எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு – மணக்கும் பூந்தோட்டம்

This entry is part 8 of 10 in the series 6 டிசம்பர் 2020

             

                                                     

எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு அண்மையில்  வெளியாகி உள்ளது. சொற்கூடல் என்னும் பெயரில் வெளியாகி உள்ள இத்தொகுப்பில் மொத்தம் 25 கட்டுரைகள் உள்ளன.

“அம்பேத்கரைப் பயிலுவோம்” முதல் கட்டுரை விருப்பு வெறுப்பின்றி எழுதப்பட்டுள்ளது. எஸ்ஸார்சி இக்கட்டுரையில் கூறுபவை சில புதிய கருத்துகள்தாம். அம்பேத்கர் அரிசனங்கள் கோயிலில் நுழைவதை விட அரசியல் உரிமை பெறுவதுதான் முக்கியம் என்று கருதினார். “there is nothing in the entry of tempies” என்பது அம்பேத்கரின் கூற்று. மேலும் காந்தியடிகளை மகாத்மா என்று மக்கள் அழைப்பதை அம்பேத்கர் விரும்பவில்லை. இந்து மதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்குத் துனை நிற்றல் என்பதுவே காந்தியடிகளின் புரிதல் எனில் அதனைச் சகித்துக் கொள்ள முடியாது என்று அம்பேத்கர் கருதினார். இக்கட்டுரையில் உள்ள இக்கருத்துகள் அறிய வேண்டியனவாகும்.  

“நீதிமன்றத் தீர்ப்புகளும் கனமான செய்திகளும்” கட்டுரை சற்றுத் துணிச்சலானதுதான். டூஜி வழக்கு, கேரளத்து நம்பி நாராயணன் பற்றிய வழக்கு, சபரிமலைக்குப் பெண்கள் செல்வது, கேரளாவில் ஆறு ஷெடூல்ட் இன அர்ச்சகர்களை நியமித்தது, முல்லைப் பெரியாறு வழக்கு, மாத்ருபூமியில் ஹரீஷின் ‘மீசை’ தொடர்கதை நின்ற வழக்கு. முத்தலாக் வழக்கு. ஓரினச் சேர்க்கை பற்ரிய தீர்ப்பு, ரபேல் விமான பேர வழக்கு என இப்படி சில முக்கியமான வழக்குகள் பற்றிக் குறிப்புகள் காட்டிச் சில தீர்ப்புகளையும் இக்கட்டுரை சொல்கிறது. உச்ச நீதிமன்றம் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்றும் கட்டுரை சொல்கிறது. அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரையாகும் இது.

“வேதங்கள் மக்களின் வாழ்க்கையை விழைவை வேண்டுதலை அவர்கட்குத் தெரிந்த அன்றைய நியாயத்தைச் சொல்கின்றன” என்கிறது காதுள்ளோர் கேட்கட்டும் என்னும் ஒரு கட்டுரை. இவ்வாக்கியத்தில் எஸ்ஸார்சி சொல்லும் அன்றைய நியாயம் என்பது முக்கியமாகும். ஆமாம்! காலத்துக்குக் காலம் நியாய அநியாயங்கள் மாறித்தானே வருகின்றன. அந்தக் கால நூல்களை இக்கால அளவுகோல்களை வைத்து அளக்கக் கூடாதன்றோ?

தென்னாட்டிலிருந்து விடுதலைப் போரில் ஈடுபட்ட எளிய குடும்பத்தின் முதல் பெண்மணியான கடலூரைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள் பற்றிக் கூறுகிறது ஒரு கட்டுரை. முப்பதோராம் வயதில் தன் வயிற்றில் குழந்தையோடு சிறை புகுந்த செம்மல் அவர். அஞ்சலை அம்மாளின் மகள் அம்மாக்கண்ணு தன் ஏழு வயதில் நீலன் சிலை உடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றது குறிப்பிடத்தக்கதாகும். இக்கட்டுரையில் எஸ்ஸார்சி கேட்கும் ஒரு கேள்வி முக்கியமானதாகும். “கடலூரில் அஞ்சலை அம்மாளுக்கு நினைவுச் சின்னமாக ஏத்தேனும் ஒரு சிறிய சந்துக்காவது பெயர் வைத்து அம்மையார் நினைவைப் போற்றி இருக்கிறோமா?” இது எப்போதுதான் விழவேண்டியவர்கள் காதில் விழுமோ?

கையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம் என்று ஒரு கட்டுரை. தற்பொழுது எல்லா இதழ்களுமே கணினியில் அச்சடித்து மின்னஞ்சலில்தான் படைப்புகளை அனுப்பச் சொல்கின்றன. அவர்களுக்கு அச்சேற்ற இது மிகவும் வசதியாய் உள்ளது. எனக்குத் தெரிந்த சாகித்ய அகாதமி விருதாளர் நாஞ்சில்நாடன் இன்னும் கையால் எழுதித்தான் தன் படைப்புகளை அனுப்புகிறார். மிகவும் வற்புறுத்தும் இதழ்களுக்கு மட்டும் வேறு ஒருவர் மூலம் கணினியில் அச்சடித்து மின்னஞ்சல் வழி அனுப்புகிறார். 

காலமாற்றத்தை நாமும் அனுசரித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். கண்ணினியில் எழுதுவது உடனே அனுப்பவும், திருத்தவும் வசதியாகத்தான் உள்ளது. இதற்கும் தனித்தமிழ் இயக்கத்திற்கும் எந்தவிதத்தொடர்பும் இல்லை. உலகமொழியாக ஆங்கிலம்  வேண்டும் என்பதைத்தான் தனித்தமிழ்வாதிகளும் ஒத்துக் கொள்கிறர்கள். நல்ல தமிழ்ச்சொற்கள் இருக்க வேண்டுமென்றெ வேற்று மொழிச்சொற்களைப் பயன்படுத்துவதைத்தான் அவர்கள் எதிர்க்கிறார்கள்.

ஜெயமோகனின் கொற்றவை நூலிற்கு ஓர் அருமையான மதிப்புரை இந்நூலில் உள்ளது. ஜெயமோகன் முழுமையாக தனித்தமிழ் நடையில் எழுதிய காப்பியமாகும் அது. தமிழின் பழம் சொற்களையும், வழக்கொழிந்த அரிய சொற்களையும் அதில் ஜெ. கையாண்டுள்ளார். எஸ்ஸார்சி சொல்வது போல இது சிரத்தையோடுதான் வாசிக்கப்பட வேண்டும். வாசிக்கும் வாசகனை வளர்க்கவே எழுதப்பட்டதாகும். இனிய வருணனைகளையும்  சில நுணுக்கமான செய்திகளையும் எஸ்ஸார்சி கூறுகிறார். சிலப்பதிகாரத்திற்கும் கொற்றவைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு மதுரை எரியுண்ணும்போது அக்காலத்தில் இருந்த அரசியல் சூழலேயாகும். அதைக் கொற்றவை புது விதமாகக் காட்டி உள்ளது மதிப்புரையாளர் அதைக் கவனிக்கவில்லை போலும்.

மயக்கமா இல்லை தயக்கமா ஒரு முக்கியமான கட்டுரை. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் நம் நாட்டின் சிறைத்துறை,  காவல்துறை, நிதித்துறை போன்றவற்றில் நவீனம் என்பதே வரவில்லையே என்று கவலைப்படும் கட்டுரை அதுவாகும். இன்னும் நாம் எத்தனை ஆண்டுகள்தாம் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கப் போகிறோமா யார் அறிவார்?

மிகச் சிறிய நகரம் போன்றிருக்கும் குறிஞ்சிப்பாடியிலிருந்து மொழிபெயர்ப்பிற்காகவே குறிஞ்சிவேலன் நடத்தும் திசைஎட்டும் என்னும் இதழை வியந்தோதுகிறது ஒரு கட்டுரை. இந்த இதழை ஒரு தவமாகவே பல்பேரின் ஒத்துழைப்புடன் மிகவும் முயன்று நடத்தும் குறிஞ்சிவேலனைப் பாராட்டத்தான் வேண்டும். அந்த இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கும் எஸ்ஸார்சிதான் இக்கட்டுரை எழுத மிகவும் பொருத்தமானவர்..

“பெண்ணாடம் பெருமை பேசுவோம்” என்னும் கட்டுரை கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் எனும் நகரத்தின் அருமை பெருமைகளைக் கூறுகிறது. அவ்வூரின் இருப்பிடத்தைச் சற்று விளக்கிச் சொல்லி இருக்கலாம். மற்றபடி அவ்வூரின் பழம்பெருமைகளைக் கட்டுரை நன்கு விளக்கி உள்ளது. கட்டுரையைப் படிக்கப் படிக்கப் பெண்ணாடம் சைவ சமயத்தில் சிறந்து விளங்கிய திருத்தலம் என்பதை அறிய முடிகிறது. அறுபத்து மூவரில் ஒருவரான கலிக்கம்ப நாயனார் இவ்வூரைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கு இங்கு ஒரு தனிக்கோயில் உள்ளது என்பதும் இதுவரை யாரும் அறியாத செய்திகளாகும். பெண் ஆகடம் என்னும் பெயர்தான் மருவிப் பெண்ணாடம் என்றானது என்கிறது கட்டுரை. தேவலோகத்திலிருந்து வந்த பெண், பசு [ஆ[, யானை எல்லாம் இவ்வூரின் அழகில் மயங்கி இங்கு தங்கிவிட்டதால் இப்பெயர் வந்ததாம்.

எஸ்ஸார்சி 1972-இல் சாந்திசேனா என்னும் அமைப்பு சார்பாக நடைபெற்ற அகில இந்திய முகாமில் கலந்து கொண்டதைப் பற்றி ஒரு கட்டுரை உள்ளது. இது போன்ற கட்டுரைகள் வாசிக்கக் களைப்புதான் தரும். ஆனல் இக்கட்டுரை மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. முகாமில் தூக்கி எறியப்பட்ட உணவு வகைகளை முகாமில் முன்னணித் தோழர்கள் எடுத்துத் தாமே உண்டது ஒரு முக்கியமான நிகழ்வு. உணவை வீனாக்கக் கூடாது என்பதை உணர்த்தும் ஓர் அரிய பாடம்.

விருத்தாசலத்தில் வாழ்ந்து மறைந்த வே. சபாநாயகம் பற்றிய பல செய்திகளைக் கூறுகிறது ஒரு கட்டுரை. சபாநாயகம் ஐயா பற்றிய நல்ல அறிமுகமாக இதை எடுத்துக் கொள்ளலாம். திரையுலகம் ஆகி வந்த தடமே கட்டுரை பல்வேறு அரசியல் செய்திகளைப் பேசுகிறது. தையலை உயர்வுய் செய் பெண்ணின் பெருமை கூறுகிறது.

இவை தவிர, நீலமணி, ரகுவீரர், அக்களூர் ரவி, பாவண்ணன். வளவ. துரையன், மில்டன், காண்டேகர், சி. மகேந்திரன், சிரில் ஆகியோரின் படைப்புகள் பற்றியும் சீரான மதிப்புரைகள் எஸ்ஸார்சி எழுதி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  பலவகையான மலர்கள் மணம் வீசும் ஒரு பூந்தோட்டமாக இந்த “சொற்கூடல்” திகழ்கிறது எனலாம்.

[சொற்கூடல்—எஸ்ஸார்சி—கட்டுரைகள்— வெளியீடு: உதயகண்ணன்,

10, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை- 600 011.  பேசி: 9444640986]  

Series Navigationஇவன் இப்படித்தான்கவிதையும் ரசனையும் – 6
author

வளவ.துரையன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    SELVARAJU N says:

    வளவதுரையனின் கட்டுரை எஸ்ஸார்சியின் நூலுக்கு நல்ல அறிமுகமாக இருக்கிறது. கட்டுரைகளை எழுதிய எஸ்ஸார்சிக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *