மனசுக்குள் தப்பாகத்தான் தோன்றியது பூபதி சாருக்கு. அந்தளவுக்கு எரிச்சல் வந்தது என்பதுதான் உண்மை. தன் வயதுக்கு இப்படியெல்லாம் தோன்றலாமா என்றால் தோன்றத்தான் வேண்டும்…ஒரு விஷயத்தின் எல்லாக் கூறுகளையும் நினைத்து ஆராயத்தான் வேண்டும் என்றே எண்ணினார். நடந்தாலும் நடக்கும்…யார் கண்டது? என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். இப்டிக் கேட்பாரில்லாமக் கிடந்தா?எதுவும் நடக்கலாமே! என்ன…ஏது என்று யாரேனும் கண்டு கொண்டால்தானே…?.
அதான் ஒரு பெரிசு இருக்கே…எல்லாத்தையும் கண்காணிக்கிறதுக்கு…! -அப்படித்தானே கிடக்கானுங்க எல்லாரும்…? சரி…சரின்னு இருந்ததுதான் தப்பாப் போச்சு இப்ப…! எல்லாம் அவர் பார்த்துப்பாரு…என்கிற மெத்தனம்.
தினமும் என்னவெல்லாம் நடக்கிறதோ…யார் கண்டது? நடு ராத்திரிக்கு எழுந்து கீழே வந்து நோட்டம் பார்க்க முடியுமா என்ன? யாருக்கும் இல்லாத அக்கறை தனக்கு மட்டும் என்ன வந்தது? கொஞ்ச வயசா தமக்கு? சின்னப் பசங்களே அடிச்சுப் போட்ட மாதிரித் தூங்குறானுங்க… தான் மட்டும் பிசாசு மாதிரி அலைய முடியுமா? அது ஒண்ணுதான் பாக்கி இன்னும்…!
அலையத்தான் வேணும். கண்டு பிடிக்கணும்னா அலைஞ்சிதான் ஆகணும். மனசுதான் தவிக்குதே…! எனக்கு மட்டும் என்ன வந்தது ஆத்திரம்? எல்லாருக்கும்தானே பொறுப்பு இருக்கு? ஏழெட்டு டூ வீலர் நிக்குது. மூணு நாலு கார் நிக்குது…எவனாச்சும், எதையாச்சும் தள்ளிட்டுப் போயிட்டான்னா…? யார் கவலைப்படுறா அதைப்பத்தி? ஒருத்தனும் கண்டுக்கிறதில்லையே..!
அதெல்லாம் ஒண்ணும் போகாது….இவளே சொல்றா…! இத்தனை லைட்டுப் போட்டு வச்சிருக்கு….இம்புட்டு வெளிச்சத்துல வந்து திருடுவானாக்கும்…? அப்படியும் அங்கங்கே இருட்டு ஒளியத்தானே செய்கிறது?சுவர் மறைக்கும் பகுதிக்குள் நின்று செய்தால் எவனுக்குத் தெரியப் போகிறது? அந்த சந்துக்குள் ஆயிரம் தப்புப் பண்ணலாமே? ஃபியூஸான பல்பு மாத்த ஒரு மாமாங்கமா? யாருக்குமே அக்கறையில்லையா? உயரமான ஏணிக்கு எங்க போறது? இருந்தா நானே ஏறி மாட்டிப்புடுவேன்…! வாயெடுத்தா ஒண்ணும் ஆகாதுங்கிறாளே இவ… பிறகு அன்னைக்கு எப்டி ரெண்டு மூணு வண்டில பெட்ரோல் திருடினான்?
அது எதோ நடந்து போச்சு. அதுக்கப்புறம் ஒண்ணுமில்லயே…!
அதனால? விட்டுடலாமா? ஒரு சி.சி.டி.வி. காமிரா வைக்கலாம்னு சொன்னேன்…யாராவது கேட்டாங்களா? ஆள் நடமாட்டம் இருக்கான்னு தெரிஞ்சி போயிடும்ல… ஒரு அறிவிப்பு வச்சா கொஞ்சம் பயம் இருக்குமே!…யாருமே ஒத்துக்கலை…எதுக்குத்தான் யாருதான் வந்து நிக்குறாங்க…? எல்லாரும் எனக்கென்னன்னு இருக்காங்க…அவனவன் சொந்த வேலையைக் கரெக்டாப் பார்க்குறான். நாமதான் மத்த எல்லாத்தையும் கண்காணிக்க வேண்டிர்க்கு…நல்ல தண்ணி, போர் வாட்டர் மோட்டார் போடுறதிலேயிருந்து, தொட்டி நிரம்பிடுச்சான்னு சின்னப்பிள்ளை மாதிரி மேலே மேலேன்னு போய் ஏறி ஏறிப் பார்க்கிறதுவரை…அத்தனையும் நான்தான் செய்திட்டிருக்கேன். மாடிப்படி பெருக்குறது, கார் பார்க்கிங் சுத்தம் பண்றது, ஒட்டடை அடிக்கிறது இப்டி எல்லாமும் வாரா வாரம் நடக்குதான்னு எனக்கு மட்டும்தானா ஆத்திரம்? சரியான கெழட்டு முண்டம்…! கண் கொத்திப் பாம்பா கவனிச்சிட்டிருக்கு…! அன்னைக்குக் கூட அந்தக் கூட்டுற பொம்பள முனகின மாதிரித்தான் இருந்திச்சு…! தண்ணி லாரிக்குச் சொல்லி சம்ப் நிரப்பர வேலை உட்பட. எவனாச்சும் கண்டுக்கிறானா? எப்டியோ வேலை நடக்குதுல்லங்கிற திண்ணக்கம்….இந்த அபார்ட்மென்ட்டுக்கு நான்தான் உறானரரி வாட்ச்மேன்….தானாக் கிடைச்ச பெருமை…!
நீங்களா எதுக்கு செய்றீங்க… எதுக்கு கண்காணிக்கிறீங்க…? வலியச் செய்தா மதிப்பிருக்குமா? சிவனேன்னு இருக்க வேண்டிதானே..? .உங்களை யாரு என்ன சொன்னா? திருட்டுப் போனாப் போகட்டும்…அப்புறம் வருவாங்கல்ல ஐயோ…ஐயோன்னு…பேசாம விடுங்க…-ரஞ்சனி தில்லாகத்தான் பேசுகிறாள். அப்படி இருக்க முடியுமா? என்று இவருக்குத்தான் தோன்றிக்கொண்டேயிருக்கிறது. மனசு கேட்டால்தானே? அப்புறம் ஏன் இந்தப் புலப்பம்? அதையும் இந்த மனசுதான் சொல்கிறது.
அப்பார்ட்மென்ட்டில் வீடு வாங்கினால் இப்படியெல்லாம் பிரச்னை வரும் என்று போகப் போகத்தானே தெரிகிறது? நகரத்துக்குத் தள்ளி மூணு சென்டு இடத்தை வாங்கிப்போட்டு, அதே செலவுக்கு வீட்டையும் கட்டி, சிவனேன்னு இருந்திருக்கலாம்! எவனாச்சும் ஐடியா குடுத்தாத்தானே? எல்லாப் பயல்களும் சுயநலம் பிடிச்சவனுங்க…! வாங்கிட்டு, எப்டித் தவிக்கிறான்னு வேடிக்கை பார்ப்போம்ங்கிற குரூரம்…!
தெனம்…முப்பதும் முப்பதும் அறுபது கி.மீ.என்னை டூ வீலர்ல்ல போகச் சொல்றியா? என்னா டிராஃபிக் தெரியுமா? ஒரு நா என் கூட வந்து பாரு…உயிரக் கைல பிடிச்சிக்கிட்டு அவனவன் போறதையும் வர்றதையும்…சிட்டின்னா அப்டித்தான் இருக்கும்ப்பா…சமாளிச்சிக்க வேண்டிதான்….
அது சரி…சொல்லிட்டு நீ போயிடுவ…கிடந்து படுறது நானில்ல…உங்கம்மா அடுப்படியே சதம்னு கிடப்பா…மத்ததெல்லாம் நானில்ல பார்க்க வேண்டிர்க்கு….வாங்கின டூ வீலர் சீந்துறதுக்கு ஆளில்லாம அநாதையா நிக்குது…என்னைக்கு எவன் தூக்கறானோ…சென்னை டிராஃபிக்ல போகவே பயமாயிருக்கு…வயசான காலத்துல கை கால ஒடைச்சிக்கிட்டு…நொண்டியாத் திரியச் சொல்றியா? எலும்பு சேராதுப்பா….போனா ஒரேயடியாப் போயிடணும்…ஊனமாச்சு….பொழப்பு நாறிப் போயிரும்……அந்த வண்டியையும் நீயே ஓட்டிக்க…கடை கண்ணிக்குப் போகணுமா…நடந்தே போயிட்டு வர்றேன்…காலுக்குப் பயிற்சியும் ஆச்சு…அதத்தான் என்னால செய்ய முடியும்….
பையன் விருப்பத்துக்கு நகர்ப்பகுதிக்குள் அடுக்கக வீடு வாங்கினால்…அதில்தான் எத்தனை பிரச்னைகள்? வாடகைக்குக் குடியிருப்போர் எவரும் வாட்ச்மேன் போட சம்மதிக்கவில்லை. இந்தச் சின்ன அபார்ட்மென்ட்டுக்கு எவ்வளவுதான் மெயின்டனென்ஸ் கொடுக்க முடியும்? இது கேள்வி.
ஏறக்குறைய மீதி ஏழு வீட்டிலும் இருப்பவர்கள் சின்னஞ் சிறிசுகள். ஒரு வீட்டில் மட்டும் ஒரு அம்மாள் தனியே இருக்கிறார்கள். பையன் வெளிநாட்டில் கிடக்க, நான் அங்க வரலை என்கிற பிடிவாதம். வேறு எந்த வீட்டிலும் பெரியவர்கள் என்று ஒருத்தரும் இல்லை. அடுக்ககத்தை விலைக்கு வாங்கியவர்கள் எல்லோரும் வாடகைக்கு விட்டு விட்டு எங்கெங்கோ உட்கார்ந்திருக்கிறார்கள். அவரவர்களே குடியிருந்தால்தானே அக்கறை வரும்? இவரும் அந்தம்மாளும்தான் ஓனர்கள். மற்ற ஆறும் வாடகைதான்.
எல்லாம் ஐ.டி. பீப்பிள்ஸ். எப்பொழுது போகிறார்கள், வருகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது நல்லவேளை மருமகளுக்குப் பகலோடு முடிந்து போகிறது வேலை. இல்லையென்றால் அதற்கும் சேர்ந்து பதற வேண்டும். பதற்றம்தான்…வேறென்ன…இரவு ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் வேலை முடித்து அயர்ந்து வருகையில் அங்கங்கே போலீஸ் செக்கிங்..ஐ.டி. கார்டைக் காண்பித்தாலும்…எங்கே…வாயை ஊது…! என்கிற சோதிப்பு. பைசாத் தேத்தும் இராக் கொள்ளை. திருட்டு பயம், சங்கிலி அறுப்பு….மனிதர்கள் தூங்குவார்களா, மாட்டார்களா என்பதுபோல் அந்த நேரத்திலும் ஓயாத போக்குவரத்து. அதுதான் வசதி என்பதுபோல் நடக்கும் தவறுகள்.
தண்ணியப் போட்டுட்டு, கண்டமேனிக்கு ஓட்டிட்டு வருவானுங்கப்பா..ஊரே கெட்டுக் கெடக்கு…ஒழுக்கமில்லாத ஜனங்களாப் போனாங்க…! .பார்த்து கவனமா வந்து சேரு….-தினமும்தான் சொல்லியனுப்புகிறார். சரிப்பா…சரிப்பா…என்கிறான் அவனும் தன் சமாதானத்துக்கு. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அன்றொரு நாள் வண்டியைப் பிடித்து வைத்துக் கொண்டானே…! ராத்திரி ரெண்டு மணிக்கு எழுந்து பதறி ஓடி…தான் போய்ச் சொன்னதும் எப்படி விட்டான்? தன் முகத்தில் அப்படி என்ன கண்டான்? அப்பாவ பத்திரமாக் கூட்டிப் போப்பா…! என்ற கரிசனம் வேறு…!!
பேய் அலையுற நேரத்துல வீட்டுக்கு வர….வயித்துல சோத்தைக் கொட்ட, படுக்கைல சுருண்டு விழ….காலையில் சூரியன் உதித்ததை ஒரு நாளும் எவனும் பார்த்ததாகச் சரித்திரமில்லை. பதினொன்ணு இல்லன்னா பன்னெண்டு…..அதுக்குக் குறைஞ்சு எவனும் படுக்கையைச் சுருட்டுறதேயில்லை. தூங்குமுஞ்சி மடமா ஆகிப் போச்சு வீடு. இப்படியெல்லாம் இருந்து பார்த்ததே இல்லை. சகிக்க முடியவில்லை அவரால். சுமையாய் வந்து மாட்டிக் கொண்டோமே என்று மனதுக்குள் குமுறிக்கொண்டுதான் இருக்கிறார்.
சின்னஞ்சிறிசுகள்…ரெண்டு பேரும் வேலைக்குப் போறா…எங்களுக்கென்னன்னு விட்டிட்டுப் போகச் சொல்றேளா…? உங்களை இங்க யாரு என்ன பண்றாங்க…? சிவனேன்னு சாப்டுட்டு…சாப்டுட்டு புஸ்தகம் படிச்சிண்டு இருக்க வேண்டிதானே…? ஒரு குழந்தை பெத்துக்கட்டும்…மூணு வயசுக்கு இருந்து வளர்த்துக் கொடுத்திட்டுப் போவோம்… \
அதுக்குள்ளேயும் நான் பரலோகம் போயிடுவேன்…அப்டிப் பிடிச்ச பிடியா இருந்தம்னா ஒரு நாளைக்கு நாமளே அவங்களுக்கு அலுத்துப் போவம்டீ…! அவாளா விலக்குறதுக்கு முன்னாடி நாமளா கழண்டுக்கணும்…அதுதான் புத்திசாலித்தனம்…!
இப்போதைக்கு இவளை ஊருக்கு நகர்த்த முடியாது என்று இவரும் அமுங்கிக் கிடக்கலானார். அறுபது தாண்டிய பொழுதிலும் அடுப்படி வேலையில் சளைத்தாளில்லை. அதுதான் தனக்கான பிடி என்று நினைத்தாளோ என்னவோ? பையனுக்கு அக்கறையாய்ச் செய்து போட்டு, இன்னும் கொஞ்சம்…இன்னும் கொஞ்சம்…என்று எதிரே உட்கார்ந்து கொண்டு அள்ளி அள்ளித் தட்டை நிரப்பி,…காய் நிறைய சாப்பிடு…அதுதான் சத்து…வெறும் அரிசிச் சோற்றில் ஒண்ணுமில்ல…பத்துப் பன்னெண்டு மணி நேரம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்க எனர்ஜி வேண்டாமா? மருமகளுக்கும் சேர்த்துத்தான் சமைத்துக் கொட்டுகிறாள். அன்னலட்சுமி…! அதுதான் எதையுமே கண்டுக்கிறதில்லையே! நம்மளச் சீண்டாம இருந்தாச் சரிங்கிற போக்கு…! அடிப் பாவி…! இந்த அக்கறையை என்னோட காலந்தள்றச்சே…ஒரு நாளைக்காவது காட்டியிருப்பியா? அநியாயம்டீ…..-இவர் வயிரெறிய…உங்களுக்கு நான் செய்து போட்டதேயில்ல…வெறுஞ்சட்டியத் தூக்கி வச்சனா…இப்டியெல்லாம் பேசாதீங்கோ…எல்லாத்தையும் பகவான் பார்த்துண்டிருக்காராக்கும்… நன்னாக் கொடுப்பார்…..என்று சபிப்பாள். பொத்துக்கொண்டு வரும் கோபம். மருமகள் முன்னால் சொல்லிக் காண்பித்தால் மதிப்பென்னாவது?
லீவு நாளா…கேட்கவே வேண்டாம்…பகல் ஒண்ணு…ரெண்டுன்னு அடைச்ச கதவு எப்பத் திறக்கும்னு வெளிலயே கெடக்க வேண்டிதான். ஒர்க்கிங் டேஸ்ல எதையுமே திட்டமாச் சொல்றதுக்கில்லே. டிபன் சாப்பிடுவானா….டேரக்டா சாப்பாடா…? இங்கயே சாப்டுட்டுப் போவானா இல்ல ஆபீசுக்குக் கொண்டு போவானா…அதுவும் இல்ல…ஆபீஸ்லயே சாப்டுப்பானா? அந்தத் தாயார் பாடு பெரும் திண்டாட்டம்….! ப்ராஜெக்ட் முடிக்கணும்…டயத்துக்கு முடிச்சாகணும்..இல்லன்னா பிரச்னை…!.எப்பப் பார்த்தாலும் இந்த நாம ஜெபம்…
இதுல மருமக வேறு வந்துட்டாளா கேட்கவே வேண்டாம்…ரெண்டு பேருக்கும் சமைச்சுக் கொட்டுற கடமை அவன் தாயாருக்குத்தான். ஜென்மாந்திரக் கடன். அது துரும்ப நகத்தாது…ஏன்னா வேலை பார்க்குதாம்…சமையல் கலை தெரிஞ்சாத்தானே…! அப்பன்காரன் ஓட்டலுக்கா கூட்டிப் போய் பழக்கியிருந்தான்னா? ஒரு ரசம், குழம்பு கூட வைக்கத் தெரியாதுய்யா…! நாளைக்கு இன்னொரு வீட்டுக்குப் போயி வாழப் போற பொண்ணுன்னு எந்தத் தகப்பன் தம் பொண்ணைப் பொறுப்பா வளர்த்திருக்கான்? பொம்பளப் பிள்ளைங்க இத்தனை சோம்பேறியாவா இருக்கும்?தடி முண்டம் மாதிரி…? இதுகளுக்கெல்லாம் எவன் வேலை கொடுத்தான்? தின்னுப்புட்டு, தின்னுப்புட்டு அததுங்க இஷ்டத்துக்கு அலையுதுங்க…படிச்சிருக்கு…வேலை பார்க்குதுங்க…கைல காசு…வாயில தோசைன்னு வீட்டுல இருந்தமேனிக்கே…டிபனுக்கு ஆர்டர் பண்ணுதுங்க… கன்னா பின்னான்னு சார்ஜ் பண்றான்…அதப்பத்தி யாருக்கு என்ன கவலை…?வீட்டு வாசல்ல பெல் அடிச்சுத் திறந்து தீனி வாங்கறதுல அப்படியொரு அசட்டுப் பெருமை…! அதான் துட்டு வருதுல்ல…. மத்ததெல்லாம் பெறகு பார்த்துக்குவோம்ங்கிற திமிரு….
முன்ன மாதிரியா ஐ.டி.ல இப்பவும் சம்பளம் தர்றான்? அவனும் அளந்து கொடுக்கப் பழகியாச்சு….இதுக அத உணர்ந்து அளந்து செலவு செய்துகளா? கிடையாது. என்னவோ கனவு உலகத்துல சஞ்சரிக்கிற மாதிரி நெனப்பு…எல்லாம் இந்தச் சினிமாவும், டி.வி.யும் பண்ற வேல….தலைமுறையவேல்ல கெடுக்கிறாங்க…வேணுங்கிறது…வேண்டாததுன்னு கண்டது கழியத வாங்கிப் போட வேண்டிது…அத்தனையும் உபயோகமில்லாம இடத்த நிறைச்சிக்கிட்டு சும்மாக் கிடக்கும். காசுக்குப் பிடிச்ச கேடு…..எவன் சொல்லிக் கேட்குறான்? எல்லாம் பட்டுத் திருந்துற கேசுக…!
இப்பத் தெரியாதப்பூ……நாற்பதுக்குமேலே முதுகு வலியெடுக்க ஆரம்பிக்கும்போதுதான் புத்தி வேலை செய்யும்….பென்ஷனா கொடுக்கிறான்…நாளைக்கு உட்கார்ந்து சாப்பிடுறதுக்கு….வேலையே நிரந்தரமில்ல….பதினைஞ்சு வருஷம் சர்வீஸ் போட்ட மானேஜர் ரேங்க்ல இருக்கிறவனையே சர்வ சாதாரணமா வெளியேத்தறான்…காலைல ஆபீஸ் போனா காரிடார்ல ஒக்காருங்கிறான்….அப்டியே ஒரு பேப்பரக் கைல கொடுத்து வெளில அனுப்பிச்சிடறான்….கேவலப்பட்ட பொழப்பு….
காசைச் சேமிங்கடான்னா எரிச்சல்ல படுறாங்ஞ…இந்தாளுக்கு வேறே வேலையில்லேன்னு நம்மளக் கிண்டலடிக்கிறாங்ஞ…..சேமிப்புன்னா என்னன்னு தெரியுமா முதல்ல…? நீதான் சொல்லேம்ப்பா….ங்கிறான் அலட்சியமா. செலவழிச்சது போக மிஞ்சிறதை சேமிக்கிறதில்லப்பூ… மாசா மாசம் சேமிப்புக்குன்னு முதல் வேலையா தனியா எடுத்து வச்சிட்டு, மீதியைச் செலவழிக்கிறதுக்குப் பேருதான் சேமிப்பாக்கும்….இதப் புரிஞ்சி நடந்துக்கிட்டா பின்னாடி சௌகரியமா, சந்தோஷமா இருக்கலாம். இல்லன்னா…பீட்ஸாவையும், பர்க்கரையும் கடிச்சு இழுத்து தின்னு முழுங்கிட்டு, வயித்தையும், உடம்பையும் கெடுத்துக்கிட்டு…பின்னாடி இடுப்பு வலி, முதுகு வலின்னு அவஸ்தைப்பட வேண்டிதான்….அப்பன் ஆத்தா போயாச்சுன்னா ஒரு ஆறுதலுக்குக் கூடக் கேட்க ஆளில்லாம…நாதியில்லாம, தொட்டதுக்கெல்லாம் ஆஸ்பத்திரி தாண்டியோவ்….உருவி உருவிக் கொடுத்திட்டு கடைசில நொட்டா போட வேண்டிதான்…
என்ன பொழைப்பு இது? அலுத்துப் போய் எத்தனையோ முறை டென்ஷன் ஆகி ஓய்ந்து விட்டார் இவரும். என்னடா….நீங்களும் உங்க உத்தியோகமும்…? தூங்குறதுக்காகத் திங்கிறீங்க….திங்கிறதுக்காகஎழுந்திரிக்கிறீங்க..திரும்பத்திங்கிறீங்க….திங்க…தூங்க…பேள…..வேறென்ன செய்றீங்க…?
எரிச்சலில் ஒரு நாள் அசிங்க அசிங்கமாய் வந்து விட்டது வாயில். மருமகளும்தான் கேட்டுத் தொலைத்தது. அதைச் சொன்ன பிறகுதான் மனசு அடங்கியது. அப்பாடீ…ரொம்ப நாளா தவதாயப் பட்டுட்டிருந்த மனசு…இப்பத்தான் ஆறிச்சு….!! வயசானாலே கொஞ்சம் ஒரு மாதிரிதான் வருமோ? அதுதான் அவங்களுக்கான சுதந்திரமா? பேசறதையும் பேசிப்புட்டு இந்த நெனப்பு வேறையா?
தற்செயலாய்க் கீழே வர…. குழாயில் தண்ணீர் விழும் சத்தம். யார் பிடிக்கிறார்கள் என்று பார்க்கப் போக அந்த அதிர்ச்சி…! ஏன்யா…என்னா நினைச்சிட்டிருக்கீங்க…இதென்ன சத்திரமா…சாவடியா…? ஆளாளுக்கு வர்றதும், கை..கால் கழுவுறதும், மூஞ்சி அலம்புறதும்….ஏன் உங்க பில்டர் உங்களுக்குத் தண்ணீர் வாங்கி வைக்க மாட்டாரா…? அதெப்படி எதிர் அபார்ட்மென்ட்ல வந்து, யார்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்காம, நீங்கபாட்டுக்கு தண்ணீர யூஸ் பண்றீங்க…? காசுய்யா…அத்தனையும் காசு…பார்க்குறீங்கல்ல…மெட்ரோ லாரி வந்து இறக்கிட்டுப் போறத? அப்புறம் யாரக் கேட்டு இப்டிச் செய்றீங்க…? – வந்த கோபத்தில் படபடவென்று பொரிய ஆரம்பித்து விட்டார் பூபதி. அதே சமயம் ஓரத்தில் இருந்த கக்கூஸிலிருந்து ஒரு ஆள் வெளிப்பட்டான். கோபம் கனலாய்த் தெறிக்க ஆரம்பித்து விட்டது இவருக்கு.
அடப் பாவிங்களா…!…இதென்ன பப்ளிக் லெட்ரீன்னு நினைச்சீங்களா? என்ன தைரியம்யா உங்களுக்கு?
எதிர்த்தாற்போல் நடக்கும் கட்டிட வேலைத் தொழிலாளர்கள் இங்கு வந்து கழுவுவதாவது? யார் கொடுத்தார்கள் இந்த அனுமதியை? இதென்ன அநியாயமாயிருக்கு…..கட்டு மீறிப் போய் நடக்கிறதே…!
ஸாரி சார்…ஸாரி சார்…இனிமே வரமாட்டோம்….சொல்லிட்டீங்கல்ல…..இனி ஆள் வராது ஸார்….
என்னத்தைய்யா ஸாரி….ஸாரியாவது பூரியாவது? அப்போ…இத்தனை நாள் இங்கதான் எல்லாமும் நடந்திட்டிருந்துதா? மனசாட்சி இருக்காய்யா உங்களுக்கு? உங்க பில்டிங்ல நாலு பேர் வந்து இப்டிச் செய்தா அலவ் பண்ணுவீங்களா? ஏதோ மத்தியானம் கார் பார்க்கிங்ல உட்கார்ந்து சாப்பிடுறீங்களே… போகட்டும்னு விட்டா. அந்த எடத்தையாவது சுத்தம் பண்றீங்களா? ஒண்ணும் சொல்லலீன்னா எதுவேணாலும் செய்வீங்களா? எடத்தக் குடுத்தா .மடத்தப் பிடிக்கிறீங்களே…இது நியாயமா? லாரி ஒரு லோடு ஆயிரத்தி எழுநூறு ரூபா…தெரியுமா? அஞ்சு நாளைக்குத்தான் வரும்…கொஞ்சம் நினைச்சுப் பாருங்க….கவனிக்க ஆளில்லேன்னா என்ன வேணாலும் செய்வீங்களா….? உங்களுக்கு வெளிக்கிருக்கிறதுக்கு இந்த அபார்ட்மென்ட் கக்கூஸ்தான் கிடைச்சிதா? இனி ஒரு பய இந்தப் பக்கம் வரக்கூடாதாக்கும். மத்தியானம் சாப்பிட எவனும் நுழையக் கூடாது…? யாராச்சும் நுழைஞ்சீங்க…அப்புறம் போலீசுக்குப் போயிடுவேன் நான்…ஞாபகமிருக்கட்டும். கோபம் தலைக்கேறிவிட்டது.
ஏக வசனத்தில் பொரிந்து தள்ளினார் பூபதி. அவர் வயசு எல்லாவற்றையும் அனுமதித்தது. எதிராளி வாயை அடைத்தது. இனிப் பொறுப்பதற்கில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தார். வீட்டுக்குள் போய் ஃபோனை எடுத்தார். வாட்ஸ்அப் குரூப்பில் தட்டத் தொடங்கினார். நடந்தவைகளையெல்லாம் விலாவாரியாகத் தெரிவித்தும், வாட்ச்மேனின் உடனடி அவசியத்தை எடுத்துரைத்தார்.
ஒரு ரெஸ்பான்ஸ் இல்லை. ..யாரும் அசைவதாய்க் காணோம்.. பன்னென்டாயிரம், பதினைஞ்சாயிரம் என்று சம்பளம் கொடுத்து ஆள் போட ஒருத்தனும் தயாராயில்லை. ஏற்கனவே மெயின்டனன்ஸ் சார்ஜ் ஜாஸ்தி…இதுல இதுவும் சேர்ந்திச்சின்னா தாங்க முடியாது எங்களால. இதென்ன அம்பது நூறு வீடு இருக்கிற பெரிய அபார்ட்மென்டா? வெறும் எட்டே எட்டு வீடு. இதுக்கு செக்யூரிட்டி ஒரு கேடு…!. ஒரே குரலாய் ஒலித்தது எதிர்ப்பு. வெட்டிச் செலவு ஆயிரம் பண்ணுவோம். ஆனா இதுக்குத் தர மாட்டோம்…!
அடடா…என்னே உறுதி?
இன்னும் அவன் வந்து என்ன கொட்டமடிப்பானோ? வரும் ஆள் நல்ல ஆளாய் இருந்தால்தான் போச்சு…தண்ணி பார்ட்டியா இருந்தா பிரச்னை…விபரீதங்கள் வந்த பிறகுதான் தெரியுது…முன்னாலயே புரிஞ்சிக்க முடியலை…ஆகையினால யோசிச்சு நிதானமா செய்யலாம்…. – பதில் வந்தது இப்படி…
வாரா வாரம் சினிமா, ஓட்டல்னு எம்புட்டு வேணாலும் வாரி இறைப்போம்…அது எங்க உரிமை…ஆனா இப்டியெல்லாம் காச வேஸ்ட் பண்ண முடியாது…! எத்தனை தெளிவு…! மெச்சத்தான் வேணும் இவங்களை…! எட்டு கிரகங்களும் எப்போ ஒண்ணா சேர்றது…என்னிக்குப் பேசறது…? இது நடக்கிற காரியமில்லே….என்று தோன்றியது பூபதிக்கு. ஆளில்லேன்னா எதுவும் நடக்கும் என்று அசிங்கமாய் நினைத்ததையும் சொல்லித்தான் பார்த்தார். யாரும் மசியவில்லை.
அப்டியெல்லாம் நடக்காதுங்க…சார்…நீங்க ரொம்பத்தான் கற்பனை பண்ணிக்கிறீங்க…அடுத்தடுத்து நாங்கதான் ட்யூட்டி முடிச்சு வரிசையா வந்திட்டேயிருக்கமே…அப்டி எதுவும் நடந்தா எங்க கண்ணுல படாமயா போயிடும்…பட்னு போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்திட மாட்டோம்? வார்த்தைகளெல்லாம் வீச்சும் விறைப்புமாகத்தான் வந்தது. சின்னச் சின்னக் கண்காணிப்பு வேலைகளையே கவனிக்கத் தவறும் இவர்கள் இப்படி வாய் கிழியப் பேசுவது வெற்று ஜாலம் இல்லாமல் வேறென்ன?
தாக்காட்டி எதுவும் நடக்கவிடாமல் பண்ணுவதிலேயே குறியாய் இருப்பதை உணர்ந்து கொண்டார் பூபதி. அவர் மனம் ஒரு முடிவுக்கு வந்திருந்தது.
ரெண்டு நாள் பொறுத்து தீர்மானமாய் ஒன்று பண்ணினார். எத்தனையோ செய்றேன். இதையும் சேர்த்துப் பார்த்திட்டுப் போறேன். குறைஞ்சா போறேன். எல்லாம் நம்ம பிள்ளைங்கதானே…! அவர் பரந்த மனம் இப்படிச் சொல்லியது.
வீட்டு வேலைக்கு வரும் வேலைக்காரம்மாளைக் கீழே அழைத்து வந்து வாட்ச்மேனுக்கு என்று கட்டியிருந்த அந்த அறையைத் திறந்து விட்டு, கூட்டிப் பெருக்கி, மெழுகிச் சுத்தம் செய்யச் சொன்னார். சுற்றிலும் மாக்கோலம் இடச் செய்தார். ரெண்டு சாமி படங்களை அங்கு கொண்டு வந்து மாட்டி மாலை போட்டு, சாம்பிராணி போட்டு, தேங்காய் பழம் பத்தி ஏற்றி வைத்துக் கும்பிட்டார். ஒரு எலெக்ட்ரீஷியனை வரச் சொல்லி…வீட்டில் எக்ஸ்ட்ராவாக இருந்த ஃபேனைக் கொண்டு வந்து மேலே மாட்டச் செய்தார். மனைவியைக் கொண்டு அறை வாசலில் கோலமிடச் செய்தார்.
மாலை இருள் கவிந்த பொழுதினில் பளிச்சென்று விளக்கை எரியப் பண்ணினார். திறப்பு விழாப் செய்ததில் ஜெகச்ஜோதியாய்ப் பளீரிட்டது அந்த இடம். அறைக்குள் வெளிச்சம்…ஆள் இருக்கு கவனிக்க…!
ராத்திரி பத்து மணிக்கு மேல் விடு விடுவென்று கீழே இறங்கியவர், அந்த அறைக்குள் நுழைந்து நடு நாயகமாய்ப் படுக்கையை விரித்தார்.
ஈஸ்வரா….என்று ஜபித்துக் கொண்டே நீட்டி நிமிர்ந்து விட்டார். ஏஸி போட்டது போல் என்னமா ஒரு குளிர்ச்சி…அபாரம்…!
இரவு பன்னிரெண்டு, ஒண்ணு என்று அடுத்தடுத்து ஆபீஸ் வேலை முடித்து வீடு திரும்பிய ஐ.டி. கனவான்களான இளைஞர்கள், ரூம் திறந்திருக்கே…? புதுசா யாரு படுத்திருக்கிறது? என்று ஐயத்தோடு நெருங்கி ஊன்றிப் பார்த்து, எவரென்று கண்டு கொண்ட பாவனையில் தயக்கத்தோடு படியேறினார்கள். இதென்ன திடீர்னு இப்டி?
மேலேறிச் செல்லும் அவர்களை விழி திறந்து கண்காணித்துக் கொண்டுதான் இருந்தார் பூபதி. காவலன் காவான் எனின் என்னாவது? மனசாட்சி உண்டே இந்த மானிடனுக்கு…!
மறுநாள் அந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் அவர்கள் சொன்னார்கள். ….
சார்…ஒரு வாட்ச்மேனை உடனடியா அப்பாய்ன்ட் பண்ணிருவோம்….உங்களுக்கு ஏன் சார் இந்த வேலையெல்லாம்…? கொல்றீங்களே சார் எங்கள….! பரிதாபமாய்க் கேட்டார்கள்.
இப்பத்தான் புத்தி வந்திச்சா? தன் மீது இத்தனை மதிப்பா? ஒருத்தர் மூஞ்சியிலும் களையில்லையே!. பெருமையாய் நினைக்கத் தலைப்பட்டார். கண்கள் கலங்கிப் போனது அவருக்கு.
ம்ம்…அதுதான் சரி….இல்லன்னா…கேட்பாரில்லாத இந்த இடத்துல.. எதுவும் நடக்குமாக்கும்…..ராத்திரில…அந்தத் தப்பும்கூட நடந்து போகும். நான் சொல்றது புரியுதா? இந்த அபார்ட்மென்ட்டோட பெயர் கெட்டுடும்.. நம்ப எல்லாரோட கௌரவம் பாதிக்கப்படும்….நான் சொன்னதோட தாத்பர்யம் புரிஞ்சிதா இப்போ….? என்றார் மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் ராமச்சந்திர பூபதி.
ஓ.கே…ஓ.கே.. நீங்க சொன்னாச் சரிதான் சார்.. நோ .அப்ஜெக் ஷன்…. ஒரு சேர ஆமோதித்தார்கள் எல்லோரும். ! ————————————————-
(ushaadeepan@gmail.com)
- இரண்டு அடி கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்.
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !
- மன்னா மனிசரைப் பாடாதீர்
- புத்தகச் சலுகையும். இலவசமும்
- சர்வதேச கவிதைப் போட்டி
- எனது அடுத்த புதினம் இயக்கி
- முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது
- வெகுண்ட உள்ளங்கள் – 11
- காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020)
- கந்தசாமி கந்தசாமிதான்…
- ஸ்ரீமான் பூபதி
- கலையாத தூக்கம் வேண்டும்
- தொலைந்து போனாரோ சா.கந்தசாமி?
- கையெழுத்து
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -5
- ஆசைப்படுவோம்