தமிழில் : ட்டி. ஆர். நடராஜன்
1. வழுவமைதி
ரீத்தா தோவே
ஒரு புத்தகத்திலிருந்து எடுத்து
எனக்கு அந்தப் பெயரைச் சூட்டினார்கள்.
அது எந்தப் புத்தகமென்று எனக்குத் தெரியாது.
புத்தக அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த
ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் அந்த மாமனிதர்
அறிந்தவராயிருந்தார்.
நான் பிறந்த அந்த நல்ல நாளன்று
அவர் மறைந்து போனார்.
அன்று நாடே துக்கம் அனுஷ்டித்தது.
இதை நான் பலமுறை புரஃபஸர்களிடமிருந்தும்,
விவசாயிகளிடமிருந்தும், மாணவர்களிடமிருந்தும்
கேட்டிருக்கிறேன்.
சிலசமயங்களில் மிக மரியாதையுடன் உச்சரிக்கப்பட்ட பெயர்.
இருவருக்கு மேல் இருக்கும் அறையில் மூன்றாம் மனிதரை
புறக்கணிக்கலாம். என்னைப் போல்.
நான் இருக்கும் போதே என் பிறப்பு பற்றியும்
திரு ஜெஃ பர்சனின் மரணம் பற்றியும்
ஒரே மூச்சில் பேசுகையில்
அவர்களின் குரல்களை வியப்பு கவ்வியிருக்கும்.
மறைந்திருக்கும் தென்றலில்
நடுக்கத்துடன் காட்சி அளிக்கும் சூரிய ஒளியின் ரேகை.
2. நான் என்னும் வெளிப்படையான சமிக்ஞை
டி. ஏ. பாவெல்
என் பொழுதின் பெரும் பகுதியை
மற்றவர்களுக்குத் தர விரும்புகிறேன்:
மிச்சம் என்னிடமிருப்பது கொஞ்சம்தான்.
உயிலில் அல்லது மரணசாசனத்தில்
அதை
யுவதிகளின் கிளப்பிற்கும் ,
நகர மரங்களைப் போற்றும் நண்பர்களுக்கும்
தந்துவிட விரும்புகிறேன்.
உங்கள் வாழ்க்கை உங்களுக்குத் சொந்தமானதல்ல.
எப்போதுமே.’நொறுங்கிவிடக் கூடியது’ என்று
அறிவித்த பெட்டியில் உங்களிடம் வந்தது.
புகார் இலாக்காவிலிருந்து
திருத்தம் பெற வேண்டிய பொருள்
என்று உங்களுக்கு அது வந்தது.
நீங்கள் ஒரு பொழுதும் தேவை என்று அப்பொருளைக்
கேட்டிராத போதும்.
3. நான் கேட்கவில்லை என்று சொல்ல முடியாது
ஷரோன் ஓல்ட்ஸ்
நான் பிறக்க வேண்டும் என்று கேட்கவில்லை
என்று சொல்ல முடியாது.
என் தாயின் அழகு பணம்
என் தந்தையின் உடல் இச்சை
வளர்ந்துவிட்ட சகோதரியின் தொட்டில்
மகனொருவன் வேண்டும் என்ற என் தாயின் விருப்பம்
தந்தையின் மரபைக் காப்பாற்ற
என் தாயின் மார்பில் ஊறும் பாலை
உயிருள்ள பம்ப் போல் உறிஞ்ச
என்று நான் பலவற்றைக்
கேட்டேன்..
(நியூயார்க்கர் இதழில் 2019ம் ஆண்டு வெளியான சிறந்த கவிதைகள் என்று தேர்வு பெற்ற, இருபத்தி ஐந்து கவிதைகளிலிருந்து )