அவசியம்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 9 of 13 in the series 8 நவம்பர் 2020

குணா

பெற்ற மகன்,  ஐ.ஐ.டி யில் படித்து அமெரிக்கா சென்று மேல் படிப்பு முடித்து முனைவர் பட்டமும் பெற்று, பிறந்த மண்ணில் வேலை செய்ய வந்த போது, பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி. பையன் கூடவே இருப்பானென்று. ஊர்ப் பக்கம் ஒரு பெண்ணைப் பார்த்து, மணம் முடித்து, பேரப் பிள்ளைகள் பார்த்து பங்களூருவில் சந்தோஷமாயிருந்தனர்.

வந்த மகனுக்கு அதிர்ச்சி. சொல்லிக் கேட்டதுண்டு, இங்கு அயல் நாட்டு படிப்பிற்கு மதிப்பில்லை, அதிகம் படித்தவனுக்கு மதிப்பில்லை என்று. அதை பொருட்படுத்தாமல் வந்தவன் கொஞ்சம் கொஞ்சமாய் உணரத் தொடங்கினான்.  ஒரு கால கட்டத்தில் முடிவெடுத்தான். திரும்பவும் வெளி நாடு சென்று விடுவதென்று. இதை நிதர்சனம் என்று எடுத்துக் கொண்டாலும், நிச்சயம் அதுவல்ல என்பது உணரப்பட வேண்டியது. படிக்கும் இடத்தை ஒத்து இருப்பது தான் நாம் அடுத்து காலடி எடுத்து வைக்கும் இடம். கட்டாயமாய் ஒத்துப் போவது கொஞ்சம் கஷ்டம். ஒத்துப் போனால் நாம் பக்குவப் பட்டோம் என்று அர்த்தம்.

அவன் எடுத்த முடிவு காலம் கடந்தது. அவனை ஒத்தவர்கள் மேலேறி போய் விட்டார்கள். அமெரிக்காவில் தொடங்க வேண்டுமென்றால், திரும்பவும், ஆரம்பத்திலிருந்து ஒரு புதிய வாழ்க்கையைத் தான் தொடங்க வேண்டும். அதற்கு அவன் உள் மனம் இடம் கொடுக்கவில்லை.

அவனுக்கும், கல்யாணமாகி, பிள்ளைகள் பெற்று, வேலை மாற்றம், அதுவும் திரும்பவும் அமெரிக்காவிற்கு என்பது அத்தனை சாதாரணமில்லை என்பதை உணர்ந்திருந்தான். இத்தாலி செல்ல முடிவெடுத்தான்.

இந்தியாவைப் போல, தீபகற்பம். நல்ல சீதோஷ்ணம். மாறுபட்ட வாழ்க்கை. பாரம்பரியம், சுற்றுலா தலங்கள், வந்து போகும் பல தரப்பட்ட மக்கள் அநேக முன்னேற்றம், அபரித வளர்ச்சி,  அவனுக்கும், அவளுக்கும், பிள்ளைகளுக்கும் அந்த புது சூழ்நிலை பிடித்துப் போய் விட்டது. பிள்ளைகளுக்கு ஐரோப்பிய பள்ளி வாசம், அவனின் வேலை மாற்றம், ஒரு உத்வேகத்தை கொடுத்திருந்தது. அவளும் அந்த மாறுதலுக்கேற்ப மாறிப் போயிருந்தாள். அடுத்த முறை அவர்கள் இந்தியா வந்த போது அவர்களிடம் இத்தாலி வாசம் தொற்றியிருந்தது. பாஸ்தா, பீஸ்ஸா என ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.

இத்தாலி வாசம், பெற்றவர்களுக்கும் நிறைய சந்தோஷம் தந்திருந்தது.

அமெரிக்கா அவன் சென்ற போது, படிப்பு முடித்து தான் திரும்பி வந்தான்… நீண்ட வருடங்களுக்குப் பிறகு. தூரமும், பொருளாதாரமும் தடை செய்திருந்தது. இப்பொழுது… தாத்தா, பாட்டிகளைப் பார்க்க பேரப் பிள்ளைகள், இப்பொழுது, ஏன் அவனும் கூட… ஆண்டுக்கு இருமுறை… கட்டாயமாய் விடுமுறைகளை எடுத்து விட வேண்டுமென்பதால், அவனும் அவசியம் வந்து போகிறான். தூரமாய் இருப்பதாய் தோன்றவில்லை. வந்து போகும் போதே, அடுத்த விடுமுறைக்கு நாள் குறித்து, காத்திருக்கத் தொடங்கி விட்டனர்… தாத்தாவும் பாட்டியும்.

நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது, கடந்த ஆண்டு வரை. இதோ இப்பொழுது இந்த ‘கொரோனா’ அரக்கன் ஊடுருவி விஸ்வரூபம் எடுக்காத வரை.

டிசம்பர் மாத விடுமுறையில் வர வேண்டியவர்கள்… இந்த ஆண்டு பள்ளி இறுதி என்றும், கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றும், வரவில்லை. மார்ச் மாதம் வந்துவிட்டுப் போவதாய் சொல்லியிருந்தார்கள்.

அதற்குள், ‘ஊகன்’ நகரில் உருவெடுத்து இத்தாலியில் ஊடுருவி விட்டான் ‘கொரோனா’ அரக்கன். அவனைப் பற்றி உணர்வதற்குள்… அநேகமாய்… அபரிதமாய்… சுற்றி வளைத்து விட்டான். அவனின் கோர வளர்ச்சி… அனைத்திற்கும் முட்டுக்கட்டை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, வீட்டிலிருந்து வேலை, வெளியில் செல்ல பயம், வாழ்க்கையே ஸ்தம்பித்து விட்டது. சுதந்திரம் இருந்தும், சுதந்திரம் போன வாழ்க்கை. அந்த அரக்கன் தொற்றிக் கொள்வானோ என்ற பயத்துடன்… புறம் போகாமல்… போனாலும் சுற்றிலும் பார்த்து… ஆறடி மண்ணே, அதைத் தள்ளி… தொடாமல்… தொட்டாலும் கழுவி… ஒரு பயத்துடன்…

அந்த அரக்கன் இங்கேயும் தொட்டுப் பார்க்க… எல்லா நாடுகளிலும் கிட்டத்தட்ட அயல் நாட்டு பயணியர் வருகைகள் நிறுத்தப் பட்டு விட்டன. அந்த அரக்கனை கட்டுக்குள் கொண்டுவர. எப்பொழுது சாதாரண நிலை திரும்பும் என்று தெரியவில்லை. போக்குவரத்தும் இல்லை.

ஒன்று, அந்த அசுரனை கட்டுப்படுத்த மருந்து வேண்டும், இல்லை அவன் அழிக்கப் பட வேண்டும். அழிப்பதற்கான முகாந்திரம் இல்லை. கட்டுப் படுத்த, அல்லது கட்டுக்குள் கொண்டுவர ஒரு வருடம் அல்லது அதற்கு மேலும் ஆகுமாம்.

தொழில்நுட்ப முன்னேற்றம்… தினமும் ஒளி-ஒலியில் பார்த்து… பேசி… தாத்தா, பாட்டிகளுக்கு பேரன், பேத்தி மேல் கரிசனம். பார்த்துக் கொள்ளச் சொல்லி, பத்திரமாய் இருக்கச் சொல்லி… பிள்ளைகளுக்கோ பெற்றவர்கள் மேல் அக்கறை… பத்திரமாய் இருக்கச் சொல்லி… வேண்டியதை ஆன்லைனில் வாங்கச் சொல்லி…

எத்தனை தான் சொன்னாலும் உள்ளுக்குள் பயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அன்று பேசிக் கொண்டிருந்த போது பேரன் தும்மியதைக் கேட்டதும், பாட்டிக்கு பதற்றம். “கொஞ்சம் காரமா மிளகு ரசம் வெச்சு கொடேன். எல்லோருக்கும், சுக்கு கஷாயம் வெச்சு ஒரு வட்டு குடிங்கோ” – என்று சொல்லி ஆத்துப் போனாள். தான் அருகிலிருந்தால் அத்தனையும் செய்யலாமே என்ற ஆதங்கம்.

‘கொரோனா’ எட்டிப் பார்த்ததும், வாரம் ஒருமுறை என்ற மளிகை வாங்க செல்வது, மாதம் ஒரு முறையாயிற்று. போன முறை போன போது, என்ன சொன்னார்களோ, ஏது சொன்னார்களோ… இஞ்சி, பூண்டு இல்லாமல் போனது. சாதாரணமாய் கிடைக்கும் இந்திய சமாச்சாரங்கள் காணவில்லை. பதுக்கல் இல்லை… எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். கேட்டால்… சீனா பூண்டு தான் இருக்கிறதென்றான். பயம்… சீன தேசத்து பொருட்களென்றால் பயம். இது வரை, செழிப்பாக இருக்கிறது, விலையும் கம்மி என்ற சீனப் பொருட்களை இப்பொழுதெல்லாம் திரும்பிப் பார்க்காமல் வந்து விடத் தான் தோன்றுகிறது. இல்லாமல் போனாலும் பரவாயில்லை, அந்த பொருட்கள் வேண்டாமென்று.

ஊரடங்கு உத்தரவில்லை. அனைவருக்கும் எச்சரிக்கை. உள்ள நிலைமை குறித்து உணரவைத்து, அனைவரும் சுய கட்டுப் பாட்டுக்குள் இருக்க அறிவிப்பு. அனைவரும் உணர்ந்து… வாழ யத்தனித்து திணித்துக் கொள்கிறார்கள்.

அந்த அரக்கனை கட்டுப் படுத்த அநேக நடவடிக்கைகள். இந்திய பிரதமரின் அதிரடி நடவடிக்கைகள்…

அவரின் காந்த வேண்டுதலுக்கு செவி மடுத்த மக்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான குரல்கள் பிசுபிசுத்துப் போயின. உயிரினும் மேலே எதுவும் இல்லை என்று முடங்கிப் போயினர்.

வரும் அயல் நாட்டுப் பயணியர் நிறுத்தப் பட்டு, பதினான்கு நாட்களுக்குப் பின்னர், அவர்களுக்குள் அந்த அரக்கன் இல்லை என்பது தெளிவான பிறகே அனுமதிப்பது போய், அயல் நாட்டுப் பயணியரே அனுமதியில்லை என்றதும், அதன் உக்கிரத் தன்மை ஆழ இறங்கி உறைந்து போனது. உக்கிரத் தன்மையின் உணர்வுகள்  ஒவ்வொருவருக்குள்ளும் புரிபட தொடங்கி விட்டது.

இறந்து போனார்கள் என்றாலும் பார்க்க வர முடியாது.

மாமிசத்திலும் இந்த அரக்கன் தொடர்வான் என்று யாரோ சொல்ல, மாமிச பயன்பாடு அநேகத்திற்கு குறைந்து விட்டது.

அந்த அசுரன் சூடு தாங்க மாட்டான் என்றதும், சூட்டின் அருமை உணர்ந்தோம். இந்திய பாரம்பரியம் அநேகம் சொல்லியுள்ளது என்று புரட்டிப் பார்க்கத் தொடங்கி விட்டோம்.

இந்திய கார சாரங்கள் உணரத் தொடங்கி விட்டோம். நம் பாரம்பரியங்களின் அவசியம் உணரத் தொடங்கி விட்டோம். மருத்துவ குணாதிசய உணவு முறைகள் ஆக்கிரமிக்க, திரும்பவும் எட்டிப் பார்க்கின்றன.

அவரவர் தம் வாழ்க்கை முறைகளை மாற்றி அமைக்க தொடங்கி விட்டார்கள். அன்றாட அவசியங்கள், அத்தியாவசியங்கள் ஆகிக் கொண்டிருக்கின்றன.

அயல் நாட்டுப் பயணிகள் என்பது போய், அண்டை மாநிலத்தவர் வருவதற்கும் கட்டுப் பாடு, ஏன் மாவட்டம் வாரியாக கட்டுப்பாடு. அரக்கன் இல்லையென்று உறுதி செய்த பின்னரே அனுமதி…? உடனடி அனுமதி அந்த அரக்கனை கட்டுப் படுத்த பயனளிக்காது என்று உணர்ந்தும், அவசர தேவைகளுக்காக அண்டை மாநில அனுமதி. நாம் சார்ந்திருக்கும் அவசியங்கள் வேண்டி.

கூட்டங்களை குறைப்பதன் அவசியம் உணர்ந்ததும் அனைத்து செயல் பாடுகளும் நிறுத்தப் பட்டு விட்டன. ஆரம்பத்தில் பள்ளி, கல்லூரி தொடங்கி, நவீன வாழ்வில் வீட்டிலிருந்து பணி புரியலாம் என்று வீட்டுப் பணியாக்கி, சிறுகச் சிறுக பழகிக் கொள்ள வைத்து, வணிக வளாகங்கள், வெளி உணவகங்கள் என கொஞ்சம் கொஞ்சமாய் அனைத்தும் செயல் பாடுகளும் குறைந்து விட்டன.  வேண்டுமென்றால் அனைத்தும் ‘ஆன்லைனில்’.

படப்பிடிப்புகள் நிறுத்தப் பட்டுவிட்டன. வீட்டில் மதிய வேளையில் மற்றும், இடைக்கிடை பார்க்கும் அன்றாட தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் நிற்கப் போகின்றன. பழைய படங்களும், நிகழ்ச்சிகளும் கொஞ்ச காலத்திற்கு திருப்பிப் பார்க்கப்பட வேண்டும்.

எவை அவசியம், எவை அநாவசியம் என்று எல்லோரும் உணரத் தொடங்கி விட்டார்கள்.

அடிப்படைப் பண்புகள் இன்னும் மாறவில்லை. பதுக்கும் குணம். நேரத்திற்கு ஏற்றாற்போல் விலையேற்றம். அவசர காலம் என்றும் பாராமல், மக்களுக்கான அவசியம் என்று உணர்ந்து செயல் படாமல் இருக்கும் மூர்க்கத்தனம். பார்க்க முடிகிறது. தேவையான முக கவசங்கள், கிருமி நாசினி, கையுறைகள் அத்தனையும் விலையேற்றம். அரசு கட்டுப்பாடுகளை கொண்டு நிலை நிறுத்தப் பார்க்கிறது. இவற்றை மாற்ற எந்த அரக்கன் வரவேண்டும் என்று தோன்றவில்லை. அந்நிய தேசங்களில் அப்படியில்லை. இவை அடிப்படையிலிருந்து, சிறு வயதிலிருந்து பதிக்கப் பட வேண்டும்.

ஆரம்பத்தில் அநேகம் பேசினார்கள். பொருளாதாரம் வீழ்ச்சியுறும், அன்றாடம் பாதிக்கப் படும், கொத்து கொத்தாய் மக்கள் மடிவர் என்று… எதுவும் ஏறவில்லை, மடிவர் என்பதைத் தவிர…

அடுத்த கிரகத்தில் நாம் வாழ வேண்டியதற்கான ஒத்திகை தான் இது.  இல்லை இந்த கிரகமே அப்படியானாலும், இந்த கொடிய அசுரனால், அப்படி ஒரு அவசியம் வந்தால் நாம் அதற்கும் தயாராகின்றோம்… தயாராகிவிட்டோம்.

அசுரன் கொடியவனானாலும் ஒன்றை மனிதனுக்குள் உணர வைத்து விட்டான். உயிரினும் மேலானது எதுவுமில்லை. எல்லாம் உயிருக்காக, நம்மால் உருவாக்க முடியாத நம் உயிருக்காக எதையும் விட்டுக் கொடுப்போம், அநாவசியமாக்குவோம் என்று.

*** *** ***

  • குணசேகரன்
Series Navigationதிருவாலி, வயலாளி மணவாளன்ஒதுக்கீடு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *