குமரி எஸ். நீலகண்டன்
திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் எதிரே ஒரு சிறிய பூங்காவினை அடுத்து ஒரு நெடிய சாலை. அதுதான் சாலைக் கம்போளத் தெரு . அந்தத் தெருவின் தொடர்ந்த பாதை கிள்ளிப் பாலம் தாண்டி வளைந்து நெளிந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்கிறது. உள்ளே நுழைந்ததுமே சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் நுழைந்த உணர்வு இருக்கும். மளிகைக் கடைகள் சார்ந்த வணிகப் பகுதியில் வரும்போது நாகர்கோவில் கோட்டாறு கம்போளத்தெருவுக்குள் நுழைந்த உணர்வும் ஏற்படும். மலையாளத் தமிழர்கள் ஆ.மாதவனின் கதையின் கதாபாத்திரங்களாய் அங்கே உலவிக் கொண்டிருப்பார்கள்.
நடைவண்டிகளில் காஷ்மீர் ஆப்பிள், நாக்பூர் ஆரஞ்சு, நாகப்பழம், முந்திரி, பெரிய நெல்லிக்காய் குவியல் குவியலாய் விற்றுக் கொண்டிருப்பார்கள். ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள், வர்த்தகப் பணிகளுடன் அந்த சாலைத் தெரு எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கும். இருபக்கமும் நகைக் கடைகள், பாத்திரக்கடைகள், பலசரக்குக் கடைகள். பெரிய நிறுவனக் குடைக் கடைகள், காலணிக் கடைகள், இடை இடையே பெட்டிக் கடைகள், பூக்கடைகளெல்லாவற்றையும் கடந்து நடந்து சென்றால் அந்தத் தெருவின் நிறைவுப் பகுதியை எட்டுவதற்கு வெகு முன்பே வலது பக்கம் பார்த்துக் கொண்டே வர வேண்டும். காரணம் எல்லாக் கடைகளும் ஒரே போல் இருக்கும். அடுக்கடுக்கான கடைகளில் செல்வி ஸ்டோரை தவற விட்டு மீண்டும் சந்தேகத்தோடு இன்னொரு நடை நடக்க வேண்டி வரும். நம் வலப்பார்வையின் பலனாய் சிவப்பு நிறத்தில் மூக்கு கண்ணாடிக்குள் தீட்சண்யமான பார்வையுடன் ஒரு கடையின் மேசையின் முன்பு ஆ. மாதவன் உட்கார்ந்திருப்பார். அதுதான் செல்வி ஸ்டோர். நம்மைப் பார்த்ததுமே அன்புடன் வரவேற்பார்.
முதலில் வேலை பார்க்கிற சசியிடம் முக்காலியை எடுத்து ஓரமாகப் போடச் சொல்வார். வீட்டிலே அம்மா எப்படி இருக்காங்க என்பார். பிரசாந்த் நகர் போயிட்டு வர்றீங்களா என்பார் (என் அப்பாவின் சகோதரியான அத்தையின் வீடு). அதற்குள் மண்ணெண்ணெய் ஸ்டவ், பக்கெட் என வாங்க யாராவது வருவார்கள். அவர் வாங்க வருபவரின் தேவையறிந்து அதன் தரம், பயன், விலையெல்லாவற்றையும் சுருக்கமாக நல்லவிதமாக விளக்கிச் சொல்வார். அங்கே பேரமெல்லாம் கிடையாது. சரியான விலையைச் சொல்வார்கள். நுகர்வோரும் அதை வாங்கிச் செல்வர். சசி வந்தவருக்கு சாமானை பொதிந்து கொடுத்த பின் நம்மோடு “ ஆங். சொல்லுங்க. சூர்யா நல்ல படிக்கிறானா? வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்? “ என்று பேச்சைத் தொடர்வார்.
”இப்போ என்ன எழுதிக் கிட்டீருக்ககீங்க? பிரமோஷன் ஏதாவது? “ என்று தொடரும் பேச்சு இலக்கியத்தின் பக்கம் நகரும். அப்போது அவரை சந்திப்பவர்கள், அவர்களது உரையாடல்களெல்லாமே அவரது கதைகளை நினைவுப் படுத்தும். கடையில் வாடிக்கையாளர் குறையும் நேரத்தில் சசியிடம் நல்ல சாயா வாங்கி வரச் சொல்வார். பின் இலக்கியப் பேச்சும் சூடு பிடிக்கும். எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் வாரம் தோறும் சாலைக்கடைகளுக்கு விநியோகித்த வத்தல் போன்ற பொருட்களுக்கு பணம் வாங்க வருவார். அப்போது அவர் மாதவனை சந்தித்து பேசிக் கொண்டு போவார்.
தோப்பில் முகம்மது மீரான் வந்து உரையாடியதைச் சொல்வார். திருவனந்தபுரம் வானொலியில் தமிழ்ச் சொல்மாலையில் பேசியதைப் பற்றிக் கூறுவார். புதுமைபித்தன், காலச்சுவடு, நீல பத்மனாபன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், நெல்லை முத்து என எல்லோருடனான நட்பான சம்பவங்களை இலக்கியத்துடன் பகிர்ந்து கொள்வார். சாகித்ய அகாதமி விருது கிடைப்பதற்கு முன் அவரது விருதானது பல தடவை இறுதிக்கட்டம் வரை சென்றபின் அரசியல் தலையீட்டால் இன்னொருவருக்கு போன கதைகளையெல்லாம் அங்கதமாக சொல்வார். கேரளத் தமிழ் இதழ் குறித்த விஷயங்கள், திருவனந்தபுரம் தமிழ் சங்கப் பணிகள் குறித்தும் பகிர்ந்து கொள்வார். வீட்டிற்கு அழைப்பார். அருகில் ஆர்ய சாலையிலிருந்த அவரது வீடு மிகக் குறுகிய தெருவிருந்தது. வீட்டின் அருகே மீன் கொண்டு வரும் மீன்காரி, சுற்றி வரும் பூனைகளைப் பார்க்கிற போது மீண்டும் அவரது கதையின் சித்திர வடிவங்களாகத் தான் அச்சு அசலாய் இருக்கும்.
பள்ளியில் படித்த மலையாளமும் வீட்டிலேயே தமிழ் கற்றுக் கொண்டு அண்ணன்மார் கொண்டு வரும் பத்திரிகைகளை எழுத்துக் கூட்டிப் படித்து இரண்டு இலக்கியங்களின் தேர்ந்த படைப்புக்களை இளம் வயதிலேயே உள்வாங்கிக் கொண்டார். சாலை மனிதர்களின் அந்தரங்க மனங்களை ஆழமாக உற்றுணர்ந்து இலக்கியமாக்கியவர். புதுமைப்பித்தனோடு நட்பு கொண்டிருந்தவர். பள்ளி இறுதிஆண்டு வரை மலையாளத்தில் படித்து தமிழில் உன்னத எழுத்தாளராய் தன்னை உருவாக்கிக் கொண்டவர். உலக இலக்கியத்துடன் மலையாள இலக்கியத்தையும் தமிழின் சிறந்த இலக்கியப் படைப்புக்களையும் படித்து உள்வாங்கிக் கொண்டவர்.
மலையாள மண்ணின் தனித்துவத்துடன் அவரின் புனலும் மணலும் நாவல் எல்லோராலும் மிகவும் பாராட்டப்பட்டது. கிருஷ்ணப் பருந்து நாவலில் நகுலன் மாதவனது சிந்தனையின் நிழலின் அழுத்தத்தையும் அதன் மேல்தள போக்கின் திசையையும் குறிப்பிட்டு அந்த நூலுக்கு முன்னுரை எழுதி இருப்பார். புனலும் மணலும், மோக பல்லவி, காமினி மூலம், கிருஷ்ணப் பருந்து, மாதவன் கதைகள், அரேபியக் குதிரை கதைத் தொகுதி, தூவானம், மொழி பெயர்ப்புக் கதைகளென அவரது இலக்கியப் பங்களிப்பானது குறிப்பிடத்தக்கவை.
கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன், நா.பார்த்தசாரதி, வல்லிக்கண்ணன், கவிஞர் கண்ணதாசன், கணையாழி கஸ்தூரிரங்கன், அசோகமித்திரன், சா.கந்தசாமி என எழுத்துலக வேந்தர்களெல்லாம் இவரின் எளிய வீட்டிற்கு வந்து இலக்கியம் பேசி இருக்கிறார்கள். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா உட்பட்ட இலங்கை எழுத்தாளர்களும் இவரை சந்தித்து பாராட்டி இருக்கிறார்கள்.
விருதுகளை அவர் எப்போதும் எதிர் நோக்காமல் எழுதிக் கொண்டிருந்தார். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் சார்பில் மலையாளப் பெருங்கவி உள்ளூர் பரமேஸ்வர அய்யர் நினைவுப் பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு, விஷ்ணுபுரம் விருது, கலைமாமணி, சாகித்ய அகாதமி என வந்த விருதுகளை அவர் கௌரவப் படுத்தினார்.
2000 ஆண்டில் மாதவனின் மகனுக்கு திருமணம் நடந்தது. 2002 ல் மனைவி சாந்தாவின் மரணம். 2004 ல் மகன் கோவிந்தராஜன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றபோது சாதாரண உடற்பரிசோதனையின் போது நோயைக் கண்டு பிடித்தார்கள். அதற்கான சிகிச்சையின் குறுகிய நாட்களிலேயே மகன் இறந்து போனான். மாதவன் மிகவும் ஒடிந்து போனார். வாழ்க்கை அவரை மிகவும் அசைத்து விட்டது.
மிகக் குறைந்த உற்சாகத்துடன் நண்பர்கள், இலக்கியம், வணிகமென தன் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். மகள்கள் கலைச் செல்வி, மலர்ச்செல்வி, மோகன் உட்பட்ட மருமகன்கள், மருமகள், பேரக் குழந்தைகளென தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டார். 2011 ல் அவரது வாடகைக் கடையை உரிமையாளர் கேட்ட போது கடையையும் அவர் துறக்க வேண்டி இருந்தது. அதில் இன்னமும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். கைதமுக்கில் மகள் கலைச்செல்வியின் வீட்டில் புத்தகம், படிப்பென அவரது வாழ்க்கைத் தொடர்ந்தது. பலரது அன்பில் தன்னில் தன் வாழ்வில் நிறைவைக் கண்டு கொண்டிருந்தார்.
சிறுகதை படைப்பிலக்கியத்தில் வியத்தகு சாதனைகளை நிகழ்த்தியவர் ஆ. மாதவன். எழுத்தில் கேரள சாலை மக்களின் அடி மனதில் அசைகிற உணர்வுகளைக் கூட அப்படியே அப்பட்டமாக தனது புனைவிலக்கியத்தில் தமிழ் சமூகத்திற்கு தந்த பெருமைக்குரியவர். அவரது படைப்பிலக்கிய அர்ப்பணிப்பிற்காக மலையாள மக்களாலும் கேரள அரசாலும் கொண்டாடப் பட்டவர். எனக்கு தந்தை போன்று எனது திருமணம் உட்பட்ட எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றவர். அவரது வீட்டிலும் எல்லா முக்கிய நிகழ்விலும் நான் பங்கேற்றிருக்கிறேன். குடும்பத்தில் ஒருவரானவர்.
சமீபத்தில் கூட அவரது மகள் கலா எங்கள் குடும்பத்தோடு அப்பாவின் ஆரோக்கியம் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அவரோடு பேசுவதில் சிறு இடைவெளி வருகிற போது தங்கை கலா கூறுவார் “ அண்ணா! அப்பா சொல்லிக் கிட்டிருந்தாங்க. நீலகண்டண்ணன் கால் எதுவும் வரல்லையான்னு” என்பார். அவருக்கு காது கேட்கும் திறன் சமீப காலத்தில் மிகவும் குறைந்து விட்டதால் தொலைபேசியில் பேச இயல்வதில்லை. ஊர் போகும் போதெல்லாம் திருவனந்தபுரத்தில் சந்திப்போம். எல்லோரிடமும் அறிமுகப்படுத்துகிற போது எனது மகன் இவனென்று உரிமையாக சொல்வார்.
சாலை செல்வி ஸ்டோர், சாலையிலுள்ள அவரது வீடு, தற்போதுள்ள அவரது கைதமுக்கு வீடு, அவரது கடையிலும் கதையிலுமிருந்த சசி, உண்மையை உண்மையாக வெளிப்படையாகச் சொல்கிற அவரது மனப்பாங்குயென எல்லாம் மனதில் ஊடாடுகின்றன.
நெல்லை முத்து வந்தார். என்னுடைய வெளி வராத பழைய படைப்புக்களையெல்லாம் தொகுத்து ஒழுங்குபடுத்தி இலக்கியச் சுவடுகளாக்கினார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது என்பார். கணையாழி பேச்சு வரும்போது மா. ராஜேந்திரன் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். மரியாதை கொண்டவர். மகிழ்ச்சியாக இருக்கிறது என்பார். நாஞ்சில் நாடன் அவரது புத்தகத்தை அனுப்பி இருந்தார். பழைய இலக்கியங்கள் குறித்த அறிவு அவருக்குதான் நிரம்ப இருக்கிறது. அவரது சொல்வளம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்பார்.
சாகித்ய அகாதமி விருது கிடைத்த போது விமானத்தில் சென்றது, டெல்லி நட்சத்திர ஹோட்டலில் தங்கியது, விருது நிகழ்வுகள், டெல்லி தமிழ்ச் சங்க வரவேற்பு, டெல்லி வெளிநாட்டு ஒலிபரப்பில் பேட்டி, திருவனந்தபுரத்தில் அவருக்கு தமிழ்ச்சங்கத்திலும், கேரள அரசாங்கம், கைதமுக்கில் வசித்தவர்கள் மற்றும் கேரள மலையாள பத்திரிகைகள் அவருக்கு அளித்த மரியாதை எல்லாவற்றையும் காட்டிக் காட்டி மிகுந்த சந்தோஷமாக இருந்ததென சொல்லிக் கொண்டே இருப்பார். அந்த சந்தோஷக் குரலை இனி கேட்க முடியாதென்பதுதான் பேரிழப்பு. தமிழ் இலக்கிய உலகத்தில் ஆ. மாதவன் ஒரு முத்திரை முகம்.
குமரி எஸ். நீலகண்டன்
punarthan@gmail.com
- நீ இரங்காயெனில் ….
- இன்னொரு புகைப்படம்
- தோள்வலியும் தோளழகும் ( அனுமன்[ பகுதி1]
- மொழி பெயர்ப்பு கவிதைகள் ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ]
- அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..
- நடை
- கோடுகள்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 25 -அதிர்வு
- மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… – ‘கோமதி’ சிறுகதை
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ்
- திருநீலகண்டர்
- எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி.
- சாலைத்தெரு நாயகன்