திருட்டு மரணம்

author
1
0 minutes, 30 seconds Read
This entry is part 7 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

சீராளன் ஜெயந்தன்

வழக்கம் போல் நெற்றியில் நாமம் இட்டு பெருமாள் கோயிலுக்கு கிளம்பும் போது, தடுத்துவிட்டான் மகன்.

“அப்பா, பதினைஞ்சு நாளைக்குத்தான் அப்பா, பொறுத்துக்கோங்க, வெளியே போக வேணாம்”

“ஏண்டா, டிவியில சொன்னான்ட்டு சொல்றியா, எனக்கெல்லாம் ஒண்ணும் வராதுடா, அவன்க கிடக்குறானுக பைத்தியக்காரப் பசங்க….”

“இல்லப்பா இது ரொம்பத் தீவிரமா இருக்கு.. உலகம் பூரா ஆயிரக் கணக்குல செத்துக்கிட்டு இருக்காங்க.. இப்ப நம்நாட்டுக்கும் வந்துருச்சு..  டிவி பாக்குறிங்க தானே…வயசானவங்களுக்குத்தான் ரொம்ப பாதிப்பாம்”

அவர் யோசிக்கும் முன்னே அடுப்பங்கரையிலிருந்து குரல் கொடுத்தாள் மருமகள்.

“சும்மா வெளியில போயி ஏதாவது ஒட்டிக்கிட்டு வந்துறாதீங்க.  அப்புறம் குழந்தைக்கு ஏதாவது ஆயிடப்போவுது..” –  இரண்டு வயதில் அவளுக்கு பேரன் இருக்கிறான்.  மகனின் முகத்தைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.

பால்கனியில் சென்று அமர்ந்து கொண்டார் புண்ணியவேலு.  தொண்ணூற்று மூன்று வயதை தாண்டிக் கொண்டிருந்தார்.  ஒரு நாளும் வீட்டில் ஒடுங்கியிருந்ததில்லை.  பெருமாளை தரிசிக்காமல் காலை உணவு உண்டதில்லை.  குளித்து, உடுப்பு மாற்றி, நாமம் இட்டு தெருவில் இறங்கினால்தான் அவருக்கு அந்த நாள் விடிந்த மாதிரி இருக்கும்.

உடலை ஒடித்துப் போடுகிற ஒரு வேலையில் இருந்து ஓய்வு பெற்று முப்பது ஆண்டுகளைத் தாண்டியாகிவிட்டது.  பி.எஃப்., கிராசுவிட்டி பணத்தில் சின்னதாய் ஒரு வீட்டை கட்டி விட்டார்.  மகனும் நல்ல வேலையில் இருந்தான்.  மனைவி விடைபெற்று பத்துப் பனிரெண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.  கூடவே போயிருந்தால் ‘மணமாக‘ இருந்திருக்கும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வார்.  மகனும், மருமகளும் ஒரு நேரம் போல் ஒரு நேரம் இருப்பதில்லை.

பேரனும், அவன் மனைவியும் எப்போது வேலைக்குச் செல்கிறார்கள், எப்போது வீடு திரும்புகிறார்கள் என்பது தெரியாது.   காலத்தின் கோலம்.  இப்போது பூட்டிய கதவிற்குள்ளேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  வீடு கலகலப்பாய் இல்லை.  மாற்றி மாற்றி எரிந்து விழுந்து கொள்கிறார்கள்.  அவர்களுடைய எஜமானர்கள் ஆன்லைனில் வந்துவிடுவதால், வீடும் அலுவலகம் மாதிரி இருக்க வேண்டும் என்று கட்டளைகள்.  பேரன் அழுதால் தூக்கிக் கொண்டு வெளியே ஓடுகிறாள் மருமகள்.  வெளியே வாசலில் வைத்தே அவனுக்கு விளையாட்டு காட்டுகிறாள்.  அவன் அம்மா அப்பாவை பார்க்க பிய்த்துக் கொண்டு அவர்கள் அறையை நோக்கி ஓடுகிறான்.  தாய்காரிக்கு இயலாமையால் கண்ணீர் சுரக்கிறது.

ஆரம்பத்தில் எல்லாம் ஒரு திருவிழா கொண்டாட்டம் போலவே இருந்தது.  போலீஸார் சாலைகளில் நடனமாடி கை கழுவச் சொல்கிறார்கள். வேஷம்போட்டு பயமுறுத்துகிறார்கள்.  கிங்கரர்கள் போல் வேஷமிட்டு சாலைகளில் மக்களை விரட்டுகிறார்கள்.  அத்தியாவசியப் பொருட்களுக்கான நேரம் களைகட்டுகிறது.  கடைகளில் கிருமிநாசினிகள் கொடுத்து வரவேற்கிறார்கள்.  ரேஷன் கடை வாசல்களில் வட்டங்களின் வரிசை நீண்டு செல்கிறது.  ஒருநாள் எல்லோரும் கூடி மொட்டை மாடிகளிலும், பால்கனிகளிலும் நின்று கைதட்டினார்கள்.  தங்களுக்குத் தாங்களே ‘சபாஷ்’ சொல்லிக் கொண்டார்கள்.  மறுநாள் காலை ஊரடங்கு தளர்த்தப்பட்டுவிடும் என்று நினைத்தவர்கள் ஏமாந்தார்கள்.

அடுத்தவாரம் அதே நேரம் அதே நேரம் எல்லோரும் விளக்கை அணைத்துவிட்டு, அகல்விளக்கு ஏற்றி வெளியே காட்ட வேண்டுமாம்.  மக்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினார்கள்.  வெட்கம் இருந்திருந்தால் அந்தக் கிருமி உலகைவிட்டு அன்றே ஓடியிருக்கும்.

பதினைந்து நாட்கள் என்றுதான் முதலில் சொன்னார்கள், அப்புறம் அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே சென்றது.  பால்கனிக்கு அருகே உள்ள நடையில்தான் அவர் படுக்கை.  எழுந்து ஒண்ணுக்கு ரெண்டுக்கு போவது என்றால் கூடத்தை கடந்து கழிப்பறைக்கு செல்வார்.  பால்கனிக்கும் கழிப்பறைக்கும் நடப்பதுவே அவரது உலகத்தின் ஒட்டுமொத்த பாதையாகிவிட்டது.  ரெண்டு மூன்று நாட்களிலேயே மனம் அல்லாடத் தொடங்கியது.  காலையில் வருகிற செய்தித் தாளை எத்தனை தடவை புரட்டுவது?  இப்பொழுதெல்லாம் டி.வி. செய்திகளைப் பார்ப்பதுவே ஒரு தண்டனையாக இருந்தது.  பயம் கிளப்புவதாய் இருந்தது.

யாராவது டி.வி. பார்த்தால் கொஞ்ச நேரம் போய் உட்கார்ந்திருப்பார்.  தானாக டி.வி. பார்க்கத் தோன்றாது.   காதும் சரியாகக் கேட்பதில்லை என்பதால் டி.வி.யில் பொம்மைதான் பார்த்துக் கொண்டிருப்பார்.

‘ஆறடி நிலமே சொந்தமடா’ என்று பாடி வைத்தார்கள்.  அது செத்தவனுக்கு.  ஆனால் இப்போது உயிருடன் இருக்கும் போதே, நடமாடும் தொலைவு சொற்ப அடிகளாகவிட்டது என்று நினைக்கும் போது வாழ்வு மாற்றிப் போடும் கற்பிதங்களை நினைத்து சிரித்துக் கொள்வார்.

எத்தனை நேரம் வெறுமனே சூன்யத்தையே பார்த்துக் கொண்டிருப்பது?  அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொள்ளும் போது, தாத்தாவை கவனிக்க யாருக்கு நேரமோ அக்கறையோ இருக்கிறது?

நடமாட்டம் குறைந்து போனதால் சோறு இறங்க மாட்டேன் என்கிறது.  இரவு சாப்பாட்டை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகியிருந்தது.  இப்போது மதிய சாப்பாட்டை குறைக்க வேண்டியதாயிற்று.  எது சாப்பிட்டாலும், எவ்வளவு சாப்பிட்டாலும் செரிப்பதில்லை. நெஞ்சை அடைக்கிறது.  “கொஞ்சம் காலாற பெருமாள் கோயிலுக்கோ,  கடை வீதிக்கோ போய் வந்தால் நல்லாயிருக்கும்”

ஒருமுறை அனைவரின் பேச்சையும் மீறி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.  “இனிமே எனக்கு என்னடா, செத்தா சாவுறேன்” என்று மகனின் வாயை அடைத்தார்.  தெருவிலிருந்து சாலை ஏறியதுதான் தாமதம், “யோவ், பெருசு, எங்கய்யா போற?” என்று ஓடிவந்தான் ஒரு காக்கிச் சட்டைக்காரன்.  திகைத்து நின்று ஏறிட்டுப் பார்த்தார்.

“ஐயா, இந்த வயசுல வெளியில வரலாமா?” என்றார் இன்னொருவர் கொஞ்சம் மரியாதையாக.

“இந்து வயசுல சாப்டது செரிக்க மாட்டேங்குது.  கொஞ்சம் நடந்து கொடுத்தா நல்லா இருக்கும்..” என்றார்.

“ஊரடங்கு இருக்கு, போங்க சார், வீட்டுக்குப் போங்க, வெளிய எல்லாம் வரக்கூடாது” என்று விரட்டினார்கள்.

வாழ்க்கையில் ஒருமுறை கூட போலீஸை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் வந்ததில்லை.  குற்றவாளிக் கூண்டில் நின்றதுபோல் உணர்ந்தார்.  உடல் நடுங்கியது.  ஆத்மா பயந்து ஒடுங்கியது.  அழுதுவிடுவோமோ எனப் பயந்தார்.  மனதை திடப்படுத்திக் கொண்டு திரும்பி வந்துவிட்டார்.  நல்லவேளை யாரும் பார்க்கவில்லை.

காலையில் எழுந்து, குளித்து பால்கனியில் அமர்ந்து விட்டால், ”அடுத்தது என்ன?” என்கிற கேள்வி மண்டையை உடைக்கும்.  எதுவுமே செய்யாமல், செயல்படாமல் இருப்பதற்கு, எதற்கு இந்த நாள் உருண்டு கொண்டிருக்கிறது என்று நினைத்தால், வெறுமை மனதை அழுத்துகிறது.

வெறுமனே நாட்களை கடத்தும் காலங்களில் மனது மரணத்திற்கு தயாராகிவிட்டிருந்தது.  இரவு படுத்து தூங்கினால் தூக்கத்திலேயே போய்விட வேண்டும் என்று பேசுவார்.   ஆனால் கால கட்டம் மீண்டும் புதிய மரண பயணத்தை உருவாக்கியிருந்தது.  பகலிலேயே கண்களுக்கு தெரியாத உயிர்க் கொல்லி இரவின் இருளில் அறையெங்கும் நிரம்பி மேலே போட்டு அழுத்தியது.  உண்மையான மரணத்திற்கு நடுவே இது என்ன திருட்டு மரணம்? என்று நினைத்தார்.

காலையும் மாலையும் காலாற நடந்து சென்று வந்தால் உடல் சற்று தெளிவு பெறும்.  எதிரே வருவோரிடம் ஓரிரண்டு வார்த்தைகள் பேசினால் மனம் நிம்மதி பெறும்.  ஆரம்ப காலங்களில் நிறைய நண்பர்கள் எதிர்ப் படுவார்கள்.  நாட்கள் கரையக் கரைய அவர்கள் காணாமல் போய்க் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பக்கத்து அக்கத்து வீட்டுக்காரர்கள் தான் இப்போது கண்டு கொள்கிறார்கள்.  அவர்களையும் காண முடியாமல் செய்துவிட்டது காலம்.  தெருவின் கடைசி வீட்டில் இருந்த நடுத்தர வயதுக் காரர் ஒருவர் கடந்த வாரம் இறந்து விட்டார் இந்த புதிய வியாதியால்.  ஒரே தெருவில் இருந்தும் இழவு கேட்டு செல்ல முடியவில்லை.  மகன் மட்டும் போய்விட்டு வந்து உடனே குளித்தான்.  அப்படி உடனே குளிக்கிற வழக்கம் உள்ளவன் அல்ல அவன்.

இருபது பேருக்கு மேல் அனுமதிக்கவில்லையாம் போலீஸ்.  இத்தனைக்கும் பிணத்தை கண்ணில் கூட காட்டாமல் மருத்துவமனை ஊழியர்களே அடக்கம் செய்துவிட்டார்களாம்.  கடைசியாய் மருத்துவமனையில் தனிமைப்படுத்துவதற்காக உள்ளே சென்ற போது பார்த்ததுதானாம்.  பிறகு ‘பாடி’யைக் கூட பார்க்க முடியவில்லை என்று பிள்ளைகள் அரற்றியிருக்கிறார்கள்.  இது என்ன கொடுமை கட்டிப்பிடித்து அழுகக்கூட கொடுத்துவைக்கவில்லையே!

மருத்துமனை ஊழியர்கள் உடல்களை அடக்கம் செய்யும் லட்சணம் டி.வி.க்களில் பார்த்து அதிர்ச்சியாய் இருந்தது.  “பெருமாளே, செத்தாலும் இந்தக் காலத்தில் சாக வேண்டாம் பெருமாளே” என்று வேண்டிக் கொண்டார்.

சும்மாவே இருக்கும்போது உடலில் சோம்பேறித்தனம் குடிகொண்டது.  நாட்கள் செல்லச் செல்ல, அவசரமாய் எழுந்து, குளித்து என்ன செய்யப் போகிறோம் என்று தோன்றியது.  கோயிலுக்கு போக வேண்டியில்லாததால்  குளிப்பது ஒழுங்கற்றுப் போனது.  உடைகள் மாற்ற வேண்டிய அவசியமற்றுப் போனது.

ஓடி ஓடி உழைத்த உடல், வெறுமனே உயிர் இருப்பதால் மட்டுமே ‘இருப்பது’ என்பது வேதனையாக மாறியது.  சுத்தமாக சாப்பாடு இறங்கவில்லை.  மகனும் மருமகளும் எத்தனையோ வற்புறுத்தினார்கள்.  “நான் என்ன சாப்பிட மாட்டேன்னா சொல்றேன், அது இறங்க மாட்டேங்குது” என்றார்.

“அப்பா காலாற கொஞ்சம் நம்ம தெருவுகுள்ளயே நடந்துட்டு வாங்களேன்” என்றான் மகன்.  தெரு தாண்டி சாலை ஏறினால் போலீஸ் கேள்வி கேட்கும்.  “பரவாயில்லைடா, நடக்குற தெம்பு இல்லை உடம்புல” என்றார்.

செய்வதறியாமல் திகைத்தான் மகன்.  தொண்ணூற்று மூன்று வயதிலும் வேக வேகமாய் நடந்து சென்று கோயில் சுற்றி அவர் திரும்பும் அற்புதத்தை கண்டு வியக்காதவர்கள் இல்லை.  இப்போது அவரது பாதையை யாரோ, செயற்கையாய் ஏற்படுத்திய தனிமையால் அழித்துக் கொண்டு வருகிறார்கள் என்று அவனுக்கு தோன்றியது.

ஒரே ஆணியில் நாள் கணக்காய், மாதக் கணக்காய் தொங்கிக் கொண்டிருந்த நாட்காட்டி, காற்றாடியால் இடமும் வலமும் ஆடிக் கொண்டிருந்தது.  அவற்றில் கிழிக்கப்பட்ட தாள்கள் புதிதாய் ஏதும் செய்யவில்லை.  நாட்காட்டிகள் காலத்தினூடே ஏன் பயணம் செய்வதில்லை என்று நினைத்துக் கொண்டார்.  மைல்கற்கள் அடையாளக் குறியீடுகள் தானே, அவைகளே மைல்கள் இல்லைதானே !  ஏதோ புரிந்தது போல் சிரித்துக் கொண்டார்.

கனவில் வந்தது போல் ஒரு மைல்கல் ‘0’ என்று எழுதியிருந்தது.  அவருடைய மகனின் கைகளில் சில பிடுங்கப்பட்ட கற்கள் இருந்தன.

இழவு கேட்டு வந்தவர்கள் எல்லாம் ஒரே மாதிரி ஆறுதல் சொன்னார்கள். 

“நல்ல வேளை, நெஞ்சு வலியால் இறந்தார்.  இல்லைன்னா கஷ்டமாப் போயிருக்கும்”

அதனால் வீட்டில் வைத்து எல்லா சடங்குகளும் செய்து, சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடிந்தது ஒரு ஆறுதலாய் இருந்தது.  இன்னும் கொஞ்ச காலம் அவர் உயிரோடு இருந்திருக்க முடியும் என்று மகன் நினைத்தான்.

ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்துக் கொண்டிருந்தது தொலைக்காட்சி.

Series Navigationகவிதைகள்நம்மாழ்வாரின் அன்னை அவதரித்த திருத்தலம்
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    சீராளன் ஜெயந்தன் எழுதிய திருட்டு மரணம் நெஞ்சைத் தொட்டது.கொரோனா காலக் கொடும் அவஸ்தைகளைக் கொரோனா என்று குறிப்பிடாமலே உணர்த்தி விட்டார்.முதுமையின் இடர்களை உணர்த்திவிட்டார் .வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *