மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்

author
1
0 minutes, 34 seconds Read
This entry is part 1 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

கோ. மன்றவாணன்

      கொவைட் 19 கொள்ளைநோய்க் கொடுமையின் சாட்சியாகத் திகழ்கின்ற தலைமுறை நாம். இமைப்பொழுதும் இடைவெளி இன்றி இரவும் பகலும் இயங்கிக் கொண்டிருந்த நம் நாடு, ஐந்து மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. எப்பொழுதுதான் மீட்சி என்று யாருக்கும் தெரியவில்லை. மக்கள் மட்டும்தாம் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் என்றில்லை. தெய்வங்களுக்கும் அதே நிலைதான். நூற்றாண்டுக்கு முந்தைய கொள்ளைநோய்க் காலத்தில்கூடக் கோவில்கள் மூடப்பட்டதாகக் குறிப்புகள் இல்லை.

      அரசுச் சம்பளம் வாங்குவோர், ஓய்வூதியம் பெறுவோர் சமாளித்துக் கொள்கிறார்கள். பணச்செழுமை மிக்கவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். நடுத்தரத்தினர் சிலபல இடையூறுகளைத் தாண்டி வாழ்வை நகர்த்திக் கொள்கிறார்கள். அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் அந்தந்த நாள் வாழ்க்கையை நடத்த முடியும் என்றிருக்கும் ஏழை மக்களின் நிலையை எத்தனைபேர் உணர்ந்து வருந்தி இருப்பார்கள் என்று தெரியாது.

      வறியவர்களின் குரல் எவர் காதில் விழுகிறது? ஏழைகளின் கண்ணீர் எவர் இதயத்தை நனைக்கிறது?

      வேலை இல்லை. வருமானம் இல்லை. வயிற்றுக்குச் சோறு இல்லை. வாழ்வதற்கு வாய்ப்பு ஏதும் தொலைதூரம் வரை புலப்படவில்லை. கோவில்களில் பகல் வேளைகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதுவும் நின்று போனது. பள்ளிகளில் உணவு அளிக்கப்பட்டது. அதுவும் தடைப்பட்டுவிட்டது. யாரேனும் உணவுப் பொட்டலம் வழங்க மாட்டார்களா என்று கை ஏந்தியபடி நாளைத் தள்ளுகிறவர்கள் பெருகிவிட்டார்கள்.

      அரசியல் கட்சியினர், தொண்டு அமைப்பினர் பலர் பொருள்திரட்டி, ஏழை எளிய மக்களுக்குக் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வழங்கி வந்தனர். அதுவும் தற்போது படிப்படியாகக் குறைந்து பல இடங்களில் இல்லாமலேயே போய்விட்டது.

      தனிப்பட்ட சிலர் தங்கள் சொந்தப் பணத்தில் தினந்தோறும் மக்களுக்குக் கபசுரக் குடிநீர் அளித்து வருகின்றனர். முகக்கவசங்களைச் சிலர் வழங்கி வருகின்றனர். விளம்பர வெளிச்சத்துக்கு வராமலேயே ஏராளமானோர் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அருந்தொண்டு ஆற்றுகின்ற இவர்கள் எல்லாரையும் பாராட்ட வேண்டும்.

      இந்தக் கொள்ளைநோய்க் காலத்தில் ஏழைகளுக்கு உதவும் நல்ல உள்ளங்களை ஊடகங்களின் வழியாக அறிந்து வருகிறோம். என் பார்வையில் பட்ட ஊடகத் தகவல்களின் அடிப்படையில் அவர்களில் சிலரை மனதார நினைத்துப் போற்றவே இக்கட்டுரையில் பதிவிடுகிறேன்.

ஃ ஃ ஃ  

      மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை வைத்துள்ளவர் மோகன். அவருடைய அன்புமகளின் படிப்புச் செலவுக்காக ஐந்து லட்சம் ரூபாய் சேமித்து வைத்திருந்தார். இந்தச் சமயத்தில்தான் இந்தியா முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அவர் வாழ்ந்த பகுதியில் ஏழை எளிய மக்களே மிகுதி. அவர்களின் பசிக்குரல் அவருக்கும் அவரின் அன்பு மகள் நேத்ராவுக்கும் கேட்டது. அங்குள்ள குடும்பங்களுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றைப் பல நாட்களாகத் தொடர்ந்து வழங்கி மகிழ்ந்தனர். அடுத்தடுத்த மாதங்களில் தம் நிலைமை என்னாகும் என்று தெரியாத நிலையிலேயே தங்கள் சேமிப்பை ஏழை மக்களின் பசிப்பிணி போக்கவே செலவு செய்துள்ளனர் அப்பாவும் மகளும்.

      தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் படிப்புச் செலவுக்கான பணத்தை ஏழைகளுக்காகச் செலவிட்டு உதவிய அந்த இளம்பெண்ணை எவ்வளவு போற்றினாலும்  தகும். நம் இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மோடி அவர்களும் மனதின் குரல் நிகழ்ச்சியில் அந்தப் பெண்ணைப் பாராட்டிப் பேசி உள்ளார்.

ஃ ஃ ஃ

      கருநாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் தாஜ்முல் பாஷா மற்றும் முஸாமுல் பாஷா என்று இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்தே தொழில்செய்து வந்தனர். இந்தக் கொள்ளைநோய்க் காலத்தில் ஏழை மக்கள் படும் அல்லல்களை நேரில் கண்டு மனம் உருகினர். தம் குழந்தைப் பருவத்தில் தாய்தந்தை இழந்து பாட்டியிடம் வளர்ந்த இவர்களுக்கு மதவேற்றுமை பாராது பலர் உதவி உள்ளனர். அதன் நன்றிக் கடனாகவோ என்னவோ… ஏழை மக்களுக்கு உதவ விரும்பினர். அவர்கள் வாழ்ந்த பகுதியில் உள்ள ஏழை மக்கள் அனைவருக்கும் ஊரடங்கு முடியும்வரை உணவளிக்க முடிவு செய்தனர். தம் வீட்டருகே ஒரு கூடாரம் அமைத்து அங்கே சமையல் கூடம் ஒன்றை உருவாக்கினர். மளிகைப் பொருட்கள், காய்கறிகள் யாவையும் வாங்கிக் குவித்தனர். நாள்தோறும் உணவு சமைத்து அந்த மக்களுக்கு வழங்கினர். இவர்கள் இவ்வளவு செய்வதற்கு ஏது அவ்வளவு பணம் என்று யாரும் கேட்கலாம். தம்முடைய நிலத்தை 25 லட்சத்துக்கு விற்றுத்தான் இந்த அருந்தொண்டைச் செய்துள்ளனர்.

      இவர்களைப் போலவே பலர், தமிழகத்தின் பல பகுதிகளில் வறியவர்களுக்கு உணவு சமைத்து வழங்கி இருக்கிறார்கள். வழங்கியும் வருகிறார்கள்.

ஃ ஃ ஃ

      தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர். பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருபவர். பொதுமுடக்கக் காலத்தில் அவர் மதுரையில் இருக்க வேண்டியதாயிற்று. அங்குள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் தங்கியபடி, மதுரை மாநகரில் பிச்சை எடுத்து வந்துள்ளார். அதில் சேர்ந்த பத்தாயிரம் ரூபாயைக் கொரோனா நிதியாக மதுரை ஆட்சித் தலைவரிடம் வழங்கினார். அத்தோடு விட்டுவிடவில்லை. அதுபோல் எட்டு முறை வழங்கினார். இதுவரை பிச்சை எடுத்தே எண்பதாயிரம் ரூபாய்வரை கொரோனா நிதியாக ஆட்சியரிடம் அளித்துள்ளார். இவரை ஊடகத்தினர் விசாரித்த போது, இதற்கு முன்பேகூட அவர் தன் பிச்சை வருமானத்தில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மேசைகள் நாற்காலிகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து வந்துள்ளார் என்பதும் தெரிந்தது. வயது முதிர்ந்த ஒரு பிச்சைக்காரர், தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தான் சேர்த்த எண்பதாயிரம் ரூபாயையும் கொரோனா நிதிக்காக அரசிடம் கொடுத்துள்ளார் என்பதை நினைத்தால், கடையேழு வள்ளல்களையும் வென்ற வள்ளல் இவர் அல்லவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இவருக்குப் பணம்கொடுத்தால் நல்ல செயலுக்குச் சென்று சேரும் என்று மக்களும் இவருடைய பிச்சைத் தட்டில் தாராளமாகப் பணம் போட்டுள்ளனர்.

      சில நாட்களுக்கு முன் நடந்த சுதந்திர நாள் விழாவில் இவருக்கு விருது வழங்க மதுரை ஆட்சியர் முடிவு செய்துள்ளார். அரசு அலுவலர்கள் அவரைத் தேடித் தேடி அலைந்தனர். அவருக்கேது முகவரி? அவருக்கேது அலைபேசி? அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சுதந்திர நாளில் அவருக்கு விருது வழங்க முடியாமலேயே விழா நடந்து முடிந்தது. மறுநாள் இது ஊடகங்களில் செய்தியாக வெளியானது. அதன் பின்னரே அவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அந்த விருதை அளித்துள்ளார்.

ஃ ஃ ஃ

      தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். குழந்தைப் பருவத்தில் இருக்கும் போதே பெற்றோரை இழந்தவர். அருப்புக்கோட்டையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர். அங்கிருந்தே படித்தவர். இளம்அறிவியல் பட்டம் பெற்றவர். வேலை தேடிச் சென்னை சென்றுள்ளார். பகலில் வேலை தேடுவதும் இரவில் மெரீனா கடற்கரையில் படுத்து உறங்குவதுமாக இருந்தார். அவ்வாறு படுத்திருந்த போது அவருடைய சான்றிதழ்கள் உள்ளிட்ட உடைமைகள் கொண்ட பையை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். பணி கிடைக்காததால் பல பகுதிகளில் பிச்சை எடுத்துள்ளார். பின்னர் மதுரையில் தொடர்வண்டி நிலையத்தில் தங்கியபடிப் பிச்சை எடுத்து வாழ்வை நகர்த்தி உள்ளார். குப்பை பொறுக்கி விற்றும் உள்ளார். காவல் துறையினர் விரட்டியதால் அங்கிருந்து நடந்தபடியே அலங்காநல்லூர் வந்த போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

      அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. தேநீர்க் கடை திறக்கப்படவே இல்லை. கையில் வைத்திருந்த கொஞ்ச பணத்தைக் கொண்டு தேநீர் விற்கத் திட்டம் இட்டார். மிதிவண்டியையும்  தேநீர்க் குடுவையும் வாடகைக்கு வாங்கித் தேநீர் தயாரித்துத் தெருதோறும் சென்று விற்றார். எங்கும் தேநீர்க் கடை இல்லாததால் வியாபாரம் நன்றாக நடந்தது. தொடக்கத்தில் முந்நூறு ரூபாய் வரை ஊதியம் கிடைத்தது. அப்போது தெரு ஓரங்களில் வறுமை வாழ்வை நடத்தியவர்களுக்கு இலவசமாகவே தேநீர் வழங்கி உள்ளார். சற்று வருமானம் கூடுதலாகக் கிடைத்ததும் அதைக்கொண்டு  உணவுப் பொட்டலங்களை வாங்கி அந்தச் சாலையோர மக்களுக்குக் கொடுத்துள்ளார். பின்னர் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஊரில் தேநீர்க் கடைகள் திறக்கப்பட்டன. அதனால் முன்போல் அவருக்கு வியாபாரம் ஆகவில்லை. இருந்தாலும் அலுவலகங்களில், நிறுவனங்களில், பட்டறைகளில் உள்ளோர் தேநீர் வாங்கி ஆதரித்தனர். உணவை வாங்கித் தருவது கட்டுப்படி ஆகவில்லை என்பதால், தான் தங்கி இருந்த இடத்தில் தானே உணவு சமைத்து அந்த மக்களுக்கு அளித்து வந்துள்ளார். ஆதரவற்று வளர்ந்த பிள்ளைக்குத்தான் ஆதரவற்றவர்களின் துயரங்கள் யாவும் தெரியும் என்பதை அவர் உணர்ந்துள்ளார். இந்தச் சேவைகளுடன் இன்னொரு உதவியையும் அவர் செய்துள்ளார்.

      சோழிங்க நல்லூரில் உள்ள சூர்யகலா என்ற பெண்மணி வீட்டுவேலை செய்து வந்துள்ளார். கொரோனா அச்சத்தால் வீட்டுவேலை யாரும் தரவில்லை. தன் பிள்ளைகளோடு வாடி வதங்கிய அந்தப் பெண்மணியின் கதறலை வாட்ஸப் வழியாகத் தமிழரசன் அறிந்துள்ளார். அந்தப் பெண், தனக்குத் தையல் வேலை தெரியும் என்றும் யாரேனும் தையல் இயந்திரம் வாங்கித் தந்தால் பிழைத்துக் கொள்வேன் என்றும் சொல்லி உள்ளார். சென்னையில் உள்ள தன் நண்பர் வெங்கடேசனுக்குப் பணம் அனுப்பி ஒரு தையல் இயந்திரமும் அதனுடன் துணைப்பொருட்களையும் வாங்கி சூர்யகலாவுக்குத் தரச் செய்துள்ளார். அது மட்டுமின்றி வீட்டுக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களையும் வாங்கித் தந்துள்ளார். இந்த உதவிகளைச் செய்த கையோடு அவருடைய நண்பர் அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்த படியே காணொளி அழைப்பு மூலம் பேசி உள்ளார். தனக்கு உதவி செய்த தமிழரசனையும் அவருடைய நிலைமையையும் பார்த்த அந்தப் பெண், கண்ணீர் பெருகி அழுதுள்ளார்.

ஃ ஃ ஃ

      ஆயிரம் கல் தொலைவுக்கு அப்பால் இருக்கும் தம் வீடுகளுக்கு நடந்தே சென்ற தொழிலாளர்களின் பாதங்கள் வலித்த போது, சிலரின் இதயங்கள் வலித்துள்ளன. அவர்களுக்காக நெடுஞ்சாலைகளில் காத்திருந்து தண்ணீர், உணவு, பழங்கள் வழங்கிய அந்த நெஞ்சங்கள் யார்யார் என்று யார் அறிவார்?  

      பொதுமுடக்கக் காலத்தில் ஏழைகள் படும் துயரங்களைச் சொல்லத் தொடங்கினால் முடிக்க முடியாது. இந்நிலையில் நம்மையே நம்பி வாழும் சில விலங்குகளுக்குத் தாம் படும்பாட்டைச் சொல்ல மொழி தெரியவில்லை. சுற்றுலா இடங்களில் மக்கள் தரும் உணவை நம்பித்தான் குரங்குகள் உள்ளன. ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவில்லை. அதனால் அவற்றுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை. காட்டுக்கும் செல்லவில்லை. நம்மிடையே அவை பழகிவிட்டன. பசியால் அலையும் குரங்குகளுக்காகச் சிலர் பழங்கள் வாங்கித் வழங்கி இருக்கிறார்கள். சிலர் உணவு சமைத்துத் தந்திருக்கிறார்கள்.

      தமிழகத்தின் பல பகுதிகளில் சிலர், தெரு நாய்களுக்கு நாள்தோறும் உணவு அளித்து வந்துள்ளார்கள்.

      இத்தகையோரின் பேரன்பை மனிதநேயம் என்ற சொல்லுக்குள் அடக்கிவிட முடியாது. அவர்களின் இதயங்கள் விலங்குகளுக்கும் இரங்குவதால் அந்த அன்பை உயிர்நேயம் என்றுதான் சொல்ல வேண்டும்..

      தன்னைப் போலப் பிறரை எண்ணும் நெஞ்சம் கொண்டவர்கள் எண்ணிக்கையில் மிகமிகக் குறைவானவர்கள். அவர்களால்தாம் அடுத்தவர்களின் துயரைத் தம் துயர்போல் உணர முடியும்.

      இந்த ஊரடங்குக் காலத்தில் இத்தகைய இதயங்கள் உருகி உருகிப் பிறருக்குச் செய்த தொண்டுகளைக் காலம் மறந்துவிடக் கூடும். ஆனால் கதிரும் நிலவும் சாட்சிகளாக என்றும் இருக்கும்.

Series Navigationபுதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்தி
author

Similar Posts

Comments

  1. Avatar
    வெ. நீலகண்டன் says:

    தனக்கென வாழ பிறர்க்குரியாளர் பண்ணர்கள் வாழ்க! கரோனாவில் பல ஆயிரம் மக்கள் மடிவதைக் குறித்த குறிப்பு எதுவும் இல்லையே என்று டைம்ஸ் நாளிதழ் முதல் பக்கம் முழுவதும் வெளியிட்டு மரியாதை செய்தது. அதுபோல சிறுகுடி வாழுநர் பெரிய மனங்களை ஒருசேர பதிவிட்ட மன்றவாணன் ஐயா அவர்களுக்குப் பாராட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *