கம்பனில் நாடகத் தன்மை

author
0 minutes, 5 seconds Read
This entry is part 5 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

                                                                            கோவை எழிலன் 

நாடகம் என்பது வெறும் சொற்களில் அமைவதன்று. ஒரு பாத்திரம் சொல்லும் சொல்லுக்கோ அல்லது செய்யும் செயலுக்கோ காட்சியில் இருக்கும் மற்ற பாத்திரங்களும் எதிர்வினை ஆற்ற வேண்டும். இது மேடை நாடகங்களில் எளிதாக இருந்தாலும், எழுத்தில் இவற்றைக் கொண்டு வருவது கடினமான செயல். ஒவ்வொரு செயலுக்கும் மற்ற பாத்திரங்களின் எதிர்வினையை வருணித்துக் கொண்டு இருந்தால் கதை ஓட்டம் தடைபடும்.

கம்பன் தன் காவியத்தில் இத்தகைய காட்சிகளைத் திறம்படக் கையாள்வதைக் காணலாம்.  சில காட்சிகளைக் கம்பன் வருணிப்பதுண்டு. சிலவற்றை நம் கற்பனைக்கே விட்டு விடுவதும் உண்டு. அவ்வாறான ஒரு காட்சியைக் கும்பகர்ணன் வதைப் படலத்தில் கான்போம்.

முதற்போர் புரி படலத்தில் இராமனால் தோற்கடிக்கப்பட்டு வருத்தத்தில் இருக்கும் இராவணன் மகோதரனின் அறிவுறுத்தலின் பேரில் கும்பகர்ணனை அழைத்து வர  ஏவலரைப் பணிக்கிறான். சேவகர் பலவாறாக முயன்று கும்பகர்ணனை எழுப்பி; அவனுக்கு உணவளித்து; இராவணனிடம் அனுப்பி வைக்கின்றனர்.

கும்பகர்ணன் போர் மூண்டது என்ற சொல்லைக் கேட்டதும் மனம் வருந்தி 

  ஆனதோ வெஞ்சமம் அலகில்  கற்புடை

   சானகி துயரின்னும் தவிர்ந்த தில்லையோ”

என்று அறிவுரை கூறத் துவங்குகிறான். இங்கு கும்பகர்ணனின் மனநிலையைக் கம்பன் அழகாகப் படம் பிடிக்கிறான்.

கும்பகர்ணன் தான் அறிவுரை சொல்லும் போது இராவணனின் முகம் மெல்ல மெல்ல மாறி அதில் சினம் குடி கொள்வதைக் காண்கிறான். இதை கம்பன் நேரடியாகச் சொல்லாமல் கும்ப கர்ணனின் பேச்சு மாறுபடுவதை வைத்து நாமே உணருமாறு செய்கிறான்.

இராவணனின் கருத்துக்கு மாறாகப் பேசி அறியாதவனாதலால் கும்பகர்ணன் இராவணனின் முக மாறுதலைக் கண்டு,  இடையில் அறிவுரையை நிறுத்திப் போர் செய்யலாம் என்று கூறுகிறான் 

தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின்

ஐ அறு தம்பியோடு அளவ ளாவுதல்

உய்திறம்; அன்று எனின் உளது வேறும் ஓர்

செய்திறம்; அன்னது தெரியக் கேட்டியால்;

‘பந்தியில் பந்தியில் படையை விட்டு அவை

சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல்

மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்

உந்துதல் கருமம் ‘என்று உணரக் கூறினான்.

ஆனால் இராவணனோ இவ்வறிவுரையைக் கேட்காமல் கும்பகர்ணனை மேலும் புண்படுத்தித் திட்டி விடுகிறான். அவனுடைய பலவீனமான; உறங்குவதையும், அதிகம் உணவு  உண்ணும் பழக்கத்தையும் குறிப்பிட்டு அவனுடைய செஞ்சோற்றுக் கடமையுணர்ச்சியைத் தூண்டி விடுகிறான்.

மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை;

பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை;

இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும்

உறங்குதி போய் ‘என உளையக் கூறினான்

நானே போருக்குச் செல்கிறேன் என்று கிளம்பும் இராவணனைக் கண்டு வருந்திய கும்பகர்ணன் அவனைத் தடுத்துப் போருக்குக் கிளம்புகிறான். இங்கும் கும்பகர்ணனின் மனவருத்தத்தைக் கம்பன் நேரடியாக விளக்காமல் நம் கற்பனைக்கே விட்டு விடுகிறான்.

அப்போதும் கும்பகர்ணனின் பாச உணர்ச்சி அண்ணனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கிறது.

அவன் நான் போரில் இறந்த பின்னாவது சீதையை விட்டு விடு என்று கூறுகிறான். காமத்தில் ஆழ்ந்த இராவணனின் உள்ளத்தில் மீண்டும் சினம் ஊற்றெடுக்கத் தொடங்குகிறது. அவன் கும்பகர்ணன் இறந்தால் யார் உள்ளனர் என எண்ணுகிறான். அவன் இந்திரசித்தை எண்ணுவதைப் புரிந்து கொண்ட கும்பகர்ணன் இந்திரன் பகைஞன் இலக்குவனால் கொல்லப் படுவான் என அறிவுறுத்துகிறான்.

‘இந்திரன் பகைஞனும் இராமன் தம்பி கை

மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்”

என்ற சொற்களைக் கேட்ட இராவணனின் சினம் மேலும் வளர்கிறது என்பதை கும்பகர்ணனின் அடுத்து வரும் சொற்களால் அறியலாம்.

இராவணன் இராமனை இந்த அளவுக்குப் புகழும் கும்பகர்ணனின் நேர்மையைச் சந்தேகிக்கத் தொடங்குகிறான். ஒருவேளை கும்பகர்ணன் இராமனின் மீதுள்ள பக்தியால் சரியாகப் போர் செய்யாமல் வேண்டும் என்றே வீழ்ந்து விடுவானோ என எண்ணுவதை மறுத்து கும்பகர்ணன் என்னை வென்றால் அவர்கள் உன்னையும் வெல்வர் என்று கூறுகிறான். நான் செய்யும் போர் நீ செய்யும் போரைப் போலவே உண்மையானதாக இருக்கும் என்று மேலும் அறிவுறுத்துகிறான்.

என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல!

உன்னை வென்று உயருதல் உண்மை

என்னும் சொற்களால் அதைக் காணலாம். பின் தான் செய்ததில் “குற்றமும் உள எனில் பொறுத்தி!” என்று கூறி இராவணனின்  அனைத்து கண்களும் குருதி சோரும் படி செய்து விட்டுப் போர்க்களம் நோக்கி செல்கிறான். இங்கு அண்ணனை “கொற்றவ” என்று அழைப்பதன் மூலம் அரச கட்டளையை ஏற்கும் ஒரு குடிமகனாகத் தன்னைக் காட்டுகிறான் கும்பகர்ணன்.      

இங்கும் கம்பன் இராவணனின் முகம் மாறுபடும் எதிர்வினையை கும்பகர்ணனின் பேச்சில் இருந்தே நம்மை உணரச்செய்கிறான்.

முதலில்

“பொலன்கொள் தோளியை,

நன்று என, நாயக, விடுதி நன்று”

என்று சீதையை விடுக்க அறிவுறுத்தும் கும்பகர்ணன் அடுத்த பாடலில் உனக்கு உரியதைச் செய்வாய்

“அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய்”

என்கிறான். பின் மேலும் தன் நிலையைத் தளர்த்திக் கொண்டு சீதையை விடுதல் என்பது தவத்தின் பலன் போன்றது என்று கூறுகிறான்.

“ஆதலால்

பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை

தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே”

இவ்வாறு கம்பன் ஒரு பாத்திரத்தை பேச விட்டே அதன் மூலம் மற்ற பாத்திரத்தின் எதிர்வினையைக் காட்டுவது காவியத்தில் நாடகத் தன்மையைப் புகுத்தி அதற்கு மேலும் சுவையூட்டுகிறது.

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]தத்தித் தாவுது மனமே
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *