கால தேச வர்த்தமானங்களைக் கடந்து நிற்பதுதான் இலக்கு என்று இலக்கியம் வளர்ந்து கொண்டு வருகிறது. ஒரு சீரிய இலக்கியவாதியின் பார்வை, நட்டு வைத்த மைல்கல் போல அன்றும் அதற்கு அப்புறமும் தான் முதலில் கொண்ட அபிப்பிராயத்தையே ஒரு சுமையாக முதுகில் ஏற்றிக் கொண்டு, கண் திறந்து பார்க்காத நிரட்சரகுட்சியாக இருப்பதில்லை. மாறுதல்களின் வர்ணஜாலத்தில் மனதைப் பறி கொடுப்பவன்தான் எழுத்தை ஆராதிக்கும் இலக்கியவாதியாக மிளிர்கிறான். கோஷங்கள், கட்சி ஈடுபாடுகள், ஜாதிப் பிரேமை, மேற்கைப் பார்த்துக் கூவும் ‘இச’ வழிபாடுகள் போன்ற பிசுநாரிகளைத் தவிர்த்துக் கலை எழுகிறது. கலைஞனும்.
ஜானகிராமன் 1982ல் காலமானார். அவர் காலமானதற்குச் சற்று முன்புதான் எழுதினார் என்று வைத்துக் கொண்டாலும் இன்றையக் கணக்குக்குக் கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் முன்பு “விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும்” என்ற சிறுகதையை எழுதியிருக்க வேண்டும்.. (ஏனெனில் இதை அவர் எழுதிய வருட விபரம் இதை எழுதுபவர் வசத்தில் இல்லை) , அவர் எழுதிய மற்றொரு சிறுகதை “கொட்டு மேளம்” 1951ல் வெளிவந்தது. இன்றைய கணக்குக்கு சுமார் எழுபது வருஷங்களுக்கு முன்பு.
எதற்காக இந்த வருடக் கணக்கு? மேற்குறிப்பிட்ட இரு கதைகளும் மருத்துவத் தொழிலில் இருக்கும் மருத்துவர்களைப் பற்றியது. கால வித்தியாசங்களையும் மனிதன் அதனால் தன் வாழ்வில் ஏற்றுக் கொள்ளும் வேறுபாடுகள் நிறைந்த நிலைகளையும் இவ்விரு சிறுகதைகளின் ஒப்பீடு மூலம் ஒருவர் அறிய முடியும். கொட்டு மேளத்தில் வரும் டாக்டரை இன்று சந்திப்பவர்கள் அவரை ஆச்சரியத்துடனும், சில சமயம் ஏளனத்துடனும் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. ஆச்சரியம், இப்படி பீஸ் வாங்காமல் அல்லது சிட்டையில் கடன்கொடுத்ததாகப் பீஸை எழுதிக் கொண்டு அதை வசூலிக்காமல் இருக்கும் ஒரு டாக்டரா என்று. ஏளனம், பிழைக்கத் தெரியாத மனிதராய் இப்படியெல்லாம் ஒரு மருத்துவர் இருந்திருக்கிறாரே என்று. மாறாக,விஞ்ஞான வெட்டியானில் வரும் டாக்டரோ, இறைவன் பறிப்பதற்கு முன்னாலேயே தன்னுடைய பீஸை வசூலித்து நோயாளியைச் சாவுக் கிடங்குக்குள் தள்ளி விடக்கூடிய வித்தகர். இருவரையும் கால வித்தியாசம் புடம் போட்டுப் பார்க்கிறது.
கொட்டு மேளத்தில் வரும் டாக்டர் தன்னைப் பற்றி நன்கு படித்தவர். எம்.பி.பி.எஸ். எல்லா வருஷமும் முதல் பிரைஸ் அடிச்சுப் பாஸ் பண்ணி விட்டுக் கடைசியில் சாண் ஏறி முழம் சறுக்கும் வித்தையில் அடிபட்ட அனுபவஸ்தர் என்று அவருக்கே தெரியும். அவரை விட ஒரு வயது இளையவனான அவரது அண்ணியின் அத்தை மகன் ஆர்மியில் சேர்ந்து மேஜர், கர்னல் என்று மேலே போய்க் கொண்டிருக்க, டாக்டர் ஜெனரல் ஆஸ்பத்திரியில் இரு நூறு ரூபாய்க்கு மோளம் அடிக்கிறார். அவருக்கே தன் மீது கழிவிரக்கம் ஏற்படுகிறது. கதை ஆரம்பிக்கும் நாளில் அவர் வீட்டு வாசல் வழியாகத் தவில் சத்தத்துடன்.ஓர் ஊர்வலம் போகிறது ‘மாரி யப்பருக்கு ஜே !” என்ற பெருங் கோஷத்துடன். விறகுவாடி மாரியப்ப பிள்ளை ஒரு மோட்டார் காரில் கழுத்தில் மாலைகளுடன்
உட்கார்ந்து ஊர்வலம் போகிறார். அவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு இந்தக் கொட்டுமேள பவனி.
ஊர்வலம் போன பிறகு தனது இருக்கைக்குத் திரும்பும் டாக்டர் அவர் கூட இருக்கும் பார்வதியிடம் (அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் !) பீரோவிலிருந்து ஒரு நோட்டை எடுத்து ஒரு குறிப்பிட்ட பக்கத்தைப் பார்க்கச் சொல்லுகிறார். அதில் ‘மாரியப்ப பிள்ளை – முன்னூறு ரூபாய்’ என்று போட்டிருக்கிறது. இந்த மாரியப்பன் டாக்டருடன் அஞ்சாங் கிளாஸ் மட்டும் படித்து விட்டுப் படிப்பை நிறுத்தி விட்டவன். டாக்டர் என்று போர்டு போட்டுக் கொண்ட நாளிலிருந்து அவரிடம்தான் வைத்தியம் பார்த்துக் கொள்கிறான். எலெக்ஷனுக்கு எக்கச்சக்க செலவு பண்ணுகிறவனுக்கு டாக்டர் பீஸ் கொடுக்க மனம் வரவில்லை.
தன்னை முன்னிறுத்தும் செயல் திறன் தனக்கு இல்லாததும், தான் அதிர்ஷ்டக் கட்டையாக இருப்பதும்தான் தன் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தடைக்கற்களாக இருந்தன என்று டாக்டர் பார்வதியிடம் சொல்லுகிறார்.
அவர் வார்த்தையில்:
“நானும் பெரிய டாக்டர் வேலைக்கெல்லாம் எழுதிப் போட்டேன். ஆனா என் அதிர்ஷ்டம் எனக்கு முந்திய ரெயில் ஏறிப் போக ஆரம்பிச்சது….பேப்பரைப் பார்க்கும் போது கொஞ்சம் நப்பாசை தட்டும் அடிக்கடி. ஆனா ஒரு ஆச்சரியம் பாரு. எந்த வேலைக்கும் நம்மை விட ஒண்ணு இரண்டு வயசு குறைச்சலாகவே கேப்பாங்க எல்லாரும். இந்தப் பய எங்கயாவது அப்ளிகேஷன் போட்டுறப்
போறானோன்னு பயந்துகிட்டே விளம்பரம் கொடுத்தாப்போலத் தோணும்.”
“முன்னுக்கு வரதுங்கறது சில ஆட்களுக்குத்தான் முடியும்.மாரியப்பன் மாதிரி, தானே கொட்டு மேளம் கொட்டிக்கணும். இல்லாட்டி இன்னொருத்தரை விட்டு ‘இவரு இந்திரன், சந்திரன்’ னு கொட்டச் சொல்லணும். மாரியப்பன் மாதிரி நம்மாலே செஞ்சுக்க முடியாது. நான் சொல்றது சரின்னு கோயில்ல கொட்டுமேளம் கொட்டுது பார். நம்மைப் படைச்ச பெருமாளுக்கே கொட்டுமேளமெல்லாம் கொட்ட வேண்டியிருக்கு. இல்லாட்டி அவர் காலமே எளுந்திருக்கிறதும் யாருக்குத் தெரியும்? நாம் பாட்டுக்குத் தூங்கிகிட்டே இருப்போம். கொட்டுமேளம் கொட்டினாத்தான் ஜயிக்கலாம். ஜயிச்சாலும் கொட்டு மேளம் கொட்டலாம்.”
அவர் இம்மாதிரிப் பேசுவதைக் கேட்டு “அப்ப நீங்க தோல்வி அடைஞ்சவரா?” என்று பார்வதி கேட்கிறாள்.'”நான் இப்ப அது மாதிரியா பேசறேன்? கொட்டுமேளம் ஆண்டவனுக்குத்தான் வேணும். எனக்கு வேண்டியதில்லை. நான் அவரை விட உசத்தி தெரியுமா?”
டாக்டர் அகந்தையே உருக் கொண்டு நின்றார். உலகத்தின் சிறுமையெல்லாம் அவர் காலடியில் கிடந்தது. பார்வதி அவரையே
பார்த்துக் கொண்டு விசுவரூபம் எடுத்து நின்றவருடைய வெற்றியைப் பார்த்துக் கொண்டு நின்றாள்… வராத கடன், சறுக்கல்கள், கிட்டாத வாழ்வு – எல்லாத் தோல்விகளும் திரண்டு வந்து வெற்றியாகவே காட்சியளித்தன. நிறைவும் திருப்தியும்
நக்ஷத்திரங்களைப் போல அவருடைய நெஞ்சு வெளியை நிறைத்துக் கொண்டிருந்தன. அவர் நெஞ்சு பொங்கி வழிந்தது. ‘எடுத்த காரியம் யாவினும் வெற்றி; விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி’ என்று பிலகரி ராகத்தில் வீர ரசத்துடன் பாடிக் கொண்டிருந்தார்.
சந்தேகமில்லை. மருத்துவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகளை கி.பி. நான்காம் நூற்றாண்டில் உறுதிமொழியாக எடுத்துக் கொள்ள வைத்த கிரேக்க மருத்துவர் ஹிப்போகிராட்ஸின் இருபதாம் நூற்றாண்டுச் சீடர்தான் இந்த டாக்டர் !!
ஞானவானாக இருக்க வேண்டிய ஒரு மருத்துவர், அதே ஹிப்போகிராட்ஸின் உறுதிமொழிகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு,ஞான வெட்டியானாக மாறி விடுவதை இரண்டாவது கதை சொல்லுகிறது. அந்தப் பெரிய பாலிகிளினிக்கில் ஒரு பெரிய டாக்டரும் அவருக்கு உதவியாக சின்ன டாக்டர்களும், நர்ஸுகளும், வேலையாட்களும் இருக்கிறார்கள். பெரிய டாக்டர் அமெரிக்கா லண்டன் ஜெர்மனி எல்லாம் படிச்சிட்டு வந்தவர். கதையில் நோயாளியைப் பார்க்கப் பெரிய டாக்டர், இரண்டு மூன்று டாக்டர்கள் இரண்டு நர்ஸுகளுடன்ஒரு முக்கால் நிமிஷம் வந்து விட்டுப் போகிறார். அதற்கு முப்பத்தி ஐந்து ரூபா கட்டணம். இது காலையில். மாலை ஒரு சின்ன டாக்டரும் நர்ஸும் வர பதினைந்து ரூபா. ஆக ஒரு நாளைக்கு ஐம்பது ரூபா. சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு நாற்பத்து நாலு நாளுக்கு இதுவரை ரெண்டாயிரத்து சொச்சம், ஸ்கேனிங், அது தவிர இன்னும் சொச்ச சோதனைன்னு ஆறாயிரம், ஆபரேஷனுக்கு பதினைஞ்சாயிரம்.. அது தவிர இன்னும் பன்னிரெண்டாயிரம் ஆகும் டிஸ்சார்ஜ் ஆகும் வரை.என்று ஆஸ்பத்திரியில் கூறியிருக்கிறார்கள். ஆக ஒரு காலை வெட்ட நாற்பதாயிரமா என்று நோயாளிப் பெண்ணின் அண்ணன் அவளது கணவனிடம் கேட்டுக் குமுறுகிறார். ‘பெரிய டாக்டரைப் போய்க் கேட்கிறேன்’ என்று மைத்துனர் குமுறுவதைக் கேட்டு மாப்பிள்ளை “அப்படியெல்லாம் ஒண்ணும் செய்திடா தீங்க அப்புறம் அவளை வெளியே விடமாட்டாங்க. பெரிய டாக்டர் கிட்ட பெரிய பெரிய தலைவர்ங்க, அதிகாரிங்க எல்லாம் வைத்தியம் பாத்துக்கிறாங்க. ஒண்ணும் நடக்காது” என்கிறான் கூடவே அடுத்த ரூமில் இருக்கும் மைசூர்க்காரங்க பழைய பில் இருபதாயிரம் கொடுத்த பின்புதான் காலையே எடுக்க முடியும் என்று ஆஸ்பத்திரியில் சொல்லி விட்டதால் அவரின் தம்பி அடித்துப் பிடித்து ஊருக்குப் போய் நிலத்தையோ நகைகளையோ,
வீட்டையோ அடமானம் வச்சுப் பணத்தைக் கொண்டு வந்து கட்டிய பிறகுதான் ஆப்பரேஷனாச்சு. பாதத்தோட போக வேண்டியது பணம் கொண்டு வர ரெண்டு நாள் தாமதமானதுனால, கணைக்கால் வரை புரை ஏறி கணைக்கால் வரை வெட்டி விட்டார்கள் என்னும் கதையை மாப்பிள்ளை சொல்லுகிறான். அப்போது அவர்களைக் கடந்து செல்லுபவர் தனது தங்கை பையன் வயித்து வலியென்று நான்கு மாதம் கஷ்டப்பட்டதால் அங்கு வந்து சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அவனுக்கு நாலு எக்ஸ்ரே, ரத்தம் மூத்திரம் எச்சில்ன்னு சோதனை எல்லாம் செஞ்சாச்சு. ஆத்மான்னு ஒண்ணு இருந்தா அதை மாத்திரம்தான் சோதிக்கலே என்கிறார். மேலும் அவர் இப்படிப்பட்ட கொள்ளைக்காரன் ஒரு விஞ்ஞான வெட்டியான் என்கிறார் அவர். அங்கிருந்து கிளம்பி மாப்பிள்ளையும் மச்சானும் அவர்களுடைய நோயாளி இருக்கும் அறைக்கு வரும் போது வழியில் அவர்களைத் தோட்டி பார்க்கிறான். மாப்பிள்ளையிடம் ‘ஆஸ்பத்திரிக்காரர்கள் வெட்டியெறிந்தவைகளை அவன் சுடுகாட்டில் போட பதினஞ்சு ரூபாதான் கொடுக்கறாங்க. பேஷண்டுகிட்டே இருந்து நாப்பது அம்பதுன்னு பில் போட்டு வாங்குறாங்க. எங்களுக்கு ஆபீசில் சொல்லி முப்பது நாப்பதாவது கொடுக்கச் சொல்லுங்க’ என்று சொல்லுகிறான்.
‘ஏண்டா தோட்டிகிட்ட கூடவா கமிஷன் அடிக்கிறாங்க இந்த ஞான வெட்டியான்?” என்று வாயைப் பிளக்கிறார் மைத்துனர்.
வணிகம் வாழ்க்கையின், மனிதத்தன்மையின் எல்லா நற்கூறுகளையும் அடக்கி ஆண்டு விட்டது என்பதை இரண்டாவது சிறுகதை உணர்த்துகிறது. ஞான வெட்டியான் எழுதப்பட்ட நாற்பது வருடங்களுக்குப் பிறகு, இன்றுள்ள நிலைமை இன்னும் மோசமாகக், கோரமாக மாறி விட்டது என்பதுதான் உண்மை.. மருத்துவப் படிப்புக்கு ஒருவர் பல லட்சங்களைக் கொடுத்துத்தான் உள்ளே நுழைய முடியும் என்னும் நிலைமை வணிகத்தின் மாண்பைச் சுட்டிக் காட்டுகிறது. அப்படியானால் ஒரு மருத்துவர் மருத்துவத் தொழில் நியமித்திருந்த உன்னதங்களை மறந்தும் முறித்துப் போட்டும்தான் இயங்க வேண்டுமா என்று கேள்வி எழாமல் இல்லை. எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் இன்றும் டாக்டராக இருந்து வருகிறார். பெரிய நகரம் ஒன்றில்தான். அவரிடம் வைத்தியம் பார்க்க வருபவர்கள் அவரைக் கடவுளின் ஸ்தானத்துக்கு அடுத்ததாகத்தான் வைத்திருக்கிறார்கள். அவரும் மேல்நாட்டுப் படிப்பு முடித்து விட்டு வந்தவர்தான். ஏழைகள் வயிற்றிலடித்துப் பணத்தைச் சேர்த்துக் கொள்ளும் கலையை அவர் கற்றுக் கொள்ளவில்லை. நோயைப் பற்றிய வேண்டாத கலவரத்தை அவர் தன் நோயாளிகளிடம் ஏற்படுத்துவதில்லை. மனித அபிமானம் ஒன்றே அவர் தொழிலைத் திறம்பட நடத்துகிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கொட்டு மேளம் டாக்டரைப் போல இவரும் பெரிய ஆஸ்பத்திரி எல்லாம் வைத்து சம்பாதிக்கத் தெரியாதவர். ஆனால் கொட்டுமேளம் டாக்டருக்கும் இவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இவருக்கு சிட்டையில் பீஸ் விவரங்களை எழுதி வைத்து அதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்க விருப்பமில்லை. அதனால் அவருடைய வாழ்க்கையின் தேவைகளை எதிர்கொள்வதற்கு வேண்டிய சம்பாத்தியத்தை வாங்கிக் கொள்பவராக இருக்கிறார். தி. .ஜா.இன்றிருந்து இந்த டாக்டரைச் சந்தித்திருந்தால்
மூன்றாவது மருத்துவக் கதை ஒன்றை அவர் எழுதியிருப்பார் !.
- கள்ளுக்குத் தடைவிதிக்க முடியாது
- கவிதையும் ரசனையும் – 2 – வைதீஸ்வரன்
- வற்றும் கடல்
- கவிதைகள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ்
- இனிப்பும் கசப்பும் – எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து
- வாங்க, ராணியம்மா!
- நம்மாழ்வார் காட்டும் பரமபத தரிசனம்
- தி.ஜாவின் சிறுகதை உலகம் – கொட்டு மேளம் 14 – விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும் 15
- தலைமுறை இடைவெளி
- கொத்தமங்கலம் சுப்புவின் நூல்: “மருக்கொழுந்து” : அணிந்துரை
- இந்த வாரம் இப்படி (அக்டோபர் 4, 2020) அகழ் இதழ், மேற்கு வங்க வன்முறைகள், உபி குற்றங்கள், துரைமுருகன்