அப்பொழுது அவன் 

author
0 minutes, 15 seconds Read
This entry is part 3 of 10 in the series 6 டிசம்பர் 2020

புஷ்பால ஜெயக்குமார்

நல்ல வெய்யில். மத்தியான பொழுது. மாடிவீட்டு அம்மாள் விளையாடிக்கொண்டிருந்த அந்த பையனை அழைத்து “அதோ அந்த பிச்சைக்காரியைக் கூப்பிடு” என்றாள். அந்த பையனின் பெயர் குமார்.  அந்த பையனுக்கு பத்து வயது இருக்கும். அந்த அம்மாள் அழைக்கச் சொன்ன பிச்சைக்காரி இவன் நின்றிருந்த வீட்டிலிருந்து நாலைந்து வீடு தள்ளி இருந்த வீட்டிற்கு ஒட்டியபடி இருந்த தெருவிலே நின்றிருந்தாள்.

மாடிவீட்டு அம்மாள் இருக்கும் வீடு தான் அவன் வீடும். ஒண்டு குடித்தனம். அந்த வீடு பத்து குடித்தன போர்ஷன்கள் கொண்டதாக இருந்தன. அந்த வீட்டில் அவன் இருப்பதற்கும் அதற்கான காரணங்கள் அவனுக்குத் தெரிந்தது போல் இருந்தாலும் அவன் நிம்மதியுடன் தான் விளையாடிக்கொண்டிருந்தான். அந்த வெய்யிலில் வியர்த்துக் கொட்டியபடி இருந்தாலும் அடுத்தடுத்து அவனுக்கு எதோ ஒரு விளையாட்டு தோன்றியபடி இருந்தது.

இப்பொழுது அவன் இன்னொரு இடத்துக்கு விளையாடப் போனான். அது ஒரு மைதானம். ஆனால் அவன் வயது பையன்கள் அதைத் தோட்டம் என்று அழைத்தார்கள். அந்த இடம் இன்னும் அப்படியே இருக்கிறது என்று ஒருவன் கனவு காணும் நிலையில் தான் அந்த இடம் இருந்தது.

அந்த தோட்டத்தை ஒட்டினாற்போல் ஒரு பழைய மாளிகையின் வாசலின் தோற்றத்தில் படிக்கட்டுகள் அமைந்த ஒரு முகப்பு பகுதி ஒன்று இருந்தது. 

அந்த படிக்கட்டுகளின் மேல் இருந்த விஸ்தாரமான இடத்தில் ஒருவர் நின்றிருந்தார். அவர் வெண்ணிற உடையில் பளிச்சென்று தோன்றும்படி நின்றிருந்தார். அவர் வேட்டியும் முண்டா பனியனும் அணிந்திருந்தார். குமார் அவரை பார்த்தான். குமாரின் பார்வையில், அவர் அங்கிருப்பவர்களிடம் இருந்து தனித்துத் தெரிவதை, அவன் எந்த முயற்சியும் செய்யாமலேயே  உணர தொடங்கியிருந்தான். இது ஆச்சரியமாக இருந்தாலும் குமாருக்கு அந்த வயதில் இதைப் பற்றி அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த தோட்டத்தில் பையன்கள் விளையாடிக் கொண்டிருப்பதை  அப்படியும் இப்படியுமாக அலட்சிய பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். 

அந்த வயதில் அவனுக்கு அவனது தனிமை கூட அவனுக்கு இன்பமாக இருந்தது. அந்த பதின் பருவத்தில் அவன் உள்ளமெல்லாம்

பூரிப்புடன் இருப்பதுடன் அவனுடன் விளையாடும் பையன்களிடமும் அதேபோல் மற்றும் வெவ்வேறு மாதிரியான சந்தோஷங்கள் நிரம்பியிருப்பதை அவன் அறிந்து கொண்டான். எப்பொழுது அவன் தனியாக விளையாடுகிறான் எப்பொழுது அவன் மற்ற பையன்களோடு சேர்ந்து  விளையாடுகிறான் என்பதை  அவன் அறியாத பித்து நிலையில் அதை ஒரு கொண்டாட்டமாகவே கண்டறிந்தான். எதனாலும் யாராலும் அவனது சந்தோஷத்தைப் புரிந்து கொள்ளமுடியாததாக இருந்தது. சில நேரங்களில் அவன் உடல் வலுப் பெற்றுவிட்டதாகவும் அவன் ஆடும் அந்த விளையாட்டை வென்று விட்டதாகவும் அவனுக்குத் தோன்றியது. அந்த இடத்தில் மணற்பரப்பு நிறைய இருந்தாலும் ஓரத்தில் புதர்கள் நிறைந்து கிடந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு மயக்கம் தரும் நிலையை ஏற்படுத்தியது. அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் அந்த ஈர மண்ணில் கையை நுழைத்து தன் இரு கை விரல்களின் வழியே சல்லடை போல் அந்த மண்ணைச் சரிந்து விடச்  செய்தான். இது போல் செய்வதில் அவனுக்கு மகிழ்ச்சி இருந்தது. அவன் முழங்கால் இட்டு  கால்களை மடக்கி மண்ணில் புதைத்து அமர்ந்திருந்ததால் அவன் அரை  டவுசரின் வழியே உடலெங்கும் ஈரம் பரவியிருந்தது. பொழுது சாய்ந்து இரவு வரும் வரை அவன் விளையாடிக்கொண்டிருந்தான். பிறகு அந்த இரும்பு கிராதி கதவுகளைத் தாண்டி அந்த தோட்டத்தை விட்டு வெளியே வந்தான்.

அவன் மனதில் எல்லாம் சரியாக இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. அவன் யாரிடமும் எதையாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. அது பற்றிய துடிப்பு அவன் மனத்தில் புதிய சந்தோஷத்தை ஏற்படுத்தியது. அவன் நடக்கும் போதும் ஓடும்போது வெவ்வேறு விதமான சந்தோஷத்தை அடைந்தான். தெருவில் நடக்கும் எல்லாவற்றையும் காணும் போது அவனது சுவாரஸ்யம் கூடிக்கொண்டே இருந்தது.

தெருவில் வண்டிகள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தன. அதேசமயம் மாநகராட்சி விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டிருந்தன. தெருவே புது வகையான உருவம் எடுத்தது போல் தோன்றியது அவனுக்கு. இது ஒரு நாள் அல்ல. ஒவ்வொரு நாள் அந்தி மறைந்து இரவு தொடங்கும் போது அப்படித்தான் தோன்றியது அவனுக்கு. வீட்டை நோக்கி நடந்தான். சாலை ஓரத்தில் நடந்தபடி வானத்தைப் பார்த்தான். அடர்த்தியான இருளாய் இருந்த வானம் அவனுக்கு மிக நெருக்கமாகவும் இஷ்டத்திற்கு  வீசியெறியப்பட்ட  சிறியதும் பெரியதுமான இன்றைய நட்சத்திரங்களைக் கொண்டதாகவும் இருந்தது அது. அவன் வீட்டை நெருங்கினான். அவன் வீட்டை நெருங்கும் போது அவன் மனம் வேறொன்றாக மாறுவதை உணர்ந்தான். தெருவிற்கும் வீட்டிற்கும் இருக்கும் வாசலைக்  கடந்து இரண்டு இருண்ட தாழ்வாரங்களைக் கடந்தால் தான் அவன் குடியிருக்கும் அந்த வாடகை அறை வரும். ஒவ்வொருமுறை இதை அவன் கடக்கும் போது அவன் மனம் திக் திக் என்று அடித்துக் கொள்ளும். அவன் அறையில் நுழைந்ததும் அவன் பார்த்தது அவன் அம்மா தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதைத் தான். அவள் அயர்ச்சியுடன் உறங்கிக் கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது.  சிறிது  நேரம் அப்படியே நின்றபடி அவன் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அம்மா எதோ பிரச்சனையில் இருப்பது போலவும் அதிலிருந்து மீளவே முடியாது என்பது போலவும் உறங்கிக் கொண்டிருந்தாள். அவனுக்கு இதெல்லாம் தெரிந்திருந்தும் என்ன செய்வதென்று தெரியாதவனாகவும் அவன் வாழ்க்கையில் நடக்கும் மற்ற விஷயங்களுக்கும் வீட்டில் நடப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவும் அவனுக்குத் தோன்றியது.

பக்கத்து வீட்டுப் பாட்டி அவள் வீட்டுக் கதவை திறந்தபடி வெளியே வந்தாள். அவள் அந்த தாழ்வரத்தின் ஓரத்தில் தான் படுத்து கொள்வாள். அங்கே எந்நேரமும் ஒரு துணி மூட்டையும் பாயும் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். அதுதான் அவள் படுக்கும் இடம். பாட்டி இவனை பார்த்ததும் “யாரு”. என்றாள். பிறகு அவளே “எங்கே போனே, “அந்த மாடிவீட்டு அம்மாளுக்கும் உங்கம்மாவுக்கும்  சண்டையாச்சே, எங்கே போனே” என்றாள்.

பாட்டி உயரமாகவும் சற்றே கூன் வீழ்ந்தவளாகவும் மல்லி ரவிக்கை அணிந்து வாயல் புடவை கட்டியவளாக இருந்தாள். பாட்டியின் முகத்தில் ஆச்சரியமாக அத்தனை சுருக்கம் இல்லாமல் இருந்தது. வளைந்த  முதுகுதான் அவளைக் கிழவி என்று காட்டியது. அவளது கால் மற்றும் கை விரல்கள் எல்லாம் நீள நீளமாக இருந்தது. எப்பொழுதும் இருமிக் கொண்டே இருந்தாள். அவளது பார்வை மற்றும் காது கேட்கும் திறன் அபாரமாக இருந்தது. இது  தெரியக் காரணம் நடையில்  யார் நடந்து போனாலும் “யாரது ” என்று  தெரியாததைப் போல் சொல்லி  “இந்த நேரத்தில் இவ ஏன் இங்க வந்து போரா” என்று சரியாக யூகித்துச் சொல்லி  விடுவாள்.

அம்மா உறங்கிக் கொண்டிருந்தாள். அவன் ஓசை படாமல் நகர்ந்து போய் சுவிட்சு  போர்டுக்கு கீழே சவற்றின் ஓரத்தில் அவனுக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டுப் பாத்திரங்களுக்கு அருகே தரையில் அமர்ந்தான். ஒரே ஒரு அறை அதை ஒட்டியது போல் ஒரு சிறிய பகுதி அது சமையல் செய்யும் இடம். இது தான் அவன் வீடு. வீடு அமைதியாக  இருப்பதை உணர்ந்தவனாக அவன் தட்டை எடுத்து வைத்து சாப்பாட்டை அள்ளி போட்டுக் கொண்டான். சரியாக அந்த நேரம்  அவன் அம்மா தூக்கத்திலிருந்து எழுந்தபடி,  தலை முடியை அள்ளி முடிச்சு போட்டுக் கொண்டே

“எப்ப  வந்தே”  என்றாள்.

“இப்பத்தாம்மா”  என்றான்.

“வீடுன்னு  ஒன்னு இருக்கே ஞாபகமிருக்கா”. என்றாள்.

அவனும் அவன் அம்மாவும் பேசிக்கொண்டிருப்பதை அந்த அறையின் சுவர்கள் பார்த்துக் கொண்டிருப்பதாக  அவனுக்குப் பட்டது. அம்மாவின் முகம் கவலையாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

“என்னம்மா அச்சு” என்றான்.

“ஒன்றுமில்லை” என்றாள்.

அவனுக்குத் தெரியும் அவள் இப்படித்தான் பதில் சொல்லுவாள் என்று. இதுவெல்லாம் கடந்து போய்விடும் என்று அவனும் சரி அவன் அம்மாவும் சரி அப்பொழுது யாரும் நினைக்கவில்லை. இருந்தாலும் அவன் அம்மா தனது கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருந்தாள். அவளது வாழ்க்கை அப்பொழுதிற்கும் இப்போதும் எனப் பெரிய வித்தியாசம் இல்லை. எல்லாம் ஒரே மாதிரியாகத் தான் இருந்தது. ஆனால் வாழ்க்கையில் அவள் நிறைய அனுபவம் கொண்டிருப்பதாகவும் எந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாக அணுக முடியும் என்று கூட அவள் நினைத்திருக்கக் கூடும். ஆனாலும் அதன் விளைவாக  அவளுக்குக் கிடப்பது தோல்வி தான். இருந்தாலும் அதைப் பற்றி அவள் கவலைப் படாமல் இருந்தாள். வாழ்க்கையின் மீது அவளுக்கு  இருந்த அலட்சியமான  பார்வை அவனுக்கும் தொற்றிக்கொண்டது. அம்மாவும் பிள்ளையும் ஒரே மாதிரி நடந்துகொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இப்பொழுது அவன் சாப்பிட்டு முடித்து விட்டு கையை கழுவிக்கொண்டு  கையை தன் டவுசரிலேயே துடைத்துக்கொண்டு வந்து அவன் அம்மாவின் பக்கத்திலே படுத்துக் கொண்டான். படுத்தபடி விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் எப்பொழுது தூங்கிப் போனான் என்பது தெரியாமலே தூங்கிப் போனான்.

அவனது கனவில் மாடி வீட்டு  அம்மாள் வசித்து வந்த இடம் மிக வசதியாக இருந்தது. அவர்களது குடும்பம் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பது போல் அவனுக்குப் பட்டது. அந்த அம்மாள்  யாரையும் அலட்சியமாகப் பேசுவதுக்குக் கூட அது தான் காரணம் என்று அவனுக்குத் தோன்றியது. அவர்கள் அப்படி நடந்து கொள்வதால் யார் எப்படியெல்லாம் பாதிக்கப் படுவார்கள் என்பதைப் பற்றி கவலைப் படாமல் இருந்தார்கள். அவர்கள் நடந்து கொள்வதும்  மற்றும் புதிய ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு பொருட்களை வாங்குவது எல்லாமே அவனுக்கு வியப்பாக இருந்தது. அவர்களுக்கு எந்த சங்கடங்களும் வராது என்பது போலவும் எப்பொழுதும் புதிதாகத் தோன்றும் படியாக இருப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது. அந்த மாடிவீட்டில் வசிப்பவர்கள், எப்பொழுது வெளியே வந்து போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அப்படி அவர்களில் யாராவது வெளியே வரும்போது மற்றவர்கள்   அவர்களைச் சற்று  அதிசயமாகத்தான் பார்த்தார்கள். அவர்கள் வசதியானவர்கள் என்பது மட்டும் எதோ ஒரு வகையில் அவனுக்கு தெரிய வந்தது. அவர்கள் வீட்டில் காற்று தூய்மையாக இருப்பது போலவும் பொருட்கள் சுத்தமாக இருப்பது போலவும் அவன் நினைத்தான். அவனுக்கும் அவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவும் அதுதான் அவனையும் அவர்களையும் பிரித்து வைத்திருப்பதாகவும் இது மிக வேடிக்கை ஆனதும் அவன் விளையாடும் விளையாட்டைப் போலவே இருப்பதாகவும் அவனுக்கு நினைக்கத் தோன்றியது. அவர்களைப் பார்க்கும் போது அவன் தன்னை அந்நியனாக உணர்ந்தான். அவர்கள் வீட்டில் இருக்கும் பொருட்கள் எல்லாம் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருப்பதற்கு அந்த வீட்டில் உள்ளவர்களின் ஆகிருதியும் ஆளுமையும் தான் காரணம் என்பதை எப்பொடியோ அவன் புரிந்து கொண்டான். ஒரு முறை அந்த மாடிவீட்டு அம்மா எதோ வேலை சொல்வதற்கு அவனை அழைத்த போது, அவன் அந்த வரவேற்பறையில் நின்றபடி காத்திருந்தான். அப்பொழுது அவன் காலிலிருந்து வழிந்தோடிய வியர்வை அவன் பாதத்தை நனைத்து தரையில் வழிந்தோட, அதை மிதித்தபடி  அவன் கால்களை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டே அங்கே நின்றிருந்தான்.

அவன் விழித்துக் கொண்டான். எழுந்து உட்கார்ந்து சுற்றும் முற்றும் பார்த்தான். இது விடியல் இல்லை, விடியலைக் கடந்த நேரம் என்பதைப் புரிந்து கொண்டான். வீட்டின் வாசல் படியிலிருந்து மரக்கதவின் ஓரம் தண்ணீர் சிந்தியிருப்பதைப் பார்த்தான். அவன் அம்மா தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை யூகித்தான்.  வீட்டை விட்டு வெளியே வந்து வெறும் கால்களைத் தரையில் தேய்த்துத் தேய்த்து நடந்து வீட்டிற்கும் தெருவிற்கும் இருக்கும் முகப்பு வாசலுக்கு வந்து நின்றான். தெருவில் ஜன நடமாட்டம் அவ்வலுவாக  இல்லாத காலைப் பொழுது. ஒரு மாடு ஒன்று தெருவின் ஓரமாக நடந்து  போய்க்கொண்டிருந்தது. அவன் மனதிலும் நினைவிலும் எதுவும் இல்லை என்பதாகவும்  அது வெற்றிடமாக  இருப்பதாகவும்  உறுதி செய்து கொண்ட நிலையில் அவன் இருந்தான்.

அவன் தெருவில் இறங்கி அந்த பிச்சைக்காரியைத் தேடிப் போனான். அவள் முன்பு அவன் பார்த்த இடத்திலேயே அவன் முன்பு குறிப்பிட்ட அந்த வீட்டின் முன்னலே நின்றிருந்தாள். அவன் அவளை அணுகி  “உன்னை அந்த மாடிவீட்டு அம்மா கூப்பிடறா”  என்றான். அவள் அவன் பக்கம் திரும்பி அவன் முகத்தில் எச்சிலைத் துப்பினாள். அப்போது தெருவில் போய்க் கொண்டிருந்த ஒருவர் “தம்பி அவள் பிச்சைக்காரி இல்லை, பைத்தியக்காரி….” என்றார்.

அவன் திரும்பிப் பார்த்தான் . இங்கிருந்து பார்ப்பதற்கு அந்த மாடி வீட்டு அம்மாள் சிரிப்பது போல் தோன்றியது அவனுக்கு.

—புஷ்பால ஜெயக்குமார்

Series Navigationஅமெரிக்க எண்கணிதம் – ஆங்கில மூலம் : நதாலி டயஸ்திருக்குறள் காட்டும் மேலாண்மை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *