தத்தித் தாவுது மனமே

author
0 minutes, 52 seconds Read
This entry is part 6 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

கோ. மன்றவாணன்

      நித்தம் நித்தம் எழும் வாழ்க்கை நிகழ்வுகளில் நமக்குக் கிடைத்துள்ள திரும்பக் கிடைக்காத நொடிகளைச் சரியாகப் பயன்படுத்துகிறோமா? இந்தக் கேள்விக்குப் பெரும்பாலும் இல்லை என்பதுதான் பதில்.

      மனைவி சுவையாக உணவு சமைத்து அன்போடு பரிமாறுகிறார். எங்கோ சிந்தனையைப் பறக்கவிட்டு, அனிச்சை செயலாகச் சாப்பிட்டுவிட்டுக் கைகழுவுகிறோம்.

      வாகனம் ஓட்டியவாறு அலுவலகமோ வேறு வேலைக்கோ போகிறோம். நம் மனம் வாகன வேகத்தையும் தாண்டித் தறிகெட்டு எங்கோ ஓடுகிறது. எப்படியோ விபத்து இல்லாமல் போய் சேர்ந்து விடுகிறோம். சில நேரங்களில் விபத்தும் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.

      அலுவலகம் சென்று அமர்ந்து வேலை பார்க்கும்போது… வீட்டுக்குள் உலாவுகிறது அதே மனம்.

      அலுவலக வேலையைவிட்டு வீட்டுக்கு வருகிறோம். வீட்டுக்குள்ளும் அலுவலகச் சிந்தனைதான். “என்னங்க” என்று அழைத்து மனைவி ஏதோ சொல்கிறார். காதில் பாதி விழுந்தும் பாதி விழாமலும் போகிறது. அந்தப் பாதியிலும் நம் கவனம் இருப்பது இல்லை. அப்போதும் நம் மனப்பறவை எல்லை தாண்டி எங்கோ பறந்து போகிறது.

      இருள்சூழ்ந்த பொழுதில் உடலுறவு கொள்ளும் போதும்… இன்னொரு துணையை இன்னொரு உறவைத் தேடி மனம் மதில் தாவுகிறது என்று சிலர் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

      தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணும் போதும் கூடத் தொலை தூரத்துக்குச் செல்கிறது சிந்தனை.

      மனதுக்குப் பிடித்த எழுத்தாளரின் நாவலை வாசிக்கையிலும்…  புத்தகப் பக்கங்களில பார்வை இருக்கிறது. புத்தியோ பூமியைச் சுற்றக் கிளம்பி விடுகிறது. அதற்குள் பல பக்கங்கள் புரட்டப் பட்டிருக்கும். என்ன படித்தோம் என்பது தெரியாது. மீண்டும் மனதைப் பிடித்து இழுத்துவந்து முந்தைய பக்கங்களைத் தேடிப் படிப்போம். மனவேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு நம்மை ஏளனமாகப் பார்க்கும். பிறகென்ன… புத்தகத்தை மூடி வைத்துவிட்டுப் படுக்கச் செல்வோம். படுத்துக் கொண்டிருக்கும் போது, மூளை மிகவும் சுறுசுறுப்பாகி விடுகிறது. உடல் பஞ்சணையில் படுத்துக் கிடக்கிறது. உள்ளம் போர்க்களத்துக்கு வாள்தூக்கிச் செல்கிறது.

      இந்த நொடியில் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து அதற்கு இயைந்து அந்த நொடியை நாம் அனுபவிப்பது இல்லை. சாப்பிடும் போது சிந்தனை வேறிடத்தில் இருந்தால், அந்த உணவின் சுவை நம் நாவைத் தழுவுவது இல்லை. அந்தச் சாப்பாட்டின் மணம் நம் நாசியைத் தொடுவது இல்லை. அந்த அமுதுணவின் சத்து நம் உடலுக்குள் சரியாகச் சேர்ந்து இருக்குமா என்பது ஐயம். உடலும் உள்ளமும் இணைந்து இயைந்து இயங்கினால்தான் சரியான செயலும் அதற்கு உண்டான சரியான பயனும் உருவாகும்.

      செய்யும் வேலையில் கவனம் இல்லாமல் சிந்தனை சிதறினானல் அந்த வேலைப்பாடு நேர்த்தியாக இருப்பது இல்லை. மண்பானை வனைகிற போது கண்ணும் கவனமும் வேறு பக்கம் சென்றால், பானையின் வாய் கோணலாகி இளிக்கும். உளிகொண்டு சிற்பம் செதுக்குகிற போது, உள்ளம் வேறு திசை நோக்கிச் சென்றால், சிலை உருவாகிற போதே ஊனம் அடையும். இயந்திரங்களில் வேலை செய்வோர் தம் கவனக் குறைவால் கைகளை, கால்களை இழப்பதோடு வாழ்க்கையையும் இழந்து தவிக்கிறார்கள்.

      வாகன விபத்துகளுக்கு மிகுவேகம் மட்டும் காரணம் இல்லை. கவனக் குறைவும் காரணம் ஆகும். திரும்பித் திரும்பிப் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களை எங்கும் காணலாம். அரசியல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டபடி ஓட்டுபவரையும் என்றும் பார்க்கலாம். வீட்டிலோ வேறு எங்கோ நடந்த ஒரு நிகழ்வைத் திடீரென நினைத்து, அதனால் கோபம் தலைக்கு ஏறிப் பல்லைக் கடித்தபடி ஓட்டுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு நொடிக் கவனக் குறைவு, ஒரு கோர விபத்துக்குக் காரணம் ஆகிவிடுகிறது. 

      ஒன்றில் நிலைக்காமல் எண்ணம் தாவி ஓடுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை, உளவியல் வல்லுநர்கள் நுட்பமாக விவரிக்கலாம்.

      பொதுவாக…

      ஒரு வேலையில் ஒரு நிகழ்வில் ஆர்வம் இல்லாமல் போவது, எண்ணச் சிதறலுக்கு முக்கிய காரணம் என்று எல்லாரும் அறிவார்கள்.

      நிகழ்சூழலில் மனம் நிலைகொள்ளாமல் இருப்பதற்கு, எதிர்வரும் சூழலை முன்னரே நினைத்துப் பரபரப்பு அடைவதும் காரணம் ஆகிறது. இதனால்தான் பதறாத காரியம் சிதறாது என்கிறார்கள்.

      மனதை ஒன்றில் குவிய விடாமல் தடுப்பதில் வல்லமை கொண்டவை தீயப் பழக்கங்கள்.

      அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை என்ற வள்ளுவரின் கருத்து உண்மைதான். ஆனால் அறிவுத் தெளிவைத் தாண்டி அஞ்சுவதும்- மிகை அச்சம் கொள்வதும் வாழ்வை ரசிக்க விடாமல் செய்கின்றன. மனம் அங்கும் இங்கும் பறப்பதற்கு அத்தகைய அச்சம்தான் சிறகுகள் தயாரித்துத் தருகின்றது.

      மனஅழுத்தம் இருந்தாலே எதிலும் நாட்டம் இருக்காது. மகிழ்ச்சியே வந்தாலும் அதைத் துய்க்க முடியாது. அதனால் அவர்களால் நிகழ்நொடியில் வாழ இயலவில்லை.

      பூப்பூவாய்ப் பறந்து போகும் பட்டாம் பூச்சி போல, மனம் பறந்து போவதைத் தடுக்க மேற்சொன்ன தடைகளைத் தகர்க்க முயல்வது நல்லது.

      இன்பம் வரும்போது மகிழ்ச்சி அடையாமல் இருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் துன்பம் வரும்போது துயர் அடையாமல் இருப்பது இல்லை. துயர் அடையாமல் இருந்தால் அவர்கள் ஞானிகளாக இருக்க வேண்டும். அல்லது மனநோயாளிகளாக இருக்க வேண்டும்.

      அந்தந்த நேரத்து இன்பத்தையும் அனுபவிக்க வேண்டும். அந்தந்த நேரத்துத் துன்பத்தையும் துய்க்க வேண்டும். துன்பம் வரும்போது அதில் இருந்து மீள முயல வேண்டுமே தவிர, அதிலே தோய்ந்து கிடப்பதா என்று நீங்கள் வினா எழுப்ப முடியும். அப்படி மீள எடுக்கும் முயற்சிகளில் உங்கள் கவனம் முழுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் பதில்.

      நிகழ்கால நொடிகளில் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்றால் எதிர்காலத்தை எப்படி வடிவமைத்துக் கொள்வது என்று சிலர் கேட்கக் கூடும். எதிர்காலத் திட்டமிடலும் அதற்கான செயல்களும் நிகழ்காலத்தில் அடங்கி உள்ளன. அவற்றையும் அதன் அதன் நேரத்தில் மனம் இயைந்து செயல்படுத்துங்கள்.

      இரவு நேரம். பல் வலிக்கிறது. நேரம் ஆக ஆக வலி கூடுகிறது. மருத்துவ மனைக்குச் செல்ல முடியாத நிலை. வலி தணிக்கும் மாத்திரைகளும் கைவசம் இல்லை. படுத்திருந்தபடியே அந்த வலியில் உங்கள் மனதைச் செலுத்திப் பாருங்கள். அந்த வலியின் நுட்பத்தில் உங்கள் கவனத்தை வைத்துப் பாருங்கள். அதுகூட சுகமாக மாறலாம். அந்த வலியின் போக்கைக் கவனிக்க கவனிக்க… ரசிக்க ரசிக்க… அந்த வலியின் வலிமை குறைந்து போவதை அறியலாம். உங்களை அறியாமல் உறக்கம் உங்களை தழுவி இருக்கலாம். இதை நீங்கள் நம்ப மறுக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் அனுபவமே இது. அந்த வலியை நிரந்தரமாகப் போக்க மறுநாளோ வாய்ப்புள்ள ஒருநாளோ மருத்துவரிடம் சென்று தீர்வு காணலாம். அதற்காகப் வலி வரும் போதெல்லாம் அதை ரசியுங்கள் என்று சொல்லப் போவது இல்லை.

      சுகத்தைக் கொண்டாடலாம். சோகத்தையும் ரசிக்கலாம். அதுஅது கொஞ்ச நேரம்தான் இருக்க வேண்டும். அதில் இருந்து நாம் கடந்து வந்துவிட வேண்டும். வாழ்க்கை நதியில் நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். எந்த இடத்திலும் தேங்கிவிடக் கூடாது. ஒவ்வொரு நொடியிலும் நம் பயணம் இருக்க வேண்டும்.

      சில நேரங்களில் திரையரங்கில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியைப் பார்க்கிறோம். சிந்தனை சிதறாமல் அந்த நகைச்சுவையோடு ஒன்றிச் சிரிக்கிறோமே… திரையில் தோன்றும் சோகக் காட்சிகளில் அது கதை என்று தெரியாமல் கண் கலங்குகிறோமே… ஆபத்தில் சிக்கிய நாயகனையோ நாயகியையோ பார்த்துப் பதைபதைக்கிறோமே… இந்தக் கற்பனைக் காட்சிகளில் மனம் ஒன்றி இருக்கும்போது, மெய்வாழ்க்கையில் மனம் ஒன்ற முடியாதா என்ன?

      ஒவ்வொரு நொடி நேர நிகழ்வையும் அனுபவித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அதுதான் வாழ்வின் அருஞ்சுவை. இதைச் சொல்ல எளிதாக இருக்கிறது. முடிவதில்லை என்பதுதான் இயல்புநிலை.  இதில் நானோ நீங்களோ யாருமோ விதிவிலக்கு இல்லை.

      நம் நவீன கால வாழ்க்கை,  போட்டிகள் நிறைந்தது ; போராட்டங்கள் சூழ்ந்தது. மனஅழுத்தம் இல்லாதவர்களே இப்போது இல்லை. குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் இருக்கிறது. இவற்றை முழுமையாக எதிர்கொள்ள முடியாது. ஒவ்வொரு நொடியும் மனதை அலைபாய விடாமல் வாழ வேண்டும் என்று ஆசைப்படலாம். அது நடைமுறைக்கு வருவது இல்லை. அப்படியானால் என்னதான் செய்வது?

      கீழ்க்கண்டவாறு குறைந்தளவு செயல்திட்டம் ஒன்றை வகுத்துக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் கடைப்பிடிக்க முடியாது என்றால், இன்னும் குறைத்துக் கொள்ளலாம். முடியாது என்று ஒதுங்குவதைவிட, முடிந்தவரை முயன்றுதான் பாருங்களேன். முயல முயல மனம் நம் வசப்படும். தியானப் பயிற்சியும் அப்படித்தானே! இதோ செயல்திட்டங்கள்…

      குழந்தைகள் ஓடிவந்து கட்டிப் பிடித்துக் கொஞ்சிப் பேசும் போது, நீங்களும் குழந்தையாய் மாறுங்கள். குழந்தைகளோடு விளையாடி மகிழுங்கள். அப்போது மனதுக்குள் பூக்கள் மலரும்.

      நீங்கள் கணவர் ஆனால் உங்களுக்கு மனைவியைவிட வேறு யாரும் மிக முக்கியமானவர் இல்லை. நீங்கள் மனைவி ஆனால், உங்கள் கணவரே உங்களுக்கு முக்கியமானவர். எனவே துணையிடம் பேசும்போது மனம் ஒன்றித்து உரையாடுங்கள். அந்த ஒவ்வொரு நொடியும் வாழ்வைச் சீராக்கும்.

      வேலையில் கவனம் குவியுங்கள். அது உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரும்.

      ஒவ்வொரு நொடியிலும் சாலையில் கவனம் வைத்தும், வேகத்தைக் கட்டுப்படுத்தியும் வாகனத்தை ஓட்டுங்கள். உயிரைப் பாதுகாக்கும் மந்திரம் அதுதான்.

      பொழுதுபோக்கு நிகழ்வில் பங்குகொண்டால், உங்கள் மனதும் அந்த நிகழ்வும் பாலும் வெண்சர்க்கரையும்போல் இரண்டறக் கலக்கட்டும். அப்போது மனம் இளைப்பாறும்.

      கண்ணதாசன் சொன்னதுபோல் “நாளைய பொழுதை இறைவனுக்கு அளித்து” ஒவ்வொரு நாள் இரவும் உறங்கச் செல்லுங்கள். இடையூறு இல்லாத தூக்கமும் வாழ்வின் சுவைதான்.

Series Navigationகம்பனில் நாடகத் தன்மைகேள்வியின் நாயகனே!
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *