மேரியின் நாய்

This entry is part 7 of 12 in the series 27 டிசம்பர் 2020

2020 கார்த்திகை மாதம்-  மெல்பேன் – மல்கிறேவ் மிருக வைத்தியசாலை

வசந்தகாலமாக இருக்கவேண்டும் ஆனால் இந்த வருடம் குளிர்காலமும் வசந்தமும்  ஒன்றுடன் ஒன்று பிரியாது இருந்தது. அது பெரிதான பிரச்சனை இல்லை . கொரானால் மெல்பேன் நகரம் மூடப்பட்டு அல்பேட் காமுவின் பிளேக்கின் கற்பனைக்கு,  21ம் நூற்றாண்டில் நிஜமான வடிவம் கொடுக்கப்பட்ட காலம். ஆனால் மிருகவைத்தியர்கள் அவசரகால வேலையாளர்களின் பகுதியாக இருப்பதால் தொழில் செய்ய அனுமதியுள்ளது.

மிருக வைத்திய நிலையத்தில் காலை பத்து மணிக்குப் பதியப்பட்டிருந்த  முதலாவது நோயாளியான  செல்லப்பிராணி,  பத்து  வயதான வெள்ளை மயிர் சடைத்து வளர்ந்த லில்லி எனப்படும் சிட்சூ வகையான  சிறிய நாய் இப்பொழுது வருமென கிளினிக்கில் பணிபுரியும் ஷரன் சொல்லியதால் எனது நீல மேலுடையை போட்டுக்கொண்டு முகக்கவசத்தை சரிபார்த்து  தயாராகி விட்டு வெளியே பார்த்தேன்

யன்னல் கண்ணாடிக்கு வெளியே  தனது வாலை ஆட்டியபடி சந்தோசமாக நின்ற அந்த நாயையும் அதன்  எஜமானரையும் பார்த்தவுடன்    ஷரன் எழுந்து கதவைத்  திறந்தாள்.

கொரோனா காலம்.  மனிதர்கள் எல்லோரும் முகக்கவசம்  அணிந்திருந்தாலும், அது நாய்களுக்குப் பிரச்சினையில்லை. ஒவ்வொருவருக்கும்  உரிய  மணத்தை  அவை தங்களது மூளையின் அடுக்குகளில் சேமித்து வைத்திருக்கின்றன. கண்கள் காதுகள் இயங்காத முதிய  வயதிலும்  வீட்டுக்குள் மூன்று வருடங்கள் மூக்கின் உதவியால் தடைகள் , படிகள்  தாண்டி சந்தோசமாக வாழ்ந்த நாய்களைப் பார்த்துள்ளேன்.

அந்த சிட்சூ அமைதியாக  உள்ளே வர,  அதன் பின்பாக  ஒரு எழுபது வயதான மேரி என்ற  பெண் வந்தார் .  முகத்தைத்  தெளிவாகப் பார்க்க முடியாத கொரோனோக் காலத்தில்   எப்படி  அவளது வயது தெரியுமெனக் கேட்கிறீர்களா?

நாய்களுக்குப் பல்லைப் பார்த்து  வயதைக் கணிப்போம். மேரியின் மார்பு,   இடுப்பு,  வயிற்றையும் வைத்து வயதைக் கணித்தேன்.

முகம் தெரியாததால் எப்படி சுகமென முகமன் விசாரிக்காது, தலையை அசைத்து வரவேற்றேன்.

அக்காலத்தில் கை  கொடுத்தோ, குறைந்தபட்சம் எப்படி சுகம்?  இன்றைய  நாள் எப்படி?  என்றெல்லாம் வரவேற்போம்

 எவ்வளவுக்கெவ்வளவு குறைந்த நிமிடங்களில் விடயத்தை முடித்து அனுப்புகிறோமோ அந்தளவு இருவருக்கும் நன்று என்பதால்  நேரடியாக விடயத்திற்கு வந்து   “ என்ன செய்ய வேண்டும்? என்ன பிரச்சினை? “ எனக்கேட்டேன்.

இருவரும் இரண்டு மீட்டர்கள் இடைவெளியை வைத்துக்கொண்டு           “  லில்லி  இடது முன்னங்காலில் நொண்டுகிறது  “  என்று  காற்றின் ஓசையாக முகக்கவசத்தை  மீறி பதில் வந்தது.  அவரின் நீலக்  கண்களைப் பார்த்து பதிலை  உறுதி செய்தேன்.

 “ஏதாவது அடி பட்டோ அல்லது கீழே விழுந்ததற்கான சாத்தியக்கூறுகள்…?  “

 “ இல்லை,  வீட்டில் அடைபட்டு  இருக்கிறோம். ஏதாவது  நடந்தால் தெரிந்திருக்கும்.  கிட்டத்தட்ட  இரண்டு மூன்று  கிழமையாக  இந்தக் காலை நொண்டுகிறது.  “ குனிந்து வலது கையால்   அதன் முன்காலைக் காட்டியபடி சொன்னார் அந்தப்பெண்.

“ வெளியே  கார் தரிப்பிடத்தில்  லில்லி  நடப்பதை நான் பார்க்க வேண்டும். “  என்றவாறு    அந்தப் பெண்ணையும் லில்லியையும் பின் தொடர்ந்து வெளியே சென்றேன்.

அந்த இடைவெளியில் என் மனதில் பல விடயங்கள் ஊர்ந்தன.

லில்லிக்கு  பத்து  வயது,  மூட்டு வலிக்குரிய  முதிர் வயதல்ல.  அதே வேளையில் இளம் வயதுமல்ல. முன்னங்கால்கள் நீளம் குறைந்தவை.  பின்னங்கால்களிலும் பார்க்க  குறைவான காயங்கள், உடைவுகள்  ஏற்படுவதை  பார்த்துள்ளேன்.

பல சந்தர்ப்பங்களில்  நாய்களின் எஜமானர்கள்  தங்கள் நாய்கள்   இடது காலில்  நொண்டுகிறது என்று சொன்னபோது  வலது காலாக இருக்கும் . முன்னங்கால் என்பது பின்காலாக இருக்கும். கழுத்துவலியில்  முன்னங்கால்களால்  நொண்டும்.    இப்படியான விடயங்களைத் தவிர்ப்பதற்காக  நாய்களை நடக்கவிட்டுப் பார்ப்பது  எனது வழக்கம்.  

வெளியே  சீமெந்தினாலான கார் தரிப்பிடத்தில்  நாயுடன்  அதன் எஜமானி  மேரியை விரைவாக நடக்கச் சொன்னேன்.  இருவரும்  நடந்தபோது நொண்டுவது    நாயின் இடது கால் என்பது உறுதியானதும்,  மீண்டும் உள்ளே வந்து  அதனைப் பரிசோதனை மேசையில் வைத்து  அதன் காலைத் தடவியும் பின்பு அழுத்தியும் பார்த்தேன் .  தடவியபோது பொறுமையாக இருந்துவிட்டு, காலை அழுத்தியபோது லில்லி  பற்களைக் காட்டி   “வலிக்கிறது கடிப்பேன்  “ எனக்கோபமாக என்னை நிமிர்ந்து  பார்த்தது.   “ நீ கடி வாங்குவாய்” என்ற எச்சரிக்கை  அதன் கண்களில் சிவப்பு நிறத்தில்  தெரிந்தது.

“ இப்படித்தான் எனக்கும் செய்தது  “   என்றார் மேரி.

  “ எதற்கும் அடுத்த கிழமை ஒரு மயக்கமருந்து கொடுத்து  எக்ஸ்ரே எடுப்போம். வெறும் வயிற்றுடன் கொண்டு வாருங்கள்    “  எனச்  சொல்லி அவரை அனுப்பினேன்.

கிழமையில் ஓரிரு நாட்கள் மட்டும்,  வேறு ஒருவருக்காக  லோக்கம் என்ற பெயரில் ஒரு நாளில்  வேலை செய்துவிட்டுத்  திரும்பிவிடுவேன். வேலை செய்யும்போது நாய் பூனைகளை சிகிச்சைக்குக்  கொண்டு  வருபவர்களோடு  எனக்குத்  தொடர்புகள் அதிகமில்லை.

நான் சொந்தமாக கிளினிக்கை  வைத்திருந்தபோது, நல்ல வெய்யில் நாள் அல்லது மழை நாளென்றால்  நாய் பூனைகள் நம்மை எட்டிப் பார்க்காது . வெய்யில் காலத்தில் கடற்கரையிலும்,  மழைக்காலத்தில் வீட்டுக்குள்ளும் மனிதர்கள் உறைந்து கிடக்கும்போது,  யார் செல்லப்பிராணிகளைக் கவனிப்பார்கள். ஏனோ அக்காலத்தில் அவையும் நோய் வாய்ப்படுவதில்லை.

அதை விடப் பல கவலைகள் எனக்கிருந்தது!

எவ்வளவு வருமானம் ?

சம்பளம் கொடுக்க இந்த முறை வருமானம் போதுமா?

அரசுக்கு வரி கட்ட போதிய பணமிருக்குமா?

விடுமுறை எடுக்க முடியுமா?

இந்தக்கேள்விகள்  முன்னர் கடந்த கால் நூற்றாண்டு காலமாக  என் மனதில் சலசலத்து ஒடியபடியிருக்கும்.  அந்த கால் நூற்றாண்டு காலத்தில்  முதல் பதினைந்து வருடமும் மார்கழி மாதத்தில் மட்டும் இரண்டு கிழமை கிளினிக்கை மூடிவிட்டு விடுமுறை எடுப்பேன். பிற்காலத்தில் ஒரு உதவியாளர் இருந்ததால் மற்றைய காலங்களில் விடுமுறை எடுக்க முடிந்தது.

இப்பொழுது முகக்கவசத்துடன் வேலை செய்வது புதிய அனுபவம்.  வழக்கமாக நாள் தோறும் முகச்சவரம் செய்பவன் தற்பொழுது இரண்டு கிழமைக்கொரு முறை சிறிதாகக் கத்தரிப்பேன் . பல் துலக்காது  முகம் கழுவாது போனால்கூட பிரச்சினை இல்லை என்ற நிலைமை வந்துள்ள  காலம். மனிதர்களது முகங்களைப் பார்க்காது அவர்களது செல்லப்பிராணிகளை மட்டும்  பார்த்து வைத்தியம் செய்வது  புதுமையானது .

அடுத்த கிழமை மதியத்தில் லில்லிக்கு  மயக்க மருந்து கொடுத்து விட்டு பார்த்தபோது அதன்  முன்னங்கால்  சிறிய தடிப்பாகத் தெரிந்தது.  அதை எக்ஸரே எடுத்துப் பார்த்தபோது , அது எலும்பில் வந்த  புற்றுநோயாகப்  புரிந்து கொண்டேன்.

 உடனே  அதன் நெஞ்சிலும்  எக்ஸ்ரே எடுத்து சுவாசப்பையில் எதாவது பரவி இருக்கிறதா எனப்பார்த்தபோது அதில் எதுவும் தெரியவில்லை. இதுவரை சுவாசப்பைக்கு  பரவாத  புற்றுநோய்                            எனத் தெரிந்து கொண்டேன் .

அந்த நாயின் எஜமானிக்கு  தொலைப்பேசி ஊடாக  எதுவும் சொல்லாது நான்கு மணியளவில் வரச் சொன்னேன் .

நல்ல செய்திகளை எப்படியும் சொல்லலாம்.  ஆனால்,   துக்கமான செய்திகளை நேரில் சொல்லவேண்டும் என நினைப்பவன் நான்.  அவர்களும், தங்கள் உணர்வுகளை  நான்  மதித்து நடப்பதாக நினைப்பார்கள். மேலும்  ஒருவரது   முகத்தைப் பார்த்து  அந்த பிரச்சினையை  எப்படி அவர்கள்  எதிர்கொள்வார்கள் எனத் தெரிந்து கொள்ளவும்  முடியும்  .

இந்த  புற்றுநோய்க்கு  என்ன செய்யமுடியும் ?

தற்காலத்தில்  மிருகங்களுக்கும் கதிரியக்க சிகிச்சை  செய்யமுடியும். அதிக வீரியமான கதிர்சக்தியால் தொடர்ச்சியாகப் பிரியும் கலங்களின் கருக்களை அழிப்பது ஒரு விதமான தீவைத்துக் கருக்குதல் போன்றது .  செய்வதற்கு ஆயிரங்களில்  செலவு உண்டாகும் .

பல நாய்களுக்கு  குறிப்பிட்ட நோய் கண்ட காலை வெட்டி  எடுத்தால் அதனால்  எந்தக் கஷ்முமிராது.   சிறிய  நாய்களுக்கும் பூனைகளும் மூன்று கால்கள் போதுமானவை .

சிலர் நாய் , பூனைகளை மூன்று காலில் பார்க்கமுடியாது என்பார்கள் .   ஓரிருவரைத் தவிரப் பெரும்பாலானோர்   புரிந்து கொள்வார்கள்.  பெரிய நாய்களுக்கு ஆரம்பத்தில் கடினமாக இருக்கும்.  ஆனால் பின்பு சரியாகிவிடும்.

நான் முன்னர்  இரண்டு பெரிய நாய்களுக்கு   இப்படியான தருணங்களில் காலை  அகற்றிவிடுவோம்  என்றபோது,  ஒருவர் ஏற்றுக்கொண்டார். காலெடுத்தவுடன் இரு கிழமைகளில்  நடைக்குப் போகும்.  கட்டிலில் ஏறும் . சகல விடயங்களிலும்  அந்த நாய் ஒரு வருடங்கள் சந்தோசமாக  வாழ்ந்தது.

ஒரு வருடகால நாயின் வாழ்வு,   நமது வாழ்நாளோடு பார்த்தால் ஏழு வருடங்கள் .  இரண்டாமவர் மறுத்தார்.  வலி மருந்தை வாங்கிக் கொடுத்தார்.    கிட்டதட்ட ஆறு  மாதங்கள் அந்த நாய் உயிருடன் இருந்தது.  இறுதியில் அதனது கால் முறிந்தபோது கருணைக் கொலை செய்தேன்.

இம்முறை இந்தப்பெண் வந்தபோது, கதிரியக்க சிகிச்சை , காலை அகற்றுதல் அல்லது அப்படியே வலி நிவாரண மருந்துடன் பராமரித்தல் (Palliative care) என   மூன்று வழிகளையும் சொல்லி விட்டு,   “ எது உங்களுக்கு விருப்பமோ அதைச் செய்யலாம்.  “ என்றேன்.

அதேவேளையில் அந்த எலும்பிலிருந்து சிறிய துண்டை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பமுடியும் என்று சொல்லிவிட்டு   எதற்கும் இரண்டு கிழமை பொறுத்து மீண்டும் வாருங்கள் என்று அனுப்பினேன்.

இக்காலத்தில்,  அந்த எக்ஸ்ரே எனது மிருக வைத்திய சகாவால் ரேடியோலஜிஸ்ட் டுக்கு அனுப்பப்பட்டபோது,  அது எலும்புக்கு வெளியே இருப்பதால் எலும்புக்கான கான்சராக இருக்க முடியாது எனத் தனது கருத்தைச் சொல்லியிருந்தார் .

“அப்படியிருந்தால் நல்லது” “ எனக் கூறிவிட்டு நான் அந்த கட்டியிலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுக்க,  அதனது காலிலுள்ள கட்டியை வெட்டியபோது முழுகட்டியுமே இலகுவாக வந்தது . அதனால் முழுவதையும் எடுத்து அனுப்பினேன்.   நான் கட்டியின் முடிவுக்காகக் காத்திருந்தேன். அதேவேளையில் ரேடியோலஜிஸ்ட் சொன்னதையும் உரிமையாளரிடம் கூறி அப்படி நான் தவறாகவும் அவர் சரியாகவும் இருந்தால் லில்லிக்கு அதிர்ஸ்டமே ,  பத்தோலஜி  பரிசோதனை முடிவு வரும்வரை காத்திருப்போம் “ என்றேன்

அந்த முடிவு வந்தபோது  அதில்   லில்லிக்கு வந்தது  எலும்பு கான்சர் என்ற எனது கூற்று  உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.  ஆனால் உரிமையாளரான மேரிக்கு லில்லியின்  காலை எடுக்க விருப்பமில்லை.

இரண்டு விதமான அபிப்பிராயங்கள் வரும்போது மேரியால் முடிவு எதுவும் எடுக்க முடியாதது ஆச்சரியமானதல்ல . மனிதர்களுக்கும் ஏற்படும் . இது எங்கள் வாழ்விலும் நடந்தது.

எனது மனைவி சியாமளாவின் காலின் எலும்பில் இருந்த கட்டியை  வெட்டியபின்பு உடனே கீமோதிரபி செய்யவேண்டுமென்றார்கள். அதற்கு நான் உடன்படாததுடன் வேறு ஒரு  மருத்துவ நிபுணரிடம் இரண்டாவது கருத்துக் கேட்டபோது,  அவரும் என்னோடு உடன்பட்டு கீமோதிரபி தேவையில்லை என்றார் .

இந்தச்  சம்பவம் நடந்து ஐந்து மாதங்களில்   லில்லி இன்னமும் எந்த வலி நிவாரண மருந்துமில்லாது,  பல கிலோ மீட்டர்கள்  நடப்பதாக அறிந்தேன்.

மனிதர்கள் மட்டுமல்ல,  அவர்களுக்கு வரும் நோய்களும்  ஒரே மாதிரியானவை என்றபோதும்  அவற்றின் தாக்கம், மனிதர்களுக்கு  மனிதர்  வேறுபடும் . அதேபோல் விலங்கு மருத்துவத்திலும் விளைவுகளை  ஒன்றாகப் பார்க்க முடியாது . இதை விட உண்மை ஒன்றுண்டு.  வைத்தியர்கள் மற்றைய தொழில் செய்பவர்கள்போல் தவறுகள் விடுகிறார்கள். அவர்களது தவறுகள் பலரைப் பாதித்துள்ளது.

புற்றுநோய்  போன்றவற்றால்  பாதிப்பு அடையும்போது நோயைக் குணப்படுத்துவதை முற்றாக வைத்தியர்களிடம் விடமுடியாது . நோயைக் குணப்படுத்தி,  நோயுற்றவர்கள்  மீண்டும் வாழ்வதற்கு  பாதிக்கப்பட்டவர்களது பங்கும்  அதிகமுண்டு.

எவ்வளவு காலம்  அந்த லில்லி உயிர் வாழும் எனத்தெரியாத போதிலும்,  அதன்  காலை எடுக்கவோ, அல்லது  அதற்கு   கதிரியக்க சிகிச்சையோ தேவையில்லை என்ற அதன் எஜமானி  மேரியின்  முடிவு  சரியென்றே எனது  கடந்த நாற்பது வருட  தொழில் அனுபவம் நினைக்க வைக்கிறது.

—-0—

Series Navigationஒரு கதை ஒரு கருத்து – கு.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்தோள்வலியும் தோளழகும் – இராமன்
author

நடேசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *