எஸ். சங்கரநாராயணன்
இரவு பூராவும் தையல் மிஷின் கடகடத்துக் கொண்டிருந்தது. அறிவொளிக்குத் தூங்க முடியவில்லை. எதோ கட்சியாம். ஆர்ப்பாட்டமாம். அதற்கு அவசரமாகக் கொடி தயாரிப்பு. மணவாளன் டெய்லர். ஒரு கட்சியில் இருந்து எப்பவும் அவருக்கு இப்படி அவசர ஆர்டர் வரும். அதேபோல மூங்கில்தொட்டி வியாபாரிக்கும், சின்ன மூங்கில் குச்சிகள் கேட்டிருப்பார்கள். விலைக்கு வாங்கிப்போய் பயன்படுத்திவிட்டு திரும்பக் கொடுத்தால் பாதி விலைக்கு கடையிலேயே எடுத்துக் கொள்வார்கள்.
நாலைந்து நாளாகவே ஊரில் ஒரு இறுக்கம் வந்திருந்தது. யாரோ இந்துக் கடவுளை இழிவாக எதோ பேசி விட்டார்களாம். அது அடிக்கடி நடப்பது தான். ஆனால் இந்த முறை அதற்கு எதிர்ப்பு பெரிசாகி விட்டது போல. போராட்டம் என அவர்கள் முதல் அடி எடுத்து வைக்க, இது அதற்கு எதிரடி. பேச்சுரிமை வேண்டும், கருத்து சுதந்திரம் வேண்டும்… என்று நாளை போராட்டம். நல்ல பேச்சுரிமை போங்க, என நினைத்துக் கொண்டார் மணவாளன். பிடிக்காவிட்டாலும் அவர்களது ஆர்ப்பாட்ம் அவருக்கு வேலை தந்தது. மோசமான மாணவன் ஆசிரியரிடமே டியூஷன் படிப்பது இல்லையா, அதைப்போல. நஷ்டமா லாபமா, என்று இதைத் தனியே பிரித்தறிய முடியாது. ஆர்ப்பாட்டம் என்றால் கோஷம் உண்டு. கூடவே கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அதை எல்லா டிவி சேனலும் காட்ட வேண்டும். டிவிக்காரன் வரும்வரை போராட அவர்கள் காத்திருப்பார்கள்.
100 கொடிகள் தேவை என்று எதிர்பார்த்தார்கள். அதுவே அதிகம். இப்படி எதிர்ப்புக் கூட்டங்களுக்கு அதிகம் பேர் வருவது இல்லை. கையில் காசு தந்து பிரியாணி, பானம்… என்று கவனித்தாலும் வருவது இல்லை. அதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லா கட்சியின் எல்லாப் போராட்டங்கிளிலும் இடம் பெறுவார்கள். கூலிக்கு மாரடிக்கும் கிராமத்துப் பெண்கள் போல. சாக்கடை நதிக் கரையில், நாகரிகம் அற்றவர்கள். ஆனால் தொழில் சுத்தமானவர்கள். இவர்களை அமர்த்த ஏஜன்ட்டுகள் இருக்கிறார்கள். “நீங்க கோஷம் போடுங்க. அடுத்து நாங்க வாழ்க சொல்லணுமா, ஒழிக சொல்லணுமா கரீட்டா சொல்லிருங்க. முதல்ல வாழ்க. அடுத்து ஒழிக – அவ்ளதானே?” என சிறு முன் தயாரிப்புகள். சுவர்களில் பெரிய பெரிய அரசியல் எழுத்துகள் எழுத நோட்டிஸ் ஒட்ட என அது ஒரு தனி உலகம். எப்பவும் எதாவது வேலை அவர்களுக்குக் கிடைத்தபடியே இருந்தது. ஒரு கருத்து, அதை எதிர்த்து இன்னொரு நோட்டிஸ்… என அவர்களே இரண்டு நோட்டிஸ்களையும் ஒட்டினார்கள். அப்படி அரசியல் வேலை இல்லாத நாட்களில் கம்யூட்டர் சி பிளஸ் பிளஸ் கோர்ஸ், சோதிட வகுப்புகள், மூலம் பவுத்திர சிகிச்சை என நோட்டிஸ்கள் ஒட்ட ஆள் தேவைப்பட்டார்கள்.
தெரு இங்கிருந்தே தெரிந்தது. செம்மலை வருகிறார். நம்ம வீட்டை நோக்கித்தான், என மணவாளன் யூகித்தார். தவிர இந்தப் பக்கம் அவருக்கு வேறு வேலை என்ன இருக்க முடியும்? கடவுளே, என மனதில் பிரார்த்தனை செய்தார் அப்பா. பத்து நாளாய் சரியான வேலை அமையாததில் இப்போது செம்மலை அவருக்கான வேலை கொடுக்க வரலாம். அவர் கையைப் பார்த்தார். துணி பண்டல் இருந்தது. ஆக அது வேலைதான். “அறிவு, கதவைத் தொறந்து வையி, ஆர்டர் வருது,” என்றார் அப்பா.
முதல் அடி ஆன்மிகவாதிகள் எடுத்து வைத்ததே அப்பாவுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. பொதுவாக ஆன்மிகவாதிகள் இப்படியெல்லாம் தெருவில் இறங்குவது, ஆவேசப்படுவது இல்லை. ஒதுங்கி விடுவார்கள். ஆன்மிகப் பயணம் என்பதே மன அமைதியை நோக்கிய பயணம். இப்ப அவர்களே இறங்கி விட்டார்கள் என்றால், அடுத்து இவர்களும் இறங்குவார்கள் என அப்பா அறிந்திருந்தார். அவருக்கு அது மகிழ்ச்சி யளித்திருக்கலாம், என நினைத்துக் கொண்டான் அறிவொளி. அவனுக்குப் பெயர் வைத்ததே ஒரு கட்சித் தலைவர்தான். அந்தப் பெயர் அவன் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கும் பிடிக்கவில்லை. என்றாலும் இனி மாற்ற முடியாது.
தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அவர்களுக்கு இப்படி விடிய விடிய வேலை இருக்கும். அன்றைக்கு இராத்திரி தூங்க முடியாது. கடகடவென்று மிஷின் ஓடும் நாராச ஓசை. அது இன்பமாய் இருக்கும். முதுகுவலி என்று வளைந்த முதுகை அடிக்கடி நிமிர்த்திக் கொள்வார் மணவாளன். வாழ்க்கையை நிமிர்த்திக் கொள்வதைப் போல. மற்ற சாதாரண நாட்களில் பழைய துணிகளைச் சரி செய்ய என்றே வேலை ஓடும். கைலி மூட்ட என்று வருவார்கள். பெண் வளர்ந்து விட்டாள் என்று பாவாடை ‘டக்கு’ பிரிக்க வருவார்கள். தையல் விட்ட கிழிசல்கள், ஹெம்மிங் விட்ட துணிகள்… என உதிரி வேலைகள் தான் அமையும். வேலைக்காரிகள் தங்கள் வேலை செய்யும் வீட்டில் இருந்து கிடைத்த பழைய துணிகளை தாங்கள் அணிய ஆல்டர் செய்ய என்று கொண்டு வருவார்கள். எல்லாம் சில்லரை வேலைகள். இரண்டு வேளை சாப்பாடு கிடைத்தால் அதிகம். பிள்ளை அரசாங்கப் பள்ளியில் படிக்கிறான். அதுவும் மதியம் அங்கே சோறு அவனுக்கு என்பது நல்ல விஷயமாய் இருந்தது. படிப்பு எப்படியோ, மனுசாளுக்குச் சோறு முக்கியம். முதியோர் கல்வி என்று ஆரம்பித்து அவர்களுக்கும் கூட அரசாங்கம் சோறு போடலாம்.
இரவு எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது. ஒரு பத்திருபது கொடி தைக்குமுன்னே அப்பாவுக்கு கால் மரத்து விடும். திரும்ப மிஷினில் இருந்து எழுந்துகொள்ள முடியாமல் கால் பஞ்சு போல் லேசாகி புடலங்காயாய்த் துவளும். ஒல்லியான அப்பா. அவர் கையில் கொடி வைத்திருந்தால் அவரே கொடிக் கம்பம் போலத்தான் இருந்தார்.
கடவுள் மறுப்பு பொதுக் கூட்டங்களுக்கு அப்பாவுடன் அவன் போயிருக்கிறான்.
“அப்பா?”
“என்னடா?”
“இறைவணக்கம் இல்லையாப்பா?” என்று கேட்டான் அறிவொளி.
அப்படி ஒரு கூட்டத்தில் தான் அப்பா குழந்தையாய் அவனைக் கொண்டுபோய் யாரோ தலைவரை அவனுக்குப் பெயர் சூட்டச் சொல்லியிருந்தார். என்னென்னவோ அவர்கள் பேசினார்கள். கொஞ்சம் மூர்க்கத்தனமாகவும் ஆவேசமாகவும் பேசினார்கள். யாரையோ கேவலப் படுத்தும் ஆத்திரம் இருந்தது அவர்கள் பேச்சில். எதற்கு அத்தனை ஆத்திரம் தெரியவில்லை. கூட்டத்துக்கு வந்தவர்களும் பேச்சாளர்களும் ஒருமாதிரி மந்திரித்து விட்டாப் போல, சாமி வந்த மாதிரி இருந்தது அவர்களைப் பார்க்க. அப்பா கூட்டம் முடிய காத்திருந்து அவர்களிடம் தையல்கூலி வாங்கி வருவார். அவர்களுக்கும் கடைசிவரை அவரை கூட்டத்தில் இருக்க வைத்த திருப்தி.
அவன் படிக்கும் அரசு பள்ளிக்கூடத்தில் தமிழய்யா வேதமூர்த்தி. நெற்றி நிறைய பட்டையாய்த் திருநீறு பூசி வெளுத்த உடைகளுடன் வருவார். ஒரேயொரு திருக்குறளை வைத்துக்கொண்டு ஒரு முழுப் பாடநேரமும் பேசுவார். நாற்பத்தியைந்து நிமிடங்கள். சிரிக்கச் சிரிக்கப் பாடம் நடத்துவார் அவர். (“ராமன் ஏக பத்தினி விரதன்னால் ஒரு அர்த்தம். ஏ…க பத்தினி விரதன்… அப்டின்னா வேற அர்த்தம்.”) மற்ற பாடங்களை விட தமிழ்ப்பாடம் அவனுக்குப் பிடித்தது. அவர் சொல்லி நிறையத் திருக்குறள் அவனுக்கு மனப்பாடம். தமிழில் முதல் எழுத்து அ. கடைசி எழுத்து ன். திருக்குறள் அ-வில் ஆரம்பித்து ன்-னில் முடிகிறது.
அவனது சகா என்று பள்ளிக்கூடத்தில் மோகன். நல்ல பையன். மோகனின் அப்பா முருகன் கோவில் பக்கத்தில் ஒரு கடை வைத்திருந்தார். சீசனுக்குத் தக்கபடி அங்கே காவி நீலம் கருப்பு வேஷ்டிகள், அங்கவஸ்திரம், துண்டு… எல்லாம் வாங்கிப் போட்டார் அவர். அதன் அருகிலேயே ஒரு காபிக் கடை இருந்தது. நிறையப் பேர் அங்கே காபி சாப்பிட வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். மோகனின் அப்பாவிடம் எதுவும் வாங்காவிட்டாலும் நின்று நாலு வார்த்தை பேசிவிட்டுப் போனார்கள் எல்லாரும். தமிழ் பேசும் ஓனரின் காபி கடை, என்றாலும் உடுப்பி ஓட்டல் என்று ஏன் முதலாளி பேர் எழுத வேண்டும் அவனுக்குத் தெரியவில்லை. பித்தளை வட்டக் கப்பில் காபி, என அதற்கு ஒரு நேர்த்தி இருந்தது. அதை வாங்கிக் குடிப்பது ஓர் அடையாளம் ஆக்கப் பட்டிருந்தது. வெகு தொலைவில் இருந்தெல்லாம் சனங்கள் காபி சாப்பிட என்றே வந்து போனார்கள்.
எப்பவாவது அறிவொளி மோகனுடன் அவன் அப்பாவின் கடைப்பக்கமாகப் போக நேர்ந்தால் அந்தக் காபியை வாங்கிக் குடிக்க ஆசை வரும். மோகன் காசு வைத்திருப்பான். மோகனின் அப்பாவிடம் சரளமாகப் பணம் புழங்கியது. எப்போதும் அவர்கள் கடையில் கூட்டம் இருந்தது. வாடிக்கையாளர் கேட்கும் புத்தகமோ, சாமானோ, கடையில் இல்லாவிட்டாலும் அவர் வரவழைத்துத் தருகிறவராக இருந்தார். எந்த வாடிக்கையாளரையும் அவர் பொருள் எதுவும் வாங்காமல் அனுப்பியதே இல்லை. உடுப்பி ஓட்டல் மொட்டை மாடியில் பத்து நாற்பது நாற்காலிகள் போட்டு கூட்டங்களும் நடந்தன. மாடியில் ஒரு ஓரமான அறையில் யாராவது ஆன்மிகப் பெரியவர் வந்தால் தங்கிப் போனார்கள். அதுவும் நவராத்திரி போன்ற வைபவ நாட்களின் கொண்டாட்டம் அமோகமானது. பட்டுப்பாவாடை அணிந்து தலைநிறையப் பூ வைத்துக்கொண்டு இளம் பெண்கள் சங்கீதம் பாடினார்கள். கேட்க மாத்திரம் அல்ல, பார்க்கவே அழகாக இருந்தது. மோகனுக்குக் கைச் செலவுக்கு என்று எப்பவும் அவன்அப்பா சிறு அளவில் காசு தந்தார். அவனும் அறிவொளியும் உடுப்பி ஓட்டலில் ஒரு காபி வாங்கி ஆளுக்குப் பாதி சாப்பிடுவார்கள். அதில் ஒரு திருப்தி இருந்தது இருவருக்கும்.
எப்பவாவது மோகன் அவர்கள் வீட்டுக்கு வருவான். அம்மா இல்லாமல் வளர்கிற பிள்ளை என்று அறிவொளி மேல் அவனுக்குக் கரிசனம் உண்டு. சின்னச் சின்ன அறைகளுடன் சிறிய வீடு. தலையைக் குனிந்து உள்ளே வருவான் மோகன். இருமியபடி அவனை மணவாளன், வாப்பா… என்று சொல்ல நினைத்து தலையாட்டி வரவேற்பார். அப்பா சௌக்கியமா, என்று கேட்பார். அவரிடம் அதற்குமேல் கேள்விகள் இல்லை.
போராட்டம் ஒருபுறம் இருந்தாலும், போராட்டம் நடத்த அரசு அனுமதி தந்தது பெரிய பிரச்னையாகக் கிளம்பியது. இது யாருக்கான அரசு, என்று ஆங்காங்கே அதிருப்தி கிளம்பினாற் போலிருந்தது. இது நல்லதா தெரியவில்லை. எந்தப் பிரச்னையும் சட்டென படம் எடுத்து காற்றில் மரம் போல சிறிது தலைவிரித்து ஆடிவிட்டு பின் அடங்குகிறது. தாங்கள் போராட்டம் நடத்த அனுமதி தராவிட்டால் தவறு, என்றும் எதிர்த்தரப்பு போராட்டம் நடத்த அனுமதி தந்தால் தவறு என்றும் புகை கிளம்பியது. இதுகுறித்து பொதுவாக அரசாங்கத்திடம் யோசனை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மணவாளனைப் பொறுத்தமட்டில் பிரச்னை பெரிசாகாத வரை எதையும் அரசு கண்டுகொள்ளாது. பெரிசானால் எது சரி எது தவறு என்பது அல்ல, பிரச்னையை எப்படி அடக்கி அமைதியைத் திரும்பக் கொண்டுவருவது, அதுவே அரசின் யோசனையாய் இருக்கிறது.
நூறு என்பதாக நினைத்து தந்த துணியில் 104 கொடிகள் வந்தன. மிஷின் அடுப்பு போல உஷ்ணப் பட்டிருந்தது. அனைத்தையும் தைத்து முடித்தபோது முதுகில் வைத்திருந்த மலையைப் புரட்டிப் போட்ட மாதிரி அத்தனை அசதியும் விடுதலை யுணர்வும் ஏற்பட்டன. மணி பார்த்தார். விடியற்காலை ஆறு. கண்கள் தூக்கத்துக்கு ஏங்கின. “அறிவு?” என அவனை எழுப்பினார். இரவு முழுவதும் இந்த மிஷினோட்டத்தில் தூங்காமல் புரண்டு கொண்டிருந்தவன். எப்போது அவன் தூங்கினான் அவனுக்கே தெரியாது. “நீ வேணாப் போயி… செம்மலை ஐயா வீடு உனக்குத் தெரியும் இல்லே? கொடி தயார்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திர்றியா?” என்றார் அப்பா. சில சமயம் வந்து கொடியை வாங்கிக் கொள்ளும்போதே காசு தந்துவிடவும் கூடும். பொதுவாக இவர்களிடம் உடனே காசு வாங்கி விடுவது நல்லது. நாள் கடத்தி, வாரம் கடத்தி பிறகு, “குடுத்தேனே, சரியாப் பாருங்க,” என்று குண்டு போடுவார்கள். அரசியல் என்றாலே யாரையாவது முடிந்தவரை ஏமாற்றிப் பிழைப்பது, என்று ஆகிவிட்டது.
செம்மலையாரின் வீடு மணிக்கூண்டுப் பக்கம். காலை நேரத்தில் ரொம்பக் குளிராகக் கிடந்தது. வாசலில் கோலம் போட்ட வீடுகள் கூட கதவுசாத்திக் கிடந்தன. போகிற வழியில் தான் மோகன் வீடு. தானறியாமல் அறிவொளி மோகனைப் பார்க்க உத்வேகம் கொண்டான். இத்தனை காலை அவன் எழுந்து கொண்டிருப்பானா தெரியாது. மோகன் வீட்டுக்குப் போக எப்பவுமே அவனுக்குப் பிடிக்கும். அவன் தாயார் நல்ல மாதிரி. மோகனுக்கு என்ன சாப்பிடக் கொடுத்தாலும் அவனுக்கும் தருவாள். சில ஆட்கள் சிநேகிதர்கள் வந்திருந்தால் தங்கள் பிள்ளையை மாத்திரம் உள்ளே அழைத்து தின்னக் கொடுப்பார்கள். அந்த வழக்கம் மோகனின் தாயாரிடம் இல்லை.
அறிவொளி போனபோது மோகனின் அப்பா காலையிலேயே குளித்து சுத்தமாய்த் திருநீறு பூசி வாசலில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் மடியில் அன்றைய நாளிதழ் கிடந்தது. யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். “ஆமாம். முருகன் வள்ளி தெய்வானை சேர்ந்த படம்… இருக்கில்லியா? கலர் ஜெராக்ஸ் போட்ருங்க. ஒரு 100 120 வரை தேவைப்படும். அப்பிடியே லேமினேஷன் பண்ணிறலாம். இன்னிக்கு அவங்க ஆர்ப்பாட்டம் பண்ணறாங்க இல்லியா? அடுத்து எப்பிடியும் சஷ்டி வருது. எல்லாரும் கூட்டா பிரார்த்தனை மாதிரி ஏற்பாடாகுது…” என்று பேசிக் கொண்டிருந்தார். அவரது எதிர்பார்ப்பு அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
சட்டென்று அப்போதுதான் அவனை கவனித்தார் அவர்.
“என்னடா,” என்றார்.
“மோகன்…” அவர் உள்ளே பார்த்து “மோகன்?” என்று கூப்பிட்டார்.
மோகன் வந்தான். அப்பாமுன்னால் அறிவொளியிடம் பேச அவனுக்குத் தயக்கமாய் இருந்தது.
“என்னடா இந்நேரத்ல வந்திருக்க?”
“சும்மா…” என்றான் அறிவொளி. “வரியா?” என்றுஅவனைக் கூப்பிட்டான்.
“எங்க?”
“சும்மா…” என்றான் அறிவொளி.
இருவருமாய் தெருவில் நடந்து போனார்கள்.
“அப்பாவுக்கு 100 கொடி தைக்க ஆர்டர் வந்ததுடா. தெச்சிட்டாரு… அதான் சொல்லிட்டு வரலாம்னு…” என்றான் அறிவொளி.
“செம்மலை வீட்டுக்கா போறம்?” என்றுகேட்டான் மோகன். ம், என்றபடி அறிவொளி அவன் கையைப் பிடித்துக் கொண்டான். பிறகு கேட்டான்.
“ஏன்டா சாமி இருக்குதா இல்லியா?”
“தெர்ல,” என்றான் மோகன்.
•••
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ்
- வேண்டாம் என்றொரு சொல் பிறக்கும்
- ஒரு சொல்
- மூட்டம்
- பரகாலநாயகியின் பரிதவிப்பு
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கட்டைப் புகையிலை சிறுகதை – முதல் பாகம்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6
- எனது யூடூப் சேனல்
- ஒரு கரும்பறவையைக் காணும் பதிமூன்று வகைகள்
- வெகுண்ட உள்ளங்கள் – 12
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- குளியல்
- சொல்லத்தோன்றும் சில…..