சில பேச்சுக்கள்
கருக்களைக் கலைக்கும்
கரும்புக்காட்டை எரிக்கும்
என் பேச்சு கூட
பல சமயங்களில்
மணவீட்டில் அழுதிருக்கிறது
மரணவீட்டில் சிரித்திருக்கிறது
நிராயுதபாணியைத்
தாக்கியிருக்கிறது
சிலரை நிர்வாணமாக்க முயன்று
என்னையே நிர்வாணமாக்கியிருக்கிறது
என் நாட்காட்டியின்
இன்றைய தாளையே கிழித்திருக்கிறது
என் எழுத்தையே
அமிலமாய் எரித்திருக்கிறது
அவிழ்க்க வேண்டிய முடிச்சுக்களை
இறுக்கி யிருக்கிறது
விடை சொல்லாமல்
வினாவாகவே நின்றிருக்கிறது
முளைவிதைக்கு
வெந்நீராகி யிருக்கிறது
நெய்து முடித்த பட்டுச்சேலையில்
தீப்பொறியாய் விழுந்திருக்கிறது
ஊமைக் காயங்களால்
பலரை ஊனப்படுத்தி யிருக்கிறது
சுகமான பயணத்தை
கோரவிபத்தாக்கி யிருக்கிறது
மரத்துக்கே தெரியாமல்
வெம்பி விழுந்திருக்கிறது
வாசிக்கத் தெரியாதவன் கையில்
வீணையாகியிருக்கிறது.
திறக்கக் கூடாத கதவுகளைத் திறந்து
அவமானப்படுத்தி யிருக்கிறது
திறக்கவேண்டியதைத் திறக்காமல்
காயப்படுத்தி யிருக்கிறது
நல்ல நாடகத்தை
பாதியிலேயே நிறுத்தியிருக்கிறது
அச்சுப்பிழையாகி
அசிங்கப்படுத்தி யிருக்கிறது
திரியை விட்டுவிட்டு
எண்ணெயை எரித்திருக்கிறது
பேச்சே இல்லாதிருந்தால்
என் வாழ்க்கை இனித்திருக்கும்
பிறவி ஊமைகள்
கொடுத்துவைத்தவர்கள்
அமீதாம்மாள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ்
- எல்லாம் பத்மனாபன் செயல்
- ஒப்பிலா அப்பன் உறையும் திருவிண்ணகர்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கம்பனில் நாடகத் தன்மை
- தத்தித் தாவுது மனமே
- கேள்வியின் நாயகனே!
- கவிதை
- நிரந்தரமாக …
- ஆவலாதிக் கவிதைகள்
- வெகுண்ட உள்ளங்கள் – பதின்மூன்று
- வாரம் ஒரு மின்நூல் வெளியீடு – 8
- செவல்குளம் செல்வராசு கவிதைகள்
- நவீன செப்பேடு
- பேச்சுப் பிழைகள்
- கட்டைப் புகையிலை – இரண்டாம் பாகம்
- க.நா.சு கவிதைகள்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 7