கடல் மனிதர்கள் ஒன்றில் முரடர்களாயிருக்கிறார்கள். அல்லது பலவீனர்களாயிருக்கிறார்கள். ஒரளவு படிப்பறிவு பெற்றவர்கள் கூட விதிவிலக்கில்லை. அவன் மார்பின் மேல் அவள் சாய்ந்து கொண்டாள். அவன் கண்களில் சூடான கண்ணிர் வந்தது.

சமூகத்தை மேம்பாடாக்கணும். அல்லது ஒரு இயக்கத்திற்கு ஒடி சமூகத்தை எதிர்நோக்கியிருக்க வேண்டும்.அவள், அணைப்பில் இருந்து விடுபடாது அப்படியே கிடந்தாள். அவன் மனம் சிறிது ஆறுதல் பட தூங்கிப் போனான்.

அவன் மன்னி வீட்ட போன போது மச்சானும் இருந்தான். வளவு வேலிக்கு மேலாக அவனைக் கண்டு விட்டு செல்லமணி ஒடி வந்தாள். “அத்தான் அக்கா எப்படியிருக்கிறார்? வயிறு ஊதியா?” எனப் பகிடியாக கேட்டாள். பாபுவோடு இருந்த திலகனையும் அவள் கடைக் கண்ணால் பார்த்தாள்.‘இருவரையும் எப்படிச் சேர்த்து வைப்பது? என்று கனகன் யோசித்தான். கமலம் தான் சரியானவள்.

“நல்லாய் இருக்கிறாள்” என்றவன் ‘மன்னி, மச்சானையும் குடும்பமாக பார்க்க வேண்டாமா?” என்று கேட்டான். தொடர்ந்து “இவளைப் போல ஒரு குட்டியைப் பார்த்து” என்று சொன்ன போது மணி “அக்கா வாறன்” என ஒடி விட்டாள். தம்பியும் இவளை விரும்புகிறானோ? என்று சந்தேகத்துடன் புனிதம் அவனைப் பார்த்தாள்.

திலகன் சோகமாக சிரித்தவன் ‘உன்ரை வாழ்க்கை எப்படியடா போகிறது?” என்றான்.

“என்னத்தைச் சொல்லிறது?” அவன் அலுத்துக் கொண்டான்.

“பரவாயில்லை. நீயும் குடும்பக் காரன் மாதிரி கதைக்கப் பழகி விட்டாய்” என்று சொல்லி மன்னி சிரித்தாள். அண்ணன் வர கொஞ்ச நேரம் இருக்க கதைத்துவிட்டு விடைபெற்றான்.

கடையை மூடி விட்டு கமலம் சமையலில் ஈடுபட்டிருந்தாள். அவள் மூன்று மணிக்கு பின்பே கடையைத் திறப்பாள். அந்த நேரம் கடையில் அவனும் உதவியாய் இருந்து விட்டு வலைக்கு வந்து விடுவான். சில சமயம் வாசிகசாலைப் பக்கம் போய் வருவான். பிறகு நடேசனோடு சிக்கலெடுப்பதிலும் பொத்தல்கள் அடைப்பதிலும் நேரம் சரியாகி விடும்.

சாப்பிட்டபிறகு அவளை அணைத்துக் கொண்டு படுத்தவன் மச்சான் விசயத்தை சொல்ல விரும்பினான்.“கமலம்’ என்றான். இப்ப அவளுக்கு அவன் மேல் வெறுப்பு அவ்வளவாக வரவில்லை.

“மணியை மச்சான் விரும்புகிறான். எப்படி காரியத்தை வெல்லலாம் என்று தான் தெரியவில்லை” என்றான். அவள் சிறிது எழும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். “அவயள் வேற சாதி. ஒத்துக் கொள்ள மாட்டினம்” என்றாள் தயக்கத்துடன். “மன்னியும் எங்கண்ணாவும் வாழவில்லையா?” என்று அவன் கேட்டான்.

‘எப்படி? அவளுக்கும் குழப்பமாக இருந்தது.”உங்க நண்பர்  இயக்கத்தை விட்டு வெளிய‌ வர முடியுமா?” என்று கேட்டாள். அது ‘சந்தேகம்’ எனப்பட்டது. “கேட்டுப் பார்க்க வேணும்” என்றான். அன்டன், நகுலன் கூடவும் கதைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது.

Series Navigationமுதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியதுகாற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *