வாழ்வே தவமாக …

This entry is part 2 of 14 in the series 15 நவம்பர் 2020

(1.8.1996 குமுதம் இதழில் வந்தது. “வாழ்வே தவமாக….” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)

      தன்ராஜ் மிகுந்த உற்சாகத்துடன் பழைய சினிமாப்பாட்டு ஒன்றைச் சீழ்க்கை அடித்துக்கொண்டிருந்தான். படிப்பை முடித்ததிலிருந்து அவன் கண்டுவரும் கனவு இன்றுதான் நனவானது.

       “என்ன, தன்ராஜ்? ரொம்பக் குஷியா இருக்காப்ல இருக்கு?” என்றவாறு போர்வையை அகற்றி எழுந்த கேசவ் கால்களைத் தொங்கப்போட்டபடியே கட்டிலில் உட்கார்ந்து சோம்பல் முறித்தான்.

       தன்ராஜ் வெட்கத்துடன் புன்னகை செய்து, “அப்பா, அம்மா, தங்கச்சி மூணு பேரையும் பாக்கப்போற குஷிடா. வேற ஒண்ணுமில்ல!” என்றான். இப்படிச் சொன்னபோது தன்ராஜின் கண்களில் வந்தமர்ந்த ஒளி அவனை அயர்த்தியது.

       “என்ன, கேசவ், அப்படிப் பாக்குறே?”

       “அப்பா, அம்மா, தங்கச்சின்னு இப்படிப் பாகா உருகுறியேடா! எனக்கெல்லாம் உன்னளவுக்கு உருக வராதுடா.”

       “சிலருக்கு வெளியே காட்டிக்கத் தெரியாது.  நீ அந்த ரகமா இருப்பேன்னு நெனைக்கிறேன். நான் ஒரு உளறுவாயன். எப்ப பாரு அவங்களைப் பத்திப் பொலம்பிக்கிட்டே கெடக்குறேன். அதான் உனக்கு அப்படித் தோணுது!”

        கேசவ் கட்டிலிலிருந்து இறங்கித் தாறுமாறாய் உடம்பில் சுற்றி இருந்த லுங்கியைச் சரியாகக் கட்டிக்கொண்டே சொன்னான்: “இல்லேடா, தன்ராஜ்! பெத்தவங்க மேலயும் தங்கச்சி மேலயும் நீ காட்டுற அன்பு அலாதியாத்தான் இருக்கு. எனக்கெல்லாம் அவ்வளவு அன்பு இல்லேப்பா!”

       “அடப்போடா. நீ பொய் சொல்றே. நீ அடக்கம். வேற ஒண்ணுமில்லே.”

       “இல்லேப்பா, தன்ராஜ். எனக்கும் பிரியம்குறது இருக்குதான். ஆனா உன்னளவுக்கு இல்லே. அவங்களைப் பத்தி நீ பேசுறப்ப உன் முகமே டால் அடிக்குதுடா! அது எனக்குத்தானே தெரியும்?”

       “டே, கேசவ்! நம்மைப் பெத்தவங்க நமக்காக எப்படி எல்லாம் தியாகம் பண்ணி இருக்காங்க! அதையெல்லாம் நாம மறக்கவே கூடாதுடா. அப்படி மறந்தோமுன்னா அதைவிடப் பெரிய பாவம் வேற எதுவும் கிடையாதுடா. எங்கப்பாவும் அம்மாவும் எம்புட்டு ஏழ்மையில என்னயப் படிக்க வெச்சாங்க, தெரியுமா? எங்கப்பா கொத்து வேலை செய்யிறாரு. அவர் கொணாந்ததுல அரை வயித்துக்குத்தான் சாப்பிட முடிஞ்சிச்சு. எங்கம்மாவும் சம்பாரிச்சதாலதான் முழுவயிறு சாப்பிட்டுப் படிக்கவும் முடிஞ்சிச்சுடா! இல்லாட்டிப் போனா, நானும் அக்கம்பக்கத்துப் பிள்ளைங்க மாதிரி, சின்ன வயசுலயே சித்தாள் வேலைக்குப் போயிருப்பேன். எத்தினி நாளு எங்கம்மா இருக்குற சோத்தை எனக்குப் போட்டுட்டுத் தான் காஞ்ச வயித்தோட படுத்திருக்குது, தெரியுமா? கேட்டா, ‘திடீர்னு பசிச்சிச்சு.  நீ வாரதுக்கு முந்தியே சாப்பிட்டுட்டேன்’னு பொய் சொல்லும். கருக்கல்ல வேலைக்கிக் கெளம்பிப் போச்சுன்னா, மத்தியானம் ஒரு மணிக்குத்தான் திரும்பி வரும். வேலை செய்யிற வீடுகள்ள குடுக்குற சோத்தை எடுத்துக்கிட்டு ஸ்கூலுக்கு வரும். சோறு கிடைக்காத நாளுல காசு போட்டு பன்னும் டீயும் வாங்கியாரும்! நான் திங்கிறதப் பாத்துக்கிட்டே பக்கத்துல குந்திக்கிட்டிருக்கும். அப்ப அதோட கண்ணுல தெரியும் பாரு ஒரு பிரியம்! அம்மாடி! அதுக்கு ஈடு இணை இல்லே!…” என்ற தன்ராஜ் சட்டென்று உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக் கட்டிலில் உட்கார்ந்து முகத்தைப் பொத்திக்கொண்டான். அவன் தோள்கள் சன்னமாய்க் குலுங்கியதிலிருந்து அவன் அழுததைப் புரிந்துகொண்ட கேசவ்வின் வியப்பு எல்லை கடந்தது.

      பற்பசை எடுக்கப் போனவன் திரும்பிவந்து, “அட, பயித்தியக்காரா! நீ இப்ப சொன்னியே, நீ சாப்பிடுறதைப் பாத்துக்கிட்டே பிரியமாக் குந்திக்கிட்டிருப்பாங்கன்னு, அது எல்லா அம்மாக்களும் செய்யிறதுதாண்டா! அதுல ஆச்சரியப் படுறதுக்கு ஒண்ணுமே இல்லே. அதை நெசச்சு இப்படித் தோள் குலுங்க நீ அழுவறியே, அதான் ஆச்சரியமான விசயம்!” என்றவாறு அவன் தோள்களில் கைகளைப் பதித்து அழுத்தினான்.

       தன்ராஜ் முகத்திலிருந்த கைகளை நீக்கிக்கொண்டு வேட்டி முனையால் கண்களைத் துடைத்துக்கொண்டான். சட்டென நொறுங்கி அழுத கூச்சத்தால் அவன் முகம் அதன் கோதுமை நிறங்கடந்து சிவந்திருந்தது.

       தன்ராஜ் தொடர்ந்தான்: “எங்கப்பா மொடாக் குடியரு. ஆனா நல்லவரு. குடிக்கக்கூடாதுன்னு எனக்கு நெதமும் உபதேசம் பண்ணுவாரு. ‘நீங்க குடிக்கிறீங்களேப்பா?’ ன்னு சில சமயம் கேட்றுவேன். ‘டேலே! குடிக்கிறதுல ரொம்பக் கெடுதி இருக்குறதாலதாண்டா குடிக்காதேங்குறேன்! மத்தவங்களைப் பாத்துக் குடிக்காதீங்கன்னு சொல்ற தகுதி ஒரு குடிகாரனுக்குத்தாண்டா உண்டு,’ ன்னு சிரிப்பாரு.”

       கேசவ் தூரிகையில் பற்பசையைத் தீற்றிக்கொண்டே, “உன் தங்கச்சியைப் பத்தி எதுவுமே சொல்ல மாட்டேங்குறியேடா? அது எப்படி? பாசமலர் சாவித்திரி கணக்கா அதுவும், சிவாஜி கணக்கா நீயும் பிசினா ஒட்டிக்கிட்டு உருகோ உருகுன்னு உருகுவீங்களாடா?”

       “கிட்டத்தட்ட அப்படித்தான்னு வச்சுக்கயேன். ஒரு முட்டாய் கெடைச்சாக்கூட காக்காக்கடி கடிச்சுப் பாதியை எனக்குக் குடுத்திறும்!”

       ”நீயும் வாங்கிப்பே?”

       “சேச்சே! சின்னக் கொழந்தை கிட்டப் போய் யாராச்சும் அப்படிச் செய்வாங்களா?”

       வாயருகே கொண்டு போன தூரிகையை அப்படியே நிப்பாட்டிக்கொண்ட கேசவ், “என்ன வயசு உன் தங்கச்சிக்கு?” என்று கேட்டான்.

       “ஏழு வயசு ஆகுது.”

       “அட, கஷ்டமே! உனக்கு ஒரே ஒரு தங்கச்சிதானா?”

       “ஆமா.”

       “அப்ப அதுக்கும் உனக்கும் பதிநாலு வயசு வித்தியாசம்?”

       தன்ராஜ் சிரித்துவிட்டுப் பொசாதிருந்தான்

       “ஒங்கப்பா கில்லாடிதான்!”

       “சீ! வயசாளிகளை யெல்லாம் நையாண்டி பண்ணாதடா.”

       “உந்தங்கச்சிக்கு ஏழு வயசுன்னா சொன்னே?”

       “ஆமா.”

       “பதினேழு வயசு இருக்கும்னு நெனச்சு நான் மானசிகமா அவளை ‘லவ்’ பண்ணவே தொடங்கிட்டேன்! சே!” என்று சிரித்த கேசவ் செயற்கையான ஒரு சோகத்தை முகத்துக்கு வரவழைத்துக்கொண்டு பல் விளக்கலானான்.

       தன்ராஜ் வாய்விட்டுச் சிரித்தபடி பெட்டியில் சாமான்களை அடுக்க முற்பட்டான். அம்மாவுக்கு வாங்கி யிருந்த கறுப்புக் கரை போட்ட நீல வண்ணச் சேலை, நீல வண்ண ரவிக்கைத் துணி, அப்பாவுக்கு வாங்கியிருந்த சிங்கப்பூர் லுங்கி, கை வைத்த பனியன், வெள்ளையில் முழுக்கைச் சட்டை, தங்கச்சி தங்கத்துக்கு வாங்கியிருந்த நான்கு கவுன்கள், ஜட்டிகள், ரப்பர் வளையல்கள், ஆறு வகை ரோல்டு கோல்டுக் கம்மல்கள், கழுத்துச் சங்கிலி, வண்ண வண்ண நெற்றிபொட்டுகள், பெரிய படங்கள் போட்ட பெரிய எழுத்துக் கதைப் புத்தகங்கள், அய்யருக்கு வாங்கிய வேட்டி-பனியன் ஆகியவற்றை அழகு பார்த்தவாறு அடுக்கிய போது அவன் உள்ளம் பெருமிதமுற்றது.

       ‘எனக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம்’ – திரும்பத் திரும்ப வாய்க்குள் சொல்லிக்கொண்டான். அவனால் நம்பவே முடியவில்லை. அவனுடைய அம்மாவும் அப்பாவும் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளுக்கு மேல் பார்த்திருக்க மாட்டார்கள்.

       எப்படியோ அவனும் பத்தாம் வகுப்பு வரை படித்துத் தேறிவிட்டான். ஓரளவு நல்ல மதிப்பெண்களும் பெற்றான். ,முப்பாட்டனுக்கு முப்பாட்டனிலிருந்து கைநாட்டுப் பரம்பரையில் வந்தவன் என்பதைப் பார்க்கும் போது அவன் சிறந்த முறையில் தேறியதற்காகப் பெருமைப்படலாம்தான்.

       குள்ளம்பட்டியிலிருந்து மூன்று கல் தொலைவு நடந்து போய்ப் படித்தான். ஒவ்வொரு நாளும் பிற்பகலில் – வெயிலோ, மழையோ – அவன் அம்மா அவ்வளவு தொலைவு நடந்து வந்து சோறு தருவாளே! ‘இந்த அன்புக்கு நான் எப்படி என் நன்றிக்கடனைத் தீர்க்கப் போகிறேன்?’

       பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதிவிட்டு, அதன் முடிவு தெரிகிற வரையில் அவன் இதயம்தான் எப்படித் துடித்துக்கொண்டிருதது! நன்கு எழுதியிருந்த நம்பிக்கை இருந்தாலும், செய்தித்தாளில் இலக்கத்தைப் பார்க்கும் வரை உளைச்சல்தானே? தினமணியில் முடிவு வந்த அன்று அவன் அம்மா அடைந்த பேருவகைக்கு ஈடே சொல்ல முடியாது! இந்தியா சுதந்திரம் அடைந்த போது நேரு அடைந்த மகிழ்ச்சி? தேவதாஸ் காதலில் வெற்றி பெற்றிருந்தால் அடைந்திருக்கக்கூடிய மகிழ்ச்சி? தங்கப் பதக்கம் பெற்ற பி.டி. உஷாவின் மகிழ்ச்சி? ஊகூம். இவை எல்லாம் தன் அம்மாவின் மகிழ்ச்சிக்கு முன்னால் அற்பம் என்றே அவனுக்குத் தோன்றியது!

      மகன் தேறிவிட்ட உவகையில் மருதாயியின்  முகத்துக்கு ஒரு புதிய அழகே வந்து சேர்ந்திருந்தது. அம்மாவின் கண்களில் அப்படி ஒரு பளபளப்பையும் நம்பிக்கைக் கதிரையும் அதற்கு முன்னர் அவன் கண்டதே இல்லை. அவன் அப்பா மட்டுமென்னவாம்! குடிகாரரே ஒழிய அன்பானவராயிற்றே!

      … வேலையில்லாத் திண்டாட்ட அரக்கன் இவனையும் துன்புறுத்தவே செய்தான். மதுரை சென்று வேலை வாய்ப்பு நிலையத்தில் தன் பெயரைப் பதிவு செய்துகொண்டான். அங்கே அதே வேலைக்காக வந்து அவனுடன் வரிசையில் நின்ற நூற்றுக்கணக்கான ஆண்-பெண்கள் அவனது நம்பிக்கையைச் சிதைத்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் பட்டதாரிகள். தட்டெழுத்து-சுருக்கெழுத்துப் பயின்றவர்கள். ஏற்கெனவே பதித்திருந்த நூற்றுக்கணக்கானோர் புதுப்பிக்க வந்திருந்தனர். ஆங்கிலத்தில் பிளந்து கட்டிய அவர்கள் அவனுள் அவநம்பிக்கையை விதைத்தார்கள்.

      பெயர் பதிவு ஆனபிறகு, பிற்பகல் இரண்டு மணிக்கு ஓர் ஒட்டலில் மூன்று இட்லி தின்று காப்பி குடித்த பின் அவன் பேருந்தில் ஏறினான். அப்போதுதான் அவன் அதிருஷ்ட தேவதையைச் சந்திக்க வாய்த்தது. அந்தத் தேவதை ஒரு பயணியில் உருவில் அவனருகே வந்து அமர்ந்தார். அவ்வாறு வந்தமர்ந்த மனிதருடன் அவனுக்கு ஏற்பட்ட அறிமுகத்தால் உடனே பயன் விளையாவிடினும், அது தான் அவனது தற்போதைய நல்ல நிலைக்கு வழி வகுத்தது.

       “தம்ம்பிக்கு எந்த ஊரு?”

       “குள்ளம்பட்டி … நீங்க?”

       “வத்தலக்குண்டுப்பா.  வேலை தேடி வந்தியாக்கும்?”

       “ஆமாங்க. … ஆனா உங்களுக்கு எப்படித் தெரியும்?
       “எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச் க்யூவில உன்னைப் பாத்தேம்ப்பா. அங்கே வேற ஒரு காரியமா வந்தேன்.  ஆமா? என்ன படிச்சிருக்கே?”

       “எஸ்.எஸ்.எல்.ஸி.”

       “அது மட்டுந்தானா?”

       “ஆமா.”

       “டைப்ரைட்டிங்காவது கத்துக்கோப்பா. முடிஞ்சா ஷார்ட்ஹேண்டும் கத்துக்கோ. இங்கிலீஷ்ல பேசுவியா?”

       “பேசல்லாம் வராது, சார். வாட் ஈஸ் யுவர் நேம்னா, மை நேம் ஈஸ் தன்ராஜ் அப்படின்னு சொல்ல மட்டும் தெரியும்.”

       “அப்ப, உன் பேரு தன்ராஜா? என்ன ஜாதிப்பா?”

       “ …….”

       “அடாடா! தப்பா எடுத்துண்டுட்டியா என்ன? இப்ப நம்ம நாட்டில ரெண்டே ரெண்டு ஜாதிதாம்ப்பா இருக்கு – ஒண்ணு பேக்வேர்ட் கம்யூனிட்டி, இன்னொண்ணு ஃபார்வேர்ட் கம்யூனிட்டி! நீ என்னன்னு கேக்கறேன். அவ்வளவுதாம்ப்பா!”

       “பேக்வேர்ட்!”

       “அப்ப நீ அதிருஷ்டசாலிதான்! மத்தவங்களை விட சீக்கிரமே கிடைச்சிடும். என்ன அப்படிப் பாக்கறே? இந்தப் பாப்பான் பொறாமையில ஏதோ குத்தலாப் பேசறான்னு நினைக்கிறயா? சாமி சத்தியமா இல்லேப்பா. ஒரு ஜாதிக்காரங்க எப்பவுமே எல்லாரையும் அடக்கி ஆண்டுண்டு இருக்க முடியாது. அவங்க அடங்கிப் போகவேண்டிய காலமும் வரும். … சரி … ஆனா இப்ப உங்கள்ளேயும் நிறையப் பேர் நல்ல மார்க் வாங்கறேள். அவாளோட தான் இப்ப உனக்குப் போட்டி. என்ன மார்க் வாங்கி இருக்கே நீ? சொல்லலாம்னா சொல்லு.”

        “தமிழ்ல 80, கணக்குல 80, இங்கிலீஷ்ல 55. .. ஆவரேஜ் மார்க் 65 பெர் செண்ட், சார்.”

       “ஏன் வெக்கப்பட்டுண்டு சொல்றே? நல்ல மார்க்குதான். உன்னோட குடும்பத்து நெலமை என்ன?”

       “எங்கப்பா கொத்து வேலை செய்யிறவரு. எங்கம்மா நாலு வீடுகள்ள வாசக்கூட்டி வேலை பாக்குறாங்க. ரொம்பக் கஷ்டத்துலதான் என்னயப் படிக்க வெச்சாங்க.”

       “பெரிய சாதனைதான். எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பிள்ளை. பொண்ணு நன்னாப் படிச்சுட்டு மெட்ராஸ்ல ஒரு பெரிய கம்பெனியில் ஸ்டெனோவா இருக்கா. நல்ல சம்பளம். பையன் நன்னாப் படிக்கல்லே. ப்ளஸ் டூ தாண்டினதே எம்பாடு உம்பாடுன்னு ஆயிடுத்து, மேல படிடான்னேன். மாட்டேன்னுட்டு மிலிட்டரியில போய்ச் சேந்துட்டான்.”

       ‘இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள வேலை கிடைக்காட்டி, நானும் பட்டளத்துல சேந்துறுவேன்’ என்று அவன் எண்ணிக்கொண்டான்.

       “என்னப்பா யோசிக்கிறே? உன்னோட செர்ட்டிஃபிகேட் காப்பீஸை எங்கிட்ட குடுத்து வை.”

       “இப்ப கைவசம் இல்லே, சார்.”

       “இப்பவே குடுன்னா சொன்னேன்? நான்  இருக்கிறது வத்தலக்குண்டுதானே? ஒரு நடை வந்துட்டுப் போறது. விலாசம் சொல்றேன், குறிச்சுக்கோ.”

       அவர் சொல்ல, அவன் குறித்துக்கொண்டான்.

       “நான் ஏதோ உனக்கு உடனே வேலைக்கு ஏற்பாடு பண்ணிட முடியும்கிறதா நெனைச்சுண்டுடாதே. மெட்ராஸ்ல இருக்கிற எம்பொண்ணு மூலம் ட்ரை பண்ணிப் பாக்கறேன். இதுக்கு இடையில நீயும் டைப்ரைட்டிங்-ஷார்ஹேண்ட் கத்துக்கோ.”

        “ஒரு பியூன் வேலை கிடைச்சாலும் இப்போதைக்குப் போதும், சார். எங்கம்மாவை உக்கார வெச்சு நான் சோறு போடணும். இத்தினி நாளும் அவங்க போட்டாங்க.”

       “உன்னோட இந்த நல்ல மனசுக்கு சீக்கிரமே உனக்கு வேலை கிடைச்சுடும்ப்பா! நாம வாழறது தமிழ்நாடுன்னாலும் இங்கிலீஷை அலட்சியப் படுத்தக்கூடாது. அது புத்திசாலித்தனம் இல்லே. நீ இங்கிலீஷ்ல நன்னாப் பேசக் கத்துக்கணும்.”

       “எனக்கு வராது, சார். நான் படிச்சது தமிழ் மீடியம்…”

       “அதனால என்னப்பா? நான் ஒரு வழி சொல்றேன். அதும்படி செய். பழைய ஹிண்டு பேப்பர்  ஒரு கிலோ விலைக்கு வாங்கிக்க. அதுல வந்திருக்குற எல்லாத்தையும் படி. உச்சரிப்புக்குன்னே ஒரு டிக்‌ஷனரி இருக்கு. ரொம்ப விலை. உன்னால வாங்க முடியாது. எங்கிட்ட தண்டமாத்தான் இருக்கு. எடுத்துண்டு போ. உபயோகம் முடிஞ்சதும் மறக்காம திருப்பிக் குடுத்துடு.”

       தன்ராஜ் திகைப்பின் உச்சத்துக்கு போனான். முன்பின் முகம் கூடப் பார்த்திராத ஓர் அசலாளி அந்த அளவுக்கு அக்கறை காட்டுவார் என்பது அவனது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

       “ரொம்ப தேங்க்ஸ், சார்! எனக்கு வேற என்ன சொல்றதுன்னே தெரியல்லே.”

       அவன் கண்கள் கலங்கியதைக் கவனித்துவிட்ட அவர், “என்னப்பா உணர்ச்சி வசப்பட்றே? இப்ப பெரிசா என்ன பண்ணிட்டேன்? என் மூலமா வேலை கிடைச்சா, அதுக்கு அப்புறம் சொல்லு உன்னோட தேங்க்சை!”

       “சார்  …. உங்க பேரு?”

       “எம்.கே.கிருஷ்ண சர்மா… ஐம் சாரி. சர்மால்லாம் வேண்டாம். வெறுமன கிருஷ்ணன்னு எழுதிக்கோ. ஜாதிகளை ஒழிக்க முடியாட்டாலும், பேருக்குப் பின்னால ஜாதிப் பேரைப் போட்டுக்கிற வழக்கத்தையாவது ஒழிப்போமே! என்ன சொல்றே? நான் ஏதோ பெரிய சீர்திருத்தக்காரன்னு பீத்திக்கிறதா நெனச்சுடாதே!”

       “இல்லே, சார்.”

       “பக்கத்துலயே டிக்‌ஷனரியை வெச்சுண்டு ஹிண்டு பேப்பர்ல கஷ்டமான வார்த்தைகள் வர்றப்ப அகரவரிசையில அர்த்தத்தோட எழுதத் தொடங்கு. அந்த வார்த்தைகள் வர்ற முழு வாக்கியங்களையும் எழுதி அப்பப்ப புரட்டு. இங்கிலீஷ்ல மன்னன் ஆயிடுவே நீ! என்ன? புரிஞ்சுதா?”

       “சரி, சார்.”

      … அவர் சொன்னபடியே செய்யலானான்.

      ஆறு மாதங்கள் கழித்துத் தன் அப்பா முத்தழகுவிடம் தானும் கொத்தனார் வேலைக்கு வருவதாய் அவன் சொன்னபோது அவன் திகைத்துப் போனான். மருதாயியோ அவனோடு சண்டைக்கே வந்தாள்.

        ‘பத்தாப்பு வரயில படிச்சுப் பாசு பண்ணிட்டு கொத்தனார் வேலையா செய்யிறேன்றே?’ என்று கத்தி அவனைத் தடுக்கப் பார்த்தாள். ஆனால் அவன் கேட்கவில்லை.  அவ்வப்போது கிடைத்த வேலையைச் செய்து ஏதோ சம்பாதித்தான். ‘அம்மாவுக்கு எப்போது வேலையிலிருந்து விடுதலை வாங்கித் தரப் போகிறேன்?’ எனும் கேள்வியால் அலைப்புற்று அவன் இராத் தூக்கம் இழந்தான். அவனது மகிழ்ச்சிக்குறைவையும் நிம்மதியின்மையையும் பெரிய அளவில் போக்கியவள் தங்கச்சிப் பாப்பாதான்! தான் வேலை செய்த வீடுகளிலிருந்து எப்போதாகிலும் கிடைக்கும் சாயம் போன கவுன்களில் மருதாயி தன் தங்கச்சி தங்கத்தை அலங்கரிக்கும் போதெல்லாம், புத்தம்புதிய உயர்ந்த ஆடைகளில் எப்போது இவளைப் பார்க்கப் போகிறேன் எனும் ஏக்கப் பெருமூச்சு அவனிடமிருந்து சீறிப்பாயும்.

       இராப்பகலாக ‘அய்யர்’ சொல்லிக் கொடுத்தபடி செய்ததில் தன்ராஜின் தன்னம்பிக்கை வளர்ந்திருந்தது.  ஆங்கிலத் தட்டெழுத்தில் ஆறே மாதங்களில் அவன் நல்ல பயிற்சி பெற்றான். ஒரு முறை அவன் அவரைப் பார்க்கப் போயிருந்த போது அவர் அவனுக்கு ஒரு சின்ன ரேடியோ அளித்தார்.

       “தினமும் இங்கிலீஷ், நியூஸ், தமிழ் நியூஸ் ரெண்டும் கேளுப்பா. எந்த மொழியும் காது வழியாத்தான் நுழைஞ்சு மூளையில பதிவாகும்.  கொழந்தைகள் பேசக் கத்துக்குறது அப்படித்தானே? அதனால நிறைய இங்கிலீஷ் கேளு. பிழைப்புக்கு இப்போதைக்கு அதுதாம்ப்பா வழி. அது நம்ம நாட்டுக்குக் கிடைச்ச வரப்பிரசாதம். சரஸ்வதி கடாட்சம்னே சொல்லணும். அது உலக மொழி ஆயிடுத்துங்கிற உண்மையை நாம ஏத்துண்டுதான் ஆகணும். அதுதான் நமக்கும் நல்லது. இந்த முழு உலகத்துக்கும் நல்லது! வேலை கிடைச்சதும் ஈவ்னிங் காலேஜ்ல சேந்து படி. உங்கிட்ட நல்ல எண்ணங்கள் இருக்கு. அம்பத்தஞ்சு வயசுக்கு மேல எனக்கு வந்த இந்த ஞானத்தால பிரயோஜனமில்லாம போயிடுத்து. ஆனா உங்கிட்ட இளமை இருக்கு. நல்ல காரியங்களைப் பண்ண நிறைய டைம் இருக்கு. எம்பொண்ணுக்கும் நான் இதையேதான் சொல்றது. ஆனா, எம்பொண்டாட்டி கல்யாணம், கல்யாணம்னு ஆலாப் பறக்கறா!’ என்று ஒரு நாள் அவர் பொழிந்து தள்ளியதன் உள்ளார்ந்த பொருள் ஏதும் அவ்வளவாக மனத்தில் பதியவில்லை. தவிர, ஓர் ஏழை இளைஞனான தன்னால் என்ன சாதிக்க முடியப் போகிறது எனும் வினா அப்போது அவனைச் சிரிப்பில்தான் ஆழ்த்தியது. இருந்தாலும், பெரியவர் சொல்லுகிறாரே என்று தலையை ஆட்டிக்கொண்டிருந்தான்.                                                                                                               

      ஒன்றரை ஆண்டுகளுள் முதுநிலைத் தட்டெழுத்து, சுருக்கெழுத்து இவற்றில் தேர்ச்சி பெற்றான்.

      … ஒரு நாள் கிருஷ்ணன் அவனுக்குச் சொல்லியனுப்பினார். அவன் போனான். அவர் மகள் ஜானகி தனக்குத் தெரிந்தவர் ஒருவரின்  தொழிற்சாலையில் தட்டெழுத்தர் வேலைக்கு அவனைப் பரிந்துரை செய்துள்ளதாகவும், அவன் உடனே சென்னைக்குப் புறப்பட வேண்டுமென்றும் அவர் அவனிடம் கூறி மற்ற விவரங்களையும் கொடுத்தார்.

       அவனுக்குச் சென்னையில் ஆயிரம் ரூபாய்ச் சம்பளத்தில் வேலை கிடைத்தது இப்படித்தான்…. மிகுந்த சிக்கனத்துடன் வாழ்ந்து அம்மாவுக்கு அவன் மாதந்தோறும் ஐந்நூறு ரூபாய் அனுப்பிவந்தான். தங்கச்சி தங்கத்தைப் பள்ளியில் சேர்ப்பித்தான். ஒரே ஒருதரம் இரண்டு நாள் விடுப்பில் அவ குள்ளம்பட்டிக்குப் போனபோது, பெரியவள் ஆனதும் தான் டாக்டருக்குப் படிக்க இருப்பதாய்ச் சொல்லத் தங்கத்தைப் பழக்கினான்.               

      ‘ஏய்! நீ பெரியவளானதும் என்ன வேலைக்குப் போவே?’ என்று அவன் கேட்ட போதெல்லாம், ‘டாக்குட்டராவேன்’ என்று அவளும் பதிலளிப்பான். அவ்வாறு கூற அவன் தான் அவளைப் பழக்கினான் என்றாலும், அவள் ஏதோ தானாகவே அப்படிச் சொன்னது போல் அவன் கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்து போவான்.

      அவனது வாழ்க்கை வளமுற அடித்தளம் அமைத்துக்கொடுத்த கிருஷ்ணனுக்கு அவன் அவ்வப்போது கடிதம் எழுதுவான். அவரும் தவறாது பதில் எழுதுவார். ‘அடேய், தன்ராசு! போன சென்மத்துல நீ செஞ்ச பாவம் எம் மவனாப் பொறந்தது. புண்ணியத்தால அந்த அய்யிரு செநேகிதம் உனக்குக் கிடைச்சிச்சு!’ என்று மருதாயி அடிக்கடி சொல்லிச் சிரிப்பதுண்டு.                                                                                                

      … தான் ஊருக்குப் போக இருந்தது பற்றி அவர் மகள் ஜானகிக்குச் சொல்ல வேண்டுமென்று தோன்ற, அவன் பக்கத்துக் கடைக்குச் சென்றான். பொங்கல் சமயமாதலால் அந்த அதிகாலையிலேயே கடை திறந்திருந்தது.  ஜானகி தங்கியிருந்த மகளிர் விடுதியோடு தொடர்புகொண்டு அவன் ஜானகியைக் கேட்ட போது, அவள் தன் ஊருக்குப் போயிருப்பதாகத் தலைவி சொன்னார். மிலிட்டரியில் இருந்த அவள் அண்ணன் காஷ்மீர் எல்லைப் பகுதியில் எதிரிகளின் குண்டுக்கு இலக்காகிவிட்ட மரணச் சேதி வந்து அவள் ஊருக்குப் போயிருப்பதாக அவர் மேலும் தெரிவித்த போது, அவன் அதிர்ந்து போனான். கிருஷ்ணனின் மகன் இறந்த துயரத்தை விடவும் அதனால் அவர் அடைந்திருக்கக் கூடிய பாதிப்பே அவனை அதிகமாய்த் தாக்கியது. எப்போதும் புன்சிரிப்புத் தவழும் அவரது பரந்த முகம் துயரக்கோடுகளுடனும், கண்ணீர் மல்கிய கண்களுடனும் அவனது மனப்பார்வையில் தோன்றி அவனை வதைத்தது.

      அவனுடைய பேருந்து வத்தலக்குண்டோடு நின்றுவிடும். அதன் பிறகு குள்ளம்பட்டிக்கு வண்டி பிடித்துப் போகவேண்டும். எனவே முதலில் வத்தலக்குண்டில் இறங்கி, கிருஷ்ணனின் வீட்டுக்குப் போகத் தீர்மானித்தான், தன்ராஜ். …

      வத்தலக்குண்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதுமே, கிருஷ்ணனின் பக்கத்து வீட்டு இளைஞனை அங்கு பார்த்து விசாரித்தான்.

       “அவர் செத்துப் போயிட்டார். ரெண்டு நாளாச்சு. பிள்ளை காஷ்மீர் பார்டர்ல செத்துப் போன நியூஸ் வந்ததுமே அவருக்கு ஹார்ட் அட்டேக் வந்துடுத்து. மதுரைக்குக் கொண்டு போனோம். எங்கப்பாவும் நானும்தான் எல்லாம் செஞ்சோம்.  ஒண்ணும் பிரயோஜனப்படல்லே.”

      அன்பு கசிகிற அவர் விழிகள்தான் எல்லாவற்றுக்கும் முன்பாக  அவன் மனக்கண்ணில்  தோன்றி அவன் வயிற்றில் அமிலம் சுரக்கச் செய்தன. அது வாய்க்கு வந்து கசந்தது. தலை சுழன்றது. பக்கத்தில் இருந்த பெஞ்சியில் உட்கார்ந்தான். கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கொஞ்ச நேரங்கழித்து எழுந்தான். ஜானகியையும் அவர் மனைவியையும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்று மலைத்தான். ஆனால் போனான்.

      ஜானகிதான் கதவு திறந்தாள். அவனைப் பார்த்ததும் கிளறப்பட்ட துயரத்தில் விம்மி விம்மி  அழத்தொடங்கினாள். அந்த அழுகை அவனையும் தொற்றியது. அழுதழுது கண்ணீர் வற்றி விட்டார்ப்போல் கூடத்து சோஃபாவில் வெறித்த பார்வையோடு உட்கார்ந்திருந்த அவர் மனைவியை ஒரு கணத்துக்கு மேல் அவனால் பார்க்க முடியவில்லை. முகம் திருப்பிகொண்டான்.

      கூடத்து மேசையில் மாலை தாங்கிய கிருஷ்ணனின் பெரிய புகைப்படம் வைக்கப்பட்டு எதிரே ஊதுபத்திகள் புகைந்து கொண்டிருந்தன. பெட்டியைத் தரையில் வைத்த தன்ராஜ் மேசையை நெருங்கி அதன் முன் குப்புற விழுந்தான்,

       “அய்யா! என்னயக் கரை ஏத்திட்டு இப்படி அநியாயமாப் போயிட்டீங்களேய்யா?” என்று கதறித் தீர்த்தான்.

       “எனக்கு அவரோட ஃபோட்டோ ஒண்ணு இருந்தா குடுங்கம்மா.”

       ஜானகி உள்ளே போய் அவரது சிறிய புகைப்படம் ஒன்றை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். அதில் அவரது புன்னகை முகம் பார்த்து அவன் மேலும் அழலானான்.

       … குதிரை வண்டியில் ஏறி, “குள்ளம்பட்டிக்கு விடுங்க…” என்றவனை மேலும் அதிர்ச்சி தாக்கியது.

      :குள்ளம்பட்டியா! உங்களுக்கு வெசயமே தெரியாதா, தம்பி?” என்றார் வண்டிக்காரர்.

       “என்ன சொல்றீங்க?”

       “குள்ளம்பட்டி இப்ப ஒரே சுடுகாடால்ல இருக்குது?”

       “என்னது! சுடுகாடா? அப்படின்னா?”

       “ரெண்டு கட்சித் தொண்டருங்க போட்டுக்கிட்ட சண்டையில அங்ஙன இருந்த குப்பமே எரிஞ்சு போயிறுச்சு. தீ வெச்சுக் கொளுத்திட்டாக. மூணு நாளாச்சு. ரெண்டு மூணு காரை வீடுங்கதான் தப்பிச்சிச்சு! அளுங்கட்சிக்காரங்க வெச்ச தீ. அதான் பேப்பர்ல வந்திச்சே?”

       தன்ராஜ் எச்சில் விழுங்கினான்: “அப்ப, குப்பத்துல இருந்தவங்க என்ன ஆனாங்க? எங்க போனாங்க?”

       “அதை ஏன் கேக்குறீய, தம்பி? வெளியே தப்பிச்சு வர முடியாதபடிக்கு எல்லாப் படலையும் வெளிப்பக்கமாக் கொண்டி போட்டு மூடிட்டுத் தீ வெச்சுட்டாக. ஏளெட்டுக் குடும்பங்கதான் தப்பிச்சுது. ஏன்னா அவங்க குடிசைப்படலுங்க மட்டும் கொண்டி போடாம இருந்திச்சு. அதனால சந்தேகமெல்லாம் அந்தக் குடிசைக்காரங்க மேலதான்.”

      ’கடவுளே!’ – உயிர் தப்பிய குடும்பங்களில் தன்னுடையதும் ஒன்றாக இருக்கக்கூடாதா என்று ஏங்கிப் பிரார்த்தித்த மறு நொடியில் தனது எண்ணப்போக்கில் அவன் தன் மீதே வெறுப்புற்றான். குள்ளம்பட்டியை அடைந்து ஒரு பார்வை பார்த்ததுமே அவனது அடி வயிறு சுருளலாயிற்று. ஒரே பொட்டல்காடு. எங்கு பார்த்தாலும் கறுப்புச் சாம்பல் குவியல். இன்னமும் ஒரு துர்வாடை வீசிக்கொண்டிருந்தது.

      பெரிய பெட்டியும் கையுமாக நின்றுகொண்டிருந்த அவனைக் கண்டதும் ஓடிவந்த அவன் அப்பாவின் நண்பர் ரத்தினசாமி, “அப்பா, தன்ராசு! வெசயம் தெரிஞ்சுதான் வந்தியா? நெறைய சாவுப்பா, உங்கப்பா, ஆத்தா, தங்கச்சி எல்லாரும் எரிஞ்சு போயிட்டாங்க. எம்பொஞ்சாதியும் பிள்ளைங்களும் கூடச் சாம்பலாயிட்டாங்க. நான் வெளியூர் போயிருந்ததால தப்பிச்சேன். ஆனா அதுல எந்த சந்தோசமும் எனக்கு இல்லேப்பா! ஊர்ல இருக்குற எம் பிள்ளத்தாச்சி மவளுக்காக இந்த உசிரைப் பிடிச்சு வச்சுக்கிட்டிருக்கேம்ப்பா…” என்று அழுதார்.

      தான் ஏன் உயிரோடு இருக்கவேண்டும் என்று அப்போது அவனுக்கும் தோன்றியது. குடித்தாலும், குற்ற உணர்வோடு அன்பு செலுத்திய அப்பா, தன்னை அவனுக்காகத் தேய்த்து உருக்கிக்கொண்ட அம்மா, ‘டாக்குட்டருக்குப் படிப்பேன்’ என்று சொன்ன தங்கச்சி இவர்களை யெல்லாம் இழந்த பிறகு உயிர் வாழ்தலில் என்ன பொருள் இருக்க முடியும் எனும் விரக்தியால் அவன் அழவும் முடியாமல் ஒரு தூண் மாதிரி ஆடாது நின்றான். ஆனால் ரத்தினசாமி மேல்துண்டால் முகத்தை மூடி வாய்விட்டுக் கதறத் தொடங்கிய போது அவனும் பாதிப்புற்று அழலானான். குடிசை இருந்த இடம் எது என்பதைக் கூட அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தலை சுழலத் தொடங்கியது. நிற்க முடியாமல் பெட்டியைத் தரையில் கிடத்திவிட்டு அப்படியே உட்கார்ந்து போனான். உடம்பு உழுவதும் அதிரலாயிற்று.

      கந்தலையும் பழசுகளையும் தவிர வேறு எதையும்  அணிந்து அறிந்திராத தன் பெற்றோர்க்கும் தங்கச்சிக்கும் முதன் முதலாகப் புதுத் துணிகளும் உடைகளும் வாங்கித்தரும் பேற்றைப் பெறுகையில் அன்பும் கடமை உணர்வும் கொண்ட ஒரு மகனுக்குக் கிடைக்ககூடிய மகிழ்ச்சியை விதி தனக்கு மறுத்துவிட்ட சோகம் தாள முடியாமல் தன்ராஜ் திடீரென்று பெருங்குரலெடுத்து அழுதான். மனமும் விழிகளும் அழுதுகொண்டிருக்க, அவன் சிந்தனையில் ஓர் எண்ணம் வந்தது. ‘இனி வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை!’

       தன்ராஜ் மெல்ல எழுந்தான். பெட்டியைத் திறந்தான். தன் அப்பாவுக்கும் அய்யருக்கும் வாங்கிவந்திருந்த வேட்டி, பனியன்களை ரத்தினசாமியிடம் கொடுத்தான்.

       “அப்பாவுக்காக வங்கினதாப்பா?”

       “ஆமா.”

       “உங்கப்பன் குடிக்கிறதை நிப்பாட்டிட்டான். உனக்குத் தெரியுமா?”

       “எழுதியிருந்தாரு. ஆனா நான் நம்பல்லே.”

       “மெய்தாம்ப்பா. எம்மவன் இம்புட்டுப் பொறுப்பா யிருக்குறப்ப நான் குடிக்கிறது அயோக்கியத்தனம்னு சொல்லி நிப்பாட்டிட்டான். உங்காத்தாளுக்கு எந்நேரமும் உன்னோட செபந்தேன்! வர்ற சித்திரை வைகாசியில உங்கல்லாணத்தை நடத்திறணும்னு அதுக்கு ஆசையான ஆசைப்பா!”

      நின்றிருந்த தன்ராஜின் கண்ணீர் மறுபடி பீறிட்டது. “இந்தாங்க, மாமா. எங்கம்மாவுக்கு வாங்கின பொடவை, துனிங்க. உங்க மக கிட்ட குடுங்க. .. அப்ப நான் கெளபுறேன், மாமா.”

       “அதுக்குள்ளாறவா?”

       “இனிமேப்பட்டு இங்க என்ன வச்சிருக்கு மாமா எனக்கு?”

       “பட்ணத்துக்குத் தானே போறே?”

       “எங்கிட்டாவது விழுந்து சாவுறதுக்குப் போறேன்!”

       “டேய், டேய்! தன்ராசு! அப்படியெல்லாம் சொல்லாதேப்பா. வாள வேண்டிய வயசு.”

       “வாழறதுக்கு இனிமேப்பட்டு என்ன அவசியம் இருக்கு எனக்கு, மாமா? சொல்லுங்க.”

       “காலம் எப்படியாக்கொந்த புண்ணையும் ஆத்திடும்ப்பா. பொறுமையா இரு, தன்ராசு! நீ படிச்ச புள்ள. உனக்கு நான் புத்தி சொல்லக் கூடாது. நான் வெறுங் கைநாட்டு.”

       அவன் ஒன்றும் சொல்லாமல் தலையசைத்துவிட்டுப் பெட்டியுடன் புறப்பட்டான். உள்ளே ஏதோ குண்டு வைத்தது மாதிரி மனம் கனத்தது. நடப்பது கடினமாக இருந்தது. உடம்பு தள்ளாடியது. சமாளித்துகொண்டு நடந்தான்.  ‘கெணத்துலயோ கொளத்துலயோ விழுந்தா என் உசிரு போகாது. ஏன்னா எனக்கு நீஞ்சத் தெரியும். ஏதாவது வெஷத்தைத் தின்னுதான் அதைப் போக்கிக்கணும். ஆனா, மெட்ராசுக்குப் போயி, இன்னும் ஒரு சம்பளம் வாங்குற வரையில உசிரோட இருக்கணும். கேசவ் கிட்ட கடன் வாங்கி இருக்கேன். அதை அடைச்சுட்டுத்தான் சாகணும் …’

       உயிரை விட்டுவிடுவது எனும் இந்த முடிவு தோன்றியதும், தனது துயரம் முடியப் போகிறது என்கிற புதுத்தெம்பு வந்தது போல் அவன் உணர்ந்தான். தள்ளாட்டம் சற்றே குறைந்து இயல்பாக நடக்கத் தொடங்கினான்.

       பாதி வழியில், “அண்ணே! அண்ணே! பசிக்குதண்ணே. பத்துக்காசு குடுங்கண்ணே,” எனும் குரலும் பின்புறம் கேட்ட காலடி ஓசையும் அவனைத் தடுத்து நிறுத்தின, ஆறேழு வயதுச் சிறுமி ஓடிவந்து அவனை வழி மறித்துக் கெஞ்சுதலாய்ப் பார்த்தாள். இடையில் அழுக்கும் கறைகளுமாக ஒரு கந்தலைச் சுற்றிக்கொண்டிருந்தாள்.

       ”உனக்கு அப்பா அம்மா இல்லியா?”

       “இல்லே.செத்துட்டாங்க. குடிசைக்கு நெருப்பு வச்சப்ப.”

       “ நீ எப்பிடித் தப்பிச்சே?”

       “எங்கப்பா என்னய மட்டும் சின்ன சன்னல் வளியா வெளியே முதக்கா எறக்கி விட்டாரு. நீ ஓடிடு ரொம்பத் தொலவு. நாங்க ரெண்டு பேரும் அப்பால வர்றோம்னாரு. ஆனா வரவேல்லே. எரிஞ்ச கூரை விளுந்து ரெண்டு பேரும் செத்துட்டாங்க.”

        “உனக்கு சொந்தக்காரங்க யாரும் இல்லியா?”

        “இல்லே.”

  “எப்ப சாப்பிட்டே?”

        “நேத்து மத்தியானம் பிச்சை எடுத்து ஒரு இட்லி சாப்பிட்டேன்  யாரும் பிச்சை கூடப் போட மாட்டேங்குறாங்க. பிச்சை எடுக்குறதுக்கு நீங்க ஒரு சட்டி வாங்கித்தாங்கண்ணே.”

       தன்ராஜின் கண்கள் உடனே நிரம்பிப் போயின. அருகே இருந்த பெட்டிக் கடையில் ஒரு பிஸ்கட் பொட்டலமும், இரண்டு வாழைப்பழங்களும் வாங்கி அவளிடம் கொடுத்தான். அசுரப் பசியுடன் அவள் அவற்றைக் காலி செய்தாள்.  அவன் போய்விடாமல் நின்றுகொண்டே தன்னைக் கவனித்தது அவளுக்கு விந்தையாகப் பட்டிருந்திருக்க வேண்டும். அடிக்கடி ஓரத்து விழிகளால் அவளும் அவனைப் பார்த்தாள்: “பிச்சை எடுக்க எனக்கு சட்டியும் வாங்கித் தருவீங்கதானே?”

         “சட்டி கெடக்கு. முதல்ல இந்த ஜட்டியப் போட்டுக்கம்மா!” என்ற அவன் தன் பெட்டியிலிருந்து ஒரு கவுனையும் ஜட்டியையும் எடுத்து அவளிடம் கொடுத்தான்.

       சிறுமியின் விழிகள் அகலமாயின:  “எனக்கே எனக்காண்ணே?”

       “ஆமா.”

       அவற்றை அணிய அவள் தடுமாறியதைக் கண்டுஅவனே அவற்றை அவளுக்கு அணிவித்தான்.

       “உம் பேரென்ன?”

       “தங்கலச்சுமி. தங்கம்னுதான் அம்மாவும் அப்பாவும் கூப்டுவாங்க.”

       “உங்கப்பா பேரென்ன?”

       “எங்கப்பா பேரு பொன்னம்பலம். அம்மா பேரு சரோசா. நாங்க புதுசா இங்கிட்டுக் குடி வந்தோம்.”

       தன்ராஜ் கண்கொட்டாமல் அந்தச் சிறுமியைப் பார்த்தான். ‘ஏதாவது உருப்படியாப் பண்றதுக்குப் பாரு. உங்கிட்ட நல்ல எண்ணங்கள் இருக்கு. நல்லவனாத் தெரியறே. உங்கிட்ட இளமை இருக்கு.  நல்ல காரியங்கள் பண்றதுக்கு நிறைய டைம் இருக்கு.  … ஏதாவது உருப்படியாப் பண்றதுக்குப் பாரு… ஏதாவது உருப்படியாப் பண்றதுக்குப் பாரு. …’ – கிருஷ்ணனின் குரல் அவன் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

       “தங்கம்! என்னோட பட்ணத்துக்கு வர்றியா?”

       கடல் போல் கண்கள் விரிய, “நெசம்மாவா?” என்றாள் அவள்.

       “நெசமாத்தான். அங்க உன்னய ஸ்கூல்ல சேத்து விட்றேன்.”

       “மாடி வீட்டு மாலதி வச்சுப் படிக்குமே, அது மாதிரி கலர் கலரா பொம்மை போட்ட பொயிஸ்தவ மெல்லாம் வாங்கித் தருவீங்களா?”

       “நீ நல்லாப் படிச்சு நல்ல பொண்ணாவும் இருந்தா உன்னய டாக்டருக்குப் படிக்க வெப்பேன். என்ன சொல்றே?”

       “நல்லாப் படிப்பேன்.”

       “எதுக்குப் படிக்க வெப்பேன்னேன், சொல்லு.”

       “டாக்குட்டருக்கு!”

       தன் தங்கச்சியே சொன்னது போல் இருக்க, தன்ராஜ் அவள் கைவிரல்களைப் பற்றியபடி ஒரு புதிய இலக்குடன் நடக்கலானான்.

 …….

Series NavigationA lecture and discussion in remembrance of Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishnaபுள்ளிக்கள்வன்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *