திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்த்தாண்ட வர்மாவிற்கு பின் வந்த மன்னர்களெல்லோரும் பத்மனாபசுவாமியின் சார்பாக பத்மனாப தாசர்களென்றே தன்னை அறிவித்து ஆட்சி செய்தனர். அவர்களின் ஆணைகள், தீர்ப்பென எல்லாவற்றையும் பத்மனாபன் செயலெனவே அறிவித்து கடவுளின் ஆணையை அறிவிப்பவர்களாக மட்டுமே மன்னர்கள் தன்னைக் கருதினர்.
ஆனால் நான் இங்கு குறிப்பிடும் பத்மனாபன் வேறு. அவர் காலடி பத்மனாபன். மிகப் பெரிய சமஸ்கிருத அறிஞர். தமிழ், இந்தி. ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருதம் என பன்மொழி வல்லுனர். சிறந்த மொழி பெயர்ப்பாளர். தமிழின் குறிப்பிடத்தக்க மொழி பெயர்ப்பாளர் சகோதரர்களான டாக்டர். பாலசுப்ரமணியம், பரமேஸ்வரன், அலமேலு கிருஷ்ணன் ஆகியோரில் மூன்றாவது சகோதரர்.
காலடி பத்மனாபன் சென்ற ஆகஸ்ட் 10 அன்று பெங்களூரில் தனது மகள் இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 80. தென்னகத்தில் ஒரு பன்மொழி பல்கலைக் கழகமாயிருக்கும் ஒரு குடும்பத்திலிருந்து வந்த காலடி பத்மனாபனைத்தான் அவரது தொடர்ந்த அர்ப்பணிப்பான பரந்துபட்ட இலக்கிய ஆன்மீகச்செயலால் எனக்கு அவரை எல்லாம் பத்மனாபன் செயலென்று சொல்லத் தோன்றியது.
காலடியில் நான் முதலில் காலடி வைத்தது ஆதி சங்கரரைப் பார்க்க அல்ல. காலடி பத்மனாபனைத்தான். அவர் மூலமாகவே ஆதி சங்கரரை தரிசிக்கும் பேறு பெற்றேன். எனது ஆகஸ்ட் 15 – வரலாற்று நாவலை அவர்தான் மொழி பெயர்த்தார். அதிலுள்ள சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் நான் அவரை காலடியில் சந்தித்தேன். ஒரு விடுதியில் தங்கிய என்னை வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கே தங்க வைத்தார். அவரது வீட்டின் பெயரே கனகதாரா.
ஒரு குழந்தையின் முகமும், குழந்தையின் சிரிப்பும். ஒரு அனுசரணையான அமைதியான குழந்தையின் செயல்பாடும், சுறுசுறுப்பான அவரது தொடர்ந்த செயல்பாடும் எனக்கு அவரிடம் ஈர்த்த விஷயங்களாகும். அவரது வாழ்க்கைப் பயணமும் அன்றாட செயல்களும் ஒரு சலனமற்ற நதியின் நீரோட்டமாகவே இருந்தது. நேர்மறையான எண்ணங்களாலேயே செதுக்கப்பட்ட ஒரு மெல்லிய சிற்பம் அவர். இன்ப துன்பங்களை சமனமாக அணுகும் ஒரு இறைசக்தி போலவே இயங்கிக் கொண்டிருந்த ஒரு பேரறிஞர் அவர். அவரின் உறவானது அவரது சகோதரர்களிடமும் மனைவியிடமும், குழந்தைகளிடமும், நண்பர்களிடமும் ஒரே மாதிரியாகவே உள்ளார்ந்து ஒருமித்து ஆன்ம அன்பாக இருந்தது.
காலடி சங்கர மடத்திற்கு அடுத்தே அவருடைய வீடிருக்கிறது. நான் அங்கே சென்றபோது என்னை ஒரு தந்தையின் அனுசரணையான அன்போடு சங்கர மடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள பூர்ணா நதிக்கரைக்கு அழைத்துச் சென்று தனது உடல்நலமற்ற தாய்க்காக பெரியாறை வீடருகே திருப்பி பூர்ணா நதியாக ஓடச் செய்த சங்கரரின் சக்தியை கூறினார். சங்கரரின் தாயின் தகன இடத்தைக் காட்டி பல வரலாற்றுச் செய்திகளையும் பகிர்ந்த அனுபவம் என்னால் மறக்க இயலாது. அதனை அடுத்துள்ள சங்கரரின் தாயின் வழிபாட்டிற்காக உருவாக்கப்பட்ட கிருஷ்ணர் கோவிலுக்கும் அழைத்துச் சென்று அரவணை பிரசாதத்தையும் சுவைத்து வந்தோம்.
பத்மனாபன் காலடி ஸ்ரீ சங்கரா கல்லூரியில் 32 வருடங்கள் இந்தி பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். காலடி ஸ்ரீசங்கராச்சாரியா சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் விருந்தினர் விரிவுரையாளராகவும் பணியாற்றி இருக்கிறார். மலையாளம் கே மகேஸ்வர் என்ற துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன் என்ற இந்தி நூலை எழுதி இருக்கிறார்.
தமிழ், இந்தி, மலையாளம் மொழிகளில் அவரது மொழி பெயர்ப்பு பணி மகத்தானது. வள்ளலார் காவ்யமாலா, கூட்டிலே பட்சிகள், நீல பத்மனாபனின் இல கொழியும் காலம், மதுர பாரதியின் ரமண சரிதம், கு.சின்னப்ப பாரதியின் கரிம்பு, கல்கரி, சூர்யகாந்தனின் வேழாம்பல்கள், குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட் 15 ஆகியவை அவர் தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழி பெயர்த்த நூல்களாகும். இவற்றில் இவரின் இல கொழியும் கால மொழி பெயர்ப்பினை சாகித்ய அகாதமி ஒரு கூட்டத்தில் கௌரவித்தது. இன்னும் பிரபல இந்தி எழுத்தாளரான நிர்மல் வர்மாவின் இந்தி சிறுகதைகளை தமிழில் காகங்கள் முக்தியின் முன்னோடிகள் என்ற நூலாக மொழி பெயர்த்தார். ஹிமன்ஷு ஜோஷி அவர்களின் இந்தி நூலை மலையாளத்தில் யதனுயுட தடவரையில் என்று மொழியாக்கம் செய்திருக்கிறார். தோப்பில் பாஸியின் மலையாள நாடகத்தை சாகித்ய அகாடமிக்காக அஸ்வ மேதமாக மொழி பெயர்த்திருக்கிறார். நீல பத்மனாபனின் கூண்டில் பட்சிகளை தமிழிலிருந்து இந்தியில் சாகித்ய அகாதமிக்காக மொழி பெயர்த்திருக்கிறார். மற்றும் நீல பத்மனாபனின் சமர் அனுபவங்கள், யாத்ரா ஆகியவற்றையும் மலையாளத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். குறிப்பாக இலங்கை எழுத்தாளர்களில் ஜூவ குமாரன், கலாநிதி ஜூவகுமாரன் ஆகியோரின் தமிழ் படைப்புக்களை முறையே சங்காணைச் சண்டியன், இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற நூல்களாக மலையாளத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். உதயணனின் கதைகளான பனி நிலவு, நூலறுந்த பட்டங்கள் ஆகியவற்றை மலையாளத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.
சாகித்ய அகாதமி நடத்திய மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் எழுத்தாளர் மொழி பெயர்ப்பாளர் குறிஞ்சி வேலனுடன் காலடி பத்மனாபனும் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சியாளர்களாக தேர்ந்த பயிற்சியினை அளித்திருக்கிறார்கள்.
சின்னப்ப பாரதி, டாக்டர் ஹெச். பாலசுப்ரமணியம் அவர்களுடன் பத்மனாபனின் 12 நாட்கள் இலங்கை இலக்கியப் பயணம் குறிப்பிடத்தக்கது. ஏழு நாட்கள் இலங்கை முழுவதும் பயணம் செய்து அங்குள்ள வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றனர். அப்போது அரசாங்கம் சார்ந்த ஒரு விருதளிக்கும் விழாவில் விருந்தினர்களாக கலந்து கொண்டு கௌரவிக்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம் ஸ்ரீசாரதா கல்வி அமைப்பின் சார்பில் பாஷா சம்மான்வாயரத்னா 2000 விருது, 2008ல் நல்லி திசை எட்டும் விருது, திருவனந்தபுரம் தமிழ் சங்கம் சார்பில் தமிழ் மலையாள மொழிபெயர்ப்புக்காக மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் விருது ஆகியன இவர் பெற்ற குறிப்பிடத்தக்க விருதுகளாகும்.
காலடி பத்மனாபனுக்கு பாலாம்பாள் என்ற மனைவியும் ஹரி, ஹேமா, அருணா என்ற மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்.
காலடியில் உருவான பேரறிஞர் பத்மனாபனின் மொழி பெயர்ப்புக்களும் அவரின் புகழைப் போல் காலம் முழுதும் மடியாதவை. அவரைப் போலவே அவரின் மரணமும் எந்தச் சலனமும் இல்லாமல் நொடியில் முடிந்தது.
குமரி எஸ். நீலகண்டன்
punarthan@gmail.com
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ்
- எல்லாம் பத்மனாபன் செயல்
- ஒப்பிலா அப்பன் உறையும் திருவிண்ணகர்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கம்பனில் நாடகத் தன்மை
- தத்தித் தாவுது மனமே
- கேள்வியின் நாயகனே!
- கவிதை
- நிரந்தரமாக …
- ஆவலாதிக் கவிதைகள்
- வெகுண்ட உள்ளங்கள் – பதின்மூன்று
- வாரம் ஒரு மின்நூல் வெளியீடு – 8
- செவல்குளம் செல்வராசு கவிதைகள்
- நவீன செப்பேடு
- பேச்சுப் பிழைகள்
- கட்டைப் புகையிலை – இரண்டாம் பாகம்
- க.நா.சு கவிதைகள்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 7